Friday, November 09, 2007

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 35

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 35

முந்தைய பதிவு இங்கே!


33.
"விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின்." [648]

ஒரு அடர்ந்த காட்டுவழியாகச் சென்று கொண்டிருந்தனர்.ஏதோ அபாயம் வரப்போகுதுன்னு அவன் மனசு அலறியது.ஒருவித அச்சத்துடன், சித்தரைப் பார்த்தான் கந்தன்.

அவரோ அமைதியாக நடந்து கொண்டிருந்தார்.

சற்று தூரம் சென்றதும், யாரோ தங்களைக் கவனிப்பது போல உணர்ந்தான். ஒரு சில நொடிகளில் திபு திபுவென ஒரு கூட்டம் அவ்விருவரையும் சூழ்ந்தது.

ஒரு கேள்வியும் கேட்காமல், அவர்கள் கைகளும், கண்களும் கட்டப்பட்டன. கைத்துப்பாக்கி ஒன்று முதுகை அழுத்த இருவரும் நடத்திச் செல்லப்பட்டனர்.
கந்தனின் இதயம் படபடவென அடிக்கத் தொடங்கியது. 'நான் தான் சொன்னேன்ல!' எனக் குத்தியும் காட்டியது.

சிறிது நேரம் நடந்தபின், நிறுத்தப்பட்டார்கள்.

கண்கட்டு மட்டும் அவிழ்க்கப்பட்டது.

'யார் நீங்க? சி.ஐ.டி. தானே?' என அவர்களின் தலைவன் போல இருந்த ஒருவன் கேட்டான்.

'நாங்க கோவில், குளம்னு கால்நடையா சுத்தறவங்க' என்றார் சித்தர்.

'யாருகிட்ட காது குத்தறீங்க! நீங்க ரெண்டு பேரும் போலீஸ்காரங்களோட பேசினதை நாங்கதான் பார்த்தோமே' என மடக்கினான் தலைவன்.

'எனக்கு இந்த காடுங்கல்லாம் அத்துப்படி. இந்தப் பையனுக்கு வழி காட்டறதுக்காக கூட வந்தேன். வேற ஒண்ணும் எங்களுக்குத் தெரியாது' சித்தர் விட்டுக்கொடுக்காமல் பேசினார்.

'இந்தப் பையன் யாரு? உனக்கு எப்படி தெரியும் இவனை?'

'இவரு பாக்கறதுக்குத்தான் சின்னப்பையன் மாதிரி இருக்காரே தவிர, ரொம்பப் பெரிய மகான்! பெரிய சித்தரும் கூட!' என்று சித்தர் சொன்னதும்,


'ஆஹா! வசமா மாட்டி விடறாரே, சமயம் பார்த்து, தான் தப்பிச்சுக்கறதுக்காக' எனக் கந்தன் நடுங்கினான்.

'அது மட்டுமில்ல! பஞ்சபூதமும் இவர் சொன்னாக் கேக்கும். வேணுமின்னா சொல்லுங்க. நிரூபிச்சுக் காட்டச் சொல்றேன்!' என்று மேலும் அவர் சொன்னதும், கந்தனுக்கு சப்தநாடியும் ஒடுங்கியது.

'இந்தப் பக்கமா ஏன் வந்தீங்க?' என அவர் சொல்வதை நம்பாமல் தலைவன் குடைந்தான்.

'மனுஷங்க கஷ்டப்பட்டா இவருக்குப் பொறுக்காது. இந்தப் பக்கமா வந்துகிட்டு இருக்கறப்ப, இந்தமாதிரி, இங்கியும் சில ஆளுங்க ஒளிஞ்சு இருக்காங்களாம்னு தெரியாத்தனமா சொல்லிட்டேன். அவ்ளோதான்! அவங்களைப் பார்த்து அவங்களுக்கு எதுனாச்சும் உதவி பண்ணணுமேன்னு துடிச்சுப் போயிட்டாரு. நான் எவ்வளவோ சொல்லியும் கேக்காம சரசரன்னு உள்ளே புகுந்திட்டாரு. இதோ அவரு உங்களுக்காக கொடுக்கக் கொண்டுவந்த பணம்' எனச் சொல்லிக்கொண்டே, கந்தனின் தோளில் மாட்டியிருந்த பையை வாங்கி, அதிலிருந்த ரூபாய் நோட்டுகள் வைத்திருந்த ஒரு மஞ்சள் பையை எடுத்து தலைவனிடம் கொடுத்தார்.

'போச்சு! இருந்த பணமும் போச்சு! இனிமே நீ அதோகதிதான். நல்லா சிக்கவைச்சிட்டாரு உன்னை' என இதயம் ஓலமிட்டது!

மிகுந்த ஆவலுடன் அதை வாங்கி உடனே இடுப்பில் சொருகி பத்திரப்படுத்திக் கொண்டான். கைக் கட்டுகளை அவிழ்த்துவிடச் சொன்னான்.

'சித்தர்னா என்ன மாதிரி சித்தர்?' எனக் கேட்டான்.

'அதான் சொன்னேனே! இவருக்கு இந்த உலகத்துல என்ன நடக்குதுன்னு டக்கு டக்குன்னு தெரியும்.பஞ்ச பூதமும் இவர் சொல்றதைக் கேக்கும். இப்ப நினைச்சார்னாக் கூட ஒரு பெரிய சூறாவளியைக் கொண்டுவந்து இந்த இடத்தையே ஒண்ணுமில்லாமப் பண்ணிடுவாரு! '


இவர் அடுக்கிக் கொண்டே போக, 'இன்னிக்கு தீர்ந்தோம்!' என நடுங்கினாலும்
முகத்தில் ஒன்றையும் காட்டாமல், சாதாரணமாக வைத்திருந்தான் கந்தன்.


"சுத்தி நடக்கறதைக் கவனி!" தங்கமாலை அணிந்த பெரியவர் சொன்னது ஏனோ நினைவில் வந்தது!

சுற்றி இருந்த ஆட்கள் எல்லாரும் சித்தர் சொன்னதைக் கேட்டு பலமாகச் சிரித்தார்கள். அதே சமயம் அவர்களுக்குள்ளும் இது ஒருவேளை உண்மையாயிருக்குமோ என ஒரு அச்சம் பிடித்துக் கொண்டது.


ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.

'எங்கே செய்யச் சொல்லு பார்க்கலாம்?' என தலைவன் சவால் விட்டான்.

நேற்று பார்த்த கூட்டத்திலிருந்து தங்களைக் கவனித்த ஆள்தான் இவன் எனச் சட்டெனப் புரிந்தது கந்தனுக்கு.

' அதெல்லாம் நீங்க கேட்டதுமே வந்திராது! அவருக்கு அதுக்கு ஒரு மூணு நாளு தேவைப்படும். ஏன்னா, அவர் தன்னையே ஒரு பெரிய காத்தா மாத்திகிட்டு வருவாரு. அப்படி அவர் பண்ணலேன்னா, எங்களை என்ன வேணுமின்னாலும் பண்ணிக்கலாம்' என பதில் சவால் விடுத்தார் சித்தர்.

'சரி. அப்படியே வைச்சுக்கலாம். ஆனா, அதுவரைக்கும் எங்களைத் தாண்டி எங்கியும் போகக்கூடாது. தப்பிச்சுப் போக முயற்சி பண்ணினீங்கன்னா தீர்ந்தீங்க!' எனச் சொல்லி தன் ஆட்களுக்கு அவர்களுக்கு சாப்பிட ஏதாவது கொடுக்கும்படி உத்தரவிட்டான்.

'பயந்த மாதிரி காட்டிக்காதே. முகத்துல ஒரு சிரிப்பைக் கொண்டுவா! அவங்கள்லாம் பார்க்கறாங்க' என மெதுவாக அவன் காதுக்கு மட்டும் கேட்கும்படி சொன்னார் சித்தர்.

கந்தனால் ஒன்றும் பேச இயலவில்லை. சித்தரை பரிதாபமாகப் பார்த்துக் கொண்டே தனியே சென்று உட்கார்ந்தான்.


அவன் கண் முன்னே அவனது கனவுகள் எல்லாம் பொலபொலவென நொறுங்கிப் போவதை உணர்ந்தான். சற்று முன் வரை மகிழ்ச்சியாகச் சென்றுகொண்டிருந்த இந்தக் காடு இப்போது ஒரு மீளமுடியாத ஒரு விலங்காய் தன்னைப் பிணைப்பதாகத் தோன்றியது.

'இருந்த பணத்தையும் அவங்க கையில தூக்கிக் கொடுத்திட்டீங்க! இனிமே என் வாழ்க்கையில அவ்ளோ பணத்தை நான் எப்பப் பார்க்கப் போறேன்!' எனப் பொருமினான்.

'அதாவது நீ உசிரோட இருந்தேன்னான்னு சொல்லு!' எனக் கிண்டல் அடித்தார் சித்தர்.


'நாளைக்கு சாகப் போறேன்னும் போது பணம்த்தை வைச்சுகிட்டு என்ன லாபம்? பணமா ஒரு உசுரைக் காப்பாத்திரும்?' என அவர் சொன்னதும், இந்த நேரம் போய் தத்துவம் வேற பேசறாரே என ஒரு கோபம் வந்தது.

காவலாளி ஒருவன் சூடாக டீ கொண்டுவந்து கொடுத்தான். திகைத்துப் போய் உட்கார்ந்திருந்த கந்தன் கைகளில் கொஞ்சம் தேநீரை ஊற்றவும், கந்தன் திடுக்கிட்டு, சுயநினைவுக்கு வந்தான். சித்தர் அவனுக்குப் புரியாத ஒரு மொழியில் ஏதோ முணுமுணுத்தார்.

'பயத்துக்கு அடிமையாகாதே! பயந்துட்டீன்னா, உன்னால உன் மனசோட பேச முடியாமப் போயிடும் என்றார்.

'அதெல்லாம் சரிதான்! இப்ப நான் எப்படி மூணு நாளைக்குள்ள ஒரு காத்தா மாறப் போறேன்?' சற்று கிண்டலாகவும், கோபமாகவும், பயத்துடனும் கேட்டான்.

'ஏதேனும் ஒரு லட்சியத்தை அடைய தீவிரமா முயற்சி பண்றவன், எல்லாத்தையும் தெரிஞ்சுகிட்டாலும், தோத்துருவோமோன்னு பயந்திட்டான்னா, அப்புறம் அவனால எதுவுமே பண்ண முடியாது. அதை நீ நல்லா புரிஞ்சுக்கணும்.'

'இப்ப யாரு பயந்தாங்களாம்? எப்படிங்க காத்தா மாறப் போறேன்னுதான் கேக்கறேன்' என்றான் வீராப்பாக.

'நீதானே மாறப்போறே! அப்போ, நீதான் அதைக் கத்துக்கணும்! இப்ப உன் வாழ்க்கையே அதுலதான் இருக்கு!!' என அவனை மேலும் சீண்ட,


'என்னால முடியலேன்னா?' எனக் கந்தன் கேட்டான்.

'முடியலேன்னா, உன் லட்சியத்தை நீ அடையாமலியே செத்துப் போயிடுவே! தன் லட்சியம் என்னன்னே தெரியாம சாகற எத்த்னையோ கோடிப் பேருக்கு, நீ எவ்வளவோ மேலு! ஆனாலும், பயப்படாதே! செத்திருவோமேன்ற பயம், ரொம்பப் பேருக்கு வாழ்க்கைன்னா என்னன்னு புரிய வைக்கும். உக்காந்து தியானம் பண்ணு.'எனச் சொல்லிவிட்டு, சற்றுத் தள்ளிச் சென்று அமர்ந்தார் சித்தர்.

கண்களை மூடிக் கொண்டார். அவர் வாய் எதையோ முணுமுணுத்துக் கொண்டிருந்தது.

[தொடரும்]
*********************************


"விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின்." [648]

அடுத்த அத்தியாயம்

24 பின்னூட்டங்கள்:

திவாண்ணா Tuesday, November 13, 2007 6:56:00 PM  

//அதாவது நீ உசிரோட இருந்தேன்னான்னு சொல்லு!' எனக் கிண்டல் அடித்தார் சித்தர்//
assumptions!
நம் தினசரி வாழ்கையில் நிறையவே இருக்கு.

துளசி கோபால் Tuesday, November 13, 2007 7:55:00 PM  

பாவம் கந்தன்(-:

பயம் வந்துச்சுன்னா மனசு எங்கே ஒரு நிலைப்படும்? தியானம்.....
அம்பேல்தானா?

VSK Tuesday, November 13, 2007 8:42:00 PM  

//assumptions!
நம் தினசரி வாழ்கையில் நிறையவே இருக்கு.//

சரியாச் சொன்னீங்க, திரு. திவா!

இந்த மாதிரி முன்முடிவு தானா எடுத்துகிட்டு தன் வாழ்க்கையை மட்டுமில்லாம, அடுத்தவங்க வாழ்க்கையையும் தொலைக்கற ஆளுங்க எத்தனை பேர்?

VSK Tuesday, November 13, 2007 8:46:00 PM  

//பயம் வந்துச்சுன்னா மனசு எங்கே ஒரு நிலைப்படும்? தியானம்.....
அம்பேல்தானா?//

அப்புறம் எதுக்கு சித்தர் கூட இருக்காரு, டீச்சர்?

என்ன பண்றாருன்னு பார்ப்போம்!
:))

cheena (சீனா) Tuesday, November 13, 2007 8:57:00 PM  

அத்தனை அத்தியாயங்களையும் ஒன்று சேர்த்து முழுமையாக ஒரே மூச்சில் மறுபடி படிக்க வேண்டும். தத்துவ மழை பொழிகிறது. நாளை பணத்தை எவ்வாறு காண்பேனெ எனக் கேட்ட்டல் - நாளை உயிரோடுஇருந்தால் எனப் பதில் வருகிறது.

நாளை நடப்பதை யாரறிவார். இன்று என்ன செய்ய வேண்டும் - எப்படிச் செய்ய வேண்டும் - அதுவே எண்ணமாக இருக்க வேண்டும்.

குறிக்க்கோள் இல்லாமல் வாழும் வாழ்க்கை ஒரு வாழ்க்கையா ? பயம் வந்தால் மனம் அலைபாயும். உண்மை

கந்தன் கற்றுக் கொள்ள வேண்டியது இன்னும் அதிகமிருக்கிறது. கந்தன் மட்டும் தானா ??

திவாண்ணா Tuesday, November 13, 2007 9:10:00 PM  

//சரியாச் சொன்னீங்க, திரு. திவா!//

விஎஸ்கே இந்த திரு வேண்டாமே. கொஞ்சம் கஷ்டமா அன்னியமா இருக்கு.
திவா

VSK Tuesday, November 13, 2007 9:32:00 PM  

மிக அருமையாகத் தொகுத்து இருக்கிறீர்கள் சீனா!

முதலில் தன்னைக் காத்துக் கொள்; பிறகு உன் உடமைகளைப் பற்றிக் கவலைப் படலாம் என்பதே சித்தர் இங்கு கந்தனுக்குச் சொல்வது.

ஓரு தீ விட்டை எரிக்கும் போது, முதலில் தான் வெளியே எப்படிச் செல்வது எனப் பார்க்கணும்.

பீரோவை திறந்து அதுல இருக்கற பொருளைப் பற்றி நினைக்க மாட்டார்கள் அல்லவா?
அது போல!

கற்றுக் கொள்ளும் மனம் வருவதே பெரிய விஷயம்!

அது வந்துவிட்டால், மற்றதெல்லாம் தானே கூடி வரும்!

VSK Tuesday, November 13, 2007 9:33:00 PM  

அப்படியே ஆகட்டும் திவா!
:))

இலவசக்கொத்தனார் Tuesday, November 13, 2007 9:37:00 PM  

//பயம் வந்துச்சுன்னா மனசு எங்கே ஒரு நிலைப்படும்? //

இப்போதான் குருவோட வழிநடத்தல் வேணும். எங்களை மாதிரி எங்கயோ உலகின் ஒரு மூலையில் இருக்கும் குருவா? அதான் பக்கத்திலேயே இருக்காங்களே. இல்லையா ரீச்சர்! :))

VSK Tuesday, November 13, 2007 10:11:00 PM  

பயங்கர உள்குத்து பின்னூட்டம் மாதிரி இருக்கே கொத்ஸ்!
:))

திவாண்ணா Tuesday, November 13, 2007 11:45:00 PM  

இலவசக்கொத்தனார் said...
இப்போதான் குருவோட வழிநடத்தல் வேணும்.//
சரிதான்.
// எங்களை மாதிரி எங்கயோ உலகின் ஒரு மூலையில் இருக்கும் குருவா?//
உலகம் உருண்டைன்னு நினைச்சேனே! உருண்டைக்கு மூலை உண்டா? இருந்தாலும் அது அவரவர் இருக்கும் இடத்தை பொருத்து அல்லவா?
// அதான் பக்கத்திலேயே இருக்காங்களே. //
இறைவனே குரு என்று கொண்டால் அவர் எப்போதுமே நம்மோட இருக்கார். உலகின் எந்த "மூலைக்கு" போனாலும்.! பாக்கத்தான் நமக்கு தெரியலே.
திவா

நாகை சிவா Wednesday, November 14, 2007 1:23:00 AM  

பரிசோதனை ஆரம்பித்து விட்டதா... நடக்கட்டும் நடக்கட்டும்

வல்லிசிம்ஹன் Wednesday, November 14, 2007 10:39:00 AM  

கந்தன் உசிரோடையும் இருப்பான்.
நல்ல காத்து வீசத்தான் போகிறது.

பயம் வந்தால் சிலசமயம் த்யானம் நிறைய கூட செய்யத்தோணும்.

தி. ரா. ச.(T.R.C.) Wednesday, November 14, 2007 12:46:00 PM  

'நாளைக்கு சாகப் போறேன்னும் போது பணம்த்தை வைச்சுகிட்டு என்ன லாபம்?


நாளைக்குன்னு தெரிஞ்சா அவ்வளவுதான் ! தெரியாம இருக்கறதால்தான் இவ்வளவு ஆட்டமும்

VSK Wednesday, November 14, 2007 3:02:00 PM  

//இறைவனே குரு என்று கொண்டால் அவர் எப்போதுமே நம்மோட இருக்கார். உலகின் எந்த "மூலைக்கு" போனாலும்.! பாக்கத்தான் நமக்கு தெரியலே.
திவா//


இக்கதையில் சொல்லப்பட்டிருப்பது போல, குருவைத் தேடி நாம் செல்ல வேண்டியதில்லை.

நம் செயல்கள் சரியாக இருந்தால், மனதில் அன்பிருந்தால், குரு தானே வருவார்!
:))

VSK Wednesday, November 14, 2007 3:03:00 PM  

//பரிசோதனை ஆரம்பித்து விட்டதா... நடக்கட்டும் நடக்கட்டும்//

நடக்கறதா?!!!

தியானத்துல உட்கார்ந்திருக்கான் கந்தன்!
:))

VSK Wednesday, November 14, 2007 3:05:00 PM  

//நாளைக்குன்னு தெரிஞ்சா அவ்வளவுதான் ! தெரியாம இருக்கறதால்தான் இவ்வளவு ஆட்டமும்//


அதாவது, கந்தனுக்குக் கிடைச்ச மாதிரி ஒரு இறுதி எச்சரிக்கை நமக்கெல்லாம் கிடைச்சா நல்லாயிருக்கும்னு சொல்ல வரீங்க, சரிதானே ஐயா!

ஒவ்வொரு நாளையுமே ஒரு அல்ட்டிமேட்டமா எடுத்துகிட்டு வாழ ஆரம்பிச்சா, சிலராவது உணருவாங்கன்னு நம்பறேன்.

திவாண்ணா Wednesday, November 14, 2007 6:28:00 PM  

VSK said...

// ஒவ்வொரு நாளையுமே ஒரு அல்ட்டிமேட்டமா எடுத்துகிட்டு வாழ ஆரம்பிச்சா, சிலராவது உணருவாங்கன்னு நம்பறேன்.//

அதானே! ராத்திரி தூங்கப்போறோம். காலை எழுந்திருப்போம்கறது என்ன நிச்சயம்.?
திவா

Anonymous,  Wednesday, November 14, 2007 10:26:00 PM  

சித்தரை எழுப்பிவிடுங்கோ, காஃபி ஆறுது.

மங்களூர் சிவா Thursday, November 15, 2007 4:58:00 AM  

//
'இவரு பாக்கறதுக்குத்தான் சின்னப்பையன் மாதிரி இருக்காரே தவிர, ரொம்பப் பெரிய மகான்! பெரிய சித்தரும் கூட!'
//
//
'அது மட்டுமில்ல! பஞ்சபூதமும் இவர் சொன்னாக் கேக்கும். வேணுமின்னா சொல்லுங்க. நிரூபிச்சுக் காட்டச் சொல்றேன்!'
//
//
'மனுஷங்க கஷ்டப்பட்டா இவருக்குப் பொறுக்காது. இந்தப் பக்கமா வந்துகிட்டு இருக்கறப்ப, இந்தமாதிரி, இங்கியும் சில ஆளுங்க ஒளிஞ்சு இருக்காங்களாம்னு தெரியாத்தனமா சொல்லிட்டேன். அவ்ளோதான்! அவங்களைப் பார்த்து அவங்களுக்கு எதுனாச்சும் உதவி பண்ணணுமேன்னு துடிச்சுப் போயிட்டாரு. நான் எவ்வளவோ சொல்லியும் கேக்காம சரசரன்னு உள்ளே புகுந்திட்டாரு. இதோ அவரு உங்களுக்காக கொடுக்கக் கொண்டுவந்த பணம்' எனச் சொல்லிக்கொண்டே, கந்தனின் தோளில் மாட்டியிருந்த பையை வாங்கி, அதிலிருந்த ரூபாய் நோட்டுகள் வைத்திருந்த ஒரு மஞ்சள் பையை எடுத்து தலைவனிடம் கொடுத்தார்.
//
ஆஹா வடிவேல் காமெடில வருமே தில் இருந்தா எங்க தலைய அடிச்சி பாருன்னு

அதே மாதிரி இருக்கே!!

மங்களூர் சிவா Thursday, November 15, 2007 4:59:00 AM  

//
தோத்துருவோமோன்னு பயந்திட்டான்னா, அப்புறம் அவனால எதுவுமே பண்ண முடியாது
//

இது இது இதைத்தான் நான் நம்புறேன்.

கலக்கல்

VSK Thursday, November 15, 2007 8:14:00 AM  

மஹா ஸ்கந்த சஷ்டி மும்முரத்தில் இருப்பதால் "சித்தர்" பதிய நேரமில்லாமல் போயிற்று.

வியாழன், வெள்ளி பாகங்கள் நாளை, நாளை மறுநாள் வரும்.

தடங்கலுக்கு வருந்துகிறேன்!
:))

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP