Saturday, September 29, 2007

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!" -- 4



"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!" -- 4

முந்தைய பகுதி இங்கே!




2. "எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு." [335]


செல்லி அவனுக்குத் தெரிந்த பெண்தான்!

ஒரு 12-14 வயசிருக்கும்.

பள்ளியில் அவனோடு கூடப் படித்தவள்.

'அஞ்சாம் கிளாஸோட பொட்டைச் சிறுக்கிக்கு படிப்பெல்லாம் போறும்'னு வீட்டில் சொல்ல, அவளும் இப்போது பள்ளிக்குச் செல்வதில்லை.

எப்பவாவது சந்தைக்கு வரும் போது அவனைப் பார்த்து அன்புடன் சிரிப்பாள்.

"நல்லா இருக்கியா செல்லி?" "ம்.. நீ...?" இவ்வளவுதான் அவர்கள் பேசிக் கொள்வது.

போனவாரம் பார்த்தபோது, கையில் இருந்த புத்தகத்தைப் பார்த்துவிட்டு, "அப்ப இன்னும் நீ படிக்கிறியா என்ன?"
என வெகுளித்தனமாகக் கேட்டாள்.

"வாத்தியார் குடுத்தாரு. பாரதக் கதை! பொளுது போகச்சொல்லி படிக்கறேன்."

"ஆடு மேக்கறவனுக்கு படிப்பு இன்னாத்துக்காம்?" எனத் தொடர்ந்தாள்!

செல்லியைத் தவிர வேறு யார் கேட்டிருந்தாலும் இவனுக்கு கோபம் நிச்சயம் வந்திருக்கும்.

ஆனால், கேட்டது செல்லியாயிற்றே!

அவளைப் பார்த்து சிரித்தபடியே சொன்னான், "சார்தான் சொன்னாரு. நெறயப் படிக்கணுமாம். அல்லாரையும் பாக்கணுமாம்.
அது மட்டுமில்ல செல்லி, நா இப்படியே இங்கியே இருப்பேன்னு நெனைக்காதே! நான் நம்ம ஊரையெல்லாம் தாண்டி, பட்டணம்லாம் போவேன்!
நெறய ஊரைப் பாக்கணும் எனக்கு!" என கண்களில் ஒரு ஒளி தெரிய அவன் சொன்னதைக் கேட்டதும்,

"தோ பார்றா! தொரை சீமைக்குப் போவப் போறாராம்! அப்டீன்னா எங்களைல்லாம் மறந்திருவேன்னு சொல்லு" எனச் செல்லியும்
உற்சாகமாகச் சீண்டினாள்.

"சேச்சே! உங்களையெல்லாம் மறக்கமுடியுமா? அதெல்லாம் எங்க போனாலும் உன் நெனப்பு இருக்கும். நீதான் என்கிட்ட
எப்பவும் பிரியமா பேசறியே! ஒன்னிய எப்படி மறக்கறது?" என இவனும் பதிலுக்குச் சொன்னதும், வெட்கத்துடன் ஒரு
புன்னகையை உதிர்த்துவிட்டு அவள் போனது இவன் மனதில் ஓட....

"இரு புள்ள! இன்னும் கொஞ்ச நேரம் களிச்சுப் போவியாம்!" என்று வாய்விட்டுச் சொன்னவன், சட்டென்று சுற்றுமுற்றும் பார்த்தான்.

யாரும் பார்க்கலியே என உறுதிப்படுத்திக் கொண்டான்.

அவளை நினைத்துக் கொண்டே, தனக்குள் பேசியதை எண்ணி வெட்கத்துடன் சிரித்துக் கொண்டான்!

'ம்.. ஒருவேளை செல்லி வந்தாலும் வரும்! அதுகிட்ட இந்தக் கனவைப் பத்தி சொல்லணும். அது கொஞ்சம் விவரமான புள்ளை.'
என முடிவு செய்து கொண்டான்.

**********
சந்தை!

எத்தனை விதமான மனிதர்கள்?
என்னவெல்லாம் தேவைகள்?

கூறு கட்டி வைத்திருக்கும் காய்கறிக்கடைகள், ரிப்பன், ஸ்லைடு, சாந்துப்பொட்டு, பவுடர் என ஒப்பனைப் பொருள்களை அடுக்கியிருக்கும் சிறிய கடைகள், அரிசி, மிளகாய், உப்பு இதெல்லாம் மலைபோல குவித்து வைத்து வருவோர் போவோரையெல்லாம் கூவி அழைக்கும் வியாபாரிகள், பக்கத்திலேயே, ஆடு, மாடு விற்க, வாங்குவோரைக் குறி வைத்து அலையும் தரகுக் கும்பல், சிறுவர், சிறுமியருக்கான பொம்மை, ஜவ்வுமிட்டாய் போன்றவற்றை வைத்துக்கொண்டு, அவர்களுக்கு அவரவர் கேட்கும் வடிவத்தில் நொடியில் தயாரித்துக் கட்டிவிடும் கடைக்காரர்கள், குடை ராட்டினம் என சந்தை களை கட்டியிருந்தது.

இவ்ளோ பொருளும் வித்துப் போயிருமா?
ஆருக்கு வேண்டியிருக்கும் இதெல்லாம்? என யோசித்தபடியே சுற்றி வந்தவன் கண்களில்,
அந்தக் கொட்டகை பட்டது!

"உள்ளத உள்ளபடியே சொல்லும் ஜக்கம்மா அருள்வாக்கு" என்ற போர்டு அவனை ஈர்த்தது.

கையில் ஒரு சிறிய பிரம்புடனும், ஓலைக் காதோடும், அடக்கி வைத்த புகையிலையுடனும், மஞ்சள் பூசிய முகத்தில், நெற்றி நிறையக் குங்குமத்துடன் அமர்ந்திருந்த
அந்த பருத்த கிழவி, அவனைப் பார்த்து வாய் நிறையச் சிரித்தாள்!

[தொடரும்]
************************************************

28 பின்னூட்டங்கள்:

Subbiah Veerappan Sunday, September 30, 2007 8:07:00 PM  

Present Sir!
இது வருகைப் பதிவேட்டிற்காக மட்டும்.
பதிவை நன்றாக உள்வாங்கிப் படித்துவிட்டு மீண்டும் வருகிறேன்

VSK Sunday, September 30, 2007 8:16:00 PM  

வருகையே இத்தனை மகிழ்வாய் இருக்கிறதே ஆசானே!

மீண்டும் வருகிறேன் எனச் சொல்வது இன்னமும்!

நன்றி!

Subbiah Veerappan Sunday, September 30, 2007 8:17:00 PM  

///செல்லியைத் தவிர வேறு யார் கேட்டிருந்தாலும் இவனுக்கு கோபம் நிச்சயம் வந்திருக்கும்.///

மிகவும் ரசித்த இடம்
இது யதார்த்தமான உண்மை!

நல்ல மனதிற்குரிய சிறப்பம்சம்மும் கூட.

மனதிற்குள் வந்து நாற்காலி போட்டு
உட்கார்ந்திருக்கும் மனிதர் மீதும் சரி
இல்லை உள்ளே வந்து ஊஞ்சல் கட்டி
ஆடிக்கொண்டிருக்கும் பெண் மீதும் சரி
கோபம் நிச்சயம் வராது!

குமரன் (Kumaran) Sunday, September 30, 2007 8:18:00 PM  

கந்தனின் கனவு நல்ல கனவாகத் தான் இருக்கிறது.

Subbiah Veerappan Sunday, September 30, 2007 8:24:00 PM  

///வருகையே இத்தனை மகிழ்வாய் இருக்கிறதே ஆசானே!
மீண்டும் வருகிறேன் எனச் சொல்வது இன்னமும்!///

கொத்தனார்,
கோவியார்,
துளசியக்கா,
வல்லியம்மா
போன்ற நூறுக்கும் குறையாத
உங்கள் உள்ளம் கவர்ந்த அன்பர்களோடு
நானும் நாற்காலி போட்டு அமர்ந்திருக்கிறேன்
என்று நினைக்கிறேன்

ஆனால் வரிசைதான் கண்ணில் படவில்லை:-)))

SurveySan Sunday, September 30, 2007 8:33:00 PM  

சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்

[எ] = alias/aka ?

குட்டி குட்டி அத்தியாயங்கள் படிக்க சுலபமா இருக்கு. நல்லது.

ஆனா, நாவல் என்று சொல்வதால், டெப்த் கொஞ்சம் கம்மியா இருக்கர மாதிரியும் இருக்கு.
முதல் முயற்சிதானே, இதில் கற்பவை வைத்து அடுத்தது பின்னிப் பெடலெடுக்கலாம்.

:)

வடுவூர் குமார் Sunday, September 30, 2007 8:39:00 PM  

இத்தனை சந்தை நிகழ்வையும்,மேட்டூர் தங்கமாபுரி பட்டிணம் திறந்த வெளிச் சந்தையில் பார்த்திருக்கேன்.அதில் ஒரு சுவாரஸ்யமான ஆள்,காய்கறி வியாபரம் செய்பவர்.காய்கறி எடைக்கு தராசையே உபயோகப்படுத்த மாட்டார்,எல்லாம் கை தான்.அதற்காக கூட எடை விழாது.
பல புதியவர்கள் சந்தேகப்பட்டு எடை போடச்சொல்லி கேட்டு மறு பேச்சு இல்லாமல் வாங்கிப்போவார்கள்.

VSK Sunday, September 30, 2007 9:11:00 PM  

//இது யதார்த்தமான உண்மை!//

நாற்காலி போட்டு அமர்ந்திருப்பவர் சொல்வதும் யதார்த்தமான உண்மையே, ஆசானே!

//ஆனால் வரிசைதான் கண்ணில் படவில்லை:-)))//


பக்கலில் இருப்பவருக்கு வரிசை எதற்கு!? :)

VSK Sunday, September 30, 2007 9:12:00 PM  

இது கனவில்லை, குமரன்.... ஒரு நினைப்பு!

அவ்வளவுதான்!

:)

VSK Sunday, September 30, 2007 9:16:00 PM  

//[எ] = alias/aka ?//

முதல் பதிவிலே சொல்லியிருந்தேன்,
"சித்தர் [என்கிற] கனவு மெய்ப்படும்" என்ற தலைப்பை.

அடுத்த பதிவுகளில் அதைக் குறைத்து [எ]எனப் போட்டு வருகிறேன்.

இது ஒன்றும் 1000 பக்க நாவல் இல்லீங்க!

இனி வரும் பதிவுகள் சற்றுப் பெரிதாகவும், நீங்க சொல்லும் 'டெப்தோடும்' வரும் என நம்புகிறேன், சர்வேசன்!
:)).

VSK Sunday, September 30, 2007 9:21:00 PM  

சந்தை பற்றிய ஒரு ஸ்வாரஸ்யமான தகவலுக்கு நன்றி, திரு..குமார்.

VSK Sunday, September 30, 2007 9:22:00 PM  

//இதில் கற்பவை வைத்து அடுத்தது பின்னிப் பெடலெடுக்கலாம்.//

வாழ்த்துக்கும், நம்பிக்கைக்கும் நன்றி, திரு. சர்வேசன்.

கபீரன்பன் Monday, October 01, 2007 11:03:00 AM  

அடடா ! எழுத்தில் கமழும் மண்வாசனை படத்தில் காணாமல் போய்விட்டதே. அரபு நாட்டு சந்தை மாதிரி ஆயிடுச்சே. கூகிள் இமேஜ்-ல் தேடினால் கிடைக்கும்.
அன்புடன் :)

நாகை சிவா Monday, October 01, 2007 12:39:00 PM  

படித்"தேன்"
ரசித்"தேன்"
மகிழ்ந்"தேன்"

VSK Monday, October 01, 2007 1:29:00 PM  

//கூகிள் இமேஜ்-ல் தேடினால் கிடைக்கும்.//

நீங்கள் சொல்வது உண்மையே, திரு. கபீரன்பன்.

அங்குதான் தேடினேன் ரொம்ப நேரம்!

இதுதான் கொஞ்சம் கிட்டத்தட்ட ஒத்தாற்போல் வந்தது.

நன்றி.

VSK Monday, October 01, 2007 1:30:00 PM  

தேன் எனச் சொல்லி மகிழ்வித்த நாகைப்புலிக்கு நன்றி!

G.Ragavan Monday, October 01, 2007 2:16:00 PM  

அதாவதுங்க....ரொம்பவும் வேண்டியவங்கன்னா...திட்டுனாக்கூட நம்ம பெருசா எடுத்துக்க மாட்டோம். அது உரிமை. அப்படித்தான் கந்தனுக்குச் செல்லி.

ஊர்ச் சந்தைன்னா சும்மாவா இருக்கும். காய்கறிகளும் பழங்களும் உப்பு மெளகா புளி ரோஸ், மஞ்சள்னு நெறநெறமா திண்பண்டங்க...கருவாடு, உப்புக்கண்டம் வகையறாக்க...இப்படிச் சகலமும் கெடைக்கிற எடந்தான சந்தை.

சக்கம்மா என்ன சொல்றாங்கன்னு அடுத்த பகுதில தெரிஞ்சிக்குவோம்.

இலவசக்கொத்தனார் Monday, October 01, 2007 3:47:00 PM  

நல்ல காலம் பொறக்குது!
நல்ல காலம் பொறக்குது!

கந்தனுக்கு ஜக்கம்மா என்ன சொல்லப் போறாங்களோ தெரியாது. ஆனா நம்ம எல்லாருக்கும் வித்தியாசமான தொடர் படிக்கக் கிடைக்கப் போகுது!!

நல்ல காலம் பொறக்குது!
நல்ல காலம் பொறக்குது!

Kannabiran, Ravi Shankar (KRS) Monday, October 01, 2007 3:58:00 PM  

//இவ்ளோ பொருளும் வித்துப் போயிருமா?
ஆருக்கு வேண்டியிருக்கும் இதெல்லாம்? என யோசித்தபடியே சுற்றி வந்தவன்//

கந்தன் வணிக மேலாளர் ஆகி சித்தர் ஆகப் போறாரா? எங்காச்சும் பொடி வைக்கறீங்களா SK? :-)

VSK Monday, October 01, 2007 10:47:00 PM  

சக்கம்மா எப்பவுமே நல்வாக்குதானே சொல்லுவா, ஜி.ரா.

VSK Monday, October 01, 2007 10:49:00 PM  

இதோ கொத்ஸ் வந்து நல்வாக்கு சொல்லிட்டார் பார்த்தீங்களா, ஜி.ரா.!

அடுத்த பதிவும் இட்டாச்சு கொத்ஸ்!

நன்றி!

VSK Monday, October 01, 2007 11:00:00 PM  

பொடியெல்லாம் வைக்கவில்லை, ரவி.

மேலே படிச்சிட்டு சொல்லுங்க!

வல்லிசிம்ஹன் Monday, October 01, 2007 11:03:00 PM  

கந்தன் கனவு மெய்ப்படும் வரை காத்திருக்க வேண்டுமே:0)

ஜக்கம்மா வேற வந்தாச்சு.
நல்ல எழுத்துக்கு சிம்மாசனம் எப்போதுமே உண்டு சுப்பையா சார்..
வி.எஸ்.கே சார்.
சந்தைக் காட்சியில் மல்லிப்பூ,பிச்சிப்பூ உண்டா:)), சுண்டைக்காய்,மணத்தக்காளி எல்லாம் கிடைக்குமே எங்க ஊரு மருத சந்தையிலே. ராகவன்!!:))

VSK Monday, October 01, 2007 11:31:00 PM  

இதுக்கே கொத்ஸும், சர்வேசனும் செல்லமா கோபிக்கறாங்க, வர்ணனைல்லாம் எதுக்குன்னு.

நானும் சொல்றதா இல்லை, வல்லியம்மா!

நாமக்கல் சிபி Wednesday, October 03, 2007 1:34:00 PM  

ஆஹா! ஜக்கம்மா என்ன சொல்லப் போறாளோ!

நல்ல அருள்வாக்கு சொல்லுடி ஆத்தா!

நாமக்கல் சிபி Wednesday, October 03, 2007 1:35:00 PM  

//எங்காச்சும் பொடி வைக்கறீங்களா SK? //

ஆ..ஆ..ஆஅ..ஆ..அச்!

cheena (சீனா) Saturday, October 20, 2007 2:23:00 AM  

சிறுவயதுச் சந்தை - அசை போட்டால் ;

குடை ராட்டினம், வேண்டிய உருவத்தில் கையில் கட்டப்படும் ஜவ்வு மிட்டாய் எனச் சொல்லப்பட்ட எச்சி மிட்டாய், மைசூர் பாகு, காரச் சேவு, இனிப்புச் சேவு, கருவாடு, உப்புக்கண்டம் போன்ற திண்பண்டக் கடைகள் நினைவில் வருகின்றன.

கதைத்தொடர் சிறு சிறு பகுதிகளாகப் பிரிக்கப் பட்டிருப்பதால், படிக்கவும் பின்னூட்டம் இடவும் வசதியாக இருக்கிறது.

நண்பர் சுப்பையா கூறியத் :

//மனதிற்குள் வந்து நாற்காலி போட்டு
உட்கார்ந்திருக்கும் மனிதர் மீதும் சரி
இல்லை உள்ளே வந்து ஊஞ்சல் கட்டி
ஆடிக்கொண்டிருக்கும் பெண் மீதும் சரி
கோபம் நிச்சயம் வராது!// ரிப்பீட்டேய்.


அருள் வாக்குச் சொல்லும் ஜக்கம்மாவைப் போன்ற பலர் நாம் வாழ்க்கையில் சந்திக்கும் மனிதர்கள்.
இவர்கள் ஏதுமறியாமலே சொல்லும் சொற்கள் நம் மனதிலும், வாழ்க்கையிலும் பல மாற்றங்களை ஏற்படுத்தும். உண்மை.

VSK Saturday, October 20, 2007 5:03:00 PM  

//இவர்கள் ஏதுமறியாமலே சொல்லும் சொற்கள் நம் மனதிலும், வாழ்க்கையிலும் பல மாற்றங்களை ஏற்படுத்தும். உண்மை.//

மீண்டும் இளமைக்கால நிகழ்வுகள் தொடர்கிறது.

இதுபோல சிலர் மூல வரும் செய்திகளைத்தான் நான் கவனமாகக் கேட்கவேண்டும்... ஒரு தெளிவு கிடைக்க!

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP