"ஆடேலோர் எம்பாவாய்" - 9 [19]
"ஆடேலோர் எம்பாவாய்" - 9 [19]
[குளியாட்டம் நிகழ்ந்தவரை ஒரே கும்மாளமாயிருந்த பெண்கள், சிவனாகவே தாங்கள் கண்ட இப்பூம்புனலை விட்டுக் "கரை" ஏறுகிறார்கள்!
நிகழ்வுலக மயக்கம் இவர்களைப் பீடிக்கிறது!
அதினின்று விடுபடவும் சிவனாரையே வேண்டுகின்றனர்!
நாகரிகம் மாறி வருகின்ற இக்காலத்திற்கும் பொருத்தமான ஒரு பாடலை அன்றே இப்பெண்கள் பாடியிருக்கிறார்கள்!]
உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று
அங்கப் பழஞ்சொல் புதுக்கும் எம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன்று உரைப்போம் கேள்
எங்கொங்கை நின்னன்பர் அல்லார்தோள் சேரற்க
எங்கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க
கங்குல் பகல் எங்கண் மற்றொன்றும் காணற்க
இங்கிப் பரிசே எமக்கு எங்கோன் நல்குதியேல்
எங்கெழிலென் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய். 19
எல்லாம் வல்ல எங்கள் பெருமானே!
எங்களுக்கெல்லாம் இப்போது ஓர் புது அச்சம் வந்திருக்கிறது!
"உன் கைப் பிள்ளை உனக்கே உரியது! நும் பொறுப்பே அவையெல்லாம்"
என்று,எப்போதும் வழங்கும் பழமொழி யாம் கேட்டிருக்கிறோம்!
[கரையேறும் இந்நேரத்தில்] அதனை மீண்டும் ஓர்முறை
உம்மிடம் நினைவூட்ட வேண்டுமோவென எமக்குத் தோன்றுகிறது!
எனவே உன்னிடம் ஓர் விண்ணப்பம் வைக்கின்றோம்!
நாங்கள் சொல்வதைக் கருணையுடன் கேட்டருள்வாயாக!
உன் அடியவர் என்பரைத் தவிர்த்து வேறொருவர் தோள்களையும்
எம்மார்பில் நாங்கள் தழுவுதல் இல்லாமல் போகட்டும்!
உம் பணியே அல்லாது வேறெந்தத் தோழிலும்
எம் கைகள் செய்யாதிருக்கட்டும்!
வேறெதுவும், இதைத்தவிர, இரவும், பகலும்
எம் கண்கள் கண்டு மயங்காதிருக்கட்டும்!
யாம் வேண்டிடும் இந்தப் பரிசுகளை மட்டும்
எம் தலைவனாம் நீவிர் அருள் புரிவீரேல்,
கதிரவன் இனி எத்திசையினில் உதித்தால்தான்
எமக்கென்ன குறை? எனச் சொல்லி
ஆடி எழுந்திரடி என் பெண்ணே!
அருஞ்சொற்பொருள்:
கொங்கை - மார்பகம்; கங்குல் - இரவு; பரிசு - வகை; ஞாயிறு - கதிரவன்.
8 பின்னூட்டங்கள்:
எம்.எல். வசந்தகுமாரி பாடிய திருவெம்பாவைப்பாடல்களை இங்கே கேட்கலாம்.
http://www.musicindiaonline.com/
music/devotional/s/album.374/diety.8/
ஹூம்! சுவையாக இருந்தது!
மிக்க நன்றி, திரு.ஜீவா!
//எங்கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க
கங்குல் பகல் எங்கண் மற்றொன்றும் காணற்க//
பக்தையின் /பக்தரின் அற்புதமான மன வெளிப்பாடு! சிறப்பான வரிகள் அய்யா!
//உன் அடியவர் என்பரைத் தவிர்த்து வேறொருவர் தோள்களையும்
எம்மார்பில் நாங்கள் தழுவுதல் இல்லாமல் போகட்டும்!
//
எஸ்கே ஐயா,
சிவனடியாரன்றி வேறொருவரை என் சிந்தை நினையாது, கை சேர்க்காது, தோள் பற்றாது - என்பதை அழகாக சொல்லி இருக்கிறீர்கள்.
எனக்கு பிடித்தவரியும் கூட.
நன்றி !
அன்பு முழுதுமாய்ச் செய்பவர்க்கு மட்டுமே இப்படிச் சொல்ல இயலும் என் எண்ணுகிறேன் ஆசானே!
உங்களுக்கு இது பிடிக்கும் என நான் அறிவேன், கோவியாரே!
பிடித்ததைச் செயலாக்க அன்பு செலுத்துவதும் தேவை என்பதையும் முன் பதிவில் சொல்லி இருக்கிறீர்களே!
:)
பதிவிற்கு நன்றி சார்....
Post a Comment