Friday, November 09, 2007

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 39

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 39

முந்தைய பதிவு இங்கே!

37.

"செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்." [26]

"நான் கேட்டதுக்கும் மேலேயே நீங்க நிரூபிச்சிட்டீங்க! இனிமே, நீங்க எங்கே வேண்டுமானாலும் போகலாம். உங்களைத் தவறா நினைச்சதுக்கு என்னை மன்னிச்சிடுங்க. நீங்க இந்தக் காட்டை விட்டு பத்திரமாப் போக சில ஆளுங்களை உங்களோட அனுப்பறேன். எங்களை ஆசீர்வதிங்க!" என்றான் தலைவன்.

' அப்பாவி மனிதர்களைப் பலி வாங்காத எந்தக் காரியமும் வெற்றி பெறும். அதுக்கு ஆசீர்வாதம்கூடத் தேவையே இல்லை. எங்களுக்கு துணையாக யாரும் வேண்டாம். நீங்க கவனமா இருங்க. இறையருள் எப்பவும் கூடிவரும்!' எனச் சொல்லி சித்தர், கந்தனுடன் கிளம்பினார்.

காட்டைக் கடந்து, வாலாஜாபாத் என்னும் ஒரு ஊரின் எல்லையில் இருந்த ஒரு மடத்தின் வாசலை அடைந்தனர்.

'இதோட என் துணை முடிஞ்சுது. இனிமே நீ தனியாத்தான் போகணும். இங்கேருந்து மஹாபலிபுரம் ஒரு மூணு, நாலு மணிநேரம்தான்' என்றார் சித்தர்.

'உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலை. எத்தனையோ உண்மைகளை எனக்குப் புரிய வைச்சீங்க!' என்று தழுதழுத்தான் கந்தன்.

'உனக்குள்ளே இருந்ததை உனக்குக் காட்டிக் கொடுத்ததைத் தவிர நான் வேற ஒண்ணும் பண்ணலை'என்று சிரித்தார் சித்தர்.

மடத்தினுள் சென்றனர். உள்ளே இருந்த ஒரு துறவி இவர்களை வரவேற்றார். அவருடன் ஏதோ தனியாகப் பேசினார் சித்தர்.

அந்தத் துறவி இவர்களை உள்ளே வரச் சொல்லி, நேராக சமையற்கட்டிற்கு அழைத்துச் சென்றார்.

அடுப்பை மூட்டி, ஒரு கடாயை அதன் மீது வைத்துவிட்டு, இவர்களைத் தனியாக விட்டுவிட்டு அகன்றார்.

ஒரு ஈயத்துண்டை எடுத்து அதில் வைத்தார்.

நன்றாக அது சூடாகி, உருகி, ஒரு திரவமாக ஆனபின்னர்,தன் தோளில் மாட்டியிருந்த பையிலிருந்து, ஒரு பளிங்கு போன்ற ஒரு கல்லை எடுத்து, ஒரு கத்தியால் அதிலிருந்து ஒரு சிறு பகுதியை செதிளாக வெட்டி அதில் இட்டார்.

அடுப்பிலிருந்த திரவம் சிவப்பாக மாறியது!

இன்னும் சற்று நேரம் கொதித்த பின்னர், கடாயை அடுப்பிலிருந்து கீழிறக்கி வைத்தார்.

சிறிது நேரத்தில் திரவம் இறுகி ஒரு கட்டியாக மாறியது. ஆனால் ஈயம் அங்கில்லை! தங்கம் மின்னியது!

கந்தன் புன்முறுவல் பூத்தான்.

'என்னாலும் இதுபோல ஒருநாள் செய்ய இயலுமா?' ஆவலுடன் கேட்டான் கந்தன்.

'இது எனக்கான விதி! உன்னுடையது இதுவல்ல! இப்படியும் செய்யமுடியும் என்பதை உனக்குக் காட்டவே இதை நான் உன்னெதிரில் செய்துகாட்டினேன்' எனச் சொல்லியபடியே அதை நான்கு கூறாக வெட்டினார்.

'இடம் கொடுத்து உதவிய உங்களுக்கு இது' என ஒரு பகுதியை அந்தத் துறவியிடம் கொடுத்தார்.

'அப்படி என்ன நான் செய்துவிட்டேன்? இதெல்லாம் ரொம்பவே அதிகம்' எனத் துறவி மறுத்தார்.

'மீண்டும் ஒருமுறை அப்படிச் சொல்லாதீர்கள். இந்த உலக ஆத்மா அதனைக் கேட்டுக் கொண்டிருக்கிறது. அடுத்தமுறை கிடைப்பது குறையலாம்' சட்டென்று சூடானார் சித்தர்!

துறவி பதிலேதும் சொல்லாமல் வாங்கிக் கொண்டார்.

இன்னொன்றைக் கந்தனிடம் கொடுத்தார்.'இது உனக்கு. நீ இழந்த பணத்துக்கு ஈடாக!' கந்தனும் இது அதிகம் எனச் சொல்ல வாயெடுத்தவன் சட்டென அடக்கிக் கொண்டான்!!
துறவியிடம் சித்தர் சொன்னதை நினவில் கொண்டான்!

'இது எனக்கு! திரும்பிச் செல்ல உதவியாய் இருக்கும்' எனச் சொல்லியபடி அதைத் தனது பைக்குள் வைத்தார்.

நான்காவது பகுதியைக் துறவியிடம் கொடுத்தார். 'இதை வைத்துக் கொள்ளுங்கள். திரும்பவும் இந்தப் பையன் இங்கே வந்தால் அவனிடம் கொடுங்கள்!'என்றார்.

'எனக்குத் தான் புதையல் கிடைக்கப் போகுதுன்னு சொன்னீங்களே!' எனக் குழம்பினான் கந்தன்.

'அது நிச்சயம் கிடைக்கும் உனக்கு!'

'அப்படீன்னா இது எப்படி எனக்குத் தேவைப்படும்?'

'ஏற்கெனவே நீ இரண்டு முறை உன்னுடைய பொருளையெல்லாம் தொலைச்சிட்டே! மதுரையில ஒரு திருடன்கிட்ட, இன்னொரு தடவை அந்தக் காட்டுல! ஒரு தடவை நிகழ்ந்தா, அது மறுபடியும் நடக்க வாய்ப்பில்லை; அதுவே, இரண்டு தடவை நடந்தா, கண்டிப்பா மூணாவது தடவையும் நடக்கும்னு எனக்குள்ள ஒரு நம்பிக்கை!' என ஒரு அர்த்தமுள்ள சிரிப்புடன் சொல்லியபடியே கிளம்பினார் சித்தர்!

கந்தனும் பின் தொடர்ந்தான்.

'இனிமே உன் வழி அந்தப் பக்கமா! என் கூட இல்லை. ஒண்ணை மட்டும் நினைவில் வைச்சுக்கோ. என்ன ஒரு சின்ன விஷயமா இருந்தாலும் சரி,ஒருத்தொருத்தர் செய்யற ஒவ்வொரு காரியமும் இந்த உலகத்தோட சம்பந்தப்பட்டிருக்கு. சில பேருக்கு இது புரியும். ரொம்பப் பேருக்கு புரியாமலே போயிடுது.

ஒரு காகிதத்தை குப்பைத்தொட்டியில போடாம தெருவுல எறியறதுலேர்ந்து, அதையே பொறுக்கி அந்தக் குப்பைத் தொட்டியில் ஒழுங்க போடறவரைக்கும், எத்தனையோ இப்படி உலகத்தைப் பாதிக்கிற, மேம்படுத்தற காரியங்களைச் செய்யறோம். என்ன செய்யறோம் என்பதில் கவனமா இருந்தா, நடக்கறதுல்லாம் நல்லதா நடக்கும். போய் வா!'

அவன் தலையைத் தொட்டு ஆசீர்வதித்தார்.

"நான் திரும்பவும் உங்களைப் பார்ப்பேனா?" கேட்கும் போதே அவன் குரல் தழுதழுத்தது.

"இறையருள் இருந்தால் எதுவுமே நடக்கும்! இனிமேல் என் துணை தேவையில்லை உனக்கு. நீதான் கத்துகிட்டதை தொடர்ந்து விடாம செஞ்சு வரணும். எனக்காக ஒரு ஜீவன், அதான் உங்க நண்பன் ராபர்ட், அங்கே காத்துகிட்டு இருக்கான். அவனுக்கு ஒரு வழி காமிச்சிட்டு அடுத்ததைப் பார்க்கப் போகணும். இருக்கும்வரை கடமைகள் தொடர்ந்து வரும்.
எது விதிக்கப்படுதோ, அதைச் செய்ய மட்டும் மறந்திடாதே! நல்லபடியா போயிட்டுவா!"

அவரை ஒருமுறை விழுந்து வணங்கினான் கந்தன்.

நிமிர்ந்து நன்றாக உள்வாங்கினான் அவர் திருவுருவை.

திரும்பிப் பார்க்காமல் வேகமாக நடந்தான்.

[தொடரும்]
***************************************
"செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்." [26]

அடுத்த அத்தியாயம்

23 பின்னூட்டங்கள்:

திவாண்ணா Tuesday, November 20, 2007 7:31:00 PM  

//என்ன ஒரு சின்ன விஷயமா இருந்தாலும் சரி,ஒருத்தொருத்தர் செய்யற ஒவ்வொரு காரியமும் இந்த உலகத்தோட சம்பந்தப்பட்டிருக்கு.//
இது என்னை ஆச்சரியப்பட வைத்த ஒரு சமாசாரம். எத்தனையோ நிகழ்வுகள்.. ஒன்றுக்கொன்று பின்னி.. அவரவர் கர்மா அவரவருக்கு கழிய.. இறைவனின் சக்தியை உணர, ஒப்புக்கொள்ள இது ஒன்றே போதும்.

திவா

துளசி கோபால் Tuesday, November 20, 2007 7:45:00 PM  

இவ்வளோ எளிமையாவா தங்கம் செய்யறாங்க?

என்னவோ 'ஸ்புடம்' போடணுமுன்னு சொல்வாங்களே!

Anonymous,  Tuesday, November 20, 2007 7:51:00 PM  

வீஎஸ்கே சார்,
படத்தில் இரும்பை உருக்கி ஊற்றுவது போல் இருக்கிறது.

என்ன படம் அது ?

cheena (சீனா) Tuesday, November 20, 2007 7:56:00 PM  

கதை முடியும் தருணம். நமது நாவில் இருந்து வரும் சில சொற்கள் ( நம்மை அறியாமல்) நமக்கே சில பாதிப்புகளை ஏற்படுத்தும். (இது அதிகம்- அடுத்த முறை குறையலாம்). இது என் அனுபவம். சித்தர் உறுதிப் படுத்தி விட்டார்.

இர்ணடு முறை நடந்தால் உறுதியாக மூன்றாம் முறை நடக்கும். சிறு வயதில் இருந்து தொடரும் நம்பிக்கை. நடந்திருக்கிறது. நடக்கிறது. நடக்கும்.

இலக்கை அடையும் நன்னாள் - கந்தனுக்கு வாழ்த்துகள்

VSK Tuesday, November 20, 2007 9:19:00 PM  

முன்பு ஒரு பதிவில் இதைப் பற்றி சித்தர் சொல்லியிருந்தாரே, மறந்துடுச்சா டீச்சர்!

ரொம்ப எளிமையான ஒரு விஷயத்தை ஆளாளுக்கு ஒரு வழியில சொல்லி, தன் வழிதான் மத்ததைக் காட்டிலும் சிறந்ததுன்னு குழப்பிட்டுப் போயிட்டாங்கன்னு சித்தர் சொன்னாரே!

ஸ்புடம் போடுவதும் ஒரு வழியாக இருக்கலாம்.

இதுல சொன்னது நம்ம சித்தர் வழி!
:))

VSK Tuesday, November 20, 2007 9:21:00 PM  

இரும்பு அல்ல வாசகரே!

அது உருக்கிய தங்கம் தான்!

சந்தேகமிருந்தா 'molten gold'ன்னு கூகிள்ல தேடிப்பாருங்க!
உண்மை புரியவரும்!

அதுசரி, பதிவைப் பத்தியும் ஒரு வார்த்தை சொல்லலாமில்ல!
:))

குமரன் (Kumaran) Tuesday, November 20, 2007 10:35:00 PM  

செயற்கரிய செய்வர் பெரியர். இது புரிகிறது. நன்றி எஸ்.கே.

இலவசக்கொத்தனார் Tuesday, November 20, 2007 10:38:00 PM  

//இது எனக்கான விதி! உன்னுடையது இதுவல்ல! //

இந்த விதி எனக்கானதா இருந்தா நல்லா இருக்குமேன்னுதான் எழுத வந்தேன். ஆனா இன்னிக்கு நிம்மதியும் சந்தோஷமும்தான் வேணுமுன்னு தோணுது. அதுக்கு இந்த மாதிரி எளிதா எதனா வழி இருந்தா சொல்லுங்க சித்தரே...

VSK Tuesday, November 20, 2007 11:10:00 PM  

புரிதலுக்கு நன்றி, குமரன்! :)

VSK Tuesday, November 20, 2007 11:13:00 PM  

//ஆனா இன்னிக்கு நிம்மதியும் சந்தோஷமும்தான் வேணுமுன்னு தோணுது. அதுக்கு இந்த மாதிரி எளிதா எதனா வழி இருந்தா சொல்லுங்க சித்தரே...//

அதுவும் சொல்லியிருக்காரே!
" இருக்கும்வரை கடமைகள் தொடர்ந்து வரும். எது விதிக்கப்படுதோ, அதைச் செய்ய மட்டும் மறந்திடாதே! நல்லபடியா போயிட்டுவா!"
:))

VSK Tuesday, November 20, 2007 11:14:00 PM  

//எத்தனையோ நிகழ்வுகள்.. ஒன்றுக்கொன்று பின்னி.. அவரவர் கர்மா அவரவருக்கு கழிய.. இறைவனின் சக்தியை உணர, ஒப்புக்கொள்ள இது ஒன்றே போதும்.//

சத்தியமான வாக்கு நீங்கள் சொல்வது திவா.

அனுபவித்தவர்க்கே இது புரியும்!

வல்லிசிம்ஹன் Wednesday, November 21, 2007 12:26:00 AM  

குறைவான வார்த்தைகள்.
உண்மைதான்.

நிறைவான வாழ்வுக்கு அர்த்தமில்லாத எண்ணங்களுக்கோ வார்த்தைகளுக்கோ இடமில்லை.
அன்பு வளரட்டும்.

நாகை சிவா Wednesday, November 21, 2007 5:39:00 AM  

ஆக கிடைக்க போகும் புதையலை கந்தன் தவற விட போகிறான் அப்படி தானே....

மீண்டு வரும் போது அவனுக்கு இந்த ஒரு பகுதி தங்கம் உதவ போகிறது. புதையலை இழந்த போதிலும் மகிழ்வுடன் தான் இருப்பான் கந்தன் அப்படி தானே

Unknown Wednesday, November 21, 2007 6:24:00 AM  

அல்கெமிஸ்ட் தமிழில் அழகாக எழுதி வருகிறீர்கள். வாழ்த்துக்கள்.

மங்களூர் சிவா Thursday, November 22, 2007 7:33:00 AM  

//
ஒரு தடவை நிகழ்ந்தா, அது மறுபடியும் நடக்க வாய்ப்பில்லை; அதுவே, இரண்டு தடவை நடந்தா, கண்டிப்பா மூணாவது தடவையும் நடக்கும்னு எனக்குள்ள ஒரு நம்பிக்கை
//
திரும்பவுமா???
//
நாகை சிவா said...
ஆக கிடைக்க போகும் புதையலை கந்தன் தவற விட போகிறான் அப்படி தானே....

மீண்டு வரும் போது அவனுக்கு இந்த ஒரு பகுதி தங்கம் உதவ போகிறது. புதையலை இழந்த போதிலும் மகிழ்வுடன் தான் இருப்பான் கந்தன் அப்படி தானே
//
புலி கதைய முடிச்சிட்டீயே...
அவ்வ்வ்

cheena (சீனா) Thursday, November 22, 2007 9:32:00 AM  

என்னுடைய மறு மொழியைப் படிக்க வில்லையா நண்பரே !!

VSK Thursday, November 22, 2007 10:59:00 AM  

பதில் அளித்துவிட்டேன் என நினைத்து தவறவிட்டேன் சீனா!
மன்னிக்கவும்.

நீங்கள் சொல்வதுபோல எனக்கும் இந்த 'மூன்று முறை'விஷயம் நிறையவே நடந்திருக்கிறது.

'யாகாவாராயினும் நா காக்க' என வள்ளுவர் சொன்னது இதை ஒட்டித்தானோ!

VSK Thursday, November 22, 2007 11:01:00 AM  

அன்பு வளரட்டும் என வழங்கிய ஆசி பலிக்கட்டும் வல்லியம்மா!
நன்றி.

VSK Thursday, November 22, 2007 11:03:00 AM  

//மீண்டு வரும் போது அவனுக்கு இந்த ஒரு பகுதி தங்கம் உதவ போகிறது. புதையலை இழந்த போதிலும் மகிழ்வுடன் தான் இருப்பான் கந்தன் அப்படி தானே//

நல்லாவே யூகிக்கறீங்க நாகையாரே!

:))

VSK Thursday, November 22, 2007 11:04:00 AM  

//புலி கதைய முடிச்சிட்டீயே///

கதை இன்னிக்கு நிறைவடையும் நண்பரே!

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP