"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!" -- 6
"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!" -- 6
முந்தைய பகுதி இங்கே!
4. "வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது." [377]
அப்படிச் சுற்றுவது அவனுக்கு மிகவும் பிடித்த ஒன்று.
இங்கு வருவோர், போவோர் எல்லாரும் அவனுக்கு அதிகம் தெரியாதவர்கள்!
சிலரை அவ்வப்போது பார்த்தாலும், மிக நெருக்கமாக எவருடனும் பழக வேண்டிய நிர்ப்பந்தம் இங்கில்லை!
அடிக்கடி பார்த்துப் பேசுவதில் ஒரு அபாயம் இருக்கிறது.
நன்கு தெரிந்து போவதாலேயே, ஒருவரைப் பற்றி ஒரு விசேஷ அக்கறை பிறக்க ஆரம்பிக்கிறது.
அவர்கள் நலனில் கொண்ட அக்கறை, இவனை அவர்கள் விருப்பத்துக்குத் தக்கவாறு மாறணும் என அவர்களை நினைக்க வைக்கிறது!
அப்படி நிகழாவிட்டாலோ, உடனே கோபம் வரத் துவங்குகிறது, அவர்களுக்கு.
அடுத்தவர் எப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டும் எனத் தெளிவாக இருக்கும் இந்த மனிதர்கள் தன்னைப் பற்றி அவ்வாறு சிந்திக்கிறார்களோ
என்றால் அதுதான் கிடையாது!
சட்டெனச் சிரிப்பு வந்தது கந்தனுக்கு!
கூடவே கோபமும் வந்தது!
செல்லியையும் காணவில்லை.
வயிறு பசிக்க ஆரம்பித்தது.
அருகில் இருந்த பலகாரக் கடைப் பக்கம் சென்று, சோறு வாங்கிக் கொண்டு, கையிலிருந்த புத்தகத்தைப் பிரித்து, சாப்பிட்டுக் கொண்டே,
விட்ட இடத்திலிருந்து படிக்கத் துவங்கினான்!
'எப்ப படிச்சாலும் இந்த வாயுல நுழையாத பேருங்களை எல்லாம் நினைவுல வெச்சுக்கவே முடியறதில்ல!' என வாய் விட்டுச் சொல்லிக் கொண்டே
படிக்கும் போது,
'தம்பி ஏதோ படிக்கறாப்புல இருக்கு' எனச் சொல்லிக் கொண்டே பக்கத்தில் வந்து அமர்ந்தான் ஒரு வயதானவன்.
செல்லியைப் பார்க்க முடியாமல் போன கடுப்பில் இருந்த கந்தனுக்கு, இந்த ஆளின் வருகை எரிச்சலூட்டியது.
'அதான் தெரியுதில்ல' எனச் சொல்லிக் கொண்டே அவனை ஒதுக்கி மேலும் படிப்பது போல பாவனை செய்தான்.
கிழவன் விடுவதாயில்லை.
'சாப்ட்டு ரெண்டு நாளாச்சு! கொஞ்சம் அரிசி சோறு கொடேன்' எனக் கெஞ்சவே, அரை மனதோடு, தன் சாப்பாட்டு இலையைப்
பாதியாகக் கிழித்து, ஒரு பகுதி சோற்றை அதில் தள்ளி, 'இந்தா. சாப்பிடு!' என அவனுக்கு அளித்தான்.
'என்னா புஸ்தகம் அது?' ஒரு வாய் சோற்றை அள்ளி வாயில் போட்டுக் கொண்டே, கிழவன் தொடர்ந்தான்.
'அதான் சோறு குடுத்தாசில்ல? இன்னும் எதுக்கு என்னிய தொந்தரவு பண்றே?' எனக் கேட்க வாயெடுத்தவனுக்கு,
அவன் அம்மா சொன்னது நினைவுக்கு வந்தது..."பெரியவங்க ஆராயிருந்தாலும், மரியாதையா நடந்துக்கோ"!
'ஆமா! இதான் படிக்கறேன்' என்றபடி புத்தகத்தை அவரிடம் நீட்டினான்.... படிக்க முடியாமல் அவர் இடத்தைக் காலி பண்ணிடுவார்
என நினைத்து!
"ம்ம்ம்! இதுவா?" என்றபடி சில பக்கங்களைப் புரட்டிவிட்டு, "நல்ல புஸ்தகம் தான். ஆனா படிக்கக் கொள்ள எரிச்சலா இருக்கும்"
என்றவுடன் கந்தனுக்கு ஒரே அதிர்ச்சி!
இந்தாளுக்கு படிக்க மட்டுமில்ல, இந்தப் புத்தகத்தையும் படிச்சிருக்காரு என்ற உண்மை புரிய, அவர் மேல் ஒரு மதிப்பு வரத் துவங்கியது.
"வேற எதுலியும் சொல்லாத பெரிய விசயம் எதுவும் இதுல சொல்லிறலை. ஒலகத்துல எவனுக்கும் தன்னோட லட்சியம் எதுன்னு தெரியறதில்ல
அப்படீன்றதைத்தான் இதுவும் சொல்லுது. அது மட்டுமில்ல.இந்த ஒலகத்துல இதுவரைக்கும் சொன்ன மஹா பெரிய பொய்யைத்தான்,
ஒவ்வொர்த்தனும் நம்பறான்னு இது முடியுது" என்று சொன்னவரை ஆச்சரியத்துடன் பார்த்தான் கந்தன்!
அதென்ன உலக மகா பொய்யி? என்றான்.
"அதுவா? ஒவ்வொருத்தனும், அவனவன் வாழ்க்கையில ஒரு கட்டத்துல, போராடிப் போராடிப் போயி, அதையும் மீறிகிட்டு தனக்கு நடக்கறதை பொறுத்துக்க முடியாம,
எல்லாம் விதிப்படி நடக்குது, விதி எனக்கெதிரா சதி செய்யுதுன்னு முடிவு பண்ணிடறான். அதான் மிகப் பெரிய பொய்யி!"
"கொளப்பறீங்களே சாமி!"
"என்னா சொல்ல வரேன்னா, தோல்வியைக் கண்டு தொவண்டு போயிடறான். மேலே தொடராம விட்டுர்றான். அதுக்கு விதி மேல பழியைப் போட்டுடறான். அதான் பொய்யின்னு சொல்றேன்."
'நல்லவேளையா அப்படில்லாம் எதுவும் எனக்கு ஆவலை! படிக்கணும்னு நினைச்சேன், இப்போ ஆடு மேய்க்கறேன்" என்றபடி சிரித்தான் கந்தன்
ரொம்ப நல்லது! அப்பத்தான் நீ நெனச்ச மாரி பல ஊருக்கும் போவ முடியும். இல்லியா?"
"நான் நினைக்கறதை இவர் கரெக்டா சொல்றாரே" என்று எண்ணிய கந்தன், கொஞ்சம் மரியாதையோடு,
"அய்யாவுக்கு எந்த ஊரு?" என வினவினான்.
"நமக்கு எல்லா ஊருந்தான்" என்றான் கிழவன்!
"அதெப்படி? எல்லா ஊருக்கும் வேணுமின்னா போவலாம் . ஆனா, எதுனாச்சும் ஒரு ஊருலேர்ந்துதானே வரணும் யாரும்?" என அவரை
மடக்கினான் கந்தன்.
"அப்டீன்றியா? அப்போ சரி. எனக்கு ஊரு சிதம்பரம்னு வெச்சுக்க"
சிதம்பரம் என்ற பெயரை இதற்கு முன் கேள்விப்பட்டிராத கந்தன், அதை வெளிக்காட்ட விரும்பாமல்,
'ஓ! சிதம்பரமா? அங்கே ஆளுங்கள்லாம் எப்படி?' என அமர்த்தாலாக கேட்டான்.
'ஆளுங்களா? அவங்களுக்கென்ன? நல்லாத்தான் இருக்காங்க, அவங்க அவங்க சண்டையை விடாமப் போட்டுகிட்டு!' எனப் பிடி கொடுக்காமல் கிழவன் சொல்ல,பேச்சை மாற்ற எண்ணி,
'அங்கே நீங்க என்ன பண்றீங்க?' என்றான்.
'நான் என்ன பண்றேனா? நல்லாக் கேட்டே போ! நாந்தான் சிதம்பரத்துக்கு ராசா!' என்று ஒரு போடு போட்டான் கிழவன், சிரித்துக் கொண்டே!
'சரியான பைத்தியம் போல! இவருக்கு என்னோட ஆடுங்க எவ்ளவோ மேலு. அதுங்க இது மாரி உளறாது' என மனதுக்குள் எண்ணியபடியே
மீதி சாப்பாட்டை முடிக்க ஆரம்பித்தான்.
பெரியவர் விடுவதாயில்லை.
"என் பேரு கூத்தன்! உம்பேரு கந்தன் தானே! அது சரி.....எவ்ளோ ஆடு வெச்சிருக்கே நீ ?" என்றார்!
[தொடரும்]
********************
29 பின்னூட்டங்கள்:
//அடிக்கடி பார்த்துப் பேசுவதில் ஒரு அபாயம் இருக்கிறது.//
பார்க்காமலேயே பேசும் இடத்திலும் கூட இந்த அபாயம் இருக்கிறது அல்லவா!
;-)
வந்தேன் மகிழ்வோடு!
வருகையைச் சொன்னேன் கனிவோடு!
சித்தரைப் படித்துவிட்டுச்
சீக்கிரம் வருவேன் நெகிழ்வோடு!
///அடிக்கடி பார்த்துப் பேசுவதில் ஒரு அபாயம் இருக்கிறது.
நன்கு தெரிந்து போவதாலேயே, ஒருவரைப் பற்றி ஒரு விசேஷ அக்கறை பிறக்க ஆரம்பிக்கிறது.
அவர்கள் நலனில் கொண்ட அக்கறை, இவனை அவர்கள் விருப்பத்துக்குத் தக்கவாறு மாறணும் என அவர்களை நினைக்க வைக்கிறது!
அப்படி நிகழாவிட்டாலோ, உடனே கோபம் வரத் துவங்குகிறது, அவர்களுக்கு.
அடுத்தவர் எப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டும் எனத் தெளிவாக இருக்கும் இந்த மனிதர்கள் தன்னைப் பற்றி அவ்வாறு சிந்திக்கிறார்களோ
என்றால் அதுதான் கிடையாது!///
மிகவும் மனதைத் தொட்ட வரிகள்!
இந்தக் காலத்துக்கு நீங்க சொல்வது சரியாய் இருக்கலாம்.
இந்தக் கதை நிகழ்ந்த சில ஆண்டுகளுக்கு முன் இது சரிவராது கொத்ஸ்!
சொன்ன வேகத்திலேயே வந்து விட்டீர்களே ஆசானே!
எழுதுகையில் எனக்கும் மிகவும் பிடித்த வரிகள் இவைதான்!
நல்ல விஷயங்கள் நல்லாசிரியரின் கண்ணுக்குத் தப்பாது என்பதை நிருபித்து விட்டீர்கள்.
நன்றி.
உடனே கொத்ஸ் மீண்டும் வந்து, கெட்ட விஷயங்களும் தப்பாதுன்னு சொல்லப் போறார் பாருங்க!
:))
///உடனே கொத்ஸ் மீண்டும் வந்து, கெட்ட விஷயங்களும் தப்பாதுன்னு சொல்லப் போறார் பாருங்க!
:))///
உங்கள் பதிவுப் பின்னூட்டங்களில் அவர்தான்
Bowler - Bouncerளை மட்டுமே போடுவார்
பதிவோடு வாத்தியார் கவிதையும் தூக்குது.
//பார்க்காமலேயே பேசும் இடத்திலும் கூட இந்த அபாயம் இருக்கிறது அல்லவா!//
சிந்தித்துப் பார்த்ததில், நீங்கள் சொல்வதும் இப்போது, இந்தக் காலத்துக்கு நன்றாகவே பொருந்துகிறது, கொத்ஸ்!
விக்கிப்பதிவில், இப்பத்தான் ஒரு பாலில் அதிகபட்சம் எத்த்னை ரன்கள் எடுக்க முடியும் என ஒரு பதிவு போட்டு வந்திருக்கிறார் கொத்ஸ்!
அடுத்து, பௌலிங், பௌன்ஸர் பற்றியா!
கிளப்பி விடறீங்களே ஆசானே!:))
ஆசானுக்கு கவி எழுதுவது பொழுதுபோக்கு!
அவை, இது போன்ற சமயங்களில் வெளிப்படும், திரு.குமார்!
நமக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.
aajar!
Noted and marked as present!
இந்த பதிவை நிமிர்ந்து வக்கார வைத்து இருக்கு... அடுத்த பதிவு எப்ப என்ற ஆவலை தோன்ற வைத்து உள்ளது....
நிமிர வைக்கும் கதைதான் இது நாகையாரே!
திங்கள் தொடங்கி வெள்ளி வரை வாரம் 5 பதிவுகள் வரும்!
தொடுப்பை மறவாத சித்தரின் காதை
எடுப்பான சொல்லும் சிறப்பு.
நான் கேட்டுக்கொண்டதிற்கிணங்க மேலும் கீழும் தொடுப்பு கொடுத்த (வலையுலக) சித்தரே கதை எடுப்பாக சொல்வது உம் சிறப்பு
தொடரை மறக்காமல் (நான்) படிக்கும் சித்தரின் கதையில் இருக்கும்
எடுப்பான(bolded) சொல்லும் சிறப்பு.
கொத்ஸ், தளைதட்டுதான்னு பாருங்க ;-)
ஆஹா! சிதம்பரத்துலேர்ந்து அவரே வந்துட்டாரா!
கதை களை கட்டுதே!
சூப்பர்!
செதம்பர ராசாவா....அவரே வந்துட்டாரா...அப்ப வெற்றிதான். அப்ப....வெற்றியேதான்.
இன்னைக்கு தான் படிக்க ஆரம்பிச்சேன், தொடர்ந்து எல்லா கதையும் படிச்சிட்டேன். கதை மிகவும் நன்றாக உள்ளது. எழுதியிருக்கும் விதமும் அருமை. தொடர்ந்து படிக்க ஆவலாயிருக்கிறேன்.
சொன்னாலும் வெட்கமடா, சொல்லாவிட்டால் துக்கமடானு ஒரு பழைய பாட்டு.
நாம் நம் பெற்றோர் சொன்னதௌக்கு மாறா யோசித்தது கிடையாது. அது அப்போஒது சரி.
இப்போது பிள்ளைகள் சொல்வதும் சரியாகத் தான் இருக்கு.
கந்தப் பிள்ளையோட அப்பாவே கதையில் வந்து விட்டார். (கதை என்று சொல்லவும் மனசில்லை:))))
இனிமேல் இவர் சொல்லும் வாக்குகளை சித்தமாக ஏற்க நல்ல அறிவும் அவனே கொடுக்கட்டும்.
நீங்கள் சுட்டி கொடுப்பது மிகவும் உதவியாக இருக்கிறது வி.எஸ்கே சார். நன்றி.
//இனிமேல் இவர் சொல்லும் வாக்குகளை சித்தமாக ஏற்க நல்ல அறிவும் அவனே கொடுக்கட்டும்.
//
பின்னே சித்தன் வாக்கு சிவன் வாக்கு அல்லவா வல்லியம்மா!
இதுக்குள்ளேயே ஒரு வெண்பாவா?
கலக்குறீங்க சத்தியா!
:))
//அவரே வந்துட்டாரா!
//
இனிமே கலக்கல்தான்!
இதை விட்டுட்டீங்களே சிபியாரே!
:))
//வந்துட்டாரா...அப்ப வெற்றிதான். அப்ப....வெற்றியேதான்.//
முருகனே சொன்னது போல் இருக்கு ஜி.ரா.
நன்றி!
//தொடர்ந்து படிக்க ஆவலாயிருக்கிறேன்.//
நீங்க தொடர்ந்து படிக்க நானும் ஆவலாயிருக்கிறேன், அன்புத்தோழி!
:))
//இனிமேல் இவர் சொல்லும் வாக்குகளை சித்தமாக ஏற்க நல்ல அறிவும் அவனே கொடுக்கட்டும்.
//
மனதைத் தொட்ட வரிகள் வல்லியம்மா!
என்ன ஒரு அன்புள்ளம்!
மிக்க நன்றி!
அன்பே சிவம்!
//
பின்னே சித்தன் வாக்கு சிவன் வாக்கு அல்லவா வல்லியம்மா!//
நான் சொல்லி முடிக்கலை! நீங்க வந்து சொல்லிட்டீங்க சிபியாரே!
:)
///அடிக்கடி பார்த்துப் பேசுவதில் ஒரு அபாயம் இருக்கிறது.
நன்கு தெரிந்து போவதாலேயே, ஒருவரைப் பற்றி ஒரு விசேஷ அக்கறை பிறக்க ஆரம்பிக்கிறது.
அவர்கள் நலனில் கொண்ட அக்கறை, இவனை அவர்கள் விருப்பத்துக்குத் தக்கவாறு மாறணும் என அவர்களை நினைக்க வைக்கிறது!
அப்படி நிகழாவிட்டாலோ, உடனே கோபம் வரத் துவங்குகிறது, அவர்களுக்கு.
அடுத்தவர் எப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டும் எனத் தெளிவாக இருக்கும் இந்த மனிதர்கள் தன்னைப் பற்றி அவ்வாறு சிந்திக்கிறார்களோ
என்றால் அதுதான் கிடையாது!///
நண்பர் சுப்பையா கூறியது :
//மிகவும் மனதைத் தொட்ட வரிகள்!//
ரிப்பீட்டேய்!!
கந்தனுக்கு வழி காட்டத் தில்லைக் கூத்தன் வந்திருப்பது சாலச் சிறந்தது. கூத்தன் விதியை பற்றிக் கூறும் கருத்து பொன்னெழுத்துகளால் பொறிக்கப் பட வேண்டும். ஊழின் உட்பக்கம் காணவும், விதியை மதியால் வெல்லவும் கூத்தன் கந்தனுக்குக் கற்றுக் கொடுக்கட்டும். அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பன் இங்கே பாடம் கற்றுக் கொள்ளட்டும். இத்தனை பகுதிகள் வந்தும் கந்தன் படிக்கும் புத்தகம் என்னெவென்று தெரியவில்லை. சஸ்பென்ஸ்.
//நண்பர் சுப்பையா கூறியது :
//மிகவும் மனதைத் தொட்ட வரிகள்!//
ரிப்பீட்டேய்!!//
எனக்கும் பிடித்த வரிகள்தான் அவை, திரு. சீனா.
//அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பன் இங்கே பாடம் கற்றுக் கொள்ளட்டும். இத்தனை பகுதிகள் வந்தும் கந்தன் படிக்கும் புத்தகம் என்னெவென்று தெரியவில்லை. சஸ்பென்ஸ்.//
புது கோணத்தில் சிந்தித்திருக்கிறீர்கள் திரு. சீனா.
பெயர் வைத்த போது இது பற்றி நான் யோசிக்கவில்லை.
கதைக்குத் தேவையான செய்திகளுடன் மட்டுமே இதை நகர்த்திச் செல்ல எண்ணம். மற்றபடி ஒன்றும் பெரிய சஸ்பென்ஸெல்லாம் இல்லை!
:))
Post a Comment