"ஆடேலோர் எம்பாவாய்" - 10 [20]
"ஆடேலோர் எம்பாவாய்" - 10 [20]
போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரிகம்
போற்றி யாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழி நீராடேலோர் எம்பாவாய். 20
[கரையேறிய பெண்கள் காலைக்கருக்கலில் நிமிர்ந்து பார்க்கிறார்கள்!
நெடிதுயர்ந்த கோபுரம் மங்கலாகத் தெரிகிறது!
வழக்கம் போலவே, உயர்ந்த உருவத்தோடு அந்தச் சிவனாரே தெரிகின்றனர்!
ஆனால், இதென்ன! ஒன்றும் சரியாகத் தெரியவில்லையே!
மேலே குறுகிய உடலோடும் கீழே அகன்று விரிந்த பாதங்கள் தெரிகின்றன!
அன்பு மேலிட்டு அத்திருப் பாதங்களைப் போற்றிப் பாடத் துவங்குகின்றனர்!
எல்லாம் போற்றி முடித்த பின்னர் திரும்பிப் பார்த்தால்......
இன்னும் ஒரு பெண் மட்டும் கரையேறாமல் குளித்துக் கொண்டிருக்கிறாள்!
அவளையும் அழைக்கின்றனர்!]
[மேலே சொன்னது என் மனதில் தோன்றிய கருத்துகள்! கற்பனை!]
அனைத்திற்கும் தொடக்கமான உன் மலர்ப் பாதங்கள் எமக்கு அருளட்டும், போற்றி!
அனைத்தும் முடிவாக வந்தடையும் சிவந்த தளிர் போன்ற பாதங்கள் அருளட்டும், போற்றி!
அனைத்து ஜீவராசிகளும் பிறக்கும் இடமான அந்த பொற்பாதங்களே, போற்றி!
அனைத்து உயிர்களும் இன்பம் துய்க்க அருளும் மலர்ப்பாதங்களே, போற்றி!
அனைத்து உயிர்களுக்கும் இறுதியாய் விளங்கும் இணையான இரு பாதங்களே, போற்றி!
அரங்கனும், அரனும் தேடியும் காணமுடியாத திருவடித் தாமரைகளே, போற்றி!
அனைவரும் முத்தியடைய ஆட்கொண்டருளும் பொன்மலர்ப் பாதங்களே, போற்றி!
அனைவரும் எழுந்தபின்னரும் இன்னுமா மார்கழி நீராடுவாய்? பாடுவோம் நாம், போற்றி!
அருஞ்சொற்பொருள்:
ஈறு - முடிவு; புண்டரிகம் - தாமரை
[இதற்கு இன்னொரு ஆழ்விளக்கமும் உண்டு!
அது நாளை!]
திருச்சிற்றம்பலம்!
8 பின்னூட்டங்கள்:
//மேலே சொன்னது என் மனதில் தோன்றிய கருத்துகள்! கற்பனை!]
//
எஸ்கே ஐயா...!
உங்களுக்கே உரிய சீரிய கற்பனை என்றாலும் நன்றாக இருக்கிறது. மங்கலாக தெரிந்த கோபுரம் பெரிய சிவலிங்கமாக காட்சியளிக்கிறது. அகன்ற பாதங்களென கோபுர அடித்தளம் அது ஆவுடையாரில் சிவலிங்கம் போல் காட்சியளிக்கிறது.
(கற்பனைக்கு ஒரு கற்பனை)
பாடலும் விளக்கமும் பாதக்கமலங்களை வணங்கி மகிழ்வதாக ஒவ்வொரு *அடி*யிலும் பதிந்து நிற்கிறது. சொல்லடியும், பொருளடியும் போற்றி வணங்குகிறேன்.
"கற்பனைக்கண்ணனுக்கு" கற்பனை பற்றி சொல்லியா தரவேண்டும்!!
:))
ஆதியும் அந்தமும் இல்லாத பெருமானின்
திருவடிகளைப் பற்றிய சிறப்பான பாடல் -
உங்களுடைய சிறப்பான விளக்கங்களுடன்
நன்றி அய்யா!
மிக்க நன்றி ஆசானே!
இதற்கான தத்துவ விளக்கத்தை நாளை காணலாம்!
ஈசன் அடி போற்றி
எந்தையடி போற்றி!
தேசனடி போற்றி!
சிவன் சேவடி போற்றி!
நேயத்தே நின்ற
நிமலனடி போற்றி!
மாயப் பிறப்பறுக்கும்
மன்னரடி போற்றி!
சீராப் பெருந்துறை நம்
தேவன் அடி போற்றி!
ஆராத இன்பம் அருளும்
"மலை" போற்றி!
ஈசன் எந்தை இணையடி நிழலே......
நன்றி ஐயா...தங்கள் கற்பனையும் அருமை....
பாடலின் விளக்கம் நேர்பொருளிலேயேதான் தந்திருக்கிறேன், மதுரையம்பதியாரே!
அதற்கு முன்னும் பின்னுமாய் இந்த பத்து 'நீராடல்' பாடல்களின் மூலம் ஒரு நிகழ்வாய் நான் சொன்ன சில காட்சிகள் மட்டுமே என் கற்பனை!
மிக்க நன்றி!
இருபது நாள் போய் விட்டதா மார்கழியில். அனுபவிக்க அருமையான பாட்ல்களைப் பதிவில் அர்த்தத்துடன் பார்க்கும்போது மீண்டும் மீண்டும் படிக்கத் தோன்றுகிறது.
நன்றி, எஸ்.கே சார்.
முதல் நாள் பாடல்:
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி
கடைசி நாள் பாடல்:
போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்!
இப்படி முதலும் முடிவுமாய், திருவடிகளே பேசும் பொருளாய் ஆனதில் வியப்பென்ன!
மலரடி என் சென்னி மிசை வைத்த பெருந் தெய்வம் அல்லவா?
//போற்றியாம் மார்கழி நீராடேலோர் எம்பாவாய்//
ஈசனே போற்றி! எந்தையே போற்றி!
நேசனே போற்றி! சிவன் சேவடி போற்றி போற்றி!!
Post a Comment