Friday, March 20, 2009

"உந்தீ பற!" -- 35



"உந்தீ பற!" -- 35


'பகவான் ரமணரின் திருவுந்தியார்'


[முந்தைய பதிவு]


"வாழ்த்து"
[திரு. முருகனார் எழுதியது]

[வழக்கம்போல், இந்தப் பாடல்களையும் பதம் பிரித்துத் தந்திருக்கிறேன். படித்தாலே எளிதாகப் புரியும் பாடல்கள் இவை. எனவே விளக்கம் தவிர்த்திருக்கிறேன். நன்றி.]


இருடிக ளெல்லா மிறைவனடியை

வருடி வணங்கின ருந்தீபற

வாழ்த்து முழங்கின ருந்தீபற. [1]


உற்றார்க் குறுதி யுபதேச வுந்தியார்

சொற்ற குருபர நுந்தீபற

சுமங்கள வேங்கடனுந்தீபற. [2]


பல்லாண்டு பல்லாண்டு பற்பன்னூ றாயிரம்

பல்லாண்டு பல்லாண்டு முந்தீபற

பார்மிசை வாழ்கவே யுந்தீபற. [3]


இசையெடுப் போருஞ் செவிமடுப் போரும்

வசையறத் தேர்வோரு முந்தீபற

வாழி பலவூழி யுந்தீபற. [4]


கற்கு மவர்களுங் கற்றுணர்ந் தாங்குத்தா

நிற்கு மவர்களு முந்தீபற

நீடூழி வாழியே யுந்தீபற. [5]


இருடிகள் எல்லாம் இறைவன் அடியை

வருடி வணங்கினர் உந்தீ பற

வாழ்த்து முழங்கினர் உந்தீ பற. [1]


உற்றார்க்கு உறுதி உபதேச உந்தியார்

சொற்ற [சொல்லிய] குருபரன் உந்தீ பற

சுமங்கள வேங்கடன் [பகவான் ரமணரின் இயற்பெயர்] உந்தீ பற. [2]


பல்லாண்டு பல்லாண்டு பல பன்னூறு ஆயிரம்

பல்லாண்டு பல்லாண்டும் உந்தீ பற

பார்மிசை வாழ்கவே உந்தீபற. [3]


இசையெடுப்போரும் செவிமடுப்போரும்

வசையறத் [குற்றமில்லாமல்] தேர்வோரும் உந்தீ பற

வாழி பல ஊழி உந்தீ பற. [4]


கற்கும் அவர்களும் கற்று உணர்ந்து ஆங்கு தா[ம்]

நிற்கும் அவர்களும் உந்தீ பற

நீடூழி வாழியே உந்தீ பற. [5]

******************************

“நிறைவுரை”

"அறியாதான் பாடுகிறேன் அம்மைத் திருக்கதையை

தெரியாதான் பாடுகிறேன் தேவி திருக்கதையை"



'மாரியம்மன் தாலாட்டு' என்னும் தோத்திரப் பாடலில் மேற்கூறிய வரிகள் வரும்.

அதுதான் என் நிலையும்!


இதில் சொல்லப்பட்டிருக்கும் பல விஷயங்களை முறையாகப் பயின்றவன் அல்லேன் நான்! அப்படி இருந்தும், இதனை எழுதப் புகுந்தது குருவருளாலேயே !


தெய்வாதீனமாக ரமணரின் பாடல் தொகுப்பு எனக்குக் கிடைக்கப் பெற்றதும், அதில் இந்த குறிப்பிட்ட 'திருவுந்தியார்' என் மனதைத் தொட்டதும் அவனருளாலே!


விமானத்தில் சென்னை செல்லுகையில், இன்னும் சற்று ஆழ்ந்து படிக்க முறபட்டபோது, மனதில் பட்ட கருத்துகளை ஒரு நோட்டுப் புத்தகத்தில், எட்டு வரிக் கவிதைகளாக எழுத முற்பட்டேன். [அவையே ஒவ்வொரு பாடலுக்கு அடியிலும் இட்டிருக்கும் 8 வரிகள்!]


சென்னை சென்ற மறுநாளே நான் மிகவும் வணங்கும் இறையன்பரைச் சந்திக்க காண நேர்ந்தபோது, அவர் கூறிய பல கருத்துகள், இந்நூலில் சொல்லியதற்கான மேல்விளக்கம் போல அமைந்தது கண்டு நெகிழ்ந்து போனேன்.


திரும்பி வந்ததும் இதனை அப்படியே போடலாம் என நினைத்து, முதல் பதிவையும் இட்ட நிலையில், எனது நண்பர் ஒருவர் [மங்களூரைச் சேர்ந்தவர் இவர்!] என்னை அழைத்தார்.


அவரிடம் ஒரு புத்தகம் இருப்பதாகவும், அது எனக்குப் பயன்படும் எனத் தான் நினைப்பதாகவும் கூறியதோடு அல்லாமல், அன்று மாலையே என் வீட்டிற்கு வந்து அதைத் தந்துவிட்டும் போனார்.


பகவான் ரமணர் எழுதிய 'உபதேச சாரா' என்னும் வடமொழி நூலின் ஆங்கில உரைவிளக்கம் அது! திரு. தேஜோமயானந்தா அவர்கள் எழுதியது! புரட்டிப் பார்த்தவுடன், முதல் இரு பாடல்களிலேயே புரிந்தது, இது 'உபதேச உந்தியாரின் வடமொழி ஆக்கம்' என!


என் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!


குருவருள் தேடிவந்து, நான் எழுத நினைத்ததற்கு ஆசியும், வழிகாட்டலும் அளித்ததாக நம்புகிறேன். இதில் அவர் கருணையின்றி வேறேதும் இல்லை!


அந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்ட விளக்கம், கிட்டத்தட்ட நான் எழுதிவைத்திருந்த பாடல்களுடன் ஒத்திருந்தது இன்னொரு ஆச்சரியமான விஷயம்.


முழுத் தெம்புடன் எழுதி முடித்து, இங்கு பதிந்து முடிக்கும் இந்நேரத்தில்,.... சமயத்தில் வந்து அருளிய அத்தனை பேருக்கும் என் மனமார்ந்த நன்றி கலந்த வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


"மலையளவு நூலறிவு இருப்பினும், கூடவே கடுகளவாவது பயிற்சியும் நிகழ்ந்தால் மட்டுமே உண்மை புலப்படும்" என நான் வணங்கும் அந்த இறையன்பர் சொன்னதை இந்த நேரத்தில் எனக்கு நினைவுபடுத்திக் கொண்டு,

இங்கு நான் எழுதியதில் ஏதேனும் குற்றம் குறைகள் இருப்பின், அவற்றுக்கு முழுப் பொறுப்பும் என் அறியாமையே காரணம் எனச் சொல்லி, அனைவரையும் வணங்கி இதனை இத்துடன் முடிக்கிறேன்.


அனைவர்க்கும் பகவான் ரமணரின் திருவருள் சித்திக்க வேண்டுகிறேன்.


நன்றி! வணக்கம்!


"நன்றாக குரு வாழ்க!"


**************************

11 பின்னூட்டங்கள்:

jeevagv Saturday, March 21, 2009 4:31:00 PM  

குருவருளால் திருவருள் கிட்ட தாங்கள் கொண்ட முயற்சிகள் அனைவருக்கும் பயன்படும் என்பது திண்ணம், மிக்க நன்றிகள்!

VSK Saturday, March 21, 2009 5:32:00 PM  

எத்தனையோ பேர் படிக்கிறார் எனத் தெரிந்தாலும், தெரிந்தவர் வந்து ஒரு சொல் சொல்லுகையில், அது தக்கவரைச் சேர்ந்தடைந்தது எனப் புரிவதில் ஒரு தனி மகிழ்ச்சி, நண்பர் ஜீவா!

நன்றி!

Kannabiran, Ravi Shankar (KRS) Sunday, March 22, 2009 9:19:00 PM  

உந்தீ பற, உந்தீ பற என்று மொத்தம் 35 கற்கள் வைத்து உந்தீ பறக்கச் செய்தமைக்கு நன்றி SK ஐயா! பகவான் ரமணரின் அமுத மொழிகள், அன்பர்கள் பலரைச் சென்று அடைந்ததில் மிக்க மகிழ்ச்சி!

ரமணர் உபதேசங்கள் மட்டுமே செய்தவர் என்று பலரும் நினைத்திருப்பார்கள்! ஆனால் அவர் ஆன்ற தமிழ்க் கவியும் செய்து, அதில் ஆன்ற மறைத் தத்துவமும் செய்தார் என்பது இப்போது பலருக்கும் அறிய ஏதுவானது!

//சுமங்கள வேங்கடனுந்தீபற//

ரமணரின் இயற்பெயர் வேங்கட-ரமணர் தானே?
இந்தப் பதிவில் மங்களமாய் வேங்கடவனுக்கும் உந்தீ பறக்கச் செய்து விட்டீர்கள்! :)

மாணிக்க வாசகரின் திருவுந்தியின் படியே, குரு ரமணர் திருவுந்தியும்...அருமையாக அமைந்தது! வாழ்த்துக்கள்! வணக்கங்கள்!

VSK Sunday, March 22, 2009 9:28:00 PM  

மிக்க நன்றி ரவி!

ஆன்மறைத் தத்துவங்களை அழகுதமிழில் படைத்துத் தமிழுக்கும் இவர் ஆற்றிய சீரிய தொண்டினைத் தொட்டுக் காண்பித்துப் பாராட்டியது மனதுக்கு நிறைவாக இருக்கிறது!

நன்றி!

குருவருள்!

Anonymous,  Monday, March 23, 2009 6:38:00 PM  

"யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" எனும் நோக்கில்
எமக்கும் உந்துதல் கொடுக்கும் பொருட்டு
"பெருமகானின் உந்தீ பற"வினை உலகெல்லாம் பறக்கவிட்ட
தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

"நேரம் காலம் சரியாய் இருந்தால் நினைத்ததெல்லாம் நடக்கும்" என பெரியோர்கள் அடிக்கடி சொல்வார்கள்.
நினைக்க, செய்ய வேண்டியது எமது கடமை, முடித்து வைக்க வேண்டியது அவனது கருணை.

குருவே சரணம்!

VSK Monday, March 23, 2009 9:27:00 PM  

//"யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" எனும் நோக்கில்
எமக்கும் உந்துதல் கொடுக்கும் பொருட்டு
"பெருமகானின் உந்தீ பற"வினை உலகெல்லாம் பறக்கவிட்ட
தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

"நேரம் காலம் சரியாய் இருந்தால் நினைத்ததெல்லாம் நடக்கும்" என பெரியோர்கள் அடிக்கடி சொல்வார்கள்.
நினைக்க, செய்ய வேண்டியது எமது கடமை, முடித்து வைக்க வேண்டியது அவனது கருணை.

குருவே சரணம்!//

மிகச் சரியாகச் சொன்னீர்கள் அனானியாரே!

அவர் நம்மைத் தேடி வரும்படி செய்யவும் “பயிற்சி” உதவும் என என் குருநாதர் அடிக்கடி சொல்லுவார்!

கோவி.கண்ணன் Monday, March 23, 2009 10:00:00 PM  

முடிஞ்சிட்டா ? வாழ்த்துகள் !

VSK Monday, March 23, 2009 11:57:00 PM  

ஒருமுறையாவது வந்திருவீங்கன்னு தெரியும் கோவியாரே! நன்றி!

வடுவூர் குமார் Tuesday, March 24, 2009 12:24:00 AM  

நல்ல தொடரை அழகுபட சொல்லிய விதம் மனதை கவர்ந்தது.

VSK Tuesday, March 24, 2009 9:06:00 AM  

தொடர்ந்து படித்து வந்து, அவ்வப்போது நல்ல கருத்துகளையும் சொல்லி வந்தமைக்கு மிக்க நன்றி, திரு. குமார்.

குருவருள் துணை நிற்கும்!

Anonymous,  Thursday, November 10, 2011 10:56:00 AM  

அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ் ஜோதி
அடிமுடி காட்டிய வருட்பெருஞ் ஜோதி (திருவருட்பா அகவல்)

திருவடி தீக்ஷை(Self realization)

இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள்.இது அனைவருக்கும் தேவையானது.
நாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம்.
சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.

http://sagakalvi.blogspot.com/


Please follow

(First 2 mins audio may not be clear... sorry for that)
http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk
http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4
http://www.youtube.com/watch?v=FOF51gv5uCo



Online Books
http://www.vallalyaar.com/?p=409


Contact guru :
Shiva Selvaraj,
Samarasa Sutha Sanmarkka Sathya Sangam,
17/49p, “Thanga Jothi “,
Kalaignar kudi-iruppu – Madhavapuram,
Kanyakumari – 629702.
Cell : 92451 53454

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP