Monday, July 20, 2009

"திரை சொன்ன கதை!"

"திரை சொன்ன கதை!"


கவலைகளை மறந்திருக்கத் திரையரங்கம் சென்றேன்
கொறிக்கக் கொஞ்சம் வாங்கிவந்து இருக்கையிலே அமர்ந்தேன்

விளக்கெல்லாம் அணைந்திருக்கத் திரையில் படம் ஓட

வியப்புடனே நடப்பதனை விழியகலக் களித்தேன்

எட்டிவந்த எட்டுப்பேரை எத்திவிட்ட நாயகன்

கிட்டவந்து காதலியைக் கட்டியணைத்துக் கொஞ்ச

மொட்டவிழ்ந்த மலர்போல இசையென்னை வருட
கொட்டக்கொட்டப் பார்த்திருந்தேன் எனைமறந்து

திரையை
எதிரில்வந்த அனைவருமே நிஜமெனவே தெரிந்தார்
எதிர்த்து நின்ற அனைவருமே குருதிகொட்ட நின்றார்

புதியதிந்த உலகமெனத் தலையைச் சற்று நிமிர்ந்தேன்

புதிரான புகைமூட்டம் தலைக்கு மேலே கண்டேன்


புகைவந்த திசைநோக்கி பார்வை சுழல விட்டேன்

ஒளிவெள்ளம் ஒருபுள்ளியில் தொடங்கிவரக் கண்டேன்

திரையில் விழுந்த அனைத்துமே நிழலெனவே தெரிய

அரைகுறையாய் ஏதோவொன்று எனக்குள்ளே புரிய


திரையில் வந்த எல்லாமே நிஜமில்லை இங்கு

ஒளியொன்று செலுத்திவர உயிர்த்ததவை என்று

நிஜமான நாயகனோ எனக்குப் பின்னே இயக்க

விதவிதமாய்த் தெரிவததின் மூலமிங்கு கண்டேன்


புரியாதது புரிந்தபின்னர் அதனில்நாட்டம் கொண்டேன்

தெரிகின்ற ஒளியொன்றில் மனமாழ்த்தி நின்றேன்

விரிகின்ற மலர்போல என்னுள்ளம் மலர

இறையவனும் இதுபோல என்பதிங்கு புரிந்தேன்


கண்ணெதிரே தெரிகின்ற காட்சியெல்லாம் நிழலே
விண்ணதிரக் காண்பதெல்லாம் என்றுமிங்கு பொய்யே

பின்னிருந்து இறையொருவன் இயக்கமொன்று செய்ய

முன்னிருக்கும் எல்லாமும் நகர்வதென்று தெளிந்தேன்


இறையொன்றில் நாட்டம்வைத்து அதனுள்ளே நினைந்தால்

கரைசேர்க்கும் காவலென அவனிங்கே வருவான்

பிறைநிலவும் வாங்குமொளி ஆதவனின் கருணை

திரைமீது வருமொளியும் பேரொளியின் துளியே


இன்னும் சற்றுப் புரியவேண்டி தாளிணையைப் பணிந்தேன்

மின்னுமொளி கூடிவர குருநாதன் வந்தான்
என்னுடனே வாவெனவே என்னைக் கூட்டிச் சென்றான்

தன்னருளால் இன்னலெல்லாம் எனிலகற்றிக் காத்தான்


பேரருளின் திறன் புரிய பேருலகம் கண்டேன்

பேருலகில் உள்ளதெல்லாம் இறையென்றே அறிந்தேன்

வேறுசுகம் வேண்டாத ஓர்நிலையில் நின்றேன்

பாருலகில் அனைவரையும் இறையெனவே புரிந்தேன்


படைத்தவனைப் புரிந்துவிட்டால் பாருமிங்கே ரசிக்கும்

கிடைத்ததிலே மகிழ்வுகொண்டால் சோர்வுமிங்கே பறக்கும்

பிடித்தவனைப் பற்றிக்கொண்டால் பயணமிங்கே ருசிக்கும்

விடையிதனைத் தெரிந்துகொண்டால் வாழ்வுமிங்கே செழிக்கும்


திரைப்படமும் முடிந்துவிட எழுந்தங்கு நடந்தேன்

கறையெல்லாம் தீர்ந்துவிட்ட மனத்துடனே வந்தேன்
உரைக்கின்ற எல்லாமும் யான் சொன்னதும் அல்ல

நிறைவான குருவருளால் சிலவிங்கு சொன்னேன்.

************

குருவடி சரணம்! குருவே சரணம்! **********************************************

7 பின்னூட்டங்கள்:

கோவி.கண்ணன் Monday, July 20, 2009 8:45:00 PM  

//""திரை சொன்ன கதை!""// மாதிரி இல்லை திரை சொன்ன கதை திரை கதை மாதிரி இருக்கு !

கோவி.கண்ணன் Monday, July 20, 2009 8:46:00 PM  

என்ன திடீர்னு பரவசமாக திரியிறிங்க, அமெரிக்காவில் வேப்ப மரம் இருக்கா ?

VSK Monday, July 20, 2009 9:35:00 PM  

பதிவுலகப் பெரியவுக நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும் கோவியாரே!

இந்தியாவுலேர்ந்து ஒரு வேப்பங்கொட்டை கொண்டுவந்தேன். அதான் இப்ப மரமா...!!:))

VSK Monday, July 20, 2009 9:35:00 PM  

நன்றி திகழ்மிளிர் அவர்களே!

ஷைலஜா Monday, July 20, 2009 9:43:00 PM  

//புரியாதது புரிந்தபின்னர் அதனில்நாட்டம் கொண்டேன்
தெரிகின்ற ஒளியொன்றில் மனமாழ்த்தி நின்றேன்
விரிகின்ற மலர்போல என்னுள்ளம் மலர
இறையவனும் இதுபோல என்பதிங்கு புரிந்தேன்//

இந்த வரிகளை குழுமமடலிலும் ரசித்தேன் இங்கும் ரசிக்க்கிறேன்.

VSK Monday, July 20, 2009 10:46:00 PM  

எங்கெல்லாம் ரசிக்கறீங்களோ அங்கெல்லாம் ஊக்கம்தரும் உங்களுக்கு என் நன்றி ஷைலஜா!:))

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP