Monday, December 03, 2007

"அ.அ. திருப்புகழ்" - 23 "விறல்மாறன் ஐந்து'

"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" -- 23 "விறல்மாறன் ஐந்து"

திருப்புகழ் விளக்கப் பதிவு இட்டு வெகு நாட்களாச்சு, எஸ்.கே! சீக்கிரமா ஒண்ணு போடுங்க என ஒரு அன்புக்கட்டளை இட்டு கூடவே இந்தப் பாடல் தலைப்பையும் கொடுத்த "கேயாரெஸ்ஸுக்கு" எனது மனமார்ந்த நன்றி!

இப்போது பாடலைப் பார்ப்போம்!
******************************************


விறல்மார னைந்து மலர்வாளி சிந்த
மிகவானி லிந்து வெயில்காய
மிதவாடை வந்து கழல்போல வொன்ற
வினைமாதர் தந்தம் வசைகூற

குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட
கொடிதான துன்ப மயல்தீர
குளிர்மாலை யின்க ணணிமாலை தந்து
குறைதீர வந்து குறுகாயோ

மறிமா னுகந்த இறையோன் மகிழ்ந்து
வழிபாடு தந்த மடிபாளா
மலைமாவு சிந்த அலைவேலை யஞ்ச
வடிவே லெறிந்த அதிதீரா

அறிவா லறிந்து னிருதா ளிறைஞ்சும்
அடியா ரிடைஞ்சல் களைவோனே
அழகான செம்பொன் மயில்மே லமர்ந்து
அலைவா யுகந்த பெருமாளே!
**************************************************************

இதை தினமும் 6 முறை சொல்லிவர, திருமணம் ஆகாதவர்க்கு விரைவில் திருமணம் நிகழும்... ! இது வாரியார் வாக்கு!


************************************************************பொருள்:
[வழக்கம் போல் பின்பாதி பார்த்து, பிறகு முன்பாதி!]

"மறிமானுகந்த இறையோன்"

தவங்கள் செய்து வலிமையடைந்து
பணிவினை மறந்து தருக்குடன் அலைந்த
தாருகவனத்தின் முனிவர்கூட்டச்
செருக்கினை அடக்க சிவபெருமானும்
அழகியவுருவில் அவர்முன் நடக்க

மையலில் மயங்கி முனிவர் பெண்டிர்
அழகிய தமிழ்மகன் பின்னே நடக்க
ஆத்திரமுற்ற முனிவர் கூட்டம்
அழகனை அழிக்க யாகங்கள் செய்ய
அதனில் கிளம்பிய சிறுமான் வடிவை

அம்பல வாணன் மீதே ஏவ
அன்புடன் சிரித்து அப்புள்ளிமானை
தன்னிரு விரலால் தயவுடன் எடுத்து
கரங்களில் சூடிய கயிலைப் பெம்மான்

"மகிழ்ந்து வழிபாடு தந்த"

செருக்கினால் குமரனைப் பணியாதொழித்த
பிரமனை அழைத்து மூலப்பொருளாம்
பிரணவத்தொலியின் பொருள்தனைக் கேட்டு
அதனை அறியா திகைத்த நான்முகன்
தலையினில் குட்டி சிறையினில் தள்ளி

சிருட்டித்தொழிலைத் தானே செய்து
கந்தவெற்பினில் கம்பீரமாக
கந்தக்கடவுளும் அமர்ந்திட்ட வேளையில்,
கண்நுதற்கடவுள் குமரனை அழைத்து
பிரமனைச் சிறைவிடப் பரிவுடன் சொல்ல,
ஐயனின் சொல்லை மகிழ்வுடன் ஏற்று

பிரமனை விடுத்து, புத்திகள் சொல்லி
தந்தையுடனே தனித்திரும் காலை,
பிரணவப்பொருளைத் தனக்கும் சொல்ல
அப்பனும் வேண்டிட சுப்பனும் மிடுக்காய்
இடம்,பொருள், ஏவல் அறிந்து

கேட்டலும் சொல்லலும் நிகழ்ந்திடல் வேண்டும்
எனவே உரைக்க, அதனின் தத்துவம்,
சீடன் பணிவின் திறனை இந்த
உலகுக்குணர்த்த, அருட்பெரும்ஜோதி
தணிகை சென்று கண்களை மூடி

ஒரு கணப்பொழுது தவமுமியற்ற
[தணிகை மலைக்கு இதனால் "கணிக வெற்பு" என்னும் பெயரும் இதனால் வந்தது!]
சுப்பிரமணியன் அவர்முன் தோன்ற
ஆலவாய் அண்ணல் வடதிசை நின்று
குருவின் முன்னே பணிவுடன் வணங்கி

மூலப்பொருளின் பொருளுரை கேட்டார்
ஐம்முகக்கடவுள் அறுமுகக்கடவுளின்
சீடனாய் இருந்து குருவிடம் கேட்டல்
எப்படி என்பதைப் பாருக்குணர்த்திய,

"மதிபாளா"

ஞான வடிவினரே!

"மலை மாவு சிந்த அலைவேலை அஞ்ச
வடிவேல் எறிந்த"

கெடுமனங்கொண்ட கொடுங்கோலரக்கன்
சூரன் என்பான் சிவனை வணங்கிப்
பலவரம் பெற்று தம்பியர் துணையுடன்
தேவர் மானிடர் முனிவரை வருத்தி
ஆட்சி செய்யும் வேளைதன்னில்,

முனிவரும் தேவரும் இறைவனை துதிக்க
ஐயனும் அவர்மேல் கருணை கொண்டு
நெற்றிக்கண்ணில் தீப்பொறி கிளப்பி
ஆறுமுகனாம் ஓருரு உதித்தனன்!

சக்திவேற் படையைத் தாயவள் அளிக்க
அதனைக் கொண்டு கிரௌஞ்சமலை பிளந்து
தம்பியரைப் போர்க்களத்தில் வென்று
சூரனைப் போரில் பொருதிய வேளை
அண்டரும் விண்டரும் நடுங்கிடும் வடிவில்
மாமரமாகி சூரன் நின்றனன்

மாமர அசைவினில் அண்டம் நடுங்க
அதனுடன் சேர்ந்து அகிலமும் ஒடுங்க
அதனைக் கண்ட செந்தில்வேலோன்
வேற்படைவிடுத்து 'உடலைப் பிளந்து
வருகுதி!' என்று ஆணை பிறப்ப,

சங்கார வேலும் காற்றினைக் கிழித்து,
ஒளியினைக் கிழித்து, விண்ணினைக் கிழித்து
தீச்சுடர் பரப்பி நிலத்தில் நிமிர்ந்த
மராமரம் தன்னை கூறாய்ப் பிளக்க

"அதிதீரா"

வீரச்செயல் புரிந்திட்ட மாவீரனே!

"அறிவால் அறிந்து இருதாள் இறைஞ்சும்
அடியார் இடைஞ்சல் களைவோனே"

பாசம் என்னும் ஒருபேய் வாட்டும்
பசுவெனும் மறுபேய் இறைவனை மறைக்கும்
இவ்விரு மாயை இரண்டையும் ஒழித்து
மெய்யறிவாலே இறையை உணர்ந்து

நீயே சரணம் எனும் நினைவாலே
கந்தனின் திருத்தாள் மலரடி பணிந்து
வேண்டும் அன்பர்கள் வாழ்வினில் தொடரும்
இடர்களை நொடியில் அகற்றிடும் தலைவா!

"அழகான செம்பொன் மயில் மேல் அமர்ந்து
அலைவாய் உகந்த பெருமாளே!"

அழகே உருவாய் செம்பொன் நிறமாய்
திகழும் மயிலின் மேலே அமர்ந்து
செந்தூர் என்னும் சீரலைவாயில்
மகிழ்வுடன் அருளும் பெருமைக்குரியோனே!

"விறல்மாரன் ஐந்து மலர் வாளி சிந்த"

இவனது கணையால் மயங்குவர் கோடி
எவரையும் வீழ்த்திடும் காமக்கணையோன்
முனிவருமிவனது கணை பிழையாரே
தேவரும் கெட்டே மதியழிந்தொழிந்தார்
பிரமனும் மாலுமே தப்பியதில்லை
எனவே இவனே விறல்மாரனாவான்!
அவனே அழகிய மன்மதன் என்பான்!

அவனது கையில் வில்லொன்றுண்டு
அவன் தொடு கணையோ ஓரைந்தாகும்!

தாமரைக் கணையால் உன்மத்தம் பிறக்கும்
மாவின் கணையால் காதல் விளையும்
அசோகக் கணையால் கூடுதல் நிகழும்
முல்லைக் கணையால் விரகம் விளையும்
நீலக் கணையால் ஈர்த்தல் நிகழும்!

சொல்லும் நினைவும் ஒன்றெனவாகி
ஒருவருக்கொருவர் உயிர்பால் இரங்கி
நினைந்து ஆங்கே சோகம் தழுவி
அவரை நினைந்து பலவாறு பிதற்றி
நினைவொழிந்தங்கே மயக்கம் விளைந்து
ஐவகைக் காதல் நோய்களும் நிகழும்

இவ்வைந்து கணைகளும் ஒருங்கே செலுத்தி
மாறன் கணைகள் என்னை வருத்த,

"மிகவானில் இந்து வெயில் காய"
[இதனை "வானில் இந்து வெயில் மிக காய" எனப் படிக்கவும்]

சந்திரன் கணைகள் காதலைக் கூட்டும்
வானில் வீசும் சந்திரக் கணைகள்
பகலில் கொளுத்திடும் வெயில் போல் காய்ந்திட
மிகவே துன்பம் காதலில் வருத்த,

"மித வாடை வந்து தழல் போல ஒன்ற"

குளிரும் கிரணம் சுடுவது என்றால்
வீசும் தென்றலும் வெந்திடுமன்றோ!
மெல்லிய தென்றல் வீசுதல் கூட
நெருப்பினைப் போலே சுடுவது போல,

"விலைமாதர் தந்தம் வசை கூற"

வினைவசம் தம்மை இழந்திட்ட மகளிர்
மனம்போன வண்ணம் சுடுமொழி கூறி
வதை செய்திடவும்,

"குறவாணர் குன்றில் உறை பேதை கொண்ட
கொடிதான துன்ப மயல் தீர"

சீவனென்னும் ஆன்மா ஐம்புலனாம் வேடுவரின்
ஆளுகையில் அகப்பட்டு உடலென்னும் மலைக்குள்ளே
உனைச் சேரும் வழியின்றி உழலுவதைப் பார்க்கிலையோ!
பரமாத்மா உடன் சேரும் நாளைத்தான் ஜீவாத்மா
வெகுநாளாய்க் காத்திருந்து விருப்புடனே நாடுதம்மா!
ஐம்புலனும் வேடுவராய் அலைக்கழித்து கொடுமைசெய
மலைநடுவே பதுங்கியிரும் பறவை படும் துயர் போல
ஜீவாத்மா மயக்குற்ற துயர் நீங்கி சுகம் விளைய,

"குளிர்மாலையின்கண் அணிமாலை தந்து
குறைதீர வந்து குறுகாயோ"

குளிர் பரவும் மாலைநேர வேலையதில்
நின் மார்பில் சூடிநிற்கும் மணமாலை தனைத் தந்து
என் துயர் தீரும் நிலைதந்து இவண் வந்து
எனைச் சேர்த்து அணைய மாட்டீரோ, குமரவேளே!!!

******************************************************


அருஞ்சொற்பொருள்:

விறல்மாரன்= மன்மதன்
வாளி= அம்பு, கணை
இந்து= நிலவு
தந்தம்= பற்கள் [ இங்கு பற்களில் இருந்து பிறக்கும் சொல எனப் பொருள் வரும்]
மறிமான்= சிறிய மான்
மதிபாளா= ஞானம் மிகுந்தவர்
வேலை= கடல்
அலைவாய்= திருச்செந்தூர்
***********************************************

வேலும் மயிலும் துணை!
முருகனருள் முன்னிற்கும்!
அருணகிரிநாதர் புகழ் வாழ்க!
***********************************************

10 பின்னூட்டங்கள்:

VSK Monday, December 03, 2007 10:36:00 AM  

test


வேலும் மயிலும் துணை!
முருகனருள் முன்னிற்கும்!
அருணகிரிநாதர் புகழ் வாழ்க!
***********************************************

கோவி.கண்ணன் Monday, December 03, 2007 10:49:00 AM  

என்னது இரண்டாம் முறை ?

சரி, நானும் அதையே போடுகிறேன்.

************************

வீஎஸ்கே ஐயா,

வழக்கமான பொருள்விளக்கம் போல் அன்றி சற்றி விரிவாகவே பொருள் கூறியுள்ளீர்கள், எழுத்து அமைதியான நீரோடையாக, சலசலப்பின்றி தெளிவான ஓட்டத்தில் இருக்கிறது. படித்துப் பார்த்தவரையில் இந்த பாடலில் சைவ சிந்தாந்த கருத்துக்கள் வருவதாக பொருள் அளித்திருக்கிறீர்கள் நன்று !

இந்து - நிலவு புதிதாக அறிந்து கொண்டேன்.

மாறன் - மன்மதன், விறல் என்று சேர்த்து ஏன் சொல்கிறார்கள் என்று புரியவில்லை.மாறன் என்றால் மனதிற்கு இனியன். மாறன் ( திமுக மாறன் அல்ல) என்ற பெயரில் தனிப்பட்ட மயக்கம் எனக்குண்டு. மாறன் சிவனின் அம்சம் என்கிறார்கள் சரிதானே ?

VSK Monday, December 03, 2007 11:09:00 AM  

நீண்ட நாட்களுக்குப் பின், ஒரு விரிவான பின்னூட்டம் உங்களிடமிருந்து வந்தமைக்கு நன்றியும், மகிழ்ச்சியும், கோவியாரே!:))

மாறன் என்றால் 'பெருமை பெற்றவன், அழகிய தமிழ் மகன் [நம்ம டாக்டர் விஜய் இல்லை!:)] எனப் பொருள் வரும்.
நெடுமாறன், நன்மாறன், ஒளிமாறன் என்றெல்லாம் தமிழ்ப்பெயர்கள் உண்டு.

விறல் என்றால், வலிமை, வெற்றி, தீரம், பெருமை எனப் பொருள்.

சிவபெருமான் மீதே கணை தொடுக்க முற்பட்டவன் என்பதால் இப்படி அழைக்கிறார் அருணையார்!

cheena (சீனா) Monday, December 03, 2007 5:40:00 PM  

நண்பரே !! பதிவு அருமை. பாடலை விட பொருளுரை - பொழிப்புரை பாடல் வடிவிலேயே இருக்கிறது. தெளிவான சொற்கள். எளிமையான, விரிவான விளக்கம். சட்டென மனதில் பதியும் கருத்துகள். முற்றுப்புள்ளி இல்லாமல் உரையை அருமையாக தந்துள்ளீர்கள். படிக்கப் படிக்க இன்பம். கேட்கக் கேட்க இன்பம்.

சிவ பெருமான் மானினை கையில் சூடியது, சுப்பன் அப்பனுக்கு பாடம் சொன்னது, சூரனை அழித்தது, மன்மதக் கணைகள் ஐந்தின் பெருமை, மணமாலை தந்து துயர் தீர்க்கும் குமரவேளின் பெருமை ஆகியவை அழகாக சித்தரிக்கப்பட்டு உள்ளது.

ஒரு சிறு சந்தேகம் :

விரல் மாறனா - அல்லது - விறல் மாரனா ??

பதிவிற்கு நன்றி -

VSK Monday, December 03, 2007 6:13:00 PM  

சித்தரில் வந்து சொன்னது போலவே மீண்டும் வெகு அழகாக பதிவின் மையக் கருத்துகள் அனைத்தையும் தொட்டுச் சென்றிருக்கிறீர்கள், சீனா!

மிக்க நன்ரி.

விறல் மாரன் என்பதே சரி.
விறல்= வீரம் மிகுந்த
மாரன்= மன்மதன்

:))

Kannabiran, Ravi Shankar (KRS) Tuesday, December 04, 2007 9:32:00 PM  

thalaivare....en comment kidaikkalaya?
itho meendum idugiren...

நேயர் விருப்பத்துக்குச் செவி சாய்த்தமைக்கு நன்றி birthday boy SK :-)
நல்ல விளக்கங்கள்!
விறல் மாறன் = விரல் மாரன்?
மாரன் என்பவன் தானே மன்மதன்!
அந்த ஐந்து கணைகளையும் வரிசைப் படுத்திச் சொன்னமைக்கு நன்றி!

//இதை தினமும் 6 முறை சொல்லிவர, திருமணம் ஆகாதவர்க்கு விரைவில் திருமணம் நிகழும்... ! இது வாரியார் வாக்கு!//

Bachelor Blog மக்களே! வ.வா.சிங்கங்களே - என்ன ரெடியா? :-)))
திருமணத் திருப்புகழ் கொடுத்தமைக்கு மிக்க நன்றி SK
//குறவாணர் குன்றில் உறை பேதை கொண்ட
கொடிதான துன்ப மயல் தீர//
இங்கு வள்ளியம்மை என்று மட்டுமே சொல்லாது, உயிர் இறைவன் பால் கொண்ட ஏக்கத்தைச் சொன்னது நன்று!
//"அறிவால் அறிந்து இருதாள் இறைஞ்சும்
அடியார் இடைஞ்சல் களைவோனே"//
ஒரு கேள்வி!
அறிவால் அறிந்து இறைஞ்சினால் தான் இடைஞ்சல் களைவனோ?
அறிவு பெற வழியில்லாது, வெறும் இறைஞ்சல் மட்டுமே செய்யும் அடியார் நிலை என்னவோ?

VSK Tuesday, December 04, 2007 9:58:00 PM  

மன்னிக்க வேண்டும் ரவி!

உங்கள் பின்னூட்டம் கிடைத்து, அதற்கு பதிலும் இட்டேன்.
ஆனால், அந்தப் பதிவில் ஏதோ கோளாறு வரவே, மீண்டும் இன்னொரு பதிவாக இட்டபோது, உங்கள் பின்னூட்டத்தை இதில் பதிய மறந்து விட்டேன்.

அந்தப் பதிவையும் நீக்கி விட்டதால், திரும்பவும் பிரசுரிக்க முடியவில்லை!

பெரிய கதையா இருக்குல்ல?
என்ன பண்றது?
அப்படி ஒரு கணினி அறிவாளி [!!??]நான்!::))

VSK Tuesday, December 04, 2007 10:09:00 PM  

நீங்களும் நானும் சம வெற்றியாளர் என அறிவிக்கிறேன் ரவி!

விறல்= வீரம் பொருந்திய
மாரன்= மன்மதன்
என்பதே சரி!

பாசம், பதி தொலைத்த அறிந்தவர்களின் இடைஞ்சலைக் களைவான் என்றால் மற்றவர் துயர் களைய மாட்டான் எனப் பொருள் அல்ல.

அப்படி அந்த இரண்டையும் தொலைத்தவர்கள்தான் அவன் தாளில் சரணடைவார்கள்.

மற்றவர்கள் இன்னமும் இந்த பாசங்களில் சிக்கி, அவ்வப்போது ஒரு கும்பிடு மட்டும் போட்டுவிட்டு, துயர் வரும் போது குய்யோ முறையோ எனக் கத்துவார்கள்.

இவர்களது வலியைக் குறைப்பான். ஆனால், வினைப்பயன் விளைவைப் பெற்றே ஆவார்கள்.

அவனே சரண் எனப் பணிந்தவர் இடைஞ்சலை அறவே களைவான்!

குமரன் (Kumaran) Monday, December 10, 2007 9:42:00 AM  

நான் சிறு வயது முதல் விரும்பிப் படித்து வரும் திருப்புகழ் இது எஸ்.கே. குளிர் மாலையின் கண் அணி மாலை தந்து குறை தீர வந்து குறுகாயோ என்ற வரிகளுக்கெல்லாம் கல்லூரிக்கு வந்த பின் தான் பொருள் புரிந்தது. அதற்கு முன்னர் பின் பாதி தான் முழுதாகப் புரியும். :-)

அப்பனுக்குப் பாடம் சொன்ன சுப்பன் என்றாலே உடனே நினைவிற்கு வருவது சுவாமிமலை தான். இன்று தான் சுவாமிநாதனுக்கும் திருத்தணிகைக்கும் உள்ள தொடர்பு அறிந்தேன். இது வரை வள்ளிகாந்தனுக்கும் தணிகை மலைக்கும் உள்ள தொடர்பினை மட்டுமே அறிந்திருந்தேன்.

குறவாணர் குன்றில் உறை பேதை கொண்ட என்ற போது நானும் இறையை நோக்கி இறைஞ்சும் உயிர் கொள்கின்ற நாயகி தோற்றத்தைத் தான் மனத்தில் கொண்டேன். இரவிசங்கர் சொன்னதைப் படித்தப் பின் தான் அது வள்ளியம்மையைக் குறிக்கவும் செய்யலாம் என்று தோன்றியது.

விறல் மாரன் என்பதே சரி என்று கடைசியில் சொல்லிவிட்டீர்கள். மாரன் என்பவனே மன்மதன். மாறன் என்பவன் நீங்கள் சொன்ன பொருள் எல்லாம் கொண்டு பாண்டியர்களுக்கும் அவர்கள் கீழ் ஆட்சி செய்த சிற்றரசர்களுக்கும் உரிய ஒரு தனிப்பெயர். வளத்தான்/வளவன் என்று சோழர்களுக்கும், ஆதன் என்று சேரர்களுக்கும் அப்படிப்பட்ட சிறப்புப்பெயர்/ தனிப்பெயர் இருந்திருக்கிறது. இந்தப் பாடலில் வருபவன் பாண்டியன்/மாறன் இல்லை. மன்மதன் - மாரன்.

குமரன் (Kumaran) Monday, December 10, 2007 9:42:00 AM  

கோவி.கண்ணன். மாரன் சிவபெருமானின் அம்சம் என்று இதுவரை நான் படித்ததில்லை. மாரன்/மன்மதன் திருமாலின் மகன் என்று படித்திருக்கிறேன் - காமனார் தாதை - காமனின் தந்தை என்று ஆழ்வார்களும் பாடியிருக்கிறார்கள். பரிபாடலிலும் அந்தக் குறிப்பு இருக்கிறது.

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP