Tuesday, February 03, 2009

"உந்தீ பற!” -- 10

"உந்தீ பற!” -- 10
”பகவான் ரமணரின் “உபதேச உந்தியார்”



வளியுள் ளடக்க வலைபடு புட்போ
லுளமு மொடுங்குறு முந்தீபற
வொடுக்க வுபாயமி துந்தீபற. [11]

வளி உள் அடக்க வலைபடு புள் போல்
உளமும் ஒடுங்குறும் உந்தீ பற
ஒடுக்க உபாயம் இது உந்தீ பற.


[வளி= சுழல்காற்று; புள்= பறவை[கள்]


கூட்டமாய் வந்து தானியம் தின்னும்
பறவைகள் அனைத்தும் விரிக்கும்வலையுள்

ஒன்றாய்ச் சிக்கி மடங்குதலென்னும்
நிலையினை யறிந்த ஞானியர் தாமும்

மூச்சுக் காற்றினை உள்ளே ஒடுக்கும்
உபாயம் அறிந்து அங்ஙனம் செய்திட

அவ்வழி தொடரும் உளமும் ஒடுங்கும்
இவ்வழி நல்வழி என்றே உணர்க.


[விளக்கம் கருதி, இனி பாடல்களின் எண்ணிக்கை ஒவ்வொரு பதிவிலும், கூடவோ, குறையவோ ஆகலாம்!]

‘ப்ராணாயாமம்’ என்னும் ஒரு பயிற்சியின் மூலம் இயல்பாக எப்போதுமே நிகழ்ந்துகொண்டிருக்கும் மூச்சினை உள்ளிழுத்து வெளிவிடும் செய்லபாட்டினை முறையாகச் செய்வது எப்படி என ஒரு குரு மூலம் உணர்ந்தறிந்த சாதகன், இதன் பயனை, பயிற்சியின் மூலம் உணரத்தொடங்குகிறார்.

சிதறிக் கிடக்கும் தானியங்களைக் கொத்தித் தின்னவரும் பறவைக் கூட்டம் தனித்தனியே அமர்ந்து, தன் வேலையைச் செய்யத் துவங்குகிறது.
மேலிருந்து ஒரு வலை அவை மீது வந்து விழுகிறது!
அத்தனை பறவைகளும் இப்போது அந்த ஒரு வலைக்குள்!

இதேபோல,
நம் மனத்துக்குள்ளும் பலவித எண்ண அலைகள்!
இங்கும் அங்குமாய்ப் பறந்து பறந்து கொத்திக் கொண்டிருக்கின்றன.
முறையான மூச்சடக்கிச் செய்யும் பயிற்சியின் மூலம், இந்த எண்ணங்கள் அடக்கப்படுகின்றன.

வலை அறுந்தால், பறவைகள் மீண்டும் சுதந்திரமாய்ப் பறப்பதுபோல, இந்தப் பயிற்சியின் முடிவில் மீண்டும் சாதகன் எண்ணங்களின் வசப்படுகிறார்.

உள்ளிழுத்தல் [பூரகம்], வெளிவிடுதல் [ரேசகம்] என்னும் இருவித நிலைகளையும் தவிர, உள்நிறுத்தி ஒடுங்குதல் [கும்பகம்] என்னும் மூன்றாம் நிலையும், பிராணாயாமத்தில் சொல்லித் தரப்படுகிறது.

மூச்சு விடுவதில், முதல் இரு நிலைகள் மட்டுமே பொதுவாக நிகழும். இந்த மூன்றாம் நிலையான ‘கும்பகம்’ என்பதை எப்படிச் செய்வது என்பது ஒரு முறையான குருவின் மூலமே கற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்பதில் கவனம் வைக்கவும்.

பகவான் ரமணர் ஒரு எளிய வழியைச் சொல்லித் தருகிறார்.

எந்த விதமான கட்டுப்பாடும் செய்யாமல், இயல்பான மூச்சு விடுத்தலை மட்டுமே கவனிக்கச் சொல்கிறார். கவனம் சிதறாமல் இதிலேயே பதியும்போது, மனத்தின் ஓட்டம் கட்டுப்படுத்தப் படுகிறது. மனம் அமைதியாகி ஒடுங்குகிறது.

இதுபற்றி, படிப்பதையும், கேட்பதையும் விடவும், முறையான பயிற்சி மூலமே இது கைகூடும்.

************************

[தொடரும்]

6 பின்னூட்டங்கள்:

வடுவூர் குமார் Tuesday, February 03, 2009 11:23:00 PM  

படித்துக்கொண்டு வரும் போது "கும்பகம்" என்ற வார்த்தை பார்த்து நான் சொல்ல நினைத்ததை அப்படியே வரி மாறாமல் பார்த்த உடனே சந்தோஷம் அடைந்தேன்
இதைப் பற்றி மாற்று கருத்துகளும் இருக்கின்றன ஆதாவது இதனால் பயன் இல்லை என்பது போல்.
இப்போது கொஞ்ச நாட்களாக சிறிய அளவில் முயற்சித்துவருகிறேன்.

VSK Wednesday, February 04, 2009 8:46:00 PM  

நீண்ட நாட்களுக்குப் பின் மீண்டும் தங்கள் வருகை நிறைவாய் இருக்கிறது.

தங்களது பயிற்சி நிறைவாக வேண்டுகிறேன்!

குமரன் (Kumaran) Friday, February 06, 2009 6:44:00 PM  

முறையாகக் கால் கட்டைப் பயின்று செய்வதை விட வெறுமனே மூச்சின் செயல்பாட்டைக் கவனிப்பதே மனம் அமைதி பெற வழி செய்வதைப் பல முறை கண்டிருக்கிறேன்.

VSK Friday, February 06, 2009 10:52:00 PM  

என் குரு சொன்னதும் இந்த வழிதான் குமரன்!

இது எளிதான, இயல்பான ஒரு செயல்பாடு!

jeevagv Saturday, February 07, 2009 9:41:00 AM  

இங்கே ஒரு மருத்துவரைச் சந்திக்கையில் அவர் சொன்னார் - தான் தன் அமெரிக்க நோயாளிகளுக்கு, பிரணாயாம வகுப்புகளை நடத்துவதாக. மருத்து மாத்திரைகளை விட இப்பயிற்சிகளில் கிடைக்கும் குணங்க்ளை அதிகமாக நம்புவதாகச் சொன்னார்.

VSK Saturday, February 07, 2009 2:13:00 PM  

மருந்து மாத்திரைகள் இந்த இடங்களில் அதிகமாகவே பயன் தரும்,.... தருகிறது என்பது மருத்துவமே ஒப்புக்கொண்ட உண்மை திரு. ஜீவா!

நன்றி.

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP