Tuesday, December 18, 2007

செவ்வாய் !!!


செவ்வாய் !!!


முதலில் தொடங்கி முடிவில் முடியும்
செவ்வாய்க் கதையிங்கு யானும் சொல்வேன்!

அன்னையின் வயிற்றினில் அமைதியாய் உறங்கி
உண்மையை உணர்ந்திடும் ஆசையின் வழியே
இன்பமும் துன்பமும் யாமுணர்ந் திடவே
மன்னும் உலகினில் வந்து வீழ்ந்ததும்
சுவாசம் இழுத்திட வழியெதுவெனவே
திகைப்பினில் பவள வாயினைத் திறந்தே
முதலாம் முதலாய் ஆங்கோர் காற்றை
முதலில் இழுப்பதும் செவ்வாய் வழியே!

மூச்சுக் காற்று உட்புகுந் திடவே
உடலும் உயிருடன் கலந்திட அங்கே
பிரிந்ததை எண்ணி ஒரு புறம் துக்கமும்
வந்ததை எண்ணி மறுபுறம் வருத்தமும்
ஒருங்கே சேர்ந்து உளம் உருகிடவே
ஓங்கிடும் ஒலியினைத் தானே கிளப்பி
உலகோர் உவப்ப ஈன்றவள் மகிழ
முதலில் அழுவதும் செவ்வாய் வழியே!


அழுகையின் இயக்கத்தில் உட்தீ எரிய
தனக்குத் தானே இயக்கம் என்பதை
உளமது உணர்த்த உடலும் வருத்த
முதலில் தோன்றிடும் பசி போக்கிடவே
எங்கே உணவென ஆவலாய்த் தேடி
தாயின் முலையினைப் பற்றியே சிசுவும்
தன் பசி தணித்திட பீறிடும் அமுதை
முதலில் சுவைப்பதும் செவ்வாய் வழியே!

பசியும் பறந்திட பத்தும் பிறந்திட
உடலின் இயக்கம் உணர்வில் கலந்திட
அருகே ஆரென அறியும் ஆவலில்
உடலினை நெளித்து சோம்பல் முறித்து
கண்களை விரித்து கைகளை ஆட்டி
மலர்முகம் காட்டி தாய்முகம் நோக்கி
அவளது அகமும் புறமும் மலரவே
முதலில் சிரிப்பதும் செவ்வாய் வழியே!


வளரும் வயதில் எத்தனை செயினும்
கைகளால் தொட்டு காலினால் உதைத்து
கண்களால் சிரித்து செவிவழி கேட்டு
உண்ண மறுத்து, வாந்தி எடுத்து
இன்னமும் எத்தனை குறும்புகள் செயினும்
அன்னையும் பிறரும் கேட்கத் துடிப்பது
'ம்மா' எனவே ஆசையில் அங்கே
வருமொலி அதுவும் செவ்வாய் வழியே!

அறியும் கல்வியும், புரியும் தமிழும்
சொல்லும் மொழியும், செப்பும் கவியும்
அறிவியல் அறிவும், ஆசைமொழிகளும்,
கூறிடும் காதல் கன்னல் சுவையும்,
விருப்பினைக் காட்ட வெளிவரும் சொல்லும்,
மறுப்பினைக் காட்ட மொழிந்திடும் மொழியும்,
சிரிப்பினைக் காட்ட சிந்திடும் தேனும்,
முதலாய் வருவது செவ்வாய் வழியே!


பிடித்தவர் முகமதை உள்ளில் வாங்கி
அவரை நினைந்தே உள்ளும் உருகி
கண்வழி, மடல்வழி, செவிவழி அதிலே
கனவுத்தூதுகள் கடிதினில் அனுப்பி
கொண்டவர் நெஞ்சில் தானும் புகுந்து
ஆசையில் அவருடன் தனியிடம் சென்று
அன்புடன் அவரிரு கரங்கள் பற்றி
காதலை மொழிவதும் செவ்வாய் வழியே!

இறையின் வடிவினில் மனது லயித்து
முறையாய் தோத்திரம் பாடவே முனைந்து
கரை சேர்த்திட இறை என்றே தெளிந்து
கரையும் சொல்லால் பாடல்கள் படித்து
விரைவாய்த் தினமும் ஆலயம் சென்று
இறையைத் தொழுது அவனை வணங்கி
நிறைவாய்த் தமிழில் பாசுரம் வடித்து
இறையைத் தொழுவதும் செவ்வாய் வழியே!

உழலும் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வும்
பழகிடும் போதில் இன்புற்றிருப்பதும்
வழியும் உணர்வின் ஒவ்வொரு சொல்லும்
திகழும் பெருமையும் வருவது யாவும்
இகழும் நிலையினை தானே அடைவதும்
புகழும் ஏச்சும் ஒருங்கே வருவதும்
தமிழும் தரணியில் மேலும் உயர்வதும்
அழகுடன் மொழிந்திடும் செவ்வாய் வழியே!

வாடி அலைந்து, அல்லற் பட்டு,
ஓடிக் களைத்து, இனிவியலாதென்று
வாடி வதங்கி வயோதிகம் வந்து
தேடியதெல்லாம் தனதிலவெனவே
நாடிய ஞானம் நண்ணிடப் பெற்று
கூட்டை விட்டு பிரிந்திடும் வேளை
வாய்வழி பிறந்த மூச்சும் குன்றி
வாய்வழி அதுவே சென்றிடும் நேரம்
உறவும் சுற்றமும் ஓவெனவலறி
நால்வர் சுமக்க இடுகளம் வந்து
சிதையில் கிடத்தி செந்தீ மூட்டும்
சமயம் ஆங்கே வந்திடும் போது
அனைவரும் விடைகொட இறுதிக்கடனாய்
அரிசியை இடுவதும் செவ்வாய் வழியே!


செவ்வாய் தொடங்கி செவ்வாய் வழியே
ஒவ்வாவுயிரும் ஒன்றா உடலும்
ஒன்றாய்ச் சேர்ந்து ஆடிடும் நாடகம்
எவ்வாறெனவே இதுவரை சொன்னேன்!
செவ்வாய் அதனின் சீர்மை உணர்ந்து
செவ்வாய் வழியே நல்மொழி சொல்லி
செவ்வனே செயல்கள் யாவையும் ஆற்றி
செவ்வேள் முருகனைப் பணிவாய் நெஞ்சே!

***************************************************


'செவ்வாய்க்கிழமையான இன்று அதே செவ்வாயை வேறு விதமாக எண்ணியதில் விளைந்த வரிகள்!'

9 பின்னூட்டங்கள்:

VSK Tuesday, December 18, 2007 11:59:00 PM  

முதல் முதலாய்.....

நானே!!
:))

கோவி.கண்ணன் Wednesday, December 19, 2007 12:02:00 AM  

கவிதையின் பொருள் நன்று.

எனக்கு நாள், நேரம், கிழமை ஆகியவற்றில் சிறப்புகள் இருப்பதாக தெரியவில்லை. எந்த மணித்துளியும் நன்மை செய்வதற்கோ, தீமை செய்வதற்காக பிறக்கவில்லை அவை காலச்சக்கரத்தின் ஊடே தோன்றி கரைகிறது.

VSK Wednesday, December 19, 2007 12:08:00 AM  

வாங்க கோவியாரே!

இதில் நான் எடுத்துக் கொண்ட செவ்வாய் ஒரு கிழமை அல்ல!

சிவந்த வாய்= செவ்வாய்

அதில், அதனால் நிகழும் நிகழ்வுகளைப் பற்றியே பேசியிருக்கிறேன்.

கருத்துக்கு நன்றி.

Anonymous,  Wednesday, December 19, 2007 1:06:00 PM  

கிழமையை வாயிலே வைத்து எண்ணங்களைக் கரங்களிலே பதித்து
அற்புதமாக வடித்திருக்கிறீர்கள்.
மிக மிக அருமை.


//ஒவ்வாவுயிரும் ஒன்றா உடலும்
ஒன்றாய்ச் சேர்ந்து ஆடிடும் நாடகம்//

இதனை ஒவ்வொருவரும் உணர்ந்திட்டால் உலகமே அன்புமயமாகிவிடுமன்றோ!..

jeevagv Thursday, December 20, 2007 9:58:00 PM  

இத்தனை சிறப்புகளா
இத்தனை சிறுவாய்க்கு

இத்தனை வரிகளா
இந்தக் கவிதைக்கு

எப்போது முடியுமென நீளம் விரிந்தது

எப்போதும் முடியாதென இறுதியில் புரிந்தது
!

செவ்வாய் அதனின் சீர்தனை உணர்த்தி

நன்றாய் அதனில் சொல்லும் மலர்ந்திட
எப்போதும் முடியாததையும் இப்போது முடிக்க

செவ்வேள் துணையுடன் சொன்னவை நன்று!

VSK Thursday, December 20, 2007 11:02:00 PM  

//கிழமையை வாயிலே வைத்து எண்ணங்களைக் கரங்களிலே பதித்து
அற்புதமாக வடித்திருக்கிறீர்கள்.
மிக மிக அருமை.


//ஒவ்வாவுயிரும் ஒன்றா உடலும்
ஒன்றாய்ச் சேர்ந்து ஆடிடும் நாடகம்//

இதனை ஒவ்வொருவரும் உணர்ந்திட்டால் உலகமே அன்புமயமாகிவிடுமன்றோ!..//

அன்புமயமாக்குதலை நம்மிலிருந்தே துவக்கி நானிலம் முழுதும் பரப்ப முனைவோம் திரு. அனானி.
நன்றி!

VSK Thursday, December 20, 2007 11:08:00 PM  

//இத்தனை வரிகளா
இந்தக் கவிதைக்கு
எப்போது முடியுமென நீளம் விரிந்தது
எப்போதும் முடியாதென இறுதியில் புரிந்தது!//

உங்க பாணியில மிக அழகாகச் சொல்லியிருக்கீங்க திரு.ஜீவா!

ஒவ்வொரு நிகழ்வையும் ஒரு 8 வரியாகச் சொல்ல எண்ணினேன். அதனால் நீளம் சற்று அதிகமாகி விட்டது!
எப்போதும் முடியாதென இறுதியில் புரிந்தது எனச் சொல்லி சற்று பாலை வார்த்தீர்கள்!
நன்றி!

கனவுகள் சுகமாகத்தானே போகின்றன இப்பல்லாம்?:))

mohanasundaram Saturday, August 29, 2009 6:01:00 AM  

தங்கள் 'செவ்வாய்' கவிதையை தற்செயலாக வேறு ஒரு தளத்தில் படிக்க நேர்ந்தது. அசந்து போனேன். அருமை. அதன் பின்னே ஆத்திகம் தளத்தில் வந்து பார்த்தேன். பிரமித்துப்போனேன்.

கவிதையில் ஒருசில இடங்களை மட்டும் சற்றே மாற்றங்கள் செய்து அல்லது சுருக்கிச்சொல்லியிருந்தால் கவிதையின் கீழ்ப்பகுதியில் இதை எழுதியவர் கண்ணதாசன் என்று தைரியமாக போட்டிருக்கலாம்.

ஆம். முருகனை முனைந்து பாடும் உங்களுக்கு செவ்வேள் செந்திலாண்டவன் துணையிருப்பான்.
நன்றி.
ந.மோகனசுந்தரம். வேந்தன்பட்டி.

VSK Tuesday, September 01, 2009 11:08:00 PM  

//தங்கள் 'செவ்வாய்' கவிதையை தற்செயலாக வேறு ஒரு தளத்தில் படிக்க நேர்ந்தது. அசந்து போனேன். அருமை. அதன் பின்னே ஆத்திகம் தளத்தில் வந்து பார்த்தேன். பிரமித்துப்போனேன்.

கவிதையில் ஒருசில இடங்களை மட்டும் சற்றே மாற்றங்கள் செய்து அல்லது சுருக்கிச்சொல்லியிருந்தால் கவிதையின் கீழ்ப்பகுதியில் இதை எழுதியவர் கண்ணதாசன் என்று தைரியமாக போட்டிருக்கலாம்.

ஆம். முருகனை முனைந்து பாடும் உங்களுக்கு செவ்வேள் செந்திலாண்டவன் துணையிருப்பான்.
நன்றி.
ந.மோகனசுந்தரம். வேந்தன்பட்டி.//

இத்துணை பெருமைமிகு பாராட்டைத் தங்களிடமிருந்து பெற்றதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் ஐயா!

சற்றுத் தாமதாமாக இணையத்திற்கு வர நேர்ந்ததால் இதனைப் பிரசுரிக்க நான்கு நாட்கள் தாமதமாயிற்று. மன்னிக்கவும்.

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP