Wednesday, November 28, 2007

"ஐயப்பன் தினசரி பூஜை"

"ஐயப்பன் தினசரி பூஜை"


கார்த்திகை 1-ம் தேதி ஆத்திக அன்பர்களுக்கு ஒரு முக்கிய தினம்!
ஐயப்ப பக்தர்கள் அன்றுதான் மாலை அணிந்து, மண்டலவிரதத்தைத் துவங்குவார்கள்!
நானும் கடந்த பல ஆண்டுகளாக இந்த விரதத்தை செய்து வருகிறேன்.
எளிய தமிழில் ஒரு பூஜை முறை எழுத வேண்டும் என்ற எண்ணத்தில், இதை எழுதி, நான் நடத்தும் பூஜைகளில் இதனைக் கடைபிடித்தும் வருகிறேன்.
ஐயப்ப பக்தர்களுக்காக இதை இங்கே வெளியிடுகிறேன்.
தேவைப்படுபவர்கள் இதனைப் பின்பற்றலாம்..... பிடித்திருந்தால்!

முதலில் பூஜை முறை பாக்களை அளித்துவிட்டு, பின்னர் இதன் தொடர்பாக சில பதிவுகள் அளிக்க எண்ணம்.

ஸ்வாமியே சரணம் ஐயப்பா!

--------------------------------------------------------

"ஐயப்பன் தினசரி பூஜை"
[எளிய தமிழில்]

விநாயகர் காப்பு:
முழுமைக்கும் முதலான வெண்களிற்று விநாயகனே!
பழுதின்றி பூஜை நடக்க முன்னின்று அருள் செய்வாய்!


குரு வணக்கம்:
குருவுக்கும் குருவான, திருவான குருவுருவே!
உறுமனத்தில் அன்பிருக்க, உருவாக அனுக்கிரஹிப்பாய்!


தீப வணக்கம்:
வெளியிருட்டை விலகச் செய்யும் சுடரான நெய்விளக்கே!
அறியாமை இருளகற்றி அடியேனைக் காத்திடுவாய்!

ஐயப்பன் அழைப்பு:
அந்தமும் ஆதியில்லா, அருட்பெரும் ஜோதிதேவா!
வந்திடாய் வந்திடாய் நீ! வந்தெங்கள் பூஜை ஏற்பாய்!

ஐயப்பன் வரவேற்பு:
வந்தனை வந்தனை நீ! வரதே வான்முகிலே ஐயா!
சிந்தனை களித்து இங்கே, சிறப்புடன் வீற்றிருப்பாய்!

சந்தனம் அளிப்பு:
பந்தனை அறுத்து எம்மை, பவக்கடல் தாண்டச் செய்ய,
சந்தனம் ஏற்பாய் ஐயா! சபரிமலை வாசனே!

குங்குமம் அளிப்பு:
ஆரியங்காவு ஐயனே! அடியரைக் காக்க நீயே,
குங்குமம் ஏற்பாய் ஐயா! குளத்துப்புழை பாலகனே!

மலர் சாற்றல்:
அலர்ந்திடக் கொண்டுவந்தோம்! அல்லல்கள் தீரவென்று,
மலர்களை ஏற்று எங்கள், மயக்கமும் தவிர்ப்பாய் ஐயா!

அக்ஷதை தூவல்:
பக்ஷமும் கொண்டு எங்கள், பவவினை பறந்து ஓட,
அக்ஷதை ஏற்றுக்கொண்டு, அருள்புரி ஐயப்ப தேவா!

தாம்பூலம் அளிப்பு:
வேம்பாகும் உலகவாழ்வு, வேதனை தீரவென்று
தாம்பூலம் ஏற்று எம்மை, தயாபரா ஆதரிப்பாய்!

கனி படைத்தல்:
பனிரவி பட்டதைப் போல், பறந்திடத் துயரமெல்லாம்,
கனியிதை ஏற்றுக்கொண்டு, கடைக்கண்ணால் பார்த்திடாயோ!

[ஐயப்பன் ஸஹஸ்ரநாமம்/அஷ்டோத்திரம்/ஸ்தோத்திரங்கள்/ பஜனைப் பாடல்கள் இப்போது செய்யலாம்.]

தூபம்:
பாபங்கள் விலகிச் சித்தம், பரிசுத்தமாகவென்று,
தூபமும் ஏற்றுக்கொண்டு, துயர்கெட அருள்வாய் ஐயா!

தீபம்:
தாபமாம் பிறப்பிறப்பு, தணித்துயர் முக்திமேவ,
தீபமும் ஒளிர ஏற்று, திகம்பரா அருள்வாய் ஐயா!

நைவேத்தியம்:
ஐவேதனைப் புலன்கள், அடங்கிட ஐயா இந்த,
நைவேத்யம் ஏற்றுக் கொள்வாய்! நாயகா லோகவீரா!

கற்பூரம்:
அற்பமாம் ஜகத்துமாயை, அழிந்தருள் ஞானம் மேவ,
கற்பூரஜோதி ஏற்று, கனிவுடன் அருள்வாய் ஐயா![x3]

துதி:
ஐயனே! அருளே! போற்றி! ஐயப்பதேவா போற்றி!
எம்மையே ஆதரித்து, இருள்கெட அருள்வாய் போற்றி!
மும்மலம் அழிந்து ஞானம், முற்றிட விதிப்பாய் போற்றி!
இம்மையில் இன்பமெல்லாம் இருந்திடச் செய்வாய் போற்றி!

வேண்டல்:
அருளோடு செல்வம் ஞானம், ஆற்றலும் அன்பும் பண்பும்,
பொருள்நலம் பொறுமை ஈகை, பொருந்திடச் செய்வாய் ஐயா!
ஆயுள் ஆரோக்யம் வீரம், அசைந்திடா பக்தி அன்பு,
தேயுறாச் செல்வம் கீர்த்தி, தேவனே அருள்வாய் ஐயா!

பிழை பொறுக்க வேண்டல்:
அறியாமை இருளில் சிக்கி, ஆடிடும் பேதையோம் யாம்!
தெரியாமல் செய்யும் குற்றம் தேவனே பொறுப்பாய் ஐயா!

மந்திரம் சடங்கு வேள்வி, மதிப்புறு உபசாரங்கள்,
வந்தனை துதிகள் ந்யாஸம், வழுத்தின ஜபமும் தியானம்
இந்தவார் செய்தபூஜை, இருந்திடும் பிழைகள் எல்லாம்,
சிந்தையில் கொள்ளாதேற்று, சீர் பெற அருள்வாய் ஐயா!

கனிமலர் தூப தீபம், கற்பூர நைவேத்யங்கள்,
நனியிலாச் சிறிதானாலும், ஐயப்பா நிறைவாய்க் கொள்வாய்!

[தெரிந்த அளவில் சரணங்கள் சொல்லவும்!]
இதன் தொடர்ச்சி நாளை வரும்!

ஸ்வாமியே சரணம் ஐயப்பா!

19 பின்னூட்டங்கள்:

VSK Wednesday, November 28, 2007 10:20:00 PM  

ஸ்வாமியே சரணம் ஐயப்பா!

BadNewsIndia Wednesday, November 28, 2007 11:47:00 PM  

நல்ல முயற்சி.

என் பூஜைகள் எல்லாம் மௌனத்திலேயே நடந்து முடிபவை.

மந்திரங்களின் தேவைகள் புரிவதில்லை :)

VSK Thursday, November 29, 2007 12:19:00 AM  

//என் பூஜைகள் எல்லாம் மௌனத்திலேயே நடந்து முடிபவை.

மந்திரங்களின் தேவைகள் புரிவதில்லை :)//


புரிந்து செயலாற்ற எண்ணுவோர்க்காக இந்தப் பதிவு.

உங்கள் கருத்தும் ஏற்புடையதே!
நன்றி நண்பரே!

நாகை சிவா Thursday, November 29, 2007 4:58:00 AM  

சாமி சரணம்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

VSK Thursday, November 29, 2007 7:29:00 AM  

வாழ்த்துக்கு நன்றி, நாகைப்புயலே!
:))

மணியன் Thursday, November 29, 2007 8:17:00 AM  

ஸ்வாமியே சரணம் ஐயப்பா!
அழகான தமிழில் ஐயனைத் தொழ தாங்கள் தந்துள்ள பூஜைமுறை சிறப்பாக உள்ளது. இதேபோல மற்ற தெய்வங்களுக்கும் தந்தால் அவர்களுக்கான பூஜைநேரங்களில் உதவியாக இருக்கும்.
ஸ்வாமியே சரணம் ஐயப்பா!

Anonymous,  Thursday, November 29, 2007 9:41:00 AM  

உங்கள் அகமகிழ்வை, அடுத்தவர்க்கும் பகிர்ந்தளிக்கும்
அன்பான பதிவு கண்டு மிக்க மகிழ்ச்சி.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
நல்லதே நடக்கட்டும்! நன்மையே கிடைக்கட்டும்!!

ஸ்வாமியே! சரணம் ஐயப்பா!!

VSK Thursday, November 29, 2007 11:18:00 AM  

மிக்க நன்றி, திரு. மணியன்.
தெய்வங்களின் பெயர்களை கொஞ்சம் மாற்றி அமைத்துக் கொண்டு, இதே பாக்களைச் சொல்லி பூஜை செய்யலாம். விரைவில் அப்படியே செய்கிறேன். நன்றி.

VSK Thursday, November 29, 2007 11:19:00 AM  

பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் மிக மிக நன்றி, அனானியாரே!

ஸ்வாமியே! சரணம் ஐயப்பா!!

SP.VR. SUBBIAH Thursday, November 29, 2007 12:30:00 PM  

உங்களுக்குள் இருக்கும் இறையுணர்வு வியக்க வைக்கிறது.

குமரன், மாரியம்மன், அபிராமி, ஐயப்பன் என்று எத்தனை பாக்கள் - அதுவும் தக்க சமயத்தில்

உங்களுக்கு மட்டுமே இது சாத்தியப்படும்!
அதுவும் இறையருள் என்றே கொள்க!
இறைவன் உங்களுக்கு மட்டுமே கொடுத்த வரம் என்று கொள்க!

நீங்கள் நெடுங்காலம் உங்கள் துணைவியாரோடு வாழவேண்டும்
அது ஒன்றே என்னுடைய பிராத்தனை!

The almighty has manifested everything like the sky, earth, air, water, fire and devotees like VSK!
That is the greatness of the almighty

அன்புடன்
SP.VR.சுப்பையா

மலைநாடான் Thursday, November 29, 2007 12:34:00 PM  

//தெய்வங்களின் பெயர்களை கொஞ்சம் மாற்றி அமைத்துக் கொண்டு, இதே பாக்களைச் சொல்லி பூஜை செய்யலாம்//


நல்ல யோசனை. :)

இலவசக்கொத்தனார் Thursday, November 29, 2007 12:49:00 PM  

பிறந்த நாள் வாழ்த்துக்கள். உங்க பிறந்த நாளுக்கு மற்றவங்களுக்கு ஆன்மீகப் பரிசா இந்தப் பதிவு போல!!

VSK Thursday, November 29, 2007 1:06:00 PM  

நான் அப்படித்தான் செய்வது வழக்கம் திரு. மலைநாடான்!
:)

VSK Thursday, November 29, 2007 1:07:00 PM  

தங்களது மேலான நல்லாசிகள் இந்நாளில் கிடைத்தமைக்கு இறைவனுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன், ஆசானே1
அடுத்த மாதம் சந்திக்கலாம்!:))

VSK Thursday, November 29, 2007 1:08:00 PM  

அப்படியும் கொள்ளலாம். இது நல்லாவே இருக்கு கொத்ஸ்!
நன்றி!:))

தி. ரா. ச.(T.R.C.) Saturday, December 01, 2007 11:14:00 AM  

ஸ்வாமி சரணம். பிறந்த நாளில் எங்களுக்கு பரிசு தந்த நீங்கள் மற்றும் குடும்பத்தினர் நீடூழி வாழ்க

VSK Saturday, December 01, 2007 2:43:00 PM  

// நீங்கள் மற்றும் குடும்பத்தினர் நீடூழி வாழ்க//


தங்களது மேலான வாழ்த்து பெற்றதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் ஐயா!

தி. ரா. ச.(T.R.C.) Sunday, December 02, 2007 4:42:00 AM  

எளிமையான பூஜை செய்ய மந்திர Template தயார் செய்துகொடுத்த வீஸ்கே வாழ்க

Sivamjothi Saturday, December 17, 2011 8:56:00 AM  

திருவடியும், மகர ஜோதியும், பொன்னாம்பல மேடும் நமது உடலில் உள்ளது.
மேலும் அறிந்துகொள்ள http://sagakalvi.blogspot.com/2011/10/self-realization.html
ஐயப்பனை காண சபரிமலை செல்வதும் நம்மை நாம் அறிவதும் ஒன்று

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP