Sunday, December 09, 2007

நிழலும், நிஜமும்! [ந.ஒ.க.]

நிழலும், நிஜமும்!
[ந.ஒ.க.]"யார் குழந்தை இது? இப்படி ஓடறதே?" அந்த விழாவிற்கு வந்திருந்த பெண்களில் அநேகம் பேர் முணுமுணுத்தார்கள்!

"சித்ரா, கொஞ்சம் உன் பையனைப் பிடிச்சு வையேன்!" ரமேஷ் கோபமாகச் சித்ராவைப் பார்த்து சொன்னான்.

"அவன் அப்படித்தாங்க! கொஞ்சம் அதிகமா விளையாடறான். இது புரியாம மத்தவங்கதான் சலிச்சுக்கறாங்கன்னா நீங்களும் கத்தறீங்களே!" சித்ராவும் பதிலுக்கு முறைத்தாள்.

"அதுக்கில்லேம்மா! இவ்வளவு ஹைப்பரா இருக்கானே! மத்தவங்களுக்கு இடைஞ்சல் இல்லாம இருக்கட்டுமேன்னுதான் சொன்னேன்" என ரமேஷ் வழிய,
"சரி, சரி, வாடா இங்கே!" என ஓடிக்கொண்டிருந்த செந்திலை தன் மடியில் எடுத்து வைத்துக் கொஞ்சினாள் சித்ரா.

செந்தில் அடங்காமல் திமிறிக் கொண்டே அவள் மடியில் இருந்து இறங்க அடம் பிடித்து அலறினான்.

இனி இங்கிருந்தால் சரிப்படாது என முடிவு செய்து, பையனை இழுத்துக் கொண்டு வெளியில் வந்தாள்.

கூடவே வெளியில் வந்த ரமேஷ், 'இப்பல்லாம் ரொம்பவே அதிகமா ஆட்டம் போடறான் இல்லே! அடுத்த தடவை டாக்டர்கிட்ட போறப்போ, இதையும் சொல்லி என்னன்னு கேளு' என ஆலோசனை சொன்னான்.
************************
அமெரிக்காவில் ஒரு சாஃப்ட்வேர் கம்பனியில் நல்ல வேலையில் இருப்பவன் ரமேஷ். அமைதியான சுபாவமும், பெற்றவர்களிடம் மிகுந்த பாசமும் கொண்ட நல்ல பிள்ளை. வாரம் இரண்டு முறையாவது அப்பா அம்மாவிடம் பேசலைன்னா தூக்கம் வராது அவனுக்கு! சம்பளத்தில் ஒரு கணிசமான தொகையை மாதம் தவறாமல் அனுப்பி வைக்கிறான். அவர்களும் பெங்களூரில் ஒரு நல்ல ஃப்ளாட் வாங்கி வசதியாக வாழ்ந்து வருகிறார்கள். சித்ரா இதற்கெல்லாம் ஒன்றும் சொல்வதில்லை. அவர் சம்பாதிக்கிறார். அப்பா அம்மாவுக்கு கொடுக்கறதுல என்ன தப்பு என அனுசரணையாகப் போய்விடுவாள்.

செந்தில் அவர்களது ஒரே பிள்ளை. வயது 4 முடிந்து சென்ற மாதம் தான் தடபுடலாக நண்பர்களை அழைத்து விழா கூட கொண்டாடினார்கள்.
பிறந்தது முதலே ரொம்பவும் சூட்டிகையான பிள்ளை. சதா துறுதுறுவென்றிருப்பான். அதிகம் பேச்சுதான் இன்னமும் வரவில்லை. சதா அம்மாவின் புடவைத்தலைப்பை[அல்லது துப்பட்டாவை!!] பிடித்துக் கொண்டே அலைவான். எதை எடுத்தாலும் டமாரெனப் போட்டு உடைத்து விடுவான்.

அப்படித்தான் அன்றொருநாள் யாரும் பார்க்காத போது, பாத்ரூமுக்குள் சென்று உட்பக்கம் தாளிட்டுக் கொண்டு, பைப்பைத் திறந்துவிட்டு, மூடத் தெரியாமல், உள்ளேயே நின்றுகொண்டு இருந்துவிட்டான்.
பையனைக் காணுமே எனத் தேடிய சித்ரா, தண்ணீர் வழிந்து வெளியில் கார்ப்பெட்டெல்லாம் நனைந்ததைப் பார்த்து, அவனைக் கதவைத் திறக்கச் சொன்னால், உள்ளிருந்து பதிலே வராமல், கலவரமாகி,.. ரமேஷுக்கு ஃபோன் போட்டு வரவழைத்து,..... ஒரே களேபரமாகிப் போயிற்று.
******************************
சொன்னபடியே டாக்டரிம் சென்று வந்த பின்னர் இருவர் முகத்திலும் ஈயாடவில்லை.

'அப்படில்லாம் இருக்காதுங்க! டாக்டர்தான் இன்னும் டெஸ்ட்டெல்லாம் எடுத்த பிறகு சொல்றேன்னு சொல்லியிருக்காரே! இப்பவே நாம ஒண்ணும் கற்பனை பண்ணிக்க வேணாம்!' சித்ரா உறுதியுடன் சொன்னாள்.

'அது சரிதான்! இருந்தாலும்....' என இழுத்தான் ரமேஷ்.

'என்ன இருந்தாலும்..? எல்லாம் சரியாயிரும். அப்படியே இருந்தாலும் இந்த ஊருல இல்லாத வசதியா? அமெரிக்காவுலதான் இதுக்கு ரொம்பவும் அருமையான ட்ரீட்மெண்ட்டுல்லாம் கிடைக்குதாம்' எனத் தைரியமாகச் சொன்னாள் சித்ரா.

'எனக்கென்னவோ எதுக்கும்.... ' என ஏதோ சொல்ல வாயெடுத்தவன் சட்டென்று பேச்சை நிறுத்திக் கொண்டான்.
**********************
ஒருமாதம் கழிந்தது. இப்போதெல்லாம் அதிகம் பேசிக்கொள்வதில்லை இருவரும்.

சித்ரா சதா கணினியில் எதையோ தேடிக் கொண்டும், தொலைபேசியில் பேசிக்கொண்டும் இருந்தாள்.

அலுவலில் வேலை அதிகம் என ரமேஷ் லேட்டாக வீடு திரும்பிக் கொண்டிருந்தான்.

ஒருநாள் மாலை உற்சாகமாக வீடு திரும்பினான் ரமேஷ்.
"சித்ரா! அடுத்த வாரம் நாம் இந்தியா போறோம். 2 மாசம் ட்ரிப்! என்னென்ன பேக் பண்ணனுமோ எல்லாம் ரெடி பண்ணிக்கோ!" என்றான்.

"என்ன திடீர்னு? சொல்லவே இல்லையே! எனக்கும் சந்தோஷமாத்தான் இருக்கு. எல்லாரையும் பார்த்த மாதிரி இருக்கும்" எனச் சட்டென சித்ராவும் உற்சாகமானாள்.

மீதி நாட்களில் தேவையான துணிமணிகளை இரண்டு சூட்கேஸுகளில் அடைத்தாள்.

கிளம்பும் நாள் வந்தது!

ரமேஷின் நண்பன் சுந்தர் காரெடுத்துக் கொண்டு வந்திருந்தான்.

சித்ரா செந்திலுடன் பெட்ரூமில் ஏதோ மும்முரமாய் இருந்தாள்.

'சித்ரா, சுந்தர் வந்தாச்சு, சீக்கிரம் கிளம்பி வா' என ரமேஷ் குரல் கொடுத்தான்.
உள்ளிருந்து பதில் ஒன்றும் வராததைக் கண்டு பெட்ரூமுக்குள் செல்ல முனைந்தான். கதவு உட்பக்கமாய் தாளிட்டிருந்தது.

'சித்ரா, ஏய்! என்ன பண்றே! கதவைத் தாழ்ப்பாள் போட்டுகிட்டு?" எனப் பொறுமையிழந்து கத்தினான் ரமேஷ்.

"நானும் செந்திலும் வரலை! உங்க பெட்டி வெளியில வைச்சிருக்கேன். நீங்க போகலாம் உங்க அப்பா அம்மாகிட்ட!" சித்ரா உள்ளிருந்து பேசினாள்.

"ஏய்! உனக்கென்ன பைத்தியம் பிடிச்சிருச்சா! எதுக்கு இப்படி பண்றே?" கோபத்துடன் இரைந்தான் ரமேஷ்.

"எனக்கு ஒண்னும் ஆகலை. ரெண்டு நாளைக்கு முந்தி நீங்க உங்க நண்பர் சுந்தரோட என் காதுல விழாதுன்னு நினைச்சு பேசினதையெல்லாம் கேட்டுகிட்டுத்தான் இருந்தேன். நம்ம குழந்தைக்கு ஆட்டிஸம்[autism]ன்றதால நீங்க உங்க வேலையை அங்கே மாத்திகிட்டு உங்க அப்பா அம்மா சொல்படி இந்தியாவுலியே தங்கப்போறீங்கன்னு சொன்னதெல்லாம் என் காதுலியும் விழுந்தது. ரெண்டு மாச ட்ரிப்புன்னு சொன்னதெல்லாம் வெறும் பொய்தானே! ஒரு பொண்டாட்டியா என்னை மதிச்சு என்கிட்ட இதைப் பத்தி டிஸ்கஸ் பண்ணக் கூட இல்லை நீங்க. அவகிட்ட சொல்லிட்டியான்னு கேட்ட சுந்தருக்கு என்ன சொன்னீங்க..... அவளுக்கு இது இப்ப தெரிய வேணாம். அவ இந்த ஊரை விட்டு வர மாட்டா. இங்கேதான் இதுக்கு நல்ல ட்ரீட்மெண்ட்
இருக்குன்னு மறுத்திடுவான்னு சொன்னீங்கள்ல.
ஸோஷியல் செக்யூரிட்டி ஆஃபீஸுக்கு ஃபோன் பண்ணி எல்லா ஏற்பாடும் பண்ணிட்டேன். என் பையனுக்கு எப்படி சிகிச்சை கொடுக்கறதுன்றதை எல்லாம் நான் முடிவு பண்ணிட்டேன். நீங்க போகலாம். உங்க ஃப்ளைட்டுக்கு லேட் ஆயிடுச்சு. நான் வரலை. இதுதான் என் தீர்மானமான முடிவு" சித்ரா உள்ளிருந்ந்து ஒரு ஆவேசத்துடன், ஆனால் அமைதியாகப் பேசினாள்.

'இதுக்காக நீ ரொம்பவே வருத்தப் படப் போறே! உன் திமிருக்கு தகுந்த பலன் உனக்குக் கிடைக்கும்! எங்க அப்பா பேச்சை நான் மீற மாட்டேன். பை!' தன் பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியேறினான் ரமேஷ்.

'நான் இருக்கேண்டா உனக்கு! நீதான் எனக்கு முக்கியம்!' வழியும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே, சிரித்தபடி செந்திலை அணைத்தாள் சித்ரா!

இதெதுவும் புரியாத பரப்பிரம்மாய் ஏதோ ஒரு பொம்மையை உடைத்துக் கொண்டிருந்தான் செந்தில்!
******************************


"மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்
தகுதியான் வென்று விடல்." [158]

28 பின்னூட்டங்கள்:

VSK Sunday, December 09, 2007 7:15:00 PM  

வரவிருக்கும் அனைவரையும் வருக! வருக! என வரவேற்கிறேன்!

[குருநாதர் கொத்ஸ் வாழ்க!]

கோவி.கண்ணன் Sunday, December 09, 2007 7:32:00 PM  

நீங்களும் ஆட்டையில் சேர்ந்தாச்சா ?

அப்போ நாங்கெல்லாம் அம்புட்டுத்தான்.

//குழந்தைக்கு ஆட்டிஸம்[autism]ன்றதால நீங்க உங்க வேலையை அங்கே மாத்திகிட்டு //

எதோ மூளை கோளாறு என்று தெரிகிறது.

குழந்தைமேல் அம்மாவுக்குத்தான் பிரியம் என்பது போல் சொல்லி இருக்கிறீர்கள். ஏற்க முடியலை. குடும்பத்துக்கு ஏற்றவாறு அப்படி ஒருவேளை இருக்குமோ...?

SurveySan Sunday, December 09, 2007 9:28:00 PM  

ஆட்டையில் சேத்தாச்சு.

எதிர்பார்த்த அளவுக்கு ஒரு 'நச்' திருப்புமுனை கதையில் வரலை.
சோகம், ட்விஸ்ட்ட கொறைக்குதோ? :)

இலவசக்கொத்தனார் Sunday, December 09, 2007 9:28:00 PM  

முதலில் முதல் பின்னூட்டம் பற்றி. இப்படி உங்களுக்கு வேண்டுமென்பதைச் செய்து விட்டு பழியை என் மீது போடுவது நியாயமா?

அடுத்தது கதை பற்றி - நல்லா எழுதி இருக்கீங்க. நான் வேற என்னமோ நடக்கப் போகுதுன்னு நினைச்சேன்.

அடுத்தது கதைப் பொருளைப் பற்றி. நீங்க அந்தக் குழந்தை பற்றி எழுதி இருப்பதைப் படிக்கப் படிக்க அந்த குழந்தை என்னமோ ADHDயால் பாதிக்கப் பட்ட குழந்தையோ என எண்ணத் தோன்றியது. நீங்கள் என்னடாவென்றால் அக்குழந்தை autistic எனச் சொல்லிவிட்டீர்கள். கொஞ்சம் விளக்கம் தர முடியுமா?

VSK Sunday, December 09, 2007 9:41:00 PM  

அதெல்லாம் ஒண்ணும் இல்லை கோவியாரே!
ஆட்டைக்காரர் வந்து என்ன சொல்லியிருக்கார்னு பாருங்க கீழே!

ஆட்டிஸம் என்றால் இன்னும் கொஞ்சப் பேர் வந்ததுக்கு அப்புறம் சொல்லலாம்னு நினைச்சேன்.

அடுத்த கதையில, அப்பாக்களை ஏத்திறலாம், சரியா!
:))

VSK Sunday, December 09, 2007 9:46:00 PM  

//எதிர்பார்த்த அளவுக்கு ஒரு 'நச்' திருப்புமுனை கதையில் வரலை. //

வேலை செய்யாத, கணவன் ஆதரவில் இருந்த ஒரு பெண், தன் குழந்தைக்கு ஒன்று என்றதும், அதில் கணவனின் பங்கு கிடைக்கப் போவதில்லை எனத் தெரிந்ததும், தன்னம்பிக்கையுடன், தன் குழந்தை நலம் மட்டுமே கருத்தாகக் கொண்டு, விவரம் தெரியா நாட்டில், தன்னந்தனியாக ஒரு புது வாழ்க்கை தொடர முடிவெடுப்பது உங்களுக்கு 'நச்'சாக இல்லாதது பற்றி வியப்பாய் இருக்கிறது, சர்வேசன்.

VSK Sunday, December 09, 2007 9:56:00 PM  

//இப்படி உங்களுக்கு வேண்டுமென்பதைச் செய்து விட்டு பழியை என் மீது போடுவது நியாயமா?//

இப்படியெல்லாம் செய்யலாம் எனக் காட்டிய குருவை வாழ்த்துவது தப்பா சாமி!

//அடுத்தது கதை பற்றி - நல்லா எழுதி இருக்கீங்க. நான் வேற என்னமோ நடக்கப் போகுதுன்னு நினைச்சேன்.//

நன்றி. வேறு எப்படி எதிர்பார்த்தீங்க?

//கொஞ்சம் விளக்கம் தர முடியுமா?//

ஆட்டிஸம் வேறு, ஏடிஹெச்டி வேறு.
குழந்தை 4 வயசு வரை சரியாப் பேசலைன்னு சொல்லியிருக்கேனே கவனிக்கலியா?

ஆட்டிஸம் பற்றி விரிவாக ஒரு பதிவு விரைவில் கசடறவில் எழுதவிருக்கிறேன்.
நன்றி.

துளசி கோபால் Sunday, December 09, 2007 10:20:00 PM  

டாக்டர் என்பது தெரிஞ்சுபோச்சு..

அருமையான திருப்பம்தான்.

வெற்றிபெற வாழ்த்துகின்றேன்

VSK Sunday, December 09, 2007 10:37:00 PM  

அப்பாடா! நீங்க ஒருத்தராவது அருமையான திருப்பம்தான்னு பாராட்டினீங்களே டீச்சர்!

ரொம்ப நன்றி உங்களுக்கு!:))

பாச மலர் Monday, December 10, 2007 12:11:00 AM  

கதை நன்றாக இருக்கிறது...

drtv Monday, December 10, 2007 1:45:00 AM  

இந்த கால கணவன் மனைவிகளிடையே எவ்வளவு இடைவெளி விழுந்திருக்கிறது! கணவனும் என்ன பிரச்சினை என்று மனைவியிடம் சொல்லவில்லை. மனைவியும் கணவனிடம் காதில் விழுந்த சேதி பற்றி என்ன என்று கேக்கவில்லை. இந்தியாவுக்கே போகலாம் என்று முடிவு செய்தால் இருவரும் கலந்தாலோசிக்க வேண்டாமோ?
இந்த கதை இன்றைய சமூகத்தின் ஒரு பெரும்பகுதியை பிரதிபலிப்பதானால் நாம் எங்கே போகிறோம் என்று யோசனை பண்ணனும்.
திவா

சுல்தான் Monday, December 10, 2007 5:04:00 AM  

'Autism' என்றால் என்ன? 'அங்கே தனியாக ஒரு பெண் தன் பையனை வைத்துக் கொண்டு' என்பதெல்லாம் கதையில் தெளிவாக வராததால் கதையில் 'நச்' குறைவதாகத் தெரிகிறது.

நக்கீரன் Monday, December 10, 2007 7:46:00 AM  

நச் குறைவோ கூடுதலோ அதை விட கதை மனதை தொடுவதாக இருக்கிறது.கதையை படித்து முடித்ததும் மனதுக்குள் ஒரு இனம்புரியாத வலி ஏற்படுகிறது.

இராம்/Raam Monday, December 10, 2007 8:01:00 AM  

ஐயா,

கதை நன்றாக இருந்தது...

VSK Monday, December 10, 2007 8:46:00 AM  

பாராட்டுக்கு நன்றி பாசமலர் அவர்களே!

VSK Monday, December 10, 2007 8:50:00 AM  

//மனைவியும் கணவனிடம் காதில் விழுந்த சேதி பற்றி என்ன என்று கேக்கவில்லை.//

மனைவி கேட்காத காரணம் நேரமின்மையும், கணவனின் தீர்மான நம்பிக்கை துரோகம் கொடுத்த வலியுமே!
தவிரவும் இருப்பதோ இரண்டு நாட்கள். அதற்குள் தனக்கும் தன் குழந்தைக்கும் ஒரு வழி தேடிக் கொள்ள வேண்டும் என்ற அவசரமும் கூட!
மேலும், எங்கே இதைப் பற்றி விவாதித்தால், விபரீத விளைவுகள் நிகழுமோ என்ற அச்சமும்!
நன்றி, திவா!

VSK Monday, December 10, 2007 8:55:00 AM  

ஆட்டிஸம் என்பது பிறவியிலேயே குழந்தைகளுக்கு வருகின்ற ஒரு மனக் குறைபாடு. வலையுலக நண்பர்களுக்கு இது தெரிந்திருக்கும் என நினைத்தேன்!
தனியாக தன் பையனை வைத்துக் கொண்டு என்பதெல்லாம் இதற்கு அப்பாற்பட்ட ஒரு நிகழ்வு.
ஜெயகாந்தன் சொல்வது போல, சிறுகதை என்பது ஒரு நிகழ்வு.
அதன் பின்னர் நடந்ததை எல்லாம் சொல்ல வேண்டும் என்றால், இது ஒரு நாவலாக விரியும்!
அதற்காகத்தான் கதைக் களனை அமெரிக்காவில் வைத்து, சோஷியல் சர்வீஸெஸ் அமைப்பை அவள் நாடியதாக கதயில் கோடி காட்டி இருந்தேன்.
இங்கு அதற்கான வசதிகள் ஏராளம்.
விரைவில் கசடறவில் இது பற்றி எழுதுகிறேன்.
நன்றி திரு. சுல்தான்.

VSK Monday, December 10, 2007 8:57:00 AM  

நான் எதிர்பார்த்த ஒரு கருத்தைச்[ இனம்புரியாத வலி] சொல்லியிருக்கிறீர்கள் திரு. நக்கீரன்.
துணிச்சலாக ஒரு பெண் எடுத்த முடிவும், அதற்கு செவி சாய்க்காமல் கணவன் ஊர் திரும்பிய இரண்டுமே 'நச்' எனவே எனக்குப் பட்டது!

VSK Monday, December 10, 2007 9:12:00 AM  

நன்றி, ராம்!

கபீரன்பன் Monday, December 10, 2007 11:08:00 AM  

Autism பற்றிய விழிப்புணர்வு தூண்டும் கதை நல்லபடியாக வந்துள்ளது. தங்கள் சேவையை கீழ் கண்ட குழுமத்தில் இணைந்து தொடர கேட்டுக்கொள்கிறேன்.

http://srlatha.googlepages.com/
www.divinehandsinspa.org

VSK Monday, December 10, 2007 11:17:00 AM  

நிச்சயம் செய்கிறேன் நண்பரே! ஆட்டிஸம் பற்ரிய பதிவு எழுதியதும் நீங்கள் குறிப்பிட்டுள்ள இணைப்புகளுக்கும் அனுப்பி வைக்கிறேன். மிக்க நன்றி, திரு. கபீரன்பன்.

நிமல் Tuesday, December 11, 2007 4:00:00 AM  

கதை சிறப்பாக இருக்கிறது...!

VSK Tuesday, December 11, 2007 11:08:00 PM  

பாராட்டுக்கு மிக்க நன்றி, திரு நிமல்!

குமரன் (Kumaran) Thursday, December 13, 2007 1:40:00 PM  

எஸ்.கே. கதையைப் படிச்சுக்கிட்டே வர்றப்பவே நீங்க ஆட்டிஸம்ன்னு தான் சொல்லப் போறீங்கன்னு தெரிஞ்சிருச்சு. அதனால அது 'ந்ச்' திருப்பம் இல்லை. ஆனால் கணவன், மனைவி, குழந்தை என்று அவர்களுக்குள் நடந்ததைச் சொல்லியிருக்கிறீர்களே. அது நச் தான்.

ஆமா. இது கற்பனையா நீங்கள் நேரில் பார்த்ததா?

VSK Thursday, December 13, 2007 1:46:00 PM  

நீங்களாவது கேட்டீங்களே குமரன்!

இது ஒரு உண்மைக்கதையே..... துளிக்கூட மிகையில்லை!

அரை பிளேடு Friday, December 21, 2007 10:43:00 PM  

//இது ஒரு உண்மைக்கதையே//

முருகா.

VSK Sunday, December 23, 2007 9:24:00 AM  

ஆமாங்க! வருத்தமளிக்கும் உண்மைதான்!:(

.:: மை ஃபிரண்ட் ::. Saturday, December 29, 2007 8:01:00 AM  

நச்சுன்னு இருக்குன்னு சொல்றதைவிட தச்சுன்னு இருக்குன்னுதான் சொல்லணும்...

ரொம்ம்ப தச்சிங்கா இருக்கு இந்த கதை.

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP