Tuesday, October 30, 2007

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 27

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 27

முந்தைய பதிவு இங்கே!
25.

"அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றும்

திறனறிந்தான் தேர்ச்சித்துணை." [635]

காலைப் பூஜைகளை முடித்துவிட்டு, கோயில் கதவைச் சாத்தியபடியே வெளியே வந்தார் மாயன் பூசாரி.

கோயில்னா பெருசா ஒண்ணும் இல்லை.திண்ணை வெச்ச ஒரு பெரிய குடிசை. உள்ளே ஒரு மேடை. அதுமேல இரண்டு சாமி சிலைகள்.
பக்கத்தில் முனையில் எலுமிச்சம்பழம் சொருகிய ஒரு அருவாள். பெரிய அகல் விளக்குகள் இருபக்கமும். அவ்வளவுதான்!நீண்ட உயரத்திலிருந்து பின்புலத்தில், கொல்லியருவி அழகாக விழுந்து கொண்டிருந்தது!

"ஆத்தா!எல்லாரையும் காப்பாத்து!" எனச் சொல்லியவாறே, திண்ணையில் உட்கார்ந்து, மடியில் கட்டியிருந்த ஒரு பொட்டலத்தைப் பிரித்து, அதில் மடக்கி வைத்திருந்த புகையிலையை எடுத்து, ஒரு துண்டைக் கிள்ளி வாயில் அடக்கினார்.

காலைப் பூஜை முடிந்து, இனி மதியச் சாப்பாட்டுக்கு நேரம் இருந்தது! பேச்சுத்துணைக்கு எவரும் அகப்படுகின்றார்களா என ஒரு பார்வை விட்டார்.

தூரத்தில் கந்தன் வருவது தெரிந்தது.

'முத்துராசா வூட்டுல நேத்து அந்த வெள்ளைக்காரனோட பாத்த புள்ள தானே இது' எனக் கண்களைச் சுருக்கிக் கொண்டே பார்த்தார்.

வயது எழுபதுக்கு மேல் இருந்தாலும், கட்டுக் குலையாத தேகம். கறுத்த மேனியில் திரளான புஜங்கள். நரைத்த தலையில் அள்ளி முடித்து உயரக் கட்டிய அடர்ந்த சிகை. முறுக்கி விட்ட கட்டு மீசை வெள்ளையாக, அடர்த்தியாக, இந்த வயதிலும்!! மழித்து வழிக்கப்பட்ட தாடை. பார்த்தாலே ஒரு
கம்பீரம் கலந்த மரியாதை தரும் தோற்றம்.

'யாரப்போவ் அது! புதுசா வந்த புள்ளதானே! சித்த இங்க வாங்கய்யா! என்ன இவ்வளோ பரபரப்பா வரீங்க?' என மரியாதையோடு வரவேற்றார் பூசாரி.

'என்னமோ சண்டை வரப்போகுது. எனக்கு அப்படி ஒரு காட்சி தெரிஞ்சுது' என அவரிடம் ஒருவித அவசரத்துடன் சொன்னான் கந்தன்.

'காட்டுக்குள்ள வந்தாலே இப்படிப்பட்ட காட்சியெல்லாம் வரும், புதுசா வர்ற ஆளுங்களுக்கு!' எனச் சிரித்தார் பூசாரி.

'அப்படியில்லீங்க' எனச் சொல்லி தான் கண்ட, காட்சியை விவரித்தான் கந்தன்.

எந்த ஒரு காட்சியும்,... அது ஒரு ஓலையைப் படித்ததாலோ, இல்லை, மேகங்களின் அசைவைக் கணித்தோ, அல்லது, பறவைகளின் போக்கைக் கவனித்தோ,.... உலகில் நடக்கப்போவதைக் காட்டும் என்பதை உணர்ந்த மாயன் அவன் சொன்னதைக் கவனமாகக் கேட்டார்.

காட்டில், மலையில், தன் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டு போகும் சாதாரண ஆட்களும் உண்டு; அதையும் தாண்டி, இது போல சில
நிகழ்வுகளைக் கவனித்து, அதன் பொருளை அறியும் மனிதரும் உண்டு. அவர்கள்தான் பூசாரி போன்ற சிலர். காட்டுக்கே ராசான்னு இருக்கறவங்க கூட, இவர்களைக் கேட்காமால் எதுவும் செய்ய மாட்டார்கள்.
கடவுள் எல்லாவற்றையுமே நல்லதாகத்தான் எழுதியிருக்கிறார் என்றாலும், அதனை இது போன்ற சிலரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வதில் ஒரு தனி
அக்கறை, மதிப்பு, பயம், மரியாதை!

அப்படிப்பட்ட ஒருவராக இந்த மலைக்காட்டில் அனைவராலும் மதிக்கப்படும் மாயன் பூசாரி, இந்த விஷயத்தைக் கேட்டதும், சற்று நிமிர்ந்து
உட்கார்ந்தார்.

'என்ன சொல்றே நீ? கொஞ்சம் விவரமாச் சொல்லு' எனச் சற்று பதட்டத்துடன் கேட்டார்.

கந்தன் மீண்டும், தான் இரு கழுகுகள் பறந்ததையும், ஒரு கழுகு மற்றொன்றைத் தாக்கியதையும், அதே சமயம், ஒரு கூட்டம் ஆயுதங்களுடன்
இங்கு வருவது போல ஒரு காட்சி தன் கண் முன்னே தெரிந்ததையும் விவரித்தான்.

மாயன் சில நிமிடங்கள் மௌனமாக இருந்தார்.


பக்கத்தில் இருந்த ஒரு செடியில் இருந்து, கையில் அகப்பட்டதைப் பிடித்துக் கிள்ளி, தன் முன்னே போட்டார்.

'இந்த இலையப் பாத்து, அது எப்படி என் முன்னால விளுந்துதுன்னு பாத்து, என்ன நடக்கப் போவுதுன்னு நான் சொல்லிடுவேன்.
என்ன நடக்கப் போவுதுண்றது என் கையில இல்லை. அது சாமிக்கு மட்டுமே தெரியும். சரியான சமயத்துல, சாமி சொல்லும். எப்பிடி சொல்லும்? அதுக்குத்தான் என்னைப் போல ஆளுங்களை அது அனுப்பியிருக்கு! எங்க மூலமா அது பேசும்!
இப்பத் தெரியுற காட்சிகளை வெச்சு நான் நடக்கப் போறது என்னன்னு சொல்லுறேன். அதான் சூட்சுமம். இப்ப.. இந்த நிமிஷம் நடக்கறதுதான் நிஜம்! இதைச் சரியாக் கவனிச்சியானா நாளைக்கு என்ன நடக்கும்னு உனக்கே புரியும். ஆனா, எல்லாரும், இதைச் செய்யறதில்லை! நேத்து என்னா ஆச்சு, நாளைக்கி என்னா நடக்கும்னே காலத்தை ஓட்டறாங்க! இன்னிக்கு நடக்கறதைப் பாத்து, அதை சரியாச் செஞ்சோம்னா, எல்லாமே நல்லா நடக்கும்.இன்னிக்கு சாவறதோ, இல்லை நாளைக்கு சாவறதோ நம்ம கையுல இல்லை. சாமிதான் நாளைக்கு என்ன நடக்கும்னு முடிவு பண்னறாரு. அது கூட எதுக்குன்னா, ஒரு சில சரியான நடத்தையால, அதைக் கூட மாத்தறதுக்கு நமக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கறதுக்குத்தான்! எல்லாம் விதிப்படி நடக்கும்'

ஒரு சில நிமிடங்கள் அந்த இலையையே பார்த்துக் கொண்டிருந்தார்.

தலையை இப்படியும், அப்படியுமாய் ஒரு சில நொடிகள் ஆட்டினார்.

'நீ சொன்னதுல எதுவோ விசயம் இருக்கு. போ! போயி, முத்துராசாவைப் பாரு. அவன்கிட்ட நீ பாத்ததைச் சொல்லுவோம்!' என ஒரு
தீர்மானத்துடன் சொன்னார்.


கூடவே எழுந்தார்!

***************

கந்தனும் பூசாரியும் தலைவரின் வீட்டை அடைந்தனர்.

'ஐயா இருக்காரா?' என வாசலில் நின்ற ஆளைக் கேட்டார் பூசாரி.

'கொஞ்சம் இருங்க' எனச் சொல்லிவிட்டு,உள்ளே போனவன், சற்று நேரத்தில் வந்து,'ஐயா உள்ளே வரச் சொன்னாரு' எனத் தெரிவித்தான்.

உள்ளே போன கந்தன் ஒரு நொடி திகைத்து நின்றான்.

ஒரு தலைவனின் வீடு எப்படி இருக்கும் என இதுவரை கற்பனையில் கூட சிந்தித்திருக்காத அவனுக்கு உள்ளே பார்த்தது ஆச்சரியத்தைக் கொடுத்தது.

பதப்படுத்தப்பட்ட மான் தலைகளும், கொம்புகளுடன் கூடிய காட்டெருமைத் தலைகளும் அங்கங்கே நிறுத்தப்பட்டிருந்தன. சந்தனத்தில்
இழைக்கப்பட்ட சிலைகளும், தேக்கினால் செய்யப்பட்ட சிற்பங்களும் அறை முழுதும் பரவிக் கிடந்தன. நல்ல தேக்கினால் செய்யப்பட்ட ஒரு
உயர்ந்த கட்டில் நடுவில் இருத்தப்பட்டு, அதில் முத்துராசா வீற்றிருந்தார். அகில், சந்தன வாசம் அறை முழுதும் மணம் வீசியது.
முத்துராசாவுக்கு பக்கத்தில் இன்னும் சில ஆட்கள் உட்கார்ந்திருந்தனர்.


"இந்தப் பையன் என்னமோ பார்த்தேன்னு சொல்றான்! அது எனக்கும் கொஞ்சம் முக்கியமானதாப் படுது! அவன் வாயாலியே அதைக் கேளுங்க!" எனப் பூசாரி கந்தனை முன்னே தள்ளினார்!

'என்ன விசயம் தம்பி? பூசாரி என்ன சொல்றாரு?' என அன்புடன் கேட்டார் முத்துராசா!
************************

அடுத்த அத்தியாயம்

28 பின்னூட்டங்கள்:

வடுவூர் குமார் Wednesday, October 31, 2007 8:20:00 PM  

கந்தனுக்கு இந்த தீர்க்கதரிசம் நல்லதா? கெட்டதா? என்று கூடிய விரைவில் தெரியும் என்று நினைக்கிறேன்.

Anonymous,  Wednesday, October 31, 2007 8:40:00 PM  

விஎஸ்கே சார்,

படத்தில் இருக்கும் அருவி கொல்லி மலையா ? குற்றாலமா ?

துளசி கோபால் Wednesday, October 31, 2007 8:42:00 PM  

வந்துட்டுப்போனேன்

VSK Wednesday, October 31, 2007 9:04:00 PM  

அதானே! சீக்கிரம் தெரிஞ்சிருக்கும் திரு.குமார்!
:))

VSK Wednesday, October 31, 2007 9:06:00 PM  

//படத்தில் இருக்கும் அருவி கொல்லி மலையா ? குற்றாலமா ?//

கூகிளாண்டவர் கொல்லியருவி எனச் சொல்லித்தான் அருளினார், சந்தேகம் கேட்பவரே!
:))

VSK Wednesday, October 31, 2007 9:06:00 PM  

சொல்றமாரி ஒண்ணுமில்லைன்றீங்க!
இல்லையா டீச்சர்!
:))

வல்லிசிம்ஹன் Wednesday, October 31, 2007 9:45:00 PM  

விறுவிறுப்பாகி விட்டதே.
கொல்லிமலையை ரயிலில் இருந்து பார்த்த ஞாபகம்.
நேரே போய்ப் பார்க்கும் அனுபவத்தைக் கொடுத்து விட்டீர்கள்.
சுருக்க முடிந்து விடுகிறதே அத்தியாயம்:))
இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துகள்.

VSK Wednesday, October 31, 2007 10:32:00 PM  

//சுருக்க முடிந்து விடுகிறதே//

கூடிய மட்டிலும், கதைக்க்குச் சம்பந்தமில்லாமல் வர்ணனைகளை நீட்ட விரும்பவில்லை நான், வல்லியம்மா!

இதுவே நீளம், கம்மின்னு ஏதோ சொல்லிட்டு, சர்வேசன் இப்பல்லாம் இந்தப் பக்கம் வர்றதையே நிறுத்திட்டாரு!
:))

இலவசக்கொத்தனார் Wednesday, October 31, 2007 10:46:00 PM  

தலைவர் வீடுன்னாலே பதவிசாத்தான் இருக்கும் போல!! :))

நாமக்கல் சிபி Wednesday, October 31, 2007 10:54:00 PM  

படத்திலிருக்கும் அருவி கொல்லிமலைதான்!

நாமக்கல் சிபி Wednesday, October 31, 2007 10:58:00 PM  

//சொல்றமாரி ஒண்ணுமில்லைன்றீங்க!//

அதே!

Anonymous,  Wednesday, October 31, 2007 10:58:00 PM  

அண்ணாமலை!

சீக்கிரமே என்ன நடக்கப் போகுதுன்னு சொல்லிடுப்பா!

Anonymous,  Wednesday, October 31, 2007 11:09:00 PM  

ஒண்ணுமில்லாதத் தேடித் தேடி எல்லாத்தைத் தெரிஞ்சிக்கப் போறான் கந்தன்!

அந்த ஒண்ணுமில்லாதது எது?
அதுதான் சூட்சுமம்!
அந்த சூட்சுமம்தான் வாழ்க்கை!

அதை புரிஞ்சிகிட்டவங்க எல்லாருமே நிறைவா வாழ்ந்தவங்க ஆவாங்க!

இல்லாட்டி எதைத் தேடுறோம்னு தெரியாமலே தேடிகிட்டே இருக்க வேண்டியதுதான்!

ராபர்ட் மாதிரி ஆளுங்களுக்குப் புரியறா மாதிரி சொல்லணும்னா

"நத்திங்க் ஈஸ் லைஃப், அண்ட் தட் லைஃப் ஈஸ் த எவிரிதிங்க்"

"Nothing Is Life, And That Life is the everything"

Anonymous,  Wednesday, October 31, 2007 11:12:00 PM  

//சொல்றமாரி ஒண்ணுமில்லைன்றீங்க!//

எல்லா நேரமும் நாம எதிர்பார்த்ததேவா நடக்குது!

ஒரு நாளைக்கு நாம எதிர்பார்க்காத மாதிரி விறுவிறுப்பா இருக்கும்!

ஒரு நாளைக்கு எதிர்பார்த்து வந்து ஏமாந்து போறதும் உண்டு!

சரியா அதை அனுமானிக்க முடிந்தா வாழ்க்கைல சுவாரசியம் இருக்காது!

ஆனா அனுமானிக்க முடியும் அளவுக்கு அனுபவம் வந்துட்டா அதுக்கப்புறம் வாழ்க்கை நல்லா இருக்கும்!

cheena (சீனா) Wednesday, October 31, 2007 11:26:00 PM  

சஸ்பென்ஸ் கூடுகிறது - மனதில் எதிர்பார்ப்புகள் - கூடவே ஒரு பயம் - பொறுமை பொறுமை என மனதை அடக்கி இருக்கிறேன்.

பூசாரிகள் பொதுவாக நல்ல செய்தி தான் சொல்வார்கள். ஆனால் இங்கோ தலைவரிடம் அழைத்துச் சென்று கந்தன் பார்த்த சகுனத்திற்கு விளக்கம் தேடுகிறார். பூசாரி வாயால் சொல்லத் தயங்கும் செய்தி என்ன ??

VSK Wednesday, October 31, 2007 11:30:00 PM  

//தலைவர் வீடுன்னாலே பதவிசாத்தான் இருக்கும் போல!! :))//

எக்கச்சக்க உள்குத்து வைச்ச பின்னூட்டமா இருக்கே இது, கொத்ஸ்!

சும்மாவா சொல்றாங்க உங்களை 'சின்ன முகமூடி'ன்னு!

அதென்னங்க "பதவி சாத்தான்"!?
:))

VSK Wednesday, October 31, 2007 11:33:00 PM  

என்னமா கதையை உள்வாங்கி ஒவ்வொரு கருத்தும் சொல்றீங்க சீனா!
மகிழ்ச்சியா இருக்கு!

இலையைக் கிள்ளிப் போட்டுப் பார்த்ததுக்கு அப்புறமும், அதை கந்தன் வாயாலியே சொல்ல வைக்கறதுக்கு என்ன காரணமாயிருக்கும்?
கந்தனைச் சாய்க்கறதுக்கா? இல்லை, நிமித்தறதுக்கா?

நாளைக்குப் பார்க்கலாம்!:)

நாகை சிவா Thursday, November 01, 2007 6:04:00 AM  

இந்த சகுனத்தால் கந்தனுக்கு ஏதும் ஆபத்து இல்லல ?

நாமக்கல் சிபி Thursday, November 01, 2007 11:21:00 AM  

எனக்கு இன்னும் அப்செண்ட் போட்டு இருக்கே!

G.Ragavan Thursday, November 01, 2007 2:40:00 PM  

கண்டதையும் சொல்லாம கண்டதைச் சொல்றான்னு பூசாரி புரிஞ்சிக்கிட்டாரு போல. அதான் இப்பிடி. கண்டதுக்குப் பலன் கை மேலன்னு சொல்வாங்க. கந்தன் கண்டதுக்குப் பலன் எது மேலையோ!

VSK Thursday, November 01, 2007 6:07:00 PM  

அட்டகாசமான பாட்டும் இசையும் சேர்ந்த சுட்டியை அளித்த உங்களுக்கு என் நன்றி, சிபியாரே!

VSK Thursday, November 01, 2007 6:08:00 PM  

//கண்டதுக்குப் பலன் கை மேலன்னு சொல்வாங்க. கந்தன் கண்டதுக்குப் பலன் எது மேலையோ!//

இன்னைக்குப் பார்த்துருவோம் ஜி.ரா.!

SurveySan Monday, December 03, 2007 12:26:00 AM  

//இதுவே நீளம், கம்மின்னு ஏதோ சொல்லிட்டு, சர்வேசன் இப்பல்லாம் இந்தப் பக்கம் வர்றதையே நிறுத்திட்டாரு//

அடடா, ஒரு மாசம் வெகேஷன் இப்பதான் ஹாயா முடிஞ்சது.
இனி தான் விட்டத படிக்கணும்.
படிச்சுட்டு சொல்றேன்.

மங்கள் விநாயகர் நலம்.
ரோடுகள் தான் சூப்பர் டேமேஜ் ;)
(என்னிக்கு ஒழுங்கா இருந்திருக்கு :) )

VSK Monday, December 03, 2007 12:47:00 AM  

உங்களைக் காணவில்லையே என்ற ஆதங்கத்தில் சொன்னது அது!
தவறாகக் கொள்ள வேண்டாம்.

மங்கள விநாயகர் நலமறிந்து மகிழ்ச்சி!:)
இம்மாதம் 25-ம் தேதி அவரைப் பார்ப்பேன்!!

இப்பத்தான் உங்க 'சிறு'கதை போட்டி பார்த்தேன்.

முயற்சிக்கிறேன்!::))

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP