"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 30
"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 30
முந்தைய பதிவு இங்கே!
28.
"அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு." [73]
'ம்ம்.. எழுந்திரு! இப்பக் கிளம்பினாத்தான் சரியா இருக்கும்' என்றவாறே கந்தனை எழுப்பினார் சித்தர்.
'எங்கே?' எனக் கேட்டவாறே அவசர அவசரமாய் எழுந்தான் கந்தன்.
அந்த அதிகாலையிலேயே, இருள் இன்னும் மறையாத நேரத்திலேயே, குளித்து முடித்து, நெற்றியிலே பளீரென விபூதி பூசி, ஒரு தேஜஸுடன் திகழ்ந்தார் சித்தர்.
'கிளம்பு. என்கூட வந்து..காணும் உலகில் வாழும் உயிர் காட்டு, பார்க்கலாம்!' என்றார்.
'எப்படி அதைக் காணுவது என எனக்குத் தெரியலியே' என்றான் கந்தன், அப்பாவியாக.
'உயிர் உயிரை அழைக்கும்! உனக்கே புரியும்! வா!' மேலும் புதிர் போட்டார் சித்தர்.
கந்தனுக்கு எதுவோ புரிந்தும் புரியாமலும் போல் தோன்றியது.
ஒன்றும் பேசாமல் முன்னே நடந்தான்.
ஒரு மணிநேர நடைக்குப் பின், ஒரு பாறையருகில் அவன் கால்கள் நின்றன.
மேலே செல்லத் தோன்றவில்லை.
'இங்கே ஒரு உயிர் இருக்குன்னு நினைக்கறேன்' அவனையுமறியாமல் அவன் வாயிலிருந்து சொற்கள் எழுந்தன.
சித்தர் ஒன்றும் பதில் சொல்லாமல், அவன் நின்றிருந்த பாறை அருகே நின்றார்.
பாறையின் அடியில் ஒரு சிறிய பொந்து.
தன் வலது கையை அந்தப் பொந்துக்குள் விட்டவர், ஒரு சில நொடிகளில் கையை வெளியே எடுத்தார்.
அவர் கையில் ஒரு ராஜ நாகம் நெளிந்தது கொண்டிருந்தது.
'பாத்து! பாத்து!கடிச்சுறப் போவுது!' கந்தன் பயத்தில் அலறினான்.
அவனைப் பார்த்து மெல்லச் சிரித்த சித்தர், தன் கையில் இருந்த கம்பால் தரையில்ஒரு வட்டமிட்டு, அதற்குள் அந்தப் பாம்பை மெதுவாக விட்டார்.
'சித்தருக்கு வயசு இருநூறுக்கும் மேலேன்னு சொல்றாங்க' ராபர்ட்டின் குரல் கந்தனுக்குள் கேட்டது.
நாகம் அசைவின்றி அந்த வட்டத்துகுள் சுருண்டது. அப்படியே கிடந்தது.
'பயப்படாதே! அது ஒண்ணும் பண்ணாது. ஒரு உயிரைக் கண்டு பிடிச்சிட்டே! நான் எதிர்பார்த்த சகுனம் எனக்குக் கிடைச்சிடுச்சு' என்றார்.
'என்ன சொல்றீங்க?' ஒன்றும் புரியாமல் அவரைப் பார்த்துக் கேட்டான் கந்தன்.
'உனக்குப் புரியாது. நான் சொல்லுவதை மட்டும் கேட்டுக்க. உன்னை இந்தக் காட்டிலேர்ந்து பத்திரமா மஹாபலிபுரம் கொண்டு சேர்க்கறது இனிமே என் பொறுப்பு. கவலைப் படாதே!' என்றார் அந்த மஹான்.
கந்தனின் குழப்பம் இன்னும் அதிகரித்தது!
'இங்கேதான் நான் பொன்னியைப் பார்த்தேன். எனக்கு இங்கிருந்து போக விருப்பமில்லை. புதையலை விட எனக்கு இது ரொம்ப முக்கியம்'
என்று முரண்டினான் கந்தன்.
'பொன்னி மலைநாட்டுப் பொண்ணு. அதுக்கு தெரியும் ஆம்பளைங்க இப்படி ஒரு விஷயத்துக்காக தூரதேசம் போவாங்கன்னு. அதுக்குத் தேவையான புதையல் அவளுக்குக் கிடைச்சாச்சு. அதான் நீ! இப்ப நீதான், உனக்குன்னு விதிச்ச புதையலை அடையணும். அதான் அவ விரும்பறதும் கூட. சும்மா உளறாதே!' எனச் சற்றுக் கோபமாகச் சொன்னார் சித்தர்.
'நான் இங்கேயே தலைவர் கொடுத்த வேலையைச் செஞ்சுகிட்டு இருந்தா என்ன?' என வீம்புடன் எதிர்க் கேள்வி போட்டான்.
'என்ன ஆகும்னு நான் சொல்றேன் கேட்டுக்கோ! முத்துராசா சொன்ன மாதிரி, நீ ஒரு குறி சொல்ற ஆளா இங்கே இருப்பே. நிறையப் பணம் கிடைக்கும். பொன்னியைக் கல்யாணமும் பண்ணிப்பே.
எல்லாரும் உன்னைக் கொண்டாடுவாங்க. ஒரு வருஷம் போனதும், மறுபடியும் உனக்கு அந்தப் புதையல் நினவுக்கு வரும். ஆன, நீ கிளம்ப மாட்டே! இங்கே கிடைக்கற சொகுசு உன்னைப் போகவிடாது. ஒரு குழந்தை கூட பெத்துப்பே!
மூணாம் வருஷம் ஆனதும், மறுபடியும், அந்த சகுனமெல்லாம் திரும்ப நடக்கும். புதையல் நினைப்பு உன்னை வாட்டும். உன்னோட வாழ்க்கை லட்சியமே அதுதான்னும், நீ இதுவரைக்கும் வாழ்ந்து வந்த வாழ்க்கை அத்தனையுமே வெறும் போலின்னும் புரிய வரும்.
நிம்மதி இல்லாம, குழந்தையையும், பொன்னியையும் விட்டுப் போக மனசில்லாம, இந்தக் காட்டுலியே திரிய ஆரம்பிப்பே. காரணமே இல்லாம பொன்னி மேல உனக்கு கோபம் கோபமா வரும். அவளுக்கும் தான் தான் இத்தனைக்கும் காரணம்னு ஒரு நினைப்பு வந்து அவளை வருத்தும்.
ஆனா, உங்க ரெண்டு பேருக்கும் நடுவில இருக்கற அன்பு மட்டும் குறையாது. ஆனா, உன் உள்மனசு மட்டும் உன்னை அரிச்சுகிட்டே இருக்கும். அவ சொன்ன மாதிரியே நாம அப்பவே போயிருந்தா இந்நேரம் புதையலோட வந்திருப்போமேன்னு அது சொல்லி சொல்லிக் காட்டும். ஆனா, எங்கே, போனா, அவ நமக்கு கிடைக்காம போயிருப்பாளோன்ற பயம் தான் உன்னைப் போக விடாம தடுத்துதுன்னும் உனக்குப் புரியும்.
அப்போ ஒரு குறி உனக்குத் தோணும். இனிமே போயி பிரயோஜனம் இல்லை. இனிமே அந்தப் புதையல் உனக்குக் கிடைக்காதுன்னு! அதுல வெறுத்துப் போயி, நீ இந்த குறி சொல்றதையே நிறுத்த ஆரம்பிச்சிருவே! ஏன்னா, அதுவரைக்கும் உனக்கு மனசுல தெரிஞ்சுகிட்டு இருந்த இந்த குறி சொல்ற வித்தை உன்னை விட்டுப் போயிரும்! இந்த வேலையும் உன் கைய விட்டுப் போயிரும்.
அதுக்குள்ள உனக்கு கொஞ்சம் பணம் சேர்ந்திருக்கும். பொன்னியோட குடும்பம் நடத்திகிட்டே உன் காலம் முடிஞ்சிரும். ஆனா, கடைசி வரைக்கும் உன் மனசை விட்டு,'அடடா! நாம மட்டும் அன்னிக்குப் போயிருந்தோம்னா.....' அப்படீன்னு நினைச்சுகிட்டே மனசுல நொந்துகிட்டு இருப்பே சாவற வரைக்கும்!'
'உனக்கு ஒண்ணு தெரியணும்! காதலோ, அன்போ ஒரு மனுஷன் அவன் அடைய நினைக்கற வாழ்க்கைக்கு ஒரு தடையா இருக்கவே முடியாது!
அந்த நம்பிக்கையை அவன் கை விட்டான்னா, அதுக்குக் காரணம் அவன் வைச்சிருந்த அன்பு உண்மையானது இல்லைன்றதுதான்.
ஏன்னா, அன்பு தான் இந்த உலகம் எல்லாரோடேயும் பேசற ஒரு மொழி.'
பேசி முடித்ததும், பாம்பு படுத்திருந்த வளையத்தின் ஒரு பகுதியைத் தன் காலால் கலைத்தார் சித்தர். பாம்பு அவரை ஒரு பார்வை பார்த்துவிட்டு மெதுவாக ஊர்ந்து சென்று மறைந்தது.
கந்தன் அவர் சொன்னதை எல்லாம் மெதுவாக உள்வாங்கி மனதுக்குள் அசை போட்டான். அவன் மனதில், காசிக்குப் போகணும் என்ற கனவில் வாழும் அண்ணாச்சியும், தங்கம் எடுக்கணும் என்று அலையும் ராபர்ட்டும் நிழலாடி மறைந்தனர். தன் மேல் நம்பிக்கை வைத்துச் சொன்ன பொன்னியும் கூடவே தலை காட்டிச் சிரித்து மறைந்தாள்!
'நான் உங்க கூட வரேன். எனக்கு வழி காட்டுங்க!' எனச் சொல்லி அவர் கால்களில் விழுந்தான் கந்தன்.
சித்தர் ஒரு திருப்தியுடன் அவனைப் பார்த்துச் சிரித்தார்.
'வா, போகலாம்!' என்றார்.
*************************
அடுத்த அத்தியாயம்
22 பின்னூட்டங்கள்:
//அன்பு தான் இந்த உலகம் எல்லாரோடேயும் பேசற ஒரு மொழி.'//
இதுக்குப் பஞ்சம் வந்துதான் இப்படி ஒருத்தரை ஒருத்தர் அழிச்சுக்கிட்டுச் சாகுது இந்த உலகம்(-:
எல்லாருக்கும் புரிஞ்சா.......ரொம்ப நல்லது.
வந்துட்டம்ல!
ஆஹா! உண்மையை உணர்ந்து மகாபலிபுரம் கெளம்பிட்டானா கந்தன்!
அதுதான் அவனுக்கு நல்லது!
present
கிளம்பிட்டானா? நல்லது. சித்தர் கையில் இருக்கான். அதனால கவலை இல்லை!!
////அன்பு தான் இந்த உலகம் எல்லாரோடேயும் பேசற ஒரு மொழி.'//
இதுக்குப் பஞ்சம் வந்துதான் இப்படி ஒருத்தரை ஒருத்தர் அழிச்சுக்கிட்டுச் சாகுது இந்த உலகம்(-:
எல்லாருக்கும் புரிஞ்சா.......ரொம்ப நல்லது.//
ஒண்ணு சொன்னாலும் அதை சிறப்பா சொல்றது டீச்சருக்குக் கை வந்த கலையாஇருக்கு!:)
ஆஹா! எல்லா சித்தருக்கும் இந்தத் தொடர் பிடிச்சிருக்கே!
தொடர்ந்து வந்து சொல்லுங்க போகரே!
:))
//அதுதான் அவனுக்கு நல்லது!//
அதான் சித்தரே கூட்டிட்டுப் போறாரே!
:))
'marked'!!
//நல்லது. சித்தர் கையில் இருக்கான். அதனால கவலை இல்லை!!//
ஒரு மாதிரி திருப்தி தெரியுதே இதுல, கொத்ஸ்!
கவலைப் படாதீங்க!
சீக்கிரமா முடிச்சிடறேன்!
:))
காதலோ, அன்போ ஒரு மனுஷன் அவன் அடைய நினைக்கற வாழ்க்கைக்கு ஒரு தடையா இருக்கவே முடியாது!
நிச்சயமாக காதலும் அன்பும்
ஒருவனுடைய வளர்ச்சிக்கு அடிப்படை ஆதாரம்
அழகா சொல்லியிருக்கார் சித்தர்
நல்லதொரு கருத்தை சொன்னதற்கு நன்றி, 'வளர்'!
இப்பொ தினமும் ஸ்ரீ வேளுக்குடி ஆத்மா ஒண்ணுதான் நிரந்தரம்னு மீண்டும் மீண்டும் சொல்கிறார்.
அதுபடி பார்த்தாக்கூட ஆத்மார்த்தமாக ஒரு வெற்றியைத் தேடிப் போகத்தான் வேண்டும்.
கடலில் கலப்பதற்கு முன்னால பூமியை வளம் பெறச்செய்யும் ஆறு மாதிரி.
வெகு அழகாச் செல்லுகிறான் கந்தன்.
//
காதலோ, அன்போ ஒரு மனுஷன் அவன் அடைய நினைக்கற வாழ்க்கைக்கு ஒரு தடையா இருக்கவே முடியாது!
அந்த நம்பிக்கையை அவன் கை விட்டான்னா, அதுக்குக் காரணம் அவன் வைச்சிருந்த அன்பு உண்மையானது இல்லைன்றதுதான்.
//
உண்மைதான்.
கந்தன் ஒருவழியா கிளம்பிட்டான் சித்தர்கூட
அனுபவங்கள் நிறைந்ததுதானே வாழ்க்கை வல்லியம்மா?
இந்த அனுபங்களிலிருந்து என்ன பாடம் கற்கிறோம், எப்படி மேம்படுகிறோம் என்பதைப் பொருத்தே எல்லாருடைய வாழ்க்கையும் அமைகிறது என்பது என் கருத்து.
நன்றி.
அதுக்குத்தானே இந்தப் பாடு!
:))
நன்றி, திரு.ம.சிவா.
//கடைசி வரைக்கும் உன் மனசை விட்டு,'அடடா! நாம மட்டும் அன்னிக்குப் போயிருந்தோம்னா.....' அப்படீன்னு நினைச்சுகிட்டே மனசுல நொந்துகிட்டு இருப்பே சாவற வரைக்கும்!'//
சத்தியமான உண்மை. ரொம்பவே யோசிச்சு எழுதி இருக்கிங்க எஸ். கே. வாழ்த்துக்கள் :)
இந்தப் பகுதியை நான் ரொம்பவுமே ரசிச்சேன். நல்லாச் சொல்லீருக்கீங்க. அருமை.
மிக்க நன்றி, நாகை.சிவா மற்றும் ஜி.ரா.
இவ்வளவு பெரிய கதையின் பதிவில் சரியாக பதிவின் மூலக் கருத்தான - முக்கியக் கருத்தான - வைர வரிகளைத் தேடிப் பிடித்து மறு மொழி இடுகிறார் துளசி. திறமைசாலி. உடன்படுகிறேன் அவரது கருத்துக்கு.
பொன்னியின் மனதையும் கந்தனின் தலை விதியையும் சித்தர் அழகாக எடுத்துக் காட்டுகிறார்.
கதை முடியும் தருணம் வந்து விட்டது. பொறுத்திருப்போம்.
//இவ்வளவு பெரிய கதையின் பதிவில் சரியாக பதிவின் மூலக் கருத்தான - முக்கியக் கருத்தான - வைர வரிகளைத் தேடிப் பிடித்து மறு மொழி இடுகிறார் துளசி. திறமைசாலி. உடன்படுகிறேன் அவரது கருத்துக்கு.//
அதை இவ்வளவு சிறப்பாக எடுத்துச் சொல்லவும் ஒரு சீனா தேவைப்படுகிறது!
:)))
ரொம்ப அழகாச் சொல்லியிருக்கீங்க, திரு. சீனா! நன்றி!
கண்கள் கலங்கின. காரணம் தெரியவில்லை.
Post a Comment