Monday, February 02, 2009

"உந்தீ பற!“ - 9

"உந்தீ பற!“ - 9



”பகவான் ரமணரின் “உபதேச உந்தியார்”



[முந்தைய பதிவு]


சென்ற பதிவில் சொன்ன விளக்கம் சிலருக்கு குழப்பத்தை உண்டு பண்ணி இருக்கலாம்!

கன்மம், பக்தி, ஞானம் என மூன்று நிலைகளைத்தானே கேட்டிருக்கிறோம்!
இதென்ன புதிதாக யோக ஞானம் எனச் சொல்கிறாரே என!

கன்மம், பக்தி என்கிற இரண்டு நிலைகளைத் தாண்டியதும், ஞானம் உடனே வருவதில்லை.
யோக சாதனை என்னும் ஒன்றின் மூலமே மனத்தை ஒருமுகப்படுத்த முடியும்.


நான் மிகவும் மதிக்கும் ஒரு பெரியவர் அடிக்கடி என்னிடம் சொல்லும் ஒரே வார்த்தை இதுதான்!

“படித்ததெல்லாம் போதும்! பயிற்சியில் ஈடுபடு!”

இந்தப் பயிற்சிதான் யோகம் எனப்படுவது.

பலவிதமான யோக சாதனைகளைப் பற்றி பல பெரியவர்கள் சொல்லியிருந்தாலும், பதஞசலி முனிவர் விரிவாகச் சொல்லியிருக்கும் யோக விளக்கமே பொதுவாகப் பலராலும் பின்பற்றப் படுகிறது.


’பதஞ்சலி யோகம்’ என இது வழங்கப்படுகிறது.

எட்டு விதமான பயிற்சிகளை முறையாகப் பயில இதில் சொல்லுகிறார் பதஞ்சலி.


அஷ்டாங்க யோகம், ராஜ யோகம், த்யான யோகம் எனவும் இது சொல்லப்படும்.

இந்த எட்டு நிலைகள் என்னவெனப் பார்ப்போம்!

1. யமம்: பயிற்சியில் ஈடுபடும் ஒரு சாதகன் வெளிப்படையாகக் காட்டவேண்டிய, பயிலவேண்டிய நிலைகள் யமம் என அழைக்கப்படுகிறது. இவை ஐந்து வகைப்படும்.


அஹிம்சை: எவருக்கும் தீங்கு இழைக்காமல் இருத்தல்

சத்யம்: உண்மை மட்டுமே பேசுதல்

அஸ்தேயம்: எதையும் திருடாமை


ப்ரம்மச்சரியம்: தன் [புலன்] அடக்கம்


அபரிக்ரஹம்: பிறருக்கில்லாது மறைக்காது இருத்தல்.



இதைக் கொஞ்சம் ஆழ்ந்து சிந்தித்தால், பல செய்திகளைச் சொல்லும்! தனது நிலையை வெளிப்படையாகக் காட்டுதல், அடுத்தவர்க்கு இல்லாது எதனையும் பதுக்கி வைக்காதிருத்தல், என மேலே சொல்லியிருக்கும் முதல் நான்கு செயல்களின் மொத்தப் பயனாக இது விளங்குவது புரிய வரலாம்.

2. நியமம்: இது தனக்குள் சாதகன் செய்ய வேண்டிய செயல்களைச் சொல்கிறது. இதுவும் ஐந்து நிலைகளைச் சொல்கிறது.


சௌசம்: புறத் தூய்மை; அகத் தூய்மை.



மீண்டும் நான் மிகவும் மதிக்கும் அந்தப் பெரியவரே நினைவுக்கு வருகிறார். சற்றும் கசங்காத உடைகள்; எப்போதும் சிரிக்கும் முகத் தோற்றம்; வெளியில் தெரியும் கைகளும், கால்களும், அதன் நகங்கள் உட்பட சீராக இருப்பது என ஒரு மரியாதையான புறத்தோற்றம் அவருக்கு!

அகத் தூயமை என்பது முதலில் சொல்லப்பட்ட யமத்தில் பயின்றதால், தனக்குள் நிகழும் மாற்றம்.

சந்தோஷம்: நாமெல்லாம் சந்தோஷம் என்பது கிடைக்காதது கிடைத்தால் என எண்ணுகிறோம். ஆனால், அதுவல்ல சந்தோஷம்! கிடைத்ததில் திருப்தி அடைவதே சந்தோஷம் எனப்படும்.

தவம்: எளிமையான தவநிலை

ஸ்வாத்யாயம்: புனித நூல்களைப் படித்தல்

ஈஸ்வர ப்ரணிதானம்: இறைவனே கதியெனச் சரண் அடைவது

இந்த பயிற்சிகள் சாதகனை [பயிற்சியாளனை] தன் வாழ்வில் ஒரு சமநிலை காணச் செய்து, அவனது தனித்துவத்தைச் சீர்படுத்துகிறது.

3. ஆஸனம்: தியானத்தில் ஆழ்வதற்கு முன் அமர்வது பற்றி இது சொல்கிறது. உட்கார்ந்த ஒரு சில நிமிடங்களிலேயே, இப்படியும், அப்படியுமாய் நெளிவதும், கால்களை அடிக்கடி மாற்றிக் கொள்வதும், லேசான முனகல், இருமல் எனப் பலர் செய்வதை நாம் பார்க்கலாம். இதற்கெல்லாம் அடிப்படை, முறையான அமர்தலைக் கற்றுக் கொள்ளாததாலே! இதை எப்படிச் செய்வது என்பதை ஒரு குரு மூலம் அறிவதே சிறந்தது.

4. ப்ராணாயாமம்: இடகலை,பிங்கலை எனச் சொல்லப்படும் இரு நாசி துவாரங்களின் வழியாகச் செய்யப்படும் மூச்சு இழுத்தலும், விடுதலும் ஒரு முறையான குருவின் மூலம் கற்றுக் கொண்டு பயிற்சி தொடர வேண்டும்.

5. ப்ரத்யாஹாரம்: வேண்டிய போதெல்லாம் தன்னிச்சையாகப் புலன்களை புலனின்பத்தில் இருந்து விடுவித்துக் கொள்வது எனப் பொருள். பல நிலைகளில் ஒரு சாதகன் புலன்களினால் தூண்டப்படும் நிலைக்கு ஆட்படுவான்.
அந்த நேரங்களில், தன்னை அந்த நிலையிலிருந்து விடுவித்து, மனத்தையும், புலன்களையும் அடக்குவதே இந்த நிலை.

6. தாரணம்: எதனாலும் அசைக்க முடியா மனத்திடத்துடன் மனத்தை ஒருமுகப்படுத்துவது தாரணம்.

7. த்யானம்: ஒரே நிலையில் உண்மைப் பொருளை உள்ளில் உன்னி செய்யப்படும் நிலை இது. யோகத்தின் ஏழாவது நிலையாகத் தான் இது சொல்லப்பட்டிருப்பதைக் கவனிக்கவும்! மற்ற ஆறு நிலைகளைச் செய்யாமல்
இதில் நேராக பலரும் முனைவதையே பொதுவாகக் காண்கிறோம். கவனம். குருவின் துணையும், அருளும் இதற்கு மிகவும் தேவை.

8. சமாதி: நினைவுகள் அனைத்துமே அற்ற ஒரு நிலை இது. யோகத்தின் இறுதி நிலை. யோகதியானம் இங்கு தியானயோகமாக மாறி பூரணமாகிறது.

ஆனால், யோகா என்னும் வகுப்புகளுக்குச் செல்லும் பலருக்கும், பிராணாயாமம், தியானம் என்னும் இரு நிலைகளே பயிற்றுவிக்கப் படுகிறது. முறையான ஒரு குரு மட்டுமே அனைத்து நிலைகளையும் சொல்லிக்
கொடுப்பார் என்பது கவனிக்கத் தக்கது.

யோக தியானம் மூலம் ஞானத்தை நோக்கிப் பயணிக்கலாம்.

இப்போது மீண்டும் பத்தாவது பாடலைப் படித்தால் இங்கு சொல்லப்படுவது என்னவெனப் புரியலாம்.

இனி நாளை தொடருவோம் பகவான் ரமணரின் உபதேச உந்தியாரை!
**************

[தொடரும்]


5 பின்னூட்டங்கள்:

குமரன் (Kumaran) Tuesday, February 03, 2009 9:26:00 PM  

சில எழுத்துப்பிழைகள்:

அஸ்டேயம் --> அஸ்தேயம் (ஸ்தேயம் திருட்டு; அஸ்தேயம் திருடாமை; இறைவனுக்கே உரிய நம் ஆத்மனை நமக்கு உரியது என்று நினைப்பது பெரும் திருட்டு).

சௌகம் --> சௌசம் (சுசி > சௌசி > சௌசம் = தூய்மை)

VSK Tuesday, February 03, 2009 9:52:00 PM  

திருத்தங்களுக்கு நன்றி குமரன்.

jeevagv Friday, February 06, 2009 9:52:00 PM  

நமது சமயத்தின் அடிப்படைகள் இங்கே அழகாக தொகுக்கப்பட்டுள்ளன!

jeevagv Friday, February 06, 2009 10:15:00 PM  

திருவள்ளுவர் எப்படி இவற்றை சொல்லியிருக்கிறார் என்பது நாம் எல்லாரும் அறிந்ததே:
யமங்கள் ஐந்தும்:
அஹிம்சை : கொல்லாமை
, புலால் மறுத்தல், இன்னா செய்யாமை
சத்யம் : வாய்மை

அஸ்தேயம்: கள்ளாமை

ப்ரம்மச்சர்யம்: ஒழுக்கமுடைமை
, அடக்கமுடைமை
அபரிக்ரஹம் : ஒப்புரவு அறிதல், ஈகை

VSK Friday, February 06, 2009 10:56:00 PM  

தங்களது தெளிவான, செறிந்த பின்னூட்டங்கள் பதிவுக்கு மேலும் அழகு சேர்க்கின்றன திரு. ஜீவா.

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP