"குமார கவசம்"
"குமார கவசம்"

கவசம் எழுதினேன். "சித்தர்" கதை அப்போது நிறைவுறாதலால், இதனை அப்போது இடவில்லை.
இதை எந்த வகையிலும் பெரியோர்கள் எழுதியவற்றுடன் ஒப்பிட வேண்டாம். என் முருகனுக்கு நான் செலுத்திய சிறு காணிக்கை என்ற அளவில் படித்து,
விரும்பினால் கருத்து சொல்லவும். நன்றி.
வெற்றிவேல் முருகனுக்கு ஹரோஹரா!
"குமார கவசம்"
படிப்போர்க்குப் பெருமைவரும் , பகையும்போம், பண்ணில்
வடிப்போர்க்கு ஞானம் பெருகி - சிவமும் கூடிவரும்
பாமரரும் படித்தவரும் புகழ்ந்தேத்தும் சிவ
குமாரக் கவசந் தனை!
எனதுஅகமடங்க என்னகம்புகுந்த
மனமயில் வாகனனே கதி!

குமரனின் குணங்களைக் குற்றமில்லாமல்
அடியவன் நானும் அன்புடன் கூறிட
கஜமுகன் கணேசன் கால்களைப் பிடித்தேன்
காத்திட வேணும் கருத்தினில் நிறையணும்
மோஹனக்குமரன் மயிலினில் ஏறி
வேகமதாக என்னிடம் வந்து
வாகனமாக என் மனம் கொண்டு
காக்கணும் இந்தப் பாக்களில் நின்று
ஆரணம் ஓதும் அடியவர்க்கெல்லாம்
காரணமின்றியே காத்திட வருவான் [10]
நாரணன் மருகன் நன்மையே புரிவான்
சீரலைவாயோன் செம்மையே செய்வான்
கந்தாவென்றால் இந்தாவென்பான்
கந்தாவென்றால் சொந்தமாய் நிற்பான்
கந்தாவென்றால் கவலைகள் தீரும்
கந்தாவென்றால் மூத்தவன் மகிழ்வான்
என்னகம் அகற்ற இங்கே வருக
என்னுளமறிந்து விரைவினில் வருக
கண்ணெனப் போற்றும் கண்நுதலோனிடம்
சொல்லியும் வருக சடுதியில் வருக [20]
அன்னை பார்வதி மடியினிலிருந்து
மெல்லவிறங்கி மயிலினில் வருக
அண்ணன் கணேசன் அடியைப் பணிந்தே
அவனருள்தனையும் எடுத்தே வருக
மாமன் மாமியர் அனைவரை வணங்கி
மகிழ்வுடன் வருக மயிலினில் வருக
அழைத்ததும் வருக அணைத்திட வருக
எளியேன் செய்திடும் பிழை பொறுத்தருள்க
அமரர்தலைவா வருக வருக
குமரநாயகா வருக வருக [30]
அன்பருக்கன்பா வருக வருக
துன்பம் தொலைத்திட வருக வருக
சரவணபவனே வருக வருக
ரவண பவச வருக வருக
வணப வசரனே வருக வருக
ணபவ சரவ வருக வருக
பவசர வணனே வருக வருக
வசர வணப வருக வருக
சடக்ஷரத்தோனே வருக வருக
சஷ்டியின் தலைவா வருக வருக [40]
கார்த்திகைபாலா வருக வருக
சிவசக்திபாலா வருக வருக
தேவர்கள் துன்பம் தீர்த்திட வந்தாய்
தேவாதிதேவன் நெற்றியில் பிறந்தாய்
தீப்பொறி வெப்பம் தாங்கிடஅஞ்சி
வாயுவும் தீயும் தூக்கிடச் சென்று
கங்கையில் இடவே அவளும் வறள
சரவணப்பொய்கையில் கமலத்தில் தவழ்ந்தாய்
கார்த்திகைப்பெண்டிர் மார்பினில் இருந்தாய்
அன்னையும் மகிழ்ந்து அன்புடன் சேர்த்து [50]
ஆசையில் அணைத்து அருளது வழங்க
ஆறுமுகன் என அருள்செய வந்தாய்
சூரனை வேலால் கூறாய்ப் பிளந்து
சேவலும் மயிலுமாய்த் தன்னுடன் வைத்துத்
தேவர்கள் குறைகளைக் கனிவுடன் தீர்த்துத்
தேவகுஞ்சரி கரம்தனைப் பிடித்துத்
தேவர்கள் சேனாபதியானவனே
பாவங்கள் போக்கும் பன்னிருபுயனே
குறமகள் வள்ளியைக் கடிமணம் புரிய
கரிமுகன் அண்ணனைத் துணைக்குமழைத்து [60]
வேடனாய் விருத்தனாய் வேங்கை மரமாய்
வேடமணிந்து லீலைகள் புரிந்து
வள்ளியின் மனதினில் கள்ளமாய்ப் புகுந்து
நம்பிராஜனை நயமாய் வென்று
குறமகள் வள்ளியை மணம் செய்தவனே
தேவகுஞ்சரியை இடப்பக்கம் வைத்து
வள்ளியை வலப்பக்கம் வடிவுடன் இருத்தி
விண்ணவர் மண்ணவர் துயர்களைத் துடைத்துத்
திருப்பரங்குன்றம் , திருச்சீரலைவாய்
திருவாவினன்குடி திருவேரகமும் [70]
திருத்தணி பழமுதிர்சோலையமர்ந்து
அறுபடை வீட்டில் அருள் புரிபவனே
என் தலை வைத்துன் பொன்னடி பணிந்தேன்
தலைமுதல் கால்வரை தயவுடன் காக்க
விழிகளிரண்டையும் வேலவர் காக்க
செவிகளிரண்டும் செந்திலோன் காக்க
நாசியை நல்லூர்க் கந்தன் காக்க
கன்னமிரண்டும் கதிர்காமன் காக்க
செவ்வாயதனைச் சேனாபதி காக்க
நாவையும் பல்லையும் அருணையோன் காக்க [80]
கழுத்தும் கைகளும் கந்தனைத் துதிக்க
கனிவோடு குன்றக் குடியோன் காக்க
மார்பையும் வயிற்றையும் மருதமலை காக்க
அமரர் தலைவன் குறிகளைக் காக்க
கால்களை விரல்களை விராலிமலை காக்க
ஆசனவாயை அழகன் காக்க
முதுகைப் பரிவுடன் பிரான்மலை காக்க
முழுவுடலும் முத்துக் குமரன் காக்க
எவ்வித நோயும் எவ்வித இன்னலும்
எனையணுகாமல் எட்டுக்குடி காக்க [90]
காலை தொடங்கி துயிலும் வரையிலும்
புரியும் செயல்கள் அனைத்தையும் காக்க
கந்தனின் பெயரை அனுதினம் துதிக்க
கந்தா கடம்பா கருணாகரனே
கார்த்திகைமைந்தா மயில்வாகனனே
சஷ்டிகுமரா ஷண்முகா வேலா
அறுபடைக் குமரா அருணாசலனே
சிவனின் குருவே குருவின் உருவே
ஔவைக்கு அருளைப் பொழியும் குமரா
தணிகாசலனே தண்ணீர்மலையே [100]
தங்கரதத்தில் வலம்வரும் வேலா
மோஹங்கள் தீர்க்கும் மோஹனச் செல்வா
செல்வக்குமரா செந்திலாண்டவா
சூராதி சூரா வீராதி வீரா
விஜயமளிக்கும் விஜய குமாரா
சரவணபவனே ரத்னகுமாரா
வள்ளிமணாளா நவமணியாண்டவா
பவமழிப்பவனே வரமளிப்பவனே
சந்திர சூரியர் தாரகை போற்றும்
இந்திரன் மகளின் இதயக்காவலா [110]
முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா முருகாவெனவே
மூச்சுளவரைக்கும் உன்றனைப் போற்றி
உன்னில் உருகி உன்னுள் கரைந்து
அற்புத ஞானம் அருணைக்கு அருளித்
தந்ததுபோலெனைத் தயவுடன் காக்க
ஏழையேன் என்றன் இன்னல் களைக
என்றும் என்னை உன்னுடன் கொள்க
உன்னைப் போற்றியே உய்ந்திடும்வண்ணம்
ஒருவரம் தருக உன்னடி தருக [120]
சங்கரன் குமாரன் கவசமிதனைச்
சந்ததம் பாடச் சங்கடம் விலகும்
சந்தானபாக்கியம் சகல சுகங்களும்
சஞ்சலமின்றிச் சந்ததம் சேரும்
கருணைக்கடலே கந்தா போற்றி
பெருமைக்குரிய தலைவா போற்றி
அறுபடைவீட்டில் அமர்ந்தோய் போற்றி
அன்பருக்கருளைப் பொழிவோய் போற்றி
சீர்மிகு வள்ளி சரணங்கள் போற்றி
வான்மிகு தேவ குஞ்சரி போற்றி [130]
அறுமுகன் அடியார் அனைவரும் போற்றி
அவரைப் பணிவார் மலர்ப்பதம் போற்றி
சரணம் சரணம் ப்ரணவா சரணம்
சரணம் சரணம் குருகுகா சரணம்
சரணம் சரணம் ஸ்கந்தா சரணம்
சரணம் சரணம் சரவணபவ ஓம் !! [136]

ஓம்! ஓம்! ஓம்!
18 பின்னூட்டங்கள்:
நன்றாக இருக்கிறது.
மிக அருமையாக இருக்கிறது. ஆழ்ந்த பக்தியுடன் எழுதியிருக்கிறீர்கள். இதை படியெடுத்து தினமும் துதிக்க வேண்டும் என்று உடனே தோன்றியது.
//சரவணபவனே வருக வருக
ரவண பவச வருக வருக
வணப வசரனே வருக வருக
ணபவ சரவ வருக வருக
பவசர வணனே வருக வருக
//
இதற்கு அர்த்தம் தர இயலுமா? புரிதலுக்காக கேட்கின்றேன்.
மிக்க நன்றி!
உடன் வந்து சொன்னதற்கு மிக்க நன்றி, திரு.குமார்!
:)
முருகனின் ஷடக்ஷர மந்திரம்
'ஓம் "ச ர வ ண ப வ"'
ஆறெழுத்து மந்திரம் என இதைச் சொல்வார்கள்.
ஆறுமுகனின் ஆறு கல்யாண குணங்களைக் குறிப்பதாக இது அமைகிறது.
ச= செல்வம்
ர= கல்வி
வ= முக்தி
ண= பகை வெல்லல்
ப= கால ஜயம்
வ= ஆரோக்கியம்
என்னும் ஆறுவகைக் குணங்களை இது குறிப்பதாக ஒரு விளக்கம் இருக்கிறது.
தவிரவும்,
ச= உண்மை
ர= விஷய நீக்கம் [சொல்லற்று இருத்தல்]
வ= நித்ய திருப்தி
ண= நிர்விஷயமம் [சும்மாயிருத்தல்]
ப= பவவினை, பாவம் நீங்குதல்
வ= ஆன்ம இயற்கை குணம்
எனவும் 6 குணங்கள் சொல்லப் படுகின்றன.
ஆறுமுகங்களைக் கொண்ட குமரப் பெருமானை, ஒவ்வொரு முகத்தையும் முன்னிறுத்தி வருமாறு, இந்த சரவணபவ சுழல்கிறது...
சரவணபவ, ரவணபவச,வணபவசர, ணபவசரவ பவசரவண, வசரணவப
என்றபடி.
ஆறெழுத்து மந்திரம் சுழன்று முருகனின் ஆறு முகங்களையும் போற்றும் வண்னம் அமைந்துள்ளது இந்த வரிகள்.
நன்றி.
முருகனருள் முன்னிற்கும்!
//இதை எந்த வகையிலும் பெரியோர்கள் எழுதியவற்றுடன் ஒப்பிட வேண்டாம். என் முருகனுக்கு நான் செலுத்திய சிறு காணிக்கை //
எஸ்.கே
ஆன்மிக பாடல்கள் பெரியவர்களுடன் முற்றுபெறுபவை அல்ல.இக்காலத்துக்கு தக்க மாதிரி ஆன்மிக பாடல்கள் எழுதப்படவேண்டும்.அந்தந்த காலத்துக்குரிய மொழியில் ஆன்மிகம் மக்களை சென்றடைய வேண்டும்.அந்த வகையில் இது அழகான தமிழில் மிக அருமையாக அமைந்த கவிதை.
ஆன்மிக சிறுகதைகள் பலவற்றையும் அதில் உள்ள படிப்பினைகள், தத்துவங்கள் போன்றவற்றை எழுதினால் டிப்ரஷன், வேலைபளு, சொந்த வாழ்வில் சிக்கல் என தவிக்கும் இளைய சமூகத்துக்கு நல்ல வழிகாட்டியாக அமையும். நேரமிருக்கும்போது அதை செய்யுங்கள்.
"சித்தர்" படிச்சீங்களா நீங்க, செல்வன்.?
:)
கருத்துக்கு மிக்க நன்றி!
//கந்தர் சஷ்டியை முன்னிட்டு என் மனதில் தோன்றிய ஒரு உந்தலின் காரணமாக நானும் ஒரு
கவசம் எழுதினேன்.//
நீங்களே எழுதியதா, நான் கவனிக்கவில்லை. பொருள் விளக்கம் கொடுத்திருக்கிறீர்கள் என்று நினைத்து கருத்துக்களைச் சொல்லிவிட்டேன்.
அவை தேவையற்ற கருத்துக்கள் என்று தற்போது நினைப்பதால் அதனை நீக்கிவிடுகிறேன்
நானும் என் மறுமொழிகளை நீக்கி விட்டேன், கோவியாரே!
நல்லா எழுதி இருக்கீங்க, ரொம்ப ரசிச்சு எழுதி இருக்கீங்க. வாழ்த்துக்கள் எஸ்.கே.
மருள் நீங்கி அருள் பெற்ற
அருள்நிறை ஆத்மனுக்குரிய
அற்புதப் படைப்பு.
அகிலமெல்லாம் அன்புமயம் ஆகட்டும்!
ஆனந்தம் எங்கும் நிலைக்கட்டும்!!
மனந்திறந்த பாராட்டுக்கு மிக்க நன்றி, கொத்ஸ்!
:))
//அகிலமெல்லாம் அன்புமயம் ஆகட்டும்!
ஆனந்தம் எங்கும் நிலைக்கட்டும்!!//
ஆஹா! இந்த ஆசி மொழிகள் பலிக்கட்டும், ஐயா!!
அழைத்ததும் வருக அணைத்திட வருக
எளியேன் செய்திடும் பிழை பொறுத்தருள்க
தினமும் சொல்ல வேண்டிய வரிகள்.
வெற்றிவேல் முருகன் வேண்டும் வரம் தருவான். வழ்க வளமுடன்
//அழைத்ததும் வருக அணைத்திட வருக
எளியேன் செய்திடும் பிழை பொறுத்தருள்க
தினமும் சொல்ல வேண்டிய வரிகள்.
வெற்றிவேல் முருகன் வேண்டும் வரம் தருவான். வழ்க வளமுடன்//
எழுதும் போதே எனக்கும் பிடித்த வரிகள் உங்களுக்கும் பிடித்திருப்பது அறிந்து மகிழ்கிறேன் ஐயா! நன்றி.
Dear sir,
I just read your kantha sasti kavasam. It is wonderful. It seems you have his blessings.
வருகை தந்து வாழ்த்திய தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி ஐயா!
Post a Comment