Tuesday, November 18, 2008

"கந்தன் கருணை" [இரண்டாம் பாகம்] - 3

"கந்தன் கருணை" [இரண்டாம் பாகம்] - 3
"மனவேடன் காதல்" - 3
'மனவேடன் கூற்று'

நலிந்திட்ட வேளையிலும் நாணமது விலகவில்லை! நிமிர்ந்தென்னை நோக்கியவள் வேதனையை மறைத்தபடி, " ஆருமில்லாக் காடென்று அப்படியே நினைத்தாயோ! காடுமலை வனமெல்லாம் சொந்தமிங்கு எங்களுக்கு!

இம்மென்றால் ஆயிரம் பேர் இப்போதே வந்திருந்து, 'ஏதுமறியாப் பெண்ணிவளை ஏதுசெய்ய எண்ணினாயடா?' எனச்சொல்லி கட்டியிழுத்திடவே துணிவுண்டு என்னிடத்தில்!" எனச் சொல்லிச் சிடுசிடுத்தாள்!

பசியங்கு வாட்டுகின்ற வேளையிலும் பத்தினியாள் பனிமுகத்தில் படர்ந்துவிட்ட செம்மையதைக் கண்டு யானும் மனத்துள்ளே மகிழ்ந்திடினும், கருமுகத்தில் படர்ந்திட்ட செம்மையது காட்டுகின்ற வண்ணக் கலவையதை மேலும் சற்றுக் கண்டிடவே எட்டியவள் கைபிடித்தேன்!

"யாருமில்லா வேளையிலே மரத்தடியில் நீ கிடக்க, மேனியெலாம் சிராய்த்திடவே செங்குருதி வெளிக்காட்ட கருந்தோலில் அரும்புகின்ற காயத்தைக் குறைத்திடவே மருந்தொன்று வைத்திருக்கேன்! மாதரசி மடி வாடி! "எனச்சொல்லி ஆதரவாய் அவள் கையைப் பற்றியதும் அவள் சினந்தாள்!

வெடுக்கென்று தன்கையை உதறியவள் எனைப் பார்த்து, ' காட்டினிலே பிறந்தவள் நான்! காயமெனக்குப் புதிதில்லை! என் குருதி காணுவதும் இதுவல்ல முதல் தடவை! உன் வழியைப் பார்த்த படி நீ செல்ல இயலாதெனின், இப்போதே வீரர்களை இங்கேயே யானழைப்பேன்' என்றபடி ஓலமிட்டாள்! "எல்லாரும் வாங்க" என்றாள்!

தூரத்தே வேட்டுவரும் ஓடிவரும் ஒலிகேட்டு, கண்நிறைந்த காதலியைக் கண்களினால் பார்த்தபடி, பற்றிநின்ற கைகளையும் விட்டிடாது அப்படியே மரமாகி நின்றிருந்தேன்.. வேங்கை மரமாகி நின்றிருந்தேன்.... செவ்வல்லிக் கைகளையும் கிளைகளினால் வளைத்தபடி!

'வனவள்ளி இசைக்கிறாள்!'

நானிட்ட ஓலமதைக் கேட்டுவந்த சோதரரும் ஆதரவாய் எனைநோக்கி 'நடந்ததென்ன கூறு' என்றார்!
'கானகத்தே தனியளாக நானிருந்த வேளையினில் வனவேடன் வேடம்கொண்டு வஞ்சகன் ஒருவன் வந்தென்னை வம்புகள் செய்தான்

நானழைத்த குரல்கேட்டு நீவிரிங்கே வருகின்ற ஒலிகேட்ட வனவேடன் மரமாகி எனை வளைத்தான் பாரண்ணா!' என்றேன்!
மரக்கிளைகள் எனைவளைக்க நானிருந்த கோலம் கண்ட நண்பான சோதரரும் தமக்குள்ளே பார்த்தபடி வாய்விட்டுச் சிரிக்கலானார்!

'அக்கரையில் யாமிருக்க எமைப்பார்க்க நீவேண்டி அக்கரையாய்ச் சொன்னதிந்தக் கதையினை நாம் நம்பமாட்டோம்
ஆளிங்கு மரமாதல் அவனியிலே கண்டதில்லை! அடுக்கடுக்காய் பொய் சொல்லும் துடுக்கான பெண்ணரசி!

யாமிருக்கும் இவ்வனத்தில் வேறொருஆள் வருவதுவும் இயலாத செயலென்றே இன்னமும் நீ உணர்ந்திலையோ
வேடிக்கை செய்யவிது நேரமல்ல! வேலை மிகவிருக்கு!' என்றபடி அன்புடனே எனைத் தழுவி விடைபெற்றுச் சென்றிட்டார்!

பொய்யுரைத்தேன் எனச் சொன்ன சொல்லதுவைத் தாங்கிடாமல் மீண்டுமெனைக் கிள்ளிப் பார்த்தேன்.
உணர்வின்னும் அப்படியே உள்ளபடி தானிருக்கு! கனவெதுவும் காணவில்லை! கண்டதுவும் கனவில்லை.

மரமாகிப் போனவனின் மதிமுகமும் நினைவில் வர மறைக்கவொண்ணா நாணத்துடன் மரக்கிளையைத் தடவிவிட்டேன்!
மரம் அங்கு மறைந்து போச்சு! மனவேடன் மீண்டும் வந்தான்! வில்லொன்றைத் தாங்கியவன் முகவடிவைப் பார்த்தவுடன் நாணத்தால் மிக வேர்த்தேன்!

பொய்யளென எனைச் சுட்டிய கள்ளனிவன் எனும் நினைப்பு மனத்தினிலே பொங்கிவர மறுபடியும் கோபமங்கு முகத்தினிலே துளிர் விட்டது!
'ஆரடா நீ? ஏனிப்படிச் செய்திட்டாய்? அவப்பெயரை எனக்களித்து நீ மறைந்து செல்லலிங்கு மறவர்க்கு அழகாமோ?

மறுபடியும் நானவரை அழைத்திட்டால் என் செய்வாய்? எனச் சிடுசிடுத்து கோபவிழி விழித்திட்டேன்!
கலகலவென அவன் சிரித்த சிரிப்பெந்தன் கோபத்தை எரிகின்ற நெருப்பினிலே விறகள்ளிப் போட்டாற்போல் மிகுதூட்டியது!

'செய்வதையும் செய்துவிட்டு சிரிப்பென்ன சிரிப்பு! நம்பியாளும் காட்டினிலே எதனை நம்பி நீயிங்கு வந்தாய்?
சீக்கிரத்தில் சொல்லாவிடின் பேராபத்து விளையுமுனக்கு' என்றவனைப் பார்த்தபடி கடுமையாக முகம் மாற்றிச் சீறினேன்!

'கோபத்திலும் கூட நீ இன்னமும் அழகாய்த்தானிருக்கிறாய்! கருமைநிற முகவடிவில் செம்மை படர்வதும் சிறப்பாய்த்தானிருக்கிறது' என்றவன் சொன்னதுமே நாணமும் கூடச் சேர்ந்து இன்னும் செம்மையானேன்!
கண்களைச் சற்று தாழ்த்தியபடி, முகத்தில் சற்று அச்சம் படர 'சோதரர்மார் எனைத்தேடி வருகின்ற வேளையிது! சீக்கிரத்தில் அகன்றுவிடு' என்றேன்!

'மனவேடன் கூற்று':

சினந்தவளின் முகவடிவில் நான் மயங்கிப் போனேன்! சிந்தையெலாம் சுழன்றிடவே அன்புடன் அவளை நோக்கி,

'தேடிவந்த மானொன்று திசை தவறி இவ்வழி வந்தது!
காயாத கானகத்திருக்கும் கண்கவர் மான் அது!
இங்குமங்கும் சென்று மேயாத மான் அது!
கண்டவர் எல்லாம் வியக்கும் பேரெழில் மான் அது!
அண்டவந்து எவருமே கைபிடிக்க இயலாப் புள்ளி மான் அது!
கைக்கெட்டும் அருகினில் இருப்பதுபோல் போக்குக் காட்டி, கிட்டவரின் கிட்டாத மான் அது! புள்ளிமானொன்றை கண்டனையோ, கன்னியிளமானே!' என்றேன் ஓரக்கண்ணால் அவளை அளந்தபடி!

'மானொன்றும் காணவில்லை; மயிலும் நான் காணவில்லை! கன்னியிளமானென்று எனை நீ சீண்டுவதும் முறையில்லை!
தேடிவந்த புள்ளிமானைத் தேடி நீ சென்றுவிட்டால் எல்லாமும் நலமாகும்; நின்னுயிரும் பிழைத்துவிடும்' என்றாள் அந்த மானும், மருண்ட தன் கண்களை இங்குமங்குமாய் ஓடவிட்டபடி!

மனதுக்கினியாளுடன் இன்னும் கொஞ்சம் விளையாட எண்ணி, 'மானுனக்குப் பிடித்திருந்தால் வேணுமென்று சொல்லிவிடு!
அதைவிடுத்து மானில்லை இங்கு என பொய்யுரைத்தல் சரியன்று! மானொன்று இங்குவந்த அடையாளம் நான் கண்டேன்!

சற்று முன்னர் நின் அண்ணன்மார் பொய்யள் என நினைப் பழித்த சேதியெல்லாம் கேட்டிருந்தேன்! என்னிடமும் அதே கள்ளம் சொல்லாதே பெண்ணே' என்றேன் முறுவலுடன்!

கோபமின்னும் அதிகமாக, செவ்விதழ்கள் துடிதுடிக்க, ஆத்திரத்தில் மார்பின்னும் படபடக்க அல்லிமகள் கவண் கையெடுத்தாள்!

உரிமையுள்ள சோதரர் எனைச் சொன்னால் பொறுத்துக்கொள்வேன்! முன்பின்னறியா நீ யார் என்னைப் பழிப்பதற்கு? ஆருமில்லா ஆளென்று நினைத்தனையோ? அல்லது வெறுங்கையளென எண்ணினாயோ!

கையிலுண்டு கவண்கல்லு! விட்டெறிந்தால் முகம்தெறிக்கும்! நில்லாதே என் முன்னே! தேடிவந்த புள்ளிமானை நீயும் தேடிப்போ' எனப் படபடத்தாள்!

'கண்மயங்கி விழுந்தவளைக் காப்பாற்ற வந்தவர்க்கு நீ கொடுக்கும் கவண்கல் மரியாதை அழகாய்த்தான் இருக்கிறது!

கோபம் கொள்ளாதே மடமானே! செல்லுகிறேன் இப்போதே' எனச் சொல்லி, கருணை காட்டி மனதிலிடம் பெற்றிடலாம் எனுமெண்ணம் நிறைவேறா ஏக்கத்துடன் அங்கிருந்து அகன்றேன்!


மனவேடன் இனி என் செய்வான்?
*********************************

[நாளை வரும்!]

Read more...

"கந்தன் கருணை" - [இரண்டாம் பாகம்] - 2

"கந்தன் கருணை" - [இரண்டாம் பாகம்] - 2
"மனவேடன் காதல்"-2
அங்கே!....

'வனவள்ளி மனநிலை!'

வனவேடன் தலைவனிவன் நம்பிராஜன் என் தகப்பன் காடுநிலம் உழுகையிலே கண்டெடுத்தான் எனையங்கு.

மகளில்லாக் குறைநீங்க மகாதேவன் தந்தானென மகளாக வளர்க்கின்றான் குறையொன்றும் இல்லாமல்.

தினைப்புனத்தைக் காப்பதற்கே கவண்கல்லை கைதந்து பரண்மீதில் நிற்கின்றேன் மனமங்கு செல்லவில்லை.

ஆலோலம் பாடியிங்கு ஆரவாரம் செய்திருந்து நாடிவரும் புள்ளினத்தை நான் விரட்டிப் பாடினாலும்

நான் விரும்பும் மணவாளன் மலைக்குமரன் வாராமல் மனம்தவித்து வாடுகிறேன் கண்ணிரண்டால் தேடுகிறேன்.

மகிழ்ந்தென்னைக் கூட்டிடவே மலையரசன் தானென்று மகராசன் வருவானோ மனமள்ளிப் போவானோ?

தேடியவன் வருகின்ற திசைபார்த்து திசைபார்த்து கண்ணிரண்டும் பூத்ததுதான் கண்டதிங்கு பலனடியோ!

கீழிறங்கி கால்நடந்து காட்டுவழி மலைவழியே காதலனைத் தேடியிங்கு கால்கடுக்க நடக்கின்றேன்.

குத்துகின்ற முள்ளெதுவும் பாதத்தில் உறைக்கவில்லை பத்துகின்ற வெயிலதுவும் பாவியுடல் எரிக்கவில்லை.

கால்தவறி இடறிவீழ்ந்து மலைச்சரிவில் உருளுகின்றேன் கண்மயங்கி நாவறண்டு நினைவொழிந்து சரிகின்றேன்!

'மனவேடன் கூற்று':

'காடுமலை ஏறி, களைச்சு விழுந்தெழும்பி ஆற அமரத் தேடித்திரிந்தடைந்தேன் மரவடி .!

கண்ணை மூடிக் களைப்பின் அலுப்பினிலே அயர்ந்தே போனேன் சில நொடி! எழுந்து பார்த்த பின்னே உணர்ந்தேன்! ஆதரவாய் தடவிக்கொடுக்கும் ஒரு கரம்!
என்னை அணைத்தபடி தன்னுள் புதைத்தபடி அன்பாய் மறுகரம்!
கற்கள் உரசியதால் பாசி வழுக்கியதால் அங்கங்கே தேகத்தில் அடி!
அந்த வலியெல்லாம் தகர்த்து எறிவதற்கோ வந்தது இந்த அன்புப் பிடி?!!
"யாரது" எனக் கேட்க வலுவின்றிக் கொஞ்சம் மெளனித்து இருந்தேன்!

எழுப்பினால் மயக்கம் கலைந்து விலகிடுவாளோ என அஞ்சி மடிவைத்திருந்தேன்!

'வனவள்ளி கூற்று':

பசியின் களைப்பினில் பஞ்சணைத் துயிலினில் கண்ணை மூடிக்கிடந்தேன்!
"துயிலை விட்டெழுந்தால் விட்டுப்போய் விடுமோ இந்த மஞ்சம் என ஏங்கியது எனது நெஞ்சம்!

விழிக்க விருப்பமின்றி கண்ணை இறுக்கி மூடிக்கொண்டு கிடந்தேன் சில கணங்கள்!!
"பசியின் களைப்பினிலோ பாவை நீயும் களைத்தே போனாய் என்று
காதருகே வந்து தேனாய் ஒழுகி நின்று கேட்டது அந்தக் குரல்!

கொஞ்சம் விழித்தபடி அந்தக் கைகள் பிடித்தபடி அண்ணாந்து முகம் பார்த்தேன்!
கருணை பொழியும் அந்தக் கண்களினிலே பொங்கும் முகவழகில் வேர்த்தேன்!

'என்ன சொல்வதென்று ஏதும் அறியா வண்ணம் 'சுற்றும் முற்றும் அங்கு பார்த்தேன்!
'தடவிக்கொடுத்த படி தவிக்கும் வாய்க்குத் தண்ணீர் தரவோ?' எனக் கேட்டவுடன் பொங்கும் நீரென கண்ணில் நீர் வார்த்தேன்!

"அன்பை அறியா இந்தப் பேதைஉலகம் என்று எண்ணித்தானே தனியே வாழ்ந்தேன்!
காடே சுகமென்று இங்கு வந்து சேர்ந்தேன்! "அன்பால் அணைக்கின்றாயே!! யாரோ நீயென்று விழிகள் விரியக் கேட்டேன்!! ??


'மனவேடன் கூற்று' :

காடுமலை எனதரசு! நானலையும் மலைக்காடு! நாரியவள் நலிந்தங்கு மரத்தடியில் துயிலுகிறாள்!

மூடிநின்ற கண்களுக்குள் முழுமனதின் வேதனைகள் கொத்தாகப் படர்வதினால் விழியங்கு உருள்கிறது!

பொத்திவைத்த சோகமெலாம் மொத்தமாக விதிர்விதிர்த்து மூச்சுக்காற்று வழியாக முன்னெழும்பித் தவிக்கிறது!

பொங்குமுலைத் தனமெல்லாம் நெஞ்சினிலே கொண்ட துயர் தூக்கித் தூக்கிப் போடுவதால் தானாகக் குதிக்கிறது!

ஏதேதோ கனவுகளும் மனம் வதைத்துப் போடுவதால் மெல்லியலாள் மேனியெலாம் மேல்நோக்கி எழும்பிடுது!

சொல்லவொணா சோகமதை நெஞ்சினிலே தாங்கியவள் சோர்ந்தயர்ந்து தூங்கினாலும் நினைவலைகள் அவளையிங்கு தூங்கவிடச் செய்திடாத அவலத்தால் விசும்புதைக் கண்டு மனம் பொறுக்கவில்லை!

ஆதரவாய் அருகமர்ந்து அன்புடனே மடியெடுத்து மேல்துண்டை மெல விசிறி மேனியிலே துளிர்க்கின்ற வேர்வையதைத் துடைத்து விட்டேன்!

கையசைவில் காற்றுவர மேலிருந்த மரக்கிளையும் மெல்லியதோர் தென்றலதை மெதுவாக இதம்வீசி மங்கையிவள் வெப்பத்தை சற்றாகத் தணித்ததுவே!

மேகத்தை வரவழைத்து குளிரூட்டி பொழிந்திடவே மனதாலே பணித்திடவே, மெதுவான சாரலது இதமாகப் பொழிந்திடவே செவ்விதழ்கள் நனைந்ததினால் நாவெழுந்து வெளிக்கிட்டு நல்லதரம் நனைத்திருந்தாள்!

சில்லென்று பொழிகின்ற மெல்லியதோர் தூறலினால் மேனியிலே சிலிர்ப்பலைகள் சட்டென்று எழுந்துவர பட்டென்று கண்விழித்தாள்!

மேல்நோக்கி விழிதிறந்து மெல்ல அவள் பார்க்கையிலே காடுவனம் கடந்திட்ட கன்னியிவள் வள்ளியவள் கண்பார்வை எனைத் தாக்க வேலனிவன் மெய்ம்மறந்தான்!


‘வனவள்ளி கூற்று’:

புன்சிரிப்பை மட்டும் உதிர்த்து ஏதும் சொல்லவில்லை அவனும்!

'உண்ட பின்னே பெண்ணே! பேசிக்கொள்வோம் என்றான்!..

"பசி ஆற்றும் செயல் நன்மை மகிழ்ந்தேன் அதனால் நானும்

"யாரோ என்று சொன்னால் உண்பேன்" என்றேன் நானும்!

'பசி வந்தால் பெண்ணே பத்தும் பறக்கும்' என்பர்.

பசித்த பின்பும் கூட பிடிவாதம் விட மறுத்தாய்!' என்றே சொல்லிச் சிரித்தான்!.

வந்த சிரிப்பை வாயுள் அடக்கிக்கொண்டே கேட்டேன்!

'எதுவும் பறக்காதிங்கே!!...யாரோ நீங்கள்?!!' என்றேன்!.

"அன்பைத் தேடும் அன்பை நானும் நாடி வந்தேன்!

இறைவன் தந்த பந்தம் என்றே உன்னைக்கொண்டேன்!

பிரியா வரம் ஒன்றே நானும் வாங்கி வந்தேன்!

உனக்காய் வாழும் நாளில் என்னை முழுதாய்த் தருவேன்! “

என்றே சொல்லி முடித்தான்!!

ஏதோ ஏதோ எண்ணம் வந்து என்னுள் பரவ சின்ன வயதில் கேட்ட வரங்கள் சிரிப்பை எழுப்ப ‘மீண்டும் நிமிர்ந்து பார்த்தேன்!!

அங்கே என்னைத் தொலைத்தேன்! பழங்கள் ஒரு கையில் பச்சிலைகள் மறுகையில்!!

‘பசியைத் தீர்க்கும் பரிவும் நோயைத் தீர்க்கும் குணமும் கொண்ட இவனே எந்தன் உயிரின் வரமாய் உணர்ந்தேன்!

உள்ளில் பொங்கிய உணர்வினை மறைத்து, யாரிவன் என்னும் உண்மையினை அறிந்திடவே பொய்யாகக் கோபத்தை முகத்தினிலே வரவழைத்து சினந்தவனைப் பார்த்தேன்!

சினந்தவள் செய்ததென்ன?
**********************************************
[நாளை வரும்!]

Read more...

Monday, November 17, 2008

"கந்தன் கருணை" -- இரண்டாம் பாகம் - 1

"கந்தன் கருணை" -- இரண்டாம் பாகம் - 1

கந்தன் கருணை என்னும் இந்தத் தொடர் கவிதையை இதே போலவே தொடருங்க என நண்பர் ரவி சொல்லி இருந்தார்.
ஆனால், ஏதோ ஒரு உந்தலில் வேறுவிதமாக எழுத எண்ணம் வந்தது. அதைத்தான், 'புதுப்பொலிவுடன்' எனச் சொல்லியிருந்தேன்.
முருகனருள் முன்னிற்கும்.


"மனவேடன் காதல்!"

அழகிய திருத்தணி மலை! அதன் மீது முருகப்பெருமான் வலப்புறம் வள்ளியுடனும், இடப்புறம் தெய்வானையுடனும் கம்பீரமாக அமர்ந்திருந்தான்.
அடிபணிந்து தொழுது நின்றேன்.
முருகன் அன்புடன் எனைப் பார்த்து முறுவலித்தான். 'என்ன?' என்பதுபோல் கண்
சிமிட்டினான்.
"சூரனை வதைத்து அன்னை தேவசேனாவை மணந்தது வரை எழுதிவைத்தேன். வள்ளி அம்மையாரை தாங்கள் மணம் செய்த கதையைத்
தங்கள் திருவாக்கினாலே கேட்டுத் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன்" என்றேன் பணிவுடன்!
முருகன் சிரித்தான்!
"அதற்கென்ன! நானும் வள்ளியுமே சொல்கிறோம். கேட்டுக்கொள்!" என்றான்.
"முதலில் நான்தான் சொல்வேன்!" என தெய்வானை அம்மையார் முன்வந்தார்.
பழம் நழுவிப் பாலில் விழுந்ததுபோல் துள்ளிக் குதித்தேன்!
அவர்கள் சொன்ன கதையை இங்கே பதிகிறேன்.
***********************************************

'மணமகள் கூற்று':

"பரங்குன்றான் பெருங்கருணை!"

கத்திவரும் சேவலது கொத்தவரும் பாம்பையெல்லாம் கொத்திக் கொத்திப் போடுது!
சீறிவரும் வேலதுவும் சீறிவரும் கொடும்பகையை சீறிப்பாய்ஞ்சு சிதைக்குது!
பறந்துவரும் மயிலதுவும் பறந்துவரும் கணைகளையும் பறந்துபறந்து மாய்க்குது!
கூடவரும் பூதப்படை கொடியவராம் அரக்கர்களை கொன்று சாய்த்துக் குவிக்குது!
என்னவனாம் முருகப்பன் கண்ணசைவில் கடிந்துவரும் பகையெல்லாம் பனியாக விலகுது!
மன்னவனாம் கதிர்காமன் மக்களையே காத்திடவே மனமிசைந்து வருகிறான்!
மனத்துள்ளே நிலைகொண்ட மகராசன் மனத்தினிலே மகிழ்ச்சி பொங்கச் செய்கிறான்!
சினமெல்லாம் தணிந்தபின்னே தேவியென்னைக் கைப்பிடித்து எனக்கிங்கே அருள்கிறான்!

'மனவேடன் கூற்று':

சினமெல்லாம் தணிந்திடவே வந்து நின்றேன் தணிகைமலை!
வருகின்ற அடியார்க்கு கேட்டவரம் தந்தபடி நின்றேன் சிலையாகி!
தெய்வயானை துணையிருக்க தமிழமுதம் பொங்கிவர களித்தேன் சிலநாளை!
என்நிலையை, ஏகாந்தம் குலைத்திடவே நாரதனும் வந்தான் எனைநாடி!

'வள்ளிமலை என்னுமொரு காட்டினிலே மலைக்குறத்தி உனையெண்னிப் பாடுகின்றாள்!
கள்ளமிலா உள்ளத்துடன் கன்னியவள் பரண்நின்று கவண்வில்லை வீசுகிறாள்!
கந்தனவன் சொந்தமென வருவானென வேட்டுவச்சி மனம்வெதும்பி வாடுகிறாள்!
உண்ணவில்லை! உறக்கமில்லை! உன்னையெண்ணிக் காடுமலை ஏறியவள் தேடுகிறாள்!

இப்போதே நீசென்று 'எண்ணத்தை மனம் நிறைக்கும்' கன்னியவள் துயர் தீரு!
தப்பாமல் நினக்கெனவே தவமிருக்கும் தனியாளின் தாகத்தைத் தணித்துவிடு!
தணிகைமலை அமர்ந்திருக்கும் நீயெழுந்து இப்போதே தவிக்கின்ற அடியாளைச் சேர்ந்துவிடு!'
எனச்சொன்ன நாரதனைக் கனிவோடு பார்த்திருந்து, கனிமொழியாள் முகம் பார்த்தேன்!

ஏறெடுத்து எனைப்பாரா ஏந்திழையாள் இப்போது நேரெடுத்து எனைப் பார்த்தாள்!
விழிமலரில் காதலுடன் விளக்கவொண்ணா பேரெழிலாள் எனைநோக்கி இது பகர்ந்தாள்!
"எல்லாம் அறிந்திருந்தும் எனைநோக்கிப் பார்க்கின்ற மர்மத்தை என்ன சொல்வேன்!
அங்கே தவமிருக்கும் மங்கைநல்லாள் என்னவளின் தங்கையென அறியாத கள்வனோ நீ!

யாமிருவர் நினைவேண்டி தவமிருந்த அன்றொருநாள் எமக்களித்த வரமின்று மறந்தனையோ!
தட்டாமல் இப்போதே தேவரீர் நீர் சென்று தங்கையினைக் கூட்டிவருக!
ஞானத்தின் வடிவழகாய் நாயகியாள் நானிருக்க, இச்சைக்கு வள்ளியென விதித்தவரே!
மோனத்தை வேலாக்கி ஆணவத்தை மயிலாக்கி அன்பரசு செய்கின்ற மன்னவரே!
' என்றாள்!

தனிவேலைத் தங்கவிட்டு, தங்கமகள் தெய்வானை தன்னிடத்தில் விடைபெற்று எழுந்தேன் நான்!
வனவேடன் வேடமிட்டு வனத்தினிடை செல்லுதலே நலமென்று நினைத்தந்த வேடம்பூண்டேன்!
காதல்மனம் கடிந்தேக, தாபமிங்கு பெருக்கோட தனிவேடனாய்த் தனியாளாய் நடந்தேன்!

காதலனைக் காணாமல் கனிமொழியாள் வருந்துகின்ற காட்சியினிக் காண்போம்!

அங்கே!....
*****************
[நாளை வரும்!]

Read more...

Thursday, November 13, 2008

"கந்தன் கருணை" [கவிதைத் தொடர்] -- 4

"கந்தன் கருணை" [கவிதைத் தொடர்] -- 4
[ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்]

காலையில் எழுந்ததும் சேவலின் கூவலைநான் கேட்டேன்
சோலையில் கூவிடும் இன்னிசைக் குயிலொலிநான் கேட்டேன்
என் முருகன் இவனே இவனே எனச் சூடிடும் உரு பார்த்தேன்
என் குமரன் அழகன் இவனே எனப் பாடல்கள் புனைந்திருந்தேன்


கடும்போர் செய்தான் கொடுஞ்சூரன்
கணைகளை அனுப்பித் தாக்கிட்டான்
கடைக்கண் பார்வை பட்டதுமே
கணைகளும் பொடியாய்ப் போனதம்மா

சூரன் வியந்தான் பயந்தான்
வானத்தில் ஏகி மறைந்தான் [காலையில்]

விண்வெளி சென்றிட்ட சூரபத்மன்
மேகத்தில் நின்று கணை தொடுத்தான்
பார்த்திட்ட முருகன் முறுவல் செய்தான்
வேலினை எடுத்து விண் விட்டான்

சூரனைத் தேடிய சூர்வேலும்
மேகத்தைக் கிழித்துச் சென்றதங்கே [காலையில்]

வான்வழி மறைத்த கூர்வேலின்
போரினைத் தாங்கிட முடியாமல்
இத்தரை மீதினில் சூர் வந்தான்
கடலுக்கு அடியில் ஒளிந்து கொண்டான்

தனிவேல் அவனைத் துரத்தியது
கடலினை வற்றிடச் செய்ததுவே [காலையில்]

தேரினை இழந்த சூரரக்கன்
ஆயுதமின்றி நின்றிடவே
அவனைக் கொல்லுதல் பாவமென்று
நாளை வந்திட அருள் செய்தான்

கந்தன் கருணையின் வடிவம்
அவன் என்னுடை குலத்தின் தெய்வம் [காலையில்]

கொடுஞ்சூர் அரசன் தலைகவிழ்ந்தான்
தனிமரமாகத் திரும்பிச் சென்றான்
வாளால் அறுத்தவன் மனத்தையங்கு
வாளாய் அறுத்தது தீவினையும்

அறஞ்செயின் முருகன் அருள்பெறலாம்
மறஞ்செயின் அவனே அழித்திடுவான் [காலையில்]

வேதனை தன்னைத் தாக்கிடவே
போனதும் கண்முன் ஆடிடவே
உறக்கம் இழந்தான் சூரசுரன்
மறுநாள் போருக்குத் தயாரானான்

அணையும் விளக்காய் அவன்வந்தான்
அணைக்கும் கரமாய் அழகன் நின்றான் [காலையில்]

எதிர்வந்த கணையெல்லாம் துகளாக
இளையவன் வியக்கும் போர்புரிந்தான்
இதுவரை ஆடிய ஆட்டத்தினை
விரைவாய் முடித்திட அருள்கொண்டான்

வேலை எடுத்தான் வேல்முருகன்
சூரன்மேல் விட்டான் சுந்தரனே [காலையில்]

காற்றெனப் பறந்தது கூர்வேலும்
மாற்றிதற்கில்லை எனும் படியாய்
கூற்றுவன் கணக்கையும் முடித்திடவே
கூர்வேல் சீறிப்பாய்ந்ததுவே

மரமாய்ச் சூரன் மாறிநின்றான்
மாமரம் துளைத்தது கூர்வேலும் [காலையில்]

இருபுறம் மரமும் பிளந்திடவே
சூரன் விழுந்தான் நிலத்தினிலே
சேவலும் மயிலுமாய்த் தானெழுந்தான்
வேலவன் சேவடி வந்தடைந்தான்

அழித்தல் இங்கே நடக்கவில்லை
ஒன்றே இரண்டாய் ஆனதுவே! [காலையில்]

சேவலைக் கொடியாய்த் தான்கொண்டான்
மயிலை வாகனம் ஆக்கிநின்றான்
வானவர் பூமழை பொழிந்தனரே
கொடுஞ்சூர் அழிந்ததில் மகிழ்ந்தனரே

வேல்வேல் வேல்வேல் வேல்வேல்
எனும் முழக்கம் விண்ணைப் பிளந்ததுவே [காலையில்]

தேவரை விடுதலை செய்தானே
தேவேந்திரனும் மனம் மகிழ்ந்தானே
அழகனை அரசனாய் முடிசூட
இந்திரன் பணிந்தே நின்றானே

அரசன் இவனே இவனே- இவன்
இந்திரனை அரசாக்கினானே [காலையில்]

நன்றிக்கடனைச் சொல்லிடவே
இந்திரன் தன்மகள் தந்தானே
தாயும் தந்தையும் அருள்வழங்க
பரங்குன்றில் திருமணம் கொண்டானே

தெய்வானை என்னும் திருமகளை
முருகன் துணையாய்க் கொண்டானே [காலையில்]

காலையில் எழுந்ததும் சேவலின் கூவலைநான் கேட்டேன்
சோலையில் கூவிடும் இன்னிசைக் குயிலொலிநான் கேட்டேன்
என் முருகன் இவனே இவனே எனச் சூடிடும் உரு பார்த்தேன்
என் குமரன் அழகன் இவனே எனப் பாடல்கள் புனைந்திருந்தேன்!
**********************************************************
[இத்துடன் "கந்தன் கருணை" முதல் பாகம் நிறைவடைந்தது. புதுப் பொலிவுடன், வித்தியாசமான நடையில், இரண்டாம் பாகம் திங்கள் முதல் தொடரும்! இதனை எழுத எனக்கு ஊக்கம் அளித்த என் துணைவிக்கு இந்த நேரத்தில் என் அன்பு கலந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்! முருகனருள் முன்னிற்கும்!]

Read more...

Wednesday, November 12, 2008

"கந்தன் கருணை" [கவிதைத் தொடர்] - 3

"கந்தன் கருணை" [கவிதைத் தொடர்] - 3
[ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்]




காலையில் எழுந்ததும் சேவலின் கூவலைநான் கேட்டேன்
சோலையில் கூவிடும் இன்னிசைக் குயிலொலிநான் கேட்டேன்
என் முருகன் இவனே இவனே எனச் சூடிடும் உரு பார்த்தேன்
என் குமரன் அழகன் இவனே எனப் பாடல்கள் புனைந்திருந்தேன்

தம்பிகள் இருவரும் அழிந்ததினால்
தமையனும் கோபம் மிகக் கொண்டான்
தானே போருக்குச் சென்றிடவே
சூரனும் வாளை எடுத்துவிட்டான்

அருமைமகனும் அருகில் வந்தான்
தன்னை அனுப்பிடக் கேட்டுக்கொண்டான் [காலையில்]

தனயன் இருக்கையில் தந்தை செல்லல்
முறையல்லவெனவே பணிந்துநின்றான்
சிறுவனை அழித்திடச் சிங்கமிங்கு
செல்வது தவறென வாது செய்தான்

மதிகெட்ட அரக்கன் மனமகிழ்ந்தான்
மகனை வாழ்த்தி அனுப்பிவைத்தான் [காலையில்]

மாயப்போரினில் வல்லவனாம்
பானுகோபனும் தேரேறி
போர்க்களம் வந்து நின்றிருந்தான்
அரக்கர்படையும் மகிழ்ந்ததுவே

தன்னைப் போருக்கு அனுப்பவென
வீரவாகுவும் வேண்டிநின்றான் [காலையில்]

அனைத்தும் அறியும் எழில்முருகன்
'அப்படியே!' என அனுமதித்தான்
தினவுடைத் தோளன் வீரவாகுவும்
பூதப் படைகளுடன் எழும்பிவந்தார்

கொடியதோர் போரினில் பானுகோபன்
வாகுவை வாளால் வீழ்த்திவிட்டான் [காலையில்]

தலைவனை இழந்த பூதங்களும்
செய்வது அறியா நிலையடைந்து
தாறுமாறாகச் சிதறியதுவே
அரக்கர்படைகளும் மகிழ்ந்தனவே

கந்தன் கண்மலர் திறந்தான்
பூதகணங்களும் உயிர்பெற்றார் [காலையில்]

மறைந்தே தாக்கும் கொடுமரக்கன்
பானுகோபனை அழித்திடவே
மீண்டும் வீரவாகு எழுந்துநின்றார்
முருகனின் அருளால் கதை முடித்தார்

அரக்கர் கூட்டம் அயர்ந்ததுவே
வருத்தம் மிகுந்தே சென்றதுவே [காலையில்]

உற்றமும் சுற்றமும் அழிந்ததினால்
உறவும் அற்றுப் போனதினால்
செய்வது எதுவென திகைத்திருந்தான்
சூரனும் மயங்கித் தத்தளித்தான்

வந்தது சிறுவன் அல்லன்
எனும் தெளிவினை சூரன் பெற்றான் [காலையில்]

அழகிய மனையாள் அழுதுற்றாள்
கணவனைக் காத்திட முறையிட்டாள்
வேலனைப் பணிதல் நலமென்றாள்
மாங்கல்யம் காத்திட வேண்டிநின்றாள்

மனைவியைக் கருணையாய்ப் பார்த்தான்
அவள் கரங்களைப் பற்றி உரைத்திட்டான் [காலையில்]

எவரும் இல்லா ராச்சியத்தை
எவர்க்கென நானும் ஆளுவது
அனைவரும் இருக்கும் பொழுதினிலே
இதைச் சொல்ல ஏனுன்னால் முடியவில்லை

வீரனின் மரணம் வீரன்கையில்
அதை விடுவது முறையல்ல எனச் சொன்னான் [காலையில்]

போர்க்களம் ஏறி சூரன்வந்தான்
புதுபலம் கொண்டது அரக்கர்சேனை
“யாரடா என்னை எதிர்ப்பதிங்கு?”
இடியினைப்போலே முழங்கிட்டான்

வந்தான் முருகன் அவனெதிரே
கண்கள் கூசிடும் பேரொளியாய் [காலையில்]

கண்டவர் வியக்கும் எழில்தோற்றம்
அவன் கருணைக்கடலின் அவதாரம்
கையினில் வேலினைத் தாங்கி நின்றான்
கனியிதழ் புன்னகை பூத்துநின்றான்

என் முருகன் இவனே இவனே
என் தலைவனும் இவனே இவனே [காலையில்]


***************************************************
[தொடரும்]

Read more...

Monday, November 10, 2008

"கந்தன் கருணை" - 2

"கந்தன் கருணை" [கவிதைத் தொடர்] - 2
[ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்]


காலையில் எழுந்ததும் சேவலின் கூவலைநான் கேட்டேன்
சோலையில் கூவிடும் இன்னிசைக் குயிலொலிநான் கேட்டேன்
என் முருகன் இவனே இவனே எனச் சூடிடும் உரு பார்த்தேன்
என் குமரன் அழகன் இவனே எனப் பாடல்கள் புனைந்திருந்தேன்


அரக்கன் சூரனை அழித்திடவே
அன்னையும் தந்தாள் சக்திவேலை
நவவீரர் துணையுடன் புறப்பட்டான்
தென்திசை நோக்கி அவன் சென்றான்

வேலைப் பணிவாய் மனமே- உன்
வினைகள் தீர்ந்திடும் நிஜமே [காலையில்]

செந்தூர்க் கரையில் அவன் நின்றான்
அலைகடல் அதிரவே ஆர்ப்பரித்தான்
வீரவாகுவைத் தூது விட்டான்
வன்முறை தவிர்த்திடக் கெடு வைத்தான்

அழிபவன் எதையும் கேட்பதில்லை
அழிவதும் விதிவசம் நிகழ்வதுவே [காலையில்]

தூதனைச் சூரனும் அவமதித்தான்
முருகனைச் சிறுபிள்ளை என்றிகழ்ந்தான்
போருக்கு வரச் சொல்லி மதியிழந்தான்
அழிவைத் தானே தேடிக் கொண்டான்

இறைவன் முருகன் முறுவல் செய்தான்
கடலினைக் கடந்து ஈழம் வந்தான் [காலையில்]

தாரகன் என்னும் ஒரு தம்பி
சூரனின் சொல்லால் மதியிழந்து
மலையென எதிரில் மறைத்திருந்தான்
மாயக் குகையாய் தடுத்து நின்றான்

உட்சென்ற வீரர்கள் மயங்கி நின்றார்
வெளிவர வழியின்றி கலங்கி நின்றார் [காலையில்]

நிலைமை அறிந்த கந்தவேளும்
வேலினை அனுப்பிட முடிவெடுத்தான்
கூர்வேல் மலையைக் கிழித்ததுவே
மலையெலாம் பொடிப்பொடி ஆனதுவே

தாரகன் அழிந்தான் அழிந்தான்
வீரர்கள் மயக்கம் தெளிந்தார் [காலையில்]

தாரகன் அழிந்த சேதிகேட்டு
தமையன் துடித்தான் ஆத்திரத்தால்
சிங்கமுகாசுரன் எனும் தம்பி
தானே போரிடப் புறப்பட்டான்

தானென்னும் ஆணவம் கொண்டவனும்
தன்கதை முடித்திடப் புறப்பட்டான் [காலையில்]

தலைகள் கீழே விழ விழவே
வேறோர் தலைகள் முளைத்திடவே
வரமதைப் பெற்றிட்ட சிங்கமுகன்
தருக்கினால் கந்தனின் எதிர்வந்தான்

வேலுக்கு முன்னெவர் வரமுமிங்கு
நில்லாதெனவறியா மூடன் [காலையில்]

ஆயிரம் தலைகளை வெட்டியின்னும்
அசையாதிவனும் நிற்கையிலே
பூதப்படைகள் பயந்தோடி
நாலாபுறமாய்ச் சிதறியதே

முருகன் சிரித்தான் சினந்தான்
வேலினை விடுத்தொரு மூச்சு விட்டான் [காலையில்]

சீறிப் பாய்ந்தது வேலங்கு
சிங்கமுகன் மார் துளைத்ததுவே
சிரத்தைக் கொய்து வேலவனின்
காலடியில் கொண்டு சேர்த்ததுவே

அரக்கனும் மடிந்தான் அழிந்திட்டான்
பூதப் படைகளும் எழுந்தனவே! [காலையில்]

*********************************

[கந்தன் கருணை தொடரும்!]

Read more...

Sunday, November 09, 2008

"கந்தன் கருணை" - 1

"கந்தன் கருணை" -1
['ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்']

கந்த சஷ்டியின் போது போடலாம் என எழுதத்தொடங்கினேன்,..... 'கந்தன் கருணை' என்ற தலைப்பில், கந்தன் பிறப்பு, அவனது லீலைகள், சூரனை அழித்தது, தெய்வானை, வள்ளி திருமண நிகழ்வுகளை வைத்து. ஒரு சில காரணங்களினால், அதை முடிக்க முடியாமல் போனது. இப்போது எழுதி முடித்தபடியால், அதனை இங்கு பதிகிறேன். படித்துவிட்டுச் சொல்லுங்கள். நன்றி. முருகனருள் முன்னிற்கும்.

*********************************************

காலையில் எழுந்ததும் சேவலின் கூவலைநான் கேட்டேன்
சோலையில் கூவிடும் இன்னிசைக் குயிலொலிநான் கேட்டேன்
என் முருகன் இவனே இவனே எனச் சூடிடும் உரு பார்த்தேன்
என் குமரன் அழகன் இவனே எனப் பாடல்கள் புனைந்திருந்தேன்


கந்தன் கருணையைப் பாடிடவே
கணபதி தாளினை நான் பிடித்தேன்
தடைகளைத் தாண்டி கருணைவெள்ளம்
மடைதிறந்திங்கே பாய்ந்திடுமே

கணபதி தருவான் அருள்வான்
எம்வாழ்வில் இனிமை சேர்ப்பான் [காலையில்]

சூரன் என்னுமோர் கொடுமரக்கன்
தேவரைச் சிறையினில் வதைசெய்தான்
துயரினை நீக்கிக் காத்திடவே
தேவரும் சிவனை வேண்டிநின்றார்

விமலன் அருளிட நினைந்தார்
விழிமலர் திறந்து அருள்செய்தார் [காலையில்]

நடனம் ஆடிடும் சிவனினின்று
எழுந்தன தீப்பொறி மூவிரண்டு
சீறியே பாய்ந்தன கண்ணினின்று
சேர்ந்தன கங்கையின் கரை புரண்டு

என் முருகன் புகழைப் பாடிடுவேன்
அது ஒன்றே என்செயல் என்றறிந்தேன் [காலையில்]

தீப்பொறி வெப்பம் தாளாது
கங்கையும் வறண்டனள் சோர்ந்திருந்து
சரவணப் பொய்கையில் விட்டனளே
கமலங்கள் ஆறும் மலர்ந்தனவே

என் முருகன் பிறந்தான் பிறந்தான்
என் வாழ்வு சிறந்திட மலர்ந்தான் [காலையில்]

கார்த்திகைப் பெண்டிர் மார்பினிலே
கனியமுதம் அவன் சுவைத்திருந்தான்
அன்னை உமையாள் சேர்த்தணைக்க
ஆறுமுகனாய்ப் பொலிந்திருந்தான்

தன் வண்ணம் காட்டியே சிரித்திருந்தான்
என் எண்ணம் யாவினும் அவன் நிறைந்தான் [காலையில்]

நாரதர் மாங்கனி கொணர்ந்துவர
சிவனதை வென்றிட ஏவிவிட
உலகைச் சுற்றிட மயில் மீது
வலம்வரச் சென்றான் என் முருகன்

கணபதி தாய்தந்தை வலம் வந்து
கனியினைப் பெற்றே சுவைத்திருந்தான் [காலையில்]

வலம்வந்த முருகன் திரும்பிவர
கனியதை அண்ணனிடம் கண்டுவிட
கோபம் கொண்டான் என் முருகன்
ஆண்டியாய் நின்றான் பழநியிலே

அகிலத்திற் கோருண்மை உரைத்துவிட
பாலகன் செய்திட்ட விந்தையிது [காலையில்]

தன்னை மதியா பிரமனிடம்
ஓமெனும் மந்திரப் பொருள்கேட்க
விழித்திட்ட அயனைச் சிறையிலிட்டான்
படைப்புத் தொழிலைக் கையெடுத்தான்

தன்னிகரில்லாத் தலைவனிவன்
என்னவன் புகழை என் சொல்வேன் [காலையில்]

பிரமனைச் சிறைவிட வேண்டிநின்ற
சிவனுக்குப் பொருளை உரைத்திட்டான்
பிரணவத்தின் பொருளைச் சொல்லியதால்
தகப்பன்சாமியாய்ப் பெயர்பெற்றான்

கற்றதன் பொருளை உணர்ந்துகொள்ள
என்னவன் செய்திட்ட லீலையிது [காலையில்]



**********************

[தொடரும்]

Read more...

Wednesday, November 05, 2008

அட! என்னப்பா தேர்தல் இது... உப்புசப்பில்லாம!

அட! என்னப்பா தேர்தல் இது... உப்புசப்பில்லாம!




உலகையே உற்றுப் பார்க்கவைத்த அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்து முடிந்துவிட்டது!

இந்தியா போன்ற நாடுகளில் இருந்து வந்தவர்க்கெல்லாம் ஒரு அதிர்ச்சி தரும் தேர்தல்!

இப்படியா ஒரு தேர்தல் நடத்துவது?

கட்சி ஊர்வலங்கள் இல்லை!
சைக்கிள் பேரணி இல்லை!
ஆட்டோவில் ஒலிபெருக்கி அலற வீதி வீதியாக முழக்கங்கள் இல்லை!
சுவரெங்கும் விளம்பரங்களும், சுவரொட்டிகளும் இல்லை!
தெருவடைத்து பந்தல் போட்டு, வயதானவர், நோயாளிகள், படிக்கும் மாணவர்கள் இவர்கள் பற்றிய கவலையே இல்லாமல், டப்பா குத்துப் பாடல்கள் காதை கிழிக்க, அதைத் தொடர்ந்து பேச்சாளர்களின் நாராசப் பேச்சுகள் இல்லை!
கூட்டணி பேரங்கள் இல்லை!
இலவச வாக்குறுதிகள் இல்லை!
பிரியாணி பொட்டல விநியோகம் இல்லை!
நள்ளிரவில் வீடு வீடாக பணம், குத்துவிளக்கு, பிளாஸ்டிக் குடம், வேட்டி, சட்டை, புடவை லஞ்சம் இல்லை!
ஓசி சாராயம் தண்ணீராக ஓடவில்லை!
வெட்டுக்குத்து இல்லை!

அட, இதெல்லாம் கூட பரவாயில்லை!

வாக்கெடுப்பு நாளன்று, ........,
ஆட்டோ, கார் என வீட்டுக்கு வந்து வாக்குச் சாவடிக்குக் கூட்டிச் செல்லவில்லை.
வாக்குச்சாவடி கைப்பற்றல், சாவடிக்குள் புகுந்து மிரட்டுதல், சைக்கிள் செயின், சோடாபுட்டி, கல்லெறி இல்லை!
போலீஸ் தடியடி இல்லை!
வாக்குப்பதிவு நாளன்று விடுமுறை இல்லை!

சரி, அதுதான் போகட்டும்!........,

வாக்குப்பதிவு முடிந்த அடுத்த நான்கு மணி நேரத்தில், முடிவுகள் அறிவிக்கப் படுகின்றன!
தோற்றவர் வென்றவரை தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவிக்கிறார்.
பின்னர் பொதுமேடையில், நான் தோற்றுவிட்டேன்! வென்றவருக்கு என் வாழ்த்துகள்! இனி அனைவரும் ஒன்றாக நாட்டு நலனைப் பற்றி சிந்திப்போம்! என அறிவிக்கிறார்!
வென்றவரும் தோற்றவரின் திறமைகளைப் பட்டியலிட்டு, அனைவர்க்கும் நன்றி தெரிவித்து மனைவியை முத்தமிடுகிறார்.

மறுநாள்.........,

அலுவல் வழக்கம்போல் இயங்குகிறது!
விலகும் அதிபர் வரப்போகும் மாற்றத்திற்கு அனைத்து ஒத்துழைப்பும் தருவதாக வாக்களித்துப் பாராட்டுகிறார்!
வீதிகளில் ஒரு மகத்தான சரித்திர நிகழ்வு நடந்ததற்கான அறிகுறிகளே இல்லாமல், நாடு வழக்கம்போல் இயங்குகிறது!
வென்ற கட்சியின் தொண்டர்கள் கடை கடையாய் ஏறி, 'இனி எங்க ஆட்சிதான்! நம்மளை நல்லா கவனிக்கணும் இனிமே!' என அச்சுறுத்தவில்லை!

அட! என்னப்பா தேர்தல் இது... உப்புசப்பில்லாம!

என்னய்யா நடக்குது இங்கே!

நம்ம ஊருக்கு வந்த நாம நடத்துற தேர்தலெல்லாம் பார்த்ததில்லியா இவங்க!
அதான், அவரவரும் துணிச்சலா கிண்டல் பண்றாங்க!

அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒபாமாவுக்கு வாழ்த்துகள்!
வாழ்க அமெரிக்க ஜனநாயகம்!

Read more...

Friday, October 31, 2008

"கலைஞருக்கு இன்னுமொரு கடிதம்!"

"கலைஞருக்கு இன்னுமொரு கடிதம்!"


அன்புள்ள கலைஞர் அவர்களே!
வணக்கம்.

இரு வாரங்களுக்கு முன் நீங்கள் காட்டிய எழுச்சியைப் பார்த்து, 'ஆஹா! ஈழத்தமிழர் விடிவு இப்படித்தான் வர வேண்டியிருக்கிறதே!'
என மகிழ்ந்தவர்களில் நானும் ஒருவன்!

நீங்கள் முன்வைத்த கோரிக்கைகளும், அதற்கு விதித்த கெடுவும், அதைக் கண்டு தமிழகமே தங்கள் பின் அணிவகுத்து மனிதச் சங்கிலியாய்த் திரண்டதும் நீங்கள் ஒரு செயல்வீரர் தான் என என்னை எண்ண வைத்தது.

நீங்கள் விதித்த கெடு முடியும்வரை இதை ஒரு பார்வையாளனாக மட்டுமே கவனிக்கலாம் என இருந்தேன்.

ஆனால், இன்று........!!??!!

நடந்ததெல்லாமே ஒரு நாடகம்தான் என எண்ண வைக்கிறது!

ராஜிநாமாக் கடிதங்கள் போன இடம் தெரியவில்லை!

போர் நிறுத்தம் நடந்ததாகத் தெரியவில்லை!

ராணுவத் தாக்குதல்கள் தொடருகின்றன.

நேற்று கூட ஒரு பள்ளிக்கூடத்தின் மீது குண்டு வீசப்பட்டு அப்பாவி மாணவன் ஒருவன் உயிரிழந்ததாகவும், பலர் காயமுற்றதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சமரசப் பேச்சு வார்த்தைக்கான முயற்சிகள் தொடங்கப் பட்டதற்கான அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை.

நீங்கள் ஒன்றும் நடக்காதது போல நிவாரண நிதித் திரட்ட தீவிரமாக முனைந்து விட்டீர்கள்!

இதுவா ஈழ மக்கள் உங்களிடம் எதிர்பார்த்தது?

நீங்கள் உணவுப் பண்டங்கள் அனுப்ப வேண்டும் என்பதா அவர்களின் எதிர்பார்ப்பு,... நம்பிக்கை?

இதற்காகவா இத்தனை நாள் நீங்கள் காத்திருந்தீர்கள்?

அங்கு ஆட்சி போனால், அடுத்த நொடியே இங்கும் ஆட்சி போகும் என்பது எனக்குத் தெரியும்.

முதல் அறிக்கை விடும்போது உங்களுக்கும் தெரியாமல் போயிருக்க வாய்ப்பில்லை.

இருந்தாலும், ...அல்லல் படும் மக்களின் அவலத்தை நிறுத்த உங்கள் செல்வாக்கு உதவும் என மிகுந்த ஆவலுடன் நம்பினேன்.

ஏமாற்றி விட்டீர்கள்!

என்னை மட்டுமல்ல!

ஒட்டு மொத்தத் தமிழினத்தையே!

இதெல்லாம் நாடகம் எனக் கூவிக் கொண்டிருந்தவர்களின் கூற்றை உண்மையாக்கி விட்டீர்கள் என வருத்தத்துடன் சொல்லிக்
கொள்கிறேன்!

இப்போது கூட இன்னமும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

அடுத்த முறை போட்டி இடுவேனோ எனத் தெரியாது! எனச் சொல்லி முதல்வர் ஆனவர் நீங்கள்!

உங்கள் கூற்றை மதித்து, உங்களுக்கு ஓட்டு போட்டு உங்களை அங்கு அமரவைத்து அழகு பார்த்தவர்கள் நம் தமிழர்கள்!

அவர்கள் அனைவரின் ஒட்டு மொத்த கவனமும் [ஒரு சிலரைத் தவிர்த்து!!] ஈழத்தமிழர்களின் விடியலை நோக்கியே இருக்கிறது என்பதே உண்மை!

'மறப்போம்! மன்னிப்போம்!' எனச் சொல்லும் அண்ணா வழியில் அயராது பாடுபட்டு வரும் நீங்கள் ஒரு முடிவு எடுக்க வேண்டிய கால கட்டம் இன்று!

இலங்கை அதிபர் கூட உங்களை அழைக்கப் போவதாகச் சொல்லி இருக்கிறார்.

ஈழத் தமிழரும் கூட, நீங்கள் நல்ல முடிவு கொடுப்பீர்கள் என நம்புகின்றனர்!

உணமை நிலவரத்தை அறிய நீங்கள் ஈழம் செல்ல வேண்டும்.

இரு தரப்பினரோடும் பேச்சு வார்த்தை நடத்தி, ஒரு சுமுகமான முடிவை உங்களால் பெற்றுத் தர முடியும் என நிச்சயமாக நான் நம்புகிறேன்!

இந்த நேரத்தில், ஒரு வரலாற்று உண்மையையும் உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்!

சிங்கப்பூர் என்ற நாடு முதலில் மலேசிய நாட்டுடன் இணைந்து, அதன் தனித்தன்மை தங்கள் நலனுக்கு ஊறு விளைக்கும் என பெருவாரியான மலேசிய மக்கள் நினைத்ததால், பாராளுமன்றம் ஏகமனதாக வாக்களித்து, சிங்கப்பூரை தனி நாடாக சுதந்திரம் கொடுத்து அனுப்பி வைத்தார்களாம்.

இன்று அந்த இரு நாடுகளும் ஒருவர்க்கொருவர் இணக்கமாகவே இருந்து வருகின்றன!

இந்த அமைப்புதான் இன்றிருக்கும் நிலையில் சிங்களவர்க்கும், ஈழத் தமிழர்க்கும் நன்மை பயக்கும் செயல் முடிவாக இருக்கக்
கூடும் என நான் எண்ணுகிறேன்.

இதையும் மனதில் கொண்டு இந்த பிரச்சினையை அணுகினால் நலமாயிருக்கும்.

உங்களுக்கு ஆலோசனை சொல்லும் அளவுக்கு எனக்கு வயதோ, அனுபவமோ கிடையாது என்றாலும், மனதில் தோன்றுவதை
துணிவுடன் சொல்லிவிட எண்ணியே, இதைச் சொல்கிறேன்.

ஆனால், உங்களால் முடியும்!

'உன்னால் முடியும் தம்பி!' என அண்ணா அன்று தங்களைப் பார்த்துச் சொன்ன சொல் இதற்காகத்தான் என நம்பி இதில் முழுமனதுடன், முழு மூச்சுடன் ஈடுபட்டு நல்முடிவு தாருங்கள் என வேண்டிக் கேட்டுக்
கொள்கிறேன்!

'நேருவின் மகளே வருக! நிலையான ஆட்சி தருக!'
என அழைப்பு விடுத்தவர் நீங்கள்!

உங்களைப் பார்த்துக் கேட்கிறேன்!

'தமிழர் தலைவா வருக! தமிழீழம் பெற்றுத் தருக!'

நடப்பது நடக்கும்!
நல்லதே நடக்கும்!

எனது அடுத்த கடிதம் தங்களைப் பாராட்டும் கடிதமாக இருக்க எல்லாம் வல்ல என் முருகனை வேண்டுகிறேன்!
நன்றி! வணக்கம்!

Read more...

Thursday, October 23, 2008

"தமிழச் சாதி" -- "பாரதி சில காட்சிகள்" - 4

"தமிழச் சாதி" -- "பாரதி சில காட்சிகள்" - 4

முந்தையப் பதிவு

'பின்னொரு சார்பினர் வைதிகப் பெயரொடு

நமது மூதாதையர் [நாற்பதிற்றாண்டின்]

முன்னிருந்தவரோ? முந்நூற்றாண்டிற்கு

அப்பால் வாழ்ந்தவர் கொல்லோ? ஆயிரம்

ஆண்டின் முன்னவரோ? ஐயாயிரமோ?

பவுத்தரே நாடெலாம் பல்கிய காலத்

தவரோ? புராணம் ஆக்கிய காலமோ?

சைவரோ? வைணவ சமயத்தாரோ?

இந்திரன்தானே தனி முதற் கடவுள்

என்று நம் முன்னோர் ஏத்திய வைதிகக்

காலத்தவரோ? கருத்திலாதவர்தாம்

எமது மூதாதையர் நயமுறக் காட்டிய

ஒழுக்கமும் நடையும் கிரியையும் கொள்கையும்

ஆங்கவர் காட்டிய அவ்வப்படியே

தழுவிடின் வாழ்வு தமிழர்க்குண்டு;

எனில் அது தழுவல் இயன்றிடா வண்ணம்

கலி தடை புரிவன். கலியின் வலியை

வெல்லல் ஆகாது என விளம்புகின்றனரால்,

நாசங் கூறும் 'நாட்டு வயித்தியர்'

இவராம்.'



இன்னொரு சாராரோ, தம்முடைய பண்டைப் பெருமையை

பலவாறும் விரித்துக் கூறி, அதுவே சிறந்தது எனவும் சொல்லி,

ஆயின், அது’ நீயெல்லாம் அடைய இயலாத ஒன்று’ எனக் கலியைக்

காரணமாகக் காட்டி நம் நம்பிக்கையைக் குலைப்பார்.

ஒரு சாரார் சீமை மருத்துவர்போல் வந்து 'ம்ஹூம்' என உதட்டைப்

பிதுக்கிச் சென்றால், இன்னொரு சாராரோ, நாட்டுவைத்தியர் போல

நாடி பிடித்து, 'தேறாது' எனச் சொல்லி நோயை அதிகமாக்குவார்

என்கிறான் பாரதி!

நமக்குத் தெரியாத நாகரிகத்தைச் சொல்பவரை சீமை மருத்துவர் எனச் சொன்ன பாரதி, நமக்கெல்லாம் ஓரளவு தெரிந்த ஒன்றையும் நம்மை அடையவிடாமல் செய்யும் இவரை நாட்டு வயித்தியர் எனச் சொல்லி கோபப்படுகிறான்!


'இங்கு இவ்விருதலைக் கொள்ளியின்

இடையே நம்மவர் எப்படி உய்வர்?'


எனக் கோபத்துடன் கேட்கிறான் விதியை நோக்கி!

'விதியே! விதியே! தமிழச் சாதியை

என் செயக் கருதி இருக்கின்றாயடா?
'

அனுதாபத்துடன் பாரதியைப் பார்த்து விதி சொல்கிறது!

'விதி:

மேலே நீ கூறிய விநாசப் புலவரை

நம்மவர் இகழ்ந்து நன்மையும் அறிவும்

எத்திசைத்தெனினும் யாவரே காட்டினும்

மற்றவை தழுவி வாழ்வீராயின்,

அச்சமொன்று இல்லை!'


நீ பார்க்க வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்!

இந்த தலைவர்கள் சொல்வதையெல்லாம்

அப்படியே ஏற்றுக் கொண்டுவிடாமல்,,

எது உனக்கு நன்மை என்பதை அறிவோடு சிந்தித்து

அது எவர் சொன்னதாக இருந்தாலும் அதனைக் கொண்டு

வாழ்வீராயின், தமிழச் சாதிக்கு அச்சம் என்பதே இல்லை!

தன்னை நம்பும் தைரியம் இருந்தால்

நாளென்ன பொழுதென்ன?

எனச் சொல்லி விதி தன் வழியே சென்றது!

இன்றைக்கும் பொருந்தக்கூடிய கருத்துகளைச் சொல்லும்

இந்தப் பாடல் வரிகளை நன்குணர்ந்து செயல் புரிந்தால்

நம் தமிழர் உயர்வர்!

இப்போது பாரதி இந்தக் கவிதை எழுதும் முன் சொன்ன வரிகளுடன் இதனை நிறைவு செய்கிறேன்!

"தமிழ்மொழி வாழ்த்து!"

வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி

வாழிய வாழியவே!

வான மளந்த தனைத்தும் அளந்திடும்

வண்மொழி வாழியவே!

ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி

இசைகொண்டு வாழியவே!

எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி

என்றென்றும் வாழியவே!

சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்

துலங்குக வையகமே!

தொல்லை வினைதரு தொல்லை யகன்று

சுடர்க தமிழ்நாடே!

வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி!

வாழ்க தமிழ்மொழி யே!

********************************

[நல்லதே நடக்கும்!]

Read more...

Wednesday, October 22, 2008

"தமிழச்சாதி" - "பாரதி- சில காட்சிகள்" -- 3

"தமிழச்சாதி" - "பாரதி- சில காட்சிகள்" -- 3

முந்தையப்பதிவு

'நால்வகைக் குலத்தார் நண்ணும் ஓர் சாதியில்

அறிவுத் தலைமை ஆற்றிடும் தலைவர்—

மற்றிவர் வகுப்பதே சாத்திரமாகும்--

இவர்தாம்.

உடலும் உள்ளமும் தம் வசம் இலராய்

நெறி பிழைத்து இகழ்வுறு நிலைமையில் வீழினும்

பெரிதிலை; பின்னும் மருந்து இதற்குண்டு;

செய்கையும் சீலமும் குன்றிய பின்னரும்

உய்வகைக்கு உரிய வழி சில உளவாம்,

மற்றிவர்.

சாத்திரம்--[அதாவது, மதியிலே தழுவிய

கொள்கை, கருத்து, குளிர்ந்திடு நோக்கம்]--

ஈங்கிதில் கலக்கம் எய்திடுமாயின்

மற்றதன் பின்னர் மருந்து ஒன்று இல்லை
.'


எல்லாச் செயல்களுக்கும் ஒரு பரிகாரம் உண்டு என ஒரு சாராரும்,

பகுத்தறிவு கொண்டு சாத்திரத்தைத் தள்ளாவிடின் பின் மருந்தே கிடையாது

என இன்னொரு சாராரும் செய்துவரும் குழப்பத்தில் தமிழச்சாதி

குலைந்துபோகின்ற அபாயத்தைச் சுட்டுகிறான் பாரதி.

இதனை இன்னமும் விரித்துச் சொல்ல விழைகிறான்.



'இந்நாள் எமது தமிழ்நாட்டிடையே

அறிவுத் தலைமை தமது எனக் கொண்டார்

தம்மிலே இருவகை தலைப்படக் கண்டேன்;

ஒருசார்.

மேற்றிசை வாழும் வெண்ணிற மக்களின்

செய்கையும் நடையும் தீனியும் உடையும்

கொள்கையும் மதமும் குறிகளும் நம்முடை

யவற்றினும் சிறந்தன. ஆதலின் அவற்றை

முழுதுமே தழுவி மூழ்கிடின் அல்லால்,

தமிழச் சாதி தரணி மீது இராது.

பொய்த்தழி வெய்தல் முடிபு' எனப் புகலும்.


நன்றடா! நன்று! நாமினி மேற்றிசை

வழியெலாம் தழுவி வாழ்குவம் எனிலோ

'ஏ ஏ! அஃது உமக்கு இசையா' தென்பர்;

'உயிர்தரும் மேற்றிசை நெறிகளை உவந்து நீர்

தழுவிடா வண்ணம் தடுத்திடும் பெருந்தடை

பல அவை நீங்கும் பான்மைய வல்ல;

என்றருள் புரிவர். இதன் பொருள் சீமை

மருந்துகள் கற்ற மருத்துவர் தமிழச்

சாதியின் நோய்க்குத் தலை அசைத்து ஏகினர்'

என்பதேயாகும்; இஃதொரு சார்பாம்.'



மேலை நாகரிகத்தைத் தழுவினாலன்றி

தமிழருக்கு வாழ்வில்லை எனச் சொல்லி, அதே சமயம்

அவையெல்லாம் தழுவுவது உமக்கு வராது என

சிலபல தடைகளையும் போட்டு

ஒருசாரார் நம்மைக் குழப்புவர்!

இவர்களைச் சீமை மருத்துவருடன் ஒப்பிட்டுக் கேலி செய்கிறான்.

நமக்குத் தெரியா மருந்துகளைத் தான் மட்டும் தெரிந்து வைத்துக்கொண்டு,

அவற்றை நமக்கு விளக்காமல், தலை அசைத்துச் செல்லுவர் என!

அப்படியானால், அந்த இன்னொரு சாரார் எவர்?

நாளை வரும்!
****************

Read more...

Tuesday, October 21, 2008

"தமிழச் சாதி" - "பாரதி சில காட்சிகள்" - 2

"தமிழச் சாதி" - "பாரதி சில காட்சிகள்" - 2

முந்தைய பதிவு

2. "தமிழச் சாதி" [தொடர்கிறது]

"ஏனெனில்,

'சிலப்பதிகாரச்' செய்யுளைக் கருதியும்,

'திருக்குறள்' உறுதியும், தெளிவும், பொருளின்

ஆழமும், விரிவும், அழகும் கருதியும்,

'எல்லையொன்றின்மை' எனும் பொருள் அதனைக்

கம்பன் குறிகளாற் காட்டிட முயலும்

முயற்சியைக்கருதியும் முன்பு நான் தமிழச்

சாதியை "அமரத் தன்மை வாய்ந்தது" என்று

உறுதி கொண்டிருந்தேன். ஒரு பதினாயிரம்

சனி வாய்ப்பட்டும் தமிழச் சாதிதான்

உள்ளுடைவின்றி உழைத்திடு நெறிகளைக்

கண்டு எனது உள்ளம் கலங்கிடாது இருந்தேன்;

ஆப்பிரிக்கத்துக் காப்பிரி நாட்டிலும்

தென்முனை அடுத்த தீவுகள் பலவினும்

பூமிப் பந்தின் கீழ்ப் புறத்துள்ள

பற்பல தீவினும்பரவி இவ்வெளிய


தமிழச்சாதி தடி உதை உண்டும்

கால் உதை உண்டும் கயிற்றடி உண்டும்

வருந்திடும் செய்தியும் மாய்ந்திடும் செய்தியும்

பெண்டிரை மிலேச்சர் பிரித்திடல் பொறாது

செத்திடும் செய்தியும் பசியால் சாதலும்

பிணிகளால் சாதலும் பெருந்தொலை உள்ள தம்

நாட்டினைப் பிரிந்த நலிவினாற் சாதலும்


இஃதெலாம் கேட்டும் எனதுளம் அழிந்திலேன்;

'தெய்வம் மறவார்; செயுங்கடன் பிழையார்;

ஏதுதான் செயினும், ஏதுதான் வருந்தினும்,

இறுதியில் பெருமையும், இன்பமும் பெறுவார்'

என்பது என் உளத்து வேர் அகழ்ந்து இருத்தலால்!


பாரதி ஒரு தீர்க்கதரிசி என்பதனைத் தெளிவுறக் காட்டும் வரிகள் இவை

என்பதைத் தவிர இதில் சொல்ல வேறு என்ன இருக்கிறது!

இன்றைக்கும் பொருந்தும் இவ்வரிகளைப் படிக்கும்போது நடக்கும் நிகழ்வுகள்
ஒரு கணம் நம் கண்முன் நிழலாடித்தான் செகின்றன.

இத்தனையையும் மீறி, ஒரு நம்பிக்கை வரியையும் சொல்லித்தான் செல்கிறான் பாரதி!

என்னதான் நடந்தாலும், கடவுளை நம்பி, நேர்மைச் செயல்கள் செய்து வரின், வெற்றி நிச்சயம்!

இப்படிச் சொன்ன பாரதியை விதி பார்த்துச் சிரிக்கிறது!

'எதனால் இப்படி ஒரு நிலைமை என அறிவாயா?' என்கிறது!

'தெரியும் எனக்கு! சொல்கிறேன் கேள்' எனத் தொடங்குகிறான் பாரதி.

எனினும்,

இப்பெரும் கொள்கை இதயமேற் கொண்டு

கலங்கிடாது இருந்த எனைக் கலக்குறுத்தும்

செய்தி ஒன்றதனைத் தெளிவுறக் கேட்பாய்!

ஊனமற்று எவைதாம் உறினுமே பொறுத்து,

வானமும் பொய்க்கின் மடிந்திடும் உலகுபோல்,

தானமும் தவமும் தாழ்ந்திடல் பொறுத்து,

ஞானமும் பொய்க்க நசிக்கும் ஓர் சாதி,

சாத்திரங் கண்டாய் சாதியின் உயிர்த்தலம்;

சாத்திரமின்றேல் சாதியில்லை.

பொய்ம்மைச் சாத்திரம் புகுந்திடின் மக்கள்

பொய்ம்மையாகிப் புழுவென மடிவர்;


இரு பிரிவினராய்த் தமிழச்சாதி பிரிந்து நிற்பதைக் காண்கிறான் பாரதி

சாதிக்குள்ளே சாத்திரம் புகுந்து அது பொய்யாகத் திரிக்கப்பட்டு

மக்களை அலைக்கழிப்பதைப் பார்த்து மனம் பொருமுகிறான்.

நால்வகையாகச் சாதிகள் பிரிக்கப்பட்டிருந்தாலும், ஒவ்வொரு சாதியிலும்

தானே அறிவாளி எனச் சொல்லுகின்ற தலைவன் ஒருவன் புகுந்து

எப்படியெல்லாம் அலைக்கழிக்கிறார்கள் என்பதை மேலும் விவரிக்கின்றான்:

**************************************

[தொடரும்]

Read more...

Monday, October 20, 2008

"தமிழச் சாதி" - "பாரதி சில காட்சிகள்" - 1

"தமிழச் சாதி" - "பாரதி சில காட்சிகள்" - 1

"பாரதி கண்ட சில காட்சிகள்"

மீண்டும் இந்தத் தலைப்பைத் தொடும் நேரம் இது!

ஈழம் பற்றி எரிகிறது!

தமிழகம் கொந்தளிக்கிறது!

உலகெங்கிலும் தமிழக மக்களின் குரல் உச்சமிட்டு ஒலிக்கிறது!

இந்தியத் தலைநகரிலும் கூட இன்று தமிழரல்லாத மாணவ சமுதாயம் ஆர்ப்பரித்து நிற்கிறது!

தமிழக முதல்வர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி அனைத்து தமிழக பாரரளுமன்ற உறுப்பினர்களும் இருவார காலகட்டத்தில்

பதவி விலகுவார்கள் என அதிரடியாக ஒரு அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறார்.

இந்த நிலையில் பாரதி என்ன சொல்லி இருக்கிறான் எனப் புரட்டிப் பார்த்தேன்!

என்னமோ தீர்க்கதரிசிக் கவிஞன் எனச் சொல்லுகிறார்களே, இவன் இதைப் பற்றி ஏதாவது சொல்லியிருப்பானே என்ற நம்பிக்கையுடனே அவனிடம் கேட்டேன்!

சிரித்தான் பாரதி!

பாரடா எனச் சொல்லி ஒரு பக்கத்தை என்னிடம் காட்டினான்!

படித்தேன்!

சிலிர்த்தேன்!

தொழுதேன்!

கொஞ்சம் அழுதேன்!

கலைஞர் கொடுத்த இருவார அவகாசத்தில் இதைப் பற்றி உங்களுடன் பகிர எண்ணம் கொண்டேன்!

இதோ அது உங்கள் பார்வைக்கு!

இதில் வரும் பல வரிகள் விளக்கம் இல்லாமலே புரியப்படுபவை!

தேவைப்படும் போது என் மனதில் தோன்றிய எண்ணங்களை உங்களுக்குச் சொல்ல எண்ணம்!

இதோ பாடல்!

பாரதியின் அனுமதியோடு, அவன் வரிகளைச் சற்று பதம் பிரித்து இங்கு இடுகிறேன்.

"தமிழச் சாதி"

'எனப்பல பேசி இறைஞ்சிடப் படுவதாய்,

நாட்பட நாட்பட நாற்றமும் சேறும்

பாசியும் புதைந்து பயன்நீர் இலதாய்

நோய்க்களம் ஆகி அழிக எனும் நோக்கமோ?'


என்னடா, இப்படி ஒரு தொக்கில் ஆரம்பிக்கிறானே என நிமிர்ந்தேன்!

விநாயகர் நான்மணிமாலை நினைவுக்கு வந்தது!

சட்டென முந்தைய பாடலைப் பார்த்தேன்!

"வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி"

எனத் தொடங்கி ஒரு எட்டு கண்ணிகள் எழுதி,

"வானம் அறிந்த தனைத்தும் அறிந்து

வளர்மொழி வாழியவே"

என முடித்திருந்தான் பாரதி!

இப்படிப் பெருமையெல்லாம் பெற்று, வளர்ந்து, சிறந்த தமிழ்மொழி நாற்றமும், சேறும், பாசியும் புதைந்து,

எவருக்கும் பயன்படாத நீராக ஆகி, அது மட்டுமல்லாமல், ஒரு நோய்க்களமாகி அழிந்து போகவோ உனது நோக்கம் எனக் கேட்கிறான்!

யாரைப் பார்த்து இப்படி கேட்கிறான்?

அதை அடுத்த வரியிலேயே சொல்கிறான்!



'விதியே, விதியே, தமிழ்ச் சாதியை

என் செய நினைத்தாய் எனக்கு உரையாயோ?

சார்வினுக்கு எல்லாம் தகத்தக மாறித்

தன்மையும் தனது தருமமும் மாயாது

என்றும் ஓர் நிலையாய் இருந்து நின் அருளால்

வாழ்ந்திடும் பொருளொடு வகுத்திடுவாயோ?

தோற்றமும் புறத்துத் தொழிலுமே காத்து மற்று

உள்ளுறு தருமமும் உண்மையும் மாறிச்

சிதைவுற்று அழியும் பொருள்களில் சேர்ப்பையோ?

அழியாக் கடலோ? அணிமலர்த் தடமோ?

வானுறு மீனோ? மாளிகை விளக்கோ?

கற்பகத் தருவோ? காட்டிடை மரமோ?

விதியே! தமிழ்ச் சாதியை எவ்வகை

விதித்தாய் என்பதன் மெய் எனக்கு உணர்த்துவாய்.'



வாழும் நிலைகளுடன் வைக்கப்போகிறாயா?

இல்லை அழிந்துபோகும் பொருள்களுடன் சேர்க்கப் போகிறாயா? என

விதியைப் பார்த்து ஒரு கேள்வி வைக்கிறான் பாரதி!

விதி திகைக்கிறது!

என்ன சொல்கிறான் இவன்?

நிகழ்வதைத்தானே நான் நடத்திக் கொண்டிருக்கிறேன்!

இதில், நிலைப்பது, அழிவது என்கின்ற வேறுபாடு எனக்குக் கிடையாதே!

பின் எதைக் குறித்து இப்படிச் சொல்கிறான் என பாரதியைப் பார்க்கிறது!

சற்றும் தயங்காமல், அடுக்கடுக்காய் உதாரணங்களைக் காட்டுகிறான் பாரதி.

நீரில் தோன்றிய இவ்வுலகு மீண்டும் நீரிலேயே முடியும் என்னும்

அறிவியலாளரின் கருத்துக்கொப்ப, எம் தமிழ் அழியாக் கடல் போல இருக்குமா?

அல்லது, ஒரு அழுத்தமான, கனமான மலர்மாலை தோளில் புரண்டதால் ஏற்பட்ட

அணிமலர்த் தடம், சிறிது நேரத்தில் மறைந்து போவதுபோல் போய்விடுமா?

பகலவன், மேகமூட்டம், இவற்றினால் இல்லாதது போலத் தோன்றினாலும்,

எப்போதும் மறையாத நட்சத்திரங்கள் போல அழியாமலா?

இல்லை, வெளிச்சம் வேண்டுமே என்பதற்காக ஏற்றப்பட்டு,

இயற்கை வெளிச்சம் வந்தவுடன் அணைக்கப்படும் ஒரு மாளிகை விளக்கு போலவா?

எவர் எது கேட்டாலும் தயங்காமல் தருகின்ற கற்பத்தருபோலவா?

அல்லது, எவருக்குமே பயனில்லாது தன் பெருமை மட்டுமே பேசி

தனிக்காட்டின் நடுவினில் நிற்கின்ற ஒரு காட்டுமரம் போலவா?

இப்படி எதுவாக வேண்டி எங்கள் தமிழச் சாதியை நீ விதித்திருக்கிறாய்? சொல்!

என அதிரடிக் கேள்விக்கணைகளைத் தொடுக்கிறான்!

விதி இன்னமும் புரியாமலேயே விழிக்கிறது!

பாரதி தொடர்கிறான்!

****************************

[நாளை தொடரும்]

Read more...

Friday, October 17, 2008

ஈழத்தமிழனின் வேண்டல்!

ஈழத்தமிழனின் வேண்டல்!
பழநிமலை முருகா பழம் நீ திருக்குமரா என்னும் மெட்டில்!


கதிர்காம வேல்முருகா
காப்பதுமுன் பாரமப்பா
எம்துயரம் நீக்கிடுவாய் - முருகா
தமிழீழம் எங்களுக்குத் தா

போரும் ஓயாதோ விடியலும் வாராதோ
இடமின்றித் தவிக்கின்ற அவலமும் தீராதோ
நிலைமை சீராக நிழலும் நிஜமாக
நிம்மதியை எங்களுக்குத் தா - முருகா
தமிழீழம் எங்களுக்குத் தா
[கதிர்காம வேல்முருகா]

இதுநாள் யாம்பட்ட இடரிங்கு போதாதோ
இப்படியே எம்மக்கள் அழிவதும் சரியாமோ
கருணைத் திருவுள்ளம் மிகுந்தவன் நீயல்லவோ
கண்மலரை திறந்திடப்பா - முருகா
தமிழீழம் எங்களுக்குத் தா
[கதிர்காம வேல்முருகா]

சூரனை மாய்த்திடவே வேற்படை நீகொண்டாய்
சூரர்கள் பலவிங்கு எமையழிக்க வருகின்றார்
கதிர்காமப் படைவீட்டில் பாங்குடனே நீயிருக்க
எமக்கிந்த நிலை முறையோ - முருகா
தமிழீழம் எங்களுக்குத் தா
[கதிர்காம வேல்முருகா]

இப்படிக்கு நீயிருந்தால் என்செய்வோம் சொல்லப்பா
ஏனின்னும் மௌனமிங்கு எழுந்து நீ வா அப்பா
அழுகின்ற எம்மக்கள் துயர்நீக்க வேலெடப்பா
பரிந்தெம்மைப் பாரப்பா - முருகா
தமிழீழம் எங்களுக்குத் தா
[கதிர்காம வேல்முருகா]

Read more...

Wednesday, October 15, 2008

"கலைஞருக்கு மீண்டும் ஒரு கடிதம்!"

"கலைஞருக்கு மீண்டும் ஒரு கடிதம்!"



அன்புள்ள கலைஞர் அவர்களே!

வணக்கம்.


வருபவர் வரட்டும்; வராதவர் பற்றிக் கவலை இல்லை; நம் நோக்கமும், அதன் அவசரமுமே முக்கியம் எனக் கருதி, நீங்கள் கூட்டிய
அனைத்துக் கட்சிக் கூட்டத்தையும், அதில் எடுக்கப்பட்ட முடிவுகளையும் ஊடகங்கள் வாயிலாக அறிந்து மகிழ்கிறேன்.

நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்; இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் என உங்கள் தலைவர் அறிஞர் அண்ணா சொன்னதுபோலச்
செய்து காட்டியிருக்கிறீர்கள்.
அதற்காக என் பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அ.க.கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் எல்லாம் மிகச் சிறந்தவையாக இருக்கின்றன; செயல்படுத்தக் கூடியவையாகவும் இருக்கின்றன.

பலம் பொருந்திய ஒரு அண்டைநாடு, அங்குள்ளவர் நலனில் அக்கறையும் கொண்ட நாடு என்ற முறையில் இந்த முடிவுகளைத்தான் நம்மால் சொல்ல முடியும்.

இவை நிறைவேற்றப் பட்டாலே, ஒரு சுமுகமான சூழ்நிலை நிலவும் வாய்ப்புகள் அதிகரிக்கப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் வரமுடியும்.

தீர்மானம் நிறைவேற்றியதோடு அல்லாமல், இவை செயல்பட,உங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி, அல்லல்படும் நம் தமிழர் வாழ்வை மலரச் செய்யுங்கள்.

கூட்டத்திற்கு வராதவர் குறித்த உங்கள் கருத்துகள் உங்கள் அரசியல் அனுபவ முதிர்ச்சியைக் காட்டுகின்றன.

எவர் இதை எப்படி விமரிசித்தாலும், தங்களுக்கு வெற்றி என சிலர் நினைத்தாலும், இது போதாது என எதிர்க்கட்சிகள் சொன்னாலும், இது அல்லற்படும் தமிழர் நலனை மட்டுமே கருத்தில் கொண்டதாக அமையவேண்டும் என விரும்புகிறேன்.



அடுத்த இரு வாரங்களுக்கு, ஒட்டுமொத்தத் தமிழினமே உங்களைக் கவனித்துக் கொண்டிருக்கும்.

உங்களை மட்டுமல்ல!

இந்த முடிவுகளை ஏற்று, மத்திய அரசு என்ன முடிவுகள் எடுக்கப் போகின்றன என்பதையும் கூடத்தான்!

பிரதமர் இன்று சொல்லியிருக்கும் கருத்துகள் சற்று நம்பிக்கையை வரவழைக்குமாறு இருக்கிறது.


இருப்பினும், கூடவே வந்த மற்ற கருத்துகள் ஏமாற்றத்தை உண்டுபண்ணியது.
நல்லது நடக்கும்.... விரைவில்..... அதுவும் தங்களது ஆட்சிக் காலத்திலேயே என உறுதியாக நம்புகிறேன்.

நீங்களும் உறுதியாக இதை நடத்திக் காட்டுங்கள்!


காலம் கடந்து இது நிகழ்ந்தாலும், இப்போதாவது நிகழ்கிறதே எனத் தமிழர்கள் மகிழ்கிறார்கள்.

அவர்கள் கனவைத் தகர்த்துவிடாதீர்கள்!


நன்றி. வணக்கம்.
*************************
[கடிதங்கள் தொடரும்!...... இரு வாரங்களுக்குப் பின்!!]

அது வரையில்.........
முருகனருள் முன்னிற்கும்!

Read more...

Tuesday, October 14, 2008

"தமிழக மாணவர்களுக்கு ஒரு கடிதம்"

"தமிழக மாணவர்களுக்கு ஒரு கடிதம்"


என் அன்பு தமிழக மாணவர்களே!

மாணவர் சக்தி மகத்தான சக்தி என்பதை நன்கு உணர்ந்தவன் நான்!

தமிழகத்தின் தலைவிதியையே மாற்றிய ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தைக் கண்டவன் நான்!

சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கும், பேருந்துத் தொழிலாளர்களுக்கும் இடையே ஒரு மோதல் வெடித்தபோது நேரடியாகப் பாதிக்கப்பட்ட முதல் அறை என்னுடையது!

மாணவர் நினைத்தால், என்ன வேண்டுமானாலும் செய்யமுடியும், எந்த ஒரு சக்தியையும் அசைக்கமுடியும் எனத் தெளிவாகத் தெரியும் எனக்கு.

அது ஒரு காலம்!

சமீப காலமாக நாம் காண்பதை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன்.

மாணவர் ஒரு காரணத்துக்காக ஒரு போராட்டம் தொடங்குவர்.

அது அரசுக்கு எதிராகவோ, ஆதரவாகவோ நிகழும்.

பள்ளியை விட்டு வெளியேறி, ஒரு ஊர்வலம் நடத்துவார்கள்.

செல்லும் வழியில், சில தீயசக்திகள் இதற்குள் ஊடுருவுவார்கள்!

சில கடைகளை அடைக்கச் சொல்லி வம்பு செய்வார்கள்.

சில கற்கள் பறக்கும்!

சில மண்டைகள் உடையும்!

என்ன நடக்கிறது எனத் தெரியாமலேயே, மாணவர்களும் இதில் உட்புகுவார்கள்.

பார்த்துக் கொண்டிருக்கும் காவல்துறை, கூட்டத்தை விலக்க முற்பட்டு, தடியடி நடத்தி, தானும் அடிபட்டு, பிறகு துப்பாக்கிச்சூடு வரை நடக்கும்.

எவன் சாகிறானோ, அவனுக்கு வீரவணக்கம் எனத் தொடங்கி, போராட்டம் வலுக்கும்.

'அமைதியாக நடந்த மாணவர் போராட்டத்தில் அரசின் அடக்குமுறை' என எதிர்க்கட்சிகள் இதை மேலும் வளர்க்கும்.

இதுதான் இப்போது நடைபெறும் காட்சிகள்.

இந்த நிலையில், இன்று தமிழ் ஈழ மக்களுக்காக ஒரு போராட்டம் நடத்தப் போவதாகச் செய்திகளில் படிதேன்.

வேண்டாம் ஐயா! வேண்டாம்!

படிக்கும் வேலையை விட்டு இதில் ஈடுபட வேண்டாம்!

உங்கள் உதவி அவசியம் அவருக்குத் தேவை.

அது போராட்டமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

அதுவும் பள்ளி நாட்களில் வேண்டவே வேண்டாம்!

ஒரு விடுமுறை நாளில், பள்ளிவாசலில், அல்லது ஒரு முக்கிய வீதியில் கூடி, வருவோர் போவோர்க்கெல்லாம் நம் தமிழர் படும் அவலத்தை எல்லாருக்கும் தெரியப்படுத்துங்கள்.

நிவாரண உதவி கேட்டுக் கையேந்துங்கள்.

அதைவிட்டு, இது போல, சாலை மறியல் அது இது என ஆவேசச் செயல்களில் ஈடுபட வேண்டாம் எனத் தாழ்மையுடன் வணங்கிக் கேட்டுக் கொள்கிறேன்.

உங்கள் படிப்பு முக்கியம்.

தமிழீழம் கிடைக்கும்.

அது நிச்சயம்!

அப்போது நீங்கள் சென்று தேவையான கல்வி உதவிகளைச் செய்து தாருங்கள்!

இப்போது...............
போய்ப் படியுங்கள்!

நேரம் வரும்போது அழைப்பு வரும்!

அப்போது......
தவறாமல் வாருங்கள்!
*******************************

[கடிதங்கள் தொடரும்!]

Read more...

Monday, October 13, 2008

"கேப்டனுக்கு ஒரு கடிதம்"

"கேப்டனுக்கு ஒரு கடிதம்"
அன்புள்ள "கேப்டன்" பிரபாகரனுக்கு,

வணக்கம்.

தமிழீழப் பிரதிநிதியாய் இன்றைக்கும் முதலாய் விளங்கும் ஒரு தலைவன் நீங்களே என்பதை எவராலும் மறுக்க முடியாது.
உங்கள் எதிரிகளும் ஒப்புக் கொள்ளும் ஒரு உண்மை இது!

பலவித அடக்குமுறைகளைச் சந்த்தித்த தமிழ் ஈழ மக்கள் வேறு வழி இல்லாமல், ஆயுதம் தூக்க நேர்ந்ததும், அதற்கு நீங்கள் ஒரு தலைமை தாங்க நேரிட்டதும் சரித்திர உண்மைகள்!

20 ஆண்டுகளுக்கும் மேலாய், ஒரு இயக்கத்தைக் கட்டுக் கோப்பாக நடத்திவரும் உங்கள் தலைமையின் மீது தமிழீழ மக்கள் வைத்திருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையை தொடர்ந்து கவனித்து வருபவன் நான்!

என்ன சொன்னாலும், அது தன் உயிரையே பணயம் வைக்கும் ஒரு செயல் என்றாலும், தலைவன் சொன்னான் என்ற ஒரே காரணத்துக்காக அவர்கள் அதை அப்படியே சிர மேற்கொண்டு நடத்தி வருவது, நிகழ்ந்த, நிகழ்கின்ற பல செயல்பாடுகளின் மூலம், நிறைவாகவே உணர்ந்திருக்கிறேன்.

அதனால்தான் உங்களுக்கு இந்த மடலை எழுதத் துணிந்தேன்.

இரு தலைமுறைகள் அழிந்து போயின அல்லது புலம் பெயர்ந்து போயின!
இயக்கத்துக்குத் தேவையான உதவிகளைச் செய்ய முன்வந்தாலும், அவர்களின் வாழ்க்கை ஈழத்தோடு ஒன்றமுடியாமல் போனதுதான் பெரிய அவலம்.

புலம் பெயர்ந்த மக்களின் குழந்தைகள் வேறொரு வாழ்க்கை முறையில் ஒன்றிப் போய், நீங்கள் நடத்தும் போராட்டத்தின் கருப்பொருளை முழுதுமாக உணர முடியாமல், தார்மீகமாக ஆதரிக்கும் நிலையையே இப்போது காண்கிறேன்.

அவர்களின் அடுத்த தலைமுறை இதை உணரக் கூட முடியுமா என்பதே என் அச்சம்.

விடுதலைப் புலிகளின் சில செயல்பாடுகளை அவர்களில் சிலர் தீவிரவாதத்துடன் ஒப்பிட்டு விலகிப் போகும் அபாயம் இருப்பதை நான் காண்கிறேன்.

இதை ஒப்புக்கொள்ள நீங்களோ, அல்லது உங்கள் மேல் நம்பிக்கை வைத்திருப்பவர்களோ மறுக்கலாம்.

ஆனால், ஒரு மூன்றாவது மனிதனாக, இதன் மேல் நம்பிக்கை வைத்து, இது விரைவிலேயே வெற்றி பெற வேண்டும் என வேண்டும் என் போன்ற பலரின் விருப்பமும், நீங்கள் உங்களது வழிமுறைகளை ஒரு சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நேரம் இது என நினைக்கிறேன்.

உங்கள் நோக்கம் நியாயமானது.
அது நிறைவேற வேண்டும்.

அதற்கான வழிமுறைகளைக் கொஞ்சம் மாற்ற முயலலாமே!

வன்முறை என்றுமே வென்றதில்லை!
இதை சிங்களவர்க்குப் புரிய வையுங்கள்!

சொல்லிச் செல்வது சுலபம்; அனுபவிப்பவர்க்குத்தான் அது தெரியும்.
இருப்பினும், ஒரு இனம் அழிய நீங்களும் காரணமானீர்கள் என வரலாறு உங்களைப் பேச வேண்டாம் என்பது என் விருப்பமும், ஆசையும்!

என்ன செய்ய வேண்டும் எனச் சொல்ல எனக்கு எந்தவொரு தார்மீக உரிமையும் இல்லை!

ஆனால், தமிழர் வாழவேண்டும் எனச் சொல்ல உரிமை இருக்கிறது!

தமிழர்களைக் காக்கும் தற்பாதுகாப்பு யுத்தத்தில் ஈடுபடும் அதே நேரத்தில், ஈழத்தில் அமைதிக்கு வழிவகுக்கும் எந்தவொரு சிறிய நடவடிக்கைக்கும் உங்களது முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் கொடுக்க வேண்டும் என்னும் ஒரு வேண்டுகோளை இந்த நேரத்தில் உங்களுக்கு விடுக்கிறேன்.

சொல்லுவதைச் சொல்லிவிட்டேன்!
செய்வது உங்கள் கையில்!

தமிழீழம் கிட்ட என் முருகனை வேண்டுகிறேன்!

வணக்கம். நன்றி.
*******************************
[நாளை.... இந்தியப் பிரதமருக்கும், குடியரசுத் தலைவருக்கும் ஒரு கடிதம்]

Read more...

Sunday, October 12, 2008

"அன்னைக்கு ஒரு கடிதம்"

"அன்னைக்கு ஒரு கடிதம்"
மதிப்பிற்குரிய சோனியா அன்னையாருக்கு,

வணக்கம்.

இந்தியாவின் முடிசூடா மஹாராணியாக தற்போது இருப்பவர் நீங்கள்.

தன் நாட்டை விட்டு எங்கள் மண்ணுக்கு மருமகளாக வந்து, இப்போது அனைவராலும் 'அன்னை' எனப் போற்றப்படும் அளவுக்கு உயர்ந்தது உங்கள் பெருமை.

இந்த நாட்டுக்காக நீங்கள் இழந்தது கொஞ்சம் அதிகமே!

சொந்தக் கணவனையே இந்நாட்டுக்காகப் பறி கொடுத்த உங்கள் சோகமும், அதனைத் தொடர்ந்து, நேரு குடும்ப வாரிசுகளை உருவாக்க நீங்கள் செய்த தியாகமும் எப்போதும் எங்கள் நன்றியை உங்கள் பால் காட்டி, உங்களை 'அன்னை' எனவே மதிக்கும் அளவுக்கு வந்திருப்பவர் நீங்கள்.

பொருளாதாரம், பாதுகாப்பு, அடுத்த தேர்தல் என பல விஷயங்கள் உங்கள் கவனத்தில் தற்போது இருப்பினும், ஒரு வேண்டுகோளை உங்கள் முன் கொண்டுவரவே இக்கடிதம் எழுதத் துணிந்தேன்.

இலங்கையில் தமிழர்கள் படும் அல்லல்!

சரமாரியாகச் சுட்டுக் கொல்லப்படும் அவலம்!

இருக்க இடம் இல்லாது, அப்பாவி மக்கள் படும் துயரம் உங்கள் பார்வைக்கும் வராமல் போயிருக்க வாய்ப்பில்லை.

இது ஏதோ ஒரு தனிப்பட்ட இயக்கத்துக்கு, அதன் சில தவறுகளால் நிகழ்ந்த , நிகழ்கிற சம்பவம் என அலட்சியப் படுத்தாதீர்கள்.

உங்களுக்கு இதில் தனிப்பட்ட முறையிலும் பாதிப்பு இருப்பதையும் உணர்வேன்.

அதை மனதில் கொள்ளாமல், ஒட்டுமொத்த தமிழினமே அங்கு அழிக்கப்பட்டுவிடும் அபாயம் இருப்பதை உணர்ந்து, உங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி, நிலைமையை ஒரு சீருக்குக் கொண்டுவர முன்வாருங்கள்.

சொந்த நாட்டிலேயே மூன்றாந்தர அகதிகள் போல் நடத்தப்படும் தமிழ் மக்களின் அவலத்தைப் போக்க, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்.

நீங்கள் நினைத்தால் இது முடியும்.

விரும்பினால், தமிழீழமே கூடப் பெற்றுத் தரமுடியும்.

இன்னொரு நாட்டின் உள்நாட்டு விவகாரம் என இதனைத் தள்ளிவிட வேண்டாம்.

பங்களா தேஷில் அன்று இந்தியா எடுத்த பொறுப்பான செயலைத் தங்கள் கவனத்துக்கு இப்போது கொண்டுவர விரும்புகிறேன்.

இதைச் செய்தால் பல கோடி தமிழ் மக்கள் தங்களை நன்றியுடன் நினைவு கூருவார்கள்.

'இன்னா செய்தரை ஒறுத்தல்' எனும் வள்ளுவனின் மொழிக்கு உருக் கொடுத்த பெருமை வரலாற்றில் உங்களை வந்து சேரும்!

செய்வீர்கள் என நம்புகிறேன்.

நன்றி. வணக்கம்.
****************************
[நாளை.... 'கேப்டனுக்கு ஒரு கடிதம்']

Read more...

Saturday, October 11, 2008

"அம்மாவுக்கு ஒரு கடிதம்"

"அம்மாவுக்கு ஒரு கடிதம்"


அன்புள்ள ஜெயலலிதா அம்மா!

தமிழகத்தின் முதலமைச்சராக இருமுறை இருந்தவர் நீங்கள்!

இப்போதும் ஒரு வலுவான எதிர்க் கட்சியாக இருப்பவரும் நீங்கள்!

தமிழகத்தில் எடுக்கப்படும் முடிவுகளில் உங்கள் கருத்தைத் தமிழகம் ஆவலுடன் எதிபார்க்கிறது.

உங்களுக்கும், கலைஞருக்கும் இருக்கும் பகைமை உணர்வு அனைவரும் அறிந்ததே!

அவர் எடுக்கும் அனைத்தையுமே எதிர்ப்பதுதான் ஒரு எதிர்க் கட்சித் தலைமையின் அழகு என்பதையும் நான் புரிந்துகொள்கிறேன்.

ஆனால், இப்போது நிகழ்வது அதுவல்ல!

ஈழம் பற்றி எரிகிறது அம்மா!

கண்ணில் கண்ட தமிழரெல்லாம் புலிகள் எனச் சுட்டப்பட்டுச் சுட்டுக் கொல்லப் படுகின்றார்கள்!

பெண்கள் மானபங்கப் படுத்தப் படுகிறார்கள்.

சிறு குழந்தைகள் அழிக்கப் படுகின்றார்கள்.

எங்கேயோ ஒரு அயல்நாட்டில் இருக்கும் எனக்குத் தெரிந்த இந்தச் செய்திகள் உங்களுக்குத் தெரியாமல் போக வாய்ப்பில்லை.

இப்போது கலைஞர்... தமிழக முதல்வர் ....... ஒரு சர்வ கட்சிக் கூட்டத்தைக் கூட்ட அழைப்பு விடுத்திருக்கிறார்.

இதைக் கூட்டாமலேயே, மத்திய அரசில் தன் பலத்தைக் காட்டியே அவர் ஒரு தீர்வு கண்டிருக்கலாம் என்னும் உங்கள் கருத்தோடு உடன்படுகிறேன்.

ஆனால், இது ஒன்றைக் காரணம் காட்டி. இந்தக் கூட்டத்தைப் புறக்கணிக்கும் உங்கள் முடிவை முழுதுமாக எதிர்க்கிறேன்.

நீயா நானா எனப் பலப்பரிட்சை செய்யும் நேரம் இது அல்ல!

ஒட்டு மொத்தமாக ஒரு இனம் முறையாக அழிக்கப் படுகிறது உங்கள் கண்ணில் படவில்லையா!

கலைஞர் உங்கள் எதிரி!

தெரியும் எனக்கு!

ஆனால், அவர் தான் இப்போது தமிழகத்தின் முதல்வர் என்ற முறையில் ஒரு முதல்வர்!

அவர் விடுக்கும் அழைப்பைப் புறக்கணிப்பதின் மூலம் ஒரு பெரும் தவறு செய்கிறீர்கள் நீங்கள்!

நம் தமிழர் படும் அவலத்தை உணர்ந்து, உடனடியாக உங்கள் முடிவை மாற்றி, அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு, நீங்களும் ஒரு தமிழர் தான் என நிரூபியுங்கள்!

தமிழர் நலனைக் காப்பதுதான் என் தலைமை என தரணிக்குச் சொல்லுங்கள்!

வரலாறு உங்களைப் பேசும்!

******************

நாளை "அன்னை"க்குஒரு கடிதம்!

Read more...

Friday, October 10, 2008

"கலைஞருக்கு ஒரு கடிதம்"

"கலைஞருக்கு ஒரு கடிதம்"



அன்புள்ள ஐயா!
தமிழர் தலைவர் எனச் சொல்லிக் கொள்ள உங்களுக்கு எல்லாத் தகுதியும் இருக்கிறது என்பதை உறுதியாய் நம்புபவன் என்கிற முறையில் இந்த மடலை வரைகிறேன்.

தமிழுக்கும், தமிழருக்கு பல நல்ல செயல்களைச் செய்யும் மனமும் உங்களுக்கு இன்னமும் இருப்பதை நான் உணர்கிறேன்.

ஆனால், தமிழர் என்பவர் தமிழகம் தாண்டியும் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் மறந்துபோய் விட்டீர்களோ என் ஒரு சந்தேகம்.

ஈழத்தில் தமிழர்கள் கொல்லப்படுகிறர்கள் ஐயா!

உங்களுக்கும் தெரியும்தானே!?

கண்ணில் பட்ட எல்லாரும் குண்டுக்கு இரை ஆகிறார்கள்.

சாகாமல் பிழைத்தவர் அல்லல் படுகிறார்கள்.

ஒரு சாதாரண தமிழனான எனக்கு, அதுவும் ஒரு அயல்நாட்டில் இருக்கும் எனக்கே தெரியும்போது, உங்களுக்குத் தெரியாமல் போக வாய்ப்பில்லை.

என்ன செய்யப் போகிறீர்கள்?

ஆட்சியில் இருக்கிறீர்கள்.

அதுவும் தமிழக முதல்வராக!

அது மட்டுமல்ல!

40 நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்துக் கொண்டு, மத்திய அரசையே நடுங்க வைக்கும் பலம் கொண்டவராகவும் இருக்கிறீர்காள்.

ஒரு சில துறைகள் தங்கள் கட்சிக்குக் கிடைக்க வேண்டும் என அரசை வற்புறுத்தி, அதையும் பெற்றவர் நீங்கள்!

இவ்வளவு வலுவான நிலையில் இருக்கும் நீங்கள் இப்போது செய்யும் நிகழ்வுகள் உங்களது தலைமையையே சந்தேகப் பட வைக்கிறது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்!

குறைந்த பட்சமாக, பாதிக்கப்பட்டு அல்லல் படும் மக்களுக்கு, நம் தமிழருக்கு, அடிப்படை நிவாரண உதவி கிடைக்கக் கூட நீங்கள் செய்யக் குரல் கொடுக்காமல்,
அனைத்துக் கட்சிக் கூட்டம் அது இது என நேரம் கடத்துவது கலக்கம் அளிக்கிறது.

இப்போது உடனடித் தேவை, பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அடிப்படை உதவி.

1987-ல் எம்ஜியார் செய்தார்!....செயலிழந்த

நிலையிலும்!!

கப்பல் மறிக்கப்பட்ட நிலையிலும், விமானம் மூலம் இந்திய அரசு உதவி அளிக்க முன்னின்றார்.

அதைச் செய்யுங்கள் இப்போது!

தமிழீழம் கிடைப்பது கடவுள் விட்ட வழி!

அது நிச்சயம் கிடைக்கும்!

ஆனால், அதைக் காண மக்கள் இருக்க வேண்டும்!

நம் தமிழர் உயிரோடு இருக்க வேண்டும்.

தமிழர் தலைவர் எனச் சொல்லிக் கொள்ளும் நீங்கள் இப்போது செய்ய வேண்டியது....

அனைத்துக் கட்சிக் கூட்டம் அல்ல!
உங்கள் பலத்தைப் பயன்படுத்தி, வருந்தும் தமிழருக்கு நிவாரணம் அளிக்க வேண்டியது மட்டுமே!

பதவியில் இல்லாத போது சட்டமன்ற உறுப்பினர் பதவியை துறப்பது அல்ல!
முதல்வர் பதவியை விட்டு விலக அறிக்கை அளிப்பதே, மத்திய அரசைக் கலங்க வைக்கும்!

செய்வீர்களா!

வருந்தும் நம் ஈழத் தமிழரை வாழ வைப்பிர்களா?

செய்வீர்கள் என நம்புகிறேன்!

நன்றி!
வணக்கம்!

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP