Friday, November 09, 2007

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 40

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 40

முந்தைய பதிவு இங்கே!

38.
"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு." [423]

"எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு

அவ்வ துறைவது அறிவு." [426]



அக்கம் பார்த்துக் கொண்டே, பயமின்றி நடந்தான் கந்தன்.

கூட சித்தரும் இல்லாததால், தன் மனது என்ன சொல்லுகிறதெனக் கவனிக்கத் தொடங்கினான். புதையல் இருக்குமிடத்தை அதுதான் இனிக் காட்டும் எனவும் நம்பினான்.

"புதையல் எங்கே இருக்குதோ, அங்கேதான் உன் மனசு உன்னை இட்டுச் செல்லும்!' சித்தரின் குரல் உள்ளே கேட்டது.

ஆனால், அவன் இதயம் வேறென்னவெல்லாமோ பேசிக் கொண்டிருந்தது.

'உன்னை நினைச்சா எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு கந்தா! ஒரு சாதாரண சின்னப் பையனா ஆடு மேய்ச்சுகிட்டு இருந்த நீ, எதையெதையெல்லாமோ கடந்துவந்து, இப்ப அநேகமா புதையல் எடுக்கற இடத்துகிட்ட வந்துட்டே! பெரிய கில்லாடிதான் நீ! காத்தாக் கூட மாறிக் காமிச்சிட்டே!' என்று புகழ்ந்தது.

'அதெல்லாம் கிடக்கட்டும். அது நடந்து முடிஞ்ச கதை. அதைப் பத்தி இப்ப என்ன பேச்சு? நீதான் எனக்கு ஒரு நம்பிக்கையைக் கொடுக்கணும் இப்ப' என அதட்டினான்.

'உன் கண்ணுலேருந்து தண்ணி வர்ற அளவுக்கு எங்கே, எந்த இடத்துல உனக்கு ஒண்ணு நடக்குதோ அங்கே நான் இருப்பேன். உன் புதையலும் தான்!' என்று கிசிகிசுத்தது.

மெதுவாக நடந்தான் கந்தன். இரவு தொடங்கி முழுநிலவு வெளிவந்து வெளிச்சத்தைக் கூட்டியது. குளிர்ந்த காற்று இதமாக வீசியது!

ஒரு சின்ன குன்று எதிர்ப்பட்டது. அதன்மீது ஏறினான். அவன் கண்ட காட்சி அவனைப் பரவசப்படுத்தியது!

அழகிய கருங்கடல் அலைகளோடு ஆரவாரித்தது. அதன் கரையருகே அழகிய கற்பாறைகளால் குடைந்தெடுத்த கோவில்கள்! நிலவுவெளிச்சத்தில் எல்லாமே பளபளத்தன.

கந்தனின் கால்கள் தானாக மண்டியிட்டன. தரையை முத்தமிட்டு வணங்கினான்.


கண்களிலிருந்து கரகரவெனக் கண்ணீர் வழியத் தொடங்கியது!
'எனக்கு ஒரு கனவைக் காண்பித்து, அதை ஒரு பெரியவர் மூலமா உறுதிப்படுத்தி, ஒரு வெள்ளைக்காரன் மூலமா ஆதாரம் கொடுத்து, ஒரு சித்தர் மூலமா அதை அடையவைத்ததற்கும், இறைவா! உனக்கு என் நன்றி! அது மட்டுமா! காதல் நிரம்பிய ஒருவனால் அவன் நினைத்ததை அடைய முடியாமல் போகாது எனத் தனக்குக் காட்டிய ஒரு பெண்ணை எனக்குக் கொடுத்ததற்கும் சேர்த்தே நன்றி!'

மனமார, வாய்விட்டுக் கதறினான் கந்தன்!

இப்படியே திரும்பிவிடலாமா என யோசித்தான்.


'கனவில் கண்டது உண்மைதான் எனத் தெரிஞ்சாச்சு.இப்படியே திரும்பி, பொன்னிகிட்ட போயிறலாம். இருக்கற தங்கத்தை வித்து, கொஞ்சம் ஆடுமாடு வாங்கி, அதை வைச்சு தொழில் பண்ணி மானமா வாழ்ந்திறலாம். இப்ப சித்தருக்குத் தெரியாத வித்தையா? அவர் தங்கம் பண்றதுகூடத் தெரிஞ்சு
வைச்சிருக்காரு. அதுக்காக இதை என்ன, எல்லார்கிட்டயும் போயிக் காமிச்சுகிட்டாரா என்ன? இதைப் பாக்கறதுக்குள்ள, என்னெல்லாம் தெரியணுமோ, அதையெல்லாம் தெரிஞ்சுகிட்டாச்சு. இப்ப புதையலுக்கு என்ன தேவை?' இப்படியெல்லாம் எண்ணம் ஓடியது.

'இவ்வளவு தூரம் வந்தாச்சு. கனவு மெய்ப்படும் நேரம் வந்தாச்சு! இதோ இன்னும் கொஞ்ச தூரம் போனா, எதுக்காக வந்தோமோ அது கிடைக்கப் போகுது. அதில்லாம திரும்பினா, இதுவரைக்கும் பட்ட பாடெல்லாம் வீண்!'என நினைத்துக் கொண்டே கண்களைத் தாழ்த்தி தான் மண்டியிட்ட இடத்தைப் பார்த்தான்.

அவன் கண்ணீர் பட்ட இடம் கண்ணில் பட்டது! ஒரு அழகிய வண்ணத்துப் பூச்சி எங்கிருந்தோ இந்த நேரத்தில் பறந்து அவன் தோளில் வந்து உட்கார்ந்தது! வண்ணத்துப்பூச்சி பறப்பது ஒரு நல்ல சகுனம் என அவன் மனது சொல்லியது!

சுற்று முற்று பார்த்தான். யாருமில்லை என உறுதிப்படுத்திக் கொண்டபின், அந்த இடத்தைக் கைகளால் பரபரவெனத் தோண்டத் துவங்கினான். அருகில் கிடந்த ஒரு கம்பையும் வைத்துக் கிளறினான். மண் பிரதேசமாக இருந்ததால் தோண்டுவதும் எளிதாகவே இருந்தது!


தோண்டத் தோண்ட மண்ணும், சிறு பாறைகளும் வந்ததே தவிர புதையல் எதுவும் தென்படவில்லை!

அவன் கைகள் வலித்தன. நகமும், சதையும் பிய்ந்து ரத்தம் வர ஆரம்பித்தது.இனியும் தோண்டணுமா என நினைத்தான். மனம் சொல்லியது நினைவுக்கு வரவே, விடாமல் தோண்டினான். ஒரு பாறை ஒன்று கையில் தட்டியது. முனைப்புடன் அதை அகற்றலானான்.

பின்னால் ஏதோ காலடி சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தான். நிலவொளியின் பின்னே வந்ததால் அவர்கள் முகம் சரியாகத் தெரியவில்லை.

'என்ன தோண்டிகிட்டு இருக்கே இங்கே?' ஒரு குரல் அதட்டியது.

பயத்தால் அப்படியே உறைந்தான் கந்தன். பாறைக்குக் கீழே புதையல் இருக்கிறதென நிச்சயமாக ஒரு உணர்வு சொல்லியது. இதை எப்படிச் சொல்வதென மனம் அஞ்சியது.

'என்ன சும்மா இருக்கே? என்னத்தை மறைச்சு வைக்கறே?' அதட்டல் மேலும் அதிகமாகியது.

'நான் எதையும் மறைக்கலை.' கந்தன் சற்று தைரியத்துடன் சொன்னான்.

அவன் பேசியதைக் காதில் வாங்காமல் அவர்களில் ஒருவன் அவனைத் தள்ளிவிட்டு, ஒரு டார்ச் வெளிச்சத்தில் அவன் தோண்டிக் கொண்டிருந்த குழியை ஆராய்ந்தான்.
இன்னொருவன் கந்தனிடம் இருந்த பையைப் பிடுங்கி, அதில் துழாவினான்.

கையில் தங்கக்கட்டி அகப்பட்டது!

'ஏய்! இவன்கிட்ட தங்கம் இருக்குடோய்!' எனக் கூவினான்! கவனமாக அதைத் தன் மடியில் பத்திரப் படுத்திக் கொண்டான்!

'அதான் அந்தக் குழிக்குள்ள மறைச்சு வைக்கறான் போல! தேடுறா' என ஒருவன் ஆணையிட்டான்.

கந்தனையே மீண்டும் தோண்டச் செய்தார்கள். ஒன்றும் அகப்படவில்லை. கந்தனை அடிக்கத் துவங்கினார்கள், உண்மையைச் சொல்லச்சொல்லி.

ரத்தம் வழிய கந்தன் கீழே சரிந்தான். சாவு நிச்சயம் என நடுங்கினான்.

'நாளைக்கு சாகப் போறேன்னும் போது பணத்தை வைச்சுகிட்டு என்ன லாபம்? பணமா ஒரு உசுரைக் காப்பாத்திரும்?' என சித்தர் சொன்னது நினைவுக்கு வந்தது.

'ஒரு புதையலுக்காகத்தான் இங்கே தோண்டிகிட்டு இருந்தேன்' என உரத்த குரலில் கத்தினான். ' எனக்குக் கனவுல இந்த இடம் தெரிஞ்சுது. குறி சொல்ற ஒரு ஆத்தா கூட இது சரியான இடம்தான்னு சொன்னாரு. அதான் யாருமில்லாத நேரமா வந்து தோண்டிகிட்டு இருக்கேன்'.



அவர்களில் ஒருவன் இதைக் கேட்டதும் பலமாகச் சிரித்தான்!
'அட, விடுங்கப்பா அவனை. செத்துத் தொலைக்கப் போறான். இவனை மாரி அலையற ரொம்ப ஆளுங்களை நான் பார்த்திருக்கேன். இவங்கிட்ட வேற ஒண்ணும் இல்லைன்னுதான் தோணுது. அந்தத் தங்கந்தான் இவன்கிட்ட இருந்த ஒரே பொருள் போல. அதைக் கூட அவன் திருடினாலும் திருடியிருப்பான். வாங்கடா போவலாம்'
என்று அவர்களில் ஒருவன் சொல்ல, அடிப்பதை நிறுத்தினார்கள்.

அப்படியே தரையில் சாய்ந்தான் கந்தன் அநேகமாக மயங்கிய நிலையில்!

'நீ சாக மாட்டே! பொழைச்சுப்பே! ஆனா, இனிமே உசிரோட இருக்கற ஒவ்வொரு நிமிஷமும் இப்படி ஒரு முட்டாளா இருந்திட்டோமேன்னு நினைச்சு நினைச்சு புலம்பப் போற! ஏன் சொல்றேன்னா, கிட்டத்தட்ட ரெண்டு வருஷத்துக்கு முன்னே,இதே இடத்துல.... நீ நிக்கறியே... அதே இடந்தான்... இந்த இடத்துல எனக்கும் ஒரு கனவு வந்திச்சு! தெற்கு கோடியில கடலுக்குப் பக்கத்துல ஏதோ ஒரு ஊருல இருக்கற ஒரு பாழடைஞ்ச கோயிலுக்கு தெற்கு சுவருக்குப் பின்னால ஒரு பெரிய புதையல் உனக்காக காத்திருக்குன்னு! அங்கே ஆடுல்லாம் கூட மேய்ப்பாங்களாம்! சாமி சிலை கூட அங்கே இருக்காதாம்!அங்கே இருக்கற புளியமரத்துக்கு அடியில தோண்டினா, ஒரு பெரிய புதையல் கிடைக்கும்னு அந்தக் கனவுல சொல்லிச்சு! புத்தி கெட்டவந்தான் இது மாரி கனவையெல்லாம் நம்பிக்கிட்டு அவ்ளோ தூரம் போவான். சும்மனாச்சும் ஒரு கனா வந்திச்சுன்னு எவனாச்சும் அவ்ளோதூரம் போவானா!
அதுமாரித்தான் நீயும்! உன்னைப் பார்த்தா சிரிப்பா இருக்கு. எப்பிடியோ போய்த் தொலை!'

அவர்களில் ஒருவன் சொல்லியது அவன் காதுகளில் அரைகுறையாக விழுந்தது.

அவர்கள் மறைந்தனர். கந்தன் தள்ளாடியபடியே எழுந்தான்.

தூரத்தில் கற்கோயில் அவனைப் பார்த்துச் சிரித்தது. அலைகள் சந்தோஷமாக ஆரவாரித்தன!

கந்தன் அதைப் பார்த்து பலமாகச் சிரித்தான்!


மீண்டும் அவன் கண்களில் கண்ணீர் வந்தது..... சந்தோஷத்தால்!

அவனுக்கு தான் தேடிவந்த புதையல் இருக்குமிடம் தெளிவாகத் தெரிந்தது!!

[நாளை "கனவு மெய்ப்படும்!"]!
************************************

"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு." [423]


"எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு
அவ்வ துறைவது அறிவு." [426]



அடுத்த அத்தியாயம்




Read more...

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 39

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 39

முந்தைய பதிவு இங்கே!

37.

"செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்." [26]

"நான் கேட்டதுக்கும் மேலேயே நீங்க நிரூபிச்சிட்டீங்க! இனிமே, நீங்க எங்கே வேண்டுமானாலும் போகலாம். உங்களைத் தவறா நினைச்சதுக்கு என்னை மன்னிச்சிடுங்க. நீங்க இந்தக் காட்டை விட்டு பத்திரமாப் போக சில ஆளுங்களை உங்களோட அனுப்பறேன். எங்களை ஆசீர்வதிங்க!" என்றான் தலைவன்.

' அப்பாவி மனிதர்களைப் பலி வாங்காத எந்தக் காரியமும் வெற்றி பெறும். அதுக்கு ஆசீர்வாதம்கூடத் தேவையே இல்லை. எங்களுக்கு துணையாக யாரும் வேண்டாம். நீங்க கவனமா இருங்க. இறையருள் எப்பவும் கூடிவரும்!' எனச் சொல்லி சித்தர், கந்தனுடன் கிளம்பினார்.

காட்டைக் கடந்து, வாலாஜாபாத் என்னும் ஒரு ஊரின் எல்லையில் இருந்த ஒரு மடத்தின் வாசலை அடைந்தனர்.

'இதோட என் துணை முடிஞ்சுது. இனிமே நீ தனியாத்தான் போகணும். இங்கேருந்து மஹாபலிபுரம் ஒரு மூணு, நாலு மணிநேரம்தான்' என்றார் சித்தர்.

'உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலை. எத்தனையோ உண்மைகளை எனக்குப் புரிய வைச்சீங்க!' என்று தழுதழுத்தான் கந்தன்.

'உனக்குள்ளே இருந்ததை உனக்குக் காட்டிக் கொடுத்ததைத் தவிர நான் வேற ஒண்ணும் பண்ணலை'என்று சிரித்தார் சித்தர்.

மடத்தினுள் சென்றனர். உள்ளே இருந்த ஒரு துறவி இவர்களை வரவேற்றார். அவருடன் ஏதோ தனியாகப் பேசினார் சித்தர்.

அந்தத் துறவி இவர்களை உள்ளே வரச் சொல்லி, நேராக சமையற்கட்டிற்கு அழைத்துச் சென்றார்.

அடுப்பை மூட்டி, ஒரு கடாயை அதன் மீது வைத்துவிட்டு, இவர்களைத் தனியாக விட்டுவிட்டு அகன்றார்.

ஒரு ஈயத்துண்டை எடுத்து அதில் வைத்தார்.

நன்றாக அது சூடாகி, உருகி, ஒரு திரவமாக ஆனபின்னர்,தன் தோளில் மாட்டியிருந்த பையிலிருந்து, ஒரு பளிங்கு போன்ற ஒரு கல்லை எடுத்து, ஒரு கத்தியால் அதிலிருந்து ஒரு சிறு பகுதியை செதிளாக வெட்டி அதில் இட்டார்.

அடுப்பிலிருந்த திரவம் சிவப்பாக மாறியது!

இன்னும் சற்று நேரம் கொதித்த பின்னர், கடாயை அடுப்பிலிருந்து கீழிறக்கி வைத்தார்.

சிறிது நேரத்தில் திரவம் இறுகி ஒரு கட்டியாக மாறியது. ஆனால் ஈயம் அங்கில்லை! தங்கம் மின்னியது!

கந்தன் புன்முறுவல் பூத்தான்.

'என்னாலும் இதுபோல ஒருநாள் செய்ய இயலுமா?' ஆவலுடன் கேட்டான் கந்தன்.

'இது எனக்கான விதி! உன்னுடையது இதுவல்ல! இப்படியும் செய்யமுடியும் என்பதை உனக்குக் காட்டவே இதை நான் உன்னெதிரில் செய்துகாட்டினேன்' எனச் சொல்லியபடியே அதை நான்கு கூறாக வெட்டினார்.

'இடம் கொடுத்து உதவிய உங்களுக்கு இது' என ஒரு பகுதியை அந்தத் துறவியிடம் கொடுத்தார்.

'அப்படி என்ன நான் செய்துவிட்டேன்? இதெல்லாம் ரொம்பவே அதிகம்' எனத் துறவி மறுத்தார்.

'மீண்டும் ஒருமுறை அப்படிச் சொல்லாதீர்கள். இந்த உலக ஆத்மா அதனைக் கேட்டுக் கொண்டிருக்கிறது. அடுத்தமுறை கிடைப்பது குறையலாம்' சட்டென்று சூடானார் சித்தர்!

துறவி பதிலேதும் சொல்லாமல் வாங்கிக் கொண்டார்.

இன்னொன்றைக் கந்தனிடம் கொடுத்தார்.'இது உனக்கு. நீ இழந்த பணத்துக்கு ஈடாக!' கந்தனும் இது அதிகம் எனச் சொல்ல வாயெடுத்தவன் சட்டென அடக்கிக் கொண்டான்!!
துறவியிடம் சித்தர் சொன்னதை நினவில் கொண்டான்!

'இது எனக்கு! திரும்பிச் செல்ல உதவியாய் இருக்கும்' எனச் சொல்லியபடி அதைத் தனது பைக்குள் வைத்தார்.

நான்காவது பகுதியைக் துறவியிடம் கொடுத்தார். 'இதை வைத்துக் கொள்ளுங்கள். திரும்பவும் இந்தப் பையன் இங்கே வந்தால் அவனிடம் கொடுங்கள்!'என்றார்.

'எனக்குத் தான் புதையல் கிடைக்கப் போகுதுன்னு சொன்னீங்களே!' எனக் குழம்பினான் கந்தன்.

'அது நிச்சயம் கிடைக்கும் உனக்கு!'

'அப்படீன்னா இது எப்படி எனக்குத் தேவைப்படும்?'

'ஏற்கெனவே நீ இரண்டு முறை உன்னுடைய பொருளையெல்லாம் தொலைச்சிட்டே! மதுரையில ஒரு திருடன்கிட்ட, இன்னொரு தடவை அந்தக் காட்டுல! ஒரு தடவை நிகழ்ந்தா, அது மறுபடியும் நடக்க வாய்ப்பில்லை; அதுவே, இரண்டு தடவை நடந்தா, கண்டிப்பா மூணாவது தடவையும் நடக்கும்னு எனக்குள்ள ஒரு நம்பிக்கை!' என ஒரு அர்த்தமுள்ள சிரிப்புடன் சொல்லியபடியே கிளம்பினார் சித்தர்!

கந்தனும் பின் தொடர்ந்தான்.

'இனிமே உன் வழி அந்தப் பக்கமா! என் கூட இல்லை. ஒண்ணை மட்டும் நினைவில் வைச்சுக்கோ. என்ன ஒரு சின்ன விஷயமா இருந்தாலும் சரி,ஒருத்தொருத்தர் செய்யற ஒவ்வொரு காரியமும் இந்த உலகத்தோட சம்பந்தப்பட்டிருக்கு. சில பேருக்கு இது புரியும். ரொம்பப் பேருக்கு புரியாமலே போயிடுது.

ஒரு காகிதத்தை குப்பைத்தொட்டியில போடாம தெருவுல எறியறதுலேர்ந்து, அதையே பொறுக்கி அந்தக் குப்பைத் தொட்டியில் ஒழுங்க போடறவரைக்கும், எத்தனையோ இப்படி உலகத்தைப் பாதிக்கிற, மேம்படுத்தற காரியங்களைச் செய்யறோம். என்ன செய்யறோம் என்பதில் கவனமா இருந்தா, நடக்கறதுல்லாம் நல்லதா நடக்கும். போய் வா!'

அவன் தலையைத் தொட்டு ஆசீர்வதித்தார்.

"நான் திரும்பவும் உங்களைப் பார்ப்பேனா?" கேட்கும் போதே அவன் குரல் தழுதழுத்தது.

"இறையருள் இருந்தால் எதுவுமே நடக்கும்! இனிமேல் என் துணை தேவையில்லை உனக்கு. நீதான் கத்துகிட்டதை தொடர்ந்து விடாம செஞ்சு வரணும். எனக்காக ஒரு ஜீவன், அதான் உங்க நண்பன் ராபர்ட், அங்கே காத்துகிட்டு இருக்கான். அவனுக்கு ஒரு வழி காமிச்சிட்டு அடுத்ததைப் பார்க்கப் போகணும். இருக்கும்வரை கடமைகள் தொடர்ந்து வரும்.
எது விதிக்கப்படுதோ, அதைச் செய்ய மட்டும் மறந்திடாதே! நல்லபடியா போயிட்டுவா!"

அவரை ஒருமுறை விழுந்து வணங்கினான் கந்தன்.

நிமிர்ந்து நன்றாக உள்வாங்கினான் அவர் திருவுருவை.

திரும்பிப் பார்க்காமல் வேகமாக நடந்தான்.

[தொடரும்]
***************************************
"செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்." [26]

அடுத்த அத்தியாயம்

Read more...

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 38

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 38

முந்தைய பதிவு இங்கே!


36.

"ஞாலம் கருதினுங் கைகூடும் காலம்
கருதி இடத்தார் செயின்." [464]

காற்றின் வேகம் தாங்க முடியாமல், காடு தவித்தது.

மிருகங்கள் பதுங்கின.

இந்த திடீர் மாற்றத்தை உணரமுடியாமல், வழக்கமாகப் பறந்துவிடும், பறவையினங்கள் ஒடுங்கின.

தலைவனின் கூட்டமும் இதன் வேகத்தைக் கண்டு மிரண்டது.

'இதை நிறுத்தச் சொல்லலாமே' என ஒருவன் கத்தினான்.

'ஆமாம். அதான் சரி. சித்தரை நிறுத்தச் சொல்லுங்க!' என இன்னொருவன் ஆமோதித்தான்.

'நம்ம சவாலே அந்த சித்தர் தன்னையே காத்தா மாத்திக் காட்டணும்ன்றதுதான்! இப்ப வீசறது காத்துதான். சித்தரில்லை! அவர், அதோ, அங்கே நிக்கறாரு. என்ன என்ன நடக்குதுன்னு பார்ப்போம்!'


தலைவன் மட்டும் உறுதியாக நின்றான். அதே சமயம் அவன் கண்கள் முன்பு பேசிய அந்த இரண்டு பேரையும் குறித்துக் கொண்டன.

'இது முடிஞ்சதும் முதல் வேலையா, இவனுக ரெண்டு பேரையும் கவனிக்கணும். பயப்படற ஆளுங்க நம்ம இயக்கத்துக்கு லாயக்கில்லை' என எண்ணிக் கொண்டான்!
----------------

'காத்து சொல்லுது,... உனக்குத்தான் அன்பைப் பத்தி நல்லாத் தெரியுமின்னு! அது தெரியும்னா, உனக்கு இந்த உலகத்தோட ஆத்மாவையும் தெரியணுமே! ஏன்னா, அதுவும் அன்புதான்'


என்று காற்று எழுப்பிய புழுதியில், சற்றே மங்கலாகத் தெரிந்த சூரியனைப் பார்த்துக் கேட்டான், கந்தன், தன் கண்களை இடுக்கியபடி!

'நான் இருக்கற இடத்திலேர்ந்து என்னால அந்த ஆத்மாவைப் பார்க்க முடியுது.

என் மூலமாத்தான் அது இந்த உலகத்தைப் பாதுகாக்குது!

மரம், செடி, கொடி, பறவை, மிருகம், மனுஷன், வெயிலு,நிழலு எல்லாமே எங்களாலதான் வருது.

எவ்வளவோ தூரத்துல நான் இருந்தாக் கூட,எனக்கும் அதுக்கும் ஒரு தொடர்பு இருக்கு.

இப்ப நான் இருக்கற இடத்துலேர்ந்து கொஞ்சம் கிட்ட வந்தாக்கூட, இந்த பூமியில இருக்கற எல்லாமே வெந்து சாம்பலாயிடும்.

அந்த ஆத்மாவும் அழிஞ்சிடும்.

ஆனாலும், எங்களுக்குள்ள ஒரு பரஸ்பரம் அன்பு இருக்கு.
அதுக்காக நான் இந்த உலகத்துக்கு வெப்பத்தையும், உயிரையும் கொடுக்கறேன்; அது எனக்கு நான் வாழறதுக்கு ஒரு அர்த்தத்தைக் கொடுக்குது'
என்று சூரியன் பேசியது!

'அப்படீன்னா, உனக்கும் அன்பைப் பத்தித் தெரியும்னு சொல்லு!' என்றான் கந்தன்.

'நானும் இந்த உலக ஆத்மாவும் இதைப் பத்தி நிறையவே பேசியிருக்கோம். அதோட கவலை என்னான்னா, இந்த உலோகங்களையும், தாவரங்களையும் தவிர மத்த எல்லாருமே, தாங்கள்லாம் ஒண்ணுதான்னு புரிஞ்சுக்கலியேன்னுதான்.

ரொம்ப வருத்தம் அதுக்கு!

இரும்பு இரும்பா இருக்கு, வெள்ளி வெள்ளியா இருக்கு, தங்கம் தங்கமாவே!
எதுவும், தான் இன்னொண்ணா மாறணும்னு ஆசைப்படறதில்லை.


'நீரளவே ஆகுமாம் நீராம்பல்'னு, தாவரங்களும் அதே மாதிரிதான்!

இந்த மனுஷங்களும், மிருகங்களும்தான் இன்னும் அதைப் புரிஞ்சுக்காம, ஒண்ணை ஒண்ணு அடிச்சுகிட்டு,.. ஒத்துமையா இருக்க மறுக்கறாங்க....' என சற்று வருத்தத்துடன் பேசியது சூரியன்.

'அப்படியே இருந்தா என்ன பயன்? எல்லாத்துக்குமே ஒரு விதி இருந்தாக்கூட, எல்லாரும் அதுவே போதும்னு இருந்திடக்கூடாது. அடுத்த நிலை என்னன்னு அதுக்குப் போக முயற்சி பண்ணனும். விதியை மாத்தணும்!எல்லாரும் ஒண்ணாகணும்! இந்த உலக ஆத்மாவோட ஒண்ணாப் போகணும்! அதுதான் சித்துவேலை!

ஒவ்வொருத்தரும் ஒரு தேடலை எடுத்துக்கணும்; முயற்சி பண்ணி அதைக் கண்டுபிடிக்கணும்; போன ஜன்மத்துல இருந்ததைவிட, இன்னும் கொஞ்சம் மேல் நிலைக்கு வர தொடர்ந்து முயற்சிக்கணும். தன்னோட தேவைகளை குறைச்சுகிட்டு, ஒண்னுமில்லாம ஆகி, 'சரி, இனிமே இப்படியே இருந்தா ஒரு பிரயோஜனமும் இல்லை. நாம அடுத்த நிலைக்குப் போகணும்னு உழைக்கணும். அதைத்தான் சித்தருங்க நமக்குக் காட்டறாங்க!

இப்ப இருக்கறதை விட உசர ஆரம்பிக்கறப்ப, நாம மட்டும் இல்லை,
கூட இருக்கறவங்களும் நம்மளோட சேர்ந்து உசருவாங்க'ன்னு புரிய வைக்கறாங்க. இப்ப நான் உன்கிட்ட நின்னு பேசறதுக்குக் கூட அதான்.... அந்த அன்புதான் காரணம்!'

கந்தன் சொன்னதைக் கேட்டு சற்று நேரம் மௌனமாக இருந்தது சூரியன்.

'எனக்கு எப்படி அன்புன்னா தெரியாதுன்னு சொல்றே?' எனக் கேட்டது.

'ஒரே இடத்துல இருக்கற காடோ, கண்ட இடமெல்லாம் சுத்தற காத்தோ, இல்லை உன்னை மாதிரி எல்லாத்தையும் தொலைதூரத்துலேருந்து பாக்கற உனக்கோ அன்பு, காதல் இதெல்லாம் தெரிய வாய்ப்பே இல்லை!


அன்புன்றது, இந்த உலகத்தோட ஆத்மாவுக்கு ஏதாவது நல்லது பண்றதா இருக்கணும்.


நானும் இந்த ஆத்மாவைப் பாத்திருக்கேன்!

என்னமோ அது ரொம்ப சுத்தமானதுன்னு நினைச்சிருந்தேன்.

ஆனா, அதுக்கும் சராசரி ஆசா பாசங்கள் எல்லாம் இருக்குது!

அதுக்கு தீனி போடறது யாருன்னு பார்த்தேன்.

அது வேற யாருமில்லை!

நாங்கதான்!

எங்க நடத்தையைப் பொறுத்துதான் அதோட நல்லது, கெட்டது எல்லாமே நடக்குது.

இங்கதான் அன்போட சக்தி தெரிய வருது.

நாங்கள்லாம் அன்புவழியுல நடந்தா, இந்த உலகமும் அப்படியே மாறிடும்.'

'அப்போ, என்கிட்ட என்னதான் எதிர்பார்க்கற?' சூரியன் புரியாமல் விழித்தது!

'என்னை ஒரு காத்தா மாத்த உதவி பண்ணனும்!' தைரியமாகக் கேட்டான் கந்தன்!

'எல்லாமே தெரிஞ்சவன்னு என்னை சொல்லுவாங்க. ஆனா, எனக்குக் கூட உன்னை காத்தா மாத்தறதுக்கு என்ன வழின்னு தெரியலியே'

'அப்போ யாரைக் கேக்கணும்?'

காற்று இவர்களின் உரையாடலைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தது! 'எல்லாம் வல்ல' என இன்றுவரை நினைத்திருந்த சூரியனாலும் கூட முடியாதது என ஒன்று இருக்கிறதே! இதை இப்படியே மூலை முடுக்கெல்லாம் கொண்டுபோய் சேர்க்கணுமே !' எனக் கவனித்தது.

'படைச்சவனைத்தான் கேக்கணும்!' என்றது சூரியன்.

காற்றுக்கு ஒரே குஷி! இன்னும் பலமாக வீசியது! கீழிருந்த கூட்டம் அஞ்சி நடுங்கியது. மரங்களின் அடியில் சென்று பதுங்கினார்கள்.

கந்தன் தன் பார்வையை "படைத்தவனை" நோக்கித் திருப்பினான். இந்த உலகமே அமைதியானதை உணர்ந்தான். அவனாலும் பேச முடியவில்லை.


இனம் புரியாத ஒரு அன்பு ஊற்று அவன் இதயத்தில் இருந்து கிளம்புவதாக உணர்ந்தான். அப்படியே அவனை அறியாமல் விழுந்து கும்பிட்டான். இதுவரையிலும் அவன் செய்யாத பிராத்தனை அவனுள்ளில் இருந்து புறப்பட்டது. வார்த்தைகள் இல்லை அதிலே! தனது ஆடுகளுக்காகவோ, அண்ணாச்சிக்காகவோ... ஏன்.... பொன்னிக்காகவோ கூட அவன் பிரார்த்தனை அமையவில்லை.அந்தப் பிரார்த்தனையின் போது அவனுக்குஒன்று புலப்பட்டது..

"இந்தக் காடு, காற்று, சூரியன் இன்னும் எல்லா ஜீவராசிகளுமே தனக்கென விதிக்கப்பட்ட வழியில் செல்ல முயற்சிக்கிறது என்ற உண்மை அவனை பலமாகத் தாக்கியது.
அந்த வழியெங்கிலும் பல்வேறு நற்சகுனங்கள் அவரவர்க்குத் தெரிகிறது. அதை எடுத்துக் கொண்டு தன் வாழ்வை வளப்படுத்துகிறவர்கள் சிலரே!தனது படைப்பின் ரகசியம் என்னவென எவருக்குமே தெரியவில்லை. படைத்தவன் ஒருவன் மட்டுமே இதையெல்லாம் தீர்மானிக்கிறான். அவனால் மட்டுமே அதிசயங்கள் நிகழ்த்த முடியும்.
கடலைப் பாலைவனமாக்க முடியும்; மனிதனைக் காற்றாக்க முடியும்! இந்த உலத்தின் ஆத்மாதான் அந்தப் "படைத்தவனிடமும்" வியாபித்திருக்கிறது. அதுதான் தன்னுள்ளும் நிறைந்திருக்கிறது. இதை உணர்ந்தால், தன்னாலும் அதிசயங்கள் நிகழ்த்த முடியும்"
என!

அவன் எழுந்தான்!
காற்றானான்!
அனைவரும் இதைக் கண்டனர்!
காற்று பலமாக வீசியது!
சிறிது நேரம் கழித்து அது குறைய ஆரம்பித்தபோது, கந்தன் ஒரு மரத்தின் கீழே நின்றுகொண்டிருப்பதைப் பார்த்தனர்.


அவர்களால் இந்த மாயத்தை... சற்றுமுன் காற்றோடு காற்றாக எழுந்தவன், இப்போது தனியே நின்றுகொண்டிருக்கும் அதிசயத்தை... நம்பவே முடியவில்லை!

சித்தர் மட்டும் வாய்விட்டு ஆனந்தமாகச் சிரித்துக் கொண்டு இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தார்!

தான் தேடிக்கொண்டிருந்த சீடன் கிடைத்துவிட்டான் என்ற திருப்தி அவர் சிரிப்பில் வெளிப்பட்டது!


[தொடரும்]
*************************************
"ஞாலம் கருதினுங் கைகூடும் காலம்
கருதி இடத்தார் செயின்." [464]



அடுத்த அத்தியாயம்

Read more...

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 37

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 37

முந்தைய பதிவு இங்கே!


35.

"வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள்

யானையால் யானையாத் தற்று." [678]

அந்தக் காட்டை ஊடுருவி அவன் பார்வை சென்றது.

ஒவ்வொரு மரமும், செடியும், கொடியும், பறவையும், மிருகமும் அவனுக்குப் புலப்பட்டது.

இதுவரை தன் வாழ்வில் குறுக்கிட்ட அத்தனை மனிதர்களும்..... செல்லி, குறிசொன்ன கிழவி, தங்கமாலை அணிந்த பெரியவர், வழிப்பறி செய்த இளைஞன், அண்ணாச்சி, ராபர்ட், காத்தான், பொன்னி, முத்துராசா, மாயன் பூசாரி, இன்னும் எல்லாருமே கண்ணில் தெரிந்தார்கள்.

'ரெண்டு நாளா என்னையே தானே பாத்துகிட்டு இருக்கே! பத்தலியா? இன்னும் என்ன அப்படி ஒரு பார்வை!' காடு பேசியது அவனுக்குக் கேட்டுத் திடுக்கிட்டான்.

'உன்னைத் தாண்டித்தான் நான் விரும்பற அன்பு எனக்காக காத்துகிட்டு இருக்குது. அவளைக் கூட என்னால பார்க்க முடியுது இப்ப! அவகிட்ட நான் போகணும்னா, உன்னோட உதவி எனக்குத் தேவை. இப்ப நான் ஒரு காத்தா மாறி அவகிட்ட போகணும்' கந்தன் தன்னையுமறியாது காட்டுடன் பேசினான்.

'அன்பா? அப்படீன்னா என்ன?' காடு கேட்டது.

இங்க இருக்கற எல்லா ஜீவராசிகிட்டயும் நீ காட்டறதுக்குப் பேருதான் அன்பு. உன்னோட ஒவ்வொரு மூலை முடுக்கும் அதுங்களுக்கு தெரிய வைக்கறே. அததுக்கு வேளா வேளைக்கு சாப்பாட்டுக்கு வழி பண்ணறே. இங்கே சண்டை கிடையாது. எல்லாருக்கும் சமமா உன்னோட அன்பைப் பங்கு போட்டுக் கொடுக்கறே. எலிக்கு கிழங்கு, பாம்புக்கு எலி, புலிக்கு மான், .... இப்படி ஒவ்வொண்ணுக்கும் ஏதாவது ஒண்ணு ஏற்பாடு பண்ணியிருக்கே. எல்லாரும் அதை ஒத்துகிட்டு, தன்னைக் காப்பாத்திக்கப் பாத்துக்குது. அடுத்தவங்க விஷயத்துல தலையிடறதில்லை.'

'அதுக்குப் பேருதான் அன்பா?' என்றது காடு.

'ஆமாம், தன்னைக் கொடுத்து அடுத்தவங்களை வளக்கறதுக்குப் பேருதான் அன்பு. இங்க அதான் நடக்குது. மரத்தால மிருகம், மிருகத்தால மனுஷன், மண்ணிலேருந்து உலோகம், ஏன்.....தங்கம் கூட! எதுவும் தனக்குன்னு வைச்சுக்காம கொடுக்கறதுக்குப் பேருதான் அன்பு.'

'நீ சொல்றது எதுவும் எனக்குப் புரியலை, போ!'

'எதுவும் புரியலேன்னாலும், எனக்காக ஒரு பொண்ணு காத்துகிட்டு இருக்குது. அதுகிட்ட போறதுக்கு நான் ஒரு காத்தா மறணும். அதுக்கு நீதான் உதவி பண்ணனும்! இது மட்டும் உனக்குப் புரிஞ்சா போதும். உன் உதவி எனக்குக் கிடைக்கும்! ' என்றான் கந்தன்.

காடு சிறிது நேரம் ஒண்ணும் சொல்லாமல் யோசித்தது.

'வேணும்னா இங்க இருக்கற மரங்களை அசையச் சொல்லி காத்தை வரச் சொல்றேன். நீ அதுகிட்டயே கேட்டுக்க. எனக்கு வேற ஒண்ணும் தெரியாது' என்ற காடு, மரங்களை அசையச் செய்தது. ஒரு சிறிய தென்றல் வீசத் தொடங்கியது.

தூரத்திலிருந்து இதைப் பார்த்துக் கொண்டிருந்த சித்தர் மெதுவாகச் சிரித்தார்.
--------
காற்று மெதுவாக வந்து அவனைத் தொட்டது! அவன் முகத்தை வருடியது.

காற்று ஒன்றுதான் எங்கும் இருக்கும் ஒன்று. அதனால், காற்றுக்கு எல்லாமே தெரியும் என்பதால், காட்டோடு இவன் பேசியதும் காற்றுக்கு தெரிந்துதான் இருந்தது.

எங்கு பிறந்தோம், இறப்போம் என்ற ஒன்றும் இல்லாத காற்று, எல்லாமுமே அறியும்!

'நீதான் எனக்கு உதவி செய்யணும்' என்றான் கந்தன்.

'இப்படி எங்களோடெல்லாம் பேச எப்படி உனக்குத் தெரிஞ்சுது?' என்றது காற்று.

'என் மனசு!'

'நீயும் நானும் வேற வேற! நீயெல்லாம் காத்தா மாறுவதெல்லாம் ஆவற கதையில்லை!'

'அதெல்லம் பொய்யி. எனக்கு ஒரு சித்தர் சொல்லிக் கொடுத்திருக்காரு.
எனக்குள்ளேயே இந்த பஞ்சபூதங்களும் இருக்கு. அதனால உண்டான எல்லாவிதப் பொருள்களும் ஏதோ ஒரு விதத்துல.... அது கடலோ, மலையோ, இல்லை காத்தோ..... எதுன்னாலும் சரி, என்கிட்டயும் இருக்கு. எல்லாமே ஒரே ஒரு பரம்பொருளாலத்தான் படைக்கப் பட்டிருக்கு. அதனால, நம்ம எல்லாருக்குள்ளேயும் ஒரே ஆத்மாதான் இருக்கு. இப்ப எனக்கும் உன்னைப் போலவே ஆகனும்னு ஆசையா இருக்கு.எல்லா இடத்துக்கும் போகணும், அந்த வேகத்தால என்னோட புதையலை மறைஞ்சிருக்கற இடத்தைக் கண்டுபிடிக்கணும். என்னை விரும்பற பொண்ணுகிட்ட போகணும். அது
முடியும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு!'
என்று ஒரு புதுவிதத் தைரியத்துடன் சொன்னான் கந்தன்.

'அவர் சொன்னதை நானும் கேட்டுகிட்டுத்தான் இருந்தேன். அவர் இன்னொண்ணும் சொன்னாரே! எல்லாத்துக்கும் ஒரு விதி இருக்கு அதை மீற முடியாதுன்னு! அதைக் கேக்கலியா நீ? நீ காத்தா மாறறது முடியாத காரியம். ' எனச் சொல்லிச் சிரித்தது காற்று.

'ஒரு கொஞ்ச நேரத்துக்காவது நான் காத்தோட காத்தா இருக்கறது எப்படின்னு கத்துக் கொடு. மனுஷனும், காத்தும் சேர்ந்தா, என்னவெல்லாம் பண்ணலாம், பண்ணமுடியும்னு நான் உனக்கு சொல்றேன்' என அதன் ஆவலைத் தூண்டினான்.

காற்றுக்கும் ஆவல் அதிகமாகியது. 'தன்னால் ஒரு பெரிய காட்டையே வீசி சாய்க்க முடியும்; ஆழ்கடலில் ஒரு பெரிய கொந்தளிப்பை உண்டுபண்ணி, பெரிய பெரிய கப்பல்களையெல்லாம் கூட சின்னாபின்னமாக்க முடியும்; எங்கேயோ பாடற இசையை, இன்னொரு நாட்டுல கேக்கவைக்கமுடியும்; இன்னும் என்னென்னவோ செய்ய முடியும்! ஆனா, இவன் புதுசா என்னமோ சொல்றானே. ஆனா, அதுக்காக இவனைக் காத்தா மாத்துன்றானே. அது முடியாத காரியமாச்சே' என அவனை இரக்கத்துடன் பார்த்தது.




அது யோசிக்கத் தொடங்கிவிட்டது என்பதை அறிந்த கந்தன் இன்னும் கொஞ்சம் அதை அசைக்க எண்ணி, மேலும் பேசினான்!

'இதான்... இதான்! இதான் அன்புன்னு சொல்றது! இவனுக்கு எதுனாச்சும் செய்யணுமேன்னு நினைக்கறியே, அதான் அன்பு! ஒருத்தரை நேசிக்கறப்ப, எதுவுமே முடியாத காரியம் இல்லை! ஏன்னா, அப்போ அந்த உள்ளம் உருகுது. எல்லாமே உள்ளுக்குள்ளியே நடக்கத் தொடங்குது. அப்போ அதால எதையும் பண்ணமுடியும்னு ஒரு தீவிரம் வரும்.'அன்பின் வழியது உயிர்நிலை'ன்னு எங்க ஆளுகூட ஒருத்தர் பாடியிருக்காரு!' பேசிக்கொண்டே இருந்தவன் கொஞ்சம் அதிகமாப் பேசிட்டோமோ என நினைத்து, சட்டென,


' ஆனா எல்லாத்துக்கும் காத்தோட தயவு இருந்தாத்தான் நடக்கும்'
என முடித்தான்.

காற்றுக்கு திடீரெனக் கோபம் வந்தது. ஒரே ஊதாய் ஊதி இவனை அப்படியே ஒரு தூக்கு தூக்கிடலாமான்னு நினைத்தது! 'சே! அப்படி பண்ணினாக் கூட என்ன பிரயோஜனம்? அதுக்குப் பதிலா இவன் சொல்ற மாதிரி செஞ்சா என்ன? இப்ப, இவனை எப்படி காத்தா மாத்தறது, அன்புன்னா என்ன? இதெல்லாம் நமக்கு தெரியலியே' என எண்ணியது. கோபம் இன்னும் அதிகரித்தது.

'நான் சுத்தாத இடம் இல்லை இந்த உலகத்துல. எந்த மூலை முடுக்குக்குப் போனாலும், எல்லா இடத்துலியும், இந்தக் காதல், அன்பு, பாசம்னு பேசறாங்க! பேசிட்டு அப்படியே அண்ணாந்து வானத்தைப் பாக்கறாங்க! ஒருவேளை, வானத்தைக் கேட்டா அதுக்குத் தெரியுமோ என்னமோ!' என்று எண்ணியது!, 'சே! தனக்கு இது தெரியலியே; அதையும் இவனிடம் ஒப்புக் கொள்ளும்படியாப் போச்சே!' என்ற அவமானத்தில் மிகுந்த கோபத்துடன் கத்தியது!

காற்று பலமாக வீசியது அங்கு!

'அப்படீன்னா ஒண்ணு பண்ணு! நீ இப்ப ஒரு பெரிய காத்தா மாறி, வீச ஆரம்பி! அதுல கிளம்பற புழுதில, இந்த சூரியனோட வெளிச்சம் என் கண்ணை மறைக்காது! என்னாலியும் வானத்தை நல்லாப் பார்க்க முடியும்!' என்றான் கந்தன்!

'இது நல்ல யோசனையாய் இருக்கே' என்று மகிழ்ந்த காற்று தன் தீவிரத்தைக் கூட்டியது! வெகு வேகமாகத் தன் சக்தி அனைத்தையும் திரட்டிக் கொண்டு ஒரு சூறாவளியாய் மாறியது! 'ஹோ'வென்ற சத்தத்துடன்,
பேரிரைச்சலைக் கிளப்பி வீசத் தொடங்கியது!

தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த சித்தர் வாய் விட்டு சிரிக்கத் துவங்கினார்!

[தொடரும்]
************************************

"வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று." [678]




அடுத்த அத்தியாயம்

Read more...

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 36

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 36

முந்தைய பதிவு இங்கே!


34.

"உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது

தள்ளினும் தள்ளாமை நீர்த்து." [596]



ஒரு நாள் சென்றது.

ஒன்றுமே நடக்காதது போல், சித்தர் அங்கிருந்த ஆட்களுடன் கதையடித்துக் கொண்டிருந்தார்! கந்தனைக் காட்டி வேறு எதையோ சொல்லிச் சிரித்தார். அவர்களில் ஒருவன் ஒருசமயத்தில் கந்தனைப் பார்த்து கையெடுத்துக் கும்பிடக் கூட செய்தான்.

தியானம் செய்வது போல உட்கார்ந்திருந்த கந்தனுக்கு, ஆத்திரமும், அழுகையும் பொத்துக் கொண்டு வந்தன!

சற்று நேரம் பொறுத்து சித்தர் அவன் பக்கமாய் வந்த போது, ' ஒருநாள் ஆயிப்போச்சு! இன்னும் ஒருவழியும் தெரியலியே' என ஆதங்கத்துடன் பகிர்ந்தான்.

'நான் சொன்னது நினைவிருக்கில்ல?
கண்ணுக்கு எதுத்தாப்பல தெரியற இந்தப் பரந்த உலகம் கடவுளோட ஒரு அம்சம். ஒரு சித்தன் என்ன பண்ணறான்னா, இந்த அம்சத்தை, கண்ணுக்குத் தெரியாத தெய்வீக நிலையோட பார்த்து, அப்படியே ரெண்டையும் ஒரே தட்டுல கொண்டுவந்து அனுபவிக்க ஆரம்பிப்பான்!'

சொல்லியவாறே, தன் தோளில் வந்து உட்கார்ந்த கழுகைத் தடவிக் கொடுத்தார்.

'என்ன பண்ணிகிட்டு இருக்கீங்க. இங்க நான் உசிருக்குப் போராடிகிட்டு இருக்கேன். நீங்க ஒண்ணுமே நடக்காத மாரி, கழுகோட கொஞ்சிகிட்டு இருக்கீங்களே? இன்னும் ரெண்டு நாளுல நாம ரெண்டு பேரும் உசிரோட இருப்போமான்னே சந்தேகம்! அதைப் பத்தி யோசிங்க' என கோபமாகக் கத்தினான்.

'உஸ்ஸ்ஸ்ஸ்! மெல்லப் பேசு! அநேகமா நீதான் செத்துப் போவேன்னு நினைக்கறேன்' என்றார் விஷமமாகச் சிரித்தபடி!

'ஏன் அப்படி?' என பயம் கிளம்பி நெஞ்சை அடைக்கக் கேட்டான் கந்தன்.

'ஏன்னா,....எனக்கு எப்படி காற்றா மாறுவதுன்னு தெரியும்!' எனச் சொல்லியபடியே கழுகை எடுத்துப் பறக்க விட்டார் சித்தர்!
---------------

இரண்டாம் நாள்!


கந்தனின் பயம் அதிகரிக்கத் தொடங்கியது. அவன் மனசும் கூடச் சேர்ந்து கொண்டது அவனது பயத்தில்!

உட்கார்ந்திருக்கப் பிடிக்காமல், மெதுவாக எழுந்து நடந்தான்.

இரண்டு ஆட்கள் அவன் போவதைப் பார்த்து அவனைப் பின் தொடர ஆரம்பித்தனர்.

சித்தர் அவர்களை ஒரு பார்வைபார்த்து, அவன் எங்கியும் போகமாட்டான் என்பது போல சைகை செய்ய அவர்கள் சித்தரின் அருகில் அமர்ந்தனர்.

கால் போன போக்கில் என்னென்னவோ யோசித்தபடியே நடந்தான்.
ஒரு வழியும் புலப்படாமல், கந்தன் திரும்பி வந்தான்.


மொத்தக் காடும் அவன் பயத்தை எதிரொலிப்பது போல் அவனுக்குத் தோன்றியது.

சித்தர் கண்களை மூடி தியானத்தில் இருந்தார்.


காவலாளிகள் தொலைவில் இவன் வந்ததைக் கவனித்துவிட்டு, ஒருவிதத் திருப்தியுடன் வேறேதோ பேச ஆரம்பித்தார்கள்.

இவன் வந்ததும் கண்களைத் திறந்து, 'என்ன?' என்பது போல் பார்த்தார்.

'நீங்களும் ஒண்ணும் சொல்ல மாட்டேன்றீங்க! இந்தக் கடவுளும் என்னைக் கை விட்டுட்டாரே!' எனக் கலங்கிப் போய் கேட்டான்.

'கடவுள் எப்படி கைவிடுவாரு?' எனத் திருப்பிக் கேட்டார்.
'எனக்கு எப்படி தெரியும்? நீங்கதான் பெரிய சித்தராச்சே! நீங்களே சொல்லுங்க! கடவுள்னா யாரு?' என்றான்.

'எல்லாத்துலியும் இருக்கற வேறுபாடுகளைத் தெரிஞ்சுகிட்டும், ஒரு வேற்றுமையும் பார்க்காதவரே கடவுள்! பார்க்கப் போனா நீ கூட ஒரு கடவுள்தான்!'

'விளையாடாதீங்க! இப்ப தமாஷ் பண்ற நிலையில நான் இல்லை' என விரக்தியாகப் பேசினான் கந்தன்.

'நெசமாத்தான் சொல்றேன். இப்ப உன்னையே எடுத்துக்க. இது கையி, இது காலு, கண்ணு, மூக்கு காது, தலைன்னு உன் உடம்புல இருக்கற எல்லா வேறுபாடும் உனக்குத் தெரியும். ஆனா, அதுக்காக இதான் உசத்தி, காலை விட கண்ணுதான் உசத்தி, இது மட்டம்னு பிரிசுப் பாக்கறதில்ல நீ. அதது செய்ய வேண்டிய வேலகளும் உனக்குத் தெரியும்.எதெது என்னென்ன பண்ணும்னும் உனக்குத் தெரியும். அதுக்கு மட்டும்தான் அதைப் பயன்படுத்துவே!


எனக்கு மட்டும் செருப்பு, கையிக்கு மட்டும் தங்க கடிகாரமான்னு காலு நினைக்காது.

நான் எடுத்துத்தான் கொடுக்கறேன்; வாயிதான் தினம் சாப்பிடுதுன்னு கை பொறாமைப்படாது.

உள்ளுக்குள்ள இருக்கற ஒரு சக்தி மனசு மூலமா வெளிப்பட்டு, அது கண்ணு வழியா வெளிப்படும்போது, கண்ணு பாக்குது. அதே சக்தி காது வழியா வெளிப்படும் போது காது கேக்குது. இப்படித்தான் ஒவ்வொண்ணும்!

உள்ளே இருக்கற சக்திதான் இப்படி பல ரூபமா வெளிப்படுதுன்றதைப் புரிஞ்சுகிட்டு, அந்த சக்தி என்னான்னு பார்க்க ஆரம்பிக்கறப்ப உனக்குள்ல இருக்கற கடவுள் உனக்குத் தெரியவரும். அந்த தெய்வீக நிலையைப் புரிஞ்சுகிட்டியானா, அப்புறம் எல்லாமே சுளுவா வந்திரும். இதைப் பத்தி யோசிக்க ஆரம்பி!' எனச் சொல்லிவிட்டு,

'இன்னும் ஒரு நாளுதான் இருக்கு, கடவுளே!' என ஒரு குண்டையும் போட்டுவிட்டு மீண்டும் தியானத்தில் ஆழ்ந்தார் சித்தர்!

ஏதோ ஒரு நம்பிக்கை உள்ளத்தில் பிறக்க, கந்தனும் அவரருகில் அமர்ந்து கண்களை மூடிக் கொண்டான்.
---------------------

மூன்றாம் நாளும் விடிந்தது!

'என்ன உங்க சித்தர் தயாரா? போய் என்ன ஏதுன்னு பார்க்கலாமா?' எனத் தலைவன் வந்து கேட்டான்.

'ஓ! பார்த்துறலாமே' எனத் தெம்பாகச் சொல்லிய சித்தர், கந்தனைப் பார்த்தார்.

கந்தன் ஒன்றும் பேசாமல் எழுந்து நின்று அவர்களைப் பார்த்தான்.

மானசீகமாக சித்தரை வணங்கினான். சித்தர் அவனைப் பார்த்துச் சிரித்தார்.

ஏதோ ஒரு சக்தி தனக்குள் இருந்து இயக்குவதை உணர்ந்தான்.

'எல்லாரும் அப்படியே உட்காருங்க. கொஞ்ச நேரம் பிடிக்கும் இதுக்கு' என்றான்.

'எங்களுக்கு ஒரு அவசரமும் இல்லை. இந்தக் காடு எங்களுக்கும் பழக்கமானதுதான்' என அமர்த்தலாகச் சொல்லியபடியே, உட்கார்ந்தான் தலைவன்.

மற்றவர்களையும் உட்காரச் சொல்லி கை காட்டினான்.

கந்தன் சற்று தள்ளிச் சென்று, அந்த காட்டையே உற்று நோக்கினான். மிகவும் பழக்கப்பட்ட இடம் போல உணர்ந்தான். காட்டைத் தாண்டி அவன் பார்வை விரிந்தது!

[தொடரும்]
*******************************


"உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து." [596]


அடுத்த அத்தியாயம்

Read more...

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 35

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 35

முந்தைய பதிவு இங்கே!


33.
"விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின்." [648]

ஒரு அடர்ந்த காட்டுவழியாகச் சென்று கொண்டிருந்தனர்.ஏதோ அபாயம் வரப்போகுதுன்னு அவன் மனசு அலறியது.ஒருவித அச்சத்துடன், சித்தரைப் பார்த்தான் கந்தன்.

அவரோ அமைதியாக நடந்து கொண்டிருந்தார்.

சற்று தூரம் சென்றதும், யாரோ தங்களைக் கவனிப்பது போல உணர்ந்தான். ஒரு சில நொடிகளில் திபு திபுவென ஒரு கூட்டம் அவ்விருவரையும் சூழ்ந்தது.

ஒரு கேள்வியும் கேட்காமல், அவர்கள் கைகளும், கண்களும் கட்டப்பட்டன. கைத்துப்பாக்கி ஒன்று முதுகை அழுத்த இருவரும் நடத்திச் செல்லப்பட்டனர்.
கந்தனின் இதயம் படபடவென அடிக்கத் தொடங்கியது. 'நான் தான் சொன்னேன்ல!' எனக் குத்தியும் காட்டியது.

சிறிது நேரம் நடந்தபின், நிறுத்தப்பட்டார்கள்.

கண்கட்டு மட்டும் அவிழ்க்கப்பட்டது.

'யார் நீங்க? சி.ஐ.டி. தானே?' என அவர்களின் தலைவன் போல இருந்த ஒருவன் கேட்டான்.

'நாங்க கோவில், குளம்னு கால்நடையா சுத்தறவங்க' என்றார் சித்தர்.

'யாருகிட்ட காது குத்தறீங்க! நீங்க ரெண்டு பேரும் போலீஸ்காரங்களோட பேசினதை நாங்கதான் பார்த்தோமே' என மடக்கினான் தலைவன்.

'எனக்கு இந்த காடுங்கல்லாம் அத்துப்படி. இந்தப் பையனுக்கு வழி காட்டறதுக்காக கூட வந்தேன். வேற ஒண்ணும் எங்களுக்குத் தெரியாது' சித்தர் விட்டுக்கொடுக்காமல் பேசினார்.

'இந்தப் பையன் யாரு? உனக்கு எப்படி தெரியும் இவனை?'

'இவரு பாக்கறதுக்குத்தான் சின்னப்பையன் மாதிரி இருக்காரே தவிர, ரொம்பப் பெரிய மகான்! பெரிய சித்தரும் கூட!' என்று சித்தர் சொன்னதும்,


'ஆஹா! வசமா மாட்டி விடறாரே, சமயம் பார்த்து, தான் தப்பிச்சுக்கறதுக்காக' எனக் கந்தன் நடுங்கினான்.

'அது மட்டுமில்ல! பஞ்சபூதமும் இவர் சொன்னாக் கேக்கும். வேணுமின்னா சொல்லுங்க. நிரூபிச்சுக் காட்டச் சொல்றேன்!' என்று மேலும் அவர் சொன்னதும், கந்தனுக்கு சப்தநாடியும் ஒடுங்கியது.

'இந்தப் பக்கமா ஏன் வந்தீங்க?' என அவர் சொல்வதை நம்பாமல் தலைவன் குடைந்தான்.

'மனுஷங்க கஷ்டப்பட்டா இவருக்குப் பொறுக்காது. இந்தப் பக்கமா வந்துகிட்டு இருக்கறப்ப, இந்தமாதிரி, இங்கியும் சில ஆளுங்க ஒளிஞ்சு இருக்காங்களாம்னு தெரியாத்தனமா சொல்லிட்டேன். அவ்ளோதான்! அவங்களைப் பார்த்து அவங்களுக்கு எதுனாச்சும் உதவி பண்ணணுமேன்னு துடிச்சுப் போயிட்டாரு. நான் எவ்வளவோ சொல்லியும் கேக்காம சரசரன்னு உள்ளே புகுந்திட்டாரு. இதோ அவரு உங்களுக்காக கொடுக்கக் கொண்டுவந்த பணம்' எனச் சொல்லிக்கொண்டே, கந்தனின் தோளில் மாட்டியிருந்த பையை வாங்கி, அதிலிருந்த ரூபாய் நோட்டுகள் வைத்திருந்த ஒரு மஞ்சள் பையை எடுத்து தலைவனிடம் கொடுத்தார்.

'போச்சு! இருந்த பணமும் போச்சு! இனிமே நீ அதோகதிதான். நல்லா சிக்கவைச்சிட்டாரு உன்னை' என இதயம் ஓலமிட்டது!

மிகுந்த ஆவலுடன் அதை வாங்கி உடனே இடுப்பில் சொருகி பத்திரப்படுத்திக் கொண்டான். கைக் கட்டுகளை அவிழ்த்துவிடச் சொன்னான்.

'சித்தர்னா என்ன மாதிரி சித்தர்?' எனக் கேட்டான்.

'அதான் சொன்னேனே! இவருக்கு இந்த உலகத்துல என்ன நடக்குதுன்னு டக்கு டக்குன்னு தெரியும்.பஞ்ச பூதமும் இவர் சொல்றதைக் கேக்கும். இப்ப நினைச்சார்னாக் கூட ஒரு பெரிய சூறாவளியைக் கொண்டுவந்து இந்த இடத்தையே ஒண்ணுமில்லாமப் பண்ணிடுவாரு! '


இவர் அடுக்கிக் கொண்டே போக, 'இன்னிக்கு தீர்ந்தோம்!' என நடுங்கினாலும்
முகத்தில் ஒன்றையும் காட்டாமல், சாதாரணமாக வைத்திருந்தான் கந்தன்.


"சுத்தி நடக்கறதைக் கவனி!" தங்கமாலை அணிந்த பெரியவர் சொன்னது ஏனோ நினைவில் வந்தது!

சுற்றி இருந்த ஆட்கள் எல்லாரும் சித்தர் சொன்னதைக் கேட்டு பலமாகச் சிரித்தார்கள். அதே சமயம் அவர்களுக்குள்ளும் இது ஒருவேளை உண்மையாயிருக்குமோ என ஒரு அச்சம் பிடித்துக் கொண்டது.


ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.

'எங்கே செய்யச் சொல்லு பார்க்கலாம்?' என தலைவன் சவால் விட்டான்.

நேற்று பார்த்த கூட்டத்திலிருந்து தங்களைக் கவனித்த ஆள்தான் இவன் எனச் சட்டெனப் புரிந்தது கந்தனுக்கு.

' அதெல்லாம் நீங்க கேட்டதுமே வந்திராது! அவருக்கு அதுக்கு ஒரு மூணு நாளு தேவைப்படும். ஏன்னா, அவர் தன்னையே ஒரு பெரிய காத்தா மாத்திகிட்டு வருவாரு. அப்படி அவர் பண்ணலேன்னா, எங்களை என்ன வேணுமின்னாலும் பண்ணிக்கலாம்' என பதில் சவால் விடுத்தார் சித்தர்.

'சரி. அப்படியே வைச்சுக்கலாம். ஆனா, அதுவரைக்கும் எங்களைத் தாண்டி எங்கியும் போகக்கூடாது. தப்பிச்சுப் போக முயற்சி பண்ணினீங்கன்னா தீர்ந்தீங்க!' எனச் சொல்லி தன் ஆட்களுக்கு அவர்களுக்கு சாப்பிட ஏதாவது கொடுக்கும்படி உத்தரவிட்டான்.

'பயந்த மாதிரி காட்டிக்காதே. முகத்துல ஒரு சிரிப்பைக் கொண்டுவா! அவங்கள்லாம் பார்க்கறாங்க' என மெதுவாக அவன் காதுக்கு மட்டும் கேட்கும்படி சொன்னார் சித்தர்.

கந்தனால் ஒன்றும் பேச இயலவில்லை. சித்தரை பரிதாபமாகப் பார்த்துக் கொண்டே தனியே சென்று உட்கார்ந்தான்.


அவன் கண் முன்னே அவனது கனவுகள் எல்லாம் பொலபொலவென நொறுங்கிப் போவதை உணர்ந்தான். சற்று முன் வரை மகிழ்ச்சியாகச் சென்றுகொண்டிருந்த இந்தக் காடு இப்போது ஒரு மீளமுடியாத ஒரு விலங்காய் தன்னைப் பிணைப்பதாகத் தோன்றியது.

'இருந்த பணத்தையும் அவங்க கையில தூக்கிக் கொடுத்திட்டீங்க! இனிமே என் வாழ்க்கையில அவ்ளோ பணத்தை நான் எப்பப் பார்க்கப் போறேன்!' எனப் பொருமினான்.

'அதாவது நீ உசிரோட இருந்தேன்னான்னு சொல்லு!' எனக் கிண்டல் அடித்தார் சித்தர்.


'நாளைக்கு சாகப் போறேன்னும் போது பணம்த்தை வைச்சுகிட்டு என்ன லாபம்? பணமா ஒரு உசுரைக் காப்பாத்திரும்?' என அவர் சொன்னதும், இந்த நேரம் போய் தத்துவம் வேற பேசறாரே என ஒரு கோபம் வந்தது.

காவலாளி ஒருவன் சூடாக டீ கொண்டுவந்து கொடுத்தான். திகைத்துப் போய் உட்கார்ந்திருந்த கந்தன் கைகளில் கொஞ்சம் தேநீரை ஊற்றவும், கந்தன் திடுக்கிட்டு, சுயநினைவுக்கு வந்தான். சித்தர் அவனுக்குப் புரியாத ஒரு மொழியில் ஏதோ முணுமுணுத்தார்.

'பயத்துக்கு அடிமையாகாதே! பயந்துட்டீன்னா, உன்னால உன் மனசோட பேச முடியாமப் போயிடும் என்றார்.

'அதெல்லாம் சரிதான்! இப்ப நான் எப்படி மூணு நாளைக்குள்ள ஒரு காத்தா மாறப் போறேன்?' சற்று கிண்டலாகவும், கோபமாகவும், பயத்துடனும் கேட்டான்.

'ஏதேனும் ஒரு லட்சியத்தை அடைய தீவிரமா முயற்சி பண்றவன், எல்லாத்தையும் தெரிஞ்சுகிட்டாலும், தோத்துருவோமோன்னு பயந்திட்டான்னா, அப்புறம் அவனால எதுவுமே பண்ண முடியாது. அதை நீ நல்லா புரிஞ்சுக்கணும்.'

'இப்ப யாரு பயந்தாங்களாம்? எப்படிங்க காத்தா மாறப் போறேன்னுதான் கேக்கறேன்' என்றான் வீராப்பாக.

'நீதானே மாறப்போறே! அப்போ, நீதான் அதைக் கத்துக்கணும்! இப்ப உன் வாழ்க்கையே அதுலதான் இருக்கு!!' என அவனை மேலும் சீண்ட,


'என்னால முடியலேன்னா?' எனக் கந்தன் கேட்டான்.

'முடியலேன்னா, உன் லட்சியத்தை நீ அடையாமலியே செத்துப் போயிடுவே! தன் லட்சியம் என்னன்னே தெரியாம சாகற எத்த்னையோ கோடிப் பேருக்கு, நீ எவ்வளவோ மேலு! ஆனாலும், பயப்படாதே! செத்திருவோமேன்ற பயம், ரொம்பப் பேருக்கு வாழ்க்கைன்னா என்னன்னு புரிய வைக்கும். உக்காந்து தியானம் பண்ணு.'எனச் சொல்லிவிட்டு, சற்றுத் தள்ளிச் சென்று அமர்ந்தார் சித்தர்.

கண்களை மூடிக் கொண்டார். அவர் வாய் எதையோ முணுமுணுத்துக் கொண்டிருந்தது.

[தொடரும்]
*********************************


"விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின்." [648]

அடுத்த அத்தியாயம்

Read more...

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 34

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 34

முந்தைய பதிவு இங்கே!


32.

"ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா
மாற்றம் கொடுத்தற் பொருட்டு. " [725]



'நகராதீங்க! அப்படியே நில்லுங்க!' ஒருவன் கத்தினான்.

"நாங்க சாமி பாக்கறதுக்காக கால்நடையா போறவங்க! எங்களை ஏன் தடுக்கறீங்க" என்றான் கந்தன்.

'அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது! இந்தப் பக்கம யார் வந்தாலும் சோதனை பண்ணச் சொல்லி எங்களுக்கு உத்தரவு. தீவிரவாதிங்க எந்த வேஷத்துலியும் வரலாம்.'

வந்த போலீஸ்காரர்கள் அவர்களைச் சோதனை செய்தனர்!

'உன்கிட்ட ஏது இவ்ளோ பணம்? யாருக்குக் கொடுக்கறதுக்காக எடுத்துக்கிட்டு போறே?' கந்தன் பையைப் பரிசோதித்த போலீஸ் கேட்டது.

'நான் உழைச்சுச் சம்பாதிச்ச பணம் அது. சென்னையில செலவெல்லாம் அதிகமா ஆகும்னு சொன்னாங்களே' என அப்பாவியாகச் சொன்னான் கந்தன்.

'இதென்ன குப்பியில மருந்து? இதென்ன கல்லு?' சித்தரை மிரட்டலாகக் கேட்டார் அடுத்த போலீஸ்காரர்.

'ஓ அதுவா! அதுதான் மாயக்கல்லு! அதை வைச்சு எவ்வளவோ கிலோ தங்கம் பண்ணலாம். அந்த மருந்தைக் குடிச்சா ஒரு நோயும் அண்டாது!'

நாலு காவல்காரர்களும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு வாய் விட்டு சிரிக்கத் தொடங்கினர்! சித்தரும் கூடவே பெரிதாகச் சிரித்தார். அவரிடம் அவைகளைத் திருப்பிக் கொடுத்துவிட்டு, 'போங்க! இப்படி சொல்லிகிட்டு ரொம்பப்பேரு திரியறாங்க! நீங்களும் அது போல ஆளுங்கதானா! நாங்க என்னவோன்னு நினைச்சிட்டோம். உங்ககிட்டேயும் வேற சந்தேகப்படும்படியா ஒண்ணும் இல்லை. பத்திரமாப் போங்க! நீங்க போற வழியில நிறைய தீவிரவாதிங்க சுத்தறதாத் தகவல். ஜாக்கிரதை!' என எச்சரித்து அனுப்பினர்.

'என்னங்க! இப்படி அவங்க கிட்ட உண்மையைப் பட்டுன்னு போட்டு உடைச்சுட்டீங்க!' என சற்று கோபத்துடன் கேட்டான் கந்தன்.

'இந்த உலகவாழ்க்கையோட ஒரு அடிப்படை உண்மையை உனக்குப் புரிய வைக்கறதுக்காகத்தான்!' சித்தர் சிரித்துக் கொண்டே சொன்னார்!



'உன்கிட்ட ஒரு பெரிய ஐஸ்வர்யம் இருக்க்குன்னு வைச்சுக்க. அதைப் போயி அடுத்தவர்கிட்ட சொன்னியானா, உன்னை ஒரு பைத்தியமாத்தான் பார்ப்பாங்க! சுத்தமா நம்ப மாட்டாங்க!'


கந்தன் அவர் சொன்னதையே அசை போட்டுக் கொண்டு நடந்தான்.

இப்போதெல்லாம் அவன் மனசு ஒன்றுமே பேசுவதில்லை. அமைதியாக இருந்தது. எப்போதாவது பேசினாலும், அவனை உற்சாகப்படுத்திக் கொண்டே இருந்தது.
அவனிடம் இருக்கின்ற நல்ல குணங்களை எல்லாம் பட்டியல் போட்டுக் காண்பித்தது!


'ஆடுகளை எல்லாம் விற்றுவிட்டு எப்படி இப்போது ஒரு பெரிய லட்சியத்தைத் தேடிக்கொண்டு தைரியமாக இவ்வளவு தூரம் வந்திருக்கே! நிஜமாவே நீ ஒரு பெரிய ஆளுதான்!'னு அவனை சிலாகித்தது.

அது மட்டுமில்லாமல், எப்படி சில கெட்ட சமயங்களிலும் அவனுக்கு உதவியது எனவும் சொல்லியது!


ஒரு நாள் காலையில ஆடுங்களை மேய்ச்சுகிட்டு போறப்ப, வாந்தி எடுத்து அவன் மயக்கமா விழுந்தது தன்னாலதான் என ஒப்புக் கொண்டது.

'கொஞ்ச தூரம் தள்ளி ரெண்டு திருட்டுப்பயலுக உன்னை வெட்டிட்டு, உன் ஆடுங்களை அபேஸ் பண்ணக் காத்திருந்தாங்க. அதான் வழியில தெரிஞ்ச செடியிலேருந்து சில இலைகளை உன்னைத் திங்க வைச்சு அப்பிடி ஒரு வாந்தி!' எனச் சொல்லி 'ஹோ'வெனச் சிரித்தது.

கேட்கக் கேட்க கந்தனுக்கு ஆச்சரியம் மிகுந்தது.

'இப்படியெல்லாம் கூடச் செய்யுமா மனசு?' சித்தரிடம் கேட்டான்.

'எல்லாரோட மனசும் இப்படி செய்யும்னு சொல்ல முடியாது. ஆனா, சின்னப் புள்ளைங்க, வயசானவங்க, குடிகாரங்க இவங்களைப் பார்த்தா உனக்குப் புரியும்!


தவழ்ந்துகிட்டே கிடுகிடுன்னு ஒரு பள்ளத்துல விழற வரைக்கும் போயிரும் ஒரு குழந்தை! 'டக்'குன்னு நின்னு திரும்பிப் பார்த்து ஒரு சிரிப்பு சிரிக்கும்!


நல்லா குடிச்சிட்டு நிதானமே இல்லாம வண்டியை ஓட்டிகிட்டு வருவான்! எப்படியோ, வீட்டு வாசல் வரைக்கும் சரியா வந்து சேர்ந்திடுவான்!

'கண்ணு மங்கிப் போய், திண்ணையில உட்கார்ந்துகிட்டே, 'ஆரது? காமாட்சி பய கணேசனா போறது? சித்தே இங்கே வா!' என ஒரு பெரியவர் அழைத்து ஒரு உதவி கேட்கும்போது 'இவருக்கு எப்படி தெரிஞ்சுது?'ன்னு ஒரு வியப்பு வரும்!

இந்த மனசோட உதவியில்லாம இவங்களால அந்த சமயத்துல தப்பிச்சிருக்க முடியாது! கொஞ்சம் யோசிச்சியானா புரியும்!'

'அப்போ எனக்கு ஒரு ஆபத்தும் வராதுன்றீங்க!' என வினவினான்.

'மனசால ஒரு அளவுக்குத்தான் உதவ முடியும். அதை வைச்சு, அதைப் புரிஞ்சுகிட்டு, நிலைமையைச் சமாளிக்கறது அவங்க அவங்க சாமர்த்தியம்.'

'அதெல்லாம் இல்லை! என் மனசை வைச்சு நான் எல்லாத்தையும் சமாளிச்சிருவேன்! இதுவரைக்கும் அது என்னைக் கைவிட்டதில்லை!'

கந்தன் அலட்சியமாகச் சொன்னான்.

சித்தர் கோபமாக உறுமினார்!


' மனசைக் கேக்கத்தான் சொன்னேன். அப்படியே நம்பச் சொல்லலை. நீ இருக்கற இடத்தை எப்பவும் கவனத்துல வையி. இங்கே நடக்கறது ஒரு சண்டை. உனக்கு அதுல சம்பந்தம் இல்லாம இருக்கலாம். ஆனா, நீ இப்ப அந்த இடத்துல இருக்கே. அது நீயா விரும்பி, ஒரு புதையலைத் தேடி வந்ததால நடந்திருக்கு. அதைப் புரிஞ்சுக்கோ! உன்னோட இதயத்தின் மூலமா, இந்த உலக ஆத்மா இந்த சண்டையெல்லாம் வேணாமேன்னு கதறுவதைப் புரிஞ்சுக்கோ!'

சித்தர் சொன்னது உண்மையாயிற்று!

ஆயுதம், துப்பாக்கி தாங்கிய ஒரு கூட்டம் அவர்களைச் சூழ்ந்து கொண்டது.

'இதுக்கு மேல நீங்க போகமுடியாது! இந்த வழியில உங்களை யாரு வரச் சொன்னது?' என்றான் அவர்களில் ஒருவன், மிரட்டலாக.

'நாங்க போக வேண்டிய தூரம் ரொம்ப இல்லை. இன்னும் கொஞ்சம் தான். எங்களைப் போகவிடு!' எனச் சொல்லியபடியே சித்தர் அவனை தீர்க்கமாகப் பார்த்தார்.

சிறிது நேரம் நான்கு விழிகளும் இமைக்காமல் சந்தித்தன.

தலைவன் தன் பார்வையைத் தளர்த்தினான்.

'சரி, சரி! பத்திரமாப் போங்க' என வழி விட்டான்.

'நீங்க பார்த்த பார்வையை நானும் பார்த்தேன். என்ன ஒரு தீட்சண்யம்!' என அவரிடம் சொன்னான், சிறிது தூரம் சென்றதும்.

'ஒருத்தரோட கண்ணுதான் அவங்களோட உள்பலத்தைக் காட்டுது' என அமைதியாகச் சொன்னார் சித்தர்.

அவர் சொன்னது உண்மைதான் எனக் கந்தன் எண்ணினான். ஏனெனில், இவர்கள் இருவரின் பார்வைகள் சந்தித்த போது, அந்தக் கூட்டத்தில் இருந்த வேறொருவரின் பார்வையை கந்தன் பார்க்க நேரிட்டது. அந்த ஆளின் முகம் சட்டென நினைவுக்கு வரவில்லை. ஆனால், அவர் இவ்விருவரையும் கவனித்ததை இவன் பார்த்தான்.
************


'சித்து வேலைன்னா என்ன?' பேச்சை மாற்றி கந்தன் கேட்டதும் சித்தர் அவனைப் பார்த்தார்.

'உலத்துக்குன்னு இருக்கற ஒரு ஆத்மாவைப் புரிஞ்சுகிட்டு, அது மூலமா, உனக்குன்னு விதிச்சிருக்கற புதையலை நீ தேடிக் கண்டுபிடிக்கறதுதான் சித்து வேலை!'

'இப்படி மழுப்ப வேண்டாம்! நான் அதைக் கேக்கலை! இந்த தங்கம் செய்யறது எப்படின்னு.....' என இழுத்தான்.

சித்தர் சற்று நேரம் மௌனமாயிருந்தார்.

'இந்த உலகத்துல இருக்கற எல்லாமே ஒண்ணொண்ணா வளர்ந்ததுன்னு உனக்கு சொன்னேன் முன்னாடி. அதோட கடைசி நிலைதான் இந்த தங்கம்ன்ற ஒண்ணு.
எப்படி ஏதுன்னு என்னைக் கேட்காதே. அப்படித்தான் பெரியவங்க சொல்லியிருக்காங்க. அதை நானும் நம்பறேன்.


ஆனா, இதை தவறா புரிஞ்சுகிட்ட மனுஷங்க, இதுதான் ஒவ்வொருத்தனும் வைச்சிருக்க வேண்டிய ஒண்ணுன்னு நம்பிகிட்டு, இதுக்காகவே சண்டை போடறாங்க.
இந்த உலகம் பல விஷயங்களை நமக்கு சொல்லிகிட்டே இருக்கு.


எப்படி, ஒரு நாய் குலைக்கறது யாரோ ஆளுங்க வர்றாங்கன்னு காட்டுதோ அது மாதிரி. அது குலைக்கற வரைக்கும் நமக்கு அது தெரியறதில்லை. ஆனா, குலைச்சதும் உடனே, 'ஆரது?'ன்னு ஒரு குரல் விடறோம். அப்படித்தான் இதுவும்.
இதைப் புரிஞ்சுக்காம, பெரிய பெரிய தவம் பண்ணினவங்க கூட இந்த தங்கத்தோட மோகத்தால அதல பாதாளத்துல விழுந்திருக்காங்க. அதை நானும் பார்த்திருக்கேன்.
சில பேரு புரியாம, ....... சில ஆளுங்க புரிஞ்சுகிட்ட பின்னாலும்!
சரி, அதை விடு! நீ வந்த வேலையைப் பாரு. இன்னும் அனேகமா ஒரு நாளுதான்!' என்றார் சித்தர்.

தன்னையுமறியாமல், ஏதோ ஒரு பரவசத்துடன், அவரை கை கூப்பி வணங்கினான் கந்தன்!



[தொடரும்.]
****************************

"ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா
மாற்றம் கொடுத்தற் பொருட்டு. " [725]


அடுத்த அத்தியாயம்

Read more...

Thursday, November 08, 2007

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 33

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 33

முந்தைய பதிவு இங்கே!


31.
"நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்

எவ்வநோய் தீர்க்கும் மருந்து. [1241]


அடுத்த ஒரு நாள் நடையிலேயே கழிந்தது.

சித்தர் கொஞ்சம் கவனமாகவே சென்று கொண்டிருந்தார்.

துப்பாக்கி சூடு,இன்னமும் தொடர்ந்து கொண்டிருந்த சத்தம் அவ்வப்போது கேட்டது.

கந்தன் தன் இதயத்தைக் கவனிக்கத் தொடங்கினான். அதன் உணர்ச்சிகள் அவனைப் பயமுறுத்தியது. சில சமயங்களில், இடைவிடாமல் தன் கதைகளைச் சொல்லியது.
சில நேரம் மௌனமாய் இருந்தது. பொன்னியின் நினைவைச் சொல்லி அழுதது. அண்ணாச்சி பற்றி கவலைப் பட்டது. புதையலைப் பற்றிச் சொல்லும் போது மகிழ்ச்சியால் துள்ளியது.

'எதுக்கு நாம நம்ம இதயத்தைக் கவனிக்கனும்னு சொல்றீங்க?' என்றான் கந்தன்.

'அது எங்கே இருக்கோ, அங்கேதான் உன் புதையலும் இருக்கு! அதனாலதான்!'

'அப்படித் தோணலியே. அது ரொம்பப் படுத்துதே! அதோட கனவு, அதோட கோபம், உணர்ச்சிகள் இதெல்லாம் என்னால புரிஞ்சுக்கவே முடியலை. இதைப் பண்ணு, அதைப் பண்ணுன்னு மாத்தி மாத்தி சொல்லிகிட்டே இருக்கு. ஒரு பொண்ணை நினைச்சு அழுவுது. தூங்க விடமாட்டேங்குது. என்ன பண்றதுன்னே தெரியலை.'

'ஓ! அப்படியா! ரொம்ப நல்லதாப் போச்சு! அப்படீன்னா அது இன்னும் உசிரோடத்தான் இருக்குன்னு அர்த்தம்! என்ன சொல்லுது அதுன்னு கவனி!'

மேலும் நடக்கத் தொடங்கினார்கள் இருவரும். வழியில் சந்தேகத்துகிடமான சிலர் நடமாட்டம் தெரிந்தது.கந்தனின் இதயம் படக் படக்கென அடிக்கத் தொடங்கியது.
ஒருவித பயம் பிறந்தது.


'வெளியில இன்னும் கலவரம் ஓயலை போலிருக்கு. இந்த நேரத்துல உனக்கு இப்படி ஒரு புதையல் ஆசை தேவைதானா? இதுமாதிரி கிளம்பினவங்கள்ல ரொம்பப் பேரு ஏமாந்துதான் போயிருக்காங்க.உனக்கு அது கிடைக்கும்னு எனக்குத் தோணலை. வழியிலியே செத்து கித்து தொலைக்கப்போறே!' இப்படியெல்லாம் அவன் இதயம் அவனுடன் புலம்பியது!

'என் மனசு ரொம்ப ரொம்ப மோசம்! என்னைப் போகவிட மாட்டேங்குது' சித்தரிடம் சென்று இவன் புலம்பினான்!

'அது சொல்றதும் நியாயமாத்தான் இருக்கு! உன்னோட லட்சியத்தை தேடிகிட்டுப் போறப்ப, இருக்கறதையெல்லாத்தியுமே இழந்திருவோமோன்னு அதுக்கு பயம் வந்திருக்கலாம். அதுல ஒண்ணும் தப்பில்லியே.'

'அப்படீன்னா, அதோட பேச்சை நான் ஏன் கேக்கணும்?' என்றான் கந்தன்.

'நீ கேக்கலைன்னா, அதோட கூச்சல் இன்னும் அதிகமாகும். நீ கேக்கலைன்றதைப் புரிஞ்சுகிட்டு, உன்னைக் கேக்க வைக்கறதுக்காக இன்னும் அதிகமா பயமுறுத்தும்.'

'அப்ப, கேட்டுத்தான் ஆவணுமா? எனக்கு எதிராப் பேசி எனக்கு துரோகம் பண்ணினாக் கூடவா? என் கனவையெல்லாம் கலைச்சாக் கூடவா?' எனப் பரிதாபமாகக் கேட்டான்.

'துரோகம்ன்றது ரொம்பப் பெரிய வார்த்தை. அதெல்லாம் எதிர்பார்க்காத இடத்திலேர்ந்து, எதிர்பாராம வர்றது. உன் மனசை மட்டும் சரியாப் புரிஞ்சுகிட்டியானா, அது உனக்கு ஒருக்காலும் துரோகமே பண்ணாது.அதுக்கு என்ன பிடிக்கும், அதோட ஆசையெல்லாம் என்னன்னு உனக்கும் புரிஞ்சிடும். அதை எப்படி சமாளிக்கறதுன்னும் விளங்கிடும். உன் மனசுகிட்டேர்ந்து நீ எப்பவும் தப்பிக்கவே முடியாது. அதனால, பேசாம அது சொல்றதைக் கவனமாக் கேளு. அதிக பட்சமா, அது உன்னைத் தாக்காமலியாவது இருக்கும்' எனச் சொல்லி கடகடவெனச் சிரித்தார்.

சித்தரின் சொற்களால் தைரியமடைந்த கந்தன், மனசோட பேச்சைக் கேக்க ஆரம்பித்தான். தனக்கு ஒண்ணும் ஆயிடக் கூடாதேன்னுதான் அது இத்தனை டான்ஸ் ஆடுது என்பது தெளிவாகப் புரிந்தது.கொஞ்சம் கொஞ்சமாக அவன் பயம் தெளிந்தது. எப்போது வேணும்னாலும் சுதந்திரமா அதோட அவனால் பேச முடிந்தது.

'நான் உன்னை எப்பப் பார்த்தாலும் குறை சொல்லிகிட்டே இருக்கேன்னு நீ நினைக்காதே. இது கிடைக்குமோ கிடைக்காதோன்னு அந்தப் புதையலைப் பத்தி நீ கவலைப் படறப்ப, உன்னால அதிகமா பாதிக்கப்படறது நான் தான்!உன்னோட வலி, வேதனை, ஏமாற்றம் இதெல்லாம் நேரா வந்து என்னைத்தான் அடிக்குது. அதுக்குத்தான், இது மாதிரில்லாம் அப்பப்ப சொல்லி, உன்னை எது நடந்தாலும் தயாரா இருக்கறதுக்கு முயற்சி பண்றேன்.' என்றது அவன் மனசு!

சித்தரிடம் இது பற்றி சொல்லி என்ன செய்யலாம் எனக் கேட்டான்.

'வருத்தப் படப் போறோமோன்னு பயப்படறதை விட , வலியை அனுபவிக்கறது எவ்வளவோ மேலுன்னு அதுகிட்ட எடுத்துச் சொல்லு.ஒரு லட்சியத்தை தேடிகிட்டுப் போறப்ப ஒவ்வொரு நொடியும் நாம கடவுள் பக்கத்துல இருக்கோம் என்பதைப் புரிஞ்சுக்கணும். உண்மையான இறை அனுபவம் எதுன்னா, இது போல ஒரு கனவைத் தேடிகிட்டு போகும்போது கிடைக்கற சந்தோஷமும், திருப்தியும் தான்.ஒரு குறிக்கோளும் இல்லாம ஊருல ஆடு மேய்ச்சுகிட்டு இருந்த உனக்கு இதுவரைக்கும் நடந்ததெல்லாத்தையும் நினைச்சுப் பாரு. நான் சொல்றது புரியும். அதையே உன் மனசுகிட்டயும் சொல்லு'

மனசு இப்ப கொஞ்சம் லேசாகியது. ஒன்றும் பேசாமல் கொஞ்சம் அமைதியாகவும் ஆனது.

அன்றிரவு படுத்திருக்கும் போது அவனுடன் பேசியது.
'மகிழ்ச்சியான மனசுக்குள்ள கடவுள் இருக்காரு. மகிழ்ச்சின்னா என்ன? பணம் காசு இல்லை அது. படைப்பின் அழகை பார்த்து, ரசிச்சு புரிஞ்சுக்கறப்ப வர்ற உணர்வுதான் அது. ஒரு சின்ன மண் துகளைப் பார்த்துக் கூட அது வரலாம். எத்தனை முயற்சிகளுக்கு அப்புறமா அப்படி ஒரு துகள் வந்திருக்குன்னு சிந்திக்கறப்ப ஒரு ஆனந்தம் வருதே, அதான் மகிழ்ச்சி.'

சித்தர் சொன்னதையே இதுவும் சொல்லுதே என வியந்தான் கந்தன்.

'எங்களுக்கும் ஆசை, கனவெல்லாம் இருக்கு. ஆனா, மனுஷங்க ஒரு காலகட்டத்துல எல்லாத்தையும் விட்டுட்டு சராசரி ஆளா இருக்கறதே மேலுன்னு போயிடறாங்க.
சின்ன வயசுல நாங்க ரொம்பவே இந்த கனவெல்லாம் பத்தி, ரொம்பவே விவரமா பேசியிருக்கோம்.


வயசாக, வயசாக, விதியோட போக்குலியே நீங்க போறப்ப, வேற வழியில்லாம நாங்க அதையெல்லாம் ரொம்ப பேசாம இருந்திடறோம். அதுக்காக பேசாமலியே இருக்கறதும் இல்லை. அப்பப்ப, சொல்லிகிட்டுதான் இருப்போம். ஆனா, சத்தமா சொல்றதில்லை!

மறந்திடாதே! பாதிக்கப் படறது நாங்கதான்! நீ உன் கனவை விடாமத் தொடரு. தப்பு வழியில நீ போனா, நான் ஒரு சவுண்டு கொடுக்கறேன்'
எனச் சொல்லிச் சிரித்தது!

'இப்ப நான் என்ன பண்ணனும்?' சித்தருடன் பேச்சுக் கொடுத்தான் கந்தன்.

'புதையலைத் தேடிகிட்டு மஹாபலிபுரம் போகணும்! வழியில தெரியற சகுனங்களைக் கவனமாப் பாரு. அப்பப்ப உன் மனசு சொல்றதையும் கேளு. அது உன்னை சரியான வழியில கொண்டு போகும்'.

'அவ்ளோதானா?'

'இல்லை! அவ்ளோ சுலபமா வேலை முடியாது. உன்னோட புதையல் உனக்குக் கிடைக்கறதுக்கு முந்தி, இந்த உலக ஆத்மா நீ அதுக்குத் தகுதியானவன்தானான்னு பரிட்சை பண்ணும். கத்துகிட்டதெல்லாம் சரியா செஞ்சியான்னு சோதனை கொடுக்கும். அதனால அது ரொம்ப கெட்ட ஆத்மான்னு நினைச்சிராதே. கனவு மெய்ப்படறது மட்டுமில்ல;
அதுக்கான வழிகளையும் ஒழுங்க செஞ்சியான்னு பார்க்கறதுக்காகத்தான் இதையெல்லாம் செய்யுது. அப்பத்தான், இதோட கடுமை தங்க முடியாம, ரொம்பப் பேரு 'வேணாண்டா இதெல்லாம்'னு விட்டுட்டுப் போயிர்றாங்க! தண்ணி கிடைக்கறதுக்கு இன்னும் ஒரு அடி தோண்டினாப் போதும்ன்றப்ப கிணறு தோண்டறதை விட்டுட்டுப் போற
மாதிரி! கவனமாக் கேளு. விடியறதுக்கு முந்திதான் இருட்டு அதிகமா இருக்கும்!'

சொல்லிவிட்டு முன்னே நடந்தார் சித்தர்.

சிறிது தூரம் தான் சென்றிருப்பார்கள்.

திடீரென ஒரு நான்கு பேர் இவர்களைச் சூழ்ந்து கொண்டார்கள். கையில் துப்பாக்கி வைத்திருந்தார்கள்!
*************************************



அடுத்த அத்தியாயம்

Read more...

Sunday, November 04, 2007

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 32

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 32

முந்தைய பதிவு இங்கே!


30.
" தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய
மன்னுயி ரெல்லாம் தொழும்." [268]

மலைக்காட்டுக்குள் வேகமாக நடந்தார் சித்தர். அவர் பின்னால், கந்தனும்.... அவர் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல்!


கிடு கிடுவென மலைப்பாதையில் ஏறிச் சென்று கொண்டிருந்த சித்தர், இவன் பின் தங்குவதைக் கவனித்து, ஆங்காங்கே நின்று, அவனுக்காக காத்திருந்தார். அவ்வப்போது சில தழைகளைப் பறித்து அவைகளை மென்று தின்னச் சொன்னார். களைப்பு சட்டென மறைந்தது கந்தனுக்கு. இந்தக் காட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கும் தெரிந்தவர் போலிருக்கே என வியந்தான்.

உச்சிவெய்யில் தலையைச் சுட்ட போது, ஒரு மரத்தடியில் உட்கார்ந்து இருவரும் இளைப்பாறினர்.

'இனிமே உன் கவனம் முழுக்க வரப்போறதைப் பத்தி மட்டுமே இருக்கணும். விட்டுட்டு வந்ததையே நினச்சுகிட்டு இருக்கக் கூடாது' என்றார்.

அவர் எதைக் குறிப்பிடுகிறார் எனக் கந்தனுக்குப் புரிந்தது.

ஒருவித ஆயாசத்துடன், 'எப்படா வீடு திரும்புவோம்னு தானே கிளம்பறவங்களுக்கெல்லாம் இருக்கும். இது சகஜம்தானே. இதுல என்ன தப்பு?' எனப் பதிலுக்கு வினவினான்.

'நீ விட்டுட்டு வந்தது ஒரு உண்மையான பொருள்னா, அது கெட்டுப் போகாது. எப்ப நீ திரும்பினாலும் அது உன்கிட்ட வந்திரும். ஆனாக்க, நீ பாத்தது வெறும் ஒரு மின்னல் அல்லது எரிநட்சத்திரம்னா, திரும்பறப்ப அது அங்கே இருக்காது. உலகத்தோட ஆத்மா இதையெல்லாம் சரியாக் கவனிச்சுகிட்டே இருக்கும்.'

கந்தனுக்கு லேசாக மனது வலித்தது. பொன்னி இப்ப ஒரு உண்மையா இல்லை மின்னலா என! '


இவர் பெரிய சித்தரா இருக்கலாம். ஆனா, இவருக்கு காதலைப் பத்தி என்ன தெரியும்?' என மனதுக்குள் எண்ணிக்கொண்டான். சிரிப்பு வந்தது.

அதைப் பார்த்த சித்தரும் சிரித்துக் கொண்டே, ' இவனுக்கு என்ன தெரியும்னுதானே நினைக்கறே? எல்லாத்துக்கும் விடை சீக்கிரமே உனக்குத் தெரியும். சரி, கிளம்பு போகலாம். இருட்டறதுக்குள்ள காட்டைத் தாண்டிறணும்' என நடையைக் கட்டினார்.

ஏதோ புரிந்தது போல் இருந்தது கந்தனுக்கு. எழுந்து அவரைப் பின் தொடர்ந்தான்.

மலை அடிவாரத்துக்கு வந்ததும், ஊருக்குள் செல்லாமல், ஒரு குறுக்குப் பாதையில் நடக்கத் தொடங்கினார்கள்.

'சண்டை இன்னும் ஓயலியாம். நாம ஊருக்குள்ள போகவேணாம்' என ஒரு காரணம் சொன்னார்.

'இந்த சண்டையெல்லாம் எதுக்காக நடக்குது?' என்க் கேட்டான் கந்தன்.

'இதுக்கு பதில் சொல்வது ரொம்ப சுலபம். புரிந்து கொள்வது கடினம். மனுஷன் தான் யாருன்றதை உணராம, மதத்துக்கு அடிமையாகி, தன்னை மறந்து போனதால வருவது இதெல்லாம்!' என்றார் சித்தர்.

'புரியலியே! மதம்னு எதைச் சொல்றீங்க?' என்றான் கந்தன்.

'ஒவ்வொரு மனுஷனுக்குள்ளயும் நாலு பேர் ஒளிஞ்சிருக்காங்க! இப்ப, உன்னையே எடுத்துக்குவோம்! ஒண்ணு நாந்தான் இதுன்னு நினைக்கற கந்தன். ரெண்டாவது, நீ இன்னாருன்னு மத்தவங்க நினைக்கற கந்தன்; மூணாவது நீ இதாண்டான்னு உன்னை ஆட்டி வைக்கிற கந்தன்; நாலாவது, இதையெல்லாத்தையும் சத்தம் போடாம பார்த்துக்கிட்டிருக்கற கந்தன்!


தான் இன்னாருன்னு தெரிஞ்சவங்க ரொம்ப ரொம்ப சாதாரணமா தங்களோட வாழ்க்கையை வாழ்ந்திட்டுப் போயிருவாங்க!
மத்தவங்க தான் இன்னாருன்னு நினைக்கற நினைப்புக்காக வாழறவங்க, கூத்தாடி மாதிரி, மத்தவங்க என்ன கேக்கறாங்களோ, அதை ஆடிட்டுப் போயிருவாங்க!
இந்த மூணாவது ஆளுங்கதான் கொஞ்சம் மோசம்! இவங்களை நம்பித்தான் இந்த உலகமே இயங்கறதா நினைச்சுப்பாங்க! அதுக்காக என்ன செய்யவும் தயங்க மாட்டாங்க! முதலில் சொன்ன மத்த ரெண்டு ஆளுங்களையும் இவங்களால வளைச்சுற முடியும்... பயமுறுத்தியோ, இல்லை, மயக்கியோ!
இது மாதிரி ஆளுங்களாலதான் இது மாதிரி சண்டையெல்லாம் வருது.
நான் சொன்ன நாலாவது ஆளுங்க, ரொம்பவே கொஞ்சம் தான். அவங்களுக்கு இதெல்லாமே ஒரு மாயைன்னு புரிஞ்சதால, இதைப் பத்தி கண்டுக்க மாட்டாங்க! இது தன்னைப் பாதிக்கவும் விடமாட்டாங்க!
சரி, சரி! இன்னிக்கு இது போதும்! இப்போ கொஞ்சம் ஓய்வு எடுக்கலாம்!'
என்றார் சித்தர்.

ஒரு பரந்த மைதானத்தில் ஓங்கி உயரமாய் வளர்ந்திருந்த ஒரு புளியமரத்தின் அடியில் தன் துண்டை விரித்து, அதில் உட்கார்ந்தார். கழுகு அவர் தோளிலிருந்து பறந்து மரத்தில் ஒரு கிளையில் போய் அமர்ந்தது.

'இனிமே காலைலதான். நல்லாத் தூங்கு.' என அதனுடன் பேசினார்.

பையில் இருந்து சில பழங்களையும், வேகவைத்த சில கிழங்குகளையும் எடுத்து கந்தனைச் சாப்பிடச் சொன்னார்.

'நீங்க சாப்பிடலியே' என அவரிடம் நீட்டினான்.

'நான் என்னைப் பாத்துக்கறேன். நீ உன் வேலையைப் பாரு' எனச் சொல்லிவிட்டு, கண்களை மூடியவண்ணம், நிமிர்ந்து உட்கார்ந்தார். அவர் வாய் எதையோ முணுமுணுத்தது. நடந்த களைப்பில் கந்தன் அப்படியே உறங்கிப் போனான்.
*********

இப்படியே 5 நாட்கள் கழிந்தன. வழியில் எங்கும் அதிகமாகத் தங்கவில்லை. நடை, சற்று ஓய்வு, வழியில் கிடைத்ததை வாங்கி கந்தனுக்கு உணவு. அவர் மட்டும் ஏதோ சில பச்சிலைகளை மென்று வந்தார். அவ்வப்போது கந்தனுக்கும் கிடைத்தது.

'கிட்டத்தட்ட நீ போகவேண்டிய இடத்துகிட்ட வந்தாச்சு. எதுக்கும் கலங்காம, நீ இவ்ளோ தூரம் வந்ததுக்கு உன்னைப் பாராட்டணும். துடியான புள்ளைதான் நீ!' என் அவனைச் சிலாகித்தார்.

'எதுனாச்சும் விஷயம் சொல்லுவீங்க. கத்துக்கலாம்னு நினைச்சே. ஆன, வழி பூரா நீங்க ஒண்ணுமே பேசலை.தங்கம் எப்படி பண்றதுன்னு ஒருத்தர் எனக்கு சில புஸ்தகத்திலேர்ந்து படிச்சுக் காட்டினாரு. ஒண்ணும் புரியலை. நீங்க எதாவது விளக்கம் கொடுப்பீங்கன்னு எதிர்பார்த்தேன்.' என்றான் கந்தன்.

'அதுக்காக நீ என்னோட வரலை. உன் லட்சியம் வேற. கத்துக்கறதுக்கு ஒரே ஒரு வழிதான் இருக்கு. செயல்! செஞ்சு பாத்துதான் எதையுமே கத்துக்க முடியும்.
உனக்கு என்ன தெரியணுமோ அதெல்லாம் இந்த அஞ்சு நாள்ல நீ கத்துகிட்டாச்சு! இன்னும் ஒண்ணே ஒண்ணுதான் மீதி இருக்கு.'

சொல்லிவிட்டு, வானத்தை அண்ணாந்து பார்த்தார் சித்தர்.

'என்ன கத்துகிட்டோம்? ஒண்ணும் புரியலியே! இதுபற்றி மேலும் எதாவது சொல்லுவார்' எனக் கந்தன் அவரை ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தான். அனால், சித்தர் தன் பார்வையை வானத்தை விட்டு அகற்றவே இல்லை.

சரி, வேறு பேசலாம் என எண்ணிய கந்தன், 'உங்களை ஏன் சித்தர்னு சொல்றாங்க?' என்றான்.

'ஏன்னா, அதான் நான்' எனப் பதில் வர கந்தன் விழித்தான்.

'காட்டுல இன்னும் நிறைய சித்தருங்க இருக்கறதா சொல்லிக்கறாங்களே. அதெல்லாம் உண்மையா? உங்களுக்கு அவங்களைத் தெரியுமா? நீங்க அவங்களைப் பார்த்திருக்கீங்களா? தங்கம் பண்ணத் தெரிஞ்சவர் நீங்க ஒருத்தர்தான்னு சொல்றாங்களே! ஏன் அப்படி?' எனக் கேள்விகளை அடுக்கினான்.

'இருக்காங்க. அவங்க அவங்களுக்கு விதிச்சதை செஞ்சுகிட்டு நிறையப் பேர் இருக்காங்க. அவங்கள்ல்லாம் இதைச் செய்ய முடியாம போனதுக்குக் காரணம், இந்த வாழ்க்கை விதியோட முடிவைத் தெரிஞ்சுக்கணும்னே தேடினதாலதான். முடிவைத் தேடக் கூடாது. அதுலியே பயணம் செஞ்சுகிட்டு இருக்கணும். முடிவு தானா வரும்.'

'இன்னும் ஏதோ ஒண்ணு நான் தெரிஞ்சுக்க வேண்டியது இருக்குன்னு சொன்னீங்களே' என நினைவூட்டினான்.

அதைக் காதில் வாங்காதவர் போல, சித்தர் தொடர்ந்தார்.

'இதைத் தேடிகிட்டு நான் போகலை. தானா ஒருநாள் எனக்கு சித்தியாச்சு இந்த வித்தை. அதைச் செஞ்சு பாத்ததுல, இது உண்மைதான்னு புரிஞ்சுது. இதோட சூட்சுமம் ரொம்ப ரொம்ப சாதாரணமானது. ஆனா, என்ன பண்ணிட்டாங்கன்னா, இவ்வளவு எளிமையான இதை, விதி, வழிமுறை, ரகசிய வார்த்தைகள், வழிகள் அப்படி இப்படீன்னு ஆளாளுக்கு குழப்பி எழுதி வைச்சுட்டுப் போயிட்டாங்க. அது மட்டுமில்ல. தன் வழிதான் மத்த வழிகளை விடச் சிறந்ததுன்னும் சொல்லிட்டுப் போயிட்டாங்க. அதனால, இதைப் படிக்கறவங்களும், தன்னோட வழிதான் மத்ததெல்லாத்தையும் விட உசத்தின்னு குழப்பறாங்க.'

'அப்படி என்னதான் அந்த சுலபமான வழி?' மெதுவாக அவரை ஆழம் பார்த்தான் கந்தன்.

சித்தர் அவன் சொல்லியதை கவனிக்காத மாதிரி, எழுந்து, தன் கையில் இருந்த கம்பால், தரையில் எதையோ எழுதினார்.

அதைப் பார்த்துக் கொண்டிருந்த கந்தனுக்கு அவனையும் அறியாமல், தங்கமாலை அணிந்த அந்தப் பெரியவரின் முகம் ஒரு நொடி தோன்றி மறைந்தது.

'சிப்பியாக் கூட நான் வருவேன்' அவர் சொன்னதும் காதில் ஒலித்தது!

'இதான் அந்த வழி!' என சித்தர் சொன்னது அவனை மீண்டும் நிகழ்வுக்குக் கொண்டு வந்தது.

'இதுவும் ஒரு ரகசிய வழி மாதிரித்தான் இருக்கு. இதே போலத்தான் ராபர்ட் வைச்சிருந்த புஸ்தகத்துலியும் இருந்திச்சு' எனச் சற்று ஏமாற்றத்துடன் சொன்னான் கந்தன்.

'இல்லை. இது அப்படி இல்லை. நீ பாத்தியே அந்த ரெண்டு கழுகுங்க. அதுமாரித்தான் இதுவும். அதுங்க சொன்ன சேதி உனக்கு மட்டுமே புரிஞ்சுது. அதேமாதிரி, காரணம் தெரிய வேண்டியவங்களுக்கு இது சட்டுன்னு புரியும்.
அதான் இந்த உலகத்தோட சூட்சுமம். விவரம் தெரிஞ்சவங்களுக்கு இது புரியும். இந்த உலகத்தை பாக்கறப்பவே அவங்களுக்குப் புரிஞ்சிடும் இது வெறும் மாயை...
அதாவது உண்மையா இருக்கற ஒண்ணோட பிரதிதான் இதுன்னு. அந்த 'உண்மை' வேற எங்கியோ இருக்கு. அதைத் தேடணும்னு அவங்க முயற்சி பண்ண ஆரம்பிப்பாங்க.
இவ்ளோ அழகான விஷயங்களைப் படைச்ச ஆண்டவன், இதையெல்லாம் பார்த்து, ரசிச்சு, உணர்ந்து, இது மூலமா என்ன சொல்ல வராருன்னு கண்டுபிடிக்கப் பார்ப்பாங்க. அவன்தான் சித்தன்!'

என்னாலேயும் இதைப் புரிஞ்சுக்க முடியுமா?' என்றான் கந்தன் ஒருவிதப் பரவசத்துடன்.

'ஆரு கண்டா? ஒருவேளை நடந்தாலும் நடக்கலாம்! இருக்கற இடத்துல உன்னைச் சுத்தி இருக்கற, நடக்கறதைக் கவனமாப் பாரு. அதுலியே அப்படியே ஆழ்ந்து போகணும். உள்ளே போகப் போக, நீ எதையும் புரிஞ்சுக்காமலியே எல்லாம் புரிய ஆரம்பிக்கும் உனக்கு.'

பேசியபடியே, தரையில் வரைந்ததைக் கையால் அழித்துவிட்டு, ஒரு கைப்பிடி மண்ணை வாரினார். 'இதோ இந்த மண்ணுல இருக்கற ஒரு துகளை மட்டும் பாரு. இது எப்படி இருக்கு. எப்படி வந்திச்சுன்னு தியானம் பண்ணு. கடவுளோட சிருஷ்டி ரகசியம் புரியவரும்... அவன் அனுக்கிரகம் இருந்தா!'

'தியானம் எப்படிப் பண்றது?'

'என்னைக் கேக்காதே. உன் இதயத்தைக் கேளு! அது சொல்லிக் கொடுக்கும். அதுக்குள்ள இருக்கற ஆத்மாவைப் பார்க்கறதுக்கு முயற்சி பண்ணு. அது தெரியவரும் போது உனக்குப் புரியும், இந்த உலகத்தோட ஆத்மாவுக்கும் அதுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லேன்னு. எல்லாமே ஒண்ணுதான். இந்த மண்ணும் சரி; மத்தவங்களும் சரி; நீயும் சரி.'

சொல்லியவாறே நிஷ்டையில் ஆழ்ந்தார் சித்தர்.
*****************************


அடுத்த அத்தியாயம்

Read more...

Saturday, November 03, 2007

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 31

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 31

முந்தைய பதிவு இங்கே!




29.

"அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்

பின் இருந்து வாழ்வார் பலர்." [1160]

'வா, போகலாம்' எனச் சொன்னவர், திரும்பி வந்த வழியே தான் இருந்த குகைக்குத் திரும்பினார்.

'செல்லும் முன் சில ஏற்பாடுகள் செய்ய வேண்டும். எனக்கு சில வேலைகள் இருக்கின்றன. நல்லா சாப்பிட்டுவிட்டு ஓய்வு எடு. இனிமேல் நாம் போகும் தூரம் மிகவும் அதிகம். நடைதான்! அநேகமா இதுவே நீ எடுக்கப் போகும் கடைசி ஓய்வா இருக்கும் கொஞ்ச நாளைக்குன்னு நினக்கறேன்'
எனச் சொல்லிவிட்டு வெளியில் சென்றார்.

கந்தனுக்குத் தூக்கம் வரவில்லை.

பொன்னியை இன்னும் கொஞ்ச நாட்களுக்குப் பார்க்க முடியாது என்ற எண்ணம் அவனை வாட்டியது. போகும் முன் அவளை ஒருமுறை சந்திக்கணும் எனத் தோன்றியது.

எழுந்து அவள் வீடு நோக்கி நடந்தான்.

பொன்னியின் தம்பி கண்னில் பட்டான்.

'உங்க அக்கா வீட்டுல இருக்கா?' எனக் கேட்டான்.

'உள்ளேதான் இருக்கு. அப்பா வெளியில போயிருக்காரு. எங்க போயிருந்தீங்க இம்மாந்நேரம்? நீங்க இன்னும் சாப்பிட வரலியேன்னு சொல்லிகிட்டு இருந்தாரு. கொஞ்சம் இருங்க. 'எனச் சொல்லி உள்ளே சென்றான்.

பொன்னி வெளியில் வந்தாள்.

'நான் சித்தரைப் பார்த்துட்டேன்! அவர் என்னைக் கூட்டிகிட்டு போறேன்னு சொல்லியிருக்காரு. காலையில கிளம்பறோம். போறதுக்கு முன்னாடி உன்கிட்ட சொல்லிட்டுப் போகலாம்னு வந்தேன். வர்றதுக்கு எவ்வளவு நாளாகும்னு தெரியாது. நான் உன்னை விரும்பறது மட்டும் உறுதின்னு உன்கிட்ட சொல்லிட்டுப் போகலாம்னு...' என சொல்ல ஆரம்பித்த கந்தனை 'பேச வேண்டாம்' என்பது போல் சைகை செய்துவிட்டு,

'ஒண்ணும் சொல்லாதீங்க. ஒருத்தரை விரும்பறதுக்குக் காரணமே நாம அவங்க மேல வைச்ச அன்பாலதான். அதுக்கு வேற எந்தக் காரணமும் சொல்லத் தேவையே இல்லை. ' எனப் பொன்னி தலை குனிந்தவாறே தழுதழுத்த குரலில் சொன்னாள்.

'அப்படியும் சொல்ல முடியாது! நான் பாட்டுக்கு ஆடு மேச்சுகிட்டு என் ஊருல இருந்தேன். எனக்கு ஒரு கனவு வந்திச்சு. அதை ஒரு கிழவி புதையல் பத்தியதுன்னு சொல்லி ஊக்கப் படுத்தினா. அதைத்தான் நீ தொடர்ந்து போகணும்னு தங்கமாலை போட்ட ஒரு பெரியவர் வந்து என்னை அனுப்பினாரு.நடுவுல கொஞ்ச நாளு ஒரு ஓட்டலை நிர்வாகம் பண்ணினேன். அது போதும்னு அலுத்துப் போயி, அங்கேருந்து கிளம்பினேன். நடுவுல இப்படி ஒரு கலவரம் வந்ததால இந்த மலைக்கு ஒரு
சித்தரைத் தேடிகிட்டு வந்து, வந்ததுல உன்னைப் பார்த்தேன். பார்த்ததோட மட்டும் இல்லாம, இப்ப உன்னை விரும்பவும் ஆரம்பிச்சு, அதை உன்கிட்ட
சொல்லவும் சொல்லிட்டேன்! இதெல்லாம் எப்படி நடந்திருக்குன்னு நினைக்கறே? இந்த உலக ஆத்மாவே இதுதான் நடக்கணும்னு நினைச்சதால மட்டும்தான். இதை நீ புரிஞ்சுக்கனும் என் அன்பே!' எனச் சொல்லியவாறே அவளை அணைத்தான்.

பொன்னி முதல் முறையாக அவன் அணைப்பை மறுக்காமல், விலக்காமல் தன் கைகளால் அவனுடன் இணைந்தாள்.

இருவரும் ஒருவரை ஒருவர் தீண்டியது இதுவே முதல் தடவை. இன்பமாயிருந்தது இருவருக்கும். ஒரு சில கணங்கள் அப்படியே ஒன்றும் பேசாமல் இருவரும் அந்த அணைப்பின் சுகத்திலேயே இருந்தார்கள்.

சட்டென விலகினாள் பொன்னி.

'விரைவில் திரும்பிடுவேன்' என்றான் கந்தன்.

'இதுவரைக்கும் இந்த மலைக்காட்டை நேசிக்கற ஒரு சாதாரனப் பொண்ணாத்தான் திரிஞ்சுகிட்டு இருந்தேன். ஆனா, இப்ப... இந்த நொடியிலேர்ந்து, இந்தக் காட்டை ஒரு நம்பிக்கையோட எதிர்பார்த்துத் தவிக்கப் போற ஒரு பொண்ணா இருக்கப் போறேன். எங்க அப்பா கூட இப்படி ஒரு நாளைக்குப் போனவருதான்! கொஞ்ச நாளு கழிச்சு திரும்பி வந்தாரு. அது போலவே, நீயும் ஒரு நாளு வருவேன்னு நம்பறேன்.' என்றாள் பொன்னி.

பேசிக்கொண்டே நடந்தவர்கள் வீடு வரை வந்து விட்டார்கள்.

அவள் கைகளைப் பிடித்துக் கொண்ட கந்தன், அவள் கண்களை நோக்கிய வண்ணம் உறுதியாகச் சொன்னான், ' கண்டிப்பா உங்க அப்பா திரும்பி வந்த மாதிரி, நானும் வருவேன். கவலைப் படாதே!'என்றான்.

பொன்னியின் கண்கள் குளமாயின.

'என்ன அழுவறியா? எதுக்கு?' எனப் பரிவுடன் கேட்டான் கந்தன்.

'நான் ஒரு மலைஜாதிப் பொண்ணுதான். ரொம்ப தைரியசாலின்னு பேர் வாங்கினவ! இருந்தாலும், நானும் ஒரு பொண்ணுதானே! போயிட்டு நல்லபடியா வாங்க!' என்றபடி கண்களைத் துடைத்துக் கொண்டே சிரிக்க முயன்றாள் பொன்னி.

அவன் கைகளை ஒரு அழுத்து அழுத்திவிட்டு, அவைகளை விடுத்து, திரும்பிப் பார்க்காமல் வீட்டுக்குள் நுழைந்தாள்.

கதவு சாத்தப்பட்டது.

தனக்காக ஒரு உள்ளமும், உயிரும் உள்ளே காத்திருக்கும் என்ற நம்பிக்கையோடு, கந்தன் திரும்பி நடந்தான்.

'இனி அவள் வாழ்க்கை முழுதுமாக மாறிப் போகும். நேற்று வரை சுதந்திரமாகத் திரிந்தவள், நாளை முதல், வழி மேலே விழி வைத்து தான் வரும் நாளுக்காய் காத்து நிற்கப் போகிறாள். காற்றில் தனது அன்பினை அவனுக்கு தூது அனுப்பி வைத்துக் கொண்டிருப்பாள்..... அது அவனைச் சேருமோ சேராதோ என்பதைத் தெரியாமலேயே ' என்ற எண்ணம் அவன் மனதை அழுத்தியது. அதே சமயம் ஒரு உற்சாகத்தையும் கொடுத்தது.... அவள் இருக்கிறாள் என்ற உண்மை புரிந்து போனதில்!
ஒருநாள் திரும்பவும் வருவான் என்ற அவள் நம்பிக்கை பொய்த்துப் போகாமல் இருப்பதில் தன் பங்கும் இருப்பது ஒரு பதட்டத்தையும், அதே சமயம் ஒரு புதுத் தெம்பையும் கொடுத்தது.

ராபர்ட் இருக்கிறானோ எனப் பார்த்தான். எங்கும் தென்படவில்லை. அதுவும் நல்லதுக்குத்தான் என எண்ணியவாறே, அவள் குடிசை கண்ணிலிருந்து மறையும் வரைக்கும், திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே நடந்தான்.


சற்று நேரத்தில் அவன் நடை வேகமாகியது!
******************************



அடுத்த அத்தியாயம்

Read more...

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 30

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 30

முந்தைய பதிவு இங்கே!



28.
"அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு." [73]


'ம்ம்.. எழுந்திரு! இப்பக் கிளம்பினாத்தான் சரியா இருக்கும்' என்றவாறே கந்தனை எழுப்பினார் சித்தர்.

'எங்கே?' எனக் கேட்டவாறே அவசர அவசரமாய் எழுந்தான் கந்தன்.

அந்த அதிகாலையிலேயே, இருள் இன்னும் மறையாத நேரத்திலேயே, குளித்து முடித்து, நெற்றியிலே பளீரென விபூதி பூசி, ஒரு தேஜஸுடன் திகழ்ந்தார் சித்தர்.

'கிளம்பு. என்கூட வந்து..காணும் உலகில் வாழும் உயிர் காட்டு, பார்க்கலாம்!' என்றார்.

'எப்படி அதைக் காணுவது என எனக்குத் தெரியலியே' என்றான் கந்தன், அப்பாவியாக.

'உயிர் உயிரை அழைக்கும்! உனக்கே புரியும்! வா!' மேலும் புதிர் போட்டார் சித்தர்.

கந்தனுக்கு எதுவோ புரிந்தும் புரியாமலும் போல் தோன்றியது.

ஒன்றும் பேசாமல் முன்னே நடந்தான்.

ஒரு மணிநேர நடைக்குப் பின், ஒரு பாறையருகில் அவன் கால்கள் நின்றன.

மேலே செல்லத் தோன்றவில்லை.

'இங்கே ஒரு உயிர் இருக்குன்னு நினைக்கறேன்' அவனையுமறியாமல் அவன் வாயிலிருந்து சொற்கள் எழுந்தன.

சித்தர் ஒன்றும் பதில் சொல்லாமல், அவன் நின்றிருந்த பாறை அருகே நின்றார்.

பாறையின் அடியில் ஒரு சிறிய பொந்து.

தன் வலது கையை அந்தப் பொந்துக்குள் விட்டவர், ஒரு சில நொடிகளில் கையை வெளியே எடுத்தார்.

அவர் கையில் ஒரு ராஜ நாகம் நெளிந்தது கொண்டிருந்தது.

'பாத்து! பாத்து!கடிச்சுறப் போவுது!' கந்தன் பயத்தில் அலறினான்.

அவனைப் பார்த்து மெல்லச் சிரித்த சித்தர், தன் கையில் இருந்த கம்பால் தரையில்ஒரு வட்டமிட்டு, அதற்குள் அந்தப் பாம்பை மெதுவாக விட்டார்.

'சித்தருக்கு வயசு இருநூறுக்கும் மேலேன்னு சொல்றாங்க' ராபர்ட்டின் குரல் கந்தனுக்குள் கேட்டது.

நாகம் அசைவின்றி அந்த வட்டத்துகுள் சுருண்டது. அப்படியே கிடந்தது.

'பயப்படாதே! அது ஒண்ணும் பண்ணாது. ஒரு உயிரைக் கண்டு பிடிச்சிட்டே! நான் எதிர்பார்த்த சகுனம் எனக்குக் கிடைச்சிடுச்சு' என்றார்.

'என்ன சொல்றீங்க?' ஒன்றும் புரியாமல் அவரைப் பார்த்துக் கேட்டான் கந்தன்.
'உனக்குப் புரியாது. நான் சொல்லுவதை மட்டும் கேட்டுக்க. உன்னை இந்தக் காட்டிலேர்ந்து பத்திரமா மஹாபலிபுரம் கொண்டு சேர்க்கறது இனிமே என் பொறுப்பு. கவலைப் படாதே!' என்றார் அந்த மஹான்.

கந்தனின் குழப்பம் இன்னும் அதிகரித்தது!

'இங்கேதான் நான் பொன்னியைப் பார்த்தேன். எனக்கு இங்கிருந்து போக விருப்பமில்லை. புதையலை விட எனக்கு இது ரொம்ப முக்கியம்'
என்று முரண்டினான் கந்தன்.

'பொன்னி மலைநாட்டுப் பொண்ணு. அதுக்கு தெரியும் ஆம்பளைங்க இப்படி ஒரு விஷயத்துக்காக தூரதேசம் போவாங்கன்னு. அதுக்குத் தேவையான புதையல் அவளுக்குக் கிடைச்சாச்சு. அதான் நீ! இப்ப நீதான், உனக்குன்னு விதிச்ச புதையலை அடையணும். அதான் அவ விரும்பறதும் கூட. சும்மா உளறாதே!' எனச் சற்றுக் கோபமாகச் சொன்னார் சித்தர்.

'நான் இங்கேயே தலைவர் கொடுத்த வேலையைச் செஞ்சுகிட்டு இருந்தா என்ன?' என வீம்புடன் எதிர்க் கேள்வி போட்டான்.

'என்ன ஆகும்னு நான் சொல்றேன் கேட்டுக்கோ! முத்துராசா சொன்ன மாதிரி, நீ ஒரு குறி சொல்ற ஆளா இங்கே இருப்பே. நிறையப் பணம் கிடைக்கும். பொன்னியைக் கல்யாணமும் பண்ணிப்பே.

எல்லாரும் உன்னைக் கொண்டாடுவாங்க. ஒரு வருஷம் போனதும், மறுபடியும் உனக்கு அந்தப் புதையல் நினவுக்கு வரும். ஆன, நீ கிளம்ப மாட்டே! இங்கே கிடைக்கற சொகுசு உன்னைப் போகவிடாது. ஒரு குழந்தை கூட பெத்துப்பே!
மூணாம் வருஷம் ஆனதும், மறுபடியும், அந்த சகுனமெல்லாம் திரும்ப நடக்கும். புதையல் நினைப்பு உன்னை வாட்டும். உன்னோட வாழ்க்கை லட்சியமே அதுதான்னும், நீ இதுவரைக்கும் வாழ்ந்து வந்த வாழ்க்கை அத்தனையுமே வெறும் போலின்னும் புரிய வரும்.

நிம்மதி இல்லாம, குழந்தையையும், பொன்னியையும் விட்டுப் போக மனசில்லாம, இந்தக் காட்டுலியே திரிய ஆரம்பிப்பே. காரணமே இல்லாம பொன்னி மேல உனக்கு கோபம் கோபமா வரும். அவளுக்கும் தான் தான் இத்தனைக்கும் காரணம்னு ஒரு நினைப்பு வந்து அவளை வருத்தும்.

ஆனா, உங்க ரெண்டு பேருக்கும் நடுவில இருக்கற அன்பு மட்டும் குறையாது. ஆனா, உன் உள்மனசு மட்டும் உன்னை அரிச்சுகிட்டே இருக்கும். அவ சொன்ன மாதிரியே நாம அப்பவே போயிருந்தா இந்நேரம் புதையலோட வந்திருப்போமேன்னு அது சொல்லி சொல்லிக் காட்டும். ஆனா, எங்கே, போனா, அவ நமக்கு கிடைக்காம போயிருப்பாளோன்ற பயம் தான் உன்னைப் போக விடாம தடுத்துதுன்னும் உனக்குப் புரியும்.

அப்போ ஒரு குறி உனக்குத் தோணும். இனிமே போயி பிரயோஜனம் இல்லை. இனிமே அந்தப் புதையல் உனக்குக் கிடைக்காதுன்னு! அதுல வெறுத்துப் போயி, நீ இந்த குறி சொல்றதையே நிறுத்த ஆரம்பிச்சிருவே! ஏன்னா, அதுவரைக்கும் உனக்கு மனசுல தெரிஞ்சுகிட்டு இருந்த இந்த குறி சொல்ற வித்தை உன்னை விட்டுப் போயிரும்! இந்த வேலையும் உன் கைய விட்டுப் போயிரும்.

அதுக்குள்ள உனக்கு கொஞ்சம் பணம் சேர்ந்திருக்கும். பொன்னியோட குடும்பம் நடத்திகிட்டே உன் காலம் முடிஞ்சிரும். ஆனா, கடைசி வரைக்கும் உன் மனசை விட்டு,'அடடா! நாம மட்டும் அன்னிக்குப் போயிருந்தோம்னா.....' அப்படீன்னு நினைச்சுகிட்டே மனசுல நொந்துகிட்டு இருப்பே சாவற வரைக்கும்!'

'உனக்கு ஒண்ணு தெரியணும்! காதலோ, அன்போ ஒரு மனுஷன் அவன் அடைய நினைக்கற வாழ்க்கைக்கு ஒரு தடையா இருக்கவே முடியாது!
அந்த நம்பிக்கையை அவன் கை விட்டான்னா, அதுக்குக் காரணம் அவன் வைச்சிருந்த அன்பு உண்மையானது இல்லைன்றதுதான்.
ஏன்னா, அன்பு தான் இந்த உலகம் எல்லாரோடேயும் பேசற ஒரு மொழி.'

பேசி முடித்ததும், பாம்பு படுத்திருந்த வளையத்தின் ஒரு பகுதியைத் தன் காலால் கலைத்தார் சித்தர். பாம்பு அவரை ஒரு பார்வை பார்த்துவிட்டு மெதுவாக ஊர்ந்து சென்று மறைந்தது.

கந்தன் அவர் சொன்னதை எல்லாம் மெதுவாக உள்வாங்கி மனதுக்குள் அசை போட்டான். அவன் மனதில், காசிக்குப் போகணும் என்ற கனவில் வாழும் அண்ணாச்சியும், தங்கம் எடுக்கணும் என்று அலையும் ராபர்ட்டும் நிழலாடி மறைந்தனர். தன் மேல் நம்பிக்கை வைத்துச் சொன்ன பொன்னியும் கூடவே தலை காட்டிச் சிரித்து மறைந்தாள்!

'நான் உங்க கூட வரேன். எனக்கு வழி காட்டுங்க!' எனச் சொல்லி அவர் கால்களில் விழுந்தான் கந்தன்.

சித்தர் ஒரு திருப்தியுடன் அவனைப் பார்த்துச் சிரித்தார்.

'வா, போகலாம்!' என்றார்.
*************************

அடுத்த அத்தியாயம்

Read more...

Friday, November 02, 2007

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 29

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 29

முந்தைய பதிவு இங்கே!



27.

"ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்." [380]

மறுநாள் பொழுது விடியும் முன்னரே, கையில் ஆயுதங்களோடு, ஒரு ஐம்பது காட்டுவாசிகள் காட்டுக்குள் ஊடுருவி மறைந்தனர்.

சற்று நேரம் பொறுத்து, அரிவாள், கம்பு தாங்கிய ஒரு கூட்டம்... சுமார் இருபது பேர் அடங்கிய ஒரு கூட்டம்.... காட்டுக்குள் நுழைந்தது.

பதுங்கிப் பதுங்கி வந்த அவர்கள், மரங்களுக்கு இடையே மறைந்து மெதுவாக முத்துராசாவின் வீடு நோக்கி நகர்ந்தனர்.

காட்டுவாசிகள் இவர்களை மறைந்திருந்தபடியே கவனித்தனர்.

இந்தக் கூட்டம் தலைவரின் வீட்டுக்குள் நுழையப் போகும் வேளையில், திடீரென காட்டுவாசிகள், 'ஓ' வென பெருத்த சத்தமிட்டபடி, சொல்லி வைத்தாற் போல், இவர்களைச் சூழ்ந்துகொண்டு தாக்கினர். அவர்களின் தலைவன் உட்பட அனைவரும் சுற்றி வளைக்கப் பட்டனர்.

மீசையை நீவியபடி, முத்துராசா வெளியில் வந்தார்.

'எவண்டா எங்க ஊருக்குள்ள வந்து எங்களைத் தாக்கறது? என்னா தைரியண்டா உங்களுக்கு? யார்றா அவன்?' எனக் கோபமாக அவர்களைப்
பார்த்து கத்தினார். கையில் அகப்பட்ட ஒருவன் கன்னத்தில் 'பளார்' என ஒரு அறையும் விட்டார்.



' ஐயா! எங்களை மன்னிச்சிருங்க! நாங்க சண்டைக்காரங்க இல்லீங்க. கீழே நடக்கற சண்டையால, எங்க குடும்பம்லாம் பசி பட்டினியில தவிக்குதுங்க. பயந்து போயி, மலையடிவாரத்துல பதுங்கிட்டோமுங்க. காட்டுக்குள்ள வந்தா எதனாச்சும் சாப்பாடு கிடைக்குதோன்னு பாக்க வந்த எடத்துல, கண்ணுல பட்ட பெரிய வீட்டைக் குறி வைச்சு வந்திட்டோமுங்க. எங்களை மன்னிச்சு விட்டிருங்கய்யா!' என அவர்களில் ஒருவன் முன் வந்து கதறினான்.


'அதுக்கு ஒழுங்கு மரியாதையா வந்து கேட்டிருக்கலாமில்ல. இப்படியா கம்பு கத்திங்களோட வர்றது? காட்டுவாசிங்கன்னா ஒண்ணும் தெரியாதவங்கன்னு நினைச்சீட்டீங்களா?' என ஒருவன் ஆவேசப்பட,

அவனைக் கையமர்த்திவிட்டு உடனிருந்தவர்களிடம் சிறிது நேரம் ஆலோசனை செய்த பிறகு, அவர்களுக்கு சோறு போட்டு, கையில் கொஞ்சம் பொருட்களும் கொடுத்து, பத்திரமாகக் கீழே அனுப்பி வைக்க உத்தரவிட்டு கந்தனை அழைத்து வரச் சொல்லி ஆளனுப்பினார் முத்துராசா.

'நீ சொன்னபடியே நடந்திடுச்சு. நீ பேசாம எங்களோட இங்கியே இருந்திரு. பூசாரி கூட சொல்லிட்டாரு. அவருக்குத் துணையா, அவர்கிட்டேருந்து இன்னும் கொஞ்சம் கத்துகிட்டு, நீயும் எங்களோடவே இருந்திறலாம். என்ன நா சொல்றது?' என்றார்!


பக்கத்தில் இருந்தவர்களும் அதை ஆமோதிப்பது போல தலையாட்டினர்!
கந்தன் அவரைப் பார்த்துச் சிரித்தான்!


'எனக்கு கொஞ்சம் அவகாசம் கொடுங்க. ஒரு முடிவு பண்ணிட்டு சொல்றேன். எனக்கும் முடிக்க வேண்டிய காரியங்க இருக்கு.' என்று தன் குடிசையை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

'மதியம் சாப்பாடு உனக்கு இங்கதான். மறக்காம வந்திரு!' தலைவரின் குரல் பின்னாலிருந்து கேட்டது!
--------------------
சாப்பிட்டு முடித்து, ஒரு குட்டித் தூக்கம் போட்ட பின், மாலை ஆனது,. எவரிடமும் சொல்லாமல், கந்தன் தெற்குப் பக்கமா நடக்கத்
தொடங்கினான். பொன்னி கண்னில் படக்கூடாது என மனதுக்குள் வேண்டிக் கொண்டான்.

வெள்ளைப் பாறையைத் தாண்டி நடந்த பின்னர், எப்படிப் போவது என சில நொடிகள் தயங்கினான்.

இருள் மலையில் கவியத் தொடங்கி விட்டது.

பறவைகள் தங்கள் கூடுகளில் சென்று மடங்கின. தூரத்தில் ஏதோ ஒரு மிருகத்தின் குரல் கேட்டது. கந்தனுக்குப் பயம் தொற்றியது.

திரும்பி விடலாமா என யோசித்தான்.

'நான் இங்கே இருக்கேன்' என ஒரு குரல் கேட்டது.

குரல் வந்த திசை நோக்கி திரும்பினான்.

ஒரு மரக்கிளையின் மீது உட்கார்ந்தபடி தன் தாடியை நீவி விட்டுக் கொண்டே சிரித்தார் சித்தர்.

'உன்னோட விதிதான் உன்னை இங்கே கொண்டு வந்திருக்கு' என்றார், மேலும்.

'கீழே சண்டை நடக்குது. இங்கேயும் இப்ப வந்திருச்சு. நான் எங்கே போக முடியும்? அதான் இங்கே, உங்ககிட்ட வந்திட்டேன்' எனப்
பதிலுக்குச் சிரித்தான் கந்தன்.

'என் பின்னால வா' எனச் சொல்லியபடியே மரத்திலிருந்து குதித்த சித்தர், வேக வேகமாக நடக்க ஆரம்பித்தார்.

சட்டென்று பார்வைக்குத் தெரியாத ஒரு குகையின் வாசலருகே வந்த சித்தர், அவனை உள்ளே செல்லும்படி கை காட்டினார்.

மரங்களுக்கும், மலைப்பாறைகளுக்கும் இடையே இருந்த அந்தக் குகையின் வாசல் சிறியதாக இருந்தாலும், உள்ளே நல்ல விசாலமாக இருந்தது.

ஒரு அகல் விளக்கு எரிந்து கொண்டிருந்தது.ஒரு மூலையில், ஒரு மான் தோல் விரிக்கப் பட்டிருந்தது. ஓலைச் சுவடிகள் ஒரு ஓரத்தில் அடுக்கி
வைக்கப் பட்டிருந்தன.

'எதுக்காக என்னை வரச் சொன்னீங்க?' என்றான் கந்தன், குகையினொரு ஓரத்தில், கைகளைக் கட்டிக் கொண்டு.

'வா, வா! இப்படி வந்து உட்கார்! மரியாதையெல்லாம் மனசுல இருந்தாப் போதும்!' என அவனை அன்புடன் அழைத்தூ உட்காரவைத்துவிட்டு,


'நீ வரப் போறேன்னு எனக்குத் தெரியும். உனக்கு உதவி செய்யணும்னு எனக்கு உத்தரவாயிருக்கு! '

'உங்களை எதிர்பார்த்துகிட்டு இருக்கறது நானில்லை. அது, அந்த வெள்ளைக்காரரு.. ராபர்ட். அவர்தான் ஏதோ ரஸவாதம் உங்ககிட்ட கத்துக்கணும்னு அலையறாரு !'


'அவனுக்கு நான் வேற வேலை கொடுத்திருக்கேன். அவன் அதைச் செஞ்சுகிட்டிருக்கான். அவன் நேரம் வர்றப்ப, நான் அவனைப் பாத்துப்பேன்.
இப்ப இது உன்னோட நேரம்' என்றார் சித்தர்.


'அப்படீன்னா?' எனப் புரியாமல் விழித்தான் கந்தன்.

'ஒரு ஆளு எதையாவது தீவிரமா விரும்பினான்னா, அவனுக்கு இந்த உலகத்துல இருக்கற சக்திங்கள்லாம் ஓடிவந்து உதவி செய்யும்' எனச்
சொல்லிச் சிரித்தார் சித்தர்.

தங்க மாலை அணிந்த ஒரு கிழவர் எப்போதோ சொன்ன வாசகங்கள் கந்தன் முன் நிழலாடின.

'ஓ! அப்போ நீங்க எனக்கு அந்தப் புதையலை எடுக்க உதவி பண்ணப் போறீங்களோ? ' என நம்பிக்கையில்லாமல் கேட்டான் கந்தன்.

'தப்புக் கணக்கு போடாதே!
உனக்கு என்ன வேணும்னு உனக்கு ஏற்கெனவே தெரியும். எந்தப் பக்கமாப் போகணும்னு மட்டும் நான் காட்டப் போறேன்.'

கந்தன் கட கடவெனச் சிரித்தான்.

'எனக்கு என்ன வேணும்னு எனக்குத் தெரியும். என்னோட புதையல் எனக்குக் கிடைச்சாச்சு. கையுல பணம் இருக்கு. முத்துராசா என்னை இங்கியே
இருக்கச் சொல்லிட்டாரு அவருக்கு குறி சொல்ற ஆளா. எனக்குப் பிடிச்ச சில விசயங்களும் இங்கியே இருக்கு. இனிமே நான் எங்கியும் போகணுமா என்ன?'
என்றான் கொஞ்சம் அலட்சியமாக.

அருகே இருந்த ஒரு தட்டிலிருந்து ஒரு கிழங்கை எடுத்துக் கடித்தான்.

'வாயிக்குள்ள எது போவுதுன்றது முக்கியமில்ல; என்ன வார்த்தைங்க வெளியுல வருதுன்றதுதான்' என ஒரு சுவடியைப் புரட்டியபடியே
சொன்னார் சித்தர்.

'இங்கே ஒண்ணும் வேலை இருக்கறதா எனக்குத் தெரியலை. எதுக்காக என்னை இங்க வரச் சொன்னீங்கன்னும் புரியலை. அப்ப நான் கிளம்பறேன்' எனச் சொல்லியவாறே கந்தன் எழுந்தான்.

'உட்காரு அங்கேயே!' சித்தரின் குரல் அவன் உள்ளே சென்று அவன் நாடி நரம்பையெல்லாம் உலுக்கியது. மந்திரத்தால் கட்டுண்டவன் போல்
அப்படியே உட்கார்ந்தான் கந்தன்.

'பசிக்குதுன்னா இங்க இருக்கறதை சாப்பிட்டுட்டு படு. நாளைக்குக் காலையில கிளம்பறதுக்குத் தயாரா இரு.' எனச் சொல்லிவிட்டு, வெளியே
சென்றார் சித்தர்.

'என்ன நடக்குது எனக்கு. இடம் தெரியாம வந்து மாட்டிகிட்டோமோ!' என யோசித்தபடியே, உறக்கத்தில் ஆழ்ந்தான் கந்தன்.... ஒன்றும் சாப்பிடாமலே!
*****************

அடுத்த அத்தியாயம்

Read more...

Tuesday, October 30, 2007

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 28

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 28


முந்தைய பதிவு இங்கே!

26.
"ஒள்ளார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தான் வரும்." [264]

'இந்த காட்டுக்குள்ள ஒரு பெரிய சண்டை நடக்கப் போற மாரி ஒரு காட்சி எனக்குத் தெரிஞ்சுதுங்க.' எனச் சொல்லி நடந்ததை மீண்டும்
விவரித்தான் கந்தன்.

'வளக்கமா இது போல குறியெல்லாம் பூசாரி ஐயாவுக்குத்தானே வரும். முன்னப் பின்ன இந்தக் காட்டுக்குப் பளக்கமில்லாத ஒனக்கு வந்ததுதான் எனக்கு
ஆச்சரியமா இருக்கு. அதான் இதை நம்பறதா, வேண்டாமான்னு யோசிக்கறேன்' என்ச் சொல்லி முகவாயைத் தடவினார் தலைவர்.

எனக்கு இந்த உலக ஆத்மாவைப் பத்தித் தெரியும் எனச் சொல்ல நினைத்த கந்தன் வாயை அடக்கிக் கொண்டான்.

'இந்தக் காட்டுல, அதுவும் இந்த முத்துமலைப் பக்கம், இதுவரைக்கும் யாரும் வந்து சண்டையெல்லாம் போட்டதில்ல' எனத் தொடர்ந்தார் முத்துராசா.

'என் கண்ணுல பட்டதை நான் சொன்னேன். நம்பறதும், நம்பாததும் உங்க இஷ்டம்' எனச் சொல்லியபடி எழுந்தான் கந்தன்.

ஒரு கையால் அவனை அப்படியே உட்காரும்படி கம்பீரமாக ஒரு சைகை செய்த முத்துராசா, சற்று தணிந்த குரலில் கூடியிருந்த மற்றவர்களுடன் தீவிரமாகப் பேசத் தொடங்கினார்.

கந்தனுக்கு இங்கே வந்ததே தவறோ என ஒரு பயம் பிடித்துக் கொண்டது!

சிறிது நேரத்துக்குப் பின், முத்துராசா அவனை நோக்கிப் பார்த்து லேசாகச் சிரித்தார்.

தான் சொன்னது சரிதான் என ஒரு நம்பிக்கை பிறந்தது இப்போது!

முத்துராசா அவனைப் பார்த்துப் பேசத் தொடங்கினார்.


'ரொம்ப நாளைக்கு முன்னாடி எங்கேருந்தோ இந்தக் காட்டுக்கு ஒரு சித்தர் வந்தாரு. 'இங்க ஒரு பஞ்சம் வரப் போவுது. உடனே அம்மனுக்கு ஒரு பூசை போடுங்க'ன்னு
சொல்லிட்டு காட்டுக்குள்ள போயிட்டாரு. நாங்களும் உடனே ஒரு குறையும் வைக்காம ஒரு பெரிய பூசை போட்டோம்! ஒரே வருசந்தான். எல்லாம் சரியாயிருச்சு. அதுக்கப்பறம்,இங்க எல்லாமே ஒரு வரைமுறைக்கு கட்டுப்பட்டுத்தான் நடக்குது. இந்த எல்லைக்குள்ள எந்த ஒரு கெட்ட காரியமும் நடந்ததில்ல. ஆனா, அதே சமயம், இது மாரி நடக்கற சகுனத்துக்கெல்லாம் ஒரு அர்த்தம் இருக்குன்னும் எங்களுக்குத் தெரியும். காட்டுக்குள்ள நடக்கற எல்லாத்துக்குமே ஒரு காரண காரியம் இருக்கு.
அதே போல, இதுக்கும் எதுவோ ஒரு காரணம் இருக்குன்னு பூசாரி கூட சொல்றாரு.'
எனச் சொல்லிவிட்டு தன் கூட இருந்தவர்களைப் பார்த்து,

'நாளையிலேருந்து, கொஞ்சம் கடுமையாவே நம்ம எல்லைக்குள்ள போக்குவரத்தையெல்லாம் கட்டுப்படுத்துங்க. சந்தேகப்படற மாரி யாராச்சும்
வந்தா, உடனே பிடிச்சுக் கட்டிப் போடுங்க' எனக் கட்டளைகள் பிறப்பிக்க ஆரம்பித்தார்.

'இனி நமக்கு இங்கே வேலை இல்லை' எனத் தெரிந்து, கந்தன் மெதுவாக வெளியே வந்தான். நடந்தான்.

நடந்த அனைத்துமே அவனுக்கு ஒரு பிரமிப்பை உண்டு பண்னியது.

தான் சொல்லியது தவறாகப் போயிருந்தால், தன் நிலைமையே ஆபத்தாயிருக்கும் என நினைத்தபோது, ஒரு பயம் தோன்றியது.

பூசாரி சொன்னது நினைவுக்கு வந்தது.
.........இப்ப.. இந்த நிமிஷம் நடக்கறதுதான் நிஜம்! இதைச் சரியாக் கவனிச்சியானா
நாளைக்கு என்ன நடக்கும்னு உனக்கே புரியும். ஆனா, எல்லாரும், இதைச் செய்யறதில்லை! நேத்து என்னா ஆச்சு, நாளைக்கி என்னா
நடக்கும்னே காலத்தை ஓட்டறாங்க! இன்னிக்கு நடக்கறதைப் பாத்து, அதை சரியாச் செஞ்சோம்னா, எல்லாமே நல்லா நடக்கும்.இன்னிக்கு
சாவறதோ, இல்லை நாளைக்கு சாவறதோ நம்ம கையுல இல்லை. சாமிதான் நாளைக்கு என்ன நடக்கும்னு முடிவு பண்னறாரு. அது கூட எதுக்குன்னா,
ஒரு சில சரியான நடத்தையால, அதைக் கூட மாத்தறதுக்கு
நமக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கறதுக்குத்தான்! எல்லாம் விதிப்படி நடக்கும்'..........

இப்ப நான் சொன்னதை ராசா நம்பாமப் போயிருந்தா, என் உசுருக்கே ஆபத்தாயிருக்கும். அப்படிப் போயிருந்தா, என்ன ஆயிருக்கும்?
ஒண்ணுமில்ல.சாமிக்கு நடக்கப்போறத மாத்தக் கூடாதுன்னு பட்டிருக்கும். அவ்ளோதான். ஆனாக்க, நான் நிம்மதியா போயிருப்பேன்.
வெறுமன ஊருல ஆடு மேச்சுகிட்டிருந்த நான், மதுரைக்கு வந்து, ஒரு பெரிய ஓட்டலையே நிர்வாகம் பண்ணினது,இந்தக் காட்டுக்கு வந்து பொன்னியைப் பாத்தது .... இது போதுமே.... நாளைக்கு செத்துப் போனாக்கூட நான் எதிர்பார்த்ததை விட அதிக்மாவே எனக்கு கடவுள் கொடுத்திருக்காருன்னு நிம்மதியா போயிருவேன்!

சிரிப்பு வந்தது கந்தனுக்கு. அப்படியே ஒரு பாறை மேல் உட்கார்ந்தான்.

திடீரென ஒரு பெரிய காற்று வீசியது. இலைகள் பறந்தன. மரங்கள் வேகமாக ஆடின.ஒரு பெரிய புழுதி மண்டலம் கிளம்பி அவன் கண்களை
மறைத்தது. காற்றின் வேகம் தாங்காமல் கந்தன் கண்களை மூடிக் கொண்டான்.

சற்று நேரம் பொறுத்து மெதுவாகக் கண்களைத் திறந்தான்.

அவன் முன்னே தெரிந்த காட்சி அவனை அப்படியே நடுங்கச் செய்தது!

இடையில் கட்டிய ஒரு காவித்துணியுடனும், ஒரு நீண்ட வெண்ணிற தாடியுடனும், கையில் ஒரு மூங்கில் கம்புடனும் ஒரு ஆறடி உயரமுள்ள
மனிதர் அவன் எதிரில் நின்று கொண்டிருந்தார். அவர் தோளில் ஒரு வெண்கழுத்துடன் கூடிய கழுகு ஒன்று அலட்சியமாக உட்கார்ந்திருந்தது!


தன் கையில் இருந்த கம்பை அவன் முகத்துக்கெதிராக நீட்டியபடி, கொஞ்சம் கடுமையான குரலில் அவனைப் பார்த்துக் கத்தினார்!
'யார் இங்கே கழுகுங்களைப் பார்த்து குறி சொன்னது? நீதானா அது?'

கந்தன் ஒரு கணம் அவரது தோற்றத்தைப் பார்த்து நடுங்கினான். அதே நேரம் ஒரு இனம் புரியாத தைரியம் அவனுக்குள் சுரந்தது. இவரிடம்
துணிவாகப் பேசலாம் என ஏதோ ஒன்ரு உள்ளுக்குள் சொல்லியது.

தலையைக் குனிந்தபடியே, பணிவாகச் சொன்னான், ' அது நாந்தாங்க. ஒருவேளை அது உண்மையா இருந்தா இந்த காட்டுவாசிங்களை எல்லாம் காப்பாத்தலாமேன்னு தான்....'.

மூங்கில் கம்பு மெதுவாக இறங்கி அவன் முகவாய்க்கட்டையை நிமிர்த்தியது. வாகா மண்டையில போடறதுகுத்தான் நிமிர்த்தறாரு என நினைத்தான் கந்தன்!

அவன் மனம் ஒரு கணம் பொன்னியை நினைத்தது.
சகுனங்கள் எல்லாம் சரியாத்தான் சொல்லியிருக்கு. இதோ என் எதிரி என்னை இப்போ ஒரே போடா போட்டு என் கதையை முடிக்கப் போறார்.

'எப்பிடி உனக்கு அது தெரிஞ்சுது?' கம்பை அவன் மோவாயில் இருந்து எடுக்காமலே அடுத்த கேள்வி வந்தது.

இப்போதைக்குப் பிழைத்தோம் என்ற துணிவில், 'அதான் அந்தப் பறவைங்க என்கிட்ட சொன்னது மாரி எனக்குப் பட்டுது. இந்தக் காட்டை காப்பாத்துன்னு என்னைப் பாத்து சொன்னது போல எனக்குத் தோணிச்சு. அதன் சொன்னேன்' என்றான் கந்தன்.

'சாமி செய்ய நினைச்சதை மாத்தறதுக்கு உனக்கு என்ன அதிகாரம் இருக்கு?'

'நீங்க சொல்ற சாமிதான் அவங்களைக் காட்டிச்சு. அந்தக் கழுகுகளையும் காமிச்சுது. அவங்க சொன்னதையும் எனக்குப் புரிய வெச்சுது. எல்லாம் சாமி எழுதின விதிப்படிதான் நடக்குது.' பயத்தில் பூசாரி சொன்னதையே கொஞ்சம் மாற்றிச் சொன்னான் கந்தன்.

ஒரு சிறிய புன்னகையுடன் அந்த மனிதர் கம்பை தரையில் ஊன்றியபடியே கந்தனைப் பார்த்துச் சொன்னார், ' எழுதினதை மாத்தறதுக்கு எவனுக்கும் அதிகாரம் கிடையாது. அடுத்த தடவை இது மாதிரி குறி சொல்றப்ப இதை நெனைப்புல வெச்சுக்க.'

'ஒரு சண்டை வரப் போகுதுன்னு மட்டும் தான் நான் பார்த்தேன். அது எப்பிடி முடியும், யாரு ஜெயிப்பாங்கன்னு எனக்குத் தெரியாது' எனச் சற்று பயம் கலந்த மரியாதையுடன் சொன்னான் கந்தன்.

வந்த மனிதரின் முகத்தில் ஒரு திருப்தி கலந்த சந்தோஷம் தெரிந்தது கந்தனின் இந்த பதிலால்.

'அது சரி, உன்னைப் போல ஒரு ஆளு இங்க, இந்தக் காட்டுல என்ன பண்றே?' என்று அன்புடன் கேட்டார்.

'நான் என் விதி என்ன சொல்லுதோ, அதைத் தேடிகிட்டு வந்திருக்கேன். அதெல்லாம் உங்களுக்குப் புரியாது.' என்றான் கந்தன்.

'ஓ, அப்படியா?' எனச் சிரித்தபடியே அவனருகில் சென்று அந்தப் பாறையில் அமர்ந்தார் அந்த மனிதர்.

'நான் உன்னோட தைரியத்தை சோதனை பண்ணத்தான், கம்பை உன் முகத்துமேல வைச்சேன். தைரியம் இருக்கறவனுக்குத்தான் உலகத்தோட ஆத்மாவைப் புரியும்'

கந்தன் அவரை ஆச்சரியத்துடன் நிமிர்ந்து பார்த்தான். உலக ஆத்மா என்ற சொல் அவனுக்கு ஒரு நெருக்கத்தை உண்டு பண்ணியது அவரிடம்!

'இவ்ளோ தூரம் வந்திட்ட அப்புறம், நீ பின் வாங்கக் கூடாது. காடு நல்ல இடம்தான். ஆனா, அதுக்காக இங்கேயே நீ தங்கிடக் கூடாது.
இங்கே ஒவ்வொரு நிமிஷமும் உனக்கு ஒரு சோதனை வரும்,
இன்னும் ஒரு நாளைக்குள்ள. அதையெல்லாம் தாண்டி, நீ உசுரோட இருந்தியானா, என்னை வந்து பாரு. எங்கேன்னு கேக்காத. உனக்கு வேணும்னா, உன்னால என்னைக் கண்டுபிடிக்க முடியும்.... வெள்ளைப்பாறை தாண்டி வந்தியானா.....' எனச் சொல்லியவாறே, பாறையிலிருந்து குதித்தார் அந்த மனிதர்.

விறு விறுவென நடந்து மறைந்தார்!

கழுகு அவர் தோளிலிருந்து கிளம்பித் தெற்கு நோக்கிப் பறந்தது.

கந்தன் சித்தரைப் பார்த்து விட்டதை உணர்ந்தான்!
*********************************

அடுத்த அத்தியாயம்

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP