Sunday, February 01, 2009

"உந்தீ பற!“ - 8

"உந்தீ பற!“ - 8

”பகவான் ரமணரின் “உபதேச உந்தியார்”

[முந்தைய பதிவு]

பாவ பலத்தினாற் பாவனா தீசசற்
பாவத் திருத்தலே யுந்தீபற
பரபத்தி தத்துவ முந்தீபற. [9]


பாவ பலத்தினால் பாவனாதீச
சற்பாவத்து இருத்தலே உந்தீ பற
பரபத்தி தத்துவம் உந்தீ பற.


அன்னியம் அனையம் இரண்டினும் மேன்மை
பாவனாதீதம் [bhaavanaathiitham] எனுமொரு நிலையே
[ஏதும் இல்லா ஒரு நிலையதுவே]

ஏதொரு ஒருவமும் வெளியிலோ உள்ளிலோ
இருத்தலில் ஈர்ப்பெனும் ஒருநிலை வரலாம்

அதனைப் பற்றிய கவனம் மிகுந்து
அடுத்ததைப் பழிக்கும் தீதும் வரலாம்

ஏதும் இல்லா சற்பாவத்தில் இருத்தலே
பரபத்தி தத்துவம் என்பதை அறியலாம்.


வெளியில் இருக்கின்ற ஒரு உருவத்தின் மீது பக்தி செலுத்துகின்ற அன்னிய பாவம், அப்படி வெளியில் காணாது உள்ளேயே அந்த உருவினை வைத்து செய்கின்ற பக்தியான அனனிய பாவம் என்கிற இரண்டை விடவும்
எந்தவொரு உருவினையும் எண்ணாத சத்பாவத்தில் இருத்தலே ‘பரபத்தி’ என்னும் தத்துவம் ஆகும்.


உதித்த விடத்தி லொடுங்கி யிருத்த
லதுகன்மம் பத்தியு முந்தீபற
வதுயோக ஞானமு முந்தீபற. [10]


உதித்த இடத்தில் ஒடுங்கி இருத்தல்
அது கன்மம் பத்தியும் உந்தீ பற
அது யோக ஞானமும் உந்தீ பற.


எதனைக் கண்டும் எதனையும் உணர்ந்தும்
அதுவாய் இருத்தல் பரபத்தி என்னிலோ

எதுவினைக் கண்டும் ஏதும் ஆகா[து]
எண்ணம் உதித்த இடத்தினை அகலா[து]

ஆங்கே அதுவாய் ஒடுங்கி இருத்தலோ
கன்மம்பத்தி என ஆன்றோர் உரைப்பர்

அதுவேயோக ஞானம் எனுமாம்
உயரிய நிலையாம் உணர்வாய் இதனை.


இறையுணர்வு எந்த இடத்தில் தோன்றுகிறதோ, அதனை அப்படியே உள்வாங்கி, பிறகு அதனிலேயே ஒடுங்கி ஆழ்வது கன்மம் தொடங்கி, பக்திவயப்பட்டு, பின் யோக நிலையில் ஆழ்கின்ற ஒன்றாகும்.

வெளியுருவைக் கண்டு அதனில் பக்தி செலுத்துவது கன்மம். அதனை உள்ளில் வைத்துப் போற்றுவது பக்தி.
அவையெல்லாவற்றையும் விடுத்து, ஏதுமில்லா ‘பரபத்தி’யில் ஆழ்வது யோக ஞானம் என்னும் உயரிய நிலை.

[அடுத்த பாடலைப் பார்க்கும் முன், இந்த யோகஞானம் என்றால் என்ன என்பதை சற்று விரிவாகப் பார்க்கலாம்!]

****************
[தொடரும்]

6 பின்னூட்டங்கள்:

jeevagv Sunday, February 01, 2009 9:57:00 PM  

//எண்ணம் உதித்த இடத்தினை அகலா[து]//
இதைப் படித்தவுடன் Dr.Wayne Dyer சொல்லும்

'Stay connected with Source' என்பது நினைவுக்கு வந்தது!
மேலும்:
http://jeevagv.blogspot.com/2005/05/blog-post_08.html

jeevagv Sunday, February 01, 2009 10:00:00 PM  

//எதனைக் கண்டும் எதனையும் உணர்ந்தும்
அதுவாய் இருத்தல் //
ஆகா!
எளிமையுடன் பிராகசிக்கிறது.
இதை விட வேறென்ன சொல்ல இருக்கிறது!

VSK Sunday, February 01, 2009 10:41:00 PM  

//'Stay connected with Source' என்பது நினைவுக்கு வந்தது!
மேலும்:
http://jeevagv.blogspot.com/2005/05/blog-post_08.html//

எந்த நிலையிலும் பரம்பொருளை மறக்கா நிலை!

மிக அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

நன்றி திரு.ஜீவா.

VSK Sunday, February 01, 2009 10:43:00 PM  

//ஆகா!
எளிமையுடன் பிராகசிக்கிறது.
இதை விட வேறென்ன சொல்ல இருக்கிறது!//

குருவருள் அன்றி வேறேதும் இல்லை. இன்று என் வீட்டுக்கு வந்த ஒருவர் இது சம்பந்தமான புத்தகத்தைப் பரிசளித்துச் சென்றார்! இத்தனைக்கும் அவர் நான் இது பற்றி எழுதுவதே தெரியாது!

குருவருளன்றி வேறென்ன!!

குமரன் (Kumaran) Tuesday, February 03, 2009 9:25:00 PM  

//பாவ பலத்தினால் பாவனாதீச
சற்பாவத்து இருத்தலே உந்தீ பற
பரபத்தி தத்துவம் உந்தீ பற.
//

முன்பு சொன்ன அந்தர்யாமியாக எண்ணுதல் அன்னிய பாவம், அத்வைத தியானம் அனன்னிய பாவம் என்று கொண்டால் இவ்விரண்டுமே தியானம்/பாவித்தல்/முயற்சியால் கொள்ளுதல் என்ற பொருளைத் தந்து பாவனாதீத சற்பாவம் என்பது இவ்விரண்டையும் கடந்த தானேயாகி நிற்கும் நிலை (சத் = உண்மை; பாவம் = நிலை; சற்பாவம் = தானேயாகி நிற்கும் நிலை) என்ற பொருள் தருமோ என்று தோன்றுகிறது. அந்த பாவனாதீத நிலை பாவ பலத்தினாலே அமையும். அதுவே பரபத்தி.

அடுத்த பாடலிலும் 'உதித்த இடத்தில் ஒடுங்கி இருத்தல்' என்று இதே 'தானே ஆகி நிற்கும் பாவனாதீத சற்பாவ'த்தைத் தான் சொல்கிறார் என்று தோன்றுகிறது.

'தான்' என்ற உணர்வு எங்கே தோன்றுகிறது என்று தேடிப் பார்; 'நான் யார்?' என்று கேட்டுப் பார் என்பது இரமணரின் முதன்மையான உபதேசம். அந்த 'நான்' என்ற எண்ணம், 'நான்' என்ற உணர்வு (அகங்காரம் இல்லை; தான் இருக்கிறோம் என்ற இருப்பைச் சொல்லும் உணர்வு) அது எங்கே உதிக்கிறது என்று தேடு என்பது அந்த உபதேசத்தில் வரும் விளக்கம். அந்த 'நான்' என்ற உணர்வு உதித்த இடத்திலேயே ஒடுங்கி இருத்தலே கரும, பக்தி, யோக, ஞானங்கள் என்று சொல்கிறார் என்று தோன்றுகிறது.

VSK Tuesday, February 03, 2009 10:00:00 PM  

”ஏதுமில்ல பரபத்தி’க்கு அழகாக விளக்கம் அளித்தமைக்கு நன்றி குமரன்.

மிகவும் ஆழமாகப் போகாமல், எளிமையாக முதல் சில பாடல்களுக்குப் பொருள் சொல்லி, பின்னர், ஆர்வமிருந்து படிப்பவருக்காக விரிவான விளக்கம் கொடுக்க எண்ணியிருந்தேன்.

அதுவும் இப்போது தங்களின் பங்களிப்பால் தீர்கிறது!

இனி வரும் பாடல்கலுக்கு சற்று விரிவாகவே விளக்கம் வரும்.

நன்றி.

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP