Thursday, December 20, 2007

"பூக்களில் உறங்கும் மௌனங்கள்" [ந.ஒ.க.போ]

"பூக்களில் உறங்கும் மௌனங்கள்"
['நச்'சுன்னு ஒரு கவிதைப் போட்டிக்காக!]


காத்தலின் கணங்களில் கரைந்திடும் காட்சிகள்
பார்த்தவர் அருகினில் பகிர்ந்திடும் எண்ணங்கள்
வார்த்தைகள் வெளிவரா நாணத்தின் நிலைப்படிகள்
நேர்த்தியாய்ச் சொல்லிட துடித்திடும் நினைவலைகள்
அனைத்தையும் அடக்கியோர் ஜீவனும் உயிர்த்தது
உயிர்த்ததில் ஓரணு உள்ளின்று சிலிர்த்தது
சிலிர்த்ததில் மொட்டொன்று மெல்லவே முகிழ்த்தது
முகிழ்த்ததில் வாசங்கள் இதனுளே பரந்தது
பரந்ததை இதழ்களும் தனக்குளே மறைத்தது
மறைத்தது மௌனமாய் தனக்குளே வளர்ந்தது
வளர்ந்தது ஓர்நாள் இதழ்களை விரித்தது
விரித்ததில் வாசமும் எங்கணும் படர்ந்தது
படர்ந்தை உணர்ந்துமே வண்டினம் மொய்த்தது
மொய்த்ததில் தேனையும் பருகியே அகன்றது
அகன்றதும் ஆங்கனே மகரந்தம் நின்றது
நின்றதால் மலரும் தன் மௌனத்தில் அழுதது
அழுததை உரைத்திட ஆருமே அங்கிலை
பூக்களின் மௌனங்கள் பூவுடன் கழிந்தது
மௌனத்தின் விழித்துளி சாறெனச் சேர்ந்தது
பூக்களின் சூல்களும் கனியதாய் கனிந்தது
மகிழ்ச்சியும் துயரமும் புளிப்பதாய் சுரந்தது!

மனிதன் ஒருவன் கனியதைச் சுவைத்தான்!
சுவைத்த மனிதன் சொன்னான், 'சீ சீ! இது புளிக்குது'!!

மனிதம் அறியுமோ மலர்களின் மௌனம்!

21 பின்னூட்டங்கள்:

VSK Thursday, December 20, 2007 8:20:00 PM  

மௌனங்களை உடைக்க ஒரு பின்னூட்டம்.
நன்றாக குரு வாழ்க!

இலவசக்கொத்தனார் Thursday, December 20, 2007 9:02:00 PM  

கதையா இருக்கும் அப்படின்னு நினைச்சு வந்தேன். பார்த்தா கவுஜ. சாய்ஸில் விட்டாச்சு, ஆனாலும் ஒரு பிக.

VSK Thursday, December 20, 2007 9:26:00 PM  

பி.க. பண்ணினாலும் குரு கையால பண்றது சிறப்புதானே!

:))

கோவி.கண்ணன் Thursday, December 20, 2007 9:48:00 PM  

அந்தாதி ஸ்டைலில் அசத்தி இருக்கிங்க... படிக்க படிக்க பேர்வியப்பூட்டுகிறது (பிரமிப்பு)

நன்றாக இருக்கிறது வீஎஸ்கே.

கோவி.கண்ணன் Thursday, December 20, 2007 10:25:00 PM  

//"பூக்களில் உறங்கும் மௌனங்கள்"//

சிறில் கொடுத்த தலைப்பில் பொருள் பிழை இருக்கிறதா ?

மெளன விழிப்பு என்று இருந்தால் தான்
மெளன உறக்கம் சொல்ல முடியும் என்று நினைக்கிறேன்.

மெளனம் என்பது அமைதி...பேசாதிருந்தல்...அதற்கும் உறக்கத்திற்கும் என்ன தொடர்பு.

அப்படியே இருந்தால்

உறங்கும் மெளனம், உறங்கா மெளனம் என்று எதாவது இருக்கிறதா ?

மெளனம் மெளனம் தானே ? அதில் விழிப்பு உறக்கம் என்றெல்லாம் அடைமொழி, பண்பு பெயர் சொன்னால் அதற்கென்று சிறப்பு பொருள் எதாவது உண்டா ?

எனக்கு புரியல்ல...புரிந்தால் விளக்கவும்.

VSK Thursday, December 20, 2007 10:59:00 PM  

//உறங்கும் மெளனம், உறங்கா மெளனம் என்று எதாவது இருக்கிறதா ?//

இருக்கு சாமீ!

தியானத்தில் ஆழ்ந்து ஒருவர் அமைதியாய் அமர்ந்து பேசாமல் இருக்கிறார். அவர் முகத்தில் இருந்து ஒரு பாவமும் தெரியவில்லை. அங்கு மௌனம் உறங்குகிறது.

ஒரு நடன நிகழ்ச்சிக்குச் செல்கிறீர்கள். நடனமணி ஒரு வார்த்தையும் பேசவில்லை. மௌனமாகத்தான் ஏதேதோ அபிநயம் பிடிக்கிறார்.. ஆனால் பார்க்கிறவர்கள் எல்லாரும் ஆஹா ஓஹோவெனப் பாராட்டுகிறார்கள். அந்த மௌனம் அங்கு உறங்காமல் ஏதோ பேசியிருக்கிறது!
இது உறங்கா மௌனம்!

இது போல இன்னும் பல சொல்லலாம்.
அதில் ஒன்றுதான் என் கவிதையில் சொல்லியிருப்பதும்!

எனக்குப் புரிந்தது இது!
உங்களுக்கு...?

கோவி.கண்ணன் Thursday, December 20, 2007 11:19:00 PM  

//தியானத்தில் ஆழ்ந்து ஒருவர் அமைதியாய் அமர்ந்து பேசாமல் இருக்கிறார். அவர் முகத்தில் இருந்து ஒரு பாவமும் தெரியவில்லை. அங்கு மௌனம் உறங்குகிறது.

//

பூக்கள் தியானம் பண்ணுதா ? எனக்கு ஒன்னும் புரியல...உங்க விளக்கம் ஏற்புடையதாக இருந்தாலும் 'பூவுக்கு' பொருந்ததாது போல் தெரிகிறது.

நன்றி

VSK Thursday, December 20, 2007 11:50:00 PM  

பூவுக்கும் பொருந்தும் சாமி!

அடுத்த முறை ஏதாவது ஒரு பூங்காவுக்குச் செல்லும் போது இந்த உறங்கும், உறங்காப் பூக்கள் இரண்டையும் கவனமாகப் பாருங்கள்!
:))

சிறில் அலெக்ஸ் Friday, December 21, 2007 8:27:00 AM  

இப்பதான் படிச்சேன் சாமி. சும்மா சாத்தியிருக்கீங்க. ரெம்ப நல்லாயிருக்குது.

கோவி.. ரெம்ப தீவிரமா பொருள் தேடிகிட்டிருக்கீங்க. கவிதைக்கு பொய்(தான்) அழகு
:))


இதுக்கு விளக்கம் தந்ததுக்கும் நன்றி கவிஞரே :)

சேதுக்கரசி Friday, December 21, 2007 9:24:00 AM  

இயல்பான சந்தம் நல்லா வருது உங்களுக்கு... வாழ்த்துக்கள்.

VSK Friday, December 21, 2007 10:38:00 AM  

ரொம்ப நன்றிங்க சிறில்!

உங்க போட்டியில கலந்துகிட்டாத்தான் இந்தப் பக்கம் வர்றதுன்னு இருந்தீங்க போல!:))

ரொம்ப நாளாச்சுங்க நீங்க நம்ம பக்கம் வந்து!
:)

VSK Friday, December 21, 2007 10:39:00 AM  

வாழ்த்துகளுக்கு ரொம்ப நன்றிங்க சேதுக்கரசி!

ரொம்ப நாளாச்சுங்க நீங்களும் நம்ம பக்கம் வந்து!
:)

cheena (சீனா) Friday, December 21, 2007 11:28:00 AM  

மலரும் வாழ்க்கையும் ஒன்று. மலருக்கு ஒரு நாள் வாழ்க்கை. மனிதன் ஒரு முறை வாழ்வது வாழ்க்கை. வாழ்ந்த பின் சுவைப்பதும், சுவைத்த பின் வாழ்வதும் புரியாத ஒன்று. மலர்ந்து மணம் பரப்பிய மலர் மகரந்தத்தையும் தேனையும் தந்து மடிந்தது போன்றது தான் மனித வாழ்க்கையும். சுவைக்குமா? புளிக்குமா ? கவிதையின் முடிவு.

இந்த மறு மொழி எனது ம.பா வினுடையது. என்னுடையது அல்ல

சிறில் அலெக்ஸ் Friday, December 21, 2007 12:39:00 PM  

//ரொம்ப நாளாச்சுங்க நீங்க நம்ம பக்கம் வந்து!
:)//

நான் எந்தப் பக்கம் போயும் ரெம்ப நாள் ஆகுதுங்க
:)

VSK Friday, December 21, 2007 12:42:00 PM  

அப்பச் சரிங்க!:))
இனிமே அடிக்கடி வாங்க!

[பேச்சுவழக்கிலேயே 'ரெம்ப' என எழுதுவது நல்லாத்தான் இருக்கு!:))

VSK Friday, December 21, 2007 12:45:00 PM  

அதானே பார்த்தேன்! "
ம.பா. சொன்னாங்களா!
அதான் ரொம்பவே [ரெம்பவே] நல்லா இருக்கு!
மிக அருமையா மலரையும், பெண்ணையும் ஒப்பீடு செஞ்சு அசத்திட்டாங்க!
உங்க "ம.பா."வுக்கு என் வாழ்த்துகளும், நன்றியும்!
உங்களுக்கும்தான், சீனா!
:))

cheena (சீனா) Friday, December 21, 2007 9:05:00 PM  

//அதானே பாத்தேன் - ம.பா சொன்னாங்களா //

அப்டின்னா என்னங்க பொருள் ?
நான் இந்த மாதிரி எல்லாம் எழுத மாட்டேன்னு பொருளா ? தெரில

இருக்கட்டும் - கவிதைகள் - புரிந்து கொள்ள சற்றே அதை பற்றிய புரிதல் ( அறிவு என்று சொல்லமாட்டேன் ) வேண்டும். அது சற்றே என்னிடம் குறைவு தான். ஈடுபாடு இல்லை.

உறங்கும் மெளனம் - உறங்கா மெளனம் - ஒரு விவாதமே நடந்தது.

ஜீவி Wednesday, December 26, 2007 2:28:00 PM  

கவிதை நன்றாய் இருந்தது. எளிமையாக, புரியும்படி, பொருட்செறிவும் கொண்டிருந்தது.
பார்த்தேன்;படித்தேன்; ரசித்தேன்.
அன்புடன்,
ஜீவி.

தமிழ் Tuesday, January 01, 2008 7:25:00 AM  

கவிதை இயல்பாக இருக்கிறது.
வாழ்த்துக்கள்.

VSK Monday, January 21, 2008 10:16:00 AM  

என்னங்க இப்படி சொல்லிட்ட்டிங்க! உங்க ம.பா. என்பதால்தானே அந்தப் பாராட்டே!
நீங்க சொல்றது போல இதுக்கெல்லாம் 'அறிவு' தேவையில்லை தான்!
[இந்தியா சென்று இன்றுதான் திரும்பினேன்.]

VSK Monday, January 21, 2008 10:17:00 AM  

பாராட்டுகளுக்கு மிக்க நன்றி திரு.ஜீவா, திகழ்மிளிர் !

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP