"கந்தன் கருணை" - 2
"கந்தன் கருணை" [கவிதைத் தொடர்] - 2
[ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்]
காலையில் எழுந்ததும் சேவலின் கூவலைநான் கேட்டேன்
சோலையில் கூவிடும் இன்னிசைக் குயிலொலிநான் கேட்டேன்
என் முருகன் இவனே இவனே எனச் சூடிடும் உரு பார்த்தேன்
என் குமரன் அழகன் இவனே எனப் பாடல்கள் புனைந்திருந்தேன்
அரக்கன் சூரனை அழித்திடவே
அன்னையும் தந்தாள் சக்திவேலை
நவவீரர் துணையுடன் புறப்பட்டான்
தென்திசை நோக்கி அவன் சென்றான்
வேலைப் பணிவாய் மனமே- உன்
வினைகள் தீர்ந்திடும் நிஜமே [காலையில்]
செந்தூர்க் கரையில் அவன் நின்றான்
அலைகடல் அதிரவே ஆர்ப்பரித்தான்
வீரவாகுவைத் தூது விட்டான்
வன்முறை தவிர்த்திடக் கெடு வைத்தான்
அழிபவன் எதையும் கேட்பதில்லை
அழிவதும் விதிவசம் நிகழ்வதுவே [காலையில்]
தூதனைச் சூரனும் அவமதித்தான்
முருகனைச் சிறுபிள்ளை என்றிகழ்ந்தான்
போருக்கு வரச் சொல்லி மதியிழந்தான்
அழிவைத் தானே தேடிக் கொண்டான்
இறைவன் முருகன் முறுவல் செய்தான்
கடலினைக் கடந்து ஈழம் வந்தான் [காலையில்]
தாரகன் என்னும் ஒரு தம்பி
சூரனின் சொல்லால் மதியிழந்து
மலையென எதிரில் மறைத்திருந்தான்
மாயக் குகையாய் தடுத்து நின்றான்
உட்சென்ற வீரர்கள் மயங்கி நின்றார்
வெளிவர வழியின்றி கலங்கி நின்றார் [காலையில்]
நிலைமை அறிந்த கந்தவேளும்
வேலினை அனுப்பிட முடிவெடுத்தான்
கூர்வேல் மலையைக் கிழித்ததுவே
மலையெலாம் பொடிப்பொடி ஆனதுவே
தாரகன் அழிந்தான் அழிந்தான்
வீரர்கள் மயக்கம் தெளிந்தார் [காலையில்]
தாரகன் அழிந்த சேதிகேட்டு
தமையன் துடித்தான் ஆத்திரத்தால்
சிங்கமுகாசுரன் எனும் தம்பி
தானே போரிடப் புறப்பட்டான்
தானென்னும் ஆணவம் கொண்டவனும்
தன்கதை முடித்திடப் புறப்பட்டான் [காலையில்]
தலைகள் கீழே விழ விழவே
வேறோர் தலைகள் முளைத்திடவே
வரமதைப் பெற்றிட்ட சிங்கமுகன்
தருக்கினால் கந்தனின் எதிர்வந்தான்
வேலுக்கு முன்னெவர் வரமுமிங்கு
நில்லாதெனவறியா மூடன் [காலையில்]
ஆயிரம் தலைகளை வெட்டியின்னும்
அசையாதிவனும் நிற்கையிலே
பூதப்படைகள் பயந்தோடி
நாலாபுறமாய்ச் சிதறியதே
முருகன் சிரித்தான் சினந்தான்
வேலினை விடுத்தொரு மூச்சு விட்டான் [காலையில்]
சீறிப் பாய்ந்தது வேலங்கு
சிங்கமுகன் மார் துளைத்ததுவே
சிரத்தைக் கொய்து வேலவனின்
காலடியில் கொண்டு சேர்த்ததுவே
அரக்கனும் மடிந்தான் அழிந்திட்டான்
பூதப் படைகளும் எழுந்தனவே! [காலையில்]
*********************************
[கந்தன் கருணை தொடரும்!]
4 பின்னூட்டங்கள்:
//காலையில் எழுந்ததும் சேவலின் கூவலைநான் கேட்டேன்//
உங்க ஊரில் சேவல் இருக்கிறதா ? அப்படி இல்லை என்றால் கவலைப்படாதீர்கள், சில அலார்ம் டைம் பீஸ்களில் சேவல் குரலை வைத்திருக்கிறார்கள், 4.30 மணிக்கு அலார்ம் வைத்தால் சேவல் கூவல் கேட்கலாம்
அழகுமுருகன் ஆடி வருகையிலே
அச்சமென்ன அவலமென்ன
எங்கும் எதிலும் வெற்றிமயமே. )
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா!
//காலையில் எழுந்ததும் சேவலின் கூவலைநான் கேட்டேன்//
உங்க ஊரில் சேவல் இருக்கிறதா ? அப்படி இல்லை என்றால் கவலைப்படாதீர்கள், சில அலார்ம் டைம் பீஸ்களில் சேவல் குரலை வைத்திருக்கிறார்கள், 4.30 மணிக்கு அலார்ம் வைத்தால் சேவல் கூவல் கேட்கலாம்//
அது அலார்ம் வேண்டுபவர்க்கு, கோவியாரே!
பாடலைக் கவனியுங்கள்!
சேவல் கூவி நான் எழவில்லை!
முருகனடியார்கள், சேவலின் கூவலுக்காகக் காத்திராமல், அதற்கு முன்பே எழுந்துவிடுவார்கள் எனும் பொருளில் அமைத்திருக்கிறேன்.
பின்னூட்டத்தைத் தொடங்கி வைத்தமைக்கு நன்றி!:))
முமு
//அழகுமுருகன் ஆடி வருகையிலே
அச்சமென்ன அவலமென்ன
எங்கும் எதிலும் வெற்றிமயமே. )
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா!//
சிறப்பான வரிகளுடன் முருகன் பெருமை போற்றியமைக்கு நன்றி!!
முமு
Post a Comment