Sunday, November 04, 2007

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 32

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 32

முந்தைய பதிவு இங்கே!


30.
" தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய
மன்னுயி ரெல்லாம் தொழும்." [268]

மலைக்காட்டுக்குள் வேகமாக நடந்தார் சித்தர். அவர் பின்னால், கந்தனும்.... அவர் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல்!


கிடு கிடுவென மலைப்பாதையில் ஏறிச் சென்று கொண்டிருந்த சித்தர், இவன் பின் தங்குவதைக் கவனித்து, ஆங்காங்கே நின்று, அவனுக்காக காத்திருந்தார். அவ்வப்போது சில தழைகளைப் பறித்து அவைகளை மென்று தின்னச் சொன்னார். களைப்பு சட்டென மறைந்தது கந்தனுக்கு. இந்தக் காட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கும் தெரிந்தவர் போலிருக்கே என வியந்தான்.

உச்சிவெய்யில் தலையைச் சுட்ட போது, ஒரு மரத்தடியில் உட்கார்ந்து இருவரும் இளைப்பாறினர்.

'இனிமே உன் கவனம் முழுக்க வரப்போறதைப் பத்தி மட்டுமே இருக்கணும். விட்டுட்டு வந்ததையே நினச்சுகிட்டு இருக்கக் கூடாது' என்றார்.

அவர் எதைக் குறிப்பிடுகிறார் எனக் கந்தனுக்குப் புரிந்தது.

ஒருவித ஆயாசத்துடன், 'எப்படா வீடு திரும்புவோம்னு தானே கிளம்பறவங்களுக்கெல்லாம் இருக்கும். இது சகஜம்தானே. இதுல என்ன தப்பு?' எனப் பதிலுக்கு வினவினான்.

'நீ விட்டுட்டு வந்தது ஒரு உண்மையான பொருள்னா, அது கெட்டுப் போகாது. எப்ப நீ திரும்பினாலும் அது உன்கிட்ட வந்திரும். ஆனாக்க, நீ பாத்தது வெறும் ஒரு மின்னல் அல்லது எரிநட்சத்திரம்னா, திரும்பறப்ப அது அங்கே இருக்காது. உலகத்தோட ஆத்மா இதையெல்லாம் சரியாக் கவனிச்சுகிட்டே இருக்கும்.'

கந்தனுக்கு லேசாக மனது வலித்தது. பொன்னி இப்ப ஒரு உண்மையா இல்லை மின்னலா என! '


இவர் பெரிய சித்தரா இருக்கலாம். ஆனா, இவருக்கு காதலைப் பத்தி என்ன தெரியும்?' என மனதுக்குள் எண்ணிக்கொண்டான். சிரிப்பு வந்தது.

அதைப் பார்த்த சித்தரும் சிரித்துக் கொண்டே, ' இவனுக்கு என்ன தெரியும்னுதானே நினைக்கறே? எல்லாத்துக்கும் விடை சீக்கிரமே உனக்குத் தெரியும். சரி, கிளம்பு போகலாம். இருட்டறதுக்குள்ள காட்டைத் தாண்டிறணும்' என நடையைக் கட்டினார்.

ஏதோ புரிந்தது போல் இருந்தது கந்தனுக்கு. எழுந்து அவரைப் பின் தொடர்ந்தான்.

மலை அடிவாரத்துக்கு வந்ததும், ஊருக்குள் செல்லாமல், ஒரு குறுக்குப் பாதையில் நடக்கத் தொடங்கினார்கள்.

'சண்டை இன்னும் ஓயலியாம். நாம ஊருக்குள்ள போகவேணாம்' என ஒரு காரணம் சொன்னார்.

'இந்த சண்டையெல்லாம் எதுக்காக நடக்குது?' என்க் கேட்டான் கந்தன்.

'இதுக்கு பதில் சொல்வது ரொம்ப சுலபம். புரிந்து கொள்வது கடினம். மனுஷன் தான் யாருன்றதை உணராம, மதத்துக்கு அடிமையாகி, தன்னை மறந்து போனதால வருவது இதெல்லாம்!' என்றார் சித்தர்.

'புரியலியே! மதம்னு எதைச் சொல்றீங்க?' என்றான் கந்தன்.

'ஒவ்வொரு மனுஷனுக்குள்ளயும் நாலு பேர் ஒளிஞ்சிருக்காங்க! இப்ப, உன்னையே எடுத்துக்குவோம்! ஒண்ணு நாந்தான் இதுன்னு நினைக்கற கந்தன். ரெண்டாவது, நீ இன்னாருன்னு மத்தவங்க நினைக்கற கந்தன்; மூணாவது நீ இதாண்டான்னு உன்னை ஆட்டி வைக்கிற கந்தன்; நாலாவது, இதையெல்லாத்தையும் சத்தம் போடாம பார்த்துக்கிட்டிருக்கற கந்தன்!


தான் இன்னாருன்னு தெரிஞ்சவங்க ரொம்ப ரொம்ப சாதாரணமா தங்களோட வாழ்க்கையை வாழ்ந்திட்டுப் போயிருவாங்க!
மத்தவங்க தான் இன்னாருன்னு நினைக்கற நினைப்புக்காக வாழறவங்க, கூத்தாடி மாதிரி, மத்தவங்க என்ன கேக்கறாங்களோ, அதை ஆடிட்டுப் போயிருவாங்க!
இந்த மூணாவது ஆளுங்கதான் கொஞ்சம் மோசம்! இவங்களை நம்பித்தான் இந்த உலகமே இயங்கறதா நினைச்சுப்பாங்க! அதுக்காக என்ன செய்யவும் தயங்க மாட்டாங்க! முதலில் சொன்ன மத்த ரெண்டு ஆளுங்களையும் இவங்களால வளைச்சுற முடியும்... பயமுறுத்தியோ, இல்லை, மயக்கியோ!
இது மாதிரி ஆளுங்களாலதான் இது மாதிரி சண்டையெல்லாம் வருது.
நான் சொன்ன நாலாவது ஆளுங்க, ரொம்பவே கொஞ்சம் தான். அவங்களுக்கு இதெல்லாமே ஒரு மாயைன்னு புரிஞ்சதால, இதைப் பத்தி கண்டுக்க மாட்டாங்க! இது தன்னைப் பாதிக்கவும் விடமாட்டாங்க!
சரி, சரி! இன்னிக்கு இது போதும்! இப்போ கொஞ்சம் ஓய்வு எடுக்கலாம்!'
என்றார் சித்தர்.

ஒரு பரந்த மைதானத்தில் ஓங்கி உயரமாய் வளர்ந்திருந்த ஒரு புளியமரத்தின் அடியில் தன் துண்டை விரித்து, அதில் உட்கார்ந்தார். கழுகு அவர் தோளிலிருந்து பறந்து மரத்தில் ஒரு கிளையில் போய் அமர்ந்தது.

'இனிமே காலைலதான். நல்லாத் தூங்கு.' என அதனுடன் பேசினார்.

பையில் இருந்து சில பழங்களையும், வேகவைத்த சில கிழங்குகளையும் எடுத்து கந்தனைச் சாப்பிடச் சொன்னார்.

'நீங்க சாப்பிடலியே' என அவரிடம் நீட்டினான்.

'நான் என்னைப் பாத்துக்கறேன். நீ உன் வேலையைப் பாரு' எனச் சொல்லிவிட்டு, கண்களை மூடியவண்ணம், நிமிர்ந்து உட்கார்ந்தார். அவர் வாய் எதையோ முணுமுணுத்தது. நடந்த களைப்பில் கந்தன் அப்படியே உறங்கிப் போனான்.
*********

இப்படியே 5 நாட்கள் கழிந்தன. வழியில் எங்கும் அதிகமாகத் தங்கவில்லை. நடை, சற்று ஓய்வு, வழியில் கிடைத்ததை வாங்கி கந்தனுக்கு உணவு. அவர் மட்டும் ஏதோ சில பச்சிலைகளை மென்று வந்தார். அவ்வப்போது கந்தனுக்கும் கிடைத்தது.

'கிட்டத்தட்ட நீ போகவேண்டிய இடத்துகிட்ட வந்தாச்சு. எதுக்கும் கலங்காம, நீ இவ்ளோ தூரம் வந்ததுக்கு உன்னைப் பாராட்டணும். துடியான புள்ளைதான் நீ!' என் அவனைச் சிலாகித்தார்.

'எதுனாச்சும் விஷயம் சொல்லுவீங்க. கத்துக்கலாம்னு நினைச்சே. ஆன, வழி பூரா நீங்க ஒண்ணுமே பேசலை.தங்கம் எப்படி பண்றதுன்னு ஒருத்தர் எனக்கு சில புஸ்தகத்திலேர்ந்து படிச்சுக் காட்டினாரு. ஒண்ணும் புரியலை. நீங்க எதாவது விளக்கம் கொடுப்பீங்கன்னு எதிர்பார்த்தேன்.' என்றான் கந்தன்.

'அதுக்காக நீ என்னோட வரலை. உன் லட்சியம் வேற. கத்துக்கறதுக்கு ஒரே ஒரு வழிதான் இருக்கு. செயல்! செஞ்சு பாத்துதான் எதையுமே கத்துக்க முடியும்.
உனக்கு என்ன தெரியணுமோ அதெல்லாம் இந்த அஞ்சு நாள்ல நீ கத்துகிட்டாச்சு! இன்னும் ஒண்ணே ஒண்ணுதான் மீதி இருக்கு.'

சொல்லிவிட்டு, வானத்தை அண்ணாந்து பார்த்தார் சித்தர்.

'என்ன கத்துகிட்டோம்? ஒண்ணும் புரியலியே! இதுபற்றி மேலும் எதாவது சொல்லுவார்' எனக் கந்தன் அவரை ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தான். அனால், சித்தர் தன் பார்வையை வானத்தை விட்டு அகற்றவே இல்லை.

சரி, வேறு பேசலாம் என எண்ணிய கந்தன், 'உங்களை ஏன் சித்தர்னு சொல்றாங்க?' என்றான்.

'ஏன்னா, அதான் நான்' எனப் பதில் வர கந்தன் விழித்தான்.

'காட்டுல இன்னும் நிறைய சித்தருங்க இருக்கறதா சொல்லிக்கறாங்களே. அதெல்லாம் உண்மையா? உங்களுக்கு அவங்களைத் தெரியுமா? நீங்க அவங்களைப் பார்த்திருக்கீங்களா? தங்கம் பண்ணத் தெரிஞ்சவர் நீங்க ஒருத்தர்தான்னு சொல்றாங்களே! ஏன் அப்படி?' எனக் கேள்விகளை அடுக்கினான்.

'இருக்காங்க. அவங்க அவங்களுக்கு விதிச்சதை செஞ்சுகிட்டு நிறையப் பேர் இருக்காங்க. அவங்கள்ல்லாம் இதைச் செய்ய முடியாம போனதுக்குக் காரணம், இந்த வாழ்க்கை விதியோட முடிவைத் தெரிஞ்சுக்கணும்னே தேடினதாலதான். முடிவைத் தேடக் கூடாது. அதுலியே பயணம் செஞ்சுகிட்டு இருக்கணும். முடிவு தானா வரும்.'

'இன்னும் ஏதோ ஒண்ணு நான் தெரிஞ்சுக்க வேண்டியது இருக்குன்னு சொன்னீங்களே' என நினைவூட்டினான்.

அதைக் காதில் வாங்காதவர் போல, சித்தர் தொடர்ந்தார்.

'இதைத் தேடிகிட்டு நான் போகலை. தானா ஒருநாள் எனக்கு சித்தியாச்சு இந்த வித்தை. அதைச் செஞ்சு பாத்ததுல, இது உண்மைதான்னு புரிஞ்சுது. இதோட சூட்சுமம் ரொம்ப ரொம்ப சாதாரணமானது. ஆனா, என்ன பண்ணிட்டாங்கன்னா, இவ்வளவு எளிமையான இதை, விதி, வழிமுறை, ரகசிய வார்த்தைகள், வழிகள் அப்படி இப்படீன்னு ஆளாளுக்கு குழப்பி எழுதி வைச்சுட்டுப் போயிட்டாங்க. அது மட்டுமில்ல. தன் வழிதான் மத்த வழிகளை விடச் சிறந்ததுன்னும் சொல்லிட்டுப் போயிட்டாங்க. அதனால, இதைப் படிக்கறவங்களும், தன்னோட வழிதான் மத்ததெல்லாத்தையும் விட உசத்தின்னு குழப்பறாங்க.'

'அப்படி என்னதான் அந்த சுலபமான வழி?' மெதுவாக அவரை ஆழம் பார்த்தான் கந்தன்.

சித்தர் அவன் சொல்லியதை கவனிக்காத மாதிரி, எழுந்து, தன் கையில் இருந்த கம்பால், தரையில் எதையோ எழுதினார்.

அதைப் பார்த்துக் கொண்டிருந்த கந்தனுக்கு அவனையும் அறியாமல், தங்கமாலை அணிந்த அந்தப் பெரியவரின் முகம் ஒரு நொடி தோன்றி மறைந்தது.

'சிப்பியாக் கூட நான் வருவேன்' அவர் சொன்னதும் காதில் ஒலித்தது!

'இதான் அந்த வழி!' என சித்தர் சொன்னது அவனை மீண்டும் நிகழ்வுக்குக் கொண்டு வந்தது.

'இதுவும் ஒரு ரகசிய வழி மாதிரித்தான் இருக்கு. இதே போலத்தான் ராபர்ட் வைச்சிருந்த புஸ்தகத்துலியும் இருந்திச்சு' எனச் சற்று ஏமாற்றத்துடன் சொன்னான் கந்தன்.

'இல்லை. இது அப்படி இல்லை. நீ பாத்தியே அந்த ரெண்டு கழுகுங்க. அதுமாரித்தான் இதுவும். அதுங்க சொன்ன சேதி உனக்கு மட்டுமே புரிஞ்சுது. அதேமாதிரி, காரணம் தெரிய வேண்டியவங்களுக்கு இது சட்டுன்னு புரியும்.
அதான் இந்த உலகத்தோட சூட்சுமம். விவரம் தெரிஞ்சவங்களுக்கு இது புரியும். இந்த உலகத்தை பாக்கறப்பவே அவங்களுக்குப் புரிஞ்சிடும் இது வெறும் மாயை...
அதாவது உண்மையா இருக்கற ஒண்ணோட பிரதிதான் இதுன்னு. அந்த 'உண்மை' வேற எங்கியோ இருக்கு. அதைத் தேடணும்னு அவங்க முயற்சி பண்ண ஆரம்பிப்பாங்க.
இவ்ளோ அழகான விஷயங்களைப் படைச்ச ஆண்டவன், இதையெல்லாம் பார்த்து, ரசிச்சு, உணர்ந்து, இது மூலமா என்ன சொல்ல வராருன்னு கண்டுபிடிக்கப் பார்ப்பாங்க. அவன்தான் சித்தன்!'

என்னாலேயும் இதைப் புரிஞ்சுக்க முடியுமா?' என்றான் கந்தன் ஒருவிதப் பரவசத்துடன்.

'ஆரு கண்டா? ஒருவேளை நடந்தாலும் நடக்கலாம்! இருக்கற இடத்துல உன்னைச் சுத்தி இருக்கற, நடக்கறதைக் கவனமாப் பாரு. அதுலியே அப்படியே ஆழ்ந்து போகணும். உள்ளே போகப் போக, நீ எதையும் புரிஞ்சுக்காமலியே எல்லாம் புரிய ஆரம்பிக்கும் உனக்கு.'

பேசியபடியே, தரையில் வரைந்ததைக் கையால் அழித்துவிட்டு, ஒரு கைப்பிடி மண்ணை வாரினார். 'இதோ இந்த மண்ணுல இருக்கற ஒரு துகளை மட்டும் பாரு. இது எப்படி இருக்கு. எப்படி வந்திச்சுன்னு தியானம் பண்ணு. கடவுளோட சிருஷ்டி ரகசியம் புரியவரும்... அவன் அனுக்கிரகம் இருந்தா!'

'தியானம் எப்படிப் பண்றது?'

'என்னைக் கேக்காதே. உன் இதயத்தைக் கேளு! அது சொல்லிக் கொடுக்கும். அதுக்குள்ள இருக்கற ஆத்மாவைப் பார்க்கறதுக்கு முயற்சி பண்ணு. அது தெரியவரும் போது உனக்குப் புரியும், இந்த உலகத்தோட ஆத்மாவுக்கும் அதுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லேன்னு. எல்லாமே ஒண்ணுதான். இந்த மண்ணும் சரி; மத்தவங்களும் சரி; நீயும் சரி.'

சொல்லியவாறே நிஷ்டையில் ஆழ்ந்தார் சித்தர்.
*****************************


அடுத்த அத்தியாயம்

38 பின்னூட்டங்கள்:

VSK Thursday, November 08, 2007 4:54:00 PM  

அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்!

:))

துளசி கோபால் Thursday, November 08, 2007 5:37:00 PM  

//'இனிமே உன் கவனம் முழுக்க வரப்போறதைப் பத்தி மட்டுமே இருக்கணும். விட்டுட்டு வந்ததையே நினச்சுகிட்டு இருக்கக் கூடாது' என்றார்.//

இது ஒருவிதத்தில் சரின்னாலும், இருக்கறதை விட்டுட்டுப் பறக்கறதைப் பிடிக்கறது மாதிரிதான்.
மனுசமனசு எப்பவும் கடந்தகாலத்தையே சுத்திக்கிட்டு இருக்குன்றது உங்களுக்குத் தெரியாதா? இல்லேன்னா இவ்வளோ கொசுவத்தி இங்கே கிடைக்குமா? :-))))
இன்னைக்குன்றதை அனுபவிக்கப் படிக்கணும். 'ஒன் டே அட் அ டைம்'.
மனசு லேசாகிப்போகும். நாளைக்கு இருப்போமுன்னு யாருக்குத்தெரியும்?

( இப்படிச் சொன்னாலும் இட்லிக்கு மாவு அரைச்சு வச்சுக்கறென்)

ஜெயஸ்ரீ Thursday, November 08, 2007 5:49:00 PM  

இனிய தீபாவளி வாழ்த்துகள் VSK !!

jeevagv Thursday, November 08, 2007 9:52:00 PM  

//உன் இதயத்தைக் கேளு! அது சொல்லிக் கொடுக்கும்//
Salutes VSK Sir!

VSK Thursday, November 08, 2007 10:13:00 PM  

வரப்போறதை பத்தி நினைக்கச் சொல்றாரே, டீச்சர்.

அதுவும் இதை எல்லாருக்கும் எப்போதும் சொல்லப்படும்கருத்தல்ல.

ஒரு கனவைத் தேடிச் சென்று, அதன் இறுதி முயற்சியை எடுக்கும் நேரத்தில் 'கவனத்தைச் சிதறவிடாதே', இப்போது எனக் கந்தன் போன்றோருக்கு சொல்லப்பட்ட அறிவுரை.

இட்லி மாவுகூட நாளைக்குத்தானே!
:))

VSK Thursday, November 08, 2007 10:14:00 PM  

மிக்க நன்றி, ஜெயஸ்ரீ அவர்களே!

உங்கள் தீபாவளியும் இனிதே நடந்திருக்கும் என நம்புகிறேன்.

VSK Thursday, November 08, 2007 10:15:00 PM  

மிக்க நன்றி, ஜீவா அவர்களே!

Baby Pavan Thursday, November 08, 2007 10:23:00 PM  

தாத்தா குட்டீஸ்ன் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்...

Anonymous,  Thursday, November 08, 2007 10:26:00 PM  

விளக்கமெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா கந்தனுக்கு கிடைச்சிகிட்டிருக்கு போல!

நடக்கட்டும் நடக்கட்டும்!

VSK Thursday, November 08, 2007 10:44:00 PM  

பேபி பவனின் தீபாவளி வாழ்த்துக்கும், குறும்புச்சித்தரின் ஆசிக்கும் நன்றி!

VSK Thursday, November 08, 2007 11:02:00 PM  

எல்லாரும் தீபாவளி பிஸி போல! எல்லாம் அட்டெண்டன்ஸ் கொடுத்திட்டு ஓடறாங்க!
சரிங்க கொத்ஸ்!

மங்களூர் சிவா Friday, November 09, 2007 12:35:00 AM  

தீபாவளி வாழ்த்துக்கள்.

தி. ரா. ச.(T.R.C.) Friday, November 09, 2007 5:46:00 AM  

ஒண்ணு நாந்தான் இதுன்னு நினைக்கற கந்தன். ரெண்டாவது, நீ இன்னாருன்னு மத்தவங்க நினைக்கற கந்தன்; மூணாவது நீ இதாண்டான்னு உன்னை ஆட்டி வைக்கிற கந்தன்; நாலாவது, இதையெல்லாத்தையும் சத்தம் போடாம பார்த்துக்கிட்டிருக்கற கந்தன்

ஓ இதுதான் four dimentions of human beeing என்பதா. சுலபமா சொல்லிட்டீங்களே

Anonymous,  Friday, November 09, 2007 6:59:00 AM  

//தாத்தா குட்டீஸ்ன் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்...//

தவறு! திருத்திக் கொல்லுங்கள் பவன்!

கொள்ளுத் தாத்தா என்று இருக்க வேண்டும்!

Anonymous,  Friday, November 09, 2007 8:45:00 AM  

//கந்தன் போன்றோருக்கு //

!????????????????????????????????????????????????????????????????????

VSK Friday, November 09, 2007 8:59:00 AM  

நீங்களும் இன்னிக்கு வாழ்த்தோட மட்டும் அபீட்டா, திரு. ம. சிவா!

நன்றி!
:))

வல்லிசிம்ஹன் Friday, November 09, 2007 9:01:00 AM  

இந்தச் சித்தர் எங்க இருக்காரோ.
போய்ப் பார்க்க ஆசையாக இருக்கிறது:))

அவர் கருத்துக்களை படித்தால் மட்டும் போதுமே.
புத்தி தெளியுமே.

VSK Friday, November 09, 2007 9:01:00 AM  

இதைப் பற்றி இன்னும் கொஞ்சம் சொல்ல ஆசை. அடுத்த பதிவில் பார்க்கலாம்.
நன்றி, திரு. தி.ரா.ச ஐயா!
இனிய தீபாவளி வாழ்த்துகள்!

VSK Friday, November 09, 2007 9:02:00 AM  

//தவறு! திருத்திக் கொல்லுங்கள் பவன்!

கொள்ளுத் தாத்தா என்று இருக்க வேண்டும்!//

சீக்கிரம் ஒரு முடிவுக்கு வாங்கப்பா!
:))

cheena (சீனா) Friday, November 09, 2007 9:13:00 AM  

காலத்தின் குரல் said...
//தவறு! திருத்திக் கொல்லுங்கள் பவன்!//

என்னாது ?? கொல்றதா ?? எழுத்துப் பிழை தவிர்க்க காலத்தின் குரலே !!

cheena (சீனா) Friday, November 09, 2007 9:15:00 AM  

//துளசி, இருக்கறதை விட்டுட்டு
பறக்கறதை பிடிக்கறது ??

சரியாச் சொன்னீங்க துளசி
உங்க வீட்டிலேயும் இட்லி தானா ?? எங்க வீட்லெ டெய்லி இட்லி தான்

cheena (சீனா) Friday, November 09, 2007 9:20:00 AM  

தத்துவங்கள் நிறைந்த கதை. கந்தன் சரியான துணையுடன் சென்று கொண்டிருக்கிறான்.

கந்தன் யார் - சுய சோதனை செய் - உண்மையான, சித்தரின் வாக்கு.

கவனம் சிதறாதே !! அர்ச்சுணணுக்கு தெரிவது பழம் மட்டுமே - மரமோ, இலைகளோ, தடங்கல்களோ அல்ல

மண்ணிலே தங்கத்துகள் ???
பொறுத்திருந்து பார்ப்போம். ஆவலைத் தூண்டுகிறார்

VSK Friday, November 09, 2007 9:33:00 AM  

////கந்தன் போன்றோருக்கு //

!???????????????????????????????????????????????????????????????????//

எல்லாருமே எப்போதுமே ஒரு கனவைத்தேடிப் போவதில்லை, நண்பரே!

அப்படியே போகும்போது கூட இந்த அறிவுரையைப் பின்பற்றணும் என்னும் அவசியமில்லை.

ஆனால், கனவு மெய்ப்படும் நேரம் கிட்டி வரும்போது, அந்த இறுதி நேரத்திலாவது, சென்றதை நினைத்து எண்ணத்தைச் சிதறவிடாமல், இனி நிகழ்வதைக் குறித்தே முழுக்கவனமும் இருக்க வேண்டும் என சித்தர் சொல்கிறார்.

கந்தன் இதுவரையில் பல சோதனைகளுக்கு ஆளாகி, இப்போது சித்தரின் துணை கொண்டு, தன் கனவை நோக்கி செல்லத் தொடங்குகிறான்.

அதனால்தான் கந்தனை உதாரணமாகச் சொன்னேன்.

VSK Friday, November 09, 2007 9:41:00 AM  

//இந்தச் சித்தர் எங்க இருக்காரோ.
போய்ப் பார்க்க ஆசையாக இருக்கிறது:))

அவர் கருத்துக்களை படித்தால் மட்டும் போதுமே.
புத்தி தெளியுமே.//


கேள்வியும் கேட்டு அதற்கான விடையையும் 'டக்'குன்னு சொல்லிட்டீங்களே வல்லியம்மா!
:))

VSK Friday, November 09, 2007 9:44:00 AM  

//சரியாச் சொன்னீங்க துளசி//
"இருக்கறதை" விடச் சொல்லலியே, திரு. சீனா!
விட்டுட்டு வந்ததைYஏ நினைக்காதேன்னு தானே சொன்னார்!
'சென்றதினி மீளாது'ன்னு பாரதி பாடினது போல!
கலீல் கிப்ரான் கூட இதுபோல ஒண்ணு சொல்லியிருக்காரு!

வழக்கம் போல பதிவின் சாரம்சத்தைத் தொகுத்து சொன்னமைக்கு நன்றி!

வல்லிசிம்ஹன் Saturday, November 10, 2007 2:55:00 AM  

தனக்குத் தானே பேசிக்கிற வழக்கம் விஎஸ்கே சார்.
இங்கயும் பேசிட்டேன்...

திவாண்ணா Sunday, November 11, 2007 3:32:00 AM  

NOT for publishing

அல்கெமிஸ்ட் இன் தமிழ் தழுவல் நன்றாகவே இருக்கு. எவ்வளவு பேர் இதன் மூலத்தை படித்துவிட்டும் இதை படிக்கிறார்கள் என்று யோசனை வந்தது.

TO publish
நேற்று இந்த பக்கத்தை தற்செயலாக பார்த்து முழுதும் படித்து முடித்தேன்! சுவாரஸ்யமாக கொண்டு போகிறீர்கள்! கதையை விட பின்னூட்டங்களின் சுவை அதிகம். வாழ்த்துக்கள்.
திவா

நாகை சிவா Sunday, November 11, 2007 6:30:00 AM  

கந்தன் இனி தனியாக தன் பயணத்தை தொடருவான் போல இருக்கே :)

VSK Sunday, November 11, 2007 11:10:00 AM  

//நேற்று இந்த பக்கத்தை தற்செயலாக பார்த்து முழுதும் படித்து முடித்தேன்! சுவாரஸ்யமாக கொண்டு போகிறீர்கள்! கதையை விட பின்னூட்டங்களின் சுவை அதிகம். வாழ்த்துக்கள்.
திவா //

இன்னும் மீதியையும் படித்து, முடிவுரையையும் தவறாம படிச்சிட்டு சொல்லுங்க, திரு.திவா.

நன்றி.

VSK Sunday, November 11, 2007 11:12:00 AM  

சித்தரும் கூட வராறே, நாகையாரே,.... இப்போதைக்கு!
:))

Anonymous,  Sunday, November 11, 2007 1:49:00 PM  

//சித்தரும் கூட வராறே//

சித்தர் மட்டுமா!

நாம எத்தனை பேர் கூட போறோம்!

Anonymous,  Sunday, November 11, 2007 1:50:00 PM  

//சித்தரும் கூட வராறே//

சித்தர் அழைத்துக் கொண்டு செல்பவர்!

அவரை எப்படிக் கூட வருபவராகச் சொல்ல முடியும்?

அரை பிளேடு Sunday, November 11, 2007 1:54:00 PM  

//'நீ விட்டுட்டு வந்தது ஒரு உண்மையான பொருள்னா, அது கெட்டுப் போகாது. எப்ப நீ திரும்பினாலும் அது உன்கிட்ட வந்திரும். ஆனாக்க, நீ பாத்தது வெறும் ஒரு மின்னல் அல்லது எரிநட்சத்திரம்னா, திரும்பறப்ப அது அங்கே இருக்காது. உலகத்தோட ஆத்மா இதையெல்லாம் சரியாக் கவனிச்சுகிட்டே இருக்கும்.//


எனக்கு மிகவும் பிடித்த வரிகள்.

நன்றி.

VSK Sunday, November 11, 2007 6:33:00 PM  

அதைக் கந்தன் சொல்வதாகப் பார்த்தால் இலக்கணப்பிழை வராது 'இலக்கணச் சித்தரே!'!!
:))

VSK Sunday, November 11, 2007 6:33:00 PM  

மிக்க நன்றி, 'அரைபிளேடு' அவர்களே!

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP