Saturday, May 30, 2009

"இலங்கையில் இல்லாத தமிழர்கள் இப்போது செய்ய வேண்டியதென்ன?"

"இலங்கையில் இல்லாத தமிழர்கள் இப்போது செய்ய வேண்டியதென்ன?"

முடிந்ததாம்!
எல்லாம் முடிந்ததாம்!
பிரபாகரன் கொல்லப்பட்டதாக
வும், விடுதலைப் புலிகள் 'அடியோடு' ஒழிக்கப்பட்டுவிட்டதாகவும் செய்திகள் சொல்லுகின்றன.

இவை உண்மையா. பொய்யா என ஆராய்வது இப்பதிவின் நோக்கமல்ல!

பாதுகாப்பு வலயத்துக்குள் இருக்கின்ற தமிழர்கள் அங்கே!
அப்பாடா! ஒருவழியாக இது முடிந்ததே என நிம்மதிப் பெருமூச்சு விட்டு, வழக்கம்போல், கிரிக்கெட், பீச், கச்சேரி, அரசியல் என தங்கள் பாட்டைக் கவனிக்கப் போகும் தமிழக மக்கள் ஒரு பக்கம்!

ஏதோ ஒரு தலைமை தங்கள் உறவுகளைக் காத்துக் கொண்டிருக்கிறது;
அதற்கான உதவிகளை இங்கிருந்து செய்தால் போதும் என நிம்மதியாக இருந்து வந்த புலம் பெயர்ந்த தமிழர்கள் நிலைதான் இப்போது குழப்பத்தில்!

தமிழகத் தமிழர்களும், புலம் பெயர்ந்த தமிழர்களும் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்ய முடியும்? என்பதைப் பற்றிய என் கருத்தை இங்கே பதிய விரும்புகிறேன்!


பிரபாகரன் என்னும் ஒரு சக்தி இருந்த வரையிலும், ஒரு கட்டுக்கோப்பான தலைமையின் கீழ் இயங்கும் ஒரு அமைப்பு ஏதாவது செய்யும் என நானும் உறுதியாக நம்பிக் கொண்டு அவர்களை ஆதரித்து எழுதியே வந்திருக்கிறேன்.

ஆனால், இன்று நிலைமை மாறியிருக்கிறது.
காப்பாற்ற எவரும் இல்லாமல், பல லட்சம் மக்கள் சோற்றுக்கும் வழியில்லாமல், நாளைய நிலை என்னவென்றே தெரியாமல், வெட்டவெளியில் அல்லல் படுகின்றார்கள்.


காலை உணவு என ஒரு சிறு ரொட்டித் துண்டும், தண்ணீரும் பத்து மணிக்கு!
கஞ்சி கொஞ்சம் சோறு கலந்து மதிய உணவு என மாலை நான்கு மணிக்கு! இவைதாம் தினசரி அல்ல.... இரண்டு நாட்களுக்கு ஒரு முறைதான் வழங்கப்படுவதாகத் தகவல்!

வலயத்துக்குள் சில சிங்களக் கடைகள் திறக்கப்பட்டு, அதிகப்படி உணவு, மற்ற தினசரித் தேவைக்கான பொருள்களை விற்கப்படுகிறதாம்!

ஆம்! காசு கொடுத்தால் கிடைக்கும்!
வலயத்துக்கு வெளியே தினசரி உறவினர் கூட்டம் அலை மோதுகிறதாம்!

உடை, பணம் இவை கம்பிகள் வழியே கொடுக்கப் படுகிறது!

உடைகள் அனைத்தும் உதறப்பட்டு, சோதனை செய்த பின்பே கொடுக்க முடியும்! பணத்தைக் கொடுக்கத் தடையில்லை! எல்லாம் சிங்களவருக்குப் போகிறதே! அதனால்!
தொலைபேசி வசதி கூடக் கொடுக்கப்பட்டு, வெளிநாட்டில் இருக்கும் உறவினரிடம் பேச அனுமதிக்கப் படுகிறது! அப்போதுதானே அவர்கள்பரிதாபப்பட்டு, பணம் அனுப்புவார்கள்!


இன்னும் எங்கு செல்லப் போகிறோம் எனத் தெரியாத நிலை அவர்களுக்கு!

எல்லா வட கிழக்கு மாகாணங்களிலும் பாதுகாப்பு நலன் கருதி, ராணுவக் குடியிருப்பு வீடுகள் கட்டப்படும் வேலை துவங்கப்பட்டு விட்டது!
இனி முழுக்க முழுக்க தமிழர் வாழும் இடம் எனச் சொல்ல ஒரு ஊர் கூட இருக்கப் போவதில்லை.

இதுதான் நிதரிசனம்!


இந்த நிலையில் வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் வன்னி, வவுனியா வாழ் தமிழர் நலன் கருதி சில போராட்டங்களைத் துவங்கி, உலக நாடுகளின் கவனத்தை இலங்கைத் தமிழர் அவலத்தின்பால் ஈர்க்கும் பணியைச் செய்து வருகிறார்கள்.
இது வரவேற்கத்தக்க ஒரு நல்ல விஷயம்.

ஆனால், இன்னும் ஒரு சிலர் தமிழீழத் தாகத்தைக் காட்டும் செயல்களைச் செய்கின்றனர்.

கொடிகள், படங்கள், முழக்கங்கள் என இவர்கள் தங்கள் வேகத்தைக் காட்டியும் வருகின்றனர்.

பிரபாகரன் இல்லை என்று ஆகிவிட்டால் எங்கள் கோரிக்கை இல்லாமல் போய்விடாது என்பது இவர்கள் நிலை.

அவர் இல்லை என்னும் செய்தியைக் கூட நம்ப மறுப்பவரும் இருக்கின்றனர்.
இவையெல்லாம் தவறு என நான் சொல்ல மாட்டேன்.

இலங்கையில் எதுவும் மாறவில்லை என்பது நூற்றுக்கு நூறு உண்மை!

ஆனால், அதைத் தட்டிக் கேட்க ஒரு அமைப்பு அங்கு இல்லை என்பதும் உண்மை!
இவர்கள் இங்கு எழுப்பும் கோஷங்கள் அங்கு என்ன மாதிரியான விளைவுகளை அங்கிருக்கும் தமிழருக்கு ஏற்படுத்தும் என்பதை இவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டுமென விரும்புகிறேன்.

இங்கு எழுப்பும் ஒவ்வொரு கோஷமும் இலங்கை அரசை இன்னமும் ஆத்திரப்படுத்தி, அது இந்தத் தமிழர்களையே தாக்கும், பாதிக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

அடக்குமுறை இல்லாத சுதந்திர மேலைநாட்டில் இருந்துகொண்டு நாம் எழுப்பும் முழக்கங்கள் இலங்கைத் தமிழருக்குக் கிடைக்கப்போகும் சிறு சிறு உதவிகளைக் கூடத் தாமதப் படுத்தும் என அஞ்சுகிறேன்.


முக்கியமாகக் குழந்தைகள்!

படக்கூடாத துயரங்களைப் பட்டு, பார்க்கக் கூடாத காட்சிகளைப் பார்த்து, இழக்கக் கூடாத உறவுகளையெல்லாம் இழந்து, மறக்க முடியாத மன பாதிப்பை அடைந்து தவிக்கும் இவர்கள் அவலம் முதலில் நிற்க வேண்டும்.

முடியாதையா! முடியாது! இதற்கு மேல் இவர்கள் அவதிப் படுவதைத் தாங்கமுடியாது..... மனசாட்சியிருக்கும் எவராலும்!


இவர்கள் ஒரு நிலையான வாழ்க்கையைத் துவங்க வேண்டும்.

பள்ளிக்குச் செல்ல வேண்டும்.

நன்கு படிக்க வேண்டும்.

வாழ்க்கையில் ஏதேனும் சாதிக்க இவர்களுக்கும் வாய்ப்பு கிட்ட வேண்டும்.

வாழ்ந்து கெட்டவர்கள் ஒருபுறம் இருக்கட்டும்!
வாழ வேண்டுமென வெளிச் சென்றவர்கள் நன்றாக வாழட்டும்!

வாழ வேண்டிய இவர்கள் இனியாவது வாழ வேண்டும்!


அதற்காகவாவது, இன்றைய நிலையை உணர்ந்து கொஞ்சம் அடக்கி வாசிக்க வேண்டும் பிற தமிழர்கள் என வேண்டுகிறேன்.

வை.கோ. முதல் வெளிநாட்டில் இருக்கும் தமிழர் வரை அனைவரும் செய்யவேண்டியது இது ஒன்றே.


தமிழீழக் கோரிக்கையைத் தள்ளி வைப்போம்!.... தாற்காலிகமாவது!
இலங்கையில் இருக்கும் தமிழர்கள் ஒரு சாதாரணமான வாழ்க்கையை வாழ நம்மால் ஆன உதவிகளைச் செய்ய முயற்சியாவது செய்வோம்!
இப்போதையத் தேவை இவர்களுக்கான நல்வாழ்வு!

அது இவர்களுக்குக் கிடைக்கவிடாமல் செய்யும் எந்த ஒரு செயலையும் செய்யாமல் இருப்போம்!


கட்டபொம்மன், மருது சகோதரர்கள் என ஒரு விடுதலைப் போராட்டம் முதலில் இந்தியாவில் நிகழ்ந்தது.

அது நசுக்கப்பட்டது!

அவர்கள் கொல்லப்பட்டார்கள்!

ஒரு நூற்றாண்டு காலம் அடுத்து ஒன்றுமே நிகழவில்லை!

மீண்டும் ஒரு சிப்பாய் கலகம் 1987ல்!

அதுவும் நசுக்கப் பட்டது!
அது முடிந்து அறு்பது ஆண்டுகளுக்குப் பின்னரே இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது!
இது வரலாறு!

இப்படித்தான் நிகழவேண்டும் என்கிற கட்டாயம் இல்லை!

இதேபோல அல்லாமல், ஒரு சில ஆண்டுகளிலேயே ரஷ்யாவிலும், சீனாவிலும்
மக்களாட்சி மலர்ந்தது!
இதுவும் வரலாறுதான்!

இப்படியும் நிகழலாம்!

முறையான ஒரு அமைப்பு வந்து ஒரு முறையான போராட்டத்தை நடத்தும் காலம் வரும் வரைக்கும், வெளியில் இருந்துகொண்டு, உசுப்பிவிடும் பேச்சுகளைப் பேசாமல் நாவடக்கம் காக்க வேண்டும்!

இதையெல்லாம் சொல்வதால் நான் துரோகி எனச் சிலர் கொள்ளக்கூடும்!
நான் இலங்கையில் இருக்கும் என் தமிழரை மட்டுமே நினைக்கிறேன் என்பதால் இப்படிச் சொல்வதால் நான் வருந்த மாட்டேன்!

பாதுகாப்பு வலயத்துக்குள் மட்டுமல்ல!

கொழும்புவில் இருந்து பல இடங்களிலும் இருக்கும் என் இலங்கை நண்பர்களை நினைக்கிறேன்.


இங்கு நான் சுதந்திரமாக நடமாடி, நான் விரும்பும் செயல்களைச் செய்ய முடியும் நிலை போலவே, அந்த அளவுக்கு இல்லாவிட்டாலும், ஓரளவுக்காவது என் மக்கள் சம உரிமை பெற வேண்டும் என நிச்சயமாக விரும்புகிறேன்.

அதைக் குலைக்கும் எந்தச் செயலையும் வெளியில் இருக்கும் தமிழர்கள் செய்யக்கூடாது என உறுதியாக வேண்டுகிறேன்.


பிரபாகரன் என்கிற ஒருவரைக் காட்டியே இதுவரை, என் மக்கள் ஒடுக்கப்பட்டு வந்தார்கள்.

அவர் இல்லையென்றால், நாங்கள் என்னென்னவோ செய்வோம் எனப் பல தலைவர்கள் பேசியிருக்கிறார்கள்!

இன்று, துரதிர்ஷ்டவசமாக அவர் இல்லை எனும் நிலை!

இன்று நான் ஒரு எதிர்க் குரல் கொடுத்தால், அதனால் அதையே காரணம் காட்டி, இந்தப் போலித் தலைவர்கள் செயல்படாமல் இருந்துவிட்டு, அதனால் என் மக்களே பாதிக்கப் படுவார்கள் என எனக்கு நிச்சயமாகத் தெரிகிறது.

அவர்கள் நலமோடு வாழ நான் என் குரலை தாற்காலிகமாகத் தாழ்த்திக் கொள்கிறேன்!

உணர்வை அல்ல! குரலை மட்டுமே!

அதை நான் புரிந்துகொண்டிருப்பது போலவே, மற்றவரும் புரிந்துகொண்டு என் மக்களை மேம்படுத்த மட்டுமே தம் செயல்பாடுகளைக் கொள்ளவேண்டும் என விரும்புகிறேன்!


ஈழத் தமிழர்
நலம் பெற வேண்டும் என மட்டுமே சிந்தித்துச் செயல்படுவோம்! இது ஒன்றே அவருக்கு நன்மை பயக்கும் என நினைக்கிறேன்.

முழு நிவாரணம் அவர்களுக்கு உடனடியாகக் கிடைக்க வேண்டும்.
இருக்க ஓர் இடம், புசிக்க உணவு, படிக்க ஓர் பள்ளி, வகிக்க தகுதியான வேலை!
இந்த உரிமைகளை இலங்கை அரசு உடனடியாக எம் மக்களுக்குச் செய்ய வேண்டும்!

அப்படிச் செய்ய அதற்கு உலக நாடுகளை வற்புறுத்தச் செய்வோம்!

இவற்றைச் செய்ய இலங்கை அரசுக்கும் ஒரு வாய்ப்பு அளிப்போம்!


அப்படிச் செய்யவில்லையெனில்,.............

.......................................????!!!!!!!

விடியல் தூரத்தில் இல்லை!

கட்டுண்டோம்! பொறுத்திருப்போம்!

காலம் வரும்!
எம் தமிழர் வெல்வர்!

அதுவரை காத்திருப்போம்!
இப்போது அமைதி காப்போம்!

அனைவருக்கும் நன்றி!

*********************

8 பின்னூட்டங்கள்:

குறும்பன் Sunday, May 31, 2009 7:07:00 PM  

இப்போது அங்கு இருப்பவர்களுக்கு நிவாரணம் தேவை. நன்றாக சொன்னீர்கள்.

VSK Sunday, May 31, 2009 8:41:00 PM  

அது மட்டுமே இப்போதைய நம் குரலாக இருக்க வேண்டுமென விரும்புகிறேன் ஐயா! நன்றி.

Kannabiran, Ravi Shankar (KRS) Monday, June 01, 2009 11:02:00 AM  

//அவர்கள் நலமோடு வாழ நான் என் குரலை தாற்காலிகமாகத் தாழ்த்திக் கொள்கிறேன்!
உணர்வை அல்ல! குரலை மட்டுமே!//

:(((

குரலைக் கூட தாழ்த்த வேண்டாமே SK ஐயா!
ஈழக் குரலை வேண்டுமானால் கொஞ்சம் தாழ்த்திக் கொள்ளலாம்!
ஆனால் வாழ்வுக் குரலை உரத்து ஒலிக்கவில்லை என்றால்...சத்தமே இல்லை என்று நசுக்கியே போட்டு விடுவார்கள்!

VSK Monday, June 01, 2009 12:06:00 PM  

அதைத்தான் நானும் சொன்னேன் ரவி.
இவையெல்லாம் நடக்க மட்டுமே குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும்.
இன்னும் புலிகள் வருவார்கள்; வந்து போராட்டத்தைத் தொடர்வார்கள் எனப் பேசிக்கொண்டிருப்பவர்களால் அங்கிருக்கும் தமிழருக்குத்தான் வேதனை அதிகரிக்கும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டுமென விரும்புகிறேன்.
அவர்களைக் காக்கவென ஒரு அமைப்பு அங்கு முறையாக இல்லாத இந்த நேரத்தில்.
நன்றி.

VSK Monday, June 01, 2009 8:06:00 PM  

உங்கள் பதிவு அங்கு என்ன செய்யப்பட வேண்டும் என்கிறது ரவி!
என் பதிவு, அங்கு இல்லாத நாம் என்ன செய்தால் அவர்கள் வேதனை அதிகப்படாமல் இருக்கும் எனச் சொல்கிறது!
நன்றி!

ஸ்வாதி Tuesday, June 09, 2009 10:16:00 AM  

அங்கிருப்பவர்கள் சூழ்நிலைக் கைதிகள். வன்னிக்கு வெளியே இருக்கும் தமிழர்களால் கூட குரல் உயர்த்த இயலாதவர்கள். அவர்களுக்கும் சேர்த்து புலம்பெயர்ந்த எம்மைப் போன்ற தமிழர்களால் தான் எதுவும் செய்ய முடியும். முதலில் இறப்புகளுக்கு செய்ய வேண்டிய கடமைகள்; அடுத்து இழப்புகளுக்கு அளிக்க வேண்டிய நிவாரணம்; பின் நிர்கதியாகிய தனித்துவிடப்பட்ட பெரியவர்கள், குழந்தைகளுக்கான ஆதரவு; இருக்க இடம்; உடுக்க உடை, உண்ண உணவு. கொஞ்சமேனும் நிம்மதியான உறக்கம்.. அதன் பின் தொழில், உழைப்புக்கான தேடல் அவர்கள் பழையபடி சுயமாக தம்மை நிலைப்படுத்திக் கொள்ள.. அதற்கும் அப்பால் தான் இனி தனிநாட்டுக்கான அடுத்த கட்ட நடவடிக்கை பற்றிய ஏதேனும் ஒரு சிந்தனை அல்லது நடவடிக்கை...!! முதலில் எஞ்சிய தமிழினத்தை ஊனத்திலிருந்து மீள அழைத்து வருவது தான் முக்கியம்.

அன்புடன்
சுவாதி

VSK Wednesday, June 10, 2009 7:31:00 AM  

முழுதுமாக ஒப்புக்கொள்கிறேன். அதற்கான செயல்பாடுகளில் மட்டுமே இப்போதைக்கு ஈடுபடுவோம். நன்றி. சுவாதி அவர்களே.

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP