Wednesday, July 22, 2009

"அ. அ. திருப்புகழ்" - 32 "அகரமுமாகி"

"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" - 32 "அகரமுமாகி"


இந்தத் திருப்புகழ் பலரும் அறிந்த ஒரு புகழ்! இசைநிகழ்ச்சிகளில் அடிக்கடி பாடப்படும் பாடல். மதுரை சோமு மிக அருமையாகப் பாடுவார் இதை! இன்றையப் பதிவில் இந்த எளிய, பொருள் நிறைந்த பாடலின் புகழ் பார்க்கலாம்! முருகனருள் முன்னிற்கும்!

****** பாடல் ******

அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி அகமாகி

அயனென வாகி அரியென வாகி அரனென வாகி அவர்மேலாய்


இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி வருவோனே
இருநில மீதி லெளியனும் வாழ எனதுமு னோடி வரவேணும்


மகபதி யாகி மருவும்வ லாரி மகிழ்களி கூரும் வடிவோனே

வனமுறை வேட னருளிய பூஜை மகிழ்கதிர் காம முடையோனே


செககண சேகு தகுதிமி தோதி திமியென ஆடு மயிலோனே

திருமலி வான பழமுதிர் சோலை மலைமிசை மேவு பெருமாளே.


****** பொருள் ******
[பின்பார்த்து முன் பார்க்காமல் அப்படியே பார்க்கலாம்!!]


அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி அகமாகி

[அகரமும் ஆகி அதிபனும் ஆகி அதிகமும் ஆகி அகம் ஆகி]


'அகரமும் ஆகி'

எழுத்துகளின் தொடக்கம் அகரம்
உயிர்களின் தொடக்கம் இறைவன்


பிறவெழுத்துகளின் இயக்கமும் இதனால்

உயிரும் உலகும் இறையின்றி இயங்கா


அனைத்தெழுத்திலும் உன்னி நின்றிடும் அகரம்

அனைத்துயிரிலும் மறைந்திருப்பவன் இறைவன்


அகரம் சொல்லிட அதிகச் சிரமமில்லை

இறைவன் இயக்கமும் தானாய் நிகழும்

அ,உ,ம, எனும் மூவெழுத்து இதனுள்

முத்தொழிலும் இறைவன் கையில்


அருளெழுத்தாம் 'வ'கரமும் அகரத்துள்

அருளைத் தருபவன் எம்முடை இறைவன்


தொலைவையும் சுட்டும் 'அ'வெனும் எழுத்து

எட்டிநிற்பினும் அருள்வான் இறைவன்


இத்துணை பெருமை கூடிய அகரமும் ஆகி,


'அதிபனும் ஆகி'

'எந்தக் கடவுளும் என் தோள் போழ்
கந்தக் கடவுளை மிஞ்சாதே'எனும்

பாம்பன் சுவாமியின் வாக்கிற்கொப்ப

தனிபெருந் தலைவனாய்த் திகழ்பவனாகி,


'அதிகமும் ஆகி'

தெய்வங்கள் பலவுண்டு இத்திருநாட்டினிலே
அனைத்துக்கும் அதிகமாய் நிற்பவன் முருகன்

'சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமில்லை

சுப்ரமண்யர்க்கு மிஞ்சிய தெய்வமுமில்லை'
எனும்
பழமொழிக்கேற்ப அதிகமானவானுமாகி,


'அகம் ஆகி'

முத்தி பெறும் அனைவருமே அகத்துள் செல்வர்
அகத்தில் உறைபவன் அழகிய முருகன்

வீடு பேற்றினை நல்கிடும் நல்லருட் தெய்வமுமாகி,


'அயனென வாகி அரியென வாகி அரனென வாகி அவர்மேலாய்'

படைப்பினைச் செய்திடும் பிரமனுமாகி
காத்தலை நிகழ்த்திடும் மாலுமாகி

அழித்திடச் செய்யும் உருத்திரனுமாகி

அவர்க்கும் மேலாய் அற்புதம் காட்டும்

அழகிய முருகனுமாகி,


'இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி வருவோனே'
[இகரமும் ஆகி எவைகளும் ஆகி இனிமையும் ஆகி வருவோனே]

தொலைபொருள் காட்டும் அகரமும் ஆனவன்
அருகினில் இருக்கும் இகரமும் ஆகி

அண்டிடும் அடியர்க்கு நல்லருள் புரிவான்


காற்றாகிக் கொடியாகி கானகமுமாகி

ஊற்றாகி உயிராகி உள்ளவை யாவுமாய் ஆகி
தோற்றுவிக்கும் அத்தனையும் தானேயாகி

ஆற்றல்நிறைப் பரம்பொருளாய் யாவுமாகினான்


கனியிலும் இனியன் கரும்பினும் இனியன்

பனிமலர்குழல் பாவையரினும் இனியன்
தனிமுடி கவித்தாளும் அரசினும் இனியன்

உயிரினும் இனியன் உணர்வினும் இனியன்

இனிக்கும் இனிமையாய் வருபவன் முருகன்



'இருநில மீதி லெளியனும் வாழ எனதுமுனோடி வரவேணும்'
[இருநிலம் மீதில் எளியனும் வாழ எனதுமுன் ஓடி வரவேணும்]

பூவுலகில் வாழ்கின்ற அனைத்துயிரும் நலம்வாழ
எனதுமுன்னே நீ விரைந்தோடி வரவேணும்



'மகபதி யாகி மருவும்வ லாரி மகிழ்களி கூரும் வடிவோனே'
[மகபதி ஆகி மருவும் வலாரி மகிழ்களிகூரும் வடிவோனே]


அசுவமேத யாகம்பல செய்ததனால்
யாகத்தின் அதிபதியெனப் பெயர் பெற்று
வலன் எனும் அரக்கனை அழித்தமையால்

வலாரியெனப் புகழ்பெற்ற இந்திரனும்

தம்மகளாம் தெய்வநாயகி மணாளனின்

பேரழகைக் கண்டு மனதிலங்கு வியந்து

மகிழ்வுடனே போற்றும் வடிவழகு பொருந்தியவனே


'வனமுறை வேடனருளிய பூஜை மகிழ்கதிர் காம முடையோனே'

வனத்தில் வாழ்ந்தான் வேடனொருவன்
தனக்குள் ஆசையை அவனும் வளர்த்தான்

மனமயில் முருகனின் பூஜனை செய்திடும்

நினைவினில் அவனும் கோயிலை அடைந்தான்


கையினில் கனிகளும் கொம்புத்தேனும்

கொய்திட்ட புதுமலர்க் கொத்தும் கொண்டு

பையவே நடந்தான் கதிர்காமக் குமரனின்

மெய்வழிச் சாலையின் கோவிலை நோக்கி


செய்திட்ட பூஜையில் முருகன் மகிழ்ந்தான்

வந்திட்ட வேடனின் பூஜனை ஏற்றான்

மந்திரமில்லப் பூஜையிலும் மகிழ்வான்
மனமதிலொன்றி மகிழ்வுடன் செய்தால்


'செககண சேகு தகுதிமி தோதி திமியென ஆடு மயிலோனே'

பொருந்திடும் போரில் வருந்திடும் உயிர்கள்
எழுந்திடும் விழுந்திடும் அவுணரின் உடல்கள்

வேலனின் மயிலின் போரதில் மாயும்

செககணசேகு தகுதிமிதோமி எனவெழும்
மயிலின்
மீதினில் அமர்ந்து அடிடும் முருகோனே


'திருமலி வான பழமுதிர் சோலை மலைமிசை மேவு பெருமாளே'

செல்வம் மலிந்து கிடக்கும்
பழமுதிர்ச்சோலை மலையின்மீது

பெருமையுடன் அமர்ந்திருக்கும்

மனமயில் முருகோனே!

***********


****** அருஞ்சொற்பொருள் ******

அகரம் = 'அ' எனும் முதல் எழுத்து

அதிபன் = பெருந்தலைவன்

அயன் = பிரமன்

அரி = திருமால்

அரன் = சிவன்

இகரம் = சமீபத்தில் இருப்பவர்

இருநிலம் = பெரிய நிலம்

மகபதி = ஆயிரம் யாகம் செய்தவன்

வலாரி = வலன் எனு அசுரனைக் கொன்ற இந்திரன்

திரு = செல்வம்

***********


அருணகிரிநாதர் புகழ் வாழ்க!
வேலும் மயிலும் துணை!

முருகனருள் முன்னிற்கும்!

*********************************

Read more...

Monday, July 20, 2009

"திரை சொன்ன கதை!"

"திரை சொன்ன கதை!"


கவலைகளை மறந்திருக்கத் திரையரங்கம் சென்றேன்
கொறிக்கக் கொஞ்சம் வாங்கிவந்து இருக்கையிலே அமர்ந்தேன்

விளக்கெல்லாம் அணைந்திருக்கத் திரையில் படம் ஓட

வியப்புடனே நடப்பதனை விழியகலக் களித்தேன்

எட்டிவந்த எட்டுப்பேரை எத்திவிட்ட நாயகன்

கிட்டவந்து காதலியைக் கட்டியணைத்துக் கொஞ்ச

மொட்டவிழ்ந்த மலர்போல இசையென்னை வருட
கொட்டக்கொட்டப் பார்த்திருந்தேன் எனைமறந்து

திரையை
எதிரில்வந்த அனைவருமே நிஜமெனவே தெரிந்தார்
எதிர்த்து நின்ற அனைவருமே குருதிகொட்ட நின்றார்

புதியதிந்த உலகமெனத் தலையைச் சற்று நிமிர்ந்தேன்

புதிரான புகைமூட்டம் தலைக்கு மேலே கண்டேன்


புகைவந்த திசைநோக்கி பார்வை சுழல விட்டேன்

ஒளிவெள்ளம் ஒருபுள்ளியில் தொடங்கிவரக் கண்டேன்

திரையில் விழுந்த அனைத்துமே நிழலெனவே தெரிய

அரைகுறையாய் ஏதோவொன்று எனக்குள்ளே புரிய


திரையில் வந்த எல்லாமே நிஜமில்லை இங்கு

ஒளியொன்று செலுத்திவர உயிர்த்ததவை என்று

நிஜமான நாயகனோ எனக்குப் பின்னே இயக்க

விதவிதமாய்த் தெரிவததின் மூலமிங்கு கண்டேன்


புரியாதது புரிந்தபின்னர் அதனில்நாட்டம் கொண்டேன்

தெரிகின்ற ஒளியொன்றில் மனமாழ்த்தி நின்றேன்

விரிகின்ற மலர்போல என்னுள்ளம் மலர

இறையவனும் இதுபோல என்பதிங்கு புரிந்தேன்


கண்ணெதிரே தெரிகின்ற காட்சியெல்லாம் நிழலே
விண்ணதிரக் காண்பதெல்லாம் என்றுமிங்கு பொய்யே

பின்னிருந்து இறையொருவன் இயக்கமொன்று செய்ய

முன்னிருக்கும் எல்லாமும் நகர்வதென்று தெளிந்தேன்


இறையொன்றில் நாட்டம்வைத்து அதனுள்ளே நினைந்தால்

கரைசேர்க்கும் காவலென அவனிங்கே வருவான்

பிறைநிலவும் வாங்குமொளி ஆதவனின் கருணை

திரைமீது வருமொளியும் பேரொளியின் துளியே


இன்னும் சற்றுப் புரியவேண்டி தாளிணையைப் பணிந்தேன்

மின்னுமொளி கூடிவர குருநாதன் வந்தான்
என்னுடனே வாவெனவே என்னைக் கூட்டிச் சென்றான்

தன்னருளால் இன்னலெல்லாம் எனிலகற்றிக் காத்தான்


பேரருளின் திறன் புரிய பேருலகம் கண்டேன்

பேருலகில் உள்ளதெல்லாம் இறையென்றே அறிந்தேன்

வேறுசுகம் வேண்டாத ஓர்நிலையில் நின்றேன்

பாருலகில் அனைவரையும் இறையெனவே புரிந்தேன்


படைத்தவனைப் புரிந்துவிட்டால் பாருமிங்கே ரசிக்கும்

கிடைத்ததிலே மகிழ்வுகொண்டால் சோர்வுமிங்கே பறக்கும்

பிடித்தவனைப் பற்றிக்கொண்டால் பயணமிங்கே ருசிக்கும்

விடையிதனைத் தெரிந்துகொண்டால் வாழ்வுமிங்கே செழிக்கும்


திரைப்படமும் முடிந்துவிட எழுந்தங்கு நடந்தேன்

கறையெல்லாம் தீர்ந்துவிட்ட மனத்துடனே வந்தேன்
உரைக்கின்ற எல்லாமும் யான் சொன்னதும் அல்ல

நிறைவான குருவருளால் சிலவிங்கு சொன்னேன்.

************

குருவடி சரணம்! குருவே சரணம்! **********************************************

Read more...

Tuesday, July 14, 2009

மயிலை மன்னாரின் குறள் விளக்கம் - 26 கனவுநிலை உரைத்தல்

மயிலை மன்னாரின் குறள் விளக்கம் - 26 கனவுநிலை உரைத்தல்


மன்னாரைத் தேடிக்கொண்டு வழக்கமான நாயர் கடைக்குப் போனேன்.
அமரச் சொல்லிவிட்டு, மசால் வடையும், டீயும் வழங்கினார் நாயர்.
'வர்ற நேரந்தன். இப்ப வரும்' எனச் சொல்லிவிட்டு வியாபாரத்தைக் கவனிக்கத் தொடங்கினார்.


கடையிலிருந்து வந்த பாட்டு என் காதுகளில் ரீங்கரமிட்டது!

'அழகிய அசுரா! அழகிய அசுரா! அத்துமீற ஆசையில்லையா
கனவில் வந்து எந்தன் விரல்கள் கிச்சுகிச்சு மூட்டவில்லையா'

என அனிதா சந்திரசேகர் பாடிக் கொண்டிருந்தார்.


அடையாறிலிருந்து வந்த பேருந்து ஒன்றிலிருந்து அநாயசமாகக் குதித்து இறங்கினான் மயிலை மன்னார். முகத்தில் கோபம் வீசிக் கொண்டிருந்தது. என்னைப் பார்த்தும் பார்க்காதவன் போல், நேராக நாயரிடம் சென்று, ஒரு டீயை வாங்கிக் கொண்டுவந்து என்னருகில் அமர்ந்தான்.


அவனாகப் பேசட்டும் எனக் காத்திருந்தேன். இதுபோன்ற நேரங்களில் ஏதேனும் பேச்சுக் கொடுத்தால் வாங்கிக் கட்டிக் கொள்வது நாமாகத்தான் இருக்கும் எனத் தெரியும் எனக்கு!


ஒரு பீடியைப் பற்றவைத்தவன், நாயரைப் பார்த்து, 'அந்தப் பாட்டை நிப்பாட்டு நாயர்! இல்லைன்னா ஸ்டேஷனை மாத்தித் தொலை' எனக் கோபமாகக் கத்தினான்.

விஷயம் கொஞ்சம் தீவிரமானது எனப் புரிந்த நான் மன்னாரின் தோள் மீது கையைப் போட்டேன்.

என்னைப் பார்த்து கொஞ்சம் சிரித்தான்.


'இன்னாடா இன்னிக்கு மன்னாரு படா ஜூடா இருக்கானேன்னு பாக்குறியா? அது ஒண்ணுமில்லேப்பா. இந்த காலத்துப் பசங்க தானா ஒருத்தனை/ஒருத்தியை மனசுல நினைச்சுகிட்டு, கனவு காண ஆரம்பிச்சிடறாங்க. அவன்/அவ மனசுல நாம இருக்கோமான்னு கூட கவலைப் படாம! இது எம்மாந் தூரத்துக்கு வெவகாரத்துல கொண்டுபோயி விட்டுடுதுன்னு அப்போ தெரியறதில்ல. குடும்பத்துல பிரச்சினை, தனக்குள்ள பிரச்சினைன்னு இது பல பிரச்சினைங்களுக்கு கொண்டு போயிடுது.
நம்ம கபாலி மவ கற்பகம்... ஒரு பதினைஞ்சு, பதினாறு வயசுதான் இருக்கும்.... அது இதுமாரி ஒரு கனவுல மாட்டிகிட்டு கன்னாபின்னான்னு எதையோ கிறுக்கி வைச்சிருக்கு. அது கபாலி கையில் கிடைச்சு, போட்டு பின்னி எடுத்துட்டான். கபாலி சம்சாரம் என்னைக் கூப்பிட்டு ஒடனே வரச் சொல்ல, அங்கே போயிப் பார்த்தா, ஒரே ரணகளம். அதை இன்னா ஏதுன்னு விசாரிச்சு நாட்டாமை பண்ணிட்டு வந்தேன். இதுல இன்னா வேதனைன்னா, அந்தப் பையன் இதுகிட்ட நீ எனக்கு சரிப்படாதுன்னு கண்டிசனா சொல்லியிருக்கானாம். இதுதான் அதைக் கண்டுக்காம தடுமாறிகிட்டு இருக்கு! அத்தோட இங்க வந்தா 'கனவுல வந்து கிச்சுகிச்சு மூட்டறா ஒருத்தி' !! அதான் கொஞ்சம் டென்சனாயிட்டேன்' எனச் சொன்னவன் திடீரெனக் 'கடகட'வெனச் சிரிக்கத் தொடங்கினான்.


'என்ன? என்னாச்சு?' என நான் துருவினேன்.

'அட! அது ஒண்ணுமில்லீப்பா! இந்த ஒருதலையாக் கனவு காண்றது இன்னிக்கு நேத்திக்கு இல்ல. வள்ளுவன் காலத்திலியே இருந்திருக்கு! இத்த வைச்சு, ஒரு அதிகாரமே எளுதியிருக்காரு. படா தமாசா இருக்கும் அது. எளுதும்போது சிரிச்சுகிட்டே எளுதியிருப்பாருன்னு நினைக்கறேன். இப்ப அதைச் சொல்றேன். எளுதிக்கோ! எனக்கும் கொஞ்சம் மனசு லேசாகும்' எனச் சொல்லித் தொடங்கினான். மகிழ்ச்சியுடன் எழுதிக் கொண்டேன். இதோ உங்கள் பார்வைக்கு!

இனி வருவது குறளும், அதற்கு மயிலை மன்னார் சொன்ன விளக்கமும்.!

'அதிகாரம்- 122.' " கனவுநிலை உரைத்தல் "

காதலர் தூதொடு வந்த கனவினுக்கு
யாதுசெய் வேன்கொல் விருந்து. [1211]


இந்தக் கனவு காண்றதெல்லாம், அதிகமாப் பொண்ணுங்களே செய்யறாங்கன்றது ஐயனோட அபிப்பிராயம்னு நினைக்கறேன். அதுனால, இந்தப் பத்துக் குறள்லியும் ஒரு பொண்ணு காண்ற கனவைப் பத்தியே சொல்லியிருக்காரு! ஆனா, இது ஆம்பளைப் பசங்களுக்கும் பொருந்தும்ன்றதை நெனைப்புல வைச்சுகிட்டு புரிஞ்சுக்கோ! சரியா!

மொதல்ல இந்தக் காதல்ன்றத சரியாப் புரிஞ்சுக்கோ! ஒருதலையா அன்பு வைக்கறதுக்குப் பேரு காதல் இல்லை! காதல்ன்னா அது ரெண்டு பேருக்குள்ள வர்றது. மத்ததெல்லாம் காதல் இல்லை. ஒருத்தியை நெனைச்சுகிட்டு தாடியை வளர்த்துக்கறதோ, இல்ல, அவனை நெனைச்சுகிட்டே சாப்பிடாம ஒரு பொண்ணு மெலிஞ்சு போறதோ மட்டும் காதல்னு ரொம்பப் பேரு நெனைக்கறாங்க! இது வெறும் அன்பு வெறி மட்டுந்தான்! காதல் இல்லை! சரி விடு! இப்ப குறளைப் பார்ப்போம்.


இந்த மொதக் குறள்ல, ஒரு பொண்ணு கனவு காண்றா! அதுல இவ காதல் பண்ற ஆளுகிட்டேர்ந்து ஒரு தூது எடுத்துகிட்டு வருதாம் அது! கனவுன்றதே இவ நெனைக்கறதோட வெளிப்பாடுதானே! அதான் அவன் வந்து எனக்கு ஒன்னிய ரொம்பவே பிடிச்சிருக்குன்னு சொல்றதா இவ கனவு காண்றா! ஒடனியே, ஆஹா! இப்பேர்ப்பட்ட நல்ல சேதியைச் சொன்ன இந்தக் கனவுக்கு நான் இன்னா விருந்து வைக்கறதுன்னு அடுத்த கனவுக்குப் போயிடறா!!


கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு
உயலுண்மை சாற்றுவேன் மன். [1212]


நேருல பாக்கறப்பல்லாம் ஒண்ணுமே நடக்கலை! அவன் இவளைக் கண்டுக்கறதே இல்லை. ஆனா, இவளுக்கோ அவன் மேல ஆசை அதிகமாயிட்டே இருக்கு! அதுனால தூக்கங்கூட சரியா வர்றதில்ல!
கொஞ்சமாவது தூங்கினாத்தானே கனவுன்னு ஒண்ணு வந்து அதுலியாவது அவனோட பேசலாம்; ஆடலாம்! அதுனால, இவ இன்னா பண்றான்னா, கண்ணுகிட்ட வேண்டிக்கறா!
'ஏ! கண்ணே! கண்ணே! கொஞ்சம் ஒன்னோட இமைங்களை மூடச் சொல்லேன்! அப்பத்தானே என் கனவுல அவரு வருவாரு! அவரு வந்தாத்தானே 'நீ இன்னாதான் என்னைக் கண்டுக்கலைன்னாலும், நான் ஒனக்காகவே காத்துகிட்டிருக்கேன்'ற சமாச்சாரத்தை நான் அவர்கிட்ட சொல்லமுடியும்'னு பொலம்பறா.
நேருலதான் ஒண்ணும் ஆவலை! கனவுலியாவது கெஞ்சலாமேன்னு நெனைக்கறா இவ!


உயல் உண்மைன்னா, இருக்கற உண்மைன்னு பொருள்!

நனவினால் நல்கா தவரைக் கனவினால்
காண்டலின் உண்டென் உயிர். [1213]


முளிச்சுகிட்டு இருக்கறப்ப, அவன் இவளைக் கண்டுக்கறதே இல்லை! அப்பிடியே கண்டுகிட்டாலும், எனக்கு ஒம்மேல காதல்னு ஒண்ணும் இல்லைன்னும் சொல்லிட்டானாம்! இருந்தாலும் இதுக்கு மட்டும் ஆசை விடலை! அவனையே நெனைச்சுகிட்டு கனவு காண்றா! அதுனாலத்தான் இவ உசுரே இவ கிட்ட இன்னும் இருக்குதாம்!
இவளா ஒண்ணை நெனைச்சுக்க வேண்டியது! அப்பால, அதுனாலத்தான் என் உசுரே எங்கிட்ட இருக்குன்னு முடிவு பண்ணிட வேண்டியது. இதே பொளப்பாப் போச்சு!


கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
நல்காரை நாடித் தரற்கு. [1214]


இந்த 'நனவினான் நல்காரை'ன்னு திருப்பித் திருப்பி ஐயன் சொல்றதைக் கெவனி!
நேர்ல ஒண்ணும் கொடுக்காதவன்னு அவனோட நிலையைக் கண்டிசனா சொல்லிடறாரு. இதான் கெடந்து அல்லாடுது.

இப்பிடி அவனைக் கனவுல அடிக்கடி பாக்கறதுல இதுக்கு வர்ற சந்தோசம் இருக்கே அதுவே அவன் நேர்ல ஒண்ணுமே தராததைக் கூட மறக்கடிச்சு அவ்ளோ குஜாலைக் கொடுக்குதாம்!


நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்
கண்ட பொழுதே இனிது. [1215]


எதுத்தாப்புல அவன் வர்றப்ப, அவனைப் பாக்கறப்ப, அவனோட பளகறப்ப, கிடைக்கற சந்தோசம் அந்த நேரத்துக்கு மட்டுமே இருக்கு. அவன் போனப்பறந்தான் அவன் சொன்னதுல்லாம் மனசுல வந்து கஸ்டத்தைக் குடுக்குதே!
அதேபோல, கனவுல அவன் வர்றதும், பளகறதும் அந்தக் கனவு இருக்கற வரைக்குந்தான் இன்பமா இருக்கு. முளிச்சவொடனே, நெசம் புரியறதால, மறுபடியும் தொல்லைதான்! துக்கந்தான்!

இதைத்தான் சொல்றாரு ஐயன் தெளிவா இதுல. ரெண்டு பேருக்கும் ஒத்துப் போவலைன்னா, அல்லாமே கொஞ்ச நேரத்துக்குத்தான் இன்பமா இருக்கும். அது பூடுச்சுன்னா, அப்பால ரோதனைதான்!


நனவென ஒன்றில்லை யாயின் கனவினால்
காதலர் நீங்கலர் மன். [1216]


இந்தக் குறள்தான் ரொம்பவே தமாசா இருக்கும் பாரேன்!
கண்ணு முளிச்சு இருக்கற நேரம்லாம், உண்மைநிலை இன்னான்னு புரியறதுனால, அவன் எனக்கு இல்லைன்றது தெளிவா வெளங்கி கஸ்டப்படுத்துது.
கனவு காண்றப்ப, இதெல்லாம் மறைஞ்சுபோயி, அவனோட ஆட்டம், பாட்டம் எல்லாம் நடக்குது
...... நம்ம மனசுதானே காணுது! அதுக்கு நாமதானே எசமான்! இஸ்டம்போல எது வேணும்னாலும் கண்டுக்கலாமே!.....
அதனால, இப்ப இந்தப் பொண்ணு இன்னா நெனைக்குதுன்னா, இந்த நனவுன்ற நெசமே இல்லாம இருந்தா, ஜாலியா எப்பவுமே கனவு கண்டுகிட்டே இருக்கலாமே. அவனோடேயே இருக்கலாமேன்னு இதுக்கு ஐடியா தோணுது!

இப்பிடித்தான் நெசத்தைத் தொலைச்சுபிட்டு கனா காண்றதுலியே நிக்குதுங்க பலபேரு! மறந்திராதே!
இது பொம்பளைக்கு இங்கே சொன்னாலும், ஆம்பளைங்களுக்கும் பொருந்தும்!


நனவினால் நல்காக் கொடியார் கனவினால்
என்எம்மைப் பீழிப் பது [1217]


இப்ப, இன்னும் கொஞ்ச மேல போறாரு ஐயன்!
கனவுன்றது நாமளே நெனைச்சுக்கறதுன்னு சொன்னேன்லியா! அதுல அப்பப்ப, இவன் நேருல சொன்ன சில விசயங்களும் வரும்! அதான் 'நான் ஒன்னியக் காதலிக்கலை'ன்னு சொன்னதும்!
இன்னாடா இது ரோதனையாப் போச்சு! நனவுலதான் ஒண்னும் நல்லபடியாக் கொடுக்கலை! நிம்மதியா நம்ம இஸ்டத்துக்குக் கனாக் காணலாம்னா அதுலியும் வந்து இப்பிடி சொல்லிட்டுப் போறானேன்னு இதுக்குக் கோவம் கோவமா வருது. 'நேருல வந்துதான் ஒண்ணுமே இல்லைன்னு சொல்லிட்டே! இப்ப கனாவுலியும் வந்து ஏன் கஸ்டம் கொடுக்கறே?'ன்னு அவனைத் திட்டுது!


துஞ்சுங்கால் தோள்மேல ராகி விழிக்குங்கால்
நெஞ்சத்தவர் ஆவர் விரைந்து. [1218]


படுத்துத் தூங்குது!
இஸ்டத்துக்குக் கனா வருது.
கனவுல வந்து இன்னான்னமோ பண்றான் அவன்!
அவ தோள்மேல நின்னுகிட்டு ஆடறானாம்!
'டக்'குன்னு முளிப்பு வருது! முளிச்சுப் பார்த்தா அவனைக் காணும்! அல்லாம் கனவுன்னு தெரியவருது.
அந்த கனா கொடுத்த சந்தோசத்துலியே அதுவே நெசம்னு ஏமாந்துபோயி, அவனைத் தூக்கி நெஞ்சுக்குள்ள வைச்சு மூடிக்கறாளாம் இவ!
ஆசைதான் இன்னும் ஜாஸ்தியாவுது! அப்பால இன்னா? தொடர்ந்து கஸ்டந்தான்!


நனவினால் நல்காரை நோவர் கனவினால்
காதலர்க் காணா தவர். [1219]


எத்தினிவாட்டி 'நனவினால் நல்காதவர்'னு இந்த அதிகாரத்துல சொல்லியிருக்காரு பாரு!
சில சமயம் இன்னோரு தமாஸ் நடக்கும். எப்பவுமே இவனைப் பத்தின கனாவே வரும்னு சொல்ல முடியாது. நாளைக்கு ஒரு பரிட்சை இருக்குன்னு வைச்சுக்கோ! அதை நல்லா எளுதணுமேன்ற நெனைப்புல அதைப் பத்தின கனா கூட வரலாம். இது மாரி, வேற சில கனாக்களும் வரலாம். அன்னிக்கெல்லாம் இவன் ஜூட் விட்டுட்டான்னு மறுநாளைக்கு முளிச்சுகிட்டதும், நீ ஏன் நேத்திக்கு என்னோட கனவுல வரலைன்னு அவங்கிட்ட சண்டை போடறா!
கனான்றதே நாமளா கொண்டுவர்றதுதான்னுகூட புரிஞ்சுக்காம! இதான் அவஸ்தை!


நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால்
காணார்க்கொல் இவ்வூ ரவர். [1220]


இது அல்லாத்துலியும் இதான் டாப்!
அவன் இவளைக் கண்டுக்கறதே இல்லைன்றது அரசப் பொரசலா அக்கம்பக்கத்துக்கு தெரிய வருது!
'ஏம்மா! அவன் ஒன்னை விட்டுட்டானா?'ன்னு அவங்க கேக்கறப்ப, இது இன்னா பதில் சொல்லுது தெரியுமா?
'இல்லியே! அடிக்கடி என்னோட கனாவுல வந்து போறாரே! அது உங்களுக்குத் தெரியாதா?'ன்னு திருப்பிக் கேக்குதாம்.
அந்த அளவுக்கு முத்திப் போயிருது இந்த ஒருதலையான நேசம்!


அந்தக் காலத்துலியே இப்படில்லாம் இருந்திருக்கு. இது இன்னிக்கும் தொடருதுன்றதுப்பா!

தனக்குன்னு ஒருத்தன் வருவான்றதை நம்பாம, இப்பிடிப் போயி விளுந்திட்டு பின்னாடி அல்லல் படறதை விட்டுட்டு, அந்தந்த வயசுல இன்னா செய்யணுமோ அதைச் செஞ்சுகிட்டிருந்தா தானே அல்லாம் நடக்கும்னுதான் கற்பகத்தாண்டை சொல்லிட்டு வந்திருக்கேன். பார்ப்போம்! இன்னா நடக்குதுன்னு' எனச் சொல்லிவிட்டு, 'சரி வா! ஏதாச்சும் சாப்பிடலாம்!' எழுந்தான் மயிலை மன்னார்.

இந்த அதிகாரத்தை இப்படியும் பார்க்க முடியுமா என வியந்துகொண்டே நானும் கூடச் சென்றேன்... 'ஹோட்டல் சங்கீதா'வை நோக்கி!
**********************************

Read more...

Sunday, July 12, 2009

"அ.அ. திருப்புகழ் - 31 "தொல்லை முதல் தானொன்று"

அருணையார் அருளிய திருப்புகழ் - 31 "தொல்லை முதல் தானொன்று"


மீண்டும் ஒரு சிறிய இடைவேளைக்குப் பின், இன்று ஒரு திருப்புகழ்!
மாதம் இரு முறையாவது எழுத வேண்டுமென நினைக்கிறேன்.
முருகன் அருள் செய்ய வேண்டும்.


இன்றைய திருப்புகழ் கொல்லிமலை முருகனைப் போற்றிப் பாடியருளியது.
பரமானந்தக் கடலில் நானும் மூழ்க அருளிச் செய்யப்பா என வேண்டுகிறார் அருணையார்!
இப்போது இந்த அழகிய பாடலைப் பார்ப்போம்!

முருகனருள் முன்னிற்கும்!!

********************************

***********பாடல்***********

தொல்லைமுதல் தானொன்று மெல்லியிரு பேதங்கள்

சொல்லுகுண மூவந்த மெனவாகி

துய்ய சதுர் வேதங்கள் வெய்யபுல னோரைந்து

தொய்யுபொரு ளாறங்க மெனமேவும்


பல்லபல நாதங்கள் அல்கபசு பாசங்கள்

பல்குதமிழ் தானொன்றி யிசையாகி

பல்லுயிரு மாயந்த மில்லசொரு பானந்த

பௌவமுற வேநின்ற தருள்வாயே


கல்லுருக வேயின்கண் அல்லல்படு கோவம்பு

கல்வருக வேநின்று குழலூதுங்

கையன்மிசை யேறும்பன் நொய்யசடை யோனெந்தை

கைதொழ மெய்ஞ் ஞானஞ்சொல் கதிர்வேலா


கொல்லைமிசை வாழ்கின்ற வள்ளிபுன மேசென்று

கொள்ளைகொளு மாரன்கை யலராலே

கொய்துதழை யேகொண்டு செல்லுமழ வாகந்த

கொல்லிமலை மேனின்ற பெருமாளே.


இது ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த பாடல்! பொருளறியும் போது புரியும்! வழக்கம் போல் பின் பார்த்து, முன் பார்க்கலாம்!

********** பொருள் *********

கல்லுருக வேயின்கண் அல்லல்படு கோவம்பு

கல்வருக வேநின்று குழலூதுங்
கையன்

கல் உருகவே இன்கண் அல்லல்படு
கோ அம்
புகல் வருகவே நின்று
குழல் ஊதும் கையன்

குழலூதி நின்றால் கல்லும் உருகிவிடும்
புகலிடம் ஏதென்று அல்லல் படுகின்ற

ஆவினங்களுக்குச் சொந்தயிடம் இதுவென்று

புரிந்திடும் வண்ணம் புல்லாங்குழல் எடுத்து

இனியகானம் இசைக்கின்ற கண்ணனெனும்


மிசை யேறும்பன் நொய்யசடை யோனெந்தை
கைதொழ மெய்ஞ் ஞானஞ்சொல் கதிர்வேலா


மிசை ஏறு உம்பன் நொய்ய சடையோன்
எந்தை
கைதொழ
மெய்ஞ்ஞானம் சொல் கதிர்வேலா

திரிபுரம் எரிக்கப் புறப்பட்ட வேளையில்
விநாயகனை வணங்காமல் தேவர்கள் தொடங்க

தேரின் அச்சு முறிந்து வீழ்கையில்

இடபமாக வந்து நின்று திருமால்அருள

அதன்மீது ஏறியருளிய பெருமானாம்

மெலிந்த சடைகளை உடைய எந்தைபிரான்

சிவனாரும் கைதொழுது நின்று

ஓமெனும் பிரணவத்தின் பொருளை அறியவேண்டி

பணிந்து நின்று கேளெனச் சொல்லி

பிரணவப் பொருளினை அருளிச் செய்த

ஆதவன்போல ஒளிபொருந்திய
வேலினைத் தாங்கும்
முருகோனே!

கொல்லைமிசை வாழ்கின்ற வள்ளிபுன மேசென்று
கொள்ளைகொளு மாரன்கை யலராலே

கொய்துதழை யேகொண்டு செல்லுமழ வாகந்த

கொல்லிமலை மேனின்ற பெருமாளே


கொல்லைமிசை வாழ்கின்ற வள்ளிபுனமே சென்று

கொள்ளைகொளும் மாரன்கை அலராலே

கொய்து தழையே கொண்டு செல்லும் மழவா! கந்த!

கொல்லிமலை மேல் நின்ற பெருமாளே!


தினைப் புனத்தைக் காவல் செய்யவேண்டி
கையில் கவண்கல் எடுத்து வந்து

ஆலோலம் பாடிநின்ற வள்ளிநாயகியாரின்

புனத்தை நாடிச்சென்று காதலுணர்வைக்

கூட்டித்தரும் மன்மதன் எறிகின்ற மலர்க்கணை
விளைவித்த காதல் பெருக்கினால் ஆட்பட்டு

கையில் கிடைத்த தழைகளையெல்லாம் பறித்துக்கொண்டு
சென்ற கட்டழகு உடையவனே! கந்தக் கடவுளே
!
கொல்லிமலைமீது வீற்றிருக்கும்
பெருமை மிகுந்த சிறந்தவனே!


தொல்லைமுதல் தானொன்று மெல்லியிரு பேதங்கள்
சொல்லுகுண மூவந்த மெனவாகி

துய்ய சதுர் வேதங்கள் வெய்யபுல னோரைந்து

தொய்யுபொரு ளாறங்க மெனமேவும்


தொல்லைமுதல் தான் ஒன்று மெல்லி இரு பேதங்கள்

சொல்லு[ம்]குணம் மூ[ன்று] அந்தம் எனவாகி

துய்ய சதுர் வேதங்கள் வெய்ய புலன் ஓர் ஐந்து

தொய்யு பொருள் ஆறு அங்கம் என மேவும்


[இந்த வரிகள் ஒன்று முதல் ஆறு வரை வருகின்ற அழகிய கவித் திறத்தைக் காட்டுகின்றது.]

பழைமை எனவரும் இறைவனே முதல்வன்

சக்தியும் சிவனுமாய் இருவராகி அருள் புரிவான்


சத்துவம், இராஜஸம், தாமஸம் என்னும்

முக்குணங்களின் சொரூபமாய் விளங்கும்

அயன்,அரி,அரன் என்பவரின் மூலமாய் விளங்குவான்


ருக்,யஜுர்,சாம, அதர்வணம் என்னும்

நான்கு வேதங்களின் ஆதியாய்த் திகழ்வான்


சுவை,ஒளி,ஊறு,ஓசை,நாற்றம் என்னும்

ஐந்து புலன்களையும் வென்றவனும் இவனே


நாசி வழியே உருவாகும் எழுத்துகளின் ஒலியானவன்

வாய் வழியே எழுந்த ஒலியின் விளைவாய்
மகேச்வர சூத்திரம் என்னும் இலக்கணம் பிறப்பித்தவன்
கவிதைகளின் பாதம் போலும் சந்தஸ்
இதனுதவி இல்லாமல் எழுதும்கவி நிலைக்காது

இத்தனை இத்தனை எழுத்து, மாத்திரை என
வரையறுக்கும்
கால் போலும் சந்தஸை உருவாக்கியவன்

எதனால் இப்பதம் இங்கு வந்ததென உணர்விக்கும்

நிகண்டு எனப்படு நிருக்தம் காதுவழியே தந்தவன்

காணும் பொருளைக் காட்டுவிக்கும் கண்போல

விளைவதைக் காட்டும் ஜோதிடம்எனும் கண்ணானவன்

இன்னின்ன செயல் செயும் கைகள்போலானவன்


என எம்மை சோர்வடையச் செய்யும்

ஆறு அங்கங்களை உடையவனாகி


[இவற்றை எல்லாம் விட்டால்தான் அவன் தெரிவான்! அறிவழிந்தாலே அவன் அகப்படுவான்!]

பல்லபல நாதங்கள் அல்கபசு பாசங்கள்
பல்குதமிழ் தானொன்றி யிசையாகி

பல்லுயிரு மாயந்த மில்லசொரு பானந்த

பௌவமுற வேநின்ற தருள்வாயே
.

பல்ல பல நாதங்கள் அல்க பசு பாசங்கள்

பல்கு தமிழ் தான் ஒன்றி இசையாகி

பல்லுயிருமாய் அந்தம் இல்ல[லா] சொரு[ரூ]ப ஆனந்த

பௌவம் உறவே நின்றது அருள்வாயே


ஒலிக்கின்ற ஓசையெலாம் நீயே ஆனாய்
வாழுமுலகில் கட்டிவைக்கும் பசு பாசங்களானாய்

வெள்ளமெனப் பெருகிவரும் தீந்தமிழில் பொருந்தி நின்றாய்

மனதை மயக்கும் இசையாகவும் ஆனாய்

அத்தனை உயிர்களிலும் வாழும் ஒரே உயிருமானாய்

இதன் காரணமாகவே முடிவே இல்லாதவனும் ஆனாய்

இத்தனையும் நிறைந்த ஆனந்த உருவக் கடலும் ஆன


இவைஅத்தனையும் கூட்டிவந்து நிலையாய் அளிக்கவல்ல

அந்தப் பொருளை எனக்குக் காட்டி அருள்வாயே!

*****************

******அருஞ்சொற்பொருள்*******

வெய்ய = கொடிய

தொய்யு பொருள் = சோர்வடையச் செய்யும் பொருள்

அல்க = தங்க

பௌவம் = கடல்

புகல் = அடைக்கலம்

மிசை = மீது

நொய்ய = மெலிதான, நுண்மையான

எந்தை = எம் தந்தை

மாரன் = மன்மதன்

மழவன் = கட்டான உடலை உடைய இளைஞன்

********************
அருணகிரிநாதர் புகழ் வாழ்க!
வேலும் மயிலும் துணை!
முருகனருள் முன்னிற்கும்!

******************************

Read more...

Thursday, July 09, 2009

குருவடி சரணம்! குருவே சரணம்!


குருவடி சரணம்! குருவே சரணம்!



என்றோ செய்த புண்ணியப் பலனாய்
சென்றிடும் போதெலாம் தரிசனம் தந்தாய்
அன்பே ஒன்றே அணிகலனாக்கி
அகமும் புறமும் நிறைத்திட வந்தாய்


கனிவுடன் பணிவாய் பணிவினில் வெல்வாய்
காணும் யாவிலும் கடவுளைக் காண்பாய்
இனிமை ஒன்றே நின் சொலில் வந்திட
அடியவர் யாவரும் மகிழ்ந்திடச் செய்வாய்


பழகிட எளிமை பார்த்திட இனிமை
அழகிய முகத்தின் அருளொளி இனிமை
திகழும் புன்னகை சிந்திட இனிமை
புகலும் மொழிகள் கேட்டிட இனிமை


இறைவன் இருப்பது நின்னால் புரிந்தேன்
நம்பிடும் சொல்லில் வேதம் உணர்ந்தேன்
கும்பிடும் அடியவர் குணங்கள் அறிந்தேன்
கோபம் இல்லா வாழ்வினை விழைந்தேன்


இறைவழி சென்றிட இன்னல்கள் இல்லை
தன்வழி சென்றிடும் குணமும் அவனே
தன்வழி இறைவழி சேர்ந்திடும் போது
தன்னலமில்லா இன்பம் வருமே


என்வழி எனநான் எண்ணிடும் செய்கை
இறைவழி விட்டு விலகிடும் பாதை
என்செயல் செய்திட விளைந்திடும் வினைவுகள்
என்விதி என்பதை எனக்கே தெளிந்தாய்


தாயை வேண்டிட தயவவள் புரிவாள்
வேண்டும் யாவையும் விரைந்தே அருள்வாள்
கொடுப்பது ஒன்றே அவளின் குணமாம்
கோபம் கொள்வது இறையிலை என்றாய்


காலையில் தினமும் ஒருசிலநொடிகள்
தாயை வேண்டி தியானம் செய்தால்
நாளும் உடனே அன்புடன் காத்திட
நற்செயல் செய்திட தாயவள் வருவாள்


பலநூல் படித்துக் காலத்தைக் கழித்து
படித்ததன் பொருளை உணர்ந்திட மறுத்து
அனைத்தும் அறிந்ததாய் ஆணவம் பிடித்து
இருக்கும் நாட்களைச் செலவிடல் முறையோ


படித்தது போதும் பயிற்சியில் நுழைவாய்
நாளும் சிலநொடி தியானம் புரிவாய்
கனவினில் நிகழ்வது யாவும் பொய்யே
நனவிலும் அதுவே என்பதை உணர்வாய்


எதிரினில் இருப்பவர் யாரென உணர்ந்திட
ஐம்புலன் ஆளுமை அவசியம் தேவை
புலன்வழி அறிந்திடும் யாவும் பொய்யே
மெய்வழி எதுவென மனதினுள் தேடு


தன்னை அறிந்திட கனவுகள் புரியும்
நனவினில் நிகழ்வதும் கனவெனப் புரியும்
நின்னைத் தவிர்த்து நித்திலம் இல்லை
காணும் அனைத்திலும் தாயே கடவுள்


அனைத்தும் கடவுள் அகிலமும் கடவுள்
அன்பே கடவுள் ஆழ்மனம் கடவுள்
எல்லாம் கடந்தபின் ஏதெவர் கடவுள்
எல்லையில்லா நிறைவே கடவுள்


இறைவழி ஒன்றி நின்செயல் நடத்து
மறைவழி யாவும் மனதினுள் விளங்கும்
குறைவிலா இன்பம் உள்ளினுள் பெருகும்
நிறைவாய் வாழ்ந்திடும் நிம்மதி விளங்கும்


தெளிவிலா எதுவும் ஆன்மீகம் இல்லை
துணிவுடன் அதனைத் தள்ளிடல் நன்றே
இதுவே தெளிவென உள்மனம் சொல்லும்
அதுவே குருவருள் வாய்த்திடும் நன்நாள்


கனிவுடன் வருவான் கைகளைப் பிடிப்பான்
அன்பனே வாவென அழைத்துச் செல்வான்
இன்பம் நிறைத்திடும் வழியினைக் காட்டி
நண்பனாய் நின்னை நடத்திச் செல்வான்


பெருங்கடல் போலே நீசொன்ன வேதம்
சிறுதுளி அதனில் செப்பினேன் இங்கே
புரிதலில் மொழிதலில் தவறுகள் இருப்பின்
நீயே அறிவாய் குறைகள் களைவாய்


குருவருள் இன்றி திருவருள் இல்லை
குருவே ஒருவரின் வாழ்வின் எல்லை
அருளைப் பொழிந்திடும் அவன் தாள் சரணம்
குருவடி சரணம்! குருவே சரணம்!
********************************************

Read more...

Monday, July 06, 2009

"குருமதி நாளினில் பணிமுகம் குருமுகம்."

"குருமதி நாளினில் பணிமுகம் குருமுகம்."


உருநின்று உள்ளாடும் ஓர்நினைவில் மகிழ்ந்திருக்க

திருமுகத்தின் வனப்பினையே மனமெண்ணிக் களித்திருக்க

பெருநதியாய்ப் பாய்ந்துவரும் பேரன்பில் கலந்திருக்க

குருவருளை நாடியே திருமுருகன் அடிபணிந்தேன்.

***********



ஒருமுகம் திருமுகம் எதிர்வரும் குருமுகம்

அருள்முகம் தருமுகம் நிறைமுகம் குருமுகம்

மருள்தனை நீக்கிடும் மாதவன் குருமுகம்

வருமுகம் நகைமுகம் அழகுறு குருமுகம்



என்முகம் பார்த்தெனை அருள்செயும் குருமுகம்

இன்முகம் காட்டியே இதம்தரும் குருமுகம்

விண்முகம் காட்டிடும் வகைசெயும் குருமுகம்

உள்முகம் நோக்கியே தினம்வரும் குருமுகம்



பெருமுகம் அருள்தனைத் தருமுகம் குருமுகம்

அறுமுகம் வினைகளை அறுமுகம் குருமுகம்

உருமுகம் உள்ளினுள் காட்டிடும் குருமுகம்

மறுமுகம் வேண்டா மலர்முகம் குருமுகம்



எழில்முகம் நினைவினில் திகழ்ந்திடும் குருமுகம்

அழகிது வெனவே நகைமுகம் குருமுகம்

பழகிட எளிதாய் ஒளிர்ந்திடும் குருமுகம்

மெழுகென வென்னை யுருக்கிடும் குருமுகம்



பிழைமுகம் காணப் பொறுக்கா குருமுகம்

மழைமுகி லெனவே பொழிந்திடும் குருமுகம்

குழைந்திடக் குழைந்திடும் குழந்தைக் குருமுகம்

வழியெனக் கெனவே வந்தவோர் குருமுகம்



நனிமுகம் கனிமுகம் பனிமுகம் குருமுகம்

இனியெனைக் காத்திட அருளிடும் குருமுகம்

பனிமல ரிரவில் பொழிமுகம் குருமுகம்

பூரண நிலவாய் மலர்ந்திடும் குருமுகம்



ஓமெனும் மறையின் பொருள்முகம் குருமுகம்

'ஓம்'எனச்சொல்லி வரந்தரும் குருமுகம்

போமெனத் துயரைப் போக்கிடும் குருமுகம்

'ஊம்'எனும் குறிப்பால் கதிதரும் குருமுகம்



அடிமலர் தொழுதிட அருள்செயும் குருமுகம்

மடியினில் வைத்து மகிழ்ந்திடும் குருமுகம்

வடிவழ கெல்லாம் காட்டிடும் குருமுகம்

வடிவேல் தாங்கிடும் முருகனின் குருமுகம்



அருள்முகம் நினைமுகம் வழிசெயும் குருமுகம்

திருமுகம் கண்டிட வினையழி குருமுகம்

இருள்முகம் நீக்கிடும் குமரனின் குருமுகம்

குருமதி நாளினில் பணிமுகம் குருமுகம்.



குருவடி சரணம்! குருவே சரணம்!

**********************************************

Read more...

Thursday, July 02, 2009

"திருச்செந்தூர் குடமுழுக்கு"

"திருச்செந்தூர் குடமுழுக்கு"

வடமலைராயன் மனம் மிக நொந்தான்
மனம்நிறை முருகனின் உருதேடி அலைந்தான்

கள்வரன்று கொண்டுபோன சேதிகேட்டுத் துடித்தான்

மறுசிலையும் வடித்திடவே ஆணையொன்று செய்தான்


கனவிலங்கு முருகன் வந்தான்

கடலிடையே தேடென்றான்

எலுமிச்சை மிதக்குமென்றான்
எடுத்துவர அருள் கொடுத்தான்


கட்டுமரம் ஏறியங்கு வடமலையான் புறப்பட்டான்

நடுக்கடலில் நாயகனைத் தேடியங்கு அலைந்தான்

கருடனொன்று வட்டமிட அதன்பின்னே சென்றான்
கள்வரிட்ட இடத்தினிலே எலுமிச்சை மிதக்கக் கண்டான்


சிலையின் கனம் அதிகரிக்க

கட்டுமரம் தத்தளிக்க

பரிதவித்த கள்வரவர்

பொற்சிலையைக் கடலிலிட்டார்


ஆழ்கடலுள் குதித்தங்கே ஆண்டவனைக் கண்டெடுத்தான்

வாழ்கின்ற வாழ்க்கையிலே பேரருளும் சிறக்கக் கண்டான்

சூழ்ந்திருந்த கவலையெலாம் நொடிப்பொழுதில் அகன்றுவிட
மகிழ்வுடனே வடமலையான் முருகனுரு மீட்டுவந்தான்


இறையருளிருக்க ஏனிங்குகவலை

கரைசேர்க்கும் கந்தனிவன்
அலைகடலில் குளித்தபின்னர்

அலைவாயில் கோயில் கொண்டான்


திருச்செந்தூர் சந்நிதியில் தினமெல்லாம் திருவிழா

அருட்செந்தில் பதியினிலே ஆனியிலே பெருவிழா

குடமுழுக்கு காணுகிறான் கோலமயில் முருகனிவன்

ஓடிவந்து தரிசிப்போர் உள்ளமெலாம் நிறைத்திருப்பான்


வேலில்லா முருகனிவன்

கமலமலர் கையினிலே

அப்பனுக்கு அனுதினமும்

அருட்பூசை செய்கின்றான்


அலைமோதும் கடலிங்கு அரகரோகரா தினம்பாட

அலையலையாய் அடியவர்கள் அருள்முருகன் முகம்காண

சிலையாக நிற்கின்ற திருவுருவம் அருள்சொரிய

மலைபோலும் துன்பமெலாம் பொடிப்பொடியாய்த் தகர்ந்திடுமே


முருகனுக்கு அரோகரா

வேலனுக்கு அரோகரா

கந்தனுக்கு அரோகரா

செந்திலாண்டவனுக்கு அரகரோகரா!


வேலும் மயிலும் துணை!

முருகனருள் முன்னிற்கும்!
*********************************

Read more...

Tuesday, June 30, 2009

"கொடுத்திடும் குருவே! நின் தாள் சரணம்!"

"கொடுத்திடும் குருவே! நின் தாள் சரணம்!"

இறையெது எங்கென அனுதினம் தேடி
மறைமுதல் நூல்களில் நாளும் நினைந்து
நரைதிரை வரும்வரை நாட்களைக் கழித்து
அரைகுறை அறிவினால் பலவும் பிதற்றி
நிறைமதி உண்டென ஆணவம் பிடித்து
குறைவிலா இறையவர் சொற்களைக் கேட்டும்
முறையிலா வாழ்வினில் காலம் நடத்தி
வரையிலா இன்பம் பொழுதெலாம் கொண்டு
திரிந்திடும் மனத்தை சீர்செய்யாமல்
புரிந்திடும் அவலம் தினமும் தொடர
இறையென தெதிரில் நேரில் வந்தும்
அறியாதிருக்கும் நிலைமையில் உழலும்
புரியாச் சிறுவன் எனைநீ தடுத்து
'படித்தது போதும்! பயிற்சியில் தொடர்வாய்'
எனவுரை சொல்லி அன்புடன் காத்த
இறையவா நின் தாள் பணிந்தேன் அருள்வாய்!


இறையவன் உண்டு! கண்டவர் சொன்னார்!
மறைநூல் பொருளின் சாரம் இதுவே!
நம்பிடும் நல்லவர் சொல்லிய சொல்லால்
நானும் நம்பினேன் நீவரு வாயென!
இன்றையப் பொழுதின் செயல்கள் யாவிலும்
நின்னருள் ஓங்கி நித்தமும் துலங்க
இறையவா! நீயே என்னுடன் இருக்கும்
ஒருவரம் கேட்பேன்! உடனே அருள்வாய்!

இறையருள் காட்டும் இன்வழி தன்னில்
நிறைமனதுடனே நாளும் நடக்க
குறைவிலா இன்பம் கூடவே நடக்கும்!
தன்செயல் ஒன்றின் தகைமையை விடுத்து
நின்செயல் ஒன்றே நிச்சயம் என்று
என்செயல் மறந்து புன்செயல் களைந்து
நின்னுடன் நடக்கும் ஒருவரம் தருவாய்!

எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை இங்கே யான் செய்திடினும்
அனைத்தையும் பொறுத்து அன்புடன் காத்து
வினைப்பயன் என்னைத் தொடரா வண்ணம்
மனத்துயர் என்னை நெருங்கா வண்ணம்
தினமும் காப்பாய் எந்தை இறைவா!

தடுத்தெனையாண்டு தவபலம் கூட்டி
அடுத்தடுத்தோர் அடுசெயல் செயினும்
கடுத்தெனைப் பாரா என்றன் குருவே!
விடுத்தெனை யாட்கொள விரைவில் வரணும்!
எடுத்தெனைக் குழவியாய் அருட்பால் தரணும்!
மிடுக்கினில் மதத்தினில் திளைத்திடும் என்னைத்
தடுத்தாட்கொளவே இதுவே தருணம்!
அடுத்தது போதும்! அணைத்திட நீ வா!
கொடுத்திடும் குருவே! நின் தாள் சரணம்!

இறையவர் அனைவருக்கும் என் பணிவான வணக்கம்!
****************************************************************

Read more...

Friday, June 05, 2009

"நானே நானாகி....!!"

"நானே நானாகி....!!"


நானாகி நிற்கிறேன் நான்!
எல்லாம் கடந்த
நிலையில்!
முழுமையான நான்!

முற்றும் மலர்ந்த நிலையில்!


பதியத்தில் துளிர்த்து, பருவத்தில் வளர்ந்து

உதயத்தின் ஒளியெல்லாம் உள்ளத்தில் வாங்கி

மொட்டென முளைத்து நின்றிருந்த காலமெல்லாம்

செடியொன்றே சிறப்பாக அனைவருமே பார்த்திருந்தார்!


உள்ளிருந்து ஓரொளி என்னுள் திளைத்தது

உன்னையே நீயறிவாயென என்னிடத்தில் சொல்லியது

என்னுள்ளே விளைந்திட்ட மாற்றத்தை நானுணர

மெல்லமெல்ல ஓரிதழாய் நான்விரிந்து மலரானேன்!


கதிரவன் எழுந்து காலையில் வந்தான்

அதிசய மலராய்ச் சோலையில் மலர்ந்தேன்

முழுமையி
ன் பூரணம் நானாய் நின்றேன்
எழுமின் விழிமின் எல்லாம் கடமின்!


செடியில்லை கிளையில்லை நானொன்றே அங்கே!

பிடிமானம் விடுத்தங்கே நானங்கே தனியே!

பூவென்னும் பெயர்மட்டும் எனக்கிங்கே உண்டு!

ஏதுமிலா நிலையினிலே நானிங்கே ஒளிர்வேன்!


நானாகி நிற்கிறேன் நான்!
எல்லாம் கடந்த நிலையில்!

முழுமையான நான்!

முற்றும் மலர்ந்த நிலையில்!
*********************************


Read more...

Wednesday, June 03, 2009

"நான் கடவுள்!"

"நான் கடவுள்!"

மலர்கண்டு மகிழ்கின்ற மனமிங்கு கொண்டால்
மல
ர்கின்ற மனத்துள்ளே இறையங்கே தெரியும்!

மேகங்கள் கருத்திங்கு மழைபெய்யும் போது

விழுகின்ற துளியாவும் நதியோடு கலக்கும்!

துளியங்கு இல்லாது நீரொன்றே தெரியும்

கலந்தோடும் நீரினிலே இறையங்கே புரியும்!

மழைநின்றபின்னாலே மேகங்கள் இல்லை
வலிதீர்ந்த பின்னாலே சோகங்கள் இல்லை!


வழிந்தோடும் நீர்பாய பயிரங்கு செழிக்கும்
வசந்தத்தின் வீச்சினிலே மலரிங்கு பூக்கும்!


ஒன்றோடு ஒன்றாக இணைசேர்ந்தபின்னே

உயிர்யாவும் ஒன்றென்னும் மெய்யிங்கு புரியும்!


துளியில்லை மழையில்லை மேகங்களுமில்லை

யிரில்லை உயிரில்லை இறைவெளியே எல்லாம்!

ஒருதுளியில் உயிர்நிறைத்து உள்ளின்றெழுந்து

பூக்கின்ற மலர்கண்டு மனமிங்கு மகிழும்!


மலர்கண்டு மகிழ்கின்ற மனமிங்கு கொண்டால்

மலர்கின்ற மனத்துள்ளே இறையங்கே தெரியும்!

***************************************

Read more...

Saturday, May 30, 2009

"இலங்கையில் இல்லாத தமிழர்கள் இப்போது செய்ய வேண்டியதென்ன?"

"இலங்கையில் இல்லாத தமிழர்கள் இப்போது செய்ய வேண்டியதென்ன?"

முடிந்ததாம்!
எல்லாம் முடிந்ததாம்!
பிரபாகரன் கொல்லப்பட்டதாக
வும், விடுதலைப் புலிகள் 'அடியோடு' ஒழிக்கப்பட்டுவிட்டதாகவும் செய்திகள் சொல்லுகின்றன.

இவை உண்மையா. பொய்யா என ஆராய்வது இப்பதிவின் நோக்கமல்ல!

பாதுகாப்பு வலயத்துக்குள் இருக்கின்ற தமிழர்கள் அங்கே!
அப்பாடா! ஒருவழியாக இது முடிந்ததே என நிம்மதிப் பெருமூச்சு விட்டு, வழக்கம்போல், கிரிக்கெட், பீச், கச்சேரி, அரசியல் என தங்கள் பாட்டைக் கவனிக்கப் போகும் தமிழக மக்கள் ஒரு பக்கம்!

ஏதோ ஒரு தலைமை தங்கள் உறவுகளைக் காத்துக் கொண்டிருக்கிறது;
அதற்கான உதவிகளை இங்கிருந்து செய்தால் போதும் என நிம்மதியாக இருந்து வந்த புலம் பெயர்ந்த தமிழர்கள் நிலைதான் இப்போது குழப்பத்தில்!

தமிழகத் தமிழர்களும், புலம் பெயர்ந்த தமிழர்களும் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்ய முடியும்? என்பதைப் பற்றிய என் கருத்தை இங்கே பதிய விரும்புகிறேன்!


பிரபாகரன் என்னும் ஒரு சக்தி இருந்த வரையிலும், ஒரு கட்டுக்கோப்பான தலைமையின் கீழ் இயங்கும் ஒரு அமைப்பு ஏதாவது செய்யும் என நானும் உறுதியாக நம்பிக் கொண்டு அவர்களை ஆதரித்து எழுதியே வந்திருக்கிறேன்.

ஆனால், இன்று நிலைமை மாறியிருக்கிறது.
காப்பாற்ற எவரும் இல்லாமல், பல லட்சம் மக்கள் சோற்றுக்கும் வழியில்லாமல், நாளைய நிலை என்னவென்றே தெரியாமல், வெட்டவெளியில் அல்லல் படுகின்றார்கள்.


காலை உணவு என ஒரு சிறு ரொட்டித் துண்டும், தண்ணீரும் பத்து மணிக்கு!
கஞ்சி கொஞ்சம் சோறு கலந்து மதிய உணவு என மாலை நான்கு மணிக்கு! இவைதாம் தினசரி அல்ல.... இரண்டு நாட்களுக்கு ஒரு முறைதான் வழங்கப்படுவதாகத் தகவல்!

வலயத்துக்குள் சில சிங்களக் கடைகள் திறக்கப்பட்டு, அதிகப்படி உணவு, மற்ற தினசரித் தேவைக்கான பொருள்களை விற்கப்படுகிறதாம்!

ஆம்! காசு கொடுத்தால் கிடைக்கும்!
வலயத்துக்கு வெளியே தினசரி உறவினர் கூட்டம் அலை மோதுகிறதாம்!

உடை, பணம் இவை கம்பிகள் வழியே கொடுக்கப் படுகிறது!

உடைகள் அனைத்தும் உதறப்பட்டு, சோதனை செய்த பின்பே கொடுக்க முடியும்! பணத்தைக் கொடுக்கத் தடையில்லை! எல்லாம் சிங்களவருக்குப் போகிறதே! அதனால்!
தொலைபேசி வசதி கூடக் கொடுக்கப்பட்டு, வெளிநாட்டில் இருக்கும் உறவினரிடம் பேச அனுமதிக்கப் படுகிறது! அப்போதுதானே அவர்கள்பரிதாபப்பட்டு, பணம் அனுப்புவார்கள்!


இன்னும் எங்கு செல்லப் போகிறோம் எனத் தெரியாத நிலை அவர்களுக்கு!

எல்லா வட கிழக்கு மாகாணங்களிலும் பாதுகாப்பு நலன் கருதி, ராணுவக் குடியிருப்பு வீடுகள் கட்டப்படும் வேலை துவங்கப்பட்டு விட்டது!
இனி முழுக்க முழுக்க தமிழர் வாழும் இடம் எனச் சொல்ல ஒரு ஊர் கூட இருக்கப் போவதில்லை.

இதுதான் நிதரிசனம்!


இந்த நிலையில் வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் வன்னி, வவுனியா வாழ் தமிழர் நலன் கருதி சில போராட்டங்களைத் துவங்கி, உலக நாடுகளின் கவனத்தை இலங்கைத் தமிழர் அவலத்தின்பால் ஈர்க்கும் பணியைச் செய்து வருகிறார்கள்.
இது வரவேற்கத்தக்க ஒரு நல்ல விஷயம்.

ஆனால், இன்னும் ஒரு சிலர் தமிழீழத் தாகத்தைக் காட்டும் செயல்களைச் செய்கின்றனர்.

கொடிகள், படங்கள், முழக்கங்கள் என இவர்கள் தங்கள் வேகத்தைக் காட்டியும் வருகின்றனர்.

பிரபாகரன் இல்லை என்று ஆகிவிட்டால் எங்கள் கோரிக்கை இல்லாமல் போய்விடாது என்பது இவர்கள் நிலை.

அவர் இல்லை என்னும் செய்தியைக் கூட நம்ப மறுப்பவரும் இருக்கின்றனர்.
இவையெல்லாம் தவறு என நான் சொல்ல மாட்டேன்.

இலங்கையில் எதுவும் மாறவில்லை என்பது நூற்றுக்கு நூறு உண்மை!

ஆனால், அதைத் தட்டிக் கேட்க ஒரு அமைப்பு அங்கு இல்லை என்பதும் உண்மை!
இவர்கள் இங்கு எழுப்பும் கோஷங்கள் அங்கு என்ன மாதிரியான விளைவுகளை அங்கிருக்கும் தமிழருக்கு ஏற்படுத்தும் என்பதை இவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டுமென விரும்புகிறேன்.

இங்கு எழுப்பும் ஒவ்வொரு கோஷமும் இலங்கை அரசை இன்னமும் ஆத்திரப்படுத்தி, அது இந்தத் தமிழர்களையே தாக்கும், பாதிக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

அடக்குமுறை இல்லாத சுதந்திர மேலைநாட்டில் இருந்துகொண்டு நாம் எழுப்பும் முழக்கங்கள் இலங்கைத் தமிழருக்குக் கிடைக்கப்போகும் சிறு சிறு உதவிகளைக் கூடத் தாமதப் படுத்தும் என அஞ்சுகிறேன்.


முக்கியமாகக் குழந்தைகள்!

படக்கூடாத துயரங்களைப் பட்டு, பார்க்கக் கூடாத காட்சிகளைப் பார்த்து, இழக்கக் கூடாத உறவுகளையெல்லாம் இழந்து, மறக்க முடியாத மன பாதிப்பை அடைந்து தவிக்கும் இவர்கள் அவலம் முதலில் நிற்க வேண்டும்.

முடியாதையா! முடியாது! இதற்கு மேல் இவர்கள் அவதிப் படுவதைத் தாங்கமுடியாது..... மனசாட்சியிருக்கும் எவராலும்!


இவர்கள் ஒரு நிலையான வாழ்க்கையைத் துவங்க வேண்டும்.

பள்ளிக்குச் செல்ல வேண்டும்.

நன்கு படிக்க வேண்டும்.

வாழ்க்கையில் ஏதேனும் சாதிக்க இவர்களுக்கும் வாய்ப்பு கிட்ட வேண்டும்.

வாழ்ந்து கெட்டவர்கள் ஒருபுறம் இருக்கட்டும்!
வாழ வேண்டுமென வெளிச் சென்றவர்கள் நன்றாக வாழட்டும்!

வாழ வேண்டிய இவர்கள் இனியாவது வாழ வேண்டும்!


அதற்காகவாவது, இன்றைய நிலையை உணர்ந்து கொஞ்சம் அடக்கி வாசிக்க வேண்டும் பிற தமிழர்கள் என வேண்டுகிறேன்.

வை.கோ. முதல் வெளிநாட்டில் இருக்கும் தமிழர் வரை அனைவரும் செய்யவேண்டியது இது ஒன்றே.


தமிழீழக் கோரிக்கையைத் தள்ளி வைப்போம்!.... தாற்காலிகமாவது!
இலங்கையில் இருக்கும் தமிழர்கள் ஒரு சாதாரணமான வாழ்க்கையை வாழ நம்மால் ஆன உதவிகளைச் செய்ய முயற்சியாவது செய்வோம்!
இப்போதையத் தேவை இவர்களுக்கான நல்வாழ்வு!

அது இவர்களுக்குக் கிடைக்கவிடாமல் செய்யும் எந்த ஒரு செயலையும் செய்யாமல் இருப்போம்!


கட்டபொம்மன், மருது சகோதரர்கள் என ஒரு விடுதலைப் போராட்டம் முதலில் இந்தியாவில் நிகழ்ந்தது.

அது நசுக்கப்பட்டது!

அவர்கள் கொல்லப்பட்டார்கள்!

ஒரு நூற்றாண்டு காலம் அடுத்து ஒன்றுமே நிகழவில்லை!

மீண்டும் ஒரு சிப்பாய் கலகம் 1987ல்!

அதுவும் நசுக்கப் பட்டது!
அது முடிந்து அறு்பது ஆண்டுகளுக்குப் பின்னரே இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது!
இது வரலாறு!

இப்படித்தான் நிகழவேண்டும் என்கிற கட்டாயம் இல்லை!

இதேபோல அல்லாமல், ஒரு சில ஆண்டுகளிலேயே ரஷ்யாவிலும், சீனாவிலும்
மக்களாட்சி மலர்ந்தது!
இதுவும் வரலாறுதான்!

இப்படியும் நிகழலாம்!

முறையான ஒரு அமைப்பு வந்து ஒரு முறையான போராட்டத்தை நடத்தும் காலம் வரும் வரைக்கும், வெளியில் இருந்துகொண்டு, உசுப்பிவிடும் பேச்சுகளைப் பேசாமல் நாவடக்கம் காக்க வேண்டும்!

இதையெல்லாம் சொல்வதால் நான் துரோகி எனச் சிலர் கொள்ளக்கூடும்!
நான் இலங்கையில் இருக்கும் என் தமிழரை மட்டுமே நினைக்கிறேன் என்பதால் இப்படிச் சொல்வதால் நான் வருந்த மாட்டேன்!

பாதுகாப்பு வலயத்துக்குள் மட்டுமல்ல!

கொழும்புவில் இருந்து பல இடங்களிலும் இருக்கும் என் இலங்கை நண்பர்களை நினைக்கிறேன்.


இங்கு நான் சுதந்திரமாக நடமாடி, நான் விரும்பும் செயல்களைச் செய்ய முடியும் நிலை போலவே, அந்த அளவுக்கு இல்லாவிட்டாலும், ஓரளவுக்காவது என் மக்கள் சம உரிமை பெற வேண்டும் என நிச்சயமாக விரும்புகிறேன்.

அதைக் குலைக்கும் எந்தச் செயலையும் வெளியில் இருக்கும் தமிழர்கள் செய்யக்கூடாது என உறுதியாக வேண்டுகிறேன்.


பிரபாகரன் என்கிற ஒருவரைக் காட்டியே இதுவரை, என் மக்கள் ஒடுக்கப்பட்டு வந்தார்கள்.

அவர் இல்லையென்றால், நாங்கள் என்னென்னவோ செய்வோம் எனப் பல தலைவர்கள் பேசியிருக்கிறார்கள்!

இன்று, துரதிர்ஷ்டவசமாக அவர் இல்லை எனும் நிலை!

இன்று நான் ஒரு எதிர்க் குரல் கொடுத்தால், அதனால் அதையே காரணம் காட்டி, இந்தப் போலித் தலைவர்கள் செயல்படாமல் இருந்துவிட்டு, அதனால் என் மக்களே பாதிக்கப் படுவார்கள் என எனக்கு நிச்சயமாகத் தெரிகிறது.

அவர்கள் நலமோடு வாழ நான் என் குரலை தாற்காலிகமாகத் தாழ்த்திக் கொள்கிறேன்!

உணர்வை அல்ல! குரலை மட்டுமே!

அதை நான் புரிந்துகொண்டிருப்பது போலவே, மற்றவரும் புரிந்துகொண்டு என் மக்களை மேம்படுத்த மட்டுமே தம் செயல்பாடுகளைக் கொள்ளவேண்டும் என விரும்புகிறேன்!


ஈழத் தமிழர்
நலம் பெற வேண்டும் என மட்டுமே சிந்தித்துச் செயல்படுவோம்! இது ஒன்றே அவருக்கு நன்மை பயக்கும் என நினைக்கிறேன்.

முழு நிவாரணம் அவர்களுக்கு உடனடியாகக் கிடைக்க வேண்டும்.
இருக்க ஓர் இடம், புசிக்க உணவு, படிக்க ஓர் பள்ளி, வகிக்க தகுதியான வேலை!
இந்த உரிமைகளை இலங்கை அரசு உடனடியாக எம் மக்களுக்குச் செய்ய வேண்டும்!

அப்படிச் செய்ய அதற்கு உலக நாடுகளை வற்புறுத்தச் செய்வோம்!

இவற்றைச் செய்ய இலங்கை அரசுக்கும் ஒரு வாய்ப்பு அளிப்போம்!


அப்படிச் செய்யவில்லையெனில்,.............

.......................................????!!!!!!!

விடியல் தூரத்தில் இல்லை!

கட்டுண்டோம்! பொறுத்திருப்போம்!

காலம் வரும்!
எம் தமிழர் வெல்வர்!

அதுவரை காத்திருப்போம்!
இப்போது அமைதி காப்போம்!

அனைவருக்கும் நன்றி!

*********************

Read more...

Thursday, May 21, 2009

"முக"வின் வழக்கமான நாடகம், இந்த முறையும்!

"முக"வின் வழக்கமான நாடகம், இந்த முறையும்!

சென்ற தேர்தலில், திமுகவின் உதவி இல்லாது காங்கிரஸ் அரசு அமைய முடியாது் என்னும் நிலையில் இருந்தபோது, தனது பிடிவாதத்தை வைத்து வேண்டிய பதவிகளைப் பெற்று திமுக மகிழ்ந்தது.
அதே முறையை இந்தத் தடவையும் நடத்த நினைத்த திமுக ஒரு மாறுபட்ட அதிர்ச்சியைச் சந்தித்து,
மீண்டும் அதே நாடகத்தை அரங்கேற்ற முனைந்திருக்கிறது.

ஆனால், காங்கிரஸ் இந்த முறை ஏமாறத் தயாராயில்லை!
போட்டதைப் பொறுக்கிகிட்டுப் போ! இல்லையா! இந்தப் பிச்சையை ஏத்துக்க மத்த பிச்சைக்காரங்க தயாரா இருக்காங்கன்னு சொல்லி கரியைப் பூசி விட்டது!

உண்மையாக இருந்த தோழைமைக் கட்சிக்கா இந்த நிலை எனப் பொருமிய திமுகவால், கடந்த நான்கு ஆண்டுகளாக தனக்கு உண்மையாக மாநிலத்தில் இருந்த காங்கிரஸுக்கு என்ன மரியாதை கொடுத்தது எனத் திருப்பிக் கேட்கப்பட்டபோது, மு,க.வால் பதில் சொல்ல முடியவில்லையாம்!

தங்களை ஆதரிக்க நிபந்தனையின்றி பல கட்சிகள் தயாராக இருக்கும் இந்த நேரத்தில், காங்கிரஸ் இவருக்கு அடி பணியப் போவதில்லை என்பதே நிதரிசனம்!

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்!

ஈழத் தமிழரைக் காக்க தனக்குக் கிடைத்த ஒரு ஒப்பற்ற வாய்ப்பை பயன்படுத்த மு.க. தவறி அவர்களின் அழிவிற்குத் துணை போனார் என்பதே இதிலிருந்து கிடைக்கும் பாடம்!

அதிமுக இதனைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, அரசில் புகுந்துவிட்டால், தனது அரசு அடுத்த நொடியே கவிழ்ந்துவிடுமே என்பதால், கிடைத்த பிச்சையை ஏற்று, தன் மீசையில் மண் ஒட்டவில்லை என திமுக நடத்தப்போகும் அடுத்த 'கண்துடைப்பு' நாடகத்தை இன்னும் அடுத்த சில மணி நேரங்களில் காணலாம்!

"அரசியல்ல இதெல்லாம் சஹஜமப்பா!" என மக்களும் தங்களது அடுத்த வேளை சோற்றைப் பற்றிக் கவலைபட்டு, சும்மா இருப்பார்கள்!

தோற்பது, வழக்கம்போல் மக்களும், ஜனநாயகமும்தான்!
வாழ்க இந்தியா!

Read more...

"சாதனையாளர் தர்மேந்த்ர குமார்" [உண்மைக்கதை]

"சாதனையாளர் தர்மேந்த்ர குமார்"
[உண்மைக்கதை]

ஓரளவு வசதியான குடும்பத்தில் பிறந்தவர்தான் தர்மேந்த்ர குமார்.

பீஹாரில் பிறந்த இவர், இளங்கலைப் பட்டம் [B.A.] பெற்று, மருந்தகப் படிப்பை[Diploma in Pharmacy]யும் முடித்தவர்.

வேலை தேடி அலையும்போது பல இடங்களுக்கும் சென்று வந்ததில்,
தன்னை விடவும் வசதி, வாய்ப்பு குறைந்தவர்கள் அநேகம் பேர் இருப்பதைப்
பார்த்து, இவர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டுமென்னும் ஆவலில் துடித்தவருக்கு, 'எய்ட்-இந்தியா'வின் அறிமுகம் தற்செயலாகக் கிடைத்தது.

தன்னிடமிருக்கும் படிப்பறிவு தனக்கு ஒரு வேலையைத் தேடித்தந்து,
தான் வசதியாய் வாழ்வதை விட, பிறர்க்கு இது பயன்பட்டால் நல்லதுதானே என நினைத்த இவர் இதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு தனது மாவட்டத்தில் பல மையங்கள் திறக்க உதவியாயிருந்தார்.

இதற்காக இவர் பட்ட கஷ்டங்கள், அவமானங்கள் கொஞ்ச நஞ்சமல்ல!
எள்ளி நகையாடியவர்கள் ஏராளம்!
பிழைக்கத் தெரியாதவன் என ஏசியவர்கள் அநேகம்!
ஏற்கெனவே பொதுவுடைமைக் கொள்கையில் ஈடுபாடு கொண்டிருந்த இவர் அவற்றையெல்லாம் தன்னை மேலும் உற்சாகப்படுத்தும் ஒரு ஊட்ட மருந்தாகவே ஏற்றுக் கொண்டார்.

விழிப்புணர்வு வரவேண்டி பீஹாரிலிருந்து ஆந்திரவில் இருக்கும் ஹைதராபாது வரை ஒரு தொடர் மிதிவண்டி பயணம் [Bi-cycle rally] மேற்கொண்டதை ஒரு பெருமையாக நினைவு கூருகிறார்.
இதுபோல, பல யாத்திரைகளை இவர் நடத்தியிருக்கிறார்.

தாழ்த்தப்பட்ட மக்களின் இளம்பிள்ளைகளுக்கு எழுதப் படிக்கச் சொல்லிக் கொடுத்து, அவர்கள் பள்ளிக்குச் செல்லும்போது, தன்னம்பிக்கையுடன் மற்றவர்க்குச் சமமாக கல்வியை எதிர்கொள்ளச் செய்ய வைப்பது என்னும் வைராக்கியத்துடன் இன்றளவும் செயல்படுகிறார்.
இன்று இவர் நடத்தும் மையங்களில் படிக்கும் பிள்ளைகள் மாநில அளவில் பேச்சு, கட்டுரை மற்றும் பல நிலைகளில் முதன்மையாக வருவதைப் பெருமிதத்துடன் பகிர்ந்து கொள்கிறார்.

"நாங்கள் அனைவரும் இந்தியப் பிள்ளைகள்! எங்கள் அனைவருக்கும் சமமான கல்வி கிடைக்கச் செய்வது ஒவ்வொரு இந்தியனின் கடமை!" எனும் முழக்கம் இவருடையது!

எலிகளைப் பிடித்துச் சாப்பிடும் குலத்தில் பிறந்த பிள்ளைகளும் இன்று நிமிர்ந்து நிற்பதில் இவர்க்குப் பெரும் பங்கு உண்டு.

இந்தியாவிலேயே மிகவும் பின் தங்கிய மாநிலம் பீஹார்.
மாலை ஆறு மணிக்கு மேல் இருளில் ஆழும் கிராமங்கள் அதிகமாய் இருக்கும் மாநிலம் இது!
மின்சார வசதி இன்னமும் பல கிராமங்களில் ஒட்டுமொத்தமாகக் கிடையாது என்பது வேதனையான செய்தி!
ஏற்றத்தாழ்வுகள் இன்னமும் சமன் செய்யப்படாத நிலையீலேயே பல கோடி மக்கள் வாழும் மாநிலம் இது!
சுதந்திரம் வந்து 60 ஆண்டுகள் ஆகியும், இப்படியே வைத்திருக்கும் அரசியல்வாதிகளை நம்பாமல், இதுபோன்ற சமூக நல அமைப்புகள் எப்படிப்பட்ட இடையூறுகளை எல்லாம் சந்திக்கவேண்டியிருந்தது என்பதை இவர் உணர்ச்சிபூர்வமாக விவரித்தபோது நெஞ்சம் கனத்தது.

பீஹாரில் வெள்ளம்!
இமயத்தின் அடிவாரத்தில் அமைந்த மாநிலம் இது.
அங்கிருந்து உற்பத்தியாகிவரும் நதிகள் இன்னமும் மேட்டுப் பகுதியாகவே இருக்கும் வடக்கு பீஹாரில் தங்கள் விருப்பம் போல வழிகளை அமைத்துக் கொண்டு பாயுமாம்..... தனக்கென ஒரு பாதை இருக்கும் சமதளம்
வரும் வரைக்கும்!

இதனால் எந்தப் பகுதியில் வெள்ளம் வருமென பலருக்குத் தெரியாமலே போய்விடுவதால், இங்கு வாழும் மக்கள் இதனை ஒரு சாதாரண நிகழ்வாகவே பொதுவாக ஏற்று வாழ்கின்றனர்.
இந்த நதி நேப்பாளத்திற்கும் பாய்வதால், மழைக் காலங்களில், அங்கு தேங்கிவரும் நீரையும் அவர்கள் திறந்து விட்டு விடுவார்களாம்!

இரு ஆண்டுகளுக்கு முன் பீஹார் சந்தித்த வெள்ளக் கொடுமை இதுவரை எவரும் காணாத அவலம்.
கிட்டத்தட்ட மொத்த வடகிழக்கு பீஹார் மாநிலமே நீரில் மூழ்கி பல லட்சம் மக்கள் இடம் பெயர வேண்டிய நிலை!
தெற்குப் பகுதியில் முகாம்களை அமைத்து, வந்தவரைக் குடியேற்றி, அவர்களுக்குத் தேவையான வசதிகளைத் தருவதோடு அரசு வேறொன்றும் செய்ய முடியாத நிலை.
இதைக் குறையாகச் சொல்லவில்லை அவர்!
தினசரி அங்கு வந்து சேரும் மக்களுக்கு உதவி செய்யவே அரசுக்கு நேரம் போதவில்லை.
இதனால் வடகிழக்கு பீஹாரில் இன்னமும் இருந்தவர்க்கு எந்தவித உதவிகளும் போய்ச் சேரவில்லை.

இந்த நிலையில் 'எய்ட்-இந்தியா' செய்த பேருதவியில் இவர் வகித்த பங்கு அதிசயிக்கத் தக்கது.
கிராமம் கிராமமாகச் சென்று, [படகிலும், சில சமயங்கலில் நீச்சலடித்தும் கூட!] ஏதோ ஒரு மேடான பகுதியில் கூடி நின்றவர்களைப் பாதுகாத்து, பத்திரமான இடத்துக்கு அவர்களை அனுப்பி வைத்து, கூடவே கால்நடைகளையும்
காப்பாற்றி, மருத்துவ, உணவு வசதிகள் அவர்களுக்குக் கிடைக்க இந்த நிறுவனம் உதவி செய்தது.
இவர்கள் மட்டும் தான் என்றில்லை!
மற்ற நிறுவனங்களும் செய்தன என்றாலும், தாங்களும் செய்ததில் ஒரு பெருமை இவருக்கு!

'இன்னும் செய்யணும்! செய்தது ஒரு துளிதான்!' என அடக்கத்துடன் சொல்லிக் கொள்ளும் இவரைப் பாராட்டி, இவரைப் போல இன்னும் பலரும் முன்வந்து பாரதத்தை ஒளிரச் செய்வோம் என வாழ்த்தி இந்தச் சாதனையாளர் தர்மேந்த்ர குமாரை வாழ்த்துகிறேன்!
*****************************

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP