Monday, January 01, 2007

"ஆடேலோர் எம்பாவாய்" - 8 [18]

"ஆடேலோர் எம்பாவாய்" - 8 [18]

[மழை வந்ததும் இன்னொரு ஆசை பிறக்கிறது இப்பெண்டிருக்கு! பூம்புனலில் பாய்ந்து நீரில் துழாவி,அடிப்பக்கம் வரை செல்ல! மேலே வெளிச்சம்; கீழே இருள்! இடையினில் இரண்டும் கலந்த ஒரு தோற்றம்! கற்பனைச் சிறகு விரிந்து பறக்கிறது! இறைவனை இம்மூன்றாகவும் பாடி மகிழ்கின்றனர்!
எங்கும் இறைவன்! எதிலும் இறைவன்! என்னே இவர் மாண்பு!]

இத் திருவாதிரைத் திருநாளில் நாமும் அவன் கழலடி பணிவோம்!!

அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகை வீறு அற்றாற்போல்


கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்
தண்ணார் ஒளிமயங்கித் தாரகைகள் தாம் அகலப்


பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்

கண்ணார் அமுதமாய் நின்றான் கழல்பாடிப்
பெண்ணே இப்பூம்புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய். 18


திருவண்ணாமலையினிலே நம் இறைவன்
பேரொளிப் பிழம்பாய் நிற்கின்றான்!

அவன் திருவடித் தாமரை பணிந்து
வணங்கிடும் விண்ணவரின் மகுடங்களில்
விளங்கிடும் அணிமணி வைரங்கள்
எம்பிரானின் திருவடிப் பேரொளிமுன்
ஒளியிழந்து, தம் பெருமை இழந்து
மங்கித் திரிதல் போல,

காரிருள் நீங்கிடும் வண்ணம்
கதிரவன் எழுந்ததும் இங்கே
விண்மீன்கள் எனும் தாரகைகள்
தம் ஒளியிழந்து மறைந்தன!
பொழுதும் விடிந்து விட்டது!

பெண்ணென்றால் பெண் எனவும்,
ஆண் என்றால் ஆண் எனவும்,
இரண்டுமற்ற அலி எனவும்
அவன் இங்கே விளங்கிடுவான்!
[எப்படி இது சாத்தியமெனின்],

இடையறாது ஒளிவீசும் ஆதவனும்
வெண்மதியும், ஒளிர்தாரகையும்
விளங்கிடும் வானம் போலவும்,
அவற்றால் பயன்பெறும் நிலம் போலவும்,
இவை இரண்டிற்கும் வேறான அனைத்துமாகவும்
விளங்கி நின்று, நம் கண் முன்னே
காட்சி தரும் நிறையமுதமாகவும்
நிற்கின்ற, எம் தலைவனின் கழல் பூண்ட
திருவடிகளினைப் பாடிப் பாடி
மலர் நிறைந்து விளங்குகின்ற
இந்த நீரினில் நீயும் மேலும் கீழும்
பாய்ந்து ஆடடி என் பெண்ணே!

அருஞ்சொற்பொருள்:
வீறு - ஒளி/பெருமை; கார் - இருள்; கரப்ப - நீக்க; தாரகை - விண்மீன்;
பிறங்கொளி - மின்னும் ஒளி.

14 பின்னூட்டங்கள்:

Unknown Tuesday, January 02, 2007 8:00:00 PM  

அனைத்துமாகி நின்ற இறைவன் ஆணாகவும், பெண்ணாகவும், அரவாணியாகவும் நிற்பதில் அதிசயமென்ன?

சர்வம் சிவமயம்

VSK Tuesday, January 02, 2007 9:46:00 PM  

சிவமயமே எங்கும் சிவமயமே - இனி
நமபயம் இல்லை என்றும் சிவமயமே!

நன்றி, செல்வன்!

கோவி.கண்ணன் [GK] Tuesday, January 02, 2007 10:45:00 PM  

//பெண்ணென்றால் பெண் எனவும்,
ஆண் என்றால் ஆண் எனவும்,
இரண்டுமற்ற அலி எனவும்
அவன் இங்கே விளங்கிடுவான்!
[எப்படி இது சாத்தியமெனின்],//

ஐயா,

ஆணாதிக்க மனப்பாண்மையாலேயே இறைவனை ஆணாக பார்பது எல்லா மதங்களிலும் உள்ளவைதான்.

பரம்பொருளுக்கு உருவமோ, உடலோ இல்லை என்பதால் ஆண்/பெண்/அலி இவை எதையும் வைத்து இறைவனின் பால் சொல்லமுடியாது. பாலற்ற இறைவானை அன்பால்தான் உணரமுடியும் என்பது என்கருத்து.

Anonymous,  Tuesday, January 02, 2007 11:12:00 PM  

அதிகாலை எழுந்து ஆதிரைத் திருநாள் இன்று திருவெம்பாவைபாடல்கள் பாடி சிவனை துதிப்பதே தனி திருப்தி.
காலத்து கேற்ற பதிவு.
நன்றி sk

Anonymous,  Wednesday, January 03, 2007 3:58:00 AM  

நன்றி சார்...இன்று திருவாதிரைத் திருநாள்.....பல ஆலயங்களிலும் அன்னாபிஷேகங்களும், ஆருராத்திரா தரிசனம் என்று பலவித அலங்காரங்களும் நடக்கிறது...அவனருளால் அவன் தாள் பணிவோம்...

மெளலி....

VSK Wednesday, January 03, 2007 9:19:00 AM  

ஆமாம் மதுரையம்பதியாரே!
அங்கே தி.ரா,ச. வேறு இன்னும் ஆனந்த வெள்லத்தில் ஆழ்த்தியிருக்கிறார்.:))

VSK Wednesday, January 03, 2007 9:24:00 AM  

உங்களுக்குச் சரியெனப் பட்ட கருத்தைச் சொல்லி இருக்கிறீர்கள், கோவியாரே!

அன்பால் உணரும் போது ஆத்திரம் எப்பவுமே வராது என்பதையும் நன்கு உணர்த்தியிருக்கிறீர்கள்!

ஆனால், அன்பெனச் சொல்லிவிட்டு, அடிக்கடி ஆத்திரப்படுபவர்களையே நாம் இங்கு அதிகம் பார்க்கிறோம், இல்லையா!

அவரவர் எப்படிப் பார்க்கிறார்களோ அப்படியே விட்டுவிடுவதுதான் சரி எனத் தோன்றுகிறது.

இந்தப் பெண்கள் இப்படியே பார்த்து மகிழ்ந்து விட்டுப் போகட்டுமே!
:))

VSK Wednesday, January 03, 2007 9:25:00 AM  

வாங்க செல்லி அவர்களே!

ஆதிரையில் ஆதியும் அந்தமும் இல்லாதவனைப் பாடித் துதித்து மகிழ்வோம்!

நன்றி!

கோவி.கண்ணன் [GK] Wednesday, January 03, 2007 10:01:00 AM  

//ஆனால், அன்பெனச் சொல்லிவிட்டு, அடிக்கடி ஆத்திரப்படுபவர்களையே நாம் இங்கு அதிகம் பார்க்கிறோம், இல்லையா!//

எஸ்கே ஐயா,

பாலற்று எல்லாவற்றிற்கும் அப்*பால்* இருப்பவரை அன்*பால்* மட்டுமே அடையமுடியும் என்று மதங்கள் சொல்வதைத்தான் நான் சொல்கிறேன்.

அடிக்கடி ஆத்திரப் படுபவர்கள் நட்*பால்*, குறும்*பால்* கட்டுண்டுகிடக்கையில் வெறுப்*பால்*, வீம்*பால்* அவற்றை ஒன்றுமே செய்ய முடியாது.
:)

Anonymous,  Wednesday, January 03, 2007 10:35:00 AM  

Great Divine Service Sir.

Kannabiran, Ravi Shankar (KRS) Wednesday, January 03, 2007 10:51:00 AM  

//அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும்//

முதன் முறையாக இங்கு தான் திருவெம்பாவையில்,
"அண்ணாமலை" என்றுப் பாடப்படும் தலம் பற்றிய நேரடிச் சொல் வருகிறது, இல்லையா SK ஐயா?

//கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்//

அட, அடியேன் பெயரும் வந்ததிலும் ஒரு குழந்தையின் மகிழ்ச்சி!

VSK Wednesday, January 03, 2007 11:50:00 AM  

வருகைக்கு நன்றி, திரு.Sai Devotee 1970s !!

அந்த சாயிநாதனே வந்து பாராட்டியதாக எண்ணி மகிழ்கிறேன்!

:))

VSK Wednesday, January 03, 2007 11:54:00 AM  

ஐந்தாம் பாடலில் "மாலறியா நான்முகனும் 'காணாமலை'" எனச் சொல்லியிருந்தாலும், "அண்ணாமலை" என்ற சொல் நேரடியாக இதில்தான் வருகிறது, ரவி!
சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்!

"கண்ணார் இரவி" என உங்கள் பெயரின் இரு பகுதிகளையும் தொட்டு வருகிறதைக் கவனித்தீர்கள் அல்லவா! :))

"சேவகன்" பற்றிக் கேட்டதற்கு சொன்ன பதிலையும் பார்த்திருப்பீர்கள் என நம்புகிறேன்!

VSK Wednesday, January 03, 2007 12:04:00 PM  

//எஸ்கே ஐயா,

பாலற்று எல்லாவற்றிற்கும் அப்*பால்* இருப்பவரை அன்*பால்* மட்டுமே அடையமுடியும் என்று மதங்கள் சொல்வதைத்தான் நான் சொல்கிறேன்.

அடிக்கடி ஆத்திரப் படுபவர்கள் நட்*பால்*, குறும்*பால்* கட்டுண்டுகிடக்கையில் வெறுப்*பால்*, வீம்*பால்* அவற்றை ஒன்றுமே செய்ய முடியாது.//


அன்பே சிவம்!

எந்த வடிவிலும் அன்பு செலுத்த முடியும்!

"பெண்ணானாலும், ஆணானாலும், அலியானாலும்" என்பதையே இப்பெண்டிர் உணர்த்துவதாக நான் கருதுகிறேன், கோவியாரே!

ஆனால், வெறுப்பும், வீம்பும் அன்பு நெருங்கி வருதலைத் தள்ளிப் போடக் கூடும்.

எனவே, அன்பு செய்வோம் வாரீர் செகத்தீரே!

"மறத்திற்கும் அஃதே துணை"! [76]

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP