"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 40
"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 40
முந்தைய பதிவு இங்கே!
38.
"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு." [423]
"எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு
அவ்வ துறைவது அறிவு." [426]
அக்கம் பார்த்துக் கொண்டே, பயமின்றி நடந்தான் கந்தன்.
கூட சித்தரும் இல்லாததால், தன் மனது என்ன சொல்லுகிறதெனக் கவனிக்கத் தொடங்கினான். புதையல் இருக்குமிடத்தை அதுதான் இனிக் காட்டும் எனவும் நம்பினான்.
"புதையல் எங்கே இருக்குதோ, அங்கேதான் உன் மனசு உன்னை இட்டுச் செல்லும்!' சித்தரின் குரல் உள்ளே கேட்டது.
ஆனால், அவன் இதயம் வேறென்னவெல்லாமோ பேசிக் கொண்டிருந்தது.
'உன்னை நினைச்சா எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு கந்தா! ஒரு சாதாரண சின்னப் பையனா ஆடு மேய்ச்சுகிட்டு இருந்த நீ, எதையெதையெல்லாமோ கடந்துவந்து, இப்ப அநேகமா புதையல் எடுக்கற இடத்துகிட்ட வந்துட்டே! பெரிய கில்லாடிதான் நீ! காத்தாக் கூட மாறிக் காமிச்சிட்டே!' என்று புகழ்ந்தது.
'அதெல்லாம் கிடக்கட்டும். அது நடந்து முடிஞ்ச கதை. அதைப் பத்தி இப்ப என்ன பேச்சு? நீதான் எனக்கு ஒரு நம்பிக்கையைக் கொடுக்கணும் இப்ப' என அதட்டினான்.
'உன் கண்ணுலேருந்து தண்ணி வர்ற அளவுக்கு எங்கே, எந்த இடத்துல உனக்கு ஒண்ணு நடக்குதோ அங்கே நான் இருப்பேன். உன் புதையலும் தான்!' என்று கிசிகிசுத்தது.
மெதுவாக நடந்தான் கந்தன். இரவு தொடங்கி முழுநிலவு வெளிவந்து வெளிச்சத்தைக் கூட்டியது. குளிர்ந்த காற்று இதமாக வீசியது!
ஒரு சின்ன குன்று எதிர்ப்பட்டது. அதன்மீது ஏறினான். அவன் கண்ட காட்சி அவனைப் பரவசப்படுத்தியது!
அழகிய கருங்கடல் அலைகளோடு ஆரவாரித்தது. அதன் கரையருகே அழகிய கற்பாறைகளால் குடைந்தெடுத்த கோவில்கள்! நிலவுவெளிச்சத்தில் எல்லாமே பளபளத்தன.
கந்தனின் கால்கள் தானாக மண்டியிட்டன. தரையை முத்தமிட்டு வணங்கினான்.
கண்களிலிருந்து கரகரவெனக் கண்ணீர் வழியத் தொடங்கியது!
'எனக்கு ஒரு கனவைக் காண்பித்து, அதை ஒரு பெரியவர் மூலமா உறுதிப்படுத்தி, ஒரு வெள்ளைக்காரன் மூலமா ஆதாரம் கொடுத்து, ஒரு சித்தர் மூலமா அதை அடையவைத்ததற்கும், இறைவா! உனக்கு என் நன்றி! அது மட்டுமா! காதல் நிரம்பிய ஒருவனால் அவன் நினைத்ததை அடைய முடியாமல் போகாது எனத் தனக்குக் காட்டிய ஒரு பெண்ணை எனக்குக் கொடுத்ததற்கும் சேர்த்தே நன்றி!'
மனமார, வாய்விட்டுக் கதறினான் கந்தன்!
இப்படியே திரும்பிவிடலாமா என யோசித்தான்.
'கனவில் கண்டது உண்மைதான் எனத் தெரிஞ்சாச்சு.இப்படியே திரும்பி, பொன்னிகிட்ட போயிறலாம். இருக்கற தங்கத்தை வித்து, கொஞ்சம் ஆடுமாடு வாங்கி, அதை வைச்சு தொழில் பண்ணி மானமா வாழ்ந்திறலாம். இப்ப சித்தருக்குத் தெரியாத வித்தையா? அவர் தங்கம் பண்றதுகூடத் தெரிஞ்சு
வைச்சிருக்காரு. அதுக்காக இதை என்ன, எல்லார்கிட்டயும் போயிக் காமிச்சுகிட்டாரா என்ன? இதைப் பாக்கறதுக்குள்ள, என்னெல்லாம் தெரியணுமோ, அதையெல்லாம் தெரிஞ்சுகிட்டாச்சு. இப்ப புதையலுக்கு என்ன தேவை?' இப்படியெல்லாம் எண்ணம் ஓடியது.
'இவ்வளவு தூரம் வந்தாச்சு. கனவு மெய்ப்படும் நேரம் வந்தாச்சு! இதோ இன்னும் கொஞ்ச தூரம் போனா, எதுக்காக வந்தோமோ அது கிடைக்கப் போகுது. அதில்லாம திரும்பினா, இதுவரைக்கும் பட்ட பாடெல்லாம் வீண்!'என நினைத்துக் கொண்டே கண்களைத் தாழ்த்தி தான் மண்டியிட்ட இடத்தைப் பார்த்தான்.
அவன் கண்ணீர் பட்ட இடம் கண்ணில் பட்டது! ஒரு அழகிய வண்ணத்துப் பூச்சி எங்கிருந்தோ இந்த நேரத்தில் பறந்து அவன் தோளில் வந்து உட்கார்ந்தது! வண்ணத்துப்பூச்சி பறப்பது ஒரு நல்ல சகுனம் என அவன் மனது சொல்லியது!
சுற்று முற்று பார்த்தான். யாருமில்லை என உறுதிப்படுத்திக் கொண்டபின், அந்த இடத்தைக் கைகளால் பரபரவெனத் தோண்டத் துவங்கினான். அருகில் கிடந்த ஒரு கம்பையும் வைத்துக் கிளறினான். மண் பிரதேசமாக இருந்ததால் தோண்டுவதும் எளிதாகவே இருந்தது!
தோண்டத் தோண்ட மண்ணும், சிறு பாறைகளும் வந்ததே தவிர புதையல் எதுவும் தென்படவில்லை!
அவன் கைகள் வலித்தன. நகமும், சதையும் பிய்ந்து ரத்தம் வர ஆரம்பித்தது.இனியும் தோண்டணுமா என நினைத்தான். மனம் சொல்லியது நினைவுக்கு வரவே, விடாமல் தோண்டினான். ஒரு பாறை ஒன்று கையில் தட்டியது. முனைப்புடன் அதை அகற்றலானான்.
பின்னால் ஏதோ காலடி சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தான். நிலவொளியின் பின்னே வந்ததால் அவர்கள் முகம் சரியாகத் தெரியவில்லை.
'என்ன தோண்டிகிட்டு இருக்கே இங்கே?' ஒரு குரல் அதட்டியது.
பயத்தால் அப்படியே உறைந்தான் கந்தன். பாறைக்குக் கீழே புதையல் இருக்கிறதென நிச்சயமாக ஒரு உணர்வு சொல்லியது. இதை எப்படிச் சொல்வதென மனம் அஞ்சியது.
'என்ன சும்மா இருக்கே? என்னத்தை மறைச்சு வைக்கறே?' அதட்டல் மேலும் அதிகமாகியது.
'நான் எதையும் மறைக்கலை.' கந்தன் சற்று தைரியத்துடன் சொன்னான்.
அவன் பேசியதைக் காதில் வாங்காமல் அவர்களில் ஒருவன் அவனைத் தள்ளிவிட்டு, ஒரு டார்ச் வெளிச்சத்தில் அவன் தோண்டிக் கொண்டிருந்த குழியை ஆராய்ந்தான்.
இன்னொருவன் கந்தனிடம் இருந்த பையைப் பிடுங்கி, அதில் துழாவினான்.
கையில் தங்கக்கட்டி அகப்பட்டது!
'ஏய்! இவன்கிட்ட தங்கம் இருக்குடோய்!' எனக் கூவினான்! கவனமாக அதைத் தன் மடியில் பத்திரப் படுத்திக் கொண்டான்!
'அதான் அந்தக் குழிக்குள்ள மறைச்சு வைக்கறான் போல! தேடுறா' என ஒருவன் ஆணையிட்டான்.
கந்தனையே மீண்டும் தோண்டச் செய்தார்கள். ஒன்றும் அகப்படவில்லை. கந்தனை அடிக்கத் துவங்கினார்கள், உண்மையைச் சொல்லச்சொல்லி.
ரத்தம் வழிய கந்தன் கீழே சரிந்தான். சாவு நிச்சயம் என நடுங்கினான்.
'நாளைக்கு சாகப் போறேன்னும் போது பணத்தை வைச்சுகிட்டு என்ன லாபம்? பணமா ஒரு உசுரைக் காப்பாத்திரும்?' என சித்தர் சொன்னது நினைவுக்கு வந்தது.
'ஒரு புதையலுக்காகத்தான் இங்கே தோண்டிகிட்டு இருந்தேன்' என உரத்த குரலில் கத்தினான். ' எனக்குக் கனவுல இந்த இடம் தெரிஞ்சுது. குறி சொல்ற ஒரு ஆத்தா கூட இது சரியான இடம்தான்னு சொன்னாரு. அதான் யாருமில்லாத நேரமா வந்து தோண்டிகிட்டு இருக்கேன்'.
அவர்களில் ஒருவன் இதைக் கேட்டதும் பலமாகச் சிரித்தான்!
'அட, விடுங்கப்பா அவனை. செத்துத் தொலைக்கப் போறான். இவனை மாரி அலையற ரொம்ப ஆளுங்களை நான் பார்த்திருக்கேன். இவங்கிட்ட வேற ஒண்ணும் இல்லைன்னுதான் தோணுது. அந்தத் தங்கந்தான் இவன்கிட்ட இருந்த ஒரே பொருள் போல. அதைக் கூட அவன் திருடினாலும் திருடியிருப்பான். வாங்கடா போவலாம்'
என்று அவர்களில் ஒருவன் சொல்ல, அடிப்பதை நிறுத்தினார்கள்.
அப்படியே தரையில் சாய்ந்தான் கந்தன் அநேகமாக மயங்கிய நிலையில்!
'நீ சாக மாட்டே! பொழைச்சுப்பே! ஆனா, இனிமே உசிரோட இருக்கற ஒவ்வொரு நிமிஷமும் இப்படி ஒரு முட்டாளா இருந்திட்டோமேன்னு நினைச்சு நினைச்சு புலம்பப் போற! ஏன் சொல்றேன்னா, கிட்டத்தட்ட ரெண்டு வருஷத்துக்கு முன்னே,இதே இடத்துல.... நீ நிக்கறியே... அதே இடந்தான்... இந்த இடத்துல எனக்கும் ஒரு கனவு வந்திச்சு! தெற்கு கோடியில கடலுக்குப் பக்கத்துல ஏதோ ஒரு ஊருல இருக்கற ஒரு பாழடைஞ்ச கோயிலுக்கு தெற்கு சுவருக்குப் பின்னால ஒரு பெரிய புதையல் உனக்காக காத்திருக்குன்னு! அங்கே ஆடுல்லாம் கூட மேய்ப்பாங்களாம்! சாமி சிலை கூட அங்கே இருக்காதாம்!அங்கே இருக்கற புளியமரத்துக்கு அடியில தோண்டினா, ஒரு பெரிய புதையல் கிடைக்கும்னு அந்தக் கனவுல சொல்லிச்சு! புத்தி கெட்டவந்தான் இது மாரி கனவையெல்லாம் நம்பிக்கிட்டு அவ்ளோ தூரம் போவான். சும்மனாச்சும் ஒரு கனா வந்திச்சுன்னு எவனாச்சும் அவ்ளோதூரம் போவானா!
அதுமாரித்தான் நீயும்! உன்னைப் பார்த்தா சிரிப்பா இருக்கு. எப்பிடியோ போய்த் தொலை!'
அவர்களில் ஒருவன் சொல்லியது அவன் காதுகளில் அரைகுறையாக விழுந்தது.
அவர்கள் மறைந்தனர். கந்தன் தள்ளாடியபடியே எழுந்தான்.
தூரத்தில் கற்கோயில் அவனைப் பார்த்துச் சிரித்தது. அலைகள் சந்தோஷமாக ஆரவாரித்தன!
கந்தன் அதைப் பார்த்து பலமாகச் சிரித்தான்!
மீண்டும் அவன் கண்களில் கண்ணீர் வந்தது..... சந்தோஷத்தால்!
அவனுக்கு தான் தேடிவந்த புதையல் இருக்குமிடம் தெளிவாகத் தெரிந்தது!!
[நாளை "கனவு மெய்ப்படும்!"]!
************************************
மெய்ப்பொருள் காண்ப தறிவு." [423]
"எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு
அவ்வ துறைவது அறிவு." [426]
அடுத்த அத்தியாயம்
22 பின்னூட்டங்கள்:
Present
Oh! welcome my friend!
You have opened the account today!
Thank you!
:))
ஆஹா...... புதையல் இருக்குமிடம் புளியமரம்:-)))))
இவ்வளொ அலைக்கழிச்சு இப்பக் காமிக்குறாரோ?
ஆக மொத்தம் உலகம் உருண்டை. இப்படி ஒரு அனுபவமா? நல்லது, இப்போ கந்தன் செல்லிக்கிட்ட போறானா இல்லை நம்ம காட்டு ராணி கிட்டயா?
//துளசி கோபால் said...
ஆஹா...... புதையல் இருக்குமிடம் புளியமரம்:-)))))
இவ்வளொ அலைக்கழிச்சு இப்பக் காமிக்குறாரோ?
//
புதையல் இருக்குமிடம் போதிமரம், தங்க புதையல் அல்ல, ஞான புதையல்.
//அதெல்லாம் கிடக்கட்டும். அது நடந்து முடிஞ்ச கதை. அதைப் பத்தி இப்ப என்ன பேச்சு?//
:-)
நம்மில் எவ்வளவு பேர் முடிஞ்ச கதையை நினைச்சு சந்தோஷம் /வருத்தம் பட்டுக்கிட்டே இருக்கோம்? எவ்வளவு பேர் வரப்போறதை நினைச்சே பயந்து /பரபரப்பாகிகிட்டே இருக்கோம்? எவ்வளவு பேர் நிகழ் காலத்துல வாழறோம்?
திவா
/புதையல் இருக்குமிடம் போதிமரம், தங்க புதையல் அல்ல, ஞான புதையல்./
Expected :)
தெற்கு கோடியில கடலுக்குப் பக்கத்துல ஏதோ ஒரு ஊருல இருக்கற ஒரு பாழடைஞ்ச கோயிலுக்கு தெற்கு சுவருக்குப் பின்னால ஒரு பெரிய புதையல் உனக்காக காத்திருக்குன்னு! அங்கே ஆடுல்லாம் கூட மேய்ப்பாங்களாம்! சாமி சிலை கூட அங்கே இருக்காதாம்!அங்கே இருக்கற புளியமரத்துக்கு அடியில தோண்டினா, ஒரு பெரிய புதையல் கிடைக்கும்னு அந்தக் கனவுல சொல்லிச்சு
என்ன புதையல்னு புரிஞ்ச மாதிரியும் / புரியாத
மாதிரியும் இருக்கு
பார்க்கலாம் நாளைக்கு
//
அவனுக்கு தான் தேடிவந்த புதையல் இருக்குமிடம் தெளிவாகத் தெரிந்தது!!
//
நல்லாபடியா கிடைச்சா சந்தோஷம்.
நாளைக்கு அப்ப கனவு மெய்ப்பட்டு விடுமா? மெய்ப்பட்டது தொடருமா இல்லை களவு போகுமா?
அலைக்கழிப்பதா சிலர் நினைக்கலாம்; அறிவு கொடுத்து திருவைக் கொடுக்கறதாவும் நினைக்கலாம்!
:))
//கந்தன் செல்லிக்கிட்ட போறானா இல்லை நம்ம காட்டு ராணி கிட்டயா?//
என்னங்க கொத்ஸ்!
விடிய விடிய கதை படிச்சிட்டு....!
செல்லியை ஒரு தோழியாத்தான் பார்த்தான்... விவரம் தெரியாத வயசுல.
//புதையல் இருக்குமிடம் போதிமரம், தங்க புதையல் அல்ல, ஞான புதையல்.//
அவசரமான இந்த உலகத்துல, ரொம்பப் பேர் கதையை முழுசா உள்வாங்கிப் படிக்கலையோன்னு நினைக்கிறேன்.
கந்தன் நம் எல்லாரையும் போலவே ஒரு சாதாரண மனுஷன் தான்!
அவன் கண்ட கனவு நிறைவேறுது; அதான் கதை!
//எவ்வளவு பேர் நிகழ் காலத்துல வாழறோம்?
திவா//
அதேதாங்க திவா!
இதையே முன்னே கூட சித்தர் சொல்லியிருப்பாரு!
'சுத்தி நடக்கறதைப் பாரு!'
இதுல கடந்த காலமோ, எதிர்காலமோ எங்கே வருது!
//என்ன புதையல்னு புரிஞ்ச மாதிரியும் / புரியாத
மாதிரியும் இருக்கு
பார்க்கலாம் நாளைக்கு//
நீங்கதாங்க சரியா நிகழ்காலத்தைப் புரிஞ்சுகிட்டு இருக்கீங்க, வளர்!:)
//நல்லாபடியா கிடைச்சா சந்தோஷம்.//
எது நடந்தாலும் சந்தோஷம்னு சொல்லுங்க ம. சிவா!
அதான் இந்ந்தக் கதையை நீங்க முறையா படிச்சீங்கன்றதுக்கு அர்த்தம்!:))
//மெய்ப்பட்டது தொடருமா இல்லை களவு போகுமா?//
தெரிஞ்சிரும்ல!
:))
கனவு மெய்ப்படும் நேரம் நெருங்க நெருங்க - கந்தன் சித்தனாகும் நேரம் நெருங்க நெருங்க - கதை சுவாரஸ்யமாகச் செல்கிறது. வழக்கம் போல தத்துவங்கள்.
வண்ணத்துப் பூச்சியே வழி காட்டட்டும்
கந்தன் கனவு மெய்ப்படுகிறது.
அதற்கிடையில், அவனுக்கு ஞானமும் கிடைத்தது.
அவன் சித்தனாகிறானா, இல்லையா என்பது இந்தக் கதையில் வராது.
இரண்டாம் பாகம் எழுத ஒரு ஐடியா கொடுத்து இருக்கீங்க சீனா! :))
இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகிறார் ஞானத்தங்கமே
அவர் ஏதும் அறியாதடி ஞானத்தங்கமே
இந்தப் பாட்டுதான் நினைவுக்கு வருது.
//இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகிறார் ஞானத்தங்கமே
அவர் ஏதும் அறியாதடி ஞானத்தங்கமே//
ரொம்பச் சரியாச் சொன்னீங்க ஜி.ரா.
அரியாதவனுக்கு அறிவு புகட்டி, அவனைப் பேரறிவாளனாக்கி அவன் கையில் ஒரு திருவைக் கொடுத்தால், ஊருணி நிறைந்தார்ப்போல் அனைவர்க்கும் உதவுவான் என்பதே இதன் சாராம்சம்!
அதுக்குத்தான் ஒரு சித்தர் [குரு] தேவைப்படுகிறார்!.
ஞானப் புதையல் என்ற ஊகம் இருந்தது. இருக்கும் இடத்தைப் பற்றி வரும் என்ற ஊகம் இருந்ததில்லை. அடுத்த இடுகையையும் படித்துப் பார்க்கிறேன். :-)
Post a Comment