Wednesday, January 24, 2007

"தவிச்ச வாய்க்கு தண்ணி தந்த சாமி"

"தவிச்ச வாய்க்கு தண்ணி தந்த சாமி"


ரொம்ப நாள் கழித்து, நண்பனைப் பார்க்கும் ஆவலுடன் மயிலை சென்றேன்!

எங்கும் காணோம்!

அக்கம்பக்கத்தில் விசாரித்தேன்!

"அவனா? அவனை ராத்திரி 10 மணிக்கு மேலதான் பாக்கமுடியும்! திருவான்மியூர் வரைக்கும் போயிருக்கான்" எனச் சொன்னார்கள்.

'சரி, இன்றைக்கு எப்படியும் அவனைப் பார்த்துவிட்டுதான் போகப் போறேன். வந்தான்னா, நான் இங்கதான் மாடவீதில இருப்பேன்னு சொல்லுங்க' என அவர்களிடம் சொல்லிவிட்டு, கபாலி கோவிலுக்கு சென்று, தரிசனம் செய்து, 'வஸந்த பவனில்' சாப்பிட்டு விட்டு, வெளியே வருகையில், ஒரு அடி என் முதுகில் பலமாக விழுந்தது!

'யாரது' எனத் திரும்பினால், அட்டகாசமாகச் சிரித்தபடி, மயிலை மன்னார்!

"ஆகா! என்ன தரிசனம்! நீ வராமப் போயிட்டியே! அது சரி! நீதான் திருவெம்பாவை, அது, இதுன்னு, என்னை மறந்திட்டியே! இப்பவாவது நெனப்பு வெச்சுகிட்டு வந்தியே! இன்னா சமாச்சாரம்? நல்லா இருக்கியா" என்றபடி என்னை இழுத்துக் கொண்டு சென்றான், மன்னார்.

'ஆமாம்ப்பா! திருக்குறள் உன்கிட்ட கேட்டு ரொம்ப நாளாச்சு. அதான் வந்தேன்' என்றேன்.

'அது இருக்கட்டும். அதுக்கு முன்னாடி நா ஒனக்கு இன்னோரு விசயம் சொல்லணும். இப்ப நா எங்க போயிட்டு வர்றேன்னு கேக்கலியே' என்றான்.

'ஆமா, மறந்தே போனேன். எங்கிருந்து வருகிறாய்' என்று நானும் ஒப்புக்குக் கேட்டு வைத்தேன்.

"நீ அடிக்கடி சொல்லுவியே, சாய்பாபான்னு ஒரு சாமி, அது வந்திருக்கு நம்ம ஊருக்கு. ரொம்ப தபா இங்க வந்தாலும் இதுவரைக்கும் நானும் போய் பாத்ததில்லை. நீயுந்தான் எத்தினி தபா கூப்பிட்டிருப்பே. ஆனா, இப்ப நானே போய் பாத்திட்டு வர்றேன்! ஆச்சரியமா இருக்குல்ல! ஏன்னு கேளு.


ஆரும் செய்யாத ஒரு காரியத்தை அசால்டா செஞ்சிட்டு ஒரு பந்தாவும் பண்ணாம, இப்ப நம்ம ஊரு நல்லா இருக்கணும்னு ஒரு யாகமும் பண்றாரு. அத்தப்பத்தி கேள்விப்பட்டேன். அங்க போனதுந்தான் தெரியுது. எம்மாம் பெரிய வேலைய சத்தமில்லாம செஞ்சிருக்காருன்னு!

இதத்தாம்ப்பா நம்ம ஐயனும் அடிக்கடி சொல்லுவாரு. எதைச் செய்யணுமோ அதைச் செய்யு, செய்யறத ஒயுங்கா செய்யு. ஆரம்பிச்சீன்னா முளுசா செஞ்சு முடி. செஞ்சதைப் பத்தி பீத்திக்காத. முடிச்சியா,... அடுத்தது நம்மால இன்னா செய்ய முடியும்னு அத்த செய்யப் போ" இப்படி பல குறள்ல சொல்லியிருக்காரு! இந்த மாரி நா இதுவரைக்கும் பாத்ததேயில்ல."
என்று ஒரு பெரிய பிரசங்கமே செய்து விட்டான் மன்னார்.

வலைப்பூக்களில் இது பற்றிய ஒரு புரியாத நிலையே நிகழ்வதைக் கண்டு மனம் நொந்து போயிருந்த வேளையில் அவன் இப்படிச் சொன்னதும், 'கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது போல' உள்ளூர் ஆளைக் கேட்டு அதை எழுதலாமே என எண்ணி, அவனைப் பார்த்து,
நடப்பதையெல்லாம் அவனுக்கு விவரித்தேன்.

"கெடக்கறாங்க வுடு! அவங்களப்பத்தி நீ கவலைப்படாதே! ஆனா, நான் சொல்றதை அப்படியே எளுதிப் போடு. புரிஞ்சுக்கறவங்க புரிஞ்சுக்கட்டும்" என அவன் சொன்னதை இங்கு பதிகிறேன்.

ஆதி முதல் அந்தமாக அவன் சொன்னதை எழுத ஒரு சில பதிவுகள் பிடிக்கும்!

சென்னப்பட்டணமா இருந்த நம்ம மெட்ராஸ் இங்லீஷ்காரன் காலத்துல இருந்தே ரொம்ப ஃபேமஸான ஊரு.
ஊரு பெருசாக, பெருசாக, ஆளுங்களும் சாஸ்தியாகி, தண்ணிக்கு எப்பவுமே தட்டுப்பாடுதான்!
ஏன்னா, இங்க ஒரு ஆறோ, குளமோ பெருசா சொல்லிக்கற மாரி ஒண்ணுமில்ல.
கொஞ்ச தூரம் தள்ளி ஓடற ஒரு ஆறுதான்.


ஒரு வெள்ளக்காரன், ஃப்ரேஸர்னு பேரு அவனுக்கு, அவந்தான் மொத்மொதலா, 1884ல, சோளவரம், ரெட் ஹில்ல்ஸ் பக்கத்துல ஒரு டாம் கட்டி, மளைக்காலத்துல அந்த ஆத்துல வர்ற தண்னியைத் தேக்கி வெச்சு, கொஞ்சம் நம்மள காப்பாத்தினான்.
அப்ப நம்ம ஊருல எத்தினி பேருன்ற?
வெறும் நாலரை லெச்சம் பேருதான்!
அவனுகளுக்கே இந்தப் பாடு!
குடிக்கறதுக்கு, பாசனத்துக்கு, அல்லாத்துக்கும் இந்தத் தண்ணிதான்.
குடிக்கற தண்ணி கீள்பாக்கத்துலஒரு டாங்குல சுத்தி பண்ணி நமக்கெல்லாம் வந்துச்சு.

கொஞ்ச நாள் களிச்சு, பாசனத்துக்கு வர்ற தண்ணிய நிப்பாட்டிட்டாங்க.
குடிக்கறதுக்கு மட்டும் கீள்பாக்கம் தண்ணி.
இப்படி கொஞ்ச காலம் ஓடிச்சு.

சொதந்தரம் கெடச்சும், ஒண்ணும் பெருசா ஆரும் இந்த தண்ணி விசயத்துக்கு முயற்சி பண்ணலை.
1968லதான் செண்டர்ல கொடுத்த ப்ரெஷர்னால, கிருஸ்னா நதிலேர்ந்து தண்ணி தரதா, ஆந்திரா ஒத்துகிச்சு. மகாராஸ்ட்ரா, கர்நாடகா இதுங்களும் தன் பங்குக்கு கிருஸ்னாலேர்ந்து தண்ணி தரணும்னும் முடிவாச்சு.
மொத்தம் 15 டிஎம்சி தண்ணி இவங்க மூணு பேரும் சேர்ந்துகொடுக்கறதா பேச்சு.

ஆச்சா?

தண்ணி தராங்க, சரி. எப்படி அத்த இங்க கொண்டாறது? இதுல பேச்சு வர்த்தை..... இளுத்தடிச்சாங்க. ஒண்ணூம் முடிவாவல. அப்பிடியே கெடப்புல போட்டுட்டாங்க.

இதான் இப்பிடி ஆயிருச்சேன்னு, அப்போ மினிஷ்டரா இருந்த நம்ம கருணாநிதி, சென்னைவாசிங்களுக்கு தண்ணி வரணும்னு ஒரு திட்டம் போட்டாரு. எவன் எவன்டயோ போய் கேக்கறத விட, வீராணத்துலேர்ந்து கொளாய் மூலமா தண்ணி கொண்டு வந்த்துரலாம்னு எவனோ சொன்னதக் கேட்டு நெறய பணம் செலவளிச்சு முயற்சி பண்னினாரு. பேரு கெட்டதுதான் மிச்சம்! தண்ணியும் வரல; ஒண்ணும் வரல. வாங்கின கொளாய்லாம் அங்கங்கியே கெடந்து சீரளிஞ்சதுதான் லாபம்!

அடுத்தப்பல எம்ஜியாரு வந்தாரா! அவர் தன் பங்குக்கு எதனாச்சும் செய்யணும்னு நெனச்சாரு. கிருஸ்னா திட்டந்தான் இதுக்கு வளின்னு முடிவு பண்ணினாரு.
ஆந்திரா சீஃப்மினிஷ்டரோட பேச்சு வார்த்தை நடத்தினாரு.
ரெண்டு டாம் கட்டி நம்ம ஸ்டேட் பார்டருக்கு கொஞ்சம் பக்கத்துல வரைக்கும் கொண்டு வர்றது; கண்டலேறுன்ற எடத்துல ஒரு ரிஸர்வாயர் கட்டறது; அங்கேருந்து ஒரு வாய்க்கா கட்டி நம்ம பார்டருக்குள்ள வந்து போண்டி தேக்கத்துல அத்த சேர்த்துறதுன்னு முடிவாச்சு.

ஆனா, இதுக்குள்ள ஒரு சூட்சுமம் இருக்கு! அத்த சொல்றேன் கவனமா கேளு.

அப்ப இருந்த ஆந்திரா சீஃப்மினிஷ்டர் படா கில்லாடி!

கிருஸ்னா தண்ணிய ஆந்திராவுல இருக்கற ஊருக்கெல்லாம் பாசனத்துக்கு எப்பிடியாவது பயன்படுத்தணும்னு ஒரு ப்ளான் மனசுக்குள்ள வெச்சிருந்தாரு.

நாம கொடுக்கற பணத்தை வெச்சு, தன் ஊருக்கெல்லாம் தண்ணி காட்டிரலாம்னு அவர் திட்டம்!

அதனால, இதுக்கு ஆதரவு கொடுக்கறதா போக்கு காட்டி, இந்த கண்டலேறு-பூண்டி கால்வாய்க்கு, "தெலுங்கு கங்கா"ன்னு ஒரு பேரும் வெச்சு , இந்திரா அம்மாவ வரவளச்சு 83-ல, மெட்ராஸ்ல ஒரு பெரிய தடபுடலா நடந்து முடிஞ்சது!

மொத்த மதிப்பிடு அப்ப 2,500 கோடி ரூவா!
ஆந்திரா 2000 கோடி அவங்க சைடுல டாம் காட்ட, தமிள்நாடு 500 கோடி இந்த கண்டலேறு-பூண்டி கால்வாய்க்கு கொடுக்கறதா ஒப்பந்தம் போட்டாச்சு!

போட்ட திட்டப்படி ரெண்டு பேரும் பணத்தை கொடுக்க, ஆந்திரர, கண்டலேறு வரைக்கும் ரொம்ப சிரத்தையா அல்லாத்தையும் கட்டிட்டாங்க1
இந்த கண்டலேறு-பூண்டிக்கு மட்டும் வெறூம் குளியத் தோண்டி போட்டுட்டு, தெலுங்கு கங்கா திட்டம் வெற்றிகரமா முடிஞ்சுபோச்சுன்னு 96-ல ஒரு பெரிய விளாவையும் நடத்தி காமிச்சுட்டாங்க!

ஒப்பந்தப்படி, ஆவியாப் போறது போவ, 15 டிஎம்சி தண்ணி பூண்டிக்கு வரணும்.

ஆனா, ஒரு சொட்டு கூட வரல!
இன்னாடா, அத்தினி தண்ணியுமா அவியப் பூடுச்சுன்னு நம்ம அபீசருங்க அல்லாம் விளுந்தடிச்சிகினு ஓடிப் போயிப் பாத்தனுவ!

பாத்தா ஆளுங்களுக்கு பகீர்னு ஆயிப் போச்சு!

கால்வாயின்னு ஒண்ணுமே இல்லை! அங்கங்க அவன் அவன் பாத்தி வெட்டி, வர்ற தண்ணிய அல்லாம், தன் வயலுக்கு திருப்பி வுட்டுருக்கான்!

கால்வாயும் சுத்தமா இல்ல! குட்டையும் குளியுமா தண்ணி தேங்கிக் கெடக்குது!

எப்பிடி தண்ணி வரும்!

போட்ட பணமும் அம்போன்னு போச்சு!
தண்ணியும் வரல!

ஆஹா! கவனிக்காம விட்டுட்டோமேன்னு, திருடனுக்கு தேள் கொட்டின மாரி அல்லாரும் கையப் பெசைஞ்சுகிட்டு நின்னாங்க!


அப்போதான்...........................
ஒரு அதிசயம் நடந்திச்சு!!!!!!!!!!!

[நாளை தொடரும்!]

சாய்ராம்.

17 பின்னூட்டங்கள்:

குமரன் (Kumaran) Wednesday, January 24, 2007 12:34:00 AM  

முன் கதை சுருக்கம் நல்லா இருக்குங்க எஸ்.கே. நாளைக்கு முக்கிய கதைக்கு வந்திடுவீங்கல்ல?

மன்னாருக்கிட்ட என்னோட சிறப்பு நன்றியைச் சொல்லுங்க. விலாவாரியா சொல்றார்.

கோவி.கண்ணன் [GK] Wednesday, January 24, 2007 12:34:00 AM  

பாபாவின் சேவை மனப்பாண்மைக்கு பாராட்டுக்கள் !!!
மக்கள் சேவை மகேசன் சேவை !

Anonymous,  Wednesday, January 24, 2007 12:35:00 AM  

சாயிராம்.

G.Ragavan Wednesday, January 24, 2007 12:53:00 AM  

ம்ம்ம்...சென்னையை எல்லாரும் வெண்ணை என்று விளையாண்டிருக்கிறார்கள். இனிமேல் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.

இன்னமும் சென்னையில் இருக்கின்றீர்களா? எத்தனை நாளைக்கு? வெள்ளியன்று சென்னை வருகிறேன் நான். சந்திக்க முடியுமா?

Unknown Wednesday, January 24, 2007 1:00:00 AM  

Good writing style SK.Eagerly awaiting the next part.

Anonymous,  Wednesday, January 24, 2007 1:11:00 AM  

நம்ம மயிலை மன்னாரு வந்தாலே தனி லுக் கிடைக்குது.

VSK Wednesday, January 24, 2007 1:13:00 AM  

முன்கதை இல்லேன்னா மொத்தக் கதையும் புரியாது. ரசிக்காது.
முழுக் கதையும் படிச்சதும் நீங்களே ஒத்துக்குவீங்க, குமரன்.

நிலைமையின் தீவிரம் தெரிஞ்சாதான் இதோட அருமை தெரியும்னு மன்னார் சொல்லிட்டான்!

உங்க நன்றியை, முடிச்சதும் சொல்லிடறேன்.

VSK Wednesday, January 24, 2007 1:13:00 AM  

அதேதாங்க, கோவியாரே!

தன்னலமற்ற சேவைதான் அவரோட சிறப்பே!
சாய்ராம்.

VSK Wednesday, January 24, 2007 1:14:00 AM  

சாய்ராம், சாயி பக்தரே!

VSK Wednesday, January 24, 2007 1:15:00 AM  

Thank you Selvan!
Watch out tomorrow!

VSK Wednesday, January 24, 2007 1:17:00 AM  

என்னமோங்க குமார், நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்!

அளவு பார்த்து, கட்டடம் கட்டறவங்களாச்சே நீங்க!

நன்றி.

VSK Wednesday, January 24, 2007 1:23:00 AM  

ஆமாம், ஜிரா.

ரொம்பவே வஞ்சகம் நடந்திருக்கிறது, பல பேரால்.

இனி வருவது எப்படி விமோசனம் பிறந்தது என விளக்கும்.

மன்னார் சொன்னதை எடுத்துக் கொண்டு நான் என் ஊர்பக்கம் வந்தாயிற்று!

முடிந்தால், மன்னாரை அவசியம் பாருங்கள்!

அடுத்த முறை வருகையில் கண்டிப்பாக சந்திக்கலாம்!

இப்ப கூட மனசு முழுக்க, திருவான்மியூரில்தான்!

கணினியில் வரும் நேரடிக் காட்சிகளைப் பார்த்து மனம் தேற்றிக் கொள்கிறேன்!

ரவி Wednesday, January 24, 2007 1:35:00 AM  

அதிகம் எதிர்பார்க்க வெச்சுட்டீங்க...மன்னாருக்கு ஒரு ஸ்பெஷல் தேங்ஸ்...!!!!!

VSK Wednesday, January 24, 2007 1:44:00 AM  

நடந்த கதைதாங்க, செந்தழலாரே!

நாளைக்கும் வந்து படிச்சிட்டு சொல்லுங்க!

MeenaArun Wednesday, January 24, 2007 1:57:00 AM  

can uplease give me the website address of the yagnam

thanks in advance
Mrs.MeenaArun

VSK Wednesday, January 24, 2007 10:13:00 AM  

Thanks Ms.Arun.

Here is the link.

http://player.narrowstep.tv/skins/0001/nsp.aspx?player=Sai_Ram

You need to copy and paste it on your browser column at the top to view it better.
Just dont click onit. It may not work.

Sairam

இலவசக்கொத்தனார் Wednesday, January 24, 2007 11:04:00 AM  

குறள் விளக்கம் சொல்லும் மன்னார் இப்போ சென்னை வரலாற்றையும் அதே மாதிரி சொல்லறாரே! நாளைய பகுதியை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP