Friday, November 09, 2007

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 41

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 41


முந்தைய பதிவு இங்கே!


39.
"ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நனிய துடைத்து." [353]

கந்தன் அந்தப் பாழடைந்த கோவிலுக்குள் நுழைந்தான்!

இரவு நெருங்கிக் கொண்டிருந்தது.

புளியமரம் அவனைப் பார்த்து 'இத்தனை நாளா எங்கே போயிருந்தே! வா! வா!' என்பது போல் தன் கிளைகளை ஆட்டியது!

தன்னோட ஆடுகள் அதனடியில் படுத்துறங்கும் காட்சி அவன் மனத்துள் விரிந்தது.

அந்தக் கனவு மட்டும் வராமல் இருந்திருந்தால்....!!!!!!!!!!!

இப்போது ஆடுகள் இல்லை. அவன் கையில் ஒரு கடப்பாறை!

அப்படியே அந்த மரத்தடியில் உட்கார்ந்தான். அவன் மனத்துக்குள் இதுவரையில் அவன் கடந்து வந்த காட்சிகள் ஒரு நிழற்படம் போல ஓடியது.
திரும்பத் திரும்ப வந்த அந்த கனவு, அந்த குறி சொன்ன கிழவி, தங்கமாலை அணிந்த கிழவர், பணத்தைத் திருடிக் கொண்டு ஓடிய திருடன், அண்ணாச்சி......
இப்படியே அனைவரும் அவன் கண்முன் வந்தனர். எல்லாமே ஒரு காரண காரியத்தோடத்தான் நடந்திருக்கு. எப்படி தவறாக முடியும்? அவன் எண்ணம் இன்னமும் தொடர்ந்தது.

கடைசியாக, மஹாபலிபுரத்தில் அந்தத் திருடன் சொன்ன சொல் அவன் காதில் மீண்டும் ஒலித்தது!

"தெற்கு கோடியில கடலோரத்துகிட்ட இருக்கற ஒரு ஊருல ஒரு பாழடைஞ்ச கோயிலுக்கு தெற்கு சுவருக்குப் பின்னால ஒரு பெரிய புதையல் உனக்காக காத்திருக்குன்னு! அங்கே ஆடுல்லாம் கூடமேய்ப்பாங்களாம்! சாமி சிலை கூட அங்கே இருக்காதாம்!அங்கே இருக்கற புளியமரத்துக்கு அடியில தோண்டினா, ஒரு பெரிய புதையல் கிடைக்கும்னு அந்தக் கனவுல சொல்லிச்சு! புத்தி கெட்டவந்தான் இது மாரி கனவையெல்லாம் நம்பிக்கிட்டு அவ்ளோ தூரம் போவான். சும்மனாச்சும் ஒரு கனா வந்திச்சுன்னு எவன் அவ்ளோதூரம் போவான்!"

சிரித்துக் கொண்டே எழுந்து, கடப்பாறையை எடுத்து அந்த மரத்தடியில் ஒரு போடு போட்டான்!

'பெரிய கில்லாடிய்யா நீ!' வானத்தைப் பார்த்துக் கத்தினான் கந்தன்! 'எல்லாமே உனக்கு அப்பவே தெரியும்! அதான் அந்த துறவிகிட்டக் கூட ஒரு கட்டித் தங்கத்தைக் கொடுத்து வைச்சிட்டுப் போனே! நான் ரத்தம் வழிய, வழிய, அவர் மடத்துக் கதவைத் தட்டினப்ப, அவர் என்னைப் பார்த்து சிரிச்ச சிரிப்பு இருக்கே, அது ஆயுசுக்கும் மறக்காது! என்கிட்ட முன்னேயே சொல்லியிருக்கலாம்ல! ரொம்பவே குசும்புதான்யா உனக்கு!'

"இல்லை! நான் அப்பவே சொல்லியிருந்தா நீ அந்தக் கல்லுக்கோவிலைப் பார்த்திருக்க மாட்டே! அழகா இருந்திச்சுல்லே அது! கூடவே எத்தனை அனுபவங்கள்! " என ஒரு குரல் வானத்திலிருந்து கேட்டது!

நிமிர்ந்து பார்த்தான்! ஒரு அழகிய வெண்புறா தன் சிறகுகளை விரித்தபடி அமைதியாகப் பறந்து கொண்டிருந்தது!

'ரொம்பவே லொள்ளுதான் உங்களுக்கு!' எனச் சிரித்தபடியே சொல்லிக் கொண்டே மீண்டும் கடப்பாறையைப் போட்டான் கந்தன்!

ஒரு அரைமணி நேரத்தில் 'ணங்'கென்று எதுவோ தட்டுப் பட்டது!

சிறிது நேரத்தில், ஒரு இரும்புப்பெட்டி தெரிந்தது! அதைத் திறந்தான்! உள்ளே, தங்க நாணயங்கள், நகைகள்!!

தன் கைப்பையில் இருந்து பெரியவர் கொடுத்த அந்த இரு கற்களை எடுத்தான்.

இதற்கு முன் ஒரே ஒரு தடவைதான் அவைகளை எடுத்திருக்கிறான். இவைகளை எடுக்க வேண்டிய தேவையே இல்லாமல் அவனுக்கு சகுனங்கள் உதவி விட்டன!

அந்தக் கற்களை மார்போடு அணைத்துக் கொண்டான்.

இப்போது அவைகள்தான் "இதெல்லாம் கனவல்ல; நிஜம்தான்!" எனச் சொல்லிய அந்த தங்கமாலை அணிந்த பெரியவரின் நினைவாக இருப்பவை! அதுவே அவரை மீண்டும் அவன் கண்முன்னே நிறுத்தின,,.... அவரை இனி பார்க்க முடியாதெனினும்!

'இதெல்லாம் கனவல்ல! நிஜம்தான்! வாழ்க்கை எப்போதுமே தான் கண்ட கனவை விடாமல் தொடர்ந்து செல்பவர்க்கு நல்லதையே செய்கிறது!' கந்தனின் மனது துள்ளியது!

குறி சொன்ன கிழவிக்கு ஒரு பங்கு கொடுக்க வேண்டுமே என்று நினைவுறுத்தியது!

காற்று ஒன்று மெல்ல வீசியது!

ஊழிக்காற்றல்ல அது!

இதமான ஒரு மலைவாசம் அதில் வீசியது!

மூலிகைகளின் மணம் அதில் கலந்து வந்தது!

அதனின்று ஒரு தனி மணம் கமழ்ந்து அவன் இதழ்களில் வந்து முத்தமிட்டது!

கந்தன் சிரித்தான்.

இதுதான் முதல் தடவையாக அவள் அனுப்புவது!

'இதோ வருகிறேன் பொன்னி!' உரக்கக் கத்தினான்!


[முற்றும்]
***********************************************************************************

"ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நனிய துடைத்து." [353]

****************************************************************

ஒரு மண்டலகாலம் இந்தக் கதை வந்தது ஒரு எதிர்பாராத நிகழ்வு!

தனது 82-ம் பிறந்தநாளைக் கொண்டாடும் "சித்தருக்கெல்லாம் பெரிய சித்தரின் " பிறந்தநாளன்று நிறைவுறுவது இன்னும் சிறப்பு!

இக்கதையை இதுகாறும் தொடர்ந்து படித்து, பின்னூட்டம் அளித்த அனைவர்க்கும் எனது நன்றி.

முன்னமே சொன்னதுபோல இது என் கற்பனையில் உதித்த கதை அல்ல. என்னை மிகவும் பாதித்த 'தி அல்கெமிஸ்ட்' என்னும் கதை இதற்கு ஆதாரம்.

அத்துடன் இன்னும் சில பெரியவர்கள் சொன்ன ஆன்மீகக் கருத்துகளையும் சேர்த்து, நம்மவர்க்குப் புரியும் வகையில் புதிய களம் அமைத்து, நமது தமிழ்க்களத்தில் உலவ விட்டிருக்கிறேன். இதை ஊகித்து பின்னூட்டம் இட்டவர்களுக்கு என் நன்றி.

உங்கள் கனவுகளைத் தொடர்ந்து தீவிரமாகச் செல்லுங்கள் ! கனவுகள் மெய்ப்படட்டும்!

அன்புவழி அனைவரும் செல்ல வாழ்த்துகள்!

நன்றி தெரிவிக்கும் இந்நாளில் [Thanks giving Day] அனைவர்க்கும் நன்றி தெரிவித்து விடை பெறுகிறேன்!









46 பின்னூட்டங்கள்:

VSK Thursday, November 22, 2007 6:12:00 PM  

முதல் பதிவு தொடங்கி நிறைவுப் பதிவு வரை தவறாது பின்னூட்டிய உங்களுக்கு என் நன்றி, திரு. அனானி! :)

துளசி கோபால் Thursday, November 22, 2007 6:18:00 PM  

வெண்புறாவுடன் சமாதானமாய் கதை முடிஞ்சது.

ரசித்துப் படித்தேன்.

Thank you:-)

இலவசக்கொத்தனார் Thursday, November 22, 2007 6:33:00 PM  

நல்ல விதமாக கந்தனுக்கு புதையல் கிடைத்தது மகிழ்ச்சி. இந்த மகிழ்ச்சி அனைவர் மனதிலும் பொங்கி வர என் வாழ்த்துக்கள். நல்ல படியாக தொடரை நடத்தி முடித்த எஸ்.கே.ஐயா அவர்களுக்கு என் வாழ்த்துக்களும் நன்றிகளும்.

VSK Thursday, November 22, 2007 10:24:00 PM  

ஆரம்பம் முதலே தவறாமல் படித்துப் பின்னூட்டிய டீச்சர், கொத்தனார் இருவருக்கும் எனது நன்றி.

பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் சேர்த்தே
:))

கபீரன்பன் Thursday, November 22, 2007 11:33:00 PM  

மூலத்தின் அழகான தழுவல். வெற்றிகரமாக செய்திருக்கிறீர்கள்.சித்தருக்கெல்லாம் பெரும்சித்தன் அருள் பூரணமாக இருந்து மேலும் பல படைப்புகளுக்கு வல்லமை தரட்டும்.

VSK Thursday, November 22, 2007 11:42:00 PM  

//சித்தருக்கெல்லாம் பெரும்சித்தன் அருள் பூரணமாக இருந்து//

உங்கள் முழுப் பின்னூட்டமும் மகிழ்ச்சி அளித்த போதிலும், இந்த வரிகள் இன்று [நவ-23] மிகவுமே ஆனந்தம் அளித்தது.

தங்களுக்கு மிக்க நன்றி.

நாகை சிவா Friday, November 23, 2007 1:31:00 AM  

கனவு நல்லப்படியா மெய்ப்பட்டத்தை குறித்து மிக்க சந்தோஷம்.

உங்களின் முதல் முயற்சி தொடர் மிகவும் அருமையாக வெளிவந்ததுக்கு டபுள் வாழ்த்துக்கள் :)

G.Ragavan Friday, November 23, 2007 3:14:00 AM  

ஓ பொருட்புதையலா! நான் வேறொன்னு எதிர் நோக்கினேன். ம்ம்ம்ம்ம்.. எப்படியோ புதையலை எடுத்துட்டான் கந்தன். பொன்னியும் வருகிறாள். வாழ்வு பெருகட்டும். பொன்னி வந்தாலே செழிப்புதானே.

திவாண்ணா Friday, November 23, 2007 6:49:00 AM  

அடுத்த கதை எப்போ?
சுவாரசியமாக கொண்டு போனீர்கள். வாழ்த்துக்கள்!
திவா

Anonymous,  Friday, November 23, 2007 10:44:00 AM  

பின்னூட்டம் இடவில்லை எனினும் தொடர்ந்து படித்து வந்தேன். நிறைய கருத்துக்கள் பொதிந்துள்ள்ன. முடிவு பொருள் சாரா ஒன்றாக இருக்கும் என நினைத்தேன். சித்தர் பற்றி எழுதியதற்கு மிக்க நன்றி !!!!

செந்தில் குமார்

cheena (சீனா) Friday, November 23, 2007 10:59:00 AM  

இதழிலே மென்மையாக வாசனையாக முத்தமிட்டு வருகையை உணர்த்தி மனதைத் தூண்டிய பொன்னி.

கதை முடிந்தது - கந்டன் கனவு நிறைவேறியது - சுபம்

சத்ய சாய்பாபா - அவரது பிறந்த நாளில் அவரது பக்தனுக்கு நல்லாசிகளையும் நீண்ட ஆயுளையும் வழங்க வேண்டுகிறேன்.

வாழ்த்துகள் நண்பரே

VSK Friday, November 23, 2007 1:53:00 PM  

கனிவான பாராட்டுகளுக்கு நன்றி, நாகையாரே!
:))

VSK Friday, November 23, 2007 1:55:00 PM  

//பொன்னி வந்தாலே செழிப்புதானே.//

பொன்னி பெருகி வந்து அனைவருக்கும் வாழ்வளிக்கட்டும்.
உங்கள் வாக்கு பலிக்கட்டும், ஜி.ரா.

VSK Friday, November 23, 2007 1:57:00 PM  

நிறைவில் வந்து நிறைவாகச் சொன்னமைக்கு நன்றி, திரு. செந்தில்குமார்!

VSK Friday, November 23, 2007 1:58:00 PM  

உங்களது பின்னூட்டங்கள் பதிவுக்கு ஒரு தனிச் சுவையைக் கொடுத்து வந்தது, திரு. சீனா!

அதற்காக எனது நன்றி!:))

Anonymous,  Friday, November 23, 2007 3:18:00 PM  

பொங்கும் மங்களம் எங்கும் தங்கட்டும்!

சாயிராம்!!.

Kannabiran, Ravi Shankar (KRS) Friday, November 23, 2007 3:38:00 PM  

கந்தனுக்கு புதையலும் பொன்னியும் கிடைச்சதில் மகிழ்ச்சி தான் SK!
கனவு மெய்ப்பட்டது!
கைவசம் ஆவது விரைவினில் கிடைத்தது!

தொடர் அருமை!
ஒவ்வொரு தொடரிலும் அதை ஒட்டி வந்த குறளும் அருமை!

//என்னை மிகவும் பாதித்த 'தி அல்கெமிஸ்ட்' என்னும் கதை இதற்கு ஆதாரம்.//

நீங்க, இதை என் கிட்ட newark airport-இல் சொன்னீர்களே! நினைவிருக்கா SK?

Kannabiran, Ravi Shankar (KRS) Friday, November 23, 2007 3:42:00 PM  

//G.Ragavan said...
ஓ பொருட்புதையலா! நான் வேறொன்னு எதிர் நோக்கினேன். ம்ம்ம்ம்ம்..
//

அனுபவப் புதையலும் தான் ஜிரா!
அனுபவப் புதையல்
பொருட் புதையல்
பொன்னிப் புதையல்
மனமென்னும் வித்தையை அறிந்து கொண்ட மகாப் புதையல்!

//வாழ்க்கை எப்போதுமே தான் கண்ட கனவை விடாமல் தொடர்ந்து செல்பவர்க்கு நல்லதையே செய்கிறது//

எனக்கு மிகவும் பிடித்த வரிகள்!
எண்ணிய என்ணியாங்கு எய்துப!

குமரன் (Kumaran) Friday, November 23, 2007 4:06:00 PM  

ஓ. இந்த நாவல் நிறைந்ததா? சுவாமியின் பிறந்த நாள் அன்று. நல்லது. நடுவில் கொஞ்சம் நாள் படிக்க முடியாமல் இருந்த போதும் அதன் பின் தொடர்ந்து படித்து மகிழ்ந்தேன். மிக்க நன்றி எஸ்.கே.

நேற்று எனக்கு ஒரு கனவு வந்தது. சுவாமியின் பிறந்த நாளும் அதுவுமாக இப்படி ஒரு கனவா என்று நினைத்துக் கொண்டிருந்தேன். கந்தனை (இவன் வேறு கந்தனை) நாயகனாகக் கொண்டு கதை எழுதும் படியான ஒரு கனவு. நீங்கள் நிறைவு செய்த பின் தொடங்கலாம் என்று இன்று காலை எழுந்த பின்னர் நினைத்தேன். இன்றே உங்கள் இடுகை நிறைவு பெற்றுவிட்டதே. விரைவில் எழுதிவிடுகிறேன். :-)

VSK Friday, November 23, 2007 5:19:00 PM  

நீங்கள் சொன்னது அப்படியே பலிக்கட்டும் அனானியாரே!

VSK Friday, November 23, 2007 5:21:00 PM  

//நீங்க, இதை என் கிட்ட newark airport-இல் சொன்னீர்களே! நினைவிருக்கா SK?//


நன்றாக நினைவிருக்கிறது, ரவி! இதைப் பற்றி நான் சொல்லாத ஆளில்லை.... நான் சந்தித்தவர்களில்!

இப்போதுதான் ஒரு பெரிய பாரத்தை இறக்கி வைத்தது போன்ற உணர்வு!:))

பாராட்டுக்கு நன்றி!

VSK Friday, November 23, 2007 5:22:00 PM  

//எனக்கு மிகவும் பிடித்த வரிகள்!
எண்ணிய என்ணியாங்கு எய்துப!//

திண்ணியராக இருந்தால் எதுவும் நடக்கும்.
இல்லையா ரவி!
:)

VSK Friday, November 23, 2007 5:29:00 PM  

//இன்றே உங்கள் இடுகை நிறைவு பெற்றுவிட்டதே. விரைவில் எழுதிவிடுகிறேன். :-)//

ஆஹா! இதுதான் வினையை வினையாக்கிக் கோடலோ!

வரட்டும்! வரட்டும்! உங்க கதை விரைவில் வரட்டும், குமரன்!!

jeevagv Friday, November 23, 2007 9:00:00 PM  

கனவு மெய்பட வேண்டும் என்ற தலைப்புக்கு ஏற்றார்போல் முடிவாக இருந்தாலும், தேடல் தேடித்தந்ததில் உனக்கெது தலையானது என்றால் - சென்ற பாதையெல்லாம் கற்ற பாடங்களே அல்லவா, கந்தா.

பெருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லையென்றவாறு புதையலில் பொன்னும் நகையும் கிடைத்தாலும், அந்த பொன்னாசை உன்னை எங்கெல்லாம் இட்டுச் சென்றது பார் கந்தா. மனம் போன பாதையெல்லாம் மனிதன் போனால் விளையும் விளைவினைப்பார். கர்மா செய்யும் வினைகளைப்பார்.

எந்த வினையையும் வினையாக்கிக் கொடல் உன் கையில் தான் இருக்கு கந்தா. இந்த புதையலைக் கண்டதும் உன் வினையால்தான் கந்தா. அடுத்ததாக என்ன வேண்டும் என்பதை ஆழ்ந்து யோசித்து முடிவெடு. மனதில் தோன்றும் ஆசைகளையெல்லாம் பட்டியலிடு. பின் ஆய்வு செய். பின் அறவழியில் அதைத் தேடு. கனவெல்லாம் மெய்படுவதற்குத் தானே. மெய்ப்பொருளை தேடிக் காண்பதற்குத் தானே.

(இதைக் கதையின் நாயகனுக்குச் சொல்லவில்லை, எனக்காக சொல்லிக்கொள்வது. சொல்ல வைத்ததற்கு நன்றி, திரு.V.S.K)

VSK Friday, November 23, 2007 9:46:00 PM  

இதை உங்களுக்கே நீங்கள் சொல்லிக் கொண்டாலும், இது எல்லாருக்கும் பொருந்தும் ஒரு சீரிய அறிவுரை, திரு. ஜீவா.

இதைத்தான் ஒவ்வொருவரும் உணர்ந்து செயல்பட்டால், அனைவரின் உள்மனத்திலும் இருக்கும், "இந்த உலகம் செழிக்க வேண்டும்" என்னும் கனவு கண்டிப்பாக மெய்ப்படும்!

எல்லாரும் பேரறிவாளராகட்டும்!

நன்றி!

VSK Friday, November 23, 2007 10:16:00 PM  

நான் இட்ட பின்னூட்டம் என் மனைவிக்கு திருப்தி அளிக்கவில்லையாம்.!!

பெயருக்கு ஏற்றாற்போல், இக்கதையின் ஜீவனைப் புரிந்து அதைச் சொல்லிய ஜீவா எனப் பாராட்டவேண்டுமாம்!

பாராட்டி விட்டேன்!

இக்கதையின் மூலக் கருத்தை அப்படியே சாறு பிழிந்து தந்திருக்கிறீர்கள்!
நன்றி!

Anonymous,  Saturday, November 24, 2007 6:09:00 PM  

இது ஒரு நல்ல முயற்சி. நல்லவைகளைச் செய்தால், தேடினால் எப்போதும்
வெற்றிதான்.

உங்கள் எல்லா கன்வுகுளும் பலிக்கட்டும்.

வாழ்த்துக்கள்.

பாரதீயன்

jeevagv Saturday, November 24, 2007 6:46:00 PM  

தங்களிருவரின் அன்புக்கும் மிக்க நன்றி வி.எஸ்.கே சார்.

VSK Saturday, November 24, 2007 6:50:00 PM  

//இது ஒரு நல்ல முயற்சி. //

தங்களது பாரட்டுவரிகள் மேலும் இது போலச் செய்ய ஒரு ஊக்கத்தை அளிக்கிறது.
நன்றி.

VSK Saturday, November 24, 2007 6:52:00 PM  

//தங்களிருவரின் அன்புக்கும் மிக்க நன்றி வி.எஸ்.கே சார்.//

:))
தகுதியானவர்க்குப் பாராட்டு தெரிவிப்பதற்கெல்லாம் நன்றி வேண்டாம் திரு. ஜீவா!:)

வடுவூர் குமார் Saturday, November 24, 2007 7:02:00 PM  

நடுவில் ஊரில் சுற்றிக்கொண்டு இருக்கும் போது சிலவற்றை படிக்க விட்டுவிட்டேன்.மறுபடி தொடங்கவேண்டும்.
முடிவு தெரிந்தாலும்..பரவாயில்லை. :-)

VSK Saturday, November 24, 2007 7:10:00 PM  

//நடுவில் ஊரில் சுற்றிக்கொண்டு இருக்கும் போது சிலவற்றை படிக்க விட்டுவிட்டேன்.//

ஓ! அதான் கொஞ்ச நாளா காணலியா, குமார்!

உங்களை ரொம்பவே 'மிஸ்' பண்னினேன்!

நன்றி!

ஸ்வாதி Saturday, November 24, 2007 10:41:00 PM  

ஒரு அதி தீவிரமான காட்டாற்றை அணைபோட்டு அடக்கிவிட்டது போல்..அமைதியாக்கப்பட்ட புயலின் மௌனம் மாதிரி இருக்கிறது முழுவதுமாக படித்து முடித்து நிமிர்ந்த அடுத்த கணம். இந்த நாளுக்காகத் தான் காத்திருந்தேன் அண்ணா!... துண்டு துண்டாக என்னால் விமர்சனமோ பின்னூட்டமோ இந்த படைப்புக்கு எழுத முடியவில்லை. சிலருடைய எழுத்துக்களை வாசித்தால் எமெக்கெல்லாம் என்ன அருகதை இருக்கு விமர்சனம் செய்யுமளவுக்கு என்ற ஒரு எண்ணம் அடிமனதில் ஓடும். அதே எண்ணம் தான் இப்போது உங்கே இழையோடுகின்றது ந்த சித்தனை படித்ததும்..

தலை வணங்குகின்றேன்.

அன்புடன்
சுவாதி

கோவி.கண்ணன் Saturday, November 24, 2007 10:42:00 PM  

//அன்புவழி அனைவரும் செல்ல வாழ்த்துகள்!
நன்றி தெரிவிக்கும் இந்நாளில் [Thanks giving Day] அனைவர்க்கும் நன்றி தெரிவித்து விடை பெறுகிறேன்!//

"தொடர்" இனிதே "நிறைவுற்றதற்கு" வாழ்த்துக்கள்.

உங்கள் தொடரால்
பயன்பெறுபவர்கள் பெறுவார்கள், நான் முதலிலும், கடைசியிலும், ஒருமுறை நடுவிலும் வந்து சென்றேன்.

VSK Saturday, November 24, 2007 11:19:00 PM  

//ஒரு அதி தீவிரமான காட்டாற்றை அணைபோட்டு அடக்கிவிட்டது போல்..அமைதியாக்கப்பட்ட புயலின் மௌனம் மாதிரி இருக்கிறது முழுவதுமாக படித்து முடித்து நிமிர்ந்த அடுத்த கணம். இந்த நாளுக்காகத் தான் காத்திருந்தேன் அண்ணா!... துண்டு துண்டாக என்னால் விமர்சனமோ பின்னூட்டமோ இந்த படைப்புக்கு எழுத முடியவில்லை. சிலருடைய எழுத்துக்களை வாசித்தால் எமெக்கெல்லாம் என்ன அருகதை இருக்கு விமர்சனம் செய்யுமளவுக்கு என்ற ஒரு எண்ணம் அடிமனதில் ஓடும். அதே எண்ணம் தான் இப்போது இங்கே இழையோடுகின்றது இந்த சித்தனை படித்ததும்..

தலை வணங்குகின்றேன்.

அன்புடன்
சுவாதி//

தொடக்கத்துக்குப் பின் உங்களிடம் இருந்து ஒரு கருத்துமே வரவில்லையே என நினைத்தேன்.
ஒரேயடியாகப் போட்டு இப்படி ஒரு இன்ப அதிர்ச்சி கொடுத்திட்டீங்களே ஸ்வாதி!

ரொம்ப மகிழ்வாய் இருக்கிறது!

நன்றி.

அன்பையும், அமைதியையும் நாடி நீங்கள் தொடுத்து வரும் போராட்டத்தை நான் அறிவேன்.

உங்கள் முயற்சி விரைவில் வெற்றியடைய வாழ்த்துகள்!

VSK Saturday, November 24, 2007 11:22:00 PM  

ரொம்ப நன்றி, கோவியாரே!

நீங்கள் மூன்று முறைதான் வந்தேன் எனச் சொன்னாலும், தொடர் முழுவதும் வந்தது போல ஒரு உணர்வு!
:))

திவாண்ணா Sunday, November 25, 2007 1:24:00 AM  

இட்ட பின்னூட்டம் ஏனோ காணமல் போயிற்று!
கதையை சுவையாக் கொண்டு போனதுக்கு வாழ்த்துக்கள்!
1 .அனானியின் "பெயர்" கடைசியில் தெரிந்து போயிற்று. அல்லது இது வேறு அனானியா?
2. அடுத்த கதை எப்போ?
3. ஆன்மீக சம்பந்தமான வலைபூக்களின் சுட்டி தந்தால் நல்லது. பல இடங்களில் வெட்டி சண்டையையே பார்த்து அலுத்து விட்டது.
திவா

VSK Sunday, November 25, 2007 10:38:00 PM  

//இட்ட பின்னூட்டம் ஏனோ காணமல் போயிற்று!
கதையை சுவையாக் கொண்டு போனதுக்கு வாழ்த்துக்கள்!
1 .அனானியின் "பெயர்" கடைசியில் தெரிந்து போயிற்று. அல்லது இது வேறு அனானியா?
2. அடுத்த கதை எப்போ?
3. ஆன்மீக சம்பந்தமான வலைபூக்களின் சுட்டி தந்தால் நல்லது. பல இடங்களில் வெட்டி சண்டையையே பார்த்து அலுத்து விட்டது.
திவா//

உங்கள் பின்னூட்டம் இன்னும் வரலியேன்னு நானும் எதிர்பார்த்திருந்தேன் திவா!

நன்றி!
1. தெரியலை
2.தெரியலை.... 2008 ஃபெப்ரவரி??
3. உங்கள் கருத்தோடு நானும் ஒருமிக்கிறேன்.

திவாண்ணா Monday, November 26, 2007 2:31:00 AM  

//1. தெரியலை//
ஓ அனானி பாரதீயரே! நீங்கதான் அனானியா?

//2.தெரியலை.... 2008 ஃபெப்ரவரி??//
ம்ம்ம். கொஞ்சம் அதிக நாள்தான். பரவாயில்லை காத்திருக்கிறோம்.

//3. உங்கள் கருத்தோடு நானும் ஒருமிக்கிறேன்.//
என்னய்யா இது? வலைபூக்கள் சுட்டி கேட்டால் நானும் ஒருமிக்கிறேன்னா என்ன பண்ணுவது?
திவா

VSK Monday, November 26, 2007 6:57:00 AM  

////3. உங்கள் கருத்தோடு நானும் ஒருமிக்கிறேன்.//
என்னய்யா இது? வலைபூக்கள் சுட்டி கேட்டால் நானும் ஒருமிக்கிறேன்னா என்ன பண்ணுவது?
திவா//

உங்களோட மூன்றாவது கேள்வி 2 பகுதிகள் கொண்டது.
//பல இடங்களில் வெட்டி சண்டையையே பார்த்து அலுத்து விட்டது.//

இதோடு ஒருமிக்கிறேன் என அர்த்தமய்யா!
:))

ஆன்மீகப்பூக்களின் சுட்டி விரைவில் தருகிறேன்.

மங்களூர் சிவா Monday, November 26, 2007 9:14:00 AM  

கனவு மெய்ப்பட்டு கந்தனுக்கு புதையல் கிடைத்தது மிக்க மகிழ்ச்சி.

தொடர் அருமை.

குமரன் (Kumaran) Monday, November 26, 2007 9:25:00 AM  

எஸ்.கே. & நண்பர்களே!

சொன்னது போல் இன்னொரு கந்தனின் கதையைத் தொடர்கதையாக எழுதத் தொடங்கிவிட்டேன். முதல் இரண்டு அத்தியாயங்கள் வந்துவிட்டன. அவற்றின் சுட்டிகள்:
http://koodal1.blogspot.com/2007/11/1.html
http://koodal1.blogspot.com/2007/11/2.html

ஒவ்வொரு வாரமும் அமெரிக்க நேரப்படி திங்கள் காலையும் வியாழன் காலையும் இந்தத் தொடர்கதை தொடர்ந்து வரும்.

அனைவரும் படித்துக் கருத்துகளைச் சொல்லுமாறு வேண்டிக் கொள்கிறேன்.

நன்றிகள்.

VSK Monday, November 26, 2007 10:23:00 AM  

வாழ்த்துக்கும், பாராட்டுக்கும், தொடர்ந்து பின்னூட்டமிட்டு ஊக்குவித்தமைக்கும் நன்றி, திரு. ம. சிவா.

VSK Monday, November 26, 2007 10:25:00 AM  

வாழ்த்துகள் குமரன்!

நல்லன பலரையும் சென்றடையட்டும்!

முருகனருள் முன்னிற்கும்!

தி. ரா. ச.(T.R.C.) Thursday, December 06, 2007 4:25:00 AM  

அந்த கரணமெல்லாம் சிந்தையிலே ஒடுங்கி. நன்றி.

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP