Friday, June 29, 2007

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் -- 21 "பாதி மதி நதி"

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் -- 21 "பாதி மதி நதி"

'ஆன்மீக ஊற்று", "அனைவரின் செல்லப்பிள்ளை" "அரங்கனின் புகழ்பாடும் அரும்பெரும் தொண்டர்" "என்னரும் நண்பர் " திரு.ரவி கண்ணபிரான்" என்னையும் ஒரு பொருட்டாக மதித்து கேட்ட பாடலை இங்கு இடுவதில் பெருமகிழ்சி அடைகிறேன்.
***************************************************************************************

------------- பாடல் ------------------

பாதி மதிநதி போது மணிசடை
நாத ரருளிய குமரேசா

பாகு கனிமொழி மாது குறமகள்
பாதம் வருடிய மணவாளா

காது மொருவிழி காக முற அருள்
மாய னரிதிரு மருகோனே

கால னெனையணு காம லுனதிரு
காலில் வழிபட அருள்வாயே

ஆதி அயனொடு தேவர் சுரருல
காளும் வகையுறு சிறைமீளா

ஆடு மயிலினி லேறி யமரர்கள்
சூழ வரவரு மிளையோனே

சூத மிகவளர் சோலை மருவுசு
வாமி மலைதனி லுறைவோனே

சூரனுடலற வாரி சுவறிட
வேலை விடவல பெருமாளே.

*************************************************

................பொருள்...................

[பின் பார்த்து முன்]

"ஆதி அயன் ஒடு தேவர் சுரர் உலகு
ஆளும் வகையுறு சிறைமீளா"



கொடுஞ்சூரன் கெடுமதியால்

மதிகெட்டு மனமயங்கி

அடுசெயலால் ஆதியாம்

பிரமன்முதல் அமரர்யாவரையும்

கொடுஞ்சிறை அடைத்து

சுடுமொழி பேசி இழித்து

கடுஞ்சொற்களால் பலவாறிகழ்ந்து

மிகவும் வாட்டி உடல் வருத்தி

நடுங்கச் செய்து அவர் பணி மாற்றி

வருந்திடும் துயர் மாற்ற

திருவுளம் கொண்டு வேற்படையேந்தி

தேவர்தம் சிறை மீட்க


"ஆடு மயிலினில் ஏறி அமரர்கள்
சூழ வரவரும் இளையோனே"

பொன்மலையாம் மேருவிற்கு

நிகரான ஆடுகின்ற

பொன்மயிலின் மீதமர்ந்து

சூரனுடன் போர் புரிந்து

விண்ணவரைச் சிறைமீட்டு

அமரர் புடை சூழ

மண்ணதிர விண்ணதிர

என்னவரும் மனமகிழ

தும்பிக்கையான் தம்பியும்

மயில்மீதில் அமர்ந்துவர



"சூத மிகவளர் சோலை மருவு
சுவாமி மலைதனில் உறைவோனே"


மாமரங்கள் அடர்ந்திருக்கும்

சோலைவனம் சூழ்ந்திருக்கும்

சுவாமிமலை தனில் வாழும்

என் குருநாதனே!


"சூரன் உடல் அற வாரி சுவறிட
வேலை விட வல பெருமாளே."

மாயப்போர் புரிந்து

நீலக்கடலுள் ஒளிந்துகொண்ட

சூரனை வெளிக்கொணர

வேலெடுத்து வீசிக்காட்டி

கடல் வற்றச் செய்து

சூரன் உடல் இருகூறுபட

அசுரனைப் பிளந்து

அருளுடன் ஆட்கொண்ட

பெருமைமிகு வேலவனே!



"பாதி மதிநதி போது மணிசடை
நாதர் அருளிய குமரேசா"


தான் பெற்ற மகளிரை

மணம் கொண்ட சந்திரன்

ரோஹிணியை மட்டும்

தன்னோடு சேர்த்து

மற்றவரைத் தள்ளியதால்

மனம் கொதித்த தந்தையாம்

தக்கன் அளித்த சாபத்தால்

ஒளிகுன்றி, மதி குன்றி

நிலவனும் தான் தேய

வேறெங்கும் அலைந்தும்

வழிகாணா மனத்தினனாய்

கருணைக்கடலாம் சிவனைநாட

குற்றம் தள்ளி குணம் நாடும்

காருண்ய மூர்த்தியும்

குறைமதியைப் பிறைநுதலாய்

தன்தலையில் சூடிக் காத்த,

தேவலோகம் விட்டுச்செல்லும்

தாபத்தால் கோபம்கொண்டு

உலகினை அழிக்க உக்கிரமாய்ச்

சீறிப் புறப்பட்ட கங்கையவள்

செருக்கடக்க, உலகுய்ய

கருணைத்திருவுளம் கொண்டு

தன்சடையில் தான் தாங்கி

தணிவோடு தண்ணீர்தந்த,


அன்புருவாம் சிவனாரின்

திருநுதற்கண்ணினின்று

உலகோரின் துயர்துடைக்க

தேவர்களைக் காத்திடவே

ஈசனே தன்னைத் தானளித்த

சங்கரன்குமாரனே! குமரேசனே!



"பாகு கனிமொழி மாது குறமகள்
பாதம் வருடிய மணவாளா"

குறமகள் வள்ளியைக்

கடிமணம் புரியத்


திருவுளம் கொண்டு


அவருடன் விளையாட,


வேங்கை மரமாய்

வேடனாய், விருத்தனாய்

வம்புகள் பலசெய்து

வள்ளியின் கோபம் தூண்டி

அவர்தம் கனிமொழிகேட்க

கைகால்களைப் பிடித்து

கெஞ்சிக் கொஞ்சிய

அழகிய மணவாளனே!



"காதும் ஒருவிழி காகம் உற அருள்
மாயன் அரிதிரு மருகோனே"

கானகம் சென்றிட்ட இராமன்

ஓர்நாள் கண்ணசந்து மைதிலியின்

மடிமீது தலைவைத்து துயிலுகையில்

சீதையைக் கண்டு மோகித்து

இந்திரன் மகனாம் சயந்தனென்பான்

காகம் வடிவெடுத்து காரிகையின்

தனங்களைக் குத்த, ரத்தம் தெறிக்க

இராமனின் முகத்தில் அது பட்டு,

கண்விழித்த அண்ணலும் காரணம் கேட்க

காகத்தைக் காட்டி காரிகையும் சொல்லிவிட

கோபம்கொண்டு ஒரு புல்லெடுத்து

"காதும்" கொல்லுக இதனையென

காகுத்தன் ஏவிவிட, பயங்கொண்ட

காகமதும் கடிவேகம் கொண்டு

மூவுலகும் சுற்றிவர, எவரும் உதவாமல்

சிவனைத் தஞ்சமடையச், சிவனாரும்,

'குற்றம் செய்தவிடம் தேடி கும்பிட்டுக் கேள்!

குணமுடையோன் குறைகளைவான்' எனவுரைக்க

சீதாபதியின் தாள்பணிந்து காகம் வேண்ட,

'தஞ்சமென வந்தவரை தட்டுவது பண்பல்ல

பிறன்மனை நோக்கிய குற்றத்தால்

ஒரு கண்ணை பாணம் துளைக்கும்

உயிர் குடிக்காமல் உனைப் பிழைக்கும்'

எனவருளிய மாயனின் மருகோனே!


"காலன் எனை அணுகாமல் உனது
இருகாலில் வழிபட அருள்வாயே"

தக்கன் சாபம் துரத்திய

சந்திரனைப் போலவும்


பிரம்மாஸ்திரம் துரத்திய

காகம் போலவும்

காலன் எனைத் துரத்தும்

கோலம் கண்டிங்கு

கருணை என்மீது கொண்டு

கங்கையைத் தலைமேல்

கொண்டது போலவே

பிறைதனை நுதல்மேல்

அணிந்தது போலவே

காகத்துக்கும் கருணை

காட்டியது போலவே

என்னையும் உன்னிருகாலில்

சேர்த்திங்கு அருள்வாயே!
************************************************


....அருஞ்சொற்பொருள்.......

காதும் -- கொல்லும்
சூதம் -- மாமரம்
வாரி -- கடல்
சுவறிட -- வற்றிட
வல -- வலிமையுடைய

***********************************************

வேலும் மயிலும் துணை!

முருகனருள் முன்னிற்கும்!!

அருணகிரிநாதர் தாள் வாழ்க!!!


Read more...

Thursday, June 21, 2007

எட்டோண் எட்டு;எட்டும் வரை எட்டு!

எட்டோண் எட்டு; எட்டும் வரை எட்டு!

எட்டு எழுதணுமாம்; கொத்தனார் வந்து சொல்லியிருக்கிறார்.

அப்படி என்னதான் இந்த எட்டு எனப் பார்த்தால், ஆளாளுக்கு எழுதினதைப் பார்த்தா அவங்களை நினைச்சு சந்தோஷமா இருக்கு.
அதே சமயம், இவங்க எல்லாம் இப்படி அடுக்கியிருக்கறதுக்கு முன்னாடி, நாம என்னன்னு சொல்லமுடியும்னு, ஒரு பயம் அடிவயத்தைக் கவ்வுது.

அப்போதான், நம்ம இளா ஒரு பதிவு போட்டிருந்தாரு. அதைப் பார்த்ததும் கொஞ்ச தெம்பு வந்தது.

அதனால, அவருக்கு என்னோட முதல் நன்றி.

என் எட்டு இதோ!
சாதனைகள் ஏதுமில்லை.
ஆனால், மறக்கவொண்ணா நிகழ்வுகள்
நெஞ்சை விட்டகலா நினைவுகள்.

1. தமிழ் பயிற்றுவித்த, சிதம்பரம் பச்சையப்பன் பள்ளியில் தமிழாசிரியாராக இருந்த "குண்டைய்யா" என எங்களால் அன்போடு அழைக்கப்பட்டவரின் சிறப்பு மாணவனாக இருந்தது. இன்னிக்கு எனக்கு இருக்கிற கொஞ்சநஞ்ச தமிழறிவு அவர் போட்ட பிச்சை.

2. என் தந்தையின் கனவு நனவாக, பி.காமில் இருந்து விலகி, மருத்துவம் படிக்கச் சென்று, அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
[கொத்ஸ் கவனிக்க!]

3. 18 ஆண்டுகாலம், மனதுக்கினிய மருத்துவராகப் பணியாற்றியது. இப்போது சென்றாலும், ஒரு கூட்டம் குரோம்பேட்டையில் அன்புடன் சூழ்வதைப் பார்த்து, என் குழந்தைகள் மகிழ்வது.

4. சாதாரணமாக இருந்த ஒரு பிள்ளையார் கோயிலை விரிவாகக் கட்டலாம் என முடிவு செய்து, அத்தனை மக்களும் ஒன்றாக இணைந்து, ராவா, பகலா வேலை செய்து, பணம் திரட்டி, மிகச் சிறந்த அளவில் கும்பாபிஷேகம் செய்து முடித்தது. ... அந்தக் கோவில் இன்றும் சிட்லபாக்கத்தில் மங்கள விநாயகர் ஆலயம் என ஆன்மீகப் பணி ஆற்ரிக் கொண்டிருப்பது.

5. புறநகர்ப் பகுதிகளில் வராது, வரமுடியாது எனக் கருதப்பட்ட தனி அரங்குகள் கொண்ட பொருட்காட்சியை முதன் முறையாக, '80 களில், குரோம்பேட்டை எம்.ஐ.டி. விளையாட்டுத் திடலில் தொடர்ந்து 10 நாட்கள் வெற்றிகரமாக LINTEF [Lions' International Trade and Entertainment Fair] என்ற பெயரில் நடத்திக் காட்டியது.

6. ஒரு மே மாதம் 31ம் தேதி, திடீரென என் வலது கண் பார்வை இல்லாமல் போனது. பாரத் பந்த் என ஒன்று அன்று. வாகனங்கள் எதுவும் ஓடவில்லை. அவசரத்துக்குக் கிடைத்த ஒரே டாக்டர் அகர்வால். அறுவை சிகிச்சை மூலமே விட்டுப்போன ரெடினாவை மீண்டும் இணைக்கமுடியும்; அதிகச் செலவாகும் இதற்கு என் சொல்லிவிட்டார்.

வீட்டிற்குச் செல்லும் வழியில், மதியம் 1 மணி இருக்கும், கிண்டி பாபா கோவில் வாசலில் வண்டியை நிறுத்துகிறேன்.
மூடியிருந்த கோவில் கேட்டைத் திறந்துவிட்டு, பாபா தரிசனம்! பத்ரிநாத்திடம் செல்லுமாறு அந்தக் கோவிலை நிர்வகித்து வந்த கீதம்மாவின் அன்பான அறிவுரை.

அப்படியே செய்ய, பத்ரிநாத்தும் அறுவை சிகிச்சையை உறுதிப்படுத்த, சங்கர நேத்ராலயாவில் அனுமதிக்கப் படுகிறேன். மறுநாள் அறுவை சிகிச்சை என முடிவாகிறது.அன்றிரவு வந்த டாக்டர் பத்ரிநாத் என்னைச் சோதிக்கிறார். அவராலேயே நம்ப முடியவில்லை. "டாக்டர். சங்கர்,நீ அதிர்ஷ்டசாலிப்ப்பா! உன்னோட ரெடினா தானே திரும்பவும் சேர்ந்திடுச்சு. இப்படி நிகழ்வது ரொம்ப அபூர்வம். "எனச் சொல்லி மறுநாள் ஒரு சிறு சிகிச்சையுடன் வீடு திரும்பியது!!

7. இரு ஆண்டுகளுக்கு முன் வெளியாகிய, இசைஞானி இளையராஜாவின் "திருவாசகம்" சி.டி. வெளிவர , துவக்கம் முதல் , வெளியீடு வரை ஒரு பெரும்பங்கு வகித்த TIS Foundation USA என்ற அமைப்புக்கு தலைமை தாங்கி, பல்வேறு இன்ப, துன்ப நிகழ்வுகளைச் சந்தித்து, இன்றும் ஒரு நிறைவு அனுபவமாக பலராலும் பாராட்டப்படுவது.

8. இணையத்தில் தற்செயலாக அறிமுகமாகி, பல்வேறு நண்பர்களைப் பெற்று, எழுதணும்னு நினைத்த பல விஷயங்களில், ஒருசிலவற்றையாவது எழுத முடிந்தது .

மேலே சொன்ன விஷயங்கள், அநேகமாக என் நெருங்கிய நண்பர்கள் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அதாவது, எல்லார்கிட்டேயும் சொல்லியிருப்பேன் இதையெல்லாம்!
இப்ப உங்ககிட்டேயும்!

சொல்ல அழைத்த கொத்தனாருக்கு மீண்டும் ஒரு நன்றி.

இப்ப நான் ஒரு 8 பேரை அழைக்கணுமாம்.

1. குமரன்
2. செல்வன்
3. கோவி.கண்ணன்
4. ரவி கண்ணபிரான்
5. ஷைலஜா
6. அன்புத்தோழி
7. நாகை சிவா
8. வடுவூர் குமார்

எத்தனையோ பேர் இருந்தாலும், உடனே நினைவுக்கு வருபவர்கள் இவர்களே!
உங்களுக்கு இஷ்டமிருந்தால், வந்து எழுதுங்க.
கட்டாயமில்லை.
தொந்தரவுக்கு மன்னிக்கவும்.

_____________________________________
விளையாட்டின் விதிகள்:

1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும் (Players start with 8 random facts about themselves.), அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.

OPTIONAL:

2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.

3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்.

Read more...

Sunday, June 17, 2007

ஒரு முக்கிய அறிவிப்பு!

ஒரு முக்கிய அறிவிப்பு!!

அனானி அன்பர் ஒருவர் என்னையும் பொருட்டாக மதித்து, என் பெயரில்[VSK] ஒரு தனிப் பூ ஒன்று தொடங்கி என்னைப் பெருமைப் படுத்தி இருக்கிறார்!

ஆத்திகம், கசடற[aaththigam, kasadara] என்ற இரு பூக்கள் வழியாக மட்டுமே நான் பின்னூட்டம் இடுகிறேன்!

பதிவுலக நண்பர்கள் என் பெயரில் [VSK] வரும் பின்னூட்டங்களை தயவு செய்து இவ்விரு பூ விலாசத்திலிருந்து வருகிறதா எனச் சோதனை செய்து, பின்னர் வெளியிடுமாறு அன்புடன் வேண்டிக் கொள்கிறேன்.

சிரமத்திற்கு மன்னிக்கவும்.

உங்கள் வசதிக்காக, சிலகாலம் பின்னூட்டம் எதுவும் இடுவதில்லை எனவும் முடிவு செய்திருக்கிறேன்.

நன்றி.
[இதை எனக்குத் தெரியப்படுத்திய அன்பு உள்ளத்திற்கும்!]
**************************************************************

"தந்தை என்று சொல்லவா"
[என் தந்தையின் நினைவுநாளை ஒட்டி, சில ஆண்டுகளுக்கு முன் நான் எழுதியது.]

தந்தை என்று சொல்லவா
எந்தை என்று வணங்கவா
சொந்தம் என வந்தோரை
மந்தை என எண்ணாமல்
தம்தம் யென்று நினைத்தவரை
[தந்தை என்று .....]

இன்று எமைப் பிரிந்தாய்
சென்று துயர் கொடுத்தாய்
என்றும் உமைப் போற்றி
இங்கு யாம் இருப்போம்
[தந்தை என்று......]

எத்தனையோ பெற்றாய்
அத்தனையும் முத்துக்கள்
மொத்தமாக சொல்வதென்றால்
எத்தனையோ நேரம் வேண்டும்
[தந்தை என்று.....]

உன்னாலே பிறந்திட்ட
என்னோடு வளர்ந்திட்ட
கண்ணான சோதரரும்
இந்நாளில் பிரிந்திருக்க
என் சொல்வேன் நான் இன்று
[தந்தை என்று.....]

பிள்ளையாய்ப் பிறந்தாலே
பொறுப்புகள் பல உண்டு
பல்லோரையும் வாழ வைக்கும்
கடமையும் கூட வரும்- நீயோ
ஒரே பிள்ளையாய்ப் பிறந்து விட்டாய்
உறவை மட்டுமின்றி
ஊராரையும் வாழ வைத்தாய்
[தந்தை என்று.....]

உன் பிள்ளைகள் உனைப் போல
எந்நாளும் பலர் வாழ
தன்னாலே முடிந்ததெல்லாம்
இன்னாளில் செய்கின்றோம்
நீ இட்ட பிச்சையிது!
[தந்தை என்று]

பாசத்தைக் கொட்டவில்லை
பரிவாய் சொல் சொன்னதில்லை
உன் நெஞ்சில் ஓடி நாங்கள்
உட்கார்ந்து மகிழ்ந்ததில்லை

ஆனால்...,


இதுவெதையும் காட்டாமல்
ஏதொன்றும் சொல்லாமல்
எல்லாமே உணர்த்தி விட்டாய்
உன் அன்பு வாழ்க்கை மூலம்!
[தந்தை என்று....]

நினைக்க நினைக்க நெஞ்சம் கனக்கிறது
மணக்க மணக்க உன் ஞாபகம் வருகிறது
வலிக்க வலிக்க என் உள்ளம் அழுகிறது
வணங்க வணங்க என் கைகள் குவிகிறது
[தந்தை என்று....]

இன்னாளில் மட்டுமன்றி
என்னாளும் நினைக்காமல்
என்னாலே இயன்றிடுமோ
மண்ணாளில் வாழும் வரை
[தந்தை என்று....]

நீ உணர்த்திய பாசம் நிஜம்
நீ சொன்ன மொழியும் நிஜம்
நீ வாழ்ந்த வாழ்க்கையும் நிஜம்
நீ என்னுடனே இருப்பதுவும் நிஜம்
[தந்தை என்று....]

உன்னாலே வாழுகின்றேன்
உன்னை நான் நினைக்கின்றேன்
உன் சொல்லைக் கேட்கின்றேன்
உன் பெருமை பாடுகின்றேன்
[தந்தை என்று....]

என் மடியில் நீ படுத்து

இவ்வுலகை விட்டகன்ற
அந்நாளை நிதம் நினைத்து
என் காலம் போக்குகின்றேன்
[உன்னுடன் நான் சேரும் வரை]
[தந்தை என்று....]

உன் குலத்தில் பிறந்தவர்
நன்றாக வாழ்ந்திருக்க
உன் ஆசி வேண்டுகின்றோம்
இன்னாளில் நாங்கள் இன்று !
[தந்தை என்று....]

*************************************************************

ஒரு முக்கிய அறிவிப்பு!!

அனானி அன்பர் ஒருவர் என்னையும் பொருட்டாக மதித்து, என் பெயரில்[VSK] ஒரு தனிப் பூ ஒன்று தொடங்கி என்னைப் பெருமைப் படுத்தி இருக்கிறார்!

ஆத்திகம், கசடற[aaththigam, kasadara] என்ற இரு பூக்கள் வழியாக மட்டுமே நான் பின்னூட்டம் இடுகிறேன்!

பதிவுலக நண்பர்கள் என் பெயரில் [VSK] வரும் பின்னூட்டங்களை தயவு செய்து இவ்விரு பூ விலாசத்திலிருந்து வருகிறதா எனச் சோதனை செய்து, பின்னர் வெளியிடுமாறு அன்புடன் வேண்டிக் கொள்கிறேன்.

சிரமத்திற்கு மன்னிக்கவும்.

உங்கள் வசதிக்காக, சிலகாலம் பின்னூட்டம் எதுவும் இடுவதில்லை எனவும் முடிவு செய்திருக்கிறேன்.

நன்றி.

Read more...

Friday, June 15, 2007

சிவாஜி ..... பாஸ்!!

"சிவாஜி பாஸ்" !!!!

சிவாஜி பார்த்தாச்சு!

எழுதச் சொல்லி சிங்கையாண்டவர் கட்டளை!

ஆனால், இதை ஒரு விமரிசனம் எனக் கொள்ளாமல், படத்தைப் பற்றிய என் கருத்து எனக் கொள்ளவும்!

முதல் நாள், முதல் ஷோ!

திரையரங்கில் நல்ல கூட்டம்!

ஆனால், ஹவுஸ்ஃபுல் ஆகவில்லை!
[எங்க ஊர் அப்படி!]

விளக்குகள் அணைந்ததும், சென்னை எங்களூருக்குள் வந்தது!

விசில் சத்தம் பறக்க, பேப்பர் துண்டுகள் பேப்பர்மாரி பொழிய, கைத்தட்டல்கள் காதைத் துளைக்க, சிவாஜி துவங்கினார்!

கதையைப் பற்றி ஒன்றும் சொல்லப் போவதில்லை; சொல்வதற்கும் ஒன்றுமில்லை!

ஆரம்ப நாட்களில் வந்த கிசுகிசுக்கள் போல ஒரு ஒற்றை வரிக்கதை.

நல்லெண்ணத்துடனும், பெரும்பணத்துடனும் தாயகம் திரும்பிய ஒரு இளைஞனின்[!!] ஆசைக்கனவுகள், இங்குள்ள பணபலத்தாலும், ஆட்சித் திமிராலும் எப்படி முறியடிக்கப்பட்டு, அதைத் தன் அதிரடி ஆட்டத்தால் [நிஜமாகவே அதிரடிதான்!] வெற்றி கொள்கிறான் என்பதுதான் கதை.

இந்தக் கதைக்கு கதாநாயகி தேவையே இல்லை!

ஆனால், தமிழகம் தாங்குமா!

எனவே.... எண்டர் ஷ்ரேயா... மூலக்கதையுடன், அதன் நிகழ்வுகளுக்கு சற்றும் சம்பந்தமில்லாத ஒரு காட்சிக்களன்களுடன்!

ஆனால், அவர் இல்லாவிட்டால், அந்த பாடல் காட்சிகள் எப்படி இருக்கமுடியும்.

காமெடி வேணுமே!

கம் ஆன் விவேக்!!

சரி, படம் எப்படி?

3 மணி நேரப்படம்.

ஒரு நிமிடம்கூட போர் அடிக்கவில்லை!

ஒருசில காட்சி அமைப்புகள்[ஆஃபீஸ் ரூம், ம்யூசிக் ஸ்டோர்] அடிக்கடி ரிபீட் ஆனாலும், படம் தொய்வில்லாமல் போகிறது!

ரஜினி ஃபார்முலாபடி, முதல் ஒரு மணி காமெடி, அடுத்த ஒரு மணி கொஞ்சம் கதை, கடைசியில் அதிரடி என எதிலும் மாற்றமில்லை.

ரஜினி கெட்டப், உடை, மேக்கப் என படு இளமையாக ஜொலிக்கிறார்!

பாடல் காட்சிகளில் படுகவனம் எடுத்துக் கொண்டு நடித்திருக்கிறார்!

ரஜினி ரசிகர்களுக்கு விசில் அடித்து மாளாத வண்ணம் காட்சித் தேர்வுகள்!

மெயின் பஞ்ச் டயலாக், "ச்ச்சும்மா அ....தி....ரு...தில்ல"! வரும்போதெல்லாம், அரங்கம் புத்துணர்சி பெற்று நிமிர்ந்து உட்காருகிறது.

ஷ்ரேயாவுக்கு வேலையே இல்லை, பாடல் காட்சிகளைத் தவிர எனச் சொல்லலாம். அழகாக இருக்கிறார்.

ஆடியோவில் கேட்பதைவிட, சில பாடல்கள், அரங்க அமைப்பாலும், ஒரு சில புதுமைகளாலும் திரையில் மிக நன்றாக வந்திருக்கின்றன. ....குறிப்பாக "ஸ்டைல்" பாடல் படமாக்கப்பட்ட விதம்..... அற்புதம்!!


ஏ.ஆர்.ரஹ்மான் இசை நல்லா வந்திருக்கு!

விவேக் காமெடி ஒரு ப்ளஸ் பாயிண்ட்!

பாதி ரஜினி வேலையை இவரே செய்து விடுகிறார். ஆரம்ப காட்சி ஒன்றில், ரஜினி ஒரு பஞ்ச் டயலாக் விடுக்க வாயைத் திறக்கும் போது, அவரை அடக்கிவிட்டு, இவர் தொடர்கிறார்!!

வில்லனை எதிர்கொள்ள, சிவாஜி எடுக்கும் செயல்கள், சற்றும் நடக்கக் கூடிய ஒன்றல்ல!

சண்டைக்காட்சிகள் ஆங்கிலப்படங்கள் பல பார்த்திருக்கும் நம் தமிழக மக்களுக்கு மிகவுமே பிடிக்கும்!

படம் பார்க்க விரும்பும் ரசிகர்களின் ஆர்வத்தைக் குலைக்க விரும்பாததால், ஒரு சில கருத்துகள் மட்டுமே சொல்லவிழைகிறேன்.

திரைப்படம் என்பது வெறும் கற்பனை.


நடக்க வேண்டும் என டைரக்டர் விரும்பும் ஒரு கருத்தை, நடக்காது எனத் தெரிந்த ஒரு கருத்தை, இது மாறாதா, மக்கள் துயர் தீராதா என வெதும்பும் ஒரு கருத்தை,

நம்பமுடியாத, எவராலும் பின்பற்றி செய்யமுடியாத வழியில், ஒரு அதிரடி நாயகன் செய்வதாகக் காட்டி,

இந்த அவலத்தை மட்டும் மக்கள் மனதில் விதைத்து, இது பற்றிய தன் வருத்தத்தைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு நிகழ்வாகவே சிவாஜி அமைந்திருக்கிறது.

ஒரு மூன்று மணி நேரப் படத்தின் மூலமாக நாடும், அரசியலும், தீயவர்களும் மாறிவிடுவார்கள் என்றெல்லாம் நம்பிட வேண்டாம், இந்தக் கசப்பான மருந்தை பொழுதுபோக்கு அம்சங்கள், பிரம்மாண்டம் கலந்து கொடுப்பதே திரைப்படம் என்பதுதான் இயக்குநரின் கருத்தாக இருந்திருக்க வேண்டும் என எண்ணுகிறேன்.

அந்த வகையில் பார்த்தால், ரஜினி என்னும் காந்த சக்தியின் மூலமாக, பெரும்பாலான மக்களைச் சென்றடைய வைத்திருக்கிறார் ஷங்கர்.

இது முழுக்க முழுக்க ஒரு ரஜினி படம்!


ஆனால், படையப்பாவோ, சந்திரமுகியோ அல்ல!

ரஜினி ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும்.

அதிலும், அந்த மொட்டை பாஸ் ரஜினி[பெயர் எம்ஜிஆர்!] சிம்ப்ளி சூப்பர்!


மற்றவர்கள், இதில் சொல்லப்பட்டிருக்கும் முக்கிய கருத்தை.... கருப்புப் பணத்தை ஒழிக்க தன்னால் என்ன செய்ய முடியும்.... எனச் சிந்தித்தாலே போதும்.

போர் அடிக்காமல் போகிறது படம்!

அதற்கு ஒத்துழைத்த அனைவருக்கும் பாராட்டுகள்.

சிவாஜி...... பாஸ்!





Read more...

Thursday, June 14, 2007

மயிலை மன்னாரின் குறள் விளக்கம் -- 14 "கண் விதுப்பழிதல்"

மயிலை மன்னாரின் குறள் விளக்கம் -- 14 "கண் விதுப்பழிதல்"

பார்த்து கொஞ்ச நாள் அதிகமே ஆயிடுச்சு! இன்னிக்கு எப்படியும் பார்க்காமல் போகக்கூடாது என முடிவு செய்து, வழக்கமான மயிலை கபாலி குளத்தருகே இறங்கி, நேராக
நாயர் கடை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்தது போல், எதிரில் நம்ம மயிலை மன்னார்!

சில நண்பர்களோடு ஏதோ சீரியசாகப் பேசிக்கொண்டு வந்தவன், என்னைப் பார்த்ததும், "அட! இன்னாபா, அதிசயமா இருக்கு! இப்பல்லாம் அடிக்கடி வர்றதில்லியே நீ! எங்க இம்மாந்தூரம்?" என்று நக்கலாகக் கேட்டான்.

"அதெல்லாம் இல்லேப்பா; கொஞ்சம் வேலை மும்முரம். அதான், அடிக்கடி வர முடியலை" என அசடு வழிந்தேன்.

"தா! இன்னாத்துக்கு பொய் ஸொல்றே? அதான் ஒன் கண்ணே ஒன்னியக் காட்டிக் கொடுக்குதே!" என்று அதட்டினான் மன்னார்.

'கண்' என்றதும் சட்டென ஒரு பொறி தட்ட, உடனே அவனைப் பார்த்து அவசரமாகக் கேட்டேன்; " ஆமா, இந்தக் கண்ணு பேசுமா? எப்பிடி காட்டிக் கொடுக்குதுன்னு சொல்கிறாய்?"

"கண்ணு எப்பிடி பேசும்? வாய்தான் பேசும். ஆனா ஒரு ஆளைப் பாத்ததும் அவங்க மூஞ்சி காட்ற சில விஷயங்களைக் காட்டிக் கொடுத்திரும். அதுல இந்தக் கண்ணும் ஒண்ணு. இது மௌனமா சில சேதிகளைச் சொல்லும்.
ரொம்பப் பேரு இத மட்டுமே பார்த்திட்டு, இது என்னமோ பேசுதுன்னு நினச்சுகிட்டு, மத்த விஷயங்களைக் கோட்டை விடறாங்க. மொத்தமா கவனிச்சா, மத்த உறுப்புங்க செய்யற சேட்டைகளைப் பாக்கலாம். ஆனா, இவங்கதான் இந்தக் கண்ணு மேல
மொத்தமா நம்பிக்கை வெச்சிட்டாங்களே! மிஸ் பண்ணிடறாங்க! இது மாரி நம்பி மோசம் போனவங்கள்ல பொண்ணுங்கதான் டாப்பு. இப்பிடி நம்பி ஏமாந்து போனதுக்கப்பறம் கண்னை நம்பி ஏம்மாந்திட்டோமேன்னு புரிஞ்சுக்கறவங்களும் இவங்கதான்!
இந்த விஷயத்தைப் பத்தி ஐயன் ஒரு அதிகாரமே எளுதியிருக்காரு. அது என்னான்னு சொல்றேன். வா. கடையாண்ட போய் வடையைக் கடிச்சுக்கினே கேளு" என்று அன்புடன் தோள் மீது கை போட்டு இழுத்துக் கொண்டே சென்றான்.

இனி வருவது குறளும், மயிலை மன்னாரின் விளக்கமும்!

அதிகாரம் 118. "கண் விதுப்பழிதல்"

கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்
தாம்காட்ட யாம்கண் டது. [1171]

நான் உண்டு என் படிப்பு, உண்டு, என்னோட வீடு உண்டுன்னு இருந்த என்னை, 'ஏய்! அந்தாளைப் பாரு! இன்னா ஷோக்கா கீறான் பாரு!
அவன் கலரும், ஒசரமும், பாடியும் ! அவன் கண்ணைப் பாரேன்! எப்பிடி சிரிக்கறான் பாரு"ன்னு அவனைப் பாக்கச் சொல்லி, காட்டி, மனசுல பிடிச்சு வெச்சது நீங்கதான்!
இப்ப அதுனாலதான் எனக்கு இந்த தீராத நோவு வந்துது! இப்ப அவன் பூட்டான்! இத்தினியும் பண்ணின நீங்கதான் இப்ப பொலபொலன்னு கண்ணீர் வுடறீங்க! ஏ கண்ணுங்களா! இது இன்னா நாயம்?"

தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்
பைதல் உழப்பது எவன். [1172]

"வெறும் அளகை மட்டுமே பார்த்திட்டு, பேச்சை மட்டுமே நம்பிட்டு, பின்னாடி இன்னா ஆவும்ன்றதைப் பத்தி துளிக்கூட யோசிக்காம,
இது சரிப்பட்டு வருமா? இது ஆவுற கதையா?ன்னுல்லாம் சிந்திச்சுப் பாக்காம, அவனையே மொறச்சு மொறச்சு பாத்த, ஏ, மை தீட்டின கண்ணுங்களா! இப்ப இன்னாத்துக்கு இப்பிடி வருத்தப்பட்டுகிட்டு அளுவுறீங்க?


கதுமெனத் தாம்நோக்கித் தாமே கலுழும்
இதுநகத் தக்கது உடைத்து. [1173]

"அந்த ஆளைப் பாத்தப்போ, நல்லா அகலமாத் தொறந்து வெச்சு பாத்தீங்களே, கண்ணுங்களா, இப்ப அவன் பூட்டானேன்னு துக்கப்பட்டுக்கினு அளுவுறீங்களே, ரொம்ப நல்லாருக்குடிம்மா
நீங்க செய்யுறது! எனக்கு உங்களைப் பார்த்தா, சிரிப்புதான் பொத்துகிட்டு வருது! நல்லா அளுவுங்க!"

செயலற்றார் நீருலந்த உண்கண் உயலற்றா
உய்வில்நோய் என்கண் நிறுத்து. [1174]


" இப்பிடி அளுது, அளுது, நான் தெனமும் அளகா மைதீட்டி வளத்த இந்த கண்ணுங்க, இப்ப எனக்கு நான் பொளைக்க முடியாதபடி ஒரு நோவைக் கொடுத்திட்டு,
அதுங்களும் அளமுடியாம வத்திப் போய் நிக்குதுங்க பாரேன்! வோணும் இதுங்களுக்கு!"

படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக்
காமநோய் செய்தஎன் கண். [1175]


"இப்ப அவரு என்னிய விட்டுப் போனதால, எனக்கு வந்திருக்கற இந்த துன்பம்ங்கற நோவு எம்மாம் பெருசுன்னா, இத்தோட பாக்கறப்ப,
தோ, எதுத்தாப்பல இருக்கே சாந்தோமாண்டை, அந்த கடல் கூட இத்த விட சின்னதுங்கலாம்!
இத்தக் கொணாந்ததே இந்தக் கண்ணுங்கதான். இப்பப் பாரு! அதுங்க தூங்கக் கூட முடியம தவிக்கற தவிப்பை!"

ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்
தாஅம் இதற்பட் டது. [1176]

"இப்பிடி எனக்கு இந்த நோவைக் கொடுத்ததுக்கு முக்கிய காரணமே இதுங்க தான்!
இந்தக் கண்ணுங்கதான்!
இப்பம் பாரு, அதுங்களும் தூங்காம தவிக்குதுங்க.
ஹைய்யா, எனக்கு ஜாலி! இது ரொம்ப நல்லாருக்கு!"


உழந்துழந்து உள்நீர் அறுக விழைந்திழைந்து
வேண்டி யவர்கண்ட கண். [1177]

"பாரு, பாருன்னு என்னியத் தூண்டிவிட்டு, ஐயோ! இவரைப் போல வருமான்னு அவருக்காவ உருகி, உருகி,
அவரையே பாத்துகிட்டிருந்த இந்தக் கண்ணுங்க ரெண்டும் இப்போ அளுது, அளுது, தன் பண்ணின தப்புக்காவ வருந்தி, வருந்தி,
கண்ணுல தண்ணியே இல்லாமப்போவட்டும்!
நல்லா வோணும் இதுங்களுக்கு!"


பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்
காணாது அமைவில கண். [1178]


" இப்ப அவரு என்னிய வேணாமின்னு சொல்லிட்டு பூட்டாரு. மன்சால கூட என்னை விரும்பாதவராயிட்டாரு.
ஆனாலும், அவர் பேரை கேட்டாலே
இப்பவும் கிளுகிளுங்குது.

இந்த வெக்கங்கெட்ட கண்ணுங்க மட்டும், பொறுமையே இல்லாம, இன்னமும் அவரைப் பாக்கணுமின்னு துடியாத் துடிக்குது! சீச்சீ! இன்னா பொளப்பு இது?"

வாராக்கால் துஞ்சா வரிந்துஞ்சா ஆயிடை
ஆரஞர் உற்றன கண். [1179]

" இந்தப் பொல்லாத கண்ணுங்க இருக்கே, ரொம்ப மட்டம்! அவரு வரலேன்னாலும் தூங்க மாட்டேங்குதுங்க.
வந்தாக்காண்டியும் தூங்காதுங்க! அவரையே பாத்துக்கினு இருக்கும்!
இப்பிடி, வந்தாலும் தும்பம், வரலேன்னாலும் தும்பம்னு அலையுதுங்க!"


மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல்
அறைபறை கண்ணா ரகத்து. [1180]


அளுது அளுது, அவரையே நினைச்சுகிட்டு இருந்து வீங்கிப் போயிருக்கற
இந்தக் கண்ணு ரெண்டையும் பாரேன்.
பட படன்னு தம்பட்டம் அடிச்சு ஊருக்கு சேதி சொல்ற டமாரம் மாரி,
இதுங்க ரெண்டுமே என் மனசு இன்னமும் அவரையேதான் நினைச்சுகினு இருக்குன்றத,
ஊருக்கெல்லாம் காட்டிக் கொடுத்துகிட்டு அலையுதுங்க!"

இப்ப இதுவரைக்கும் சொன்னதிலேர்ந்து இன்னா வெளங்குது ஒனக்கு?
கண்ணுங்க வேலை பாக்கறதும், அளறதுந்தான்!
மூல காரணமா நின்னுகிட்டு, ஆசையைத் தூண்டி வுடறதும், அப்பால, அத்தயே நெனச்சுகிட்டு அளுவறதுந்தான் இதோட வேலை!
புரியுதா?
ஆராச்சும், கண்ணு பேசுது, சொல்லாத சொல்லெல்லாம் சொல்லுதுன்னு ரீல் வுட்டாங்கன்னா நம்பாதே!
காட்டிக் கொடுக்கும்; கஸ்டப்படுத்தும்!
அவ்ளோதான்!
ஆச்சா?"
என்றவாறே டீயை உறிஞ்சினான் மன்னார்.

"புரியுது மன்னார். இந்த 'உண்கண்' அப்படீன்னு சொல்றாறே, அப்பிடீன்னா என்ன?" எனக் கேட்டேன்.

பெரிதாகச் சிரித்தான் மன்னார்!
'நெனச்சேன்! நீ கேப்பேன்னு நெனச்சேன்! இந்தப் பொண்ணு கண்ணுக்கு மை தீட்டுதில்ல? அதெல்லாத்தையும் இந்தகண்ணு ரெண்டும்
நல்லா தின்னுதுங்களாம்! அதான் உண்கண், மையைத் தின்ன கண்ணுங்கன்னு ஐயன் சொல்லி சிரிக்கறாரு' என்றான்!

நானும் சிரித்துக் கொண்டே, பைதல்னா? என்று இழுத்தேன்.

'இது அடிக்கடி ஐயன் யூஸ் பண்றதாச்சே! பைதல்னா தும்பம்[துன்பம்].

சரி, சரி, தலீவர் படம் இன்னிக்கு ரிலீஸ்! இப்பத்தான் கொஞ்சம் காசு பாக்கலாம். தியேட்டராண்டை நம்ம பசங்க காத்துகினு இருப்பாங்க. நா வர்ட்டா! ஒனக்கு எதுனாச்சும் டிக்கட் வேணுமின்னா, ஆல்பர்ட் தியேட்டர் பக்கம் வந்து கண்டுக்கோ!
சரியா!" என்றவாறே அந்தப் பக்கம் வந்த ஆட்டோவில் தாவினான் மயிலை மன்னார்!

"அட, இருப்பா! நானும் வரேன்!" என்றவாறு நானும் ஆட்டோவில் தொற்றிக் கொண்டேன்!

Read more...

Sunday, June 03, 2007

"மௌனம் ஒரு பாஷை"

மௌனம் ஒரு பாஷை -- மீண்டும் ஒரு டிவி கதை!!

படிகள் என்னும் தொடரைப் பற்றி எழுதியது நினைவிருக்கலாம்.

அதே போல் நேற்று ஒளிபரப்பான ஒரு சின்னத்திரை படத்தைப் பற்றிய ஒரு பதிவு.

முதலில் கதைச் சுருக்கம்.....!

5 பிள்ளைகள் பெற்ற ஒரு வயதான தம்பதியினர்.
கடைக்குட்டிக்கு இப்போது வயது 16.
முதல் பெண் விதைவையாகி,... இப்போது வீட்டில்.
அடுத்த மூன்று ஆண் பிள்ளைகளும் கல்யாணம் முடித்து, கூட்டுக் குடித்தனம்.

ஒரே ஒரு திருத்தம்!
கடைசிப் பிள்ளை மட்டும் சென்னையில்..... தந்தையால் தள்ளி வைக்கப்பட்டு ..... கூடப்படித்த வெள்ளைக்கார டாக்டர் பெண்ணைக் காதலித்ததால்.
இப்போது அவன் சென்னையில்.....தனியாக குடும்பம் நடத்துகிறான்.

கடிதப்போக்குவரத்து கூட கிடையாது.
கணவனின் கல்லாய்ப்போன மனம் கண்டு உள்ளுக்குள்ளேயே புழுங்கும் தாய்.

இந்நிலையில், தந்தை கைப்பட எழுதிய கடிதம் ஒன்று டாக்டர் மகனுக்கு வருகிறது.
தாய் திடீரென தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தார் என.
வரச்சொல்லி அல்ல!

பதறி அடித்துக் கொண்டு இவன் ஓடி வருகிறான்.
5 ஆண்டுகளுக்கும் மேலாகப் பார்க்காத சந்தோஷத்தில், அனைவரும் மகிழ்கின்றனர்.....
தன் மனைவியின் புகைப்படத்தை அனைவருக்கும் காட்டுகிறான்.
இன்னும் மகப்பேறு அடையாத இரண்டாவது அண்ணியை சென்னைக்குக் கூட்டிச் சென்று பரிசோதனை செய்ய வாக்களிக்கிறான்
தந்தை மட்டும் இன்னமும் முருங்கை மரத்தில்!!
இவனைக் கண்டாலே, முகத்தைத் திருப்பிக் கொண்டு நகர்ந்து விடுகிறார்.
தாய் இன்னும் மயக்கமாகத்தான் இருக்கிறார்.

கண் விழித்ததும், கதறுகிறார், 'என்னை ஏன் காப்பாற்றினீர்கள்? இவனை ஏன் வரவழைத்தீர்கள்?' என.
மகனைப் பார்க்காததால்தான் இச்செயல் செய்ய முயற்சித்தார்; இப்போது மகனைப் பார்த்ததும் மனமகிழ்வார் என எண்ணிய மற்ற பிள்ளைகளுக்கு ஒரே அதிர்ச்சி.

டாக்டர் மகன் மட்டும், தாயின் கை [நாடி] பிடித்துப் பார்க்கிறான்.
அவன் முகம் மலர்கிறது!
"இதற்காகவா அம்மா இப்படி செய்யத் துணிந்தாய்?" என மலர்ச்சியுடன் கேட்கிறான்.

"ஊர் உலகம் என்ன சொல்லும்? என் முகத்தில் காறித் துப்புவார்களே! அந்த மனுஷனுக்கு ஏன் இப்படி ஒரு புத்தி? அவரை என் முகத்திலேயே காட்டாதே!" எனப் புலம்புகிறார்.

ஆம்! அவர் இப்போது 16 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் தாயாகியிருக்கிறார்! .

"ஓ! தாய்மை என்பது எவ்வளவு புனிதமானது! இதற்காக நீ வருந்தாதே. நான் பார்த்துக் கொள்கிறேன்" என சொல்லிவிட்டு, வெளியே வந்து, அனவரிடமும் [தந்தையைத் தவிர!!] இதைப் பகிர்கிறான்.

அவ்வளவுதான்! அங்கே ஒரு பூகம்பமே வெடிக்கிறது!

அம்மாவுக்கு என்ன ஆசை இந்த வயதில் எனப் பெரியவன் குமுற, இதுக்கொண்ணும் குறைச்சலில்லை எனப் பெரிய அண்ணி முகம் நொடிக்க, விவஸ்தை இல்லாமல் இப்படி ஒரு காரியம் செஞ்சாளே இவ, என தமக்கை முகம் சுளிக்க, தனக்கே இன்னும் குழந்தை பிறக்கா நிலையில், மாமியார் கருவுற்றதை சகிக்க முடியாமல் சிறிய அண்ணி மனம் வெதும்பிப் பொறாமை கொள்ள, அவமானத்தால் அவள் கணவன் தலைத் திருப்பிக் கொள்ள.......

எல்லாரும் தாயையும், தந்தையையும் இப்போது ஒரு மாதிரியாகப் பார்க்க ஆரம்பிக்கின்றனர்.


கடைசிப் பெண் மட்டும் எனக்குத் தம்பிப்பாப்பா வரப்போகிறான் எனக் குதூகலிக்கிறாள்.

டாக்டருக்கு ஒரே அதிர்ச்சி!

வரும் கோபத்தில், அவர்களை எல்லாம் பார்த்து ஒரு நீண்ட கூப்பாடு போடுகிறான்.முற்றத்தில், கொட்டும் மழையில் நனைந்து கொண்டே....

"என்ன மனிதர்கள் நீங்கல்லாம்? கொஞ்சங்கூட மனிதத்தன்மையே இல்லாம இருக்கீங்களே! தாய்மை என்பது எவ்வளவு பெரிய வரப்பிரசாதம். அதை இன்னும் வழங்க இங்கே இரு ஜீவன்கள் இருக்கின்றனர் என்பது எவ்வளவு சந்தோஷமான விஷயம். அதைக் கண்டு மகிழாமல், அதனைப் போற்றாமல் கேலி பேசும் உங்களைக் கண்டால் எனக்கு அருவருப்பாக இருக்கு. பெற்றவருக்கு ஆதரவா இருக்க வேண்டிய நீங்க இப்படி நடக்கலாமா?"
எனக் கூச்சலிட்டுவிட்டு, நகர்கிறான்.... சொட்டச் சொட்ட நனைந்தபடியே!

மறைவாக நின்று இதையெல்லாம் கேட்டபடியே இருந்த தந்தை, தன் மேல்துண்டை திண்ணையின் மேல் போட்டுவிட்டுச் செல்கிறார்......, வழியும் கண்ணீரைத் துடைத்தபடியே,........ இவனையும் தலையைத் துவட்டிக்கொள்ளச் சொல்கிற மாதிரி!

மறுநாள், தந்தையிடம் சென்று பேசுகிறான்...... அவர் இவனைப் பார்க்காமல் திரும்பி நின்றாலும்!
தாயின் மனநிலை, உடல்நிலை கருதி, தன்னுடன் கொண்டு சென்று வைத்துக் கொள்ளப் போவதாய்.

அவ உனக்கும் அம்மாதான். வந்தா கூட்டிகிட்டுப் போகலாம் என சொல்லிய வண்ணம் நகர்கிறார்!

சற்று தூரம் சென்ற மகன் சட்டெனத் திரும்புகிறான்........ கண்ணைக் குறுக்கியபடியே தன்னைப் பார்க்கும் தந்தையைப் பார்க்கிறான்!
இவன் திரும்பியதும், பொய்வீறாப்பாக, தந்தை முகத்தைத் திருப்பிக் கொள்கிறார்.!!!

அம்மாவைச் சமாதானப் படுத்தி, தன் மனைவியைப் பற்றிய அவரது சந்தேகத்திற்கு பதில் சொல்லி, சென்னைக்குக் கூட்டிச் செல்கிறான்.

தந்தை இன்னமும் மௌனமாக வாசல் வரை வந்து, பார்த்தும், பாராதது போல் நின்று, வழியனுப்பி வைக்கிறார்.

அந்த மௌனம் எத்தனையோ மொழி பேசுகிறது.

மகனுக்கு நன்றி, புரிதலில் நிம்மதி, மனைவியைப் பிரியும் வருத்தம், அவளுக்கு சற்று அமைதி கிடைக்கப் போகிறதே எனும் மகிழ்ச்சி, இனித் தனியாக இவர்களை எதிர்கொள்ள வேண்டியிருக்குமே என்ற ஆதங்கம்...... இப்படி இன்னும் பல!!

அனைவரும் கார் நகர்ந்ததும் உள்ளே செல்லுகின்றனர்.

கடைக்குட்டி மட்டும், தயங்கியபடியே அப்பாவின் அருகில் வந்து, வெள்ளிக்கார அண்ணியின் புகைப்படத்தை அப்பாவின் சட்டைப்பையில் செருகிவிட்டு, சிட்டாகப் பறக்கின்றாள்.

யாரும் பார்க்காத தனி இடமாக வந்து, சுற்றுமுற்றும் பார்த்தபடியே, சட்டைப்பையிலிருந்து எடுத்து அந்தப் படத்தைப் பார்த்து ரசிக்கிறார்.

தூரத்தே கிளுகிளுவென யாரோ சிரிக்கும் சத்தம்!

ஒரு 70 வயதுக் கிழவர், தென்னை மரத்தடியில் அமர்ந்து, தன் ஆசை மனைவிக்கு 'இந்தா சாப்பிடு!' என்றபடியே அல்வா ஊட்டுகிறார். அந்தக் கிழவியும் திருப்பி ஊட்டுகிறார்!

சிங்காரம்பிள்ளையும் சிரிக்கிறார்!

70-களில் வந்த அருமையான குறுநாவல்.
எழுதியவர் சிறுகதை மன்னன் ஜெயகாந்தன்!!!

இந்தக் கதையை மிக மிக அற்புதமாக ஒரு 2 மணி நேரக் குறும்படமாக வழங்கினார்கள் நேற்று, விஜய் டி.வி.யில்.

தந்தையாக இலட்சிய நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரன்; தாயாக வெண்ணிற ஆடை நிர்மலா!

அதிக வசனங்கள் இருவருக்கும் இல்லை.
ஆனால், தங்களது அனுபவ முதிர்ச்சியை, பண்பட்ட நடிப்பின் மூலம் நமக்கெல்லாம் காட்டி நடித்திருந்தனர்.


மற்ற கதாபாத்திர தேர்வுகளும் கச்சிதமாயிருந்தது.
கதை நிகழ்வதாகக் காட்டிய கிராமமும் கொள்ளை அழகு!
இயற்கை எழில் பூத்துக் குலுங்கியது.

மொத்தத்தில் ஒரு நிறைவான படைப்பு.

வழங்கிய விஜய் டி.விக்கு எனது நன்றியும், வாழ்த்துகளும்.

இதில், சிம்பாலிக்காக, வேரில் காய்த்துத் தொங்கும் ஒரு பலாமரமும் சிறப்பாக நடித்திருந்தது என்பதையும் குறிப்பிடாமல் இருக்க முடியாது!!

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP