Tuesday, February 10, 2009

"உந்தீ பற!” - 16

"உந்தீ பற!” - 16

"பகவான் ரமணரின் “உபதேச உந்தியார்”

[முந்தைய பதிவு]

வெளிவிட யங்களை விட்டு மனந்தன்
னொளியுரு வோர்தலே யுந்தீபற
வுண்மை யுணர்ச்சியா முந்தீபற. [16]


வெளி விடயங்களை விட்டு மனம் தன்
ஒளி உரு ஓர்தலே உந்தீ பற
உண்மை உணர்ச்சியாம் உந்தீ பற.


அலைந்திடும் மனத்துக்கு ஆயிரம் விடயங்கள்
கலைந்திடும் மேகமென இங்குமங்கும் அலைக்கழிக்கும்

ஒருநிலைப் படுதலைக் குலைத்திடச் செய்யும்
விளைந்திடும் எண்ணமே மலையனக் குவியும்

பார்த்திடும் யாவையும் விலக்கியே வைத்து
பார்ப்பது யானெனும் நிலை புரிந்துவிடில்

ஒருநிலை உணர்வெனும் உண்மையின் காட்சி
உள்ளில் மலர்ந்து எங்கும் நிறையும்.


இதுவரை சொல்லிய அஷ்டாங்க யோகத்தின் முறையான பயிற்சியினால் விளையும் பயனை இந்தப் பாடல் விளக்குகிறது.

மூச்சுக்காற்றினை உள்ளில் ஒடுக்க, உண்மை எதுவெனத் தெரியும் என முந்தைய பாடல்களில் பார்த்தோம்.

வெளியில் தெரியும் அனைத்தையும், உடலும், உள்ளமும், அறிவும் நமக்கு உணர்த்தி இன்னின்னது இது எனக் காட்டினாலும், இவை அனைத்தையும் பார்ப்பது ‘நான்’ என்னும் ஒன்றே!

‘இது கணினி’,’இது புத்தகம்’ என பொருள்கள் எதிரில் தெரிந்தாலும், ‘நான்’ இப்போது ஒரு கணினியைப் பார்க்கிறேன்’, ‘நான் ஒரு புத்தகம் படிக்கிறேன்’ என அறியும்போது, உரு அழிந்து, ‘நான்’ என்னும் உணர்வு மேலோங்குகிறது.

இப்படி, இந்த ‘நான்’ என்னும் ஒன்றே அனைத்தையும் பார்க்கும், உணரும், அறியும் ஒன்று எனும் தெளிவு, புறப்பொருட்களை விடுத்து, உள்ளில் இன்னமும் அதிகமாக ஈடுபட ஒரு சாதகனைப் பண்படுத்துகிறது.

இந்த உணர்வு தொடர்ந்து செயல்படும்போது, ‘உண்மையான, சலனமற்ற உணர்வு’ காணும் பொருளுடன் ‘நான்’ என்னும் ஒன்றையும் ஒன்றச் செய்து, இரண்டுக்கும் வேறுபாடு இல்லாமல் செய்து, மனத்தை நிலைப்படுத்தி, ‘உண்மையின் காட்சி’ புரியத் துவங்கும்.


****************

[தொடரும்]

2 பின்னூட்டங்கள்:

வடுவூர் குமார் Tuesday, February 10, 2009 11:38:00 PM  

லட்சோப லட்ச மக்களில் ஏதோ ஒருவருக்கு இது வாய்க்ககூடும்.என்ன தான் படித்தாலும், இதன் வழியே போனாலும் தகுந்த குரு/தன் முயர்ச்சி என்று பல அமையப்பெற்றால் மட்டுமே இது கைவர கூடும்.
இதற்கு ஒரு ஜென்மம் போதுமா??
இதை ஒத்த ஒரு கருத்து இப்போது நான் படித்துக்கொண்டிருக்கும் “தெய்வத்தின் குரல்”(காஞ்சி பெரியவர்)வருகிறது.இந்த புத்தகம் படித்திருக்கிறீர்களா?என்னிடம் மென்னூல் வடிவில் இருக்கு.

Anonymous,  Saturday, February 14, 2009 2:22:00 AM  

திருமூலர், மூலனாக இருந்த காலத்தில் அவனுக்கு ஒரு சாமியார் சொல்லிக்கொடுத்தாராம்
ஒரு மீனைக் காட்டி அதற்குள் இருப்பதும் உனக்குள் இருப்பதும் ஒன்றே.
ஒரு மரத்தைக் காட்டி அதற்குள் இருப்பதும் உனக்குள் இருப்பதும் ஒன்றே.
ஒரு பசுவைக் காட்டி அதற்குள் இருப்பதும் உனக்குள் இருப்பதும் ஒன்றே.

என எல்லாவற்றிலும் உள்ள நான் ஒன்று என்பதை மிக அழகாக விளங்கப் படுத்தியுள்ளார்.

அறிவால் அறிந்த இவ்வுபதேசத்தை, உணர்வால் உணர்ந்து உய்வு கொள்வது எந்நாளோ!?

ஓம்நமசிவாய! ஓம்நமசிவாய!! ஓம் நமசிவாய!!!

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP