Sunday, July 12, 2009

"அ.அ. திருப்புகழ் - 31 "தொல்லை முதல் தானொன்று"

அருணையார் அருளிய திருப்புகழ் - 31 "தொல்லை முதல் தானொன்று"


மீண்டும் ஒரு சிறிய இடைவேளைக்குப் பின், இன்று ஒரு திருப்புகழ்!
மாதம் இரு முறையாவது எழுத வேண்டுமென நினைக்கிறேன்.
முருகன் அருள் செய்ய வேண்டும்.


இன்றைய திருப்புகழ் கொல்லிமலை முருகனைப் போற்றிப் பாடியருளியது.
பரமானந்தக் கடலில் நானும் மூழ்க அருளிச் செய்யப்பா என வேண்டுகிறார் அருணையார்!
இப்போது இந்த அழகிய பாடலைப் பார்ப்போம்!

முருகனருள் முன்னிற்கும்!!

********************************

***********பாடல்***********

தொல்லைமுதல் தானொன்று மெல்லியிரு பேதங்கள்

சொல்லுகுண மூவந்த மெனவாகி

துய்ய சதுர் வேதங்கள் வெய்யபுல னோரைந்து

தொய்யுபொரு ளாறங்க மெனமேவும்


பல்லபல நாதங்கள் அல்கபசு பாசங்கள்

பல்குதமிழ் தானொன்றி யிசையாகி

பல்லுயிரு மாயந்த மில்லசொரு பானந்த

பௌவமுற வேநின்ற தருள்வாயே


கல்லுருக வேயின்கண் அல்லல்படு கோவம்பு

கல்வருக வேநின்று குழலூதுங்

கையன்மிசை யேறும்பன் நொய்யசடை யோனெந்தை

கைதொழ மெய்ஞ் ஞானஞ்சொல் கதிர்வேலா


கொல்லைமிசை வாழ்கின்ற வள்ளிபுன மேசென்று

கொள்ளைகொளு மாரன்கை யலராலே

கொய்துதழை யேகொண்டு செல்லுமழ வாகந்த

கொல்லிமலை மேனின்ற பெருமாளே.


இது ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த பாடல்! பொருளறியும் போது புரியும்! வழக்கம் போல் பின் பார்த்து, முன் பார்க்கலாம்!

********** பொருள் *********

கல்லுருக வேயின்கண் அல்லல்படு கோவம்பு

கல்வருக வேநின்று குழலூதுங்
கையன்

கல் உருகவே இன்கண் அல்லல்படு
கோ அம்
புகல் வருகவே நின்று
குழல் ஊதும் கையன்

குழலூதி நின்றால் கல்லும் உருகிவிடும்
புகலிடம் ஏதென்று அல்லல் படுகின்ற

ஆவினங்களுக்குச் சொந்தயிடம் இதுவென்று

புரிந்திடும் வண்ணம் புல்லாங்குழல் எடுத்து

இனியகானம் இசைக்கின்ற கண்ணனெனும்


மிசை யேறும்பன் நொய்யசடை யோனெந்தை
கைதொழ மெய்ஞ் ஞானஞ்சொல் கதிர்வேலா


மிசை ஏறு உம்பன் நொய்ய சடையோன்
எந்தை
கைதொழ
மெய்ஞ்ஞானம் சொல் கதிர்வேலா

திரிபுரம் எரிக்கப் புறப்பட்ட வேளையில்
விநாயகனை வணங்காமல் தேவர்கள் தொடங்க

தேரின் அச்சு முறிந்து வீழ்கையில்

இடபமாக வந்து நின்று திருமால்அருள

அதன்மீது ஏறியருளிய பெருமானாம்

மெலிந்த சடைகளை உடைய எந்தைபிரான்

சிவனாரும் கைதொழுது நின்று

ஓமெனும் பிரணவத்தின் பொருளை அறியவேண்டி

பணிந்து நின்று கேளெனச் சொல்லி

பிரணவப் பொருளினை அருளிச் செய்த

ஆதவன்போல ஒளிபொருந்திய
வேலினைத் தாங்கும்
முருகோனே!

கொல்லைமிசை வாழ்கின்ற வள்ளிபுன மேசென்று
கொள்ளைகொளு மாரன்கை யலராலே

கொய்துதழை யேகொண்டு செல்லுமழ வாகந்த

கொல்லிமலை மேனின்ற பெருமாளே


கொல்லைமிசை வாழ்கின்ற வள்ளிபுனமே சென்று

கொள்ளைகொளும் மாரன்கை அலராலே

கொய்து தழையே கொண்டு செல்லும் மழவா! கந்த!

கொல்லிமலை மேல் நின்ற பெருமாளே!


தினைப் புனத்தைக் காவல் செய்யவேண்டி
கையில் கவண்கல் எடுத்து வந்து

ஆலோலம் பாடிநின்ற வள்ளிநாயகியாரின்

புனத்தை நாடிச்சென்று காதலுணர்வைக்

கூட்டித்தரும் மன்மதன் எறிகின்ற மலர்க்கணை
விளைவித்த காதல் பெருக்கினால் ஆட்பட்டு

கையில் கிடைத்த தழைகளையெல்லாம் பறித்துக்கொண்டு
சென்ற கட்டழகு உடையவனே! கந்தக் கடவுளே
!
கொல்லிமலைமீது வீற்றிருக்கும்
பெருமை மிகுந்த சிறந்தவனே!


தொல்லைமுதல் தானொன்று மெல்லியிரு பேதங்கள்
சொல்லுகுண மூவந்த மெனவாகி

துய்ய சதுர் வேதங்கள் வெய்யபுல னோரைந்து

தொய்யுபொரு ளாறங்க மெனமேவும்


தொல்லைமுதல் தான் ஒன்று மெல்லி இரு பேதங்கள்

சொல்லு[ம்]குணம் மூ[ன்று] அந்தம் எனவாகி

துய்ய சதுர் வேதங்கள் வெய்ய புலன் ஓர் ஐந்து

தொய்யு பொருள் ஆறு அங்கம் என மேவும்


[இந்த வரிகள் ஒன்று முதல் ஆறு வரை வருகின்ற அழகிய கவித் திறத்தைக் காட்டுகின்றது.]

பழைமை எனவரும் இறைவனே முதல்வன்

சக்தியும் சிவனுமாய் இருவராகி அருள் புரிவான்


சத்துவம், இராஜஸம், தாமஸம் என்னும்

முக்குணங்களின் சொரூபமாய் விளங்கும்

அயன்,அரி,அரன் என்பவரின் மூலமாய் விளங்குவான்


ருக்,யஜுர்,சாம, அதர்வணம் என்னும்

நான்கு வேதங்களின் ஆதியாய்த் திகழ்வான்


சுவை,ஒளி,ஊறு,ஓசை,நாற்றம் என்னும்

ஐந்து புலன்களையும் வென்றவனும் இவனே


நாசி வழியே உருவாகும் எழுத்துகளின் ஒலியானவன்

வாய் வழியே எழுந்த ஒலியின் விளைவாய்
மகேச்வர சூத்திரம் என்னும் இலக்கணம் பிறப்பித்தவன்
கவிதைகளின் பாதம் போலும் சந்தஸ்
இதனுதவி இல்லாமல் எழுதும்கவி நிலைக்காது

இத்தனை இத்தனை எழுத்து, மாத்திரை என
வரையறுக்கும்
கால் போலும் சந்தஸை உருவாக்கியவன்

எதனால் இப்பதம் இங்கு வந்ததென உணர்விக்கும்

நிகண்டு எனப்படு நிருக்தம் காதுவழியே தந்தவன்

காணும் பொருளைக் காட்டுவிக்கும் கண்போல

விளைவதைக் காட்டும் ஜோதிடம்எனும் கண்ணானவன்

இன்னின்ன செயல் செயும் கைகள்போலானவன்


என எம்மை சோர்வடையச் செய்யும்

ஆறு அங்கங்களை உடையவனாகி


[இவற்றை எல்லாம் விட்டால்தான் அவன் தெரிவான்! அறிவழிந்தாலே அவன் அகப்படுவான்!]

பல்லபல நாதங்கள் அல்கபசு பாசங்கள்
பல்குதமிழ் தானொன்றி யிசையாகி

பல்லுயிரு மாயந்த மில்லசொரு பானந்த

பௌவமுற வேநின்ற தருள்வாயே
.

பல்ல பல நாதங்கள் அல்க பசு பாசங்கள்

பல்கு தமிழ் தான் ஒன்றி இசையாகி

பல்லுயிருமாய் அந்தம் இல்ல[லா] சொரு[ரூ]ப ஆனந்த

பௌவம் உறவே நின்றது அருள்வாயே


ஒலிக்கின்ற ஓசையெலாம் நீயே ஆனாய்
வாழுமுலகில் கட்டிவைக்கும் பசு பாசங்களானாய்

வெள்ளமெனப் பெருகிவரும் தீந்தமிழில் பொருந்தி நின்றாய்

மனதை மயக்கும் இசையாகவும் ஆனாய்

அத்தனை உயிர்களிலும் வாழும் ஒரே உயிருமானாய்

இதன் காரணமாகவே முடிவே இல்லாதவனும் ஆனாய்

இத்தனையும் நிறைந்த ஆனந்த உருவக் கடலும் ஆன


இவைஅத்தனையும் கூட்டிவந்து நிலையாய் அளிக்கவல்ல

அந்தப் பொருளை எனக்குக் காட்டி அருள்வாயே!

*****************

******அருஞ்சொற்பொருள்*******

வெய்ய = கொடிய

தொய்யு பொருள் = சோர்வடையச் செய்யும் பொருள்

அல்க = தங்க

பௌவம் = கடல்

புகல் = அடைக்கலம்

மிசை = மீது

நொய்ய = மெலிதான, நுண்மையான

எந்தை = எம் தந்தை

மாரன் = மன்மதன்

மழவன் = கட்டான உடலை உடைய இளைஞன்

********************
அருணகிரிநாதர் புகழ் வாழ்க!
வேலும் மயிலும் துணை!
முருகனருள் முன்னிற்கும்!

******************************

13 பின்னூட்டங்கள்:

Kannabiran, Ravi Shankar (KRS) Monday, July 13, 2009 10:05:00 AM  

தேன்! தேன்! வந்தேன்! வந்தேன்!
முருகத் தேன்! அருணைத் தேன்!
முருக அணைத் தேன்! அதை அணைத்தேன்!

அப்பாடா, மீண்டும் திருப்புகழ் தரணும்-ன்னு மனம் இரங்கியமைக்கு நன்றி SK ஐயா! :))

Kannabiran, Ravi Shankar (KRS) Monday, July 13, 2009 10:33:00 AM  

//கொல்லைமிசை வாழ்கின்ற வள்ளிபுனமே சென்று
கொள்ளைகொளும் மாரன்கை அலராலே

கொய்து தழையே கொண்டு செல்லும் மழவா! கந்த!
கொல்லிமலை மேல் நின்ற பெருமாளே!//

சூப்பர்!
மாரன் கையில் தானே அலர் இருக்கு!
என் முருகன் எதுக்கு தழை எல்லாம் பறிச்சிக்கிட்டு போகணும்? :)
விளக்கமாச் சொல்லுங்க SK!

//மழவா//

இது தான் எத்தனை அழகான தமிழ்ச் சொல்!
மழ-லை, மழ-வன், மழ-வு
மழ = இளமை, மென்மை, வீரம்!
மென்மையுடன் கூடிய இளமையான வீரம்! :)
அதை முருகனுக்குச் சொல்வது தான் எத்தனை பொருத்தம்!

Kannabiran, Ravi Shankar (KRS) Monday, July 13, 2009 10:42:00 AM  

//தொல்லைமுதல் தான் ஒன்று மெல்லி இரு பேதங்கள்
சொல்லு[ம்]குணம் மூ[ன்று] அந்தம் எனவாகி
துய்ய சதுர் வேதங்கள் வெய்ய புலன் ஓர் ஐந்து
தொய்யு பொருள் ஆறு அங்கம் என மேவும்

[இந்த வரிகள் ஒன்று முதல் ஆறு வரை வருகின்ற அழகிய கவித் திறத்தைக் காட்டுகின்றது.]//

1-6 எண்களைக் கவிதையில் காட்டுவது ஒரு திறம்-ன்னா...
1, 1-2-1, 1-2-3-2-1 என்று ஒரு Pattern வரிசையைக் கவிதையில் காட்டுவதும் ஒரு பெரும் திறம்! - திருவெழுக் கூற்று இருக்கை! திருமங்கை ஆழ்வாரும், அருணகிரியும் இதில் பெரும் வித்தகர்கள்!

சுவாமிமலை முருகன் மேல் உள்ள இந்த எண் விளையாட்டுத் திருப்புகழை எப்பவாச்சும் தர வேண்டுகிறேன் SK!

பாருங்க...சுவாமிமலை முருகன் மேல் தான் அருணகிரி திருவெழுக்கூற்று இருக்கை பாடினார்! அதே ஏரியா ஆராவமுதன் மேல் தான் திருமங்கையும் திருவெழுக்கூற்று இருக்கை பாடினார்! குடந்தை லோக்கல் ஆளுங்க பேசி வச்சிக்கிட்டு வாங்கி இருக்காங்க போல! :)

Kannabiran, Ravi Shankar (KRS) Monday, July 13, 2009 11:06:00 AM  

//என எம்மை சோர்வடையச் செய்யும்
ஆறு அங்கங்களை உடையவனாகி

[இவற்றை எல்லாம் விட்டால்தான் அவன் தெரிவான்! அறிவழிந்தாலே அவன் அகப்படுவான்!]//

ஹா ஹா ஹா! சூப்பரு!
வேதனை சேர் வேறு அங்கம் ஏதும் வேண்டாம்!
வேறல்லா நிற்கு நிலை நானே நிற்பன்!

வையம் அளந்தானை அறிவால் அளக்கத் தான் முடியுமோ? அளக்க முடியாது! கொள்ளத் தான் முடியும்!

அதை அருணகிரியாரும் உறுதிப்படுத்துவது தான் எத்தனை சிறப்பு!

VSK Monday, July 13, 2009 11:27:00 AM  

//தேன்! தேன்! வந்தேன்! வந்தேன்!
முருகத் தேன்! அருணைத் தேன்!
முருக அணைத் தேன்! அதை அணைத்தேன்!//

வாங்க ரவி! நீங்க வந்தாலே எப்படி களை கட்டுது பாருங்க! மிக்க மகிழ்ச்சி!
வருந்தேன் என வரும் தேன்
இருந்தேன் எனத் தரும் தேன்
மறந்தேன் என நினையா தேன்
சிறந்தேன் நீ வரும் தேன்!

மிச்சத்துக்கு சீக்கிரமே வந்து சொல்றேன்.

VSK Monday, July 13, 2009 11:32:00 AM  

//மாரன் கையில் தானே அலர் இருக்கு!
என் முருகன் எதுக்கு தழை எல்லாம் பறிச்சிக்கிட்டு போகணும்? :)
விளக்கமாச் சொல்லுங்க SK!//

மாரன் கையில்தான் மலர்க்கணை இருக்கு! அதை அவன் முருகன் மீது ஏவிவிட, அதனால் காதல்வயப்பட்டு, வள்ளியைத் தேடி தினைப்புனத்தில், ஆலோலம் வந்த திசை நோக்கி நடக்கிறான் என்னப்பன்!
காதல் வயப்பட்டதால் கண்மண் தெரியாமல் அவன் நடக்க, காட்டில் இருக்கும் தழை, இலைகள் எல்லாம் தடுக்க, ஒரு வேகத்தில் அவற்றையெல்லாம் பறித்துக் கொண்டே ஒரே இலக்கை நோக்கி விரைகிறான் முருகன். அதைத்தான் இது உணர்த்துகிறது!!

எல்லாம் இளரத்தம் செய்யற வேலை! அதான் மழவா என அழைத்து மகிழ்கிறார் அருணையார்!

VSK Monday, July 13, 2009 11:33:00 AM  

//சுவாமிமலை முருகன் மேல் உள்ள இந்த எண் விளையாட்டுத் திருப்புகழை எப்பவாச்சும் தர வேண்டுகிறேன் SK!//

விரைவில் தர முயல்கிறேன். ரவி! குடந்தை ஆளுங்களே தெறமையானவங்கதானே! அதான் வாங்கிகிட்டாங்க போல!:))

VSK Monday, July 13, 2009 11:35:00 AM  

//வையம் அளந்தானை அறிவால் அளக்கத் தான் முடியுமோ? அளக்க முடியாது! கொள்ளத் தான் முடியும்!//

இதைப் பற்றிய ஒரு அருளுரையை சமீபத்தில் கேட்டேன். அதன் தாக்கத்தில் புரட்டியபோது இப்பாடல் கண்ணில் பட்டதுதான் எத்தனைப் பொருத்தம்! மு.மு.!

VSK Monday, July 13, 2009 11:36:00 AM  

//வேதனை சேர் வேறு அங்கம் ஏதும் வேண்டாம்!
வேறல்லா நிற்கு நிலை நானே நிற்பன்!//

ஹா ஹா ஹா! சூப்பரு!

VSK Monday, July 13, 2009 11:39:00 AM  

கண்ணனைப் பற்றிய வரிகள் கண்ணபிரானை உடனேயே வரவழைத்து விட்டதே!:))

S.Muruganandam Monday, August 10, 2009 12:34:00 PM  

//மாதம் இரு முறையாவது எழுத வேண்டுமென நினைக்கிறேன்.
முருகன் அருள் செய்ய வேண்டும்.//

அந்த சிவகுமாரனிடன் அப்படியே வேண்டுகிறேன்.

S.Muruganandam Monday, August 10, 2009 12:36:00 PM  

//பாருங்க...சுவாமிமலை முருகன் மேல் தான் அருணகிரி திருவெழுக்கூற்று இருக்கை பாடினார்! அதே ஏரியா ஆராவமுதன் மேல் தான் திருமங்கையும் திருவெழுக்கூற்று இருக்கை பாடினார்! குடந்தை லோக்கல் ஆளுங்க பேசி வச்சிக்கிட்டு வாங்கி இருக்காங்க போல!//


குடந்தை ஆதி கும்பேஸ்வரர் மேல் திருஞான சம்பந்தர் திருவெழுகூற்றிருக்கை பாடியுள்ளார்

VSK Thursday, August 13, 2009 9:46:00 PM  

//மாதம் இரு முறையாவது எழுத வேண்டுமென நினைக்கிறேன்.
முருகன் அருள் செய்ய வேண்டும்.//

அந்த சிவகுமாரனிடன் அப்படியே வேண்டுகிறேன்.

அதுவே என் ஆசையும் ஐயா!
தங்கள் நல்லாதரவுடன் தொடர்கிறேன்.
நன்றி!

ஆடிக்கிருத்திகை வாழ்த்துகள்!

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP