Friday, November 09, 2007

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 36

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 36

முந்தைய பதிவு இங்கே!


34.

"உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது

தள்ளினும் தள்ளாமை நீர்த்து." [596]



ஒரு நாள் சென்றது.

ஒன்றுமே நடக்காதது போல், சித்தர் அங்கிருந்த ஆட்களுடன் கதையடித்துக் கொண்டிருந்தார்! கந்தனைக் காட்டி வேறு எதையோ சொல்லிச் சிரித்தார். அவர்களில் ஒருவன் ஒருசமயத்தில் கந்தனைப் பார்த்து கையெடுத்துக் கும்பிடக் கூட செய்தான்.

தியானம் செய்வது போல உட்கார்ந்திருந்த கந்தனுக்கு, ஆத்திரமும், அழுகையும் பொத்துக் கொண்டு வந்தன!

சற்று நேரம் பொறுத்து சித்தர் அவன் பக்கமாய் வந்த போது, ' ஒருநாள் ஆயிப்போச்சு! இன்னும் ஒருவழியும் தெரியலியே' என ஆதங்கத்துடன் பகிர்ந்தான்.

'நான் சொன்னது நினைவிருக்கில்ல?
கண்ணுக்கு எதுத்தாப்பல தெரியற இந்தப் பரந்த உலகம் கடவுளோட ஒரு அம்சம். ஒரு சித்தன் என்ன பண்ணறான்னா, இந்த அம்சத்தை, கண்ணுக்குத் தெரியாத தெய்வீக நிலையோட பார்த்து, அப்படியே ரெண்டையும் ஒரே தட்டுல கொண்டுவந்து அனுபவிக்க ஆரம்பிப்பான்!'

சொல்லியவாறே, தன் தோளில் வந்து உட்கார்ந்த கழுகைத் தடவிக் கொடுத்தார்.

'என்ன பண்ணிகிட்டு இருக்கீங்க. இங்க நான் உசிருக்குப் போராடிகிட்டு இருக்கேன். நீங்க ஒண்ணுமே நடக்காத மாரி, கழுகோட கொஞ்சிகிட்டு இருக்கீங்களே? இன்னும் ரெண்டு நாளுல நாம ரெண்டு பேரும் உசிரோட இருப்போமான்னே சந்தேகம்! அதைப் பத்தி யோசிங்க' என கோபமாகக் கத்தினான்.

'உஸ்ஸ்ஸ்ஸ்! மெல்லப் பேசு! அநேகமா நீதான் செத்துப் போவேன்னு நினைக்கறேன்' என்றார் விஷமமாகச் சிரித்தபடி!

'ஏன் அப்படி?' என பயம் கிளம்பி நெஞ்சை அடைக்கக் கேட்டான் கந்தன்.

'ஏன்னா,....எனக்கு எப்படி காற்றா மாறுவதுன்னு தெரியும்!' எனச் சொல்லியபடியே கழுகை எடுத்துப் பறக்க விட்டார் சித்தர்!
---------------

இரண்டாம் நாள்!


கந்தனின் பயம் அதிகரிக்கத் தொடங்கியது. அவன் மனசும் கூடச் சேர்ந்து கொண்டது அவனது பயத்தில்!

உட்கார்ந்திருக்கப் பிடிக்காமல், மெதுவாக எழுந்து நடந்தான்.

இரண்டு ஆட்கள் அவன் போவதைப் பார்த்து அவனைப் பின் தொடர ஆரம்பித்தனர்.

சித்தர் அவர்களை ஒரு பார்வைபார்த்து, அவன் எங்கியும் போகமாட்டான் என்பது போல சைகை செய்ய அவர்கள் சித்தரின் அருகில் அமர்ந்தனர்.

கால் போன போக்கில் என்னென்னவோ யோசித்தபடியே நடந்தான்.
ஒரு வழியும் புலப்படாமல், கந்தன் திரும்பி வந்தான்.


மொத்தக் காடும் அவன் பயத்தை எதிரொலிப்பது போல் அவனுக்குத் தோன்றியது.

சித்தர் கண்களை மூடி தியானத்தில் இருந்தார்.


காவலாளிகள் தொலைவில் இவன் வந்ததைக் கவனித்துவிட்டு, ஒருவிதத் திருப்தியுடன் வேறேதோ பேச ஆரம்பித்தார்கள்.

இவன் வந்ததும் கண்களைத் திறந்து, 'என்ன?' என்பது போல் பார்த்தார்.

'நீங்களும் ஒண்ணும் சொல்ல மாட்டேன்றீங்க! இந்தக் கடவுளும் என்னைக் கை விட்டுட்டாரே!' எனக் கலங்கிப் போய் கேட்டான்.

'கடவுள் எப்படி கைவிடுவாரு?' எனத் திருப்பிக் கேட்டார்.
'எனக்கு எப்படி தெரியும்? நீங்கதான் பெரிய சித்தராச்சே! நீங்களே சொல்லுங்க! கடவுள்னா யாரு?' என்றான்.

'எல்லாத்துலியும் இருக்கற வேறுபாடுகளைத் தெரிஞ்சுகிட்டும், ஒரு வேற்றுமையும் பார்க்காதவரே கடவுள்! பார்க்கப் போனா நீ கூட ஒரு கடவுள்தான்!'

'விளையாடாதீங்க! இப்ப தமாஷ் பண்ற நிலையில நான் இல்லை' என விரக்தியாகப் பேசினான் கந்தன்.

'நெசமாத்தான் சொல்றேன். இப்ப உன்னையே எடுத்துக்க. இது கையி, இது காலு, கண்ணு, மூக்கு காது, தலைன்னு உன் உடம்புல இருக்கற எல்லா வேறுபாடும் உனக்குத் தெரியும். ஆனா, அதுக்காக இதான் உசத்தி, காலை விட கண்ணுதான் உசத்தி, இது மட்டம்னு பிரிசுப் பாக்கறதில்ல நீ. அதது செய்ய வேண்டிய வேலகளும் உனக்குத் தெரியும்.எதெது என்னென்ன பண்ணும்னும் உனக்குத் தெரியும். அதுக்கு மட்டும்தான் அதைப் பயன்படுத்துவே!


எனக்கு மட்டும் செருப்பு, கையிக்கு மட்டும் தங்க கடிகாரமான்னு காலு நினைக்காது.

நான் எடுத்துத்தான் கொடுக்கறேன்; வாயிதான் தினம் சாப்பிடுதுன்னு கை பொறாமைப்படாது.

உள்ளுக்குள்ள இருக்கற ஒரு சக்தி மனசு மூலமா வெளிப்பட்டு, அது கண்ணு வழியா வெளிப்படும்போது, கண்ணு பாக்குது. அதே சக்தி காது வழியா வெளிப்படும் போது காது கேக்குது. இப்படித்தான் ஒவ்வொண்ணும்!

உள்ளே இருக்கற சக்திதான் இப்படி பல ரூபமா வெளிப்படுதுன்றதைப் புரிஞ்சுகிட்டு, அந்த சக்தி என்னான்னு பார்க்க ஆரம்பிக்கறப்ப உனக்குள்ல இருக்கற கடவுள் உனக்குத் தெரியவரும். அந்த தெய்வீக நிலையைப் புரிஞ்சுகிட்டியானா, அப்புறம் எல்லாமே சுளுவா வந்திரும். இதைப் பத்தி யோசிக்க ஆரம்பி!' எனச் சொல்லிவிட்டு,

'இன்னும் ஒரு நாளுதான் இருக்கு, கடவுளே!' என ஒரு குண்டையும் போட்டுவிட்டு மீண்டும் தியானத்தில் ஆழ்ந்தார் சித்தர்!

ஏதோ ஒரு நம்பிக்கை உள்ளத்தில் பிறக்க, கந்தனும் அவரருகில் அமர்ந்து கண்களை மூடிக் கொண்டான்.
---------------------

மூன்றாம் நாளும் விடிந்தது!

'என்ன உங்க சித்தர் தயாரா? போய் என்ன ஏதுன்னு பார்க்கலாமா?' எனத் தலைவன் வந்து கேட்டான்.

'ஓ! பார்த்துறலாமே' எனத் தெம்பாகச் சொல்லிய சித்தர், கந்தனைப் பார்த்தார்.

கந்தன் ஒன்றும் பேசாமல் எழுந்து நின்று அவர்களைப் பார்த்தான்.

மானசீகமாக சித்தரை வணங்கினான். சித்தர் அவனைப் பார்த்துச் சிரித்தார்.

ஏதோ ஒரு சக்தி தனக்குள் இருந்து இயக்குவதை உணர்ந்தான்.

'எல்லாரும் அப்படியே உட்காருங்க. கொஞ்ச நேரம் பிடிக்கும் இதுக்கு' என்றான்.

'எங்களுக்கு ஒரு அவசரமும் இல்லை. இந்தக் காடு எங்களுக்கும் பழக்கமானதுதான்' என அமர்த்தலாகச் சொல்லியபடியே, உட்கார்ந்தான் தலைவன்.

மற்றவர்களையும் உட்காரச் சொல்லி கை காட்டினான்.

கந்தன் சற்று தள்ளிச் சென்று, அந்த காட்டையே உற்று நோக்கினான். மிகவும் பழக்கப்பட்ட இடம் போல உணர்ந்தான். காட்டைத் தாண்டி அவன் பார்வை விரிந்தது!

[தொடரும்]
*******************************


"உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து." [596]


அடுத்த அத்தியாயம்

19 பின்னூட்டங்கள்:

இலவசக்கொத்தனார் Friday, November 16, 2007 9:49:00 PM  

சரிதான். சித்தரைத் தேடிப் போன கந்தனை ரெண்டு நாளா காணுமேன்னு பார்த்தா, பையன் சித்தரா தயாராகி வந்து நிக்கறான்!! நல்லா இருக்கே கதை!!

Anonymous,  Friday, November 16, 2007 10:03:00 PM  

ஹாலிடேவில் சித்தர் ?
கடைவிரித்தால் கொள்வார் உண்டா ?

VSK Friday, November 16, 2007 10:28:00 PM  

சித்தரும் தியானத்துல.

கந்தனும் தேடல் பயணத்தில்.

அதான் இப்படி!

கொத்ஸ் வந்து துவக்கியிருக்காரு!

பாப்பம்!
:))

VSK Friday, November 16, 2007 10:29:00 PM  

வர்றவங்க வரட்டும் சாமி!
இப்ப நீங்க வந்திருக்கீங்களே பூண்டியிலிருந்து!
:))

துளசி கோபால் Friday, November 16, 2007 10:51:00 PM  

//உள்ளுக்குள்ள இருக்கற ஒரு சக்தி மனசு மூலமா வெளிப்பட்டு, அது கண்ணு வழியா வெளிப்படும்போது, கண்ணு பாக்குது. அதே சக்தி காது வழியா வெளிப்படும் போது காது கேக்குது. இப்படித்தான் ஒவ்வொண்ணும்! //

இது பிடிச்சிருக்கு.

நானானி Saturday, November 17, 2007 12:08:00 AM  

ருசிகரமாயிருக்கு!

VSK Saturday, November 17, 2007 12:14:00 AM  

வாங்க டீச்சர்!

VSK Saturday, November 17, 2007 12:14:00 AM  

நன்றி, நானானி!
:))

நாகை சிவா Saturday, November 17, 2007 2:15:00 AM  

கந்தன் பாதை வேறு பக்கம் போற மாதிரி உள்ளது, இது பரீட்சையா இல்லை அவன் தேடலின் விடையா?

வல்லிசிம்ஹன் Saturday, November 17, 2007 3:37:00 AM  

எனக்கு மட்டும் செருப்பு, கையிக்கு மட்டும் தங்க கடிகாரமான்னு காலு நினைக்காது.

நான் எடுத்துத்தான் கொடுக்கறேன்; வாயிதான் தினம் சாப்பிடுதுன்னு கை //

இது போல உலமே மத்தவங்களைப் பார்த்துக் குறை சொல்லாம இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்:))

VSK Saturday, November 17, 2007 7:12:00 AM  

//இது போல உலமே மத்தவங்களைப் பார்த்துக் குறை சொல்லாம இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்:))//

நிச்சயம் "கனவு மெய்ப்படும்' இப்படியே எல்லாரும் நினைக்கத் துவங்கினால்!

நன்றி வல்லியம்மா.

G.Ragavan Saturday, November 17, 2007 7:41:00 AM  

நம்ம காத்துன்னு நெனச்சா காத்து
கடல்னு நெனச்சா கடல்...
ஆண்ணு நெனச்சாத்தானே ஆண்
பெண்ணுன்னு நெனச்சாத்தானே பெண்
ஆகா நினைப்பு ஆட்டி வைக்குது எல்லாத்தையும்... அப்படித் தன்னைக் காத்துன்னு கந்தன் நம்புனா...நம்புன நொடியே அவன் காத்துதான்.

VSK Saturday, November 17, 2007 1:48:00 PM  

"நீ என்ன நினைக்கிறாயோ, அதுவாகவே ஆகிறாய்"

இதுதானே வேதம் சொல்லுவதும்!

இல்லையா ஜி.ரா.!
yadh bhaavam thadh bhavathi!

VSK Saturday, November 17, 2007 1:50:00 PM  

பரிட்சையில் பலதும் வரும் நாகையாரே!

எல்லாத்தையும் சமாளிக்கணும்!

சாய்ஸுல விடமுடியாது இங்கே!

G.Ragavan Saturday, November 17, 2007 2:14:00 PM  

// VSK said...
"நீ என்ன நினைக்கிறாயோ, அதுவாகவே ஆகிறாய்"

இதுதானே வேதம் சொல்லுவதும்!

இல்லையா ஜி.ரா.!
yadh bhaavam thadh bhavathi! //

ஆகா... அதெனக்குத் தெரியாதுங்களே. ஏதோ தோணிச்சு சொல்லீட்டேன். :) தப்புருந்தா மன்னிச்சிருங்க :)

VSK Sunday, November 18, 2007 3:30:00 PM  

தப்புல்லாம் ஒண்ணும் இல்லீங்க ஜி.ரா.!!!
ரொம்பவே சரியாச் சொல்லியிருக்கீங்க!
:))

cheena (சீனா) Sunday, November 18, 2007 8:59:00 PM  

சித்தர் கந்தனைத் தயார் படுத்துகிறார் சித்தராவதற்கு. கண் காது முக்கு அருமையான எடுத்துக்காட்டு. நண்பர் ராகவனின் கருத்து பாராட்டத்தக்கது.
அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர் கந்தன் சித்தரைக் காண.

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP