Saturday, February 21, 2009

"அமெரிக்கத் தமிழர் நடத்திய எழுச்சிப் பேரணி!"


"அமெரிக்கத் தமிழர் நடத்திய எழுச்சிப் பேரணி!"

1. 30 பேர் கொண்ட எங்களது பேருந்து 'ராலே'யிலிருந்து அதிகாலை 5 மணிக்குக் கிளம்பி 10.30 மணி அளவில் வாஷிங்டன் சென்றடைந்தது. பசிக்குமே எங்களூகு என உணர்ந்த தாய்மார்கள் 'சண்ட்விச்', வாழைப்பழம், என எங்களைக் கவனித்துக்கொண்டார்கள். வழியில் ஓரிடத்தில் நல்ல காப்பியும் குடித்தோம்.

2. கானடா போன்ற இடங்களில் இருந்து வருபவர்களுக்கு வசதியாக, ஏகப்பட்ட கைத்தட்டிகள் எங்களவர்களால் செய்யப்பட்டு, அதையெல்லாம் இறக்கி பேரணி நடந்த இடத்துக்குக் கொண்டு சேர்ப்பித்துவிட்டு, வெளியுறவுத்துறை அலுவலகத்துக்கு எங்கள் பேருந்து பயணித்தது.

3. சுனாமியின் போது மருத்துவப் பணியாற்றச் சென்று, அந்த வேலையில், எம்மவரின் துயரை நேரடியாகக் கண்டு, மனம் மாறி, இதற்கெனவே தன் எஞ்சிய வாழ்நாளைச் செலவிட முடிவெடுத்த ஒரு அமெரிக்கப் பெண் மருத்துவர், செய்திருந்த முயற்சியின் விளைவாய், 200 பேருக்கு மட்டுமே அனுமதி கொடுத்திருந்த இடத்தில், எங்களது முதல் கட்டப் பேரணி துவங்கியது.

4. ஈழத்தமிழரின் அவல நிலையைத் தெரிவிக்கும் கைத்தட்டிகள், கோஷங்களுடன் ஒரு 200 அடி தூரத்திற்கு வளையமாக எங்களது நடைப்பயணம் 11 மணி முதல் 1 மணி வரை தொடர்ந்தது. அமைச்சரகத்திலிருந்து பலரும் வெளியே வந்து இதனைப் பார்த்து, கைதட்டி உற்சாகப்படுத்தி, ஒரு சிலர் எங்களை நெருங்கி வந்து எங்களுடன் கதைத்தது மனதுக்கு ஆறுதலையும், உற்சாகத்தையும் ஊட்டியது.

5. ஒருசில பத்திரிகை நிருபர்களும் இந்த நிகழ்ச்சியைப் பற்றிய குறிப்பெடுத்து, படங்கள் பிடித்து, எங்களை உற்சாகப் படுத்தினர்.

6.12.45 மணி அளவில், வெளியுறவு அமைச்சர் ஹில்லரி க்ளிண்டனின் உதவி டைரக்டர் இறங்கி வந்து எங்கள் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி, எங்களது மனுவைப் பெற்றுக்கொண்டு, இதை ஹில்லரியிடம் நேரடியாகச் சேர்ப்பிப்பதாக உறுதியளித்துச் சென்றவுடன், அங்கிருந்து கிளம்பி ஊர்வலமாகப் போலீஸ் உதவியுடன், வெள்ளை மாளிகை நோக்கி நடந்தோம்.
7. காலை 10 மணி முதலே அங்கு கூடியிருந்த கூட்டம், கானடாவாழ்த் தமிழர்களின் வருகை கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாக பெருகத் தொடங்கியிருந்தது.

8. சுமார் 50 பேருந்துகளில் பெருமளவில் கானடாவிலிருந்து தமிழர்கள் ஆர்வத்துடன் வந்தது நெகிழ்ச்சியாக இருந்தது.

9. சுமார் 12 பேருந்துகள் கடைசி நேரத்தில், பேருந்து உரிமையாளர்களால் ரத்து செய்யப்பட்டு, பணம் திருப்பிக் கொடுக்கப் பட்டதால், 500-க்கும் மேற்பட்ட தமிழர்கள் பயணிக்க இயலாமல் போனதாகக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது வேதனையளித்தது. சிங்கள அரசின் சதி எனச் சிலர் பேசிக் கொண்டிருந்தார்கள்.

10. கடைசி நேரத்தில், திடீரென ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு சிங்களக் கூட்டம், எங்களுக்கு எதிரே இடம் ஒதுக்கப்பட்டு, சுமார் 200 பேர் கொண்ட கூட்டம் முழக்கம் செய்து கொண்டிருந்தது.

11. இந்தப் பக்கம் திரும்பினால், ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர் கூட்டம்!

12. 'போர் நிறுத்தம் வேண்டும்' 'தமிழீழம் ஒன்றே தீர்வு' அதிபர் ஒபாமா, எங்களுக்கு உதவி செய்யுங்கள்' 'இனப்படுகொலையை நிறுத்து' எனப் பலவிதமான கோஷங்கள் விண்ணதிர முழங்கிக் கொண்டிருந்தன.

13. அமைதியாக ஒரு 500 பேர் அமெரிக்க, கானடா கொடிகளைத் தாங்கியவண்ணம் இந்தக் கூட்டத்தைச் சுற்றி ஊர்வலமாக நடந்து கொண்டிருந்தது.

14. அனைவருக்கும் இலவசமாக தண்ணீர் பாட்டில்கள் வழங்கப் பட்டுக் கொண்டிருந்தன.

15. கானடா தமிழர்கள் தங்களுக்குள் மட்டுமே சாப்பிட்டுக் கொண்டிருந்த வடை, போண்டா நாக்கில் நீரையும், மனதில் பொறாமையையும் வளர்த்துக் கொண்டிருந்தன.

16. வரும் வழியெல்லாம் பேசிக்கொண்டு வந்ததால், எனது அலைபேசி தனது சக்தியை இழந்து, அணைந்துபோக, வருவதாகச் சொன்ன நண்பர்களை எப்படிச் சந்திப்பது எனத் திகைத்தேன். பிறகு 'முருகனருள் முன்னிற்கும்' என்னும் நம்பிக்கையில் தெம்புடனே இருந்தேன். என்னிடம் இல்லாவிட்டால் என்ன? என் நண்பர்களிடம் அலைபேசி இருக்கிறது என்னும் துணிபும் ஒரு காரணம்!

17. கழிவறைக்குச் செல்ல நினைத்து போகும் வழியில், சிங்களக் கூட்டத்தில் இருந்து வந்த ஒருவர் குழப்பம் விளைவிக்க நினைத்து, உள்ளே ஊடுருவ, ஒரு சின்ன சலசலப்பு. காவலர் உதவியுடன், அவர் தனது கூட்டம் இருந்த இடத்துக்கு அனுப்பி வைக்கப் பட்டார்.

18. கழிவறைக்குச் செல்லும் இடத்தில், ஒரு பெண்மணி தன் இரு குழந்தைகளுடன் வெளியே வந்து கொண்டிருந்தார். எங்கேயோ பார்த்த முகமாய் இருக்கிறதே என எண்ணியதும் மனதுள் ஒரு மின்னல்!
'சுவாதி?' என வினவ, 'ஓம்! டொக்டரோ?' எனப் பதிலுக்கு அவர் வினவ, சுவாதியின் தரிசனம்! ஒரு சில நிமிடங்கள் பேசினோம். சிநேகிதி கூட வந்திருக்கிறாராம். சுதனும் வந்திருக்கிறாராம். நீங்கள் என் கணவரைச் சந்திக்க வேண்டும்' எனச் சொல்லித் தான் இருக்குமிடத்தை ஒரு உத்தேசமாகச் சொல்லி, பிறகு சந்திக்கலாம் என நகர்ந்தார்.

19. சென்ற பின்னால்தான், அடடா, ஒரு புகைப்படம் எடுக்காமல் விட்டுவிட்டோமே எனத் தோன்றியது! அதற்குள் அவர் மாயமாய் கூட்டத்துள் மறைந்துவிட்டார்.

20. பேருந்துகள் நின்றிருந்த இடத்துக்கு அருகில் ஒரு பெரிய கூட்டம்! என்னவெனச் சென்று பார்த்தால், நியூயார்க், மேரிலாண்ட் வாழ் தமிழ் மக்கள் தயார் செய்து கொண்டு வந்திருந்த உணவுப் பொட்டலங்களை அனைவருக்கும் வழங்கிக் கொண்டிருந்தனர் ஒரு சிலர்! தக்காளி சாதம், புளிசாதம், எலுமிச்சம்பழச் சாதம் என மூன்று வகையான உணவுகள், குளிர்பானம், தண்ணீர் என விருந்துபசாரம் அமோகமாக நடந்து கொண்டிருந்தது. ஒரு தக்காளி சாதமும், ஒரு தண்ணீர் பாட்டிலும் எடுத்துக் கொண்டு நான் நகரும் நேரத்தில், ஒரு காவலதிகாரி வந்து, இதுபோல உணவு விநியோகம் செய்வது சட்டப்படி குற்றம் எனச் சொல்லி உடனடியாக அதை நிறுத்தச் சொல்லி மிரட்டத் தொடங்கினார். இதர்கு என்ன வழி எனக் கேட்டதும், உடனே சாந்தமாகி, வேண்டுமானால், பேருந்துக்குள் வைத்துக் கொண்டு விநியோகிக்கலாம். எடுத்தவர்கள் மைதானத்துக்குள் சென்று சாப்பிடலாம் என ஆலோசனையும் சொல்ல, அப்படியே மீதி விநியோகம் தொடர்ந்தது.

21. இதே நேரத்தில், கூடியிருந்த சிங்களக் கூட்டம் தங்களது பேரணியை[!] முடித்துக் கொண்டு கலைந்தது. தமிழர் கூட்டத்திலிருந்து ஒரு பெருத்த ஆரவாரம்!

22. என் கண்கள் இங்குமங்குமாக யாராவது தெரிந்தவர்கள் தென்படுகிறார்களா எனத் தேடிக் களைத்தது.

23. ஏதோ ஒரு ஆணைக்குக் கட்டுப்பட்டது போல, நின்று கொண்டு களைத்த கூட்டம் அப்படியே அமரத் தொடங்கியது! நடுவில் ஒரு 'பாதுகாப்பு வலயம்'! அங்கு அடுக்கப்பட்டிருந்த தண்ணீர் பாட்டில்கள் எல்லாம் காலியாகிக் கொண்டிருந்தன! 24. 3 மணி வரைக்கும் கோஷங்கள் எழுப்பிக் கொண்டிருந்த பேரணி, அமெரிக்க தேசீய கீதத்துடன் ஒரு கட்டுப்பாடுக்குள் வந்து, நான் முன்னம் சொல்லிய அந்த அமெரிக்க டாக்டர், வந்து உரையாற்றத் தொடங்கினார்.

25. அவரைத் தொடர்ந்து, ப்ரூஸ் ஃபெயின், எங்கள் ஊரைச் சேர்ந்த எலியாஸ் ஜெயராஜா, கானடாவைச் சேர்ந்த சிற்றம்பலம் உரையாற்றினர். அமெரிக்க அதிபரின் உதவியை வேண்டியே அனைவரது பேச்சுகளும் அமைந்தன. ராஜபக்சேயின் கொடுங்கோல் அரசை நீதிமன்றத்துக்குக் கொண்டுவர நான் பாடுபடுவேன் என ப்ரூஸ் சொன்னபோது, பெருத்த ஆரவாரம்! ஹில்லரியிடம் சமர்ப்பித்த மனுவில் அடங்கிய கோரிக்கைகள் என்னவென எங்களூர் ஜெயராஜா விவரித்துச் சொன்னபோது, இது நடக்க வேண்டுமே என அனைவரும் ஆதங்கக் குரல் எழுப்பினர்.

26. தமிழ் வணக்கப் பாடலை கானடாவைச் சேர்ந்த இரு இளம்பெண்கள் இசையுடன் பாடக் கூட்டம் இனிதே முடிவடைய, அவசர அவசரமாக என் நண்பரின் கைப்பேசியை வாங்கி, சிநேகிதியை அழைக்க, அவர் தனது பேருந்துக்காக ஒரு குறிப்பிட்ட இடத்தில் காத்திருப்பதாகச் சொல்ல, அங்கு விரைந்து அவரைக் கண்டுபிடித்தேன்! அழகிய ஒரு இளம்பெண், தலையில் வெள்ளைக் குல்லாயுடன் இருந்த அவரை அடையாளம் கண்டுபிடித்து, அவருடன் உரையாடினேன்.

27. அவருடன் வந்திருந்த அவரது தோழிக்குக் குளிரில் கை விரைத்துப் போய் அவதிப்பட, அவருக்கு என்னால் முடிந்த முதலுதவியைச் செய்து, ஓடிச்சென்று, ஒரு ஜோடி கையுறைகள் வாங்கிக் கொடுத்து, எனது பேருந்து புறப்படும் அழைப்பு வந்ததால், அவரிடம் இருந்து விடை பெற்றுத் திரும்பினேன்.

28. மாலை 6 மணிக்குக் கிளம்பி இரவு 12 மணி அளவில் வீடு திரும்பினேன்.

29. வந்திருந்த அனைவரிடமும் நான் கண்டது இதுதான்: எம்மவர் அங்கே அல்லல்படும்போது, இங்கே எம்மால் செய்ய முடிந்த இந்தக் குரலாவது அவர்களை எட்டி அவர்களுக்கு ஒரு ஆறுதலைத் தராதா? அப்போதுதான், வானூர்தித் தாக்குதல் பற்றிய விவரம் காட்டுத்தீயாய் அங்கு பரவி அனைவர் முகத்திலும் ஒரு உற்சாகம் தெரிந்தது! உங்கள் குரல் எங்களுக்காக ஒலிப்பது எங்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது! அதே சமயம், நாங்கள் இன்னமும் ஓயவில்லை என்பதையே அது தெரிவித்தது என அனைவரும் பரவலாக மகிழ்ச்சியுடன் பரிமாறிக் கொண்டது மனதுக்கு இதமாக இருந்தது.

30.இவ்வளவு கூட்டம் இதுவரையில் வந்ததில்லை என்பதில், ஏற்பாடு செய்தவர்களுக்கு மகிழ்ச்சி!! ஒருவித அசம்பாவிதமும் நிகழ்வில்லை என்பதில் அனைவருக்கும் ஒரு நிம்மதிப் பெருமூச்சு!! எல்லா ஏற்பாடுகளும் திறம்படச் செய்ததில் ஒரு திருப்தி!! அமெரிக்காவைத் தவிர வேறெந்த நாட்டையும் குறிப்பிட்டு எந்தவொரு கோஷமும் ஒலிக்கவில்லை என்பதில் என் போன்றோருக்கு ஒரு பெருமை என நிகழ்ச்சி இனிதே நடந்து முடிந்தேறியது!
*************************

19 பின்னூட்டங்கள்:

SurveySan Sunday, February 22, 2009 12:24:00 AM  

அருமை!

வாழ்த்துக்கள்.

Anonymous,  Sunday, February 22, 2009 12:50:00 AM  

thanks for the description. very glad that things went relatively smoothly

-kajan

VSK Sunday, February 22, 2009 1:01:00 AM  

நன்றி, சர்வேசன்.

VSK Sunday, February 22, 2009 1:02:00 AM  

ஆம் திரு கஜன்.

அமைதியான, அதே சமயம் நெகிழ்ச்சியான பல உரையாடல்களைக் கேட்டேன் அங்கு!

நாகை சிவா Sunday, February 22, 2009 3:03:00 AM  

நல்ல முயற்சி!

வெற்றி அடையட்டும்!

பதிவு போட்டதற்கு உங்களுக்கும் என் வாழ்த்துக்கள் :)

VSK Sunday, February 22, 2009 9:01:00 AM  

ரொம்பநாளா வராதவரையே வரவழைக்குதுன்னா, நிச்சயம் வெற்றிதான்!
நன்றி, நாகை.சிவா!

Anonymous,  Sunday, February 22, 2009 10:59:00 AM  

அருமையாக விபரித்திருகிறீர்கள்.
நன்றி.

நல்லதே நடக்கட்டும்!
நன்மையே கிடைக்கட்டும்!!

பழமைபேசி Sunday, February 22, 2009 12:03:00 PM  

நல்ல முயற்சி!

வெற்றி அடையட்டும்!

பதிவு போட்டதற்கு உங்களுக்கும் என் வாழ்த்துக்கள் :)

ஐயா, அந்த முதல் படத்தில் இருப்பவர் எனது நண்பர், நிகால்.... அவருடன் கதைக்கும் வாய்ப்புக் கிட்டியதா??

VSK Sunday, February 22, 2009 1:53:00 PM  

//அருமையாக விபரித்திருகிறீர்கள்.
நன்றி.

நல்லதே நடக்கட்டும்!
நன்மையே கிடைக்கட்டும்!!//

நன்றி திரு. அனானி.
நல்லது நடக்கும் நமக்கு!

VSK Sunday, February 22, 2009 1:56:00 PM  

//நல்ல முயற்சி!

வெற்றி அடையட்டும்!

பதிவு போட்டதற்கு உங்களுக்கும் என் வாழ்த்துக்கள் :)

ஐயா, அந்த முதல் படத்தில் இருப்பவர் எனது நண்பர், நிகால்.... அவருடன் கதைக்கும் வாய்ப்புக் கிட்டியதா??//

ஓரிரு வார்த்தைகள் பேசினேன் அங்கிருந்தவர்களுடன்.
. பெயரெல்லாம் கேட்கவில்லை!
அதனால் எவரைக் குறிப்பிடுகிறீர்கள் எனத் தெரியவில்லை.

ஆனால், பேசியவர்கள் எல்லாரிடமும் ஒரு எழுச்சி தென்பட்டதை உணர்ந்தேன்.
நன்றி.

HS Sunday, February 22, 2009 1:57:00 PM  

உங்களுடைய வலைப்பூக்களை இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள், http://kelvi.net/topblogs/ சிறந்த வலைப்பூக்களாக வர வாழ்த்துக்கள்

கேள்வி. நெட்

MSATHIA Sunday, February 22, 2009 5:54:00 PM  

//னாமியின் போது மருத்துவப் பணியாற்றச் சென்று, அந்த வேலையில், எம்மவரின் துயரை நேரடியாகக் கண்டு, மனம் மாறி, இதற்கெனவே தன் எஞ்சிய வாழ்நாளைச் செலவிட முடிவெடுத்த ஒரு அமெரிக்கப் பெண் மருத்துவர், செய்திருந்த முயற்சியின் விளைவாய்,//

யார் யாருக்கோ உறைக்கிறது. உறைக்கவேண்டிய ஆட்சியாளர்களுக்கு உறைக்க மாட்டேன் என்கிறதே.
உங்களை ஆறுதலையடையச்செய்த 'வேறெந்தநாட்டையும் சாடாத' பேரணி இன்னும் இந்தியாவின் ஈழ மக்களுக்கு நம் மீதுள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. அந்த நம்பிக்கையை ஏமாற்றாமல் இருக்க நம் ஆட்சியாளர்களை நெருக்குவது எப்படி என்பது புரியாமல் இருப்பது தான் இப்போது தமிழகத்தமிழர்களின் பெருத்த கவலை, வேதனை.

குளிர் காலத்தையும் பொருட்படுத்தாது பேரணியில் போய் கலந்து கொண்டது மிக்க மகழ்ச்சி அளிக்கிறது

VSK Sunday, February 22, 2009 6:56:00 PM  

மிக அருமையான ஒரு செய்தியைத் தொட்டு, அதை வைத்து ஒரு அரிய கருத்தைச் சொல்லியிருக்கிறீர்கல் சத்தியா!

அதே போல, அந்தப் பாதுகாப்பு வலயத்துள் அப்பாவி பாட்டில்கள்’காலி’யான செய்தியையும் படியுங்கள்!:))

நன்றி!

கோவி.கண்ணன் Sunday, February 22, 2009 8:07:00 PM  

படங்களும் செய்திகளும் நேரடியாக கலந்து கொண்டது போன்ற உணர்வை தருகிறது

VSK Monday, February 23, 2009 8:48:00 AM  

//படங்களும் செய்திகளும் நேரடியாக கலந்து கொண்டது போன்ற உணர்வை தருகிறது//

நன்றி, கோவியாரே!
நல்லதே நடக்கும்!

Anonymous,  Monday, February 23, 2009 9:39:00 AM  

//அமெரிக்காவைத் தவிர வேறெந்த நாட்டையும் குறிப்பிட்டு எந்தவொரு கோஷமும் ஒலிக்கவில்லை என்பதில் என் போன்றோருக்கு ஒரு பெருமை என நிகழ்ச்சி இனிதே நடந்து முடிந்தேறியது!//

http://puthinam.com/d/p/2009/feb/usa_20090221003.jpg

இவங்களுக்கு எல்லாம் இந்திய அரசு சின்னத்தைச் சின்னாப்பின்னம் ஆக்க என்ன அருகதை இருக்கிறது.

நம் நாட்டிலேயே நம் கொடியை எரித்தவர்கள் மீது நடவடிக்கை இல்லை. இவர்களை என்ன செய்ய முடியும். :((

VSK Monday, February 23, 2009 11:06:00 AM  

//இவங்களுக்கு எல்லாம் இந்திய அரசு சின்னத்தைச் சின்னாப்பின்னம் ஆக்க என்ன அருகதை இருக்கிறது. //

இதை நான் கவனிக்கவில்லை. தகவலுக்கு நன்றி. ஆனால், கோஷங்கள் எதுவும் எழுப்பப்படவில்லை என்பது உண்மையே!

நாமக்கல் சிபி Tuesday, February 24, 2009 4:53:00 PM  

செய்தியும் விவரித்த விதமும் அருமை!

நிகழ்வுகளைக் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தின!

VSK Tuesday, February 24, 2009 10:47:00 PM  

நன்றி சிபியாரே!

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP