"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 8
"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 8
முந்தைய பதிவு இங்கே!
6. "பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்." [505]
சரி, படிக்கலாம் என புத்தகத்தை மீண்டும் பிரித்தான் கந்தன்.
ஆனால், மனம் அதில் செல்லவில்லை.
அந்தக் கிழவர் சொன்னதே மனதில் ஓடிக் கொண்டிருந்தது.
கொஞ்சம் கலக்கமாகவும் இருந்தது.
அவர் சொன்னதின் உண்மை அவனை பலமாகத் தாக்கியது.
எவ்வளவு சரியாக அவர் சொல்லியிருக்கிறார் என உணர்ந்தான்.
எழுந்தான்.
அவன் கால்கள் அருகில் இருந்த ரயில்வே ஸ்டேஷனை நோக்கி நடந்தன.
டிக்கட் கவுண்டரில் இருந்தவர், "எங்கே போகணும் தம்பி?" என்றார்.
"மெட்ராஸுக்குப் போவ எப்ப ரெயிலு?"
"இங்கேருந்து நேராப் போக முடியாது. ஒரு ரயில் பிடிச்சு ராமேஸ்வரம் போகணும். அங்கே போற அடுத்த ரயில் வர்ற நேரந்தான். பத்து ரூபா பணத்தை எடு." என்றார்.
'இன்னிக்கு இல்லை. நாளைக்கு வரேன்" என நகர்ந்தான்.
"போறான் பாரு! வேலையத்தவன்! பணமில்லை போல!" எனச் சிரித்தார் அவர்!
கந்தனுக்கு துக்கமாய் வந்தது.
'அம்மா சொன்னதைக் கேட்டு, இதுவரை ஆடுகளைப் பார்த்துக் கொண்டு, மானமாய் வாழ்ந்தாச்சு. இப்போ போய் ஏதோ ஒரு கனாவுக்கு
அர்த்தம் கேக்கப்போய் ஆளாளுக்கு என்னென்னமோ சொல்லி, நம்ம மனசைக் கலைச்சு, ஒருத்தி இல்லாத பணத்தை இப்பவே புடுங்கப் பாக்கறா! இன்னொருத்தர்
இருக்கற ஆடுங்களைப் புடுங்கப் பாக்கறாரு.இதெல்லாம் தேவையா எனக்கு? இல்லாத புதையலுக்காக இருக்கற ஆடுங்களையும் தொலைக்கணுமா?
இதோ! இந்த ஆடுங்க, எனக்கு சொந்தம்; அதுங்களுக்கு என்ன தேவைன்னு எனக்குத் தெரியும்; அதுங்க என்னோட பேசும்; இதை விட்டுட்டு,
கனாவுல கண்ட புதையலை நம்பி இதையெல்லாம் தொலைக்கணுமா? ஒண்ணும் புரியலியே எனக்கு!
ஆனா, அதே சமயம், அந்தப் பெரியவரு,
"உன் உள்மனசு என்ன சொல்லுதோ, அதை நம்பு. அப்போத்தான் உலக ஆத்மா உனக்குத் துணையா வரும். எப்போ வரும்; எப்பிடி வரும்னு
தெரியாது;ஆனா, நிச்சயமா வரும்"அப்படீன்றாரு!
அப்பா, ஆத்தா இல்லை எனக்கு. என்னை நம்பி ஆரும் இல்லை இங்கே.
ஆடுங்க ஒண்ணும் சதமில்ல எனக்கு! அதுங்களுக்கும் நான் சதமில்லை. எப்ப வேணும்னாலும் நாங்க ஒர்த்தரை ஒர்த்தர் விட்டு விலகலாம்...
விலகமுடியும்! ஆனா, இந்தப் புதையல்...? என்னால மறக்க முடியும்னு தோணலை. அப்போ... இதுதான் என்னோட நிஜம்!
கனவு இல்லை! நாளைக்கு அவரைப் பார்க்கணும்! அவர் கேட்ட ஆடுங்களைக் கொடுப்பேன்.அவர் என்ன சொல்றார்னு பார்ப்போம்!
காற்று இப்போது சுகமாக வீசியது!
கந்தனின் முகத்தை வருடியது!
ஒரு புத்துணர்ச்சி பிறந்தது அவனுள்!
ஆம்! எதுவும் என்னைக் கட்டுப்படுத்தாது!
இந்தக் காற்றைப் போல!
இந்த ஆடுகள்... செல்லி... இந்த ஊர்.... எதுவும் என்னைக் கட்டுப்படுத்தாது!
என் கனவு... எனது நிஜம்!
அதை நான் காணுவேன்!
வீடு நோக்கி உற்சாகமாகத் திரும்பினான் கந்தன்!
*************
மூன்று ஆடுகளோடு மறுநாள் கந்தன் அங்கு வந்தான்.
" எனக்கே ஆச்சரியமாயிருக்கு! எப்பிடி சொல்றதுன்னே தெரியலை. நேத்து நான் வீட்டுக்குப் போனபோது, என்னோட அத்தை மகன் காத்திருந்தான் !
என்னமோ தொழில் பண்ணப் போறேன்னு சொல்லி, ஒண்ணரை டஜன் ஆடுங்களை என்கிட்ட வாங்கிட்டுப் போனான்!
இப்போ இதோ, நீங்க கேட்ட இந்த மூணு ஆடுங்கதான் மிச்சம் இருக்கு என்கிட்ட!அதை நான் ஓட்டிகிட்டு வந்திருக்கேன் உங்களுக்குக் கொடுக்க!
சரிதானே!" என அப்பாவித்தனமாய்க் கேட்டான்.
"அது அப்படித்தான் நடக்கும்! அதான் உலக ஆத்மா செய்யும்!" என்றார் கிழவர்,
"அதைத்தான் ஆரம்ப அதிர்ஷ்டம்னு சொல்வாங்க.
மேலே இருக்கற ஒரு சக்தி எல்லாருமே ஜெயிக்கணும்னுதான் விரும்புது. மனுஷன்தான், இந்த வெற்றியை சரியாப் புரிஞ்சுக்காம,
திசை மாறிப் போயிடறான்." எனச் சொல்லிக் கொண்டே ஆடுகளை ஒரு பார்வையிட்டார்.
ஒரு கால் ஊனமாய் இருந்த அந்த ஆட்டைப் பரிவுடன் தடவிக் கொடுத்தார்.
"புதையல் எங்கே இருக்கு?" கந்தன் ஆவலுடன் கேட்டான்.
"சென்னைக்குப் பக்கத்துல, மஹாபலிபுரம்ன்ற ஊருல! அங்கே கல்லுலியே செஞ்ச கோவில்லாம் கூட இருக்கு! கல்யானை கூட இருக்கும். அங்கேதான் உன் புதையல் இருக்கு!"
கந்தனுக்கு கண்ணை இருட்டிக் கொண்டு வந்தது!
இதையேதானே அந்தக் கிழவி ஒரு பைசாகூட வாங்கிக்காம சொன்னா. இந்த ஆளு 3 ஆட்டைப் புடுங்கிட்டாரே! ஏமாந்திட்டோமோ? என
எண்ணினான்.
கிழவர் பேசினார். "இந்தப் புதையல் ஒனக்குக் கிடைக்கணும்னா, உன் கண்ணுக்கு எதுர்ல தெரியற சில நல்ல சகுனங்களைப் பாக்கத் தெரிஞ்சுக்கணும்.
ஆண்டவன் எல்லாருக்கும் தனித்தனியா ஒரு வழி வெச்சிருக்கான். எப்படிப் போவணும்னும் சில அடையாளங்களை விட்டிருக்கான்."
ஒரு அழகிய பட்டாம்பூச்சி எங்கிருந்தோ வந்து கந்தன் முன் பறந்தது.
கந்தனுக்கு ரொம்பவே சந்தோஷமாய் இருந்தது.
ஆத்தா அடிக்கடி சொல்லும்..
'பட்டாம்பூச்சிங்கல்லாம் நல்ல சகுனம்டா ராசா! சாமிகிட்டேருந்து நல்ல சேதி கொண்டு வருது'.
"ஒங்க ஆத்தா சரியாத்தான் சொல்லியிருக்காங்க" என்ற கிழவரின் குரல் அவனைத் தூக்கிவாரிப் போட்டது! 'நாம நினைச்சது எப்படி இவருக்குத்
தெரிஞ்சுது?' என!
கிழவர் தன் மேல்துணியை லேசாக விலக்கி, உள்ளிருக்கும் சட்டைப்பைக்குள் கையை விட்டார்.
தங்க ஒளி மீண்டும் மின்னியது!
[தொடரும்]
****************************
அடுத்த அத்தியாயம் திங்கள் காலை[IST] வரும்!
29 பின்னூட்டங்கள்:
பட்டாம்பூச்சிக்கு கூட இப்படி ஒரு சேதி இருக்கா?
கந்தன் வாழ்வில் இந்த புதையல் என்ன என்ன பன்ணப்போகிறதோ!!
நல்ல சகுனம், தங்க ஒளி. ம்ம். நன்றாகப் போகிறது கதை.
ஆனால் ஆடுகளை விட்டுப் பிரியணுமா.
வருத்தமா இருக்கே.
அவைகளும் அவனை நம்பி இருப்பவை அல்லவா?
இதுதான் அஞ்ஞானப் பாதையிலிருந்து விலகும் வழியோ???
அமர்க்களமா அற்புதமா போகுது!
அப்போ கந்தன் சென்னைக்கு கெளம்பப் போறாரா?
உள்ளேன் ஐயா!!
///"அதைத்தான் ஆரம்ப அதிர்ஷ்டம்னு சொல்வாங்க.
மேலே இருக்கற ஒரு சக்தி எல்லாருமே ஜெயிக்கணும்னுதான் விரும்புது. மனுஷன்தான், இந்த வெற்றியை சரியாப் புரிஞ்சுக்காம,
திசை மாறிப் போயிடறான்."///
மனதைத் தொட்ட வரிகள் இவை!
ஐந்து பக்கம் எழுதி, தனிப் பதிவாகச் சொல்ல வேண்டிய ஒரு அருமையான செய்தியை, ஐந்தே வரிகளில் சொல்லி அசத்தி விட்டீர்கள் VSK சார்
நன்றி!
கதைல வர்ற ஆச்சரியம் இருக்கட்டும். எனக்கு இப்போ என்ன ஆச்சரியமா கடந்த 5 அத்தியாயத்தையும் அன்றன்றே படிப்பதெப்படி. நல்லாத்தான் போகுது கதை.
நீங்க கேள்விப்பட்டதில்லைய திரு. குமார்.
பட்டாம்பூச்சிகள் இறைவனிடமிருந்து நல்ல சேதி கொண்டு வரும் தூதுவன் என ஒரு நம்பிக்கை உண்டு.
மாணிக்கவாசகர் கூட திருத்தும்பியை இறைவனுக்குத் தூது அனுப்புவார்.
இளையராஜாவின் திருவாசகம் ஒலித்தட்டில் கூட இதைப் போற்றும் பதிகம் உண்டு!
//வருத்தமா இருக்கே.
அவைகளும் அவனை நம்பி இருப்பவை அல்லவா?//
யாரும் யாரையும் நம்பி இல்லையம்மா!
அதைத்தான் குறிப்பாக உணர்த்துகிறார்.
துவக்கத்தில் இருந்தே இந்தக் கதையை சரியாகப் புரிந்து வருகிறீர்கள்!
நன்றி.
//நாமக்கல் சிபி said...
அமர்க்களமா அற்புதமா போகுது!
அப்போ கந்தன் சென்னைக்கு கெளம்பப் போறாரா?//
மிக்க நன்றி, சிபியாரே!
சென்னைப் பக்கமா கிளம்பப் போறான்!
அடுத்த வாரம் பாருங்க!
:))
//உள்ளேன் ஐயா!!//
நன்றி, கொத்ஸ்!
தயவு செய்து விடாமல் படியுங்கள்!
:))
//ஐந்தே வரிகளில் சொல்லி அசத்தி விட்டீர்கள் VSK சார்//
புரிய வேண்டியவைகளைச் சரியாகப் புரிந்துகொண்டு முதலிலிருந்தே சொல்லிவரும் ஊக்களுக்குத்தான் நான்
நன்றி சொல்ல வேண்டும்!
// நல்லாத்தான் போகுது கதை.//
நன்றி சத்யா!!
//எப்போ வரும்; எப்பிடி வரும்னு
தெரியாது;ஆனா, நிச்சயமா//
நாம செய்யிற நல்லதானாலும் சரி, தீயதானாலும் சரி
எப்போ வரும்; எப்பிடி வரும்னு
தெரியாது;ஆனா, நிச்சயமா வரும்னு நம்புகிறேங்க.
ரொம்ம நல்லா இருக்குங்க கதை.
//நாம செய்யிற நல்லதானாலும் சரி, தீயதானாலும் சரி
எப்போ வரும்; எப்பிடி வரும்னு
தெரியாது;ஆனா, நிச்சயமா வரும்னு நம்புகிறேங்க. //
இந்த எதிர்பாராத நிச்சயம்தான்,[unexpected certainity] இவ்வுலகின் உண்மையும் கூட, திரு. அனானி.
ரொம்ப நல்லா பாயிண்ட்டைப் பிடிச்சிருக்கீங்க!
நன்றி.
இப்போத்தான் எல்லாத்தையும் படிக்க வாய்ப்பு கிடைச்சது...
தெளிஞ்ச நீரோடை போன்ற நடை...
அங்கங்கே அழகான விஷயங்கள்...!!!
சூப்பர்...!!!!!!!!!
அப்படியே நம்ம வலைப் பூவுலே தொடுப்பும் கொடுத்து வெச்சிட்டேன்!
பீட்டா பிளாக்கர்ல இருக்குற லேபிள் கொடுக்குறது ரொம்ப பயனுள்ளதா இருக்கும்னு நினைக்கிறேன்!
படித்துப் பாராட்டியமைக்கு மிக்க நன்றி, செந்தழலாரே!
தொடர்ந்து படிச்சு சொல்லுங்க!
//அப்படியே நம்ம வலைப் பூவுலே தொடுப்பும் கொடுத்து வெச்சிட்டேன்!//
உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது, சிபியாரே!
இந்தக் கதை பி[ப]டிச்ச மத்தவங்களும் இதுபோல தொடுப்பு கொடுத்தா, நிறையப் பேர் படிக்க முடியுமேன்னு தோணுது.
மிக்க நன்றி!
@SK நல்லா கொண்டு போறீங்க ஆனா எப்படி போகும்ன்னு அனுமானிக்கமுடியலை. சில சமயம் பாலகுமாரன் கதை மாதிரியும் இருக்கு. தொடருங்கள்
//@SK நல்லா கொண்டு போறீங்க //
நீங்கல்லாம் வந்து படிச்சு கருத்து சொல்றதே மகிழ்வா இருக்கு ஐயா!
கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிரைத் தும்பி நல்லதைக் கொணர்ந்ததோ! நன்று. நன்று. மாமல்லபுரம் என்று முதலிலேயே புரிந்தது.
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன். இப்பக் கந்தனுக்கு ஆடு போயாச்சு. அதால அவனுக்குத் தும்பமில்லை. இப்பிடி எல்லாம் போகவும்...எல்லாம் வந்துரும்.
// இப்பிடி எல்லாம் போகவும்...எல்லாம் வந்துரும்.//
இருப்பதை விட்டு பறப்பதற்கு ஆசைப்படுகிறானா இல்லை, இருப்பது எதுவெனத் தெரியப் போகிறதா என்பது போகப் போகத் தெரியும், ஜி.ரா!
நன்றி.
:))
நான் லேட் எண்ட்ரி அதனால என்ன பழைய பதிவெல்லாம் ப்டிச்சிட்டு வந்திடறேன்
சட்டுனு தொடரும் போட்டுட்டீங்களே......
உங்க வசதிக்காகத்தான் இதுவரை வந்த பதிவையெல்லாம் சுட்டியிருக்கிறேன், திரு. மங்களூர் சிவா.
நன்றி.
இதோ இன்னிக்கு இரவு[ இந்தியாவில் திங்கள் கிழமை] மீண்டும் தொடரும், நாகைப்புயலே!
:))
ம்ம்ம் கதை ஸ்வாரஸ்யமாக போகுது. பார்க்கலாம் அந்த ஆண்டவரான கிழவர், தன் பையிலிருந்து என்ன எடுக்கிறார்னு. ஆனா முன்ன காட்டாத, தன் மார்பை, இப்ப ஏன் அவர் கந்தன்கிட்ட வெளிப்படையா காட்டணும். காத்திருக்கிறேன்...
தில்லைக் கூத்தன் ஐம்ம்பூதங்களில் ஒன்றான வானத்தை கந்தனுக்கு இரண்டாம் முறையாகக் காட்டுகிறான். தகதகக்கும் தங்க மாலை. சரியான வழியில் குழப்பமின்றி நடை போடுகிறது கதை. பட்டாம் பூச்சி சகுனம் இனி நானும் எதிர் பார்க்கிறேன்.
உதடுகள் ஒட்டாத குறள் - யார் யார் எதனின்று விலகுகிறார்களோ - அவற்றினால் வரும் துன்பம் அவர்களுக்கு இல்லை. கந்தன் தன் சொத்தான ஆடுகளிலிருந்து விலகுகிறான். தொடர்ந்து பார்ப்போம்.
//தில்லைக் கூத்தன் ஐம்ம்பூதங்களில் ஒன்றான வானத்தை கந்தனுக்கு இரண்டாம் முறையாகக் காட்டுகிறான். //
தில்லையின் சிறப்பே வானம்தானே!
கூர்ந்து கவனித்து எழுதுவது மகிழ்ச்சியாய் இருக்கிறது.
Post a Comment