Tuesday, June 13, 2006

"விடைகொடு விடலைப் பருவமே"

நாமும்தான் முயன்று பார்ப்போமே என
தேன்கூட்டுப் போட்டியினின் தலைப்பதனை
ஒட்டியே ஒரு கவிதை புனைந்திங்கு
நானும்தான் வரைந்துள்ளேன்!
உள்ளன்பு கொண்டோரே!
ஒருவார்த்தை செப்பிடுவீர்!



"விடைகொடு விடலைப் பருவமே"


"விடைகொடு விடலைப் பருவமே"
அல்லது,
"விட்டுப் போகிறேன் விடலைப் பருவமே"
எனச் சொன்ன நாளை எண்ணி
காலச்சுவட்டில் தேடிப் பார்க்கிறேன்!

அரும்பாமல் அரும்பி நின்ற
மிருதுவான பூனை மீசையை
திரும்பத் திரும்ப சவரம் செய்து
முறுக்காக முளைத்த நாளா?

பாடம் படிக்கும் சாக்கில்
மாடிப்படியடியில் அவளறியாமல்
பதுங்கிச் சென்று ஒளிந்து நின்று
பார்ப்பதை மறந்த நாளா?

வீட்டிற்கு வந்தவுடன்
வயிற்றுக்கு என்னவென்று
விரட்டலாக தாயை வெருட்டி
வருத்தியதை நிறுத்திய நாளா?

மாலைஎனும் நேரமே மனமகிழத்தான் என்று
நாளையெலாம் வீணாகக் கழித்து நின்ற பொல்லாத
வேளையினைத் தள்ளிவிட்டு நேரத்தில் வீடுவந்து
காலலம்பி நீறணிந்து திகைக்க வைத்த நாளா?

காசுபணம் பிடுங்கவென்றே படைத்தது போல் எண்ணி
பாசமுடன் ஒருநாளும் பார்க்காமல் புறக்கணித்த
ஆசையான தந்தையிடம் அருகிலே சென்றமர்ந்து
மாசச்சம்பளத்தை பெருமையுடன் அளித்த நாளா?

எதுவென்று எண்ணி எண்ணி புரியாமல் நிற்கையிலே
பட்டென்று பொறியில் தட்டியது ஒரு நினைவு!
பெற்றவளின் அருகமர்ந்து அவள் மடியில் தலை சாய்த்து
அவள் கையை வருடியபடி 'அவளைப்' பற்றி சொன்ன நாள்!

தலை உயர்த்திப் பார்த்தபோது,
கனிவுடன் எனை நோக்கி
'பெரிய மனுசன் ஆயிட்டே' எனப்
பாசமுடன் சிரித்தாளே, அந்த நாள்!

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP