"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 33
"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 33
முந்தைய பதிவு இங்கே!
31.
"நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்
அடுத்த ஒரு நாள் நடையிலேயே கழிந்தது.
சித்தர் கொஞ்சம் கவனமாகவே சென்று கொண்டிருந்தார்.
துப்பாக்கி சூடு,இன்னமும் தொடர்ந்து கொண்டிருந்த சத்தம் அவ்வப்போது கேட்டது.
கந்தன் தன் இதயத்தைக் கவனிக்கத் தொடங்கினான். அதன் உணர்ச்சிகள் அவனைப் பயமுறுத்தியது. சில சமயங்களில், இடைவிடாமல் தன் கதைகளைச் சொல்லியது.
சில நேரம் மௌனமாய் இருந்தது. பொன்னியின் நினைவைச் சொல்லி அழுதது. அண்ணாச்சி பற்றி கவலைப் பட்டது. புதையலைப் பற்றிச் சொல்லும் போது மகிழ்ச்சியால் துள்ளியது.
'எதுக்கு நாம நம்ம இதயத்தைக் கவனிக்கனும்னு சொல்றீங்க?' என்றான் கந்தன்.
'அது எங்கே இருக்கோ, அங்கேதான் உன் புதையலும் இருக்கு! அதனாலதான்!'
'அப்படித் தோணலியே. அது ரொம்பப் படுத்துதே! அதோட கனவு, அதோட கோபம், உணர்ச்சிகள் இதெல்லாம் என்னால புரிஞ்சுக்கவே முடியலை. இதைப் பண்ணு, அதைப் பண்ணுன்னு மாத்தி மாத்தி சொல்லிகிட்டே இருக்கு. ஒரு பொண்ணை நினைச்சு அழுவுது. தூங்க விடமாட்டேங்குது. என்ன பண்றதுன்னே தெரியலை.'
'ஓ! அப்படியா! ரொம்ப நல்லதாப் போச்சு! அப்படீன்னா அது இன்னும் உசிரோடத்தான் இருக்குன்னு அர்த்தம்! என்ன சொல்லுது அதுன்னு கவனி!'
மேலும் நடக்கத் தொடங்கினார்கள் இருவரும். வழியில் சந்தேகத்துகிடமான சிலர் நடமாட்டம் தெரிந்தது.கந்தனின் இதயம் படக் படக்கென அடிக்கத் தொடங்கியது.
ஒருவித பயம் பிறந்தது.
'வெளியில இன்னும் கலவரம் ஓயலை போலிருக்கு. இந்த நேரத்துல உனக்கு இப்படி ஒரு புதையல் ஆசை தேவைதானா? இதுமாதிரி கிளம்பினவங்கள்ல ரொம்பப் பேரு ஏமாந்துதான் போயிருக்காங்க.உனக்கு அது கிடைக்கும்னு எனக்குத் தோணலை. வழியிலியே செத்து கித்து தொலைக்கப்போறே!' இப்படியெல்லாம் அவன் இதயம் அவனுடன் புலம்பியது!
'என் மனசு ரொம்ப ரொம்ப மோசம்! என்னைப் போகவிட மாட்டேங்குது' சித்தரிடம் சென்று இவன் புலம்பினான்!
'அது சொல்றதும் நியாயமாத்தான் இருக்கு! உன்னோட லட்சியத்தை தேடிகிட்டுப் போறப்ப, இருக்கறதையெல்லாத்தியுமே இழந்திருவோமோன்னு அதுக்கு பயம் வந்திருக்கலாம். அதுல ஒண்ணும் தப்பில்லியே.'
'அப்படீன்னா, அதோட பேச்சை நான் ஏன் கேக்கணும்?' என்றான் கந்தன்.
'நீ கேக்கலைன்னா, அதோட கூச்சல் இன்னும் அதிகமாகும். நீ கேக்கலைன்றதைப் புரிஞ்சுகிட்டு, உன்னைக் கேக்க வைக்கறதுக்காக இன்னும் அதிகமா பயமுறுத்தும்.'
'அப்ப, கேட்டுத்தான் ஆவணுமா? எனக்கு எதிராப் பேசி எனக்கு துரோகம் பண்ணினாக் கூடவா? என் கனவையெல்லாம் கலைச்சாக் கூடவா?' எனப் பரிதாபமாகக் கேட்டான்.
'துரோகம்ன்றது ரொம்பப் பெரிய வார்த்தை. அதெல்லாம் எதிர்பார்க்காத இடத்திலேர்ந்து, எதிர்பாராம வர்றது. உன் மனசை மட்டும் சரியாப் புரிஞ்சுகிட்டியானா, அது உனக்கு ஒருக்காலும் துரோகமே பண்ணாது.அதுக்கு என்ன பிடிக்கும், அதோட ஆசையெல்லாம் என்னன்னு உனக்கும் புரிஞ்சிடும். அதை எப்படி சமாளிக்கறதுன்னும் விளங்கிடும். உன் மனசுகிட்டேர்ந்து நீ எப்பவும் தப்பிக்கவே முடியாது. அதனால, பேசாம அது சொல்றதைக் கவனமாக் கேளு. அதிக பட்சமா, அது உன்னைத் தாக்காமலியாவது இருக்கும்' எனச் சொல்லி கடகடவெனச் சிரித்தார்.
சித்தரின் சொற்களால் தைரியமடைந்த கந்தன், மனசோட பேச்சைக் கேக்க ஆரம்பித்தான். தனக்கு ஒண்ணும் ஆயிடக் கூடாதேன்னுதான் அது இத்தனை டான்ஸ் ஆடுது என்பது தெளிவாகப் புரிந்தது.கொஞ்சம் கொஞ்சமாக அவன் பயம் தெளிந்தது. எப்போது வேணும்னாலும் சுதந்திரமா அதோட அவனால் பேச முடிந்தது.
'நான் உன்னை எப்பப் பார்த்தாலும் குறை சொல்லிகிட்டே இருக்கேன்னு நீ நினைக்காதே. இது கிடைக்குமோ கிடைக்காதோன்னு அந்தப் புதையலைப் பத்தி நீ கவலைப் படறப்ப, உன்னால அதிகமா பாதிக்கப்படறது நான் தான்!உன்னோட வலி, வேதனை, ஏமாற்றம் இதெல்லாம் நேரா வந்து என்னைத்தான் அடிக்குது. அதுக்குத்தான், இது மாதிரில்லாம் அப்பப்ப சொல்லி, உன்னை எது நடந்தாலும் தயாரா இருக்கறதுக்கு முயற்சி பண்றேன்.' என்றது அவன் மனசு!
சித்தரிடம் இது பற்றி சொல்லி என்ன செய்யலாம் எனக் கேட்டான்.
'வருத்தப் படப் போறோமோன்னு பயப்படறதை விட , வலியை அனுபவிக்கறது எவ்வளவோ மேலுன்னு அதுகிட்ட எடுத்துச் சொல்லு.ஒரு லட்சியத்தை தேடிகிட்டுப் போறப்ப ஒவ்வொரு நொடியும் நாம கடவுள் பக்கத்துல இருக்கோம் என்பதைப் புரிஞ்சுக்கணும். உண்மையான இறை அனுபவம் எதுன்னா, இது போல ஒரு கனவைத் தேடிகிட்டு போகும்போது கிடைக்கற சந்தோஷமும், திருப்தியும் தான்.ஒரு குறிக்கோளும் இல்லாம ஊருல ஆடு மேய்ச்சுகிட்டு இருந்த உனக்கு இதுவரைக்கும் நடந்ததெல்லாத்தையும் நினைச்சுப் பாரு. நான் சொல்றது புரியும். அதையே உன் மனசுகிட்டயும் சொல்லு'
மனசு இப்ப கொஞ்சம் லேசாகியது. ஒன்றும் பேசாமல் கொஞ்சம் அமைதியாகவும் ஆனது.
அன்றிரவு படுத்திருக்கும் போது அவனுடன் பேசியது.
'மகிழ்ச்சியான மனசுக்குள்ள கடவுள் இருக்காரு. மகிழ்ச்சின்னா என்ன? பணம் காசு இல்லை அது. படைப்பின் அழகை பார்த்து, ரசிச்சு புரிஞ்சுக்கறப்ப வர்ற உணர்வுதான் அது. ஒரு சின்ன மண் துகளைப் பார்த்துக் கூட அது வரலாம். எத்தனை முயற்சிகளுக்கு அப்புறமா அப்படி ஒரு துகள் வந்திருக்குன்னு சிந்திக்கறப்ப ஒரு ஆனந்தம் வருதே, அதான் மகிழ்ச்சி.'
சித்தர் சொன்னதையே இதுவும் சொல்லுதே என வியந்தான் கந்தன்.
'எங்களுக்கும் ஆசை, கனவெல்லாம் இருக்கு. ஆனா, மனுஷங்க ஒரு காலகட்டத்துல எல்லாத்தையும் விட்டுட்டு சராசரி ஆளா இருக்கறதே மேலுன்னு போயிடறாங்க.
சின்ன வயசுல நாங்க ரொம்பவே இந்த கனவெல்லாம் பத்தி, ரொம்பவே விவரமா பேசியிருக்கோம்.
வயசாக, வயசாக, விதியோட போக்குலியே நீங்க போறப்ப, வேற வழியில்லாம நாங்க அதையெல்லாம் ரொம்ப பேசாம இருந்திடறோம். அதுக்காக பேசாமலியே இருக்கறதும் இல்லை. அப்பப்ப, சொல்லிகிட்டுதான் இருப்போம். ஆனா, சத்தமா சொல்றதில்லை!
மறந்திடாதே! பாதிக்கப் படறது நாங்கதான்! நீ உன் கனவை விடாமத் தொடரு. தப்பு வழியில நீ போனா, நான் ஒரு சவுண்டு கொடுக்கறேன்'
எனச் சொல்லிச் சிரித்தது!
'இப்ப நான் என்ன பண்ணனும்?' சித்தருடன் பேச்சுக் கொடுத்தான் கந்தன்.
'புதையலைத் தேடிகிட்டு மஹாபலிபுரம் போகணும்! வழியில தெரியற சகுனங்களைக் கவனமாப் பாரு. அப்பப்ப உன் மனசு சொல்றதையும் கேளு. அது உன்னை சரியான வழியில கொண்டு போகும்'.
'அவ்ளோதானா?'
'இல்லை! அவ்ளோ சுலபமா வேலை முடியாது. உன்னோட புதையல் உனக்குக் கிடைக்கறதுக்கு முந்தி, இந்த உலக ஆத்மா நீ அதுக்குத் தகுதியானவன்தானான்னு பரிட்சை பண்ணும். கத்துகிட்டதெல்லாம் சரியா செஞ்சியான்னு சோதனை கொடுக்கும். அதனால அது ரொம்ப கெட்ட ஆத்மான்னு நினைச்சிராதே. கனவு மெய்ப்படறது மட்டுமில்ல;
அதுக்கான வழிகளையும் ஒழுங்க செஞ்சியான்னு பார்க்கறதுக்காகத்தான் இதையெல்லாம் செய்யுது. அப்பத்தான், இதோட கடுமை தங்க முடியாம, ரொம்பப் பேரு 'வேணாண்டா இதெல்லாம்'னு விட்டுட்டுப் போயிர்றாங்க! தண்ணி கிடைக்கறதுக்கு இன்னும் ஒரு அடி தோண்டினாப் போதும்ன்றப்ப கிணறு தோண்டறதை விட்டுட்டுப் போற
மாதிரி! கவனமாக் கேளு. விடியறதுக்கு முந்திதான் இருட்டு அதிகமா இருக்கும்!'
சொல்லிவிட்டு முன்னே நடந்தார் சித்தர்.
சிறிது தூரம் தான் சென்றிருப்பார்கள்.
திடீரென ஒரு நான்கு பேர் இவர்களைச் சூழ்ந்து கொண்டார்கள். கையில் துப்பாக்கி வைத்திருந்தார்கள்!
*************************************
அடுத்த அத்தியாயம்
29 பின்னூட்டங்கள்:
மனசோட கூச்சல் அதிகமா இருப்பது
நடுத்தூக்கத்தில்தான்.
ரொம்ப சிந்திக்க வைக்கும் வரிகள் இந்தப்பதிவில் நிறைய இருக்கு.
எல்லாத்தையும் விவரிச்சு ஒரு வரியில சுருக்கிட்டீங்களே, டீச்சர்!
::))
முதல்ல வந்து சொன்னதுக்கு மிக்க நன்றி.
Present
Noted and marked!
மனதைக் கட்டுப்படுத்த முடியாமல் நாம் படும் பாடு ... அப்பப்பா
மனதைக் கட்டுப்படுத்த வேண்டுமா ?? மனதிற்கு கட்டுப்பட வேண்டுமா ?
அது தெரிய நாளாகும். அனுபவித்தே அறிவது தான் வாழ்க்கை.
முன்னே வைத்த காலை பின்னே வைக்காமல் இலக்கை நோக்கி சென்று கொண்டே இருக்க வேண்டும்.
பார்க்கலாம்
ரொம்ப தத்துவமா இருக்கே அப்படின்னு சொல்ல வந்தேன், எங்க ரீச்சர் அதையே நல்ல விதமா சொல்லிட்டதால, அவங்க சொன்னதுக்கு....
.... ரிப்பீட்டேய்.
இந்த பகுதியில் என்ன கவர்ந்தது சித்தரின் வழி நடத்தல்தான்.
வழிநடத்த இப்படி ஒரு குரு கிடைப்பாரோ என ஏங்க வைக்கிறது.
//உன் மனசை மட்டும் சரியாப் புரிஞ்சுகிட்டியானா, //
இருக்கிறவரங்களைப்பற்றிய கவலையும் மனதின் தேடல்தானே, அதுமட்டும் எப்படி கந்தனின் மனதில் இருந்து அகன்றது?
எளிதா இருக்கு. ஆனால்,
மனதில் பல நிலைகள் இருப்பதால் அது எந்த மனத்தின் தேடல், எந்த தேடலின் உள்ளர்த்தம் என்ன, அது தேவையானதா இல்லையா என்கிற பெரிய அகத்தாய்வு செய்ய வேண்டும் இல்லையா?
//
'அது சொல்றதும் நியாயமாத்தான் இருக்கு! உன்னோட லட்சியத்தை தேடிகிட்டுப் போறப்ப, இருக்கறதையெல்லாத்தியுமே இழந்திருவோமோன்னு அதுக்கு பயம் வந்திருக்கலாம்.
//
Concervative thinking??
வயசாக, வயசாக, விதியோட போக்குலியே நீங்க போறப்ப, வேற வழியில்லாம நாங்க அதையெல்லாம் ரொம்ப பேசாம இருந்திடறோம். அதுக்காக பேசாமலியே இருக்கறதும் இல்லை. அப்பப்ப, சொல்லிகிட்டுதான் இருப்போம். ஆனா, சத்தமா சொல்றதில்லை!//
சத்தம் போடாத குழந்தையை யாரும் கவனிப்பதில்லை.அழுதாத் தானே பசி தெரியும்.
அப்ப சத்தம் போடவும் தெரியணும்.
சத்தம் கேக்கவும் தெரியணுமா.
ஆத்மஞானம் இது தானா.
கனவு மெய்ப்படறது மட்டுமில்ல;
அதுக்கான வழிகளையும் ஒழுங்க செஞ்சியான்னு பார்க்கறதுக்காகத்தான் இதையெல்லாம் செய்யுது.
Both enduse and the means to reach the same also to be transparent and clean
மீண்டும் ஒரு அரிய கருத்தை முன் வைத்திருக்கிறீர்கள், திரு. சீனா.
முதலில் இந்த மனம் என்பது எது என்பதை சந்தேகமில்லாமல் புரிந்து கொள்ள வேண்டும்.
புத்தி என்கிற அகங்காரத்தைப் பலர் மனம் என நினைத்து, தறிப் போகிறார்கள்.
நீங்கள் சொன்னது போல உள்நோக்கி நிறையக் கேள்விகள் கேட்டு, விடை தேட வேண்டும்.
நன்றி.
இதிலும் ஒன்று சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன், கொத்ஸ்!
தத்துவம் வேறு; ஆன்மீகக் கேள்விகள் வேறு.
தத்துவக் குப்ப்பையைத் தள்ளி, தனக்கு தேவையான உட்கேள்விகளே ஒருவனை மேம்படுத்தும்.
இதில் சொல்லப் பட்டிருப்பவை தத்துவங்கள் அல்ல.
உதாரணமாக,
திருமணம் செய்து கொண்டால் அவஸ்தை என்பது தத்துவம்.
எனக்கு திருமணம் என்ற ஒன்று தேவையா,எதற்கு என அலசிப் பார்ப்பது ஆன்மீகம்.
இங்கு நம்மில் பலரும் இந்த இரண்டிற்கும் வேறுபாடு தெரியாமல்தான் குழம்புகிறோம்.
ஆன்மீகம் என்றால், உள்நோக்கி அறியும் வினா-விடை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
:))
//மனதில் பல நிலைகள் இருப்பதால் அது எந்த மனத்தின் தேடல், எந்த தேடலின் உள்ளர்த்தம் என்ன, அது தேவையானதா இல்லையா என்கிற பெரிய அகத்தாய்வு செய்ய வேண்டும் இல்லையா?//
இப்பத்தான் கொத்ஸுக்கு பதில் சொல்லிவிட்டு வந்தால், அதையே மிகச் சிறப்பாக, தெளிவா சொல்லியிருக்கீங்க திரு. ஜீவா!
நன்றி.
இது கன்ஸெர்வேடிவ் திங்கிங் எனவும் சொல்லலாம், திரு. ம. சிவா.
ஆனால், முந்தைய ஒரு பதிவில் சொன்ன ஒரு விஷயத்தை இங்கு மீண்டும் நினைவு கூர்ந்தால் இது அப்படி இல்லை என்பது புரிய வரும்.
கையில் இருக்கற எண்ணையும் சிந்தாமல், உலக அழகைப் பார்க்கவும் தவறாமல் செல்லணும்.
:))
//அப்ப சத்தம் போடவும் தெரியணும்.
சத்தம் கேக்கவும் தெரியணுமா.
ஆத்மஞானம் இது தானா.//
அடடா!
ஒவ்வொருத்தரும் சொல்றதைப் பார்த்தா ரொம்பவே சந்தோஷமா இருக்கு வல்லியம்மா!
ஞானசம்பந்தர் மாதிரி அழவும் தெரியணும்.
அருணகிரிநாதர் மாதிரி உள்ளே எழும் ஓம்காரத்தையும் கேட்கத் தெரியணும்.
//
Both enduse and the means to reach the same also to be transparent and clean//
மஹா பெரியவரைப் பற்றி உருக்கமாக நீங்கள் எழுதிய ஒரு கதை நினைவுக்கு வருகிறது.
அதிருத்ர யாகப் பிரசாதத்தைக் கொண்டு வந்து பாடம் கற்ற செல்வந்தரின் கதை!
மிகச் சரியாகவே சொல்லியிருக்கிறீர்கள்.
நன்றி.
.
அந்தக்கரணம் என்பதில் 5 விஷயங்கள் இருந்தாலும் அதை 2 ஆகவே சொல்லுகிறார்கள். ஒன்றுக்கொன்று வேறுபாடு கொஞ்சமே. 1.அஹங்காரம் - நான் என்ற நினைப்பு 2. சித்தம் -எண்ணம் thought process 3. புத்தி- நிலையானது. நல்லது கெட்டது போன்ற விஷயங்களை சொல்வது. 4.மனது -அலைபாயும் புத்தி 5.உள்ளம் ஹ்ருதயம் என்று சொல்கிறார்கள் அல்லவா? அது.
மனது.... விசித்திரமான விஷயம். அலைபாய்வதே அதன் இயற்கை. அதை கட்டுப்படுத்துவதும் எளிதே. ஆனால் பழக்கம் வேண்டும். மனதை கவனிக்க ஆரம்பித்தால் அது அடங்கிவிடும். அதன் போக்கில் விட்டு விட்டு அது என்ன நினைக்கிறது என பார்க்கத் துவங்குங்கள். சீக்கிரமே அது அமைதியாகிவிடும். பிரச்சினை என்னவென்றால் அதை கவனிப்பதை நிறுத்திய உடன் அது மீண்டும் பழைய நிலைக்கு சென்று விடும்!
இதைத்தான் சித்தர் சொல்கிறார்.
சீனா: மனதைக் கட்டுப்படுத்த வேண்டுமா ?? மனதிற்கு கட்டுப்பட வேண்டுமா?
அலைபாய்வதே மனசாகையால் அதை கேட்டு நம் செயல்களை அமைக்கக்கூடாது. அதற்கு உள்ளம் என்கிற instinct ஐ கேட்க வேண்டும்.
ஆமாம், மனசில் எவ்வளவு லேயர் இருக்கு? யாருக்கும் அநுபவம் உண்டா? குறைந்தது 3 இருக்கு என்பது என் அநுபவம்.
ரொம்ப போரடிச்சுட்டேனா?
மன்னிக்க!
திவா
//ரொம்ப போரடிச்சுட்டேனா?
மன்னிக்க!
திவா//
போரா? இதுவா!
லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்து நல்லா விளக்கியிருக்கீங்க திரு. திவா!
தொடரட்டும்!
நன்றி!
இத்தனை பகுதிகளிலேயே இந்தப் பகுதி எனக்கு மிகவும் பிடித்திருந்தது!
எதனால் இந்தப் பகுதி உங்களுக்கு "மிகவும்" பிடித்தது எனச் சொல்லி நீங்களும் இந்த ஜோதியில கலந்துக்கலாமே சிபியாரே!
இல்லேன்னா, பித்தானந்தா, சூதாடிச் சித்தர் இவங்களைக் கேட்டாவது சொல்லுங்க சாமி!
:))
இத்தனை நாள் கதையில் கந்தன்(மட்டும்) கற்றுக் கொண்டான்!
இந்த பகுதியில் கந்தனும் கற்றுக் கொண்டான்!
மனதோடு பேசுவதும் அதைச் சமாளிப்பதும் எப்படின்னு!
மனசோட ஆட்டத்துக்கும் அலப்பரைக்கும் என்ன காரணம்னு!
கேட்டதும் அப்படியே 'நச்'சுன்னு சொல்லிட்டீங்களே!சிபியாரே!
//இந்த ஜோதியில கலந்துக்கலாமே//
ஜோதின்னாலே அது அண்ணாமலையார் கோவில் ஜோதிதான்!
அடுத்த மாசமே எறியப் போகுது! எல்லாரும் கலந்துக்குங்க!
சித்தருங்க சொல்றதுல எழுத்துப்பிழைக்குக் கூட அர்த்தம் இருக்கும்னு சொல்லுவாங்க!
எரியுமா, எறியுமா?
சொல்லிடுங்க சித்தரே!:))
இந்த அன்பு என்னும் அருட்பெருஞ்ஜோதி தன்னை நாடி வராதவர் மீதும் எறியப்படும்! அதுவே மானிட உயிர்கள் மட்டுமின்னி உலக உயிர்கள் அனைத்தின் மீதும் காட்டப் படும் தனிப் பெரும் கருணை!
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
சூதாடிச் சித்தன் எழுத்துப் பிழைக்கு சடைவார் குழலனே வந்து பதில் சொல்லி, அதிலும் ஒரு எழுத்துப் பிழை செய்து...... [மட்டுமின்னி]
என்ன நடக்குது இங்கே!
:))
பக்குவப்பட ஆரம்பித்து விட்டானே கந்தன்... நல்லது அடுத்த பகுதிக்கு போறேன் நான் :)
பரவாயில்லை. கிட்டக்க தான் இருக்கீங்க, நாகையாரே!:))
மனிதனேன ஆகிவிட்டால் பிழை செய்வதில் சித்தனென்ன கூத்தாடும் பித்தனென்ன!
மனிதனாய் அவதரித்தால் ஆண்டவனும் தவறிழைக்கத் தவறுவதில்லை என்று எவ்வளவு அழகாய் எடுத்துக் காட்டுகிறான் பார்த்தீரா?
இல்லையெனில் இறைவனுக்கும் மனிதனுக்கும் ஏது வித்தியாசம்?
Post a Comment