"பாரதி" -- சில காட்சிகள்! -- 1
"பாரதி" -- சில காட்சிகள்!
பாரதி கவிதைகள் -- நான் அடிக்கடி படிப்பது!
அவரது பக்திக் கவிதைகள் எனக்கு மிகவும் பிடித்த ஒரு தொகுதி!
மனதுக்கு அமைதி வேண்டுமெனில் இதனைப் படியுங்கள்!
வள்ளுவம் மாதிரி, இதனையும் அவ்வப்போது எழுதிவர எண்ணம்!
பராசக்தி அருளட்டும்!
இதோ! முதல் கருத்து!
"விசையுறு பந்தினைப் போல் உள்ளம்
வேண்டியபடி செல்லும் உடல் கேட்டேன்
நசையறு மனங்கேட்டேன் -- நித்தம்
நவமெனச் சுடர்தரும் உயிர் கேட்டேன்"
நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ எனப் பதறுகிறான் பாரதி!
ஒவ்வொரு மனிதனும் தன்னை உணர்ந்தவன்/ள் தான்!
தன்னால் என்ன முடியும் எனத் தெரிந்த ஒரே மனிதன் அவன்/ள் தான்!
எங்கே தவறு நிகழ்கிறது/
ஏன் அவனா/ளால் தனக்கு விதித்ததை, தன்னல் முடிந்ததைச் செய்ய இயலாமல் போகிறது?
தன்னிலை குலைந்து, தன்னை மறந்து இவன் தடுமாறிப் போவது ஏன்?
பாரதி யோசிக்கிறான்.
முழுமுதற் கடவுளை யாசிக்கிறான்!
கவிதை பிறக்கிறது!
"நீயே சரணம் நினதருளே சரணம் சரணம்
நாயேன் பலபிழை செய்து களைத்து உனை நாடி வந்தேன்!
வாயே திறவாத மௌனத்து இருந்து உன் மலரடிக்குத்
தீயே நிகர்த்தொளி வீசும் தமிழ்க்கவி செய்குவனே."
எனச் சூளுரைக்கிறான்!
'நான் செய்த பிழையெல்லாம் போதும்! இனி நீயே சரணம்! இனி நான் செய்யப்போவதெல்லாம் நின்னைப் போற்றி உன் மலர் அடிகளைப் போற்றி தமிழில் கவி செய்து பாடுதல் ஒன்றே இனி நான் மௌனத்தால் செய்யப் போவது!' என்கிறான்!
இதற்கெல்லாம் காப்பாக இனி எநீயே இருந்து காக்க வேண்டும் எனவும் அவனையே இறைஞ்சுகிறான்!
யாரை?
"கற்பக விநாயகனை!"
அனைத்துச் செயல்களுக்கும் முதல்வனாய் இருக்கின்ற கணபதியைத் தான் போற்றுகின்றார் பாரதி!
இவனைப் பணிந்தால் என்னவெல்லாம் நிகழுமாம்!?
சொல்கிறான்!
"உட்செவி திறக்கும்; அகக்கண் ஒளிதரும்;
அக்கினி தோன்றும்; ஆண்மை வலியுறும்;
திக்கெலாம் வென்று ஜெயக்கொடி நாட்டலாம்;
கட்செவி தன்னைக் கையில் எடுக்கலாம்;
விடத்தையும், நோவையும், வெம்பகை அதனையும்
துச்சம் என்று எண்ணித் துயரிலாது இங்கு
நிச்சலும் வாழ்ந்து நிலை பெற்று ஓங்கலாம்;
அச்சம் தீரும்; அமுதம் விளையும்;
வித்தை வளரும்; வேள்வி ஓங்கும்;
அமரத் தன்மை எய்தவும்
இங்கு நாம் பெறலாம்; இஃது உணர்வீரே!"
வேறென்ன வேண்டுமைய்யா உமக்கு?
இத்தனையும் இந்த கற்பக விநாயகனைப் போற்றிப் பாடினால் கிட்டும் என்கிறான் பாரதி!
சரி! இதெல்லாம் எதற்கு இவனுக்கு வேண்டுமாம்?..... அதையும் சொல்கிறான் உடனே!
'உன் காலை நான் ஏன் பிடிக்கிறேன் தெரியுமா..ஓய் கணபதி! அந்தத் திரு மலர்ப் பாதங்களில் என் கண்ணை ஒற்றி, பலவித நூல்களை நித்தமும் நான் படைத்து, ஒரு நொடி கூட என் செயலைத் தவறாது செய்து வந்து, என் மனத்தினை ஒருமைப் படுத்த நீ அருள வேண்டும் என்பதினாலேதான்'
கணபதி சிரிக்கிறான்!
'உனக்கு வேண்டிய வரங்களைக் கேளடா பாரதி!'
"மனத்தில் சலனம் இல்லாமல்
மதியில் இருளே தோன்றாமல்
நினைக்கும் பொழுது நின் மவுன
நிலை வந்திட நீ செயல் வேண்டும்!
கனக்கும் செல்வம்; நூறு வயது
இவையும் நீ தரக் கடவாயே!"
இதைத்தான் பாரதி உடனே வேண்டுகிறான்!
இப்படி ஏன் வேண்டுகிறான் என சிந்திக்க வேண்டும்!
அதிலும் அந்தக் கடைசி இரு வரிகள்!
"கனக்கும் செல்வம்; நூறு வயது
இவையும் நீ தரக் கடவாயே!"
இது கொஞ்சம் உதைக்கிறது!
பணத்தாசையா! உயிர் வாழும் ஆசையா!
இல்லை! இல்லவே இல்லை!
எந்த ஒரு செயலையும் செய்ய இவை இரண்டும் தேவைப்படுகிறது என உணர்ந்தே, வெட்கத்தை விட்டு பாரதி இப்படி கேட்கிறான்!
நான் செய்யும் நற்செயலகள் மற்றவரைச் சென்றடைய வேண்டுமெனின், என்னிடம் செல்வம் இருக்க வேண்டும்!
இதென்னவோ தற்செயலாக நான் செய்ததில்லை! இதுவே என் நிரந்தரமான செயல்பாடு என மற்றவர் புரிந்து கொள்ள நான் இதனைத் திரும்பத் திரும்பச் செய்ய வேண்டும்!
அதற்கு என்னிடம் பணம் இருக்க வேண்டும்! இதை செய்யும் காலம்.... ஆயுள் இருக்க வேண்டும்!
எனவேதான் பாரதி இப்படி ஒரு கோரிக்கை வைக்கிறான்!
அப்படி என்னதான் பாரதி செய்ய நினைக்கிறான்?
அடுத்த பதிவில் பார்க்கலாம்!
8 பின்னூட்டங்கள்:
//"கனக்கும் செல்வம்; நூறு வயது
இவையும் நீ தரக் கடவாயே!"
இது கொஞ்சம் உதைக்கிறது!
பணத்தாசையா! உயிர் வாழும் ஆசையா!
இல்லை! இல்லவே இல்லை!
எந்த ஒரு செயலையும் செய்ய இவை இரண்டும் தேவைப்படுகிறது என உணர்ந்தே, வெட்கத்தை விட்டு பாரதி இப்படி கேட்கிறான்!//
வீஎஸ்கே ஐயா,
நீங்கள் ஆவிகளுடனும் பேசுபவரா ?
:)
ஆகா, இனிதே அமுதைச் சுவைத்தேன்.
அழகைச் சுவைத்தேன், அருளைச் சுவைத்தேன், மிக்க நன்றிகள் ஐயா.
//கனக்கும் செல்வம்//
பொருட்செல்வமா, அருட்செல்வமா என குறிப்பிடவில்லையே?
அடுத்து வரிகள் அதற்கு ஏதும் குறிப்பிருக்கும் என நினைக்கிறேன்...
நல்ல தொடரைத் தொடங்கினீர்கள் எஸ்.கே. நானும் தனிப்பதிவாகத் தொடங்கி தொடர்ந்து எழுதிவந்தேன். இப்போது நண்பர்கள் பதிவுகளையும் படிப்பதில் நேரம் கொஞ்சம் செல்வதால் முன்பு எழுதிய அளவிற்கு எழுத இயலுவதில்லை. உங்களது இடுகைகள் பலவும் படிக்க சேமித்து இன்னும் காத்துக் கொண்டிருக்கின்றன.
விசையுறு பந்தினைப் போல் உள்ளம் வேண்டிய படி செல்லும் உடல் இல்லாததால் தான் அந்த வேண்டுதல்கள் எல்லாம் கனவுலகத்தில் நிறைவேறுகிறது. :-) இந்த வரிகளைப் படிக்கும் போதெல்லாம் வெவ்வேறு உணர்வுகள் தோன்றுவதுண்டு. இப்போதெல்லாம் அடிக்கடி இந்தியத் திருக்கோவில்களுக்கு கனவில் செல்வதால் இந்த வரிகளை இப்போது படித்த போது கனவுகளைப் பற்றி தோன்றியது போலும். :-)
உள்ளம் வேண்டியபடி என்று சொல்லிவிட்டு உடனேயே நசையறு மனம் கேட்கிறார். என்ன முரண்? பிறவாமை வேண்டும் அப்படியே பிறந்தாலும் உன்னை மறவாமை வேண்டும் என்று கேட்டது போல் இருக்கிறது. நசையறு மனம் வேண்டும்; அப்படியே ஆசையில்லாத மனம் கிடைக்காவிட்டால் உள்ளம் வேண்டிய படியெல்லாம் நடக்க வேண்டும். நல்ல கிடுக்குப்பிடி. பாவம் என்ன தான் செய்வாள் பராசக்தி? :-)
கணபதி பாடல்களுக்கு நல்லதொரு விளக்கம் எஸ்.கே. அப்படியே முடிந்தால் 'பாட்டுக்கொரு புலவன் பாரதி' பதிவிற்குச் சென்று பாருங்கள். விநாயகர் நால்மணி மாலை பாடல்களைப் பற்றி பேசியிருக்கிறேன்.
பாரதியா! ஆஹா! நடக்கட்டும். மன்னாரையும் பாரதியையும் கோத்து விட்டுடப்போறீங்க!
//வீஎஸ்கே ஐயா,
நீங்கள் ஆவிகளுடனும் பேசுபவரா ?//
இல்லை கோவியாரே!
பாரதியை உணரத் துடிப்பவன்!
:))
////கனக்கும் செல்வம்//
பொருட்செல்வமா, அருட்செல்வமா என குறிப்பிடவில்லையே?
அடுத்து வரிகள் அதற்கு ஏதும் குறிப்பிருக்கும் என நினைக்கிறேன்...//
இல்லைங்க!
அதோட அந்த வரிகள் முடிகின்றன!
//அப்படியே முடிந்தால் 'பாட்டுக்கொரு புலவன் பாரதி' பதிவிற்குச் சென்று பாருங்கள். விநாயகர் நால்மணி மாலை பாடல்களைப் பற்றி பேசியிருக்கிறேன்.//
உங்க அளவுக்கு என்னால் முடியாது குமரன்!
இது வேறு ஒரு பார்வை!
இதையும் வந்து பார்த்து சொன்னதுக்கு எனது நன்றி!
//மன்னாரையும் பாரதியையும் கோத்து விட்டுடப்போறீங்க!//
உங்க பயம் புரியுது திவா!
மன்னார் வள்ளுவனுக்குத்தான்!
:))
Post a Comment