"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!" -- 3
"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!" -- 3
முந்தைய பகுதி இங்கே!
1.
கருக்கலில் கண் விழித்தது முதலே மிகவும் மகிழ்ச்சியாய் இருந்தான், கந்தன்.
பக்கெட்டில் இருந்த தண்ணீரை எடுத்து, வாய் கொப்பளித்து, முகம் அலம்பி,
"அம்மா! நான் போயிட்டு வரேன்" என்று, சுவரில் மாட்டியிருந்த படத்தைப் பார்த்துச் சொல்லிவிட்டு,
குடிசையை விட்டு வெளியே வந்தான்.
பட்டி அருகே சென்றதுமே, "மே.....ஏ" என அன்புடன் வரவேற்றன ஆடுகள்.
படலைத் திறந்து, "தா, தா" என அவைகளை வெளியே விரட்டி, படலை மீண்டும் மூடிவிட்டு, உற்சாகமாக
சீட்டி அடித்தபடியே அவைகள் பின் சென்றான்.
மனம் இன்னமும் அதிகாலையில் அவன் கண்ட கனவைப் பற்றியே சந்தோஷத்துடன் அசை போட்டது.
இந்த வாரத்தில் அவன் இரண்டாம் முறையாகக் கண்ட கனவு இது!
அப்போது....மந்தையிலிருந்து பிரிந்து தனித்துச் செல்ல முயற்சிக்கும் ஒரு ஆட்டைப் பார்த்தவுடன், கையிலிருந்த குச்சியைத்
தரையில் தட்டியபடியே திரும்ப மந்தைக்குள் அதைத் தள்ளிவிட்டு, வழக்கமாக மேய்ச்சலுக்கு விடும் இடத்தை அடைந்தான்.
ஊருக்கு வெளியே இருக்கும் அந்தப் பாழடைந்த கோவில்.
சிலையைப் பல ஆண்டுகளுக்கு முன்னர் யாரோ களவாடிச் சென்றபின்னர்,பூஜைகள் நின்று போய், வருவோரின்றி, சிதிலமாகிக்
கிடந்த கோவிலின் பின்புலம்தான் கந்தன் மேய்ச்சலுக்கு வழக்கமா வரும் இடம்.
அங்கிருக்கும் ஒவ்வொரு இடமும் அவனுக்கு அத்துப்படி!அந்த கோவில். சாமியில்லாத கர்ப்பக்கிரகம். இன்னமும் நிக்கற தெற்குச் சுவர். அதன் பின்னாலிருக்கும்,
ஓங்கி வளர்ந்த அந்தப் புளியமரம்! அதன் அடியில்தான் ஆடுகள் படுத்துறங்கும்.
கொண்டுவந்த கஞ்சிக்கலயத்தை, உள்மேடையில் ஓரமாக வைத்தபின்னர், 'கண்ணுங்களா! நல்லா மேயுங்க!'
என அன்பாகச் சொல்லியபடியே கையோடு எடுத்து வந்த புத்தகத்தைப் பிரித்தான்.
அவனோட அம்மா விட்டுச் சென்ற ஒரே சொத்து அந்த ஓலைக்குடிசையும், 15 ஆடுகளும், இந்தப் புத்தகமும் தான்.
அம்மா இருந்தவரைக்கும், கஞ்சியோ, கூழோ கொடுத்து அவனை இஸ்கோலுக்கு அனுப்பி வைத்தாள்.
ஆத்தாவுக்கு உடம்புக்கு வந்து சீக்காப் படுத்தப்பதான், இவனுக்கு படிக்க முடியாமப் போனது.
வாத்தியாருக்கு இவன் மேல ரொம்பப் பிரியம்.
இந்த நிலைமையிலியும் படிக்க வரானேன்னு.
இப்ப முடியாமப் போச்சுன்னு ஆனதும், ரொம்பவே வருத்தப்பட்டார்.
"கந்தா! உலகம் இந்த ஊரோட நின்னு போகலை. இதுக்கு மேலேயும் இருக்கு. உன்னைச் சுத்தி நடக்கற ஒவ்வொண்ணுத்தையும்
கவனமாப் பாரு.எதையும் மறக்காதே! எல்லாமே ஒருநாளைக்கு உனக்கு உதவும்.பல இடத்துக்கும் போகப் பாரு.
எங்கே இருந்தாலும் நீ நல்லா இருப்பே" எனச் சொல்லி,
இந்தப் புத்தகத்தை அன்பளிப்பாகக் கொடுத்தார்.
சீக்கிரமே அம்மாவும் செத்துப் போக, இப்போ கந்தனுக்கு இதான் வாழ்க்கை.
காலையில் மேய்ச்சலுக்கு இங்கே வருவது,
சாமி இல்லேன்னாலும், கன்னத்துல போட்டுகிட்டு உள்ளே செல்வது,
மீதிப் பொழுதை அங்கேயே கழிப்பது,
மனசிருந்தா, கோவிலைச் சுற்றி இருக்கற புதரை வெட்டி சீர் படுத்த முயல்வது,
சூரியன் உச்சிக்கு வந்ததும், கொண்டுவந்த கஞ்சியைக் குடித்துவிட்டு, கொஞ்சநேரம் கொண்டுவந்த புத்தகத்தைப் படிப்பது,
ஆடுகள் எல்லாம், நிழலுக்காக வந்து அந்தப் புளியமரத்தின் அடியில் உட்கார்ந்து அசை போடுவதைப் பார்த்த்படியே கொஞ்சம் கண்ணசருவது,
சூரியன் மேக்கால மறைஞ்சதும், 'வரேன் சாமி' என இல்லாத சாமிக்கு மீண்டும் ஒரு கும்பிடு போட்டுவிட்டு,
'எலே! வாங்கடே போலாம்!" எனச் சொல்லி வீடு திரும்புவது.
கைகால் கழுவிய பின்னர் அடுப்பை மூட்டி, கஞ்சியோ, கூழோ காய்ச்சிக் குடிச்சிட்டு, மறுநாளைக்கும் ஒரு கலயத்துல எடுத்து வெச்சிட்டு
சற்று நேரத்தில் உறங்கப் போவது.
வாரம் ஒருமுறை சந்தைக்குப் போய், ஆட்டுரோமம் போன்ற பொருட்களை விற்று, நல்ல விலைக்கு வந்தால் ஆடுகளை வாங்குவதோ, விற்பதோ செய்து,
வீட்டுக்குத் தேவையான சாமான்களையும் கொஞ்சம் வாங்கி, தானுண்டு, தன் வேலையுண்டு என இருந்து வந்தான் கந்தன்.
சின்னப்பையன், அதுலியும் அப்பன், ஆத்த இல்லாத புள்ளைன்னு எல்லாருக்கும் இவன் மேல அனுதாபம்!
காலையில் எழுந்து சந்தைக்குப் போனான்.
அங்கேதான் கந்தன் செல்லியைப் பார்த்தான்!
[தொடரும்]
************************************************
அடுத்த அத்தியாயம்
30 பின்னூட்டங்கள்:
நல்ல ஆரம்பம். ஒரு எளிய வாழ்க்கை வாழ்பவன் எவ்வளவு சந்தோஷமாக இருக்க முடிகிறது பாருங்கள்.
பின்னூட்ட நாயகன் கையால் முதல் கருத்து!
நல்ல சகுனம் தான்!
:))
தேவைகள் குறைவாக இருக்கையில் மகிழ்ச்சிக்குக் குறைவேது?
நன்றி, கொத்ஸ்!
கந்தனைப் பார்த்தால் கொஞ்சம் பொறாமையாகவே இருக்கிறது:))
குறைகாணாமல் கடவுளைத் தொழுகிறான்.நன்றாகவே இருப்பான்.
சீக்கிரமே கதையைத் தொடருங்கள் எஸ்கே சார்.
உங்க வாக்கு பலிக்கட்டும், வல்லியம்மா.
வாரத்துக்கு 3 அத்தியாயம் என்பதே அதிகமோ என எண்ணினேன்.
சனி, ஞாயிறுகளில் வேறு நம்ம ஆளுங்க காணாமப் போயிருவாங்க.
நன்றி.
தொடர்ந்து படிக்கிறேன்.என் பழைய சில பின்னூட்டங்களைக் காணவில்லை என்று நினைக்கிறேன். மனம் அற்ற நிலையில் வாழும் மகான்கள் பேரைச் சொல்லிஎழுதுகையில் அவசியம் படிப்பேன் முழுவதையும். தொடர்ந்துஎழுதுங்கள்.
அனைத்துப்பின்னூட்டங்களும் இருக்கின்றன.என் மென்பொருளில் சிறிது பிரச்சினை. சரி செய்துவிட்டேன்! நீங்கள்எழுதும் ஒவ்வொரு எழுத்தும்என்னை வந்தைடையும் தவறாமல்... இது வரை சுவாரசியமாகத்தான் செல்கிறது... தொடரவும்.
இந்த தொடர் முடிந்ததும் நீங்கள் தமிழகம் வந்தால எங்கூரு (பழனி) பஞ்சாமிர்தமும் விபூதிப்பிரசாதமும் கூரியரில் அனுப்பி வைக்கிறேன். புகழ்பெற்ற சித்தனாதன் விபூதியின் மணமே ஒரு சித்தரின் கையால் அவருக்கு மூலிகை ரகசியமாக அளிக்கப்பட்டதாக சொல்கிறார்கள். சித்தனாதனின் பேரன்எனது நண்பர். அவசியம் ஒரு ஸ்பெசல் பிரசாதம் அனுப்ப சொல்கிறேன்!
மிக்க நன்றி, நண்பரே!
அவசியம் தாயகம் வருகையில் தொடர்பு கொள்கிறேன்.
அதுவும் பழநி பஞ்சாமிர்தம்னு வேற சொல்லிட்டீங்க!
கண்டிப்பா!
நல்ல துவக்கம், கையைப் பிடித்து நடந்து கொண்டே கதையைச் சொல்வது போன்ற உத்தி, தொடரும் என்ற சொல்லைப் போட்டு அத்தியாயத்தை முடிக்கு முன் எதிர்பார்ப்பைத்தூண்டும் வரி (அங்கேதான் கந்தன் செல்லியைப் பார்த்தான்)
60 களில் வந்த குறிஞ்சி மலர்' என்னும் நாவலின் எளிமையை நினைவு படுத்தும்
கதையின் ஓட்டம் - நன்றாக வந்திருக்கிறது வி.எஸ்.கே சார்
வாழ்த்துக்கள்!
இதில் சில கனமான செய்திகளும் வருகிறபடியால், கூடுமானவரை எளிமையாகச் சொல்லவே முயன்றிருக்கிறேன், ஆசானே!
மிக்க நன்றி.
நல்ல தொடக்கம் நன்றாக எழுதி இருக்கிறீர்கள்.
தினமும் பதிந்தால் நன்றாக இருக்கும்.
பதியலாமே!
திங்கள். முதல் வெள்ளி வரை எனப் பதியலாமா?
நன்றி, அனானி அவர்களே!
நல்ல தொடக்கம் எஸ்.கே.
கந்தனின் கதையில் மூலனின் கதைச்சாயல் வரத் தொடங்கியது. கடைசியில் செல்லி வந்ததால் கதையின் பாதை விலகிவிட்டது. :-)
எந்த மூலன்னு கேக்குறீங்களா? ஆடுமேய்த்த மூலனைத் தான் உங்களுக்குத் தெரியுமே? :-)
அப்பப்ப இந்த மாதிரி சிலர் தலை காட்டி சாயல் சொல்லிப் போவாங்க! ஒருத்தொருதரா கண்டுபிடிங்க!
நன்றி குமரன்.
VSK, Good start :)
// கோவிலின் பின்புலம்தான் கந்தன் மேய்ச்சலுக்கு வழக்கமா வரும் இடம்.//
வழக்கமா'Ga'
Ga missing. thooya tamillerundhu, saadhaa tamilkku anganga shift aagudhu. ;)
தூய தமிழினின்று ஆங்காங்கே பிறழுவதாய்
சொல்லிக்காட்டும் சர்வேசரே!
ஆன்மீகமெனபதே ஆங்காங்கே பிறழ்வதுதானே!
பிறழ்வதில்தான் தெளிவு பிறக்கும்!
எந்த மூலன்னு கேக்குறீங்களா? ஆடுமேய்த்த மூலனைத் தான் உங்களுக்குத் தெரியுமே? :-)
அதெ மேய்ப்பவன், மரக் கிலையில் உட்கார்ந்து
கொண்டு
சுட்ட பழம் வேண்டுமா?
சுடாத பழம் வேண்டுமா?
என்று கேட்டவன்,
இங்கேயும் அதைச் சுட்டிக் காட்டட்டும்!
நல்ல துவக்கம் SK
செல்லியைக் காணும் இடத்தில் சஸ்பென்ஸா?
பொடி வைத்து நிறுத்தும் கலை வல்லார் அல்லவா நீங்கள்!
எனக்கு மூலனை மட்டுமல்லாது, ஆனாய நாயனாரும், பாணாழ்வாரும், இடைக்காட்டுச் சித்தரும்...நினைவுக்கு வாராங்க!
//மறுநாளைக்கும் ஒரு கலயத்துல எடுத்து வெச்சிட்டு//
சுடுகஞ்சி ஒரு சுவைன்னா, அடுத்த நாள் கஞ்சி வெங்காயத்துடன் இன்னொரு சுவை!
ஆமா, அவன் கையில் உள்ள புத்தகம், என்ன புத்தகம்?
உள்ளேன் ஐயா மட்டும்.... இதுவும் படித்து விட்டேன் என்பதை சொல்ல தான்...
இ.கொ. வின் கருத்து ஏற்புடையது எனக்கு....
சித்தருக்கெல்லாம் பெரிய சித்தனைச் சுட்டிக் காட்டறீங்க ஆசானே!
:))
அட! என்னங்க ரவி!
எல்லாரையும் கூட்டிகிட்டு வந்துருவீங்க போல!
:))
ஒவ்வொண்ணா ரசிக்கற உங்க பாணி இங்கேயும் தெரியுது!
நன்றி நாகைக்காரரே!
வரும் பதிவுகளில்.. கனமாக வருகிறதா?
காத்திருக்கேன்.
நல்ல தொடக்கம். இனிய எளிய வாழ்க்கை. கந்தனின் வாழ்வு செல்லும் பாதை எதுவென்று கந்தன் புகழ் பாடும் விஎஸ்கே சொல்லித் தெரிந்து கொள்வோம்.
வருகைக்கு நன்றி, திரு. ஜி.ரா. & குமார்!
இட்து மாதிரியே தொடர்ந்து கருத்துகளைச் சொல்லி வாங்கன்னு கேட்டுக்கறேன்.
VSK அய்யா,
எங்கே ஆளே காணோமேன்னு நினைச்சேன், பலமான கதையோட தான் வந்திருக்கீங்க. உங்க கசடறவே இன்னும் முழுசா படிக்கலை. இது வேறயா.. ஆகா..
முந்தைய பகுதின்னு இங்கேன்னு தலைப்புல போட்டது சொளகரியமா இருக்கு. அதே மாதிரி கீழே அடுத்த பகுதின்னு ஒரு தொடுப்பு குடுத்தீங்கன்ன நன்றாக இருக்கும்.
//தேவைகள் குறைவாக இருக்கையில் மகிழ்ச்சிக்குக் குறைவேது?//
தேவைகள் குறைவு, நிறைவு என்பதைத் தீர்மானிப்பது யார்?
நல்ல ஆரம்பம்!
எளிமையான வாழ்வின் ஆரம்பம் நன்றாகச் சொல்லி இருக்கிறீர்கள்!
//சாமி இல்லேன்னாலும், கன்னத்துல போட்டுகிட்டு உள்ளே செல்வது,
//
//இல்லாத சாமிக்கு மீண்டும் ஒரு கும்பிடு போட்டுவிட்டு,
//
வி.எஸ்.கே வின் எழுத்துக்களா இப்படி?
(ச்சும்மா லுலுங்காட்டி, கோச்சிக்காதீங்க)
:))
அருமையா துவக்கம். எளிமையான சொற்கள். கதையோட்டம் நன்கு செல்கிறது. கந்தனின் கஞ்சி என்னுடைய இளமைக் காலத்தை நினைவுறுத்துகிறது. காலையில் எழுந்த உடன் நீராகாரம் (முதல் நாள் வடித்த சோற்றில் ஊற்றி வைத்த தண்ணீர்) உப்புடன் கலந்து சாப்பிட்ட மகிழ்ச்சி இப்போது இல்லை. (இப்போ கஞ்சியா - நீராகாரமா ?? அப்டின்னான்னு கேக்குறோம்). பள்ளிக்குச் செல்லும் முன் ஒரு வட்டிக் கஞ்சியை கெட்டித் தயிருடன் கலந்து சுண்டக் குழம்புடன் வயிறு முட்டச் சாப்பிடும் பழக்கம் இப்போது மறைந்ததேன் ? மறந்ததேன் ?
கந்தன் ஏழ்மை நிலையிலும் இறை சிந்தனை உடையவனாக இருப்பது கதையைப் பற்றிய பல ஊகங்களைத் தருகிறது. செல்லியைச் சந்திக்கும் இடத்தில் தொடரும் போட்டட்தில் நல்லதொரு கதாசிரியராகத் திகழ்கிறீர்கள்.
//கந்தன் ஏழ்மை நிலையிலும் இறை சிந்தனை உடையவனாக இருப்பது கதையைப் பற்றிய பல ஊகங்களைத் தருகிறது. செல்லியைச் சந்திக்கும் இடத்தில் தொடரும் போட்டட்தில் நல்லதொரு கதாசிரியராகத் திகழ்கிறீர்கள்.//
மிகச் சுவையாக இளமைக்கால நிகழ்வுகளைச் சொல்லியிருக்கிறீர்கள், திரு.சீனா.
நன்றி.
Post a Comment