Thursday, November 13, 2008

"கந்தன் கருணை" [கவிதைத் தொடர்] -- 4

"கந்தன் கருணை" [கவிதைத் தொடர்] -- 4
[ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்]

காலையில் எழுந்ததும் சேவலின் கூவலைநான் கேட்டேன்
சோலையில் கூவிடும் இன்னிசைக் குயிலொலிநான் கேட்டேன்
என் முருகன் இவனே இவனே எனச் சூடிடும் உரு பார்த்தேன்
என் குமரன் அழகன் இவனே எனப் பாடல்கள் புனைந்திருந்தேன்


கடும்போர் செய்தான் கொடுஞ்சூரன்
கணைகளை அனுப்பித் தாக்கிட்டான்
கடைக்கண் பார்வை பட்டதுமே
கணைகளும் பொடியாய்ப் போனதம்மா

சூரன் வியந்தான் பயந்தான்
வானத்தில் ஏகி மறைந்தான் [காலையில்]

விண்வெளி சென்றிட்ட சூரபத்மன்
மேகத்தில் நின்று கணை தொடுத்தான்
பார்த்திட்ட முருகன் முறுவல் செய்தான்
வேலினை எடுத்து விண் விட்டான்

சூரனைத் தேடிய சூர்வேலும்
மேகத்தைக் கிழித்துச் சென்றதங்கே [காலையில்]

வான்வழி மறைத்த கூர்வேலின்
போரினைத் தாங்கிட முடியாமல்
இத்தரை மீதினில் சூர் வந்தான்
கடலுக்கு அடியில் ஒளிந்து கொண்டான்

தனிவேல் அவனைத் துரத்தியது
கடலினை வற்றிடச் செய்ததுவே [காலையில்]

தேரினை இழந்த சூரரக்கன்
ஆயுதமின்றி நின்றிடவே
அவனைக் கொல்லுதல் பாவமென்று
நாளை வந்திட அருள் செய்தான்

கந்தன் கருணையின் வடிவம்
அவன் என்னுடை குலத்தின் தெய்வம் [காலையில்]

கொடுஞ்சூர் அரசன் தலைகவிழ்ந்தான்
தனிமரமாகத் திரும்பிச் சென்றான்
வாளால் அறுத்தவன் மனத்தையங்கு
வாளாய் அறுத்தது தீவினையும்

அறஞ்செயின் முருகன் அருள்பெறலாம்
மறஞ்செயின் அவனே அழித்திடுவான் [காலையில்]

வேதனை தன்னைத் தாக்கிடவே
போனதும் கண்முன் ஆடிடவே
உறக்கம் இழந்தான் சூரசுரன்
மறுநாள் போருக்குத் தயாரானான்

அணையும் விளக்காய் அவன்வந்தான்
அணைக்கும் கரமாய் அழகன் நின்றான் [காலையில்]

எதிர்வந்த கணையெல்லாம் துகளாக
இளையவன் வியக்கும் போர்புரிந்தான்
இதுவரை ஆடிய ஆட்டத்தினை
விரைவாய் முடித்திட அருள்கொண்டான்

வேலை எடுத்தான் வேல்முருகன்
சூரன்மேல் விட்டான் சுந்தரனே [காலையில்]

காற்றெனப் பறந்தது கூர்வேலும்
மாற்றிதற்கில்லை எனும் படியாய்
கூற்றுவன் கணக்கையும் முடித்திடவே
கூர்வேல் சீறிப்பாய்ந்ததுவே

மரமாய்ச் சூரன் மாறிநின்றான்
மாமரம் துளைத்தது கூர்வேலும் [காலையில்]

இருபுறம் மரமும் பிளந்திடவே
சூரன் விழுந்தான் நிலத்தினிலே
சேவலும் மயிலுமாய்த் தானெழுந்தான்
வேலவன் சேவடி வந்தடைந்தான்

அழித்தல் இங்கே நடக்கவில்லை
ஒன்றே இரண்டாய் ஆனதுவே! [காலையில்]

சேவலைக் கொடியாய்த் தான்கொண்டான்
மயிலை வாகனம் ஆக்கிநின்றான்
வானவர் பூமழை பொழிந்தனரே
கொடுஞ்சூர் அழிந்ததில் மகிழ்ந்தனரே

வேல்வேல் வேல்வேல் வேல்வேல்
எனும் முழக்கம் விண்ணைப் பிளந்ததுவே [காலையில்]

தேவரை விடுதலை செய்தானே
தேவேந்திரனும் மனம் மகிழ்ந்தானே
அழகனை அரசனாய் முடிசூட
இந்திரன் பணிந்தே நின்றானே

அரசன் இவனே இவனே- இவன்
இந்திரனை அரசாக்கினானே [காலையில்]

நன்றிக்கடனைச் சொல்லிடவே
இந்திரன் தன்மகள் தந்தானே
தாயும் தந்தையும் அருள்வழங்க
பரங்குன்றில் திருமணம் கொண்டானே

தெய்வானை என்னும் திருமகளை
முருகன் துணையாய்க் கொண்டானே [காலையில்]

காலையில் எழுந்ததும் சேவலின் கூவலைநான் கேட்டேன்
சோலையில் கூவிடும் இன்னிசைக் குயிலொலிநான் கேட்டேன்
என் முருகன் இவனே இவனே எனச் சூடிடும் உரு பார்த்தேன்
என் குமரன் அழகன் இவனே எனப் பாடல்கள் புனைந்திருந்தேன்!
**********************************************************
[இத்துடன் "கந்தன் கருணை" முதல் பாகம் நிறைவடைந்தது. புதுப் பொலிவுடன், வித்தியாசமான நடையில், இரண்டாம் பாகம் திங்கள் முதல் தொடரும்! இதனை எழுத எனக்கு ஊக்கம் அளித்த என் துணைவிக்கு இந்த நேரத்தில் என் அன்பு கலந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்! முருகனருள் முன்னிற்கும்!]

8 பின்னூட்டங்கள்:

Kannabiran, Ravi Shankar (KRS) Friday, November 14, 2008 11:40:00 AM  

//என் முருகன் இவனே இவனே
எனச் சூடிடும் உரு பார்த்தேன்//

ரொம்ப நேரம் ஹம் பண்ணிக்கிட்டு இருந்தேன் இந்த வரிகளை!
அடுத்த முறை ஆலயமணியின் ஓசை பாட்டு கேக்கும் போது வரி மாத்திப் பாடப் போறே-ன்னு இப்பவே தெரிஞ்சி போச்சி SK!:)

Kannabiran, Ravi Shankar (KRS) Friday, November 14, 2008 11:41:00 AM  

வித்தியாசமான முயற்சி!
மொத்த கந்த புராணமும் இப்படியே சொல்லிடுங்க!
பாட்டாகவும் பாடிடலாமே SK?

Anonymous,  Friday, November 14, 2008 12:55:00 PM  

//அறஞ்செயின் முருகன் அருள்பெறலாம்
மறஞ்செயின் அவனே அழித்திடுவான் //

அறந்தனை புறந்தள்ளி அராஜகம் தலைவிரித்தாடும்
தரணிக் இப்போ வேண்டும் மீண்டும் மயிலோன் விஜயம்
வருக வருக மயூரேசரே வருக
பொழிக பொழிக நின்தன் அருள்நிறை கருணை.


கந்தன் கருணையின் அழகிய ஆக்கத்துக்கு
உங்கள் துணைவியாருக்கும், உங்களுக்கும்
எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!

VSK Friday, November 14, 2008 10:26:00 PM  

////என் முருகன் இவனே இவனே
எனச் சூடிடும் உரு பார்த்தேன்//

ரொம்ப நேரம் ஹம் பண்ணிக்கிட்டு இருந்தேன் இந்த வரிகளை!
அடுத்த முறை ஆலயமணியின் ஓசை பாட்டு கேக்கும் போது வரி மாத்திப் பாடப் போறே-ன்னு இப்பவே தெரிஞ்சி போச்சி SK!:)//

நிஜமாவா ரவி! மகிழ்ச்சியா இருக்கு!

VSK Friday, November 14, 2008 10:27:00 PM  

//வித்தியாசமான முயற்சி!
மொத்த கந்த புராணமும் இப்படியே சொல்லிடுங்க!
பாட்டாகவும் பாடிடலாமே SK?//

//....பாடப் போறே-ன்னு இப்பவே தெரிஞ்சி போச்சி SK!:)....//

அதான் சொல்லிட்டீங்களே! பாடிக் கலக்குங்க ரவி!:))

VSK Friday, November 14, 2008 10:39:00 PM  

பெயர் சொல்லா திருந்த போதும்
கருணை வெள்ளம் அனைத்தும் பெற்று
கந்தனைக் கூட்டிச் செல்ல வந்திருக்கும் அனானியாருக்கு என் மனமார்ந்த நன்றி!

கோவி.கண்ணன் Saturday, November 15, 2008 1:56:00 AM  

தலைகள் பேலன்ஸ் இல்லையே, ஒருபக்கம் 2 மறுபக்கம் 3, ஹெட் வெயிட் ஏற்படாதா ?

VSK Saturday, November 15, 2008 1:58:00 PM  

முருகனிடம் கேட்டேன்.
மொத்தமா கோவி கிட்ட கொடுத்தாட்டாராம் இந்த ஹெட் வெயிட்டை எல்லாம். அதனால் அவருக்கு அது இல்லியாம்!:))

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP