"கொடுத்திடும் குருவே! நின் தாள் சரணம்!"
"கொடுத்திடும் குருவே! நின் தாள் சரணம்!"இறையெது எங்கென அனுதினம் தேடி
மறைமுதல் நூல்களில் நாளும் நினைந்து
நரைதிரை வரும்வரை நாட்களைக் கழித்து
அரைகுறை அறிவினால் பலவும் பிதற்றி
நிறைமதி உண்டென ஆணவம் பிடித்து
குறைவிலா இறையவர் சொற்களைக் கேட்டும்
முறையிலா வாழ்வினில் காலம் நடத்தி
வரையிலா இன்பம் பொழுதெலாம் கொண்டு
திரிந்திடும் மனத்தை சீர்செய்யாமல்
புரிந்திடும் அவலம் தினமும் தொடர
இறையென தெதிரில் நேரில் வந்தும்
அறியாதிருக்கும் நிலைமையில் உழலும்
புரியாச் சிறுவன் எனைநீ தடுத்து
'படித்தது போதும்! பயிற்சியில் தொடர்வாய்'
எனவுரை சொல்லி அன்புடன் காத்த
இறையவா நின் தாள் பணிந்தேன் அருள்வாய்!
இறையவன் உண்டு! கண்டவர் சொன்னார்!
மறைநூல் பொருளின் சாரம் இதுவே!
நம்பிடும் நல்லவர் சொல்லிய சொல்லால்
நானும் நம்பினேன் நீவரு வாயென!
இன்றையப் பொழுதின் செயல்கள் யாவிலும்
நின்னருள் ஓங்கி நித்தமும் துலங்க
இறையவா! நீயே என்னுடன் இருக்கும்
ஒருவரம் கேட்பேன்! உடனே அருள்வாய்!
இறையருள் காட்டும் இன்வழி தன்னில்
நிறைமனதுடனே நாளும் நடக்க
குறைவிலா இன்பம் கூடவே நடக்கும்!
தன்செயல் ஒன்றின் தகைமையை விடுத்து
நின்செயல் ஒன்றே நிச்சயம் என்று
என்செயல் மறந்து புன்செயல் களைந்து
நின்னுடன் நடக்கும் ஒருவரம் தருவாய்!
எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை இங்கே யான் செய்திடினும்
அனைத்தையும் பொறுத்து அன்புடன் காத்து
வினைப்பயன் என்னைத் தொடரா வண்ணம்
மனத்துயர் என்னை நெருங்கா வண்ணம்
தினமும் காப்பாய் எந்தை இறைவா!
தடுத்தெனையாண்டு தவபலம் கூட்டி
அடுத்தடுத்தோர் அடுசெயல் செயினும்
கடுத்தெனைப் பாரா என்றன் குருவே!
விடுத்தெனை யாட்கொள விரைவில் வரணும்!
எடுத்தெனைக் குழவியாய் அருட்பால் தரணும்!
மிடுக்கினில் மதத்தினில் திளைத்திடும் என்னைத்
தடுத்தாட்கொளவே இதுவே தருணம்!
அடுத்தது போதும்! அணைத்திட நீ வா!
கொடுத்திடும் குருவே! நின் தாள் சரணம்!
இறையவர் அனைவருக்கும் என் பணிவான வணக்கம்!
****************************************************************
6 பின்னூட்டங்கள்:
////இன்றையப் பொழுதின் செயல்கள் யாவிலும்
நின்னருள் ஓங்கி நித்தமும் துலங்க
இறையவா! நீயே என்னுடன் இருக்கும்
ஒருவரம் கேட்பேன்! உடனே அருள்வாய்!////
உணர்ந்து சொன்னீர் ஒர்வரம் எதற்கு - அவன்
உம்முடன் இருப்பதே உயர்வான வரம்தான்!
ஆசான் வந்து சொல்வது இன்னமும் பொருத்தம் இதற்கு!
குருவே சரணம்!
தங்கள் குருவிற்கு எங்கள் பணிவான வணக்கங்கள்!
நம்பினார் கெடுவதில்லை; நான்கு மறைத் தீர்ப்பு!
வார்த்தையில்
வண்ணக்கோலமிட்டு
வாழ்த்துப்பா பாடிய, உங்களை
வாழ்த்தி பாட
வரிகள் இல்லை
படிக்க படிக்க
பகவானே
பைந்தமிழில் வந்தாக
பார்க்க முடிகிறது
வாழ்த்துகள்
தமிழுடன்
திகழ்
//தங்கள் குருவிற்கு எங்கள் பணிவான வணக்கங்கள்!
நம்பினார் கெடுவதில்லை; நான்கு மறைத் தீர்ப்பு!//
நம்பிக் கை கொண்டால் நானிலமும் வசமாகும் அருள் செய்யும் குருவே துணை!
நன்றி திரு.ஜீவா!
//வார்த்தையில்
வண்ணக்கோலமிட்டு
வாழ்த்துப்பா பாடிய, உங்களை
வாழ்த்தி பாட
வரிகள் இல்லை
படிக்க படிக்க
பகவானே
பைந்தமிழில் வந்தாக
பார்க்க முடிகிறது
வாழ்த்துகள்
தமிழுடன்
திகழ்//
திகழ்மிளிர் தமிழ்வரி எழிலொடு இவண்வரும் அருள்தரும் குருவருள் அனைவரும் பெறவே அடியவன் வேண்டுவேன்!
நன்றி.
Post a Comment