"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!" -- 5
"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!" -- 5
முந்தைய பகுதி இங்கே!
3. "அல்லவை தேய அறம் பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்." [96]
"உள்ளே வாங்க தம்பி! இப்படி குந்துங்க! கையி பாக்கணுமா? ரூவால்லாம் அப்பறம் பேசிக்கலாம்! சாஸ்தி இல்ல! வாங்க வாங்க!"
என அவனை வரவேற்றபடியே, விரித்திருந்த பாயைக் காட்டி அதில் உட்காரச் சொன்னாள் அந்தக் கிழவி.
"இல்லே! அதுக்கெல்லாம் நான் வரலை! புதுசா இருக்கேன்னு பாத்தேன். அவ்ளோதான்" என்றவாறு இழுத்த அவனை அன்புடன்
பார்த்தாள், கிழவி.
"சும்மா வா ராசா! நீதான் இன்னிக்கு மொதப் போணி! முட்டத்துலேர்ந்து இதான் எனக்கு மொதத் தடவை இந்த சந்தைக்கு வர்றது!
நீ ஒண்ணும் தர வேணாம். சும்மா கையக் காட்டு. சரியாச் சொன்னேன்னா அப்பால நா கேக்கறதைக் குடு!"
என்றவாறே அவன் கையைப் பிடித்து உட்கார வைத்தாள்.
அப்படியே ஒரு கோலை எடுத்து, அவன் வலது கையைப் பார்த்தாள்.
"அடேங்கப்பா!" என ஒரு குரல் கிளம்பியது, அவளிடமிருந்து.
கந்தனுக்குள் ஒரு இனமறியா பயம் தோன்றியது.
"கையெல்லாம் ஒண்ணும் பாக்க வேணாம்" என எழத் துவங்கினான்.
"ஆமாமாம்! கை பாக்க வரலை நீ. உனக்கு வர்ற கனாவைப் பத்தி என்னா ஏதுன்னு தெரிஞ்சுக்கத்தான் வந்தே!"
கிழவியின் சொற்களைக் கேட்டதும், மந்திரம் போல உட்கார்ந்தான், கந்தன்!
"ஒனக்கு எப்பிடித் தெரியும் ஆத்தா?" என ஆச்சரியத்துடன் கேட்டான்.
"கனாவெல்லாம், சாமி நம்மளோட பேசறது. நம்ம பாசைல பேசினா, அது என்னன்னு சொல்லிட முடியும்.
ஆனா, சில சமயம் நம்மளோட பேசாம, நம்ம ஆத்மாவோட பேசும் சாமி! அது ஒனக்கு மட்டுந்தான் புரியும்.
அதுக்கு அர்த்தம் சொல்ல என்னால முடியாது. சரி, அது என்ன ஏதுன்னு பாக்கலாம். அதுக்கு முந்தி நான் சொல்றதுக்கு நீ என்ன தரணும்னு
இப்போவே பேசி முடிச்சிருவோம்." என்று கிழவி சொன்னவுடன்,
"ஆஹா! கிழவி நம்மகிட்ட பணம் கறக்க முடிவு பண்ணிட்டா! சாக்கிரதையா இருக்கணும்"
என மனதுக்குள் முடிவு செய்து கொண்டு,
"ஒரே ஒரு கனவு இதுவரைக்கு ஒரு ரெண்டு மூணு தடவ வந்திருச்சு! அது என்னான்னு சொல்றேன். கேட்டுக்கோ.
நான் என் ஆடுங்களை மேச்சுகிட்டு இருக்கேன். அப்போ ஒரு சின்னக் கொளந்தை வந்து, என்னோட ஆடுங்களோட சிரிச்சுகிட்டே விளையாடுது.
சரி, கொளந்தை தானேன்னு நான் அத ஒண்ணும் சொல்லலை. விளையாடிட்டு இருக்கற கொளந்தை, திடீர்னு என்னோட ரெண்டு கையையும்
பிடிக்குது.
அடுத்த நிமிஷம் நாங்க ரெண்டு பேரும் ஒரு புது எடத்துல இருக்கோம். அங்கே நெறய கோவில்லாம் இருக்கு!
கல்லுல செஞ்ச யானை கூட இருக்கு. பக்கத்துலியே கடலும். அந்தக் கொளந்த, .......வயசுல்லாம் தெரியலைன்னு சொல்றேன்ல!....
அது சொல்லுது,நீ இங்கே வந்தியானா, ஒரு பெரிய புதையல் கிடைக்கும். இதோ... இங்கதான்..." எனச் சொல்லிகிட்டே இருக்கையில,
சட்டுன்னு முளிப்பு வந்திருச்சு.... ஒவ்வொரு தடவையும்!....... இதுக்கு என்ன அர்த்தம்? சொல்லு. சரியாச் சொன்னியானா,
துட்டு எவ்ளோ தரலாமின்னு பேசுவோம்" என அமர்த்தலாகச் சொன்னான் கந்தன்.
கிழவி சற்று நேரம் அமைதியாக இருந்தாள். அவனையும், அவன் கையையும் மாறி மாறிப் பார்த்தாள்.
வாயிலிருந்த வெற்றிலை பாக்கைத் துப்பிவிட்டு, கொஞ்சம் தண்ணி குடித்தாள்.
மறுபடியும், ஊறின பாக்கைக் கடித்துக் குதப்பி ஒரு வெற்றிலையைக் கிள்ளி, நிதானமாகச் சுண்ணாம்பைத் தடவினாள்.
நாலாகக் கிள்ளி அதை வாயின் இடது பக்கம் அடக்கி,பொறுமையாக மென்றாள்.
கூடவே, கொஞ்சம் கட்டைப்புகையிலையும் வெட்டிச் சேர்த்தாள்.
கந்தன் பொறுமை இழக்க அரம்பித்தான்.
'செல்லியை வேற பார்க்கவில்லை இன்னும்' என்ற எண்ணமும் கூடச் சேரவே, கிழவியைப் பார்த்து,
" இந்தக் கனாவுக்கு என்ன அர்த்தம்?
தெரியுமா, தெரியாதா. சொல்லு ஆத்தா! எனக்கு சோலி இருக்கு"
எனக் கேட்டான்.
"அட! பொறுப்பா! ரொம்பவே அவசரப் படறியே! என்னா மாரி கையி இது! சரி! நீ எனக்கு ஒண்ணும் தரவேணாம் இப்ப! ஆனா, ஒரு கண்டிசன். புதையல் கிடைச்சதும் அதுல பத்துல ஒரு பங்கு எனக்குத் தரணும் நீ!
சம்மதமா?"
கடகடவெனச் சிரித்தான் கந்தன்.
"அப்பாடா! அப்போ இப்ப ஒண்ணும் தர வேணாண்ற! சரி, கனாவுக்கு அர்த்தம் சொல்லு" என ஒரு நிம்மதியுடன் சொன்னான்.
"மொதல்ல, எனக்கு சத்தியம் பண்ணிக் குடு, பத்துல ஒரு பங்கு தருவேன்னு சொல்லு. கனாவுக்கு என்ன அர்த்தம்னு சொல்றேன்"
என மீண்டும் கிழவி வற்புறுத்தவே,
இதன் பொருளைத் தெரிந்து கொள்ளலாமே என்ற ஆவலில், "ம்ம்! சரி, சரி! நீ சொல்லு!"
என்றவுடன் கிழவி ஆரம்பித்தாள்....
"இது நான் முன்ன சொன்னமாரி, ஆத்மாவோட பேசற கனா இல்லை. நமக்கெல்லாம் புரியற ஒரு கனாதான். ஆனா, சொல்லப்போற விசயம்தான்ரொம்ப சிக்கலானது! அதுக்குத்தான் அந்த பத்துல ஒரு பங்கு கேக்கேன். சரியா!.... கவனமாக் கேட்டுக்க!நீ உடனே கிளம்பி அந்த எடத்துக்குப் போவணும்.சென்னப்பட்டணம் பக்கத்துல இருக்கு அந்த எடம். அப்பிடி ஒண்ணு இருக்கான்னு எனக்கு தீர்மானமா தெரியாது. ஆனாக்க, ஒரு கொளந்தை வந்து சொல்லிச்சுன்னா, அது கண்டிப்பா உண்மையாத்தான் இருக்கணும்.அங்கே ஒனக்கு நிச்சயமா புதையல் கிடைக்கும். நீயும் பெரிய பணக்காரனா ஆகப் போறே!"
கந்தனுக்கு எரிச்சல் வந்தது!
'இதைக் கேட்க இங்கு வரணுமா? அதுதான் கனவில் வந்து விட்டதே. கிழவி ஒன்றும் புதிதாகச் சொல்லவில்லையே'என எண்ணியபடியே,
"என் நேரத்தை இதுல செலவளிக்கறதா உத்தேசம் இல்லை" என்றவாறே எழ ஆரம்பித்தான்.
அவனைக் கடுமையாக ஒரு பார்வை பார்த்துவிட்டு, கிழவி தொடர்ந்து பேசலானாள்.
"அதான் சொன்னேன்ல! இது கொஞ்சம் சிக்கலான கனான்னு! சுளுவா இருந்தா சொல்லியிருப்பேன்ல? கை பாக்கறது முகராசி பாக்கறதுல்லாம்கூட கத்து வெச்சிருக்கேன்! இரு" என்றதும்,
கிழவி சமாளிக்கிறாள் போல என நினைத்து, "அப்போ அந்தக் கோயிலுக்கு நான் போகலைன்னா, ஒனக்கு ஒண்ணும் தரவேண்டியதில்லைதானே"என மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்திக் கொண்டான்.
"ஆமாமாம். சரி, நீ புறப்படு! ஒரு வரும்படியும் இல்லாம இன்னிக்கு முதப்போணி ஆயிருக்கு! பொளப்பைப் பாக்கணும். நா சொன்னதை மட்டும் மறந்திராதே! " என, கிழவி அவனை அனுப்பிவைத்தாள்.
[தொடரும்]
***************************
அடுத்த அத்தியாயம்!
16 பின்னூட்டங்கள்:
சென்னைக்குப் பக்கத்தில் ஒரு இடம் என்பதைத் தவிர வேறு ஒரு புதிய விஷயத்தையும் பாட்டி சொல்லிவிடவில்லையே.
ரொம்பவே சிறிதாக அத்தியாயங்கள் இருக்கிற மாதிரி ஒரு உணர்வு. சிறிது வேகமாய் கதையை நகர்த்தலாமே.
இங்க புதையல் என்றால்,அங்கு வாத்தியார் மாந்திரீகம் பக்கம் தொட்டு செல்கிறார்.அலை வரிசை ஒரே மாதிரி இருக்கே!
ஜோசியக்கார கிழவி நம்மிடம் பேசுவது போலவே சொல்லியுள்ளீர்கள்.
கந்தனே அவசரப்படலை.
நீங்க அவனைவிடவே துடியா இருக்கீங்களே.கொத்ஸ்!
நான் பத்தி பிரித்தது ஒரு கருத்துடன் தான்.
கொஞ்சம் பொறுங்களேன்.
ப்ளீஸ்!
இரண்டும் வெவ்வேறு அலைவரிசைங்க திரு.குமார்!
உங்கள் கருத்து மகிழ்வாய் இருக்கிறது.
நன்றி.
interesting progress. ;)
I do agree with Koths comment ;)
இதில் வரப்போகும் விஷயங்களுக்கு ஆரம்ப அத்தியாயங்கள் ந்நன்றாகப் புரிவதுஅவசியம் என நான் கருதியதாலும், வாரப் பத்திரிகை போல 7 நாட்களுக்கு ஒருமுறை அல்லாமல், தினமுமே [தி.- வெ] வரப்போகுது என்பதாலும், இப்படி வருவதே சிறப்பு என எண்ணுகிறேன், சர்வேசன்.
என்ன சொல்றீங்க?
:))
///சென்னைக்குப் பக்கத்தில் ஒரு இடம் என்பதைத் தவிர வேறு ஒரு புதிய விஷயத்தையும் பாட்டி சொல்லிவிடவில்லையே. ///
துளசி டீச்சர் பதிவுகள்
மற்றும்
உங்களுடைய பதிவுகள்
இரண்டிலும்
கொத்தானார்
செல்லமாக வந்து
இதுபோல்தான்
பின்னூட்டம்
இடுகிறார் -
அதைக் கவனித்தீர்களா VSK சார்?
சென்னைக்குக் கந்தன் வருகையா.சரி.
பார்த்துடலாம்.
ஜக்கம்மா வெற்றிலை போடற பாங்கும் நன்றாக இருக்கு.:)0
கதையைத் தொடர்ந்து படித்து பின்னூட்டுவதற்கு நன்றி, வல்லியம்மா!
உள்ளேன் ஐயா...
//கந்தன் பொறுமை இழக்க அரம்பித்தான்.
//
நாங்களும்தான்!
//ரொம்பவே சிறிதாக அத்தியாயங்கள் இருக்கிற மாதிரி ஒரு உணர்வு. சிறிது வேகமாய் கதையை நகர்த்தலாமே//
இவரு எல்லா தொடர்லயும் போய் இப்படித்தான் எழுதறாரு!
கண்டுக்காதீங்க!
:)
புதையல் என்பது ஆன்மத் தேடலுக்கான விடையாக இருக்கும் என்று நினைக்கிறேன்!
அதில் பத்தில் ஒரு பங்கு குறி சொல்லும் கிழவிக்கு எப்படிப் பங்கிட்டுக் கொடுக்கப் போகிறான் என்பதுதான் இந்த தொடரின் ட்விஸ்டு!
சென்னைக்குப் பக்குத்துல...சரி...ஆனை..சரி..கடலு...சரி...புதையலு..புரிஞ்சிருச்சேய். புரிஞ்சிருச்சின்னுதான் நெனைக்கிறேன். கதை போற போக்க வெச்சுச்சொல்றேன். :)
தெளிவாக செல்கிறது கதை. கந்தனுக்கும் ஜக்கம்மாவிற்கும் இடையே நடக்கும் உரையாடல்கள் அருமையாக விவரிக்கப் பட்டிருக்கின்றன. இயல்பான, வறுமையில் வாடும் கந்தனின், பணத்திலே குறியாக இருக்கும் கந்தனின்
சிந்தனை சரியானதே. கையிலே இருக்கும் பணத்தை இழக்க விரும்பாத, அதே நேரத்தில், பேராசை கொள்ளாத, கந்தன், இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும் இலக்கணம் தெரிந்தவன்.
அவனுக்குக் கிடக்கப் போகும் புதையல் அறிவுப் புதையலா, ஆன்மீகப் புதையலா, தங்கச் சுரங்கமா - ஒரே சஸ்பென்ஸ் - கதையின் உட் கருத்தை ஊகிக்க முடிய வில்லை. இதிலிருந்தே இது சிறந்த முறையில் எழுதப்படும் கதை என உணருகிறேன்.
//அவனுக்குக் கிடக்கப் போகும் புதையல் அறிவுப் புதையலா, ஆன்மீகப் புதையலா, தங்கச் சுரங்கமா - ஒரே சஸ்பென்ஸ்//
அவரவர் தீவிரமாகத் தேடுவது அவரவர்க்குக் கிடைக்க உலகம் உதவுகிறது.
கந்தன் தேடுவது என்னவோ!?
:)
நன்றி, திரு. சீனா.
Post a Comment