"இது ஒரு கொலைக் கதை!" - 1
"இது ஒரு கொலைக் கதை!"
[என்னருமைத் தமிழ்மனங்களே! இதோ, உங்கள் வீயெஸ்கே மீண்டும் ஒரு கொலைக் கதையோடு உங்களை வதைக்க வந்திருக்கிறேன் ! அனுபவிங்க! அப்படியே ஒரு கருத்தும் சொல்லிட்டுப் போங்க!]
1.
"முட்டம் காவல் நிலையம்! இன்ஸ்பெக்டர் ராஜேஷ் பேசறேன்" சிணுங்கின தொலைபேசியை எடுத்து மிடுக்காகச் சொன்னார் ராஜேஷ்.
சொன்னாரே தவிர, "என்னடா, இன்னும் பொழுது கூட விடியலை. நைட் ட்யூட்டி முடிஞ்சு கிளம்பற நேரத்துல இதென்ன தலைவலி?" என ஒரு அலுப்பும் தெரிந்தது அவர் குரலில்.
"ஐயா! இங்க ஊர்க்கோடியில இருக்கற ஒரு வீடு தீப்பிடிச்சு எரியுதுங்க" எனப் பதட்டத்துடன் ஒரு குரல் கேட்டதும் சற்றே விறைப்பானார் ராஜேஷ்.
"உடனே தீயணைப்பு நிலையத்துக்கும் சொல்லிட்டீங்களா இல்லையா? நீங்க யாரு பேசறது? எவ்ளோ நேரமா எரியுது" எனக் கேள்விகளை அடுக்கினார்.
"என் பேரு முருகேசனுங்க. எங்க வீட்டிலிருந்து ஒரு அரை மைல் தள்ளி ஒதுக்காப்புல இருக்குதுங்க அந்த வீடு. தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் சொல்லிட்டேங்கோ. நீங்க உடனே வாங்க! மேட்டுத் தெரு பக்கத்துல இருக்குங்கோ இந்த வீடு. நான் வைச்சிறட்டுங்களா" எனத் தொலைபேசி துண்டிக்கப்பட்டது.
"யோவ் 404! ஜீப்பை ரெடி பண்ணச் சொல்லுப்பா. அப்பிடியே ஃபயர் ஸ்டேஷனுக்கும் ஒரு தகவல் கொடுத்து,.....ஏற்கெனவே தகவல் சொல்லிட்டாங்களாம். இருந்தாலும் நாமளும் சொல்லிறணும்ல.... அவங்களை மேட்டுத்தெரு பக்கம் வரச் சொல்லு உடனே! ம்ம்.. சீக்கிரம்! " எனச் சொல்லியபடியே, தொப்பியை எடுத்து தலையில் சரி செய்துகொண்டே ஜீப்பை நோக்கி விரைந்தார் ராஜேஷ்.
அடுத்த பதினைந்து நிமிடங்களில் சம்பவம் நடந்த இடத்தைச் சென்றடைந்தார்.
தீயணைப்பு வண்டி அதற்குள் வந்திருந்து, காவலர்கள் தங்கள் வேலையைத் தொடங்க ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர்.
ஆனால், பார்த்த உடனேயே ராஜேஷுக்கு புரிந்து போயிற்று, இவர்களுக்கு இன்று அதிக வேலை இருக்காதென.
அந்த ஒற்றையடுக்கு வீடு முழுதுமாக எரிந்து தரைமட்டமாயிருந்தது. தீயின் நாக்குகள் இன்னமும் அங்குமிங்குமாகக் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது.
அவ்வளவு கருக்கலிலும், ஒரு சிறு கூட்டம் கூடி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.
"இங்க யாருப்பா முருகேசன்?" விசாரணையைத் தொடங்க சுறுசுறுப்பானார் ராஜேஷ்.
"நாந்தாங்க ஐயா" என ஒரு பெரியவர் முன் வந்தார்.
"எப்போ, என்ன பாத்தீங்க. கொஞ்சம் விவரமா சொல்றீங்களா?" என்றார் ராஜேஷ்.
"அப்படி ஒண்ணும் அதிகமா எதுவும் பாக்கலீங்க. காலையில வளக்கம் போல வெள்ளன எளுந்து வெளியே வந்தப்ப, இந்த வீடு பத்தி எரியறதைப் பார்த்தேனுங்க. உடனே ஒரு சத்தம் போட்டு எளுப்பறதுக்கு அவ்ளோ வீடுங்களும் இங்க கிடையாதுங்க. அதான் உடனேயே உங்களுக்கு ஒரு ஃபோன் போட்டேன்" என ஒருவகை ஜாக்கிரதையுடன் பதில் சொன்னார் முருகேசன்.
"சரியாத்தான் செஞ்சிருக்கீங்க. இங்க குடியிருக்கறது யாருன்னாவது தெரியுமா?"
"சத்யன்னு ஒருபுள்ளாண்டைங்க. கல்யாணம் கூட இப்பத்தான் சமீபத்துல ஆச்சுங்க. கலான்னு பேருங்க அவங்களுக்கு. ரொம்பத் தங்கமானவங்க. எப்பப் பார்த்தாலும் மரியாதையாப் பேசும் அந்தத் தம்பி. ஜாஸ்தி பார்த்ததில்லீங்க. ஏங்க அவங்களுக்கு ஒண்ணும் ஆயிருக்காதில்ல?" எனப் பதட்டத்துடன் கேட்டார்.
எரிச்சலாக வந்தது ராஜேஷுக்கு.
"நானும் இப்பத்தானே வந்திருக்கேன். அவங்க வீட்டுலதான் இருந்தாங்களா இல்லியான்னு கூட தெரியாது. ம்ம்... பார்க்கலாம். எதுக்கும் நீங்க ஸ்டேஷனுக்கு வந்து ஒரு கையெழுத்து போட்டுக் கொடுங்க ... இப்ப நீங்க சொன்னதுக்கு. 404 !, இவர்கிட்ட ஒரு ஸ்டேட்மெண்ட் வாங்கிக்கப்பா" எனச் சொல்லிவிட்டு, தீயணைப்பு அதிகாரிகளை நோக்கி நகர்ந்தார்.
"என்னங்க? எதுனாச்சும் தேறுமா?" என ஒரு அதிகாரியைப் பர்த்துக் கேட்டார்.
"ம்ஹூம்..சுத்தமா எரிஞ்சு போச்சு. இந்தக் கட்டையையெல்லாம் அப்புறப்படுத்திட்டுத்தான் பார்க்கணும்" என்றபடி தன் வேலையை அவர் தொடர்ந்தார்.
"612! இங்க பந்தோபஸ்துக்கு ஏற்பாடு பண்ணுங்க. அவங்க வேலையை முடிக்கறவரை ஒருத்தரும் கிட்ட அண்டவிடாதீங்க. எதாவது தகவல் கிடைச்சா எனக்கு சொல்லியனுப்புங்க. நான் வீட்டுலதான் இருப்பேன்" என்றபடி கிளம்பினார்.
"சார்! ஒரு நிமிஷம்! இதைப் பாருங்க" என்ற தீயணைப்பு அதிகாரியின் குரல் அவரைத் திரும்ப வைத்தது!
அங்கே!.......
[தொடரும்]
17 பின்னூட்டங்கள்:
என்னருமைத் தமிழ்மனங்களே! இதோ, உங்கள் வீயெஸ்கே மீண்டும் ஒரு கொலைக் கதையோடு உங்களை வதைக்க வந்திருக்கிறேன் ! அனுபவிங்க! அப்படியே ஒரு கருத்தும் சொல்லிட்டுப் போங்க!
//""இது ஒரு கொலைக் கதை!" - 1"//
ஏன் இந்த கொல வெறி ?
//"சார்! ஒரு நிமிஷம்! இதைப் பாருங்க" என்ற தீயணைப்பு அதிகாரியின் குரல் அவரைத் திரும்ப வைத்தது!
அங்கே!.......//
ரொம்ப சஸ்பென்ஸ்....ராஜேஷ்குமார் கதை மாதிரி இருக்குமா ?
//ரொம்ப சஸ்பென்ஸ்....ராஜேஷ்குமார் கதை மாதிரி இருக்குமா ?//
......சங்கர்குமார் கதை மாதிரி இருக்கும்!:)))))))))))
//VSK said...
//ரொம்ப சஸ்பென்ஸ்....ராஜேஷ்குமார் கதை மாதிரி இருக்குமா ?//
......சங்கர்குமார் கதை மாதிரி இருக்கும்!:)))))))))))
//
அப்ப கொடுமைதான் ! முருகா காப்பாத்து.......!
:)
////"சார்! ஒரு நிமிஷம்! இதைப் பாருங்க" என்ற தீயணைப்பு அதிகாரியின் குரல் அவரைத் திரும்ப வைத்தது!
அங்கே!.......////
கதைக்குச் சரியான இடத்தில்தான் தொடரும் என்று போட்டுருக்கிறீர்கள்!
ஜமாயுங்கள்!
அச்சோ! கொலைக்கதையா? இந்த மாதிரி கதையெல்லாம் படிக்கிறதை எப்பவோ விட்டுட்டேன். இருந்தாலும் நீங்க எழுதினதாச்சேன்னு படிச்சுட்டேன்... :( நல்லா எழுதியிருக்கீங்க. பெரிய்ய்ய தொடரா, சின்னதா?
அப்ப கொடுமைதான் ! முருகா காப்பாத்து.......!
:)
முருகனைக் கூப்பிட்டாச்சுல்ல! நிச்சயமாக் காப்பாத்துவார் கோவியாரே!:))
//ஜமாயுங்கள்!//
எல்லாம் அந்த அப்பனுக்கே பாடம் சொன்ன ஆசானின் அருள் ஐயா! நன்றி!
//நீங்க எழுதினதாச்சேன்னு படிச்சுட்டேன்... :( நல்லா எழுதியிருக்கீங்க. பெரிய்ய்ய தொடரா, சின்னதா?]//
இதுக்கே ஒரு கோவில் கட்டலாம் உங்களுக்கு!:))
சின்னத் தொடர்தான் கவிநயா.
மொத்தம் 10 பதிவுகளே!!:)))
இதுவும் உண்மை நிகழ்வா?
இதில சித்தர்கள் எல்லாம் வருவாங்களா? :)
10 பகுதியா வர தொடர் எல்லாம் சின்னதா? :))
//இதுவும் உண்மை நிகழ்வா?
இதில சித்தர்கள் எல்லாம் வருவாங்களா? :)
10 பகுதியா வர தொடர் எல்லாம் சின்னதா? :))//
1. ஆம்
2. இல்லை.
3. தெரியலியே கொத்ஸ்! சின்னதுன்னு சொல்ல வரலை. ஆனா சின்னதா இருந்தா நல்லாருக்குமேன்னு சொல்றேன்!:))))))
அதெப்படி எல்லா கதைகளிலும் வர போலிஸ்காரர் 404 ஆ இருக்காரு?
:-))
//அதெப்படி எல்லா கதைகளிலும் வர போலிஸ்காரர் 404 ஆ இருக்காரு?//
இப்ப இதான் உங்க சந்தேகமா, திவா?!!:)))))))
சூப்பர்...
விறுவிறுப்பா போகுது !!!!!
//சூப்பர்...
விறுவிறுப்பா போகுது !!!!!//
உங்களை அப்பப்போ இங்கே பார்க்கறது!மகிழ்ச்ச்சியா இருக்கு செ. ரவி அவர்களே!
நமக்கு வேறவழி இல்லையே...பெட்டர் ஹாபை - ட்ராப் பண்றதுக்க்காகவாவது 'ஆத்திகம்' ஏரியாவுக்கு வந்து தானே ஆகனும் :))))
என்னங்க சொல்றீங்க ரவி! ?
ட்ராப் பண்றீங்களா?:))))))
Post a Comment