Tuesday, November 18, 2008

"கந்தன் கருணை" [இரண்டாம் பாகம்] - 3

"கந்தன் கருணை" [இரண்டாம் பாகம்] - 3
"மனவேடன் காதல்" - 3
'மனவேடன் கூற்று'

நலிந்திட்ட வேளையிலும் நாணமது விலகவில்லை! நிமிர்ந்தென்னை நோக்கியவள் வேதனையை மறைத்தபடி, " ஆருமில்லாக் காடென்று அப்படியே நினைத்தாயோ! காடுமலை வனமெல்லாம் சொந்தமிங்கு எங்களுக்கு!

இம்மென்றால் ஆயிரம் பேர் இப்போதே வந்திருந்து, 'ஏதுமறியாப் பெண்ணிவளை ஏதுசெய்ய எண்ணினாயடா?' எனச்சொல்லி கட்டியிழுத்திடவே துணிவுண்டு என்னிடத்தில்!" எனச் சொல்லிச் சிடுசிடுத்தாள்!

பசியங்கு வாட்டுகின்ற வேளையிலும் பத்தினியாள் பனிமுகத்தில் படர்ந்துவிட்ட செம்மையதைக் கண்டு யானும் மனத்துள்ளே மகிழ்ந்திடினும், கருமுகத்தில் படர்ந்திட்ட செம்மையது காட்டுகின்ற வண்ணக் கலவையதை மேலும் சற்றுக் கண்டிடவே எட்டியவள் கைபிடித்தேன்!

"யாருமில்லா வேளையிலே மரத்தடியில் நீ கிடக்க, மேனியெலாம் சிராய்த்திடவே செங்குருதி வெளிக்காட்ட கருந்தோலில் அரும்புகின்ற காயத்தைக் குறைத்திடவே மருந்தொன்று வைத்திருக்கேன்! மாதரசி மடி வாடி! "எனச்சொல்லி ஆதரவாய் அவள் கையைப் பற்றியதும் அவள் சினந்தாள்!

வெடுக்கென்று தன்கையை உதறியவள் எனைப் பார்த்து, ' காட்டினிலே பிறந்தவள் நான்! காயமெனக்குப் புதிதில்லை! என் குருதி காணுவதும் இதுவல்ல முதல் தடவை! உன் வழியைப் பார்த்த படி நீ செல்ல இயலாதெனின், இப்போதே வீரர்களை இங்கேயே யானழைப்பேன்' என்றபடி ஓலமிட்டாள்! "எல்லாரும் வாங்க" என்றாள்!

தூரத்தே வேட்டுவரும் ஓடிவரும் ஒலிகேட்டு, கண்நிறைந்த காதலியைக் கண்களினால் பார்த்தபடி, பற்றிநின்ற கைகளையும் விட்டிடாது அப்படியே மரமாகி நின்றிருந்தேன்.. வேங்கை மரமாகி நின்றிருந்தேன்.... செவ்வல்லிக் கைகளையும் கிளைகளினால் வளைத்தபடி!

'வனவள்ளி இசைக்கிறாள்!'

நானிட்ட ஓலமதைக் கேட்டுவந்த சோதரரும் ஆதரவாய் எனைநோக்கி 'நடந்ததென்ன கூறு' என்றார்!
'கானகத்தே தனியளாக நானிருந்த வேளையினில் வனவேடன் வேடம்கொண்டு வஞ்சகன் ஒருவன் வந்தென்னை வம்புகள் செய்தான்

நானழைத்த குரல்கேட்டு நீவிரிங்கே வருகின்ற ஒலிகேட்ட வனவேடன் மரமாகி எனை வளைத்தான் பாரண்ணா!' என்றேன்!
மரக்கிளைகள் எனைவளைக்க நானிருந்த கோலம் கண்ட நண்பான சோதரரும் தமக்குள்ளே பார்த்தபடி வாய்விட்டுச் சிரிக்கலானார்!

'அக்கரையில் யாமிருக்க எமைப்பார்க்க நீவேண்டி அக்கரையாய்ச் சொன்னதிந்தக் கதையினை நாம் நம்பமாட்டோம்
ஆளிங்கு மரமாதல் அவனியிலே கண்டதில்லை! அடுக்கடுக்காய் பொய் சொல்லும் துடுக்கான பெண்ணரசி!

யாமிருக்கும் இவ்வனத்தில் வேறொருஆள் வருவதுவும் இயலாத செயலென்றே இன்னமும் நீ உணர்ந்திலையோ
வேடிக்கை செய்யவிது நேரமல்ல! வேலை மிகவிருக்கு!' என்றபடி அன்புடனே எனைத் தழுவி விடைபெற்றுச் சென்றிட்டார்!

பொய்யுரைத்தேன் எனச் சொன்ன சொல்லதுவைத் தாங்கிடாமல் மீண்டுமெனைக் கிள்ளிப் பார்த்தேன்.
உணர்வின்னும் அப்படியே உள்ளபடி தானிருக்கு! கனவெதுவும் காணவில்லை! கண்டதுவும் கனவில்லை.

மரமாகிப் போனவனின் மதிமுகமும் நினைவில் வர மறைக்கவொண்ணா நாணத்துடன் மரக்கிளையைத் தடவிவிட்டேன்!
மரம் அங்கு மறைந்து போச்சு! மனவேடன் மீண்டும் வந்தான்! வில்லொன்றைத் தாங்கியவன் முகவடிவைப் பார்த்தவுடன் நாணத்தால் மிக வேர்த்தேன்!

பொய்யளென எனைச் சுட்டிய கள்ளனிவன் எனும் நினைப்பு மனத்தினிலே பொங்கிவர மறுபடியும் கோபமங்கு முகத்தினிலே துளிர் விட்டது!
'ஆரடா நீ? ஏனிப்படிச் செய்திட்டாய்? அவப்பெயரை எனக்களித்து நீ மறைந்து செல்லலிங்கு மறவர்க்கு அழகாமோ?

மறுபடியும் நானவரை அழைத்திட்டால் என் செய்வாய்? எனச் சிடுசிடுத்து கோபவிழி விழித்திட்டேன்!
கலகலவென அவன் சிரித்த சிரிப்பெந்தன் கோபத்தை எரிகின்ற நெருப்பினிலே விறகள்ளிப் போட்டாற்போல் மிகுதூட்டியது!

'செய்வதையும் செய்துவிட்டு சிரிப்பென்ன சிரிப்பு! நம்பியாளும் காட்டினிலே எதனை நம்பி நீயிங்கு வந்தாய்?
சீக்கிரத்தில் சொல்லாவிடின் பேராபத்து விளையுமுனக்கு' என்றவனைப் பார்த்தபடி கடுமையாக முகம் மாற்றிச் சீறினேன்!

'கோபத்திலும் கூட நீ இன்னமும் அழகாய்த்தானிருக்கிறாய்! கருமைநிற முகவடிவில் செம்மை படர்வதும் சிறப்பாய்த்தானிருக்கிறது' என்றவன் சொன்னதுமே நாணமும் கூடச் சேர்ந்து இன்னும் செம்மையானேன்!
கண்களைச் சற்று தாழ்த்தியபடி, முகத்தில் சற்று அச்சம் படர 'சோதரர்மார் எனைத்தேடி வருகின்ற வேளையிது! சீக்கிரத்தில் அகன்றுவிடு' என்றேன்!

'மனவேடன் கூற்று':

சினந்தவளின் முகவடிவில் நான் மயங்கிப் போனேன்! சிந்தையெலாம் சுழன்றிடவே அன்புடன் அவளை நோக்கி,

'தேடிவந்த மானொன்று திசை தவறி இவ்வழி வந்தது!
காயாத கானகத்திருக்கும் கண்கவர் மான் அது!
இங்குமங்கும் சென்று மேயாத மான் அது!
கண்டவர் எல்லாம் வியக்கும் பேரெழில் மான் அது!
அண்டவந்து எவருமே கைபிடிக்க இயலாப் புள்ளி மான் அது!
கைக்கெட்டும் அருகினில் இருப்பதுபோல் போக்குக் காட்டி, கிட்டவரின் கிட்டாத மான் அது! புள்ளிமானொன்றை கண்டனையோ, கன்னியிளமானே!' என்றேன் ஓரக்கண்ணால் அவளை அளந்தபடி!

'மானொன்றும் காணவில்லை; மயிலும் நான் காணவில்லை! கன்னியிளமானென்று எனை நீ சீண்டுவதும் முறையில்லை!
தேடிவந்த புள்ளிமானைத் தேடி நீ சென்றுவிட்டால் எல்லாமும் நலமாகும்; நின்னுயிரும் பிழைத்துவிடும்' என்றாள் அந்த மானும், மருண்ட தன் கண்களை இங்குமங்குமாய் ஓடவிட்டபடி!

மனதுக்கினியாளுடன் இன்னும் கொஞ்சம் விளையாட எண்ணி, 'மானுனக்குப் பிடித்திருந்தால் வேணுமென்று சொல்லிவிடு!
அதைவிடுத்து மானில்லை இங்கு என பொய்யுரைத்தல் சரியன்று! மானொன்று இங்குவந்த அடையாளம் நான் கண்டேன்!

சற்று முன்னர் நின் அண்ணன்மார் பொய்யள் என நினைப் பழித்த சேதியெல்லாம் கேட்டிருந்தேன்! என்னிடமும் அதே கள்ளம் சொல்லாதே பெண்ணே' என்றேன் முறுவலுடன்!

கோபமின்னும் அதிகமாக, செவ்விதழ்கள் துடிதுடிக்க, ஆத்திரத்தில் மார்பின்னும் படபடக்க அல்லிமகள் கவண் கையெடுத்தாள்!

உரிமையுள்ள சோதரர் எனைச் சொன்னால் பொறுத்துக்கொள்வேன்! முன்பின்னறியா நீ யார் என்னைப் பழிப்பதற்கு? ஆருமில்லா ஆளென்று நினைத்தனையோ? அல்லது வெறுங்கையளென எண்ணினாயோ!

கையிலுண்டு கவண்கல்லு! விட்டெறிந்தால் முகம்தெறிக்கும்! நில்லாதே என் முன்னே! தேடிவந்த புள்ளிமானை நீயும் தேடிப்போ' எனப் படபடத்தாள்!

'கண்மயங்கி விழுந்தவளைக் காப்பாற்ற வந்தவர்க்கு நீ கொடுக்கும் கவண்கல் மரியாதை அழகாய்த்தான் இருக்கிறது!

கோபம் கொள்ளாதே மடமானே! செல்லுகிறேன் இப்போதே' எனச் சொல்லி, கருணை காட்டி மனதிலிடம் பெற்றிடலாம் எனுமெண்ணம் நிறைவேறா ஏக்கத்துடன் அங்கிருந்து அகன்றேன்!


மனவேடன் இனி என் செய்வான்?
*********************************

[நாளை வரும்!]

0 பின்னூட்டங்கள்:

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP