Monday, March 02, 2009

”உந்தீ பற!” -- 26

”உந்தீ பற!” -- 26

’பகவான் ரமணரின் திருவுந்தியார்’

[முந்தைய பதிவு]

உள்ள துணர வுணர்வுவே றின்மையி
னுள்ள துணர்வாகு முந்தீபற
வுணர்வேநா மாயுள முந்தீபற. [23]

உள்ளது உணர உணர்வு வேறின்மையின்
உள்ளது உணர்வாகும் உந்தீ பற
உணர்வே நாமாய் உளம் உந்தீ பற.

இருப்பெனச் சொல்வது அழியாதொன்று
’சத்’தென அதுவும் நிலைத்து இருக்கும்


சத்தை அறிந்திடும் தெளிவு பிறந்தால்
'சித்' என அதையும் சொல்லுவர் பெரியோர்

சத்தும் சித்தும் ஒன்றெனத் தெளிந்து
ஒளிர்வது எதுவென உள்ளில் உணர்ந்து

நான் எனும் ஒன்றைத் தேடிடும் யோகியர்
அறிவதும் இதுவே என்பதை அறிக.

சென்ற பாடலின் விரிவான விளக்கம் ஒரு கேள்வியை எழுப்பியிருக்கலாம்.

'ஆணவம்' என்பது மாயை எனில், நிலையான சத்தாக இருக்கும் தெளிவுநிலை சித் எனச் சொல்லப்படும்.

அப்படியென்றால், இந்தச் சித்தம் தான் 'சத்' எனச் சொல்லப்படுவதையே எனக்கு உணர்த்துகிறதோ? என.

'நான்' எனச் சொல்லப்படும் ஒன்றில், உடல், புலன்கள் இவற்றாலான ஈடுபாட்டை அழித்துவிட்டேன் என உணர்வது எப்படி?

உடல், புலன், மனம், புத்தி இவையெல்லாவற்றாலும் அறியாமை என்பதால் மறைக்கப்பட்ட ‘உண்மையான நான்’ களிம்பு நீக்கப்பட்ட செம்பு போல, இவையெல்லாம் அகலும்போது, தானாக ஒளிர்கிறது.

ஆம்!

தெளிவு என்பது அறியாமை நீங்கும்போது தானாகத் தெரிய வருகிறது.

அப்படியானால், இந்தத் தெளிவுதானா ‘நான்’ என்னும் நிலையைக் காட்டுகிறது?

‘நான்’ எனபது தானாக ஒளிரும் ஒன்றென்றால், அதை இன்னொன்று ஒளிரச் செய்ய முடியுமோ?

ஒரு விளக்கின் ஒளியைக் கொண்டா சூரியனை உணர முடியும்?

அப்படியெனின், சூரியனா ஒரு விளக்கின் ஒளியைக் காட்டுகிறது?

இல்லை!

ஒளிக்கு இன்னொரு ஒளியின் துணை தேவையில்லை.

ஒளி ஒளிதான்!

நமது அனுபவத்தின் மூலமும், பயிற்சியினாலும் இதுவரையில் நாம் அறிந்தது.... ’நான் என்பது உண்மை’[I am] ’நான் என்பது உண்மை என்பதை நான் அறிவேன்’![I know I am]

இதன்படி பார்த்தால், இவை இரண்டுமே உண்மை என்பது புரியும்!

இரண்டுமே ஒன்றுதான்!
தெளிவான ”சித்”தும் ஒளியே! நிலையான ”சத்”தும் ஒன்றே!

இதை அறிவதே ”நான்!”

இந்த ‘நான்’ எப்படி இந்தப் பிரபஞ்சத்துடன் ஒன்றுகிறது?

நாளை பார்க்கலாம்!

“தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்!”
*********************
[தொடரும்]

4 பின்னூட்டங்கள்:

Anonymous,  Wednesday, March 04, 2009 11:57:00 AM  

//தெளிவு என்பது அறியாமை நீங்கும்போது தானாகத் தெரிய வருகிறது.//

நாம் எவ்வளவு முயற்சி செய்தாலும் நமது கர்மவினை முழுதும் தீர்ந்தால் தானே தெளிவு கிடைக்கும்?!

VSK Wednesday, March 04, 2009 12:23:00 PM  

கர்மம் என்பதே ஒரு வினைதான். கர்மவினை என ஒன்று தனியாக இல்லை.
இத்தொகுப்பின் முதல் பாடலின் முதல் வரியை மனதில் முழுதுமாகக் கொண்டால், இந்தக் குழப்பம் வராது.
கருமம் பயன் தரல் கர்த்தன் ஆணையால்!
இந்த கருமத்திற்கு இன்ன பலன் என வரயறை இல்லாமல், கர்த்தன் நமக்குப் பலன்களை அளிக்கிறான்.

இது கர்மயோகத்தில் ஆழ்பவர்க்கு மட்டுமே சாலப் பொருந்தும்.
அநேகமாக நாம் யாவருமே இந்த நிலையில்தான் இருக்கிறோம்.
இரண்டாம் பாடலில், இதிலிருக்கும் ஆபத்தைச் சொல்கிறார்.
வினை[கருமம்] மட்டுமே செய்து வாழ்ந்தால், அது மென்மேலும் வினைகளைச் செய்யத் தூண்டி நம்மை வினைக்கடல் ஆழ்த்திவிடும் என.
அதனால்தான், அதிலிருந்து எழுந்து விடுபட பக்தி யோகத்தைத் தொடர்ந்து, பின்னர் அதனையும், அஷ்டாங்க யோகப் பயிற்சியின் மூலம், முறையாக விடுத்து, ஞானத்தைத் தேடச் சொல்கிறார்.

அப்படிப்பட்ட ஒருவருக்கு தெளிவு, இந்த அறியாமையை உணர்ந்து நீக்குவதால் கிடைக்கிறது.
இந்த நிலைக்கு வந்தவர்க்கு மட்டுமே புரியும் நிகழ்வு இது.

முதல் நிலையில் இருப்பவர்க்கு இது பொருந்தாது எனக் கருதுகிறேன் ஐயா.
நன்றி.

Anonymous,  Thursday, March 05, 2009 5:11:00 AM  

மிக நன்றாக விளக்கியுள்ளீர்கள். மிக்க நன்றி ஐயா.

VSK Thursday, March 05, 2009 6:05:00 PM  

மிக்க நன்றி அனானியாரே!

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP