Wednesday, January 17, 2007

"ஷைலஜா" கேட்ட சேந்தனார் கதை!

"ஷைலஜா" கேட்ட சேந்தனார் கதை!

திருவெம்பாவைப் பதிவொன்றில், "ஷைலஜா" அவர்கள் சேந்தன் கதை பற்றிக் கேட்டிருந்தார்.
நானும், திருவெம்பாவையை முழுதும் இட்ட பின்னர் போடுவதாக வாக்களித்திருந்தேன்!

இப்போது அந்தக் கதை என்னவென்று பார்ப்போம்
!

பன்னிரு திருமுறைகளால் ஆன தேவாரத்தில், ஒன்பதாம் திருமுறை "திருவிசைப்பா" என வழங்கும் தித்திக்கும் தேமதுரத் தெய்வீகப் பாடல்கள்!
ஒன்பது அடியவர்கள் இதனைப் பாடியிருக்கின்றனர் இத்திருமுறையில்.
இதில் இரண்டாம் அடுக்கில் இருக்கும் பாடல்களின் சொந்தக்காரர்தான் நமது சேந்தனார்.

இவரைப் பற்றிச் சொல்லப்புகுமுன், நீங்கள் நமக்கெல்லாம் மிகவும் தெரிந்த பெயரான பட்டினத்தாரைப் பற்றிய கதையையும் சற்று அறிந்து கொள்ள வேண்டும்!
ஏனெனில்,
பட்டினத்தாரிடம் கணக்குப்பிள்ளையாய் இருந்தவர்தான் சேந்தனார்!

பட்டினத்தாரின் இயற்பெயர் திருவெண்காடர்.

இவர் ஒரு பெரிய செல்வந்தராக வாழ்ந்து வருகையில், தனக்குப் பிள்ளை இல்லையே என ஏங்க,
இறைவன் அவருக்கு ஒரு ஆண்மகவை அருள,
அவன் இளவயதில் வியாபாரத்துறையில் ஈடுபாடில்லாமல் இருக்கிறானே என தந்தை வருந்த,
பொருளீட்ட கடல் கடந்து கப்பலில் தன் மகனை அனுப்ப,
கொள்ளையர் நடுக்கடலில் மற்றெல்லாரின் எல்லா செல்வத்தையும் கவர்ந்து செல்ல,
இந்த தெய்வப்பிள்ளை மட்டும் வரட்டி மூட்டைகளாக,
தான் சம்பாதித்தது எனச் சொல்லி சாக்கு மூட்டைகளை வீட்டில் அடுக்க,
தந்தை திருவெண்காடர் மகனைக் கடிந்து கொள்ள,
ஓர் ஓலையைத் தந்தை கையில் அளித்து மகவு மறைய,
உள்ளே சென்று வரட்டிகளை உடைத்துப் பார்க்கையில்,
அவற்றினுள் நவமணிகளும் நிறைந்திருக்க,
வெளியே வந்து மகனைத் தேடி அரற்ற,
மகன் தந்த ஓலை நினைவுக்கு வர,
அதனைப் பிரித்துப் படிக்க,
"காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே!"
என அதில் எழுதியிருப்பதைக் கண்டு,
அலறி, உள்ளம் துடிக்க, அறிவு புலப்பட்டு,
அத்தனை செல்வங்களையும் தன் கணக்குப்பிள்ளை "சேந்தனிடம்" ஒப்படைத்து,
"இவற்றை ஏழைகளுக்குப் பிரித்துக் கொடு"
எனச் சொல்லி துறவறம் மேற்கொண்டது தான்,
சுருக்கமாக பட்டினத்தார் கதை!

இந்த சேந்தன் அப்படி தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட செல்வங்களை, முதலாளிக்குத் துரோகம் இழைக்காமல் காப்பாற்றி வரும் வேளையில், அவர் இட்ட கட்டளைப்படியே, கருவூலத்தை ஏழைகளுக்கென திறந்து விடுகிறார்.
செல்வம் போய்விடுமே என்ற அச்சத்தில், திருவெண்காடரின் உறவினர்கள், சோழ மன்னரிடம், இல்லாது பொல்லாது எல்லாம் சொல்லி, சேந்தனார் சிறையில் தள்ளப்படுகிறார்!

சிலகாலம் சென்று, ஒற்றியூரில் இருக்கும் பட்டினத்தாரிடம், சேந்தனாரின் மனைவி, மக்கள் சென்று நடந்ததைக் கூறி முறையிட, பட்டினத்தார் இறைவனை வேண்டுகிறார். சேந்தனாரும் விடுவிக்கப் படுகிறார்!

பட்டினத்தாரின் காலடியில் வந்து விழும் சேந்தனாரைப் பார்த்து, "நீவிர் சிலகாலம் தில்லை [சிதம்பரம்] சென்று அங்கு விறகு விற்று, இறைவனை வணங்கி, இறையடியார்க்குத் தொண்டு செய்யுமாறு" பணிக்கிறார்.

அவ்வறே, சேந்தனாரும், குருவின் கட்டளையை மனதில் ஏற்று, தில்லைக்கு வந்து, விறகு வெட்டி, அதனை விற்று, தினம் ஒரு சிவனடியாருக்கு அமுது படைத்து வாழ்ந்து வருகிறார்.
இவரது சைவத்தொண்டினைக் கண்டு மகிழும் ஈசன், அம்பலவாணன், ஒரு நாள் தானே சிவனடியாராக வந்து, சேந்தனார் செய்து படைத்த "களியை" உண்டு மகிழ்கிறார்!
இவரது பெருமையை உலகுக்கு அறிவிக்க எண்ணிய இறைவன், தன் திருமேனி முழுதும் அந்த மிகுதியான "களியை" பூசி மறுநாள் அம்பலத்தில் காட்சி தருகிறார்!

அது மட்டுமா!

சேந்தனார் மேல் தனக்கிருக்கும் கருணையினைக் காட்டுமுகமாக, ஒரு திருவாதிரைத் தேர்த்திருநாள் அன்று, தேரை ஓடமுடியாமல் நிறுத்திவிடுகிறார் நடராசப் பெருமான்!
அனைவரும் என்ன செய்தும் கொஞ்சம் கூட நகரவில்லை தேர்!
சேந்தனார் வருகிறார்!
"திருப்பல்லாண்டு" பாடுகிறார்!
ஓடாத தேர் உருண்டு ஓடத் துவங்குகிறது, யாரும் வடம் இழுக்காமலேயே!!
இப்படியே நிலைக்கு வந்தும் சேர்கிறது!

இப்படி இறைவன் புகழ் பாடி இருந்த சேந்தனார், தில்லையிலிருந்து கிளம்பி, "திருவிடைக்கழி" என்னும் தலத்தை அடைந்து, அங்கு ஒரு மடம் நிறுவி, அங்கிருக்கும் முருகனை[....ஆம்!....தகப்பன்சாமியான முருகனேதான்!...]வழிபட்டு ஒரு நிறைவான தைப்பூச நன்நாளில் இறைவனுடன் சோதியாய்க் கலந்ததாக வரலாறு சொல்லுகிறது.


அந்த ஊர் இப்போது "சேந்தமங்கலம்" என வழங்கப்படுகிறது!

இதுதான் சேந்தன் கதை!

அவர் கண்ட தரிசனத்தை நமக்கும் இந்த "காணும் பொங்கல்" நாளில் அருள இறைவனை வேண்டி, அவன் "திருப்பல்லாண்டு" நாமும் பாடுவோம்!

திருச்சிற்றம்பலம்!

"சேந்தனார் அருளிய திருப்பல்லாண்டு"
"கோயில் மன்னுக!" [தேரோட்டம் முடித்து கோவிலுக்கு திரும்பு ராஜா!]

"மன்னுக தில்லை வளர்கநம் பத்தர்கள் வஞ்சகர் போயகல
பொன்னின்செய் மண்டபத் துள்ளே புகுந்து புவனி யெல்லாம் விளங்க
அன்னநடை மடவாள் உமைகோன் அடியோ முக்கருள் புரிந்து
பின்னைப் பிறவி யறுக்க நெறிதந்த பித்தற்குப் பல்லாண்டு கூறுதுமே. 1

மிண்டு மனத்தவர் போமின்கள் மெய்யடியார்கள் விரைந்து வம்மின்
கொண்டுங் கொடுத்தும் குடிகுடி ஈசற்(கு)ஆட் செய்மின் குழாம்புகுந்து
அண்டங் கடந்த பொருள்அள வில்லதோர் ஆனந்த வெள்ளப்பொருள்
பண்டும் இன்றும் என்றும் உள்ளபொருள் என்றே பல்லாண்டு கூறுதுமே. 2

நிட்டையி லாவுடல் நீத்தென்னை ஆண்ட நிகரிலா வண்ணங்கள்
சிட்டன் சிவனடி யாரைச் சீராட்டும் திறங்களுமே சிந்தித்(து)
அட்ட மூர்த்திக்கென் அகம்நெக ஊறும் அமிர்தினுக்(கு) ஆலநீழற்
பட்டனுக்(கு) என்னைத்தன் பாற்படுத் தானுக்கே பல்லாண்டு கூறுதுமே. 3

சொல்லாண் டசுரு திருப்பொருள் சோதித்த தூய்மனத் தொண்டருள்ளீர்
சில்லாண் டிற்சிறை யும்சில தேவர் சிறுநெறி சேராமே
வில்லாண் டகன கத்திரன் மேரு விடங்கன் விடைப்பாகன்
பல்லாண் டென்னும் பதங்கடந் தானுக்கே பல்லாண்டு கூறுதுமே. 4

புரந்தரன் மாலயன் பூசலிட்(டு)

ஓலமிட்(டு) இன்னம் புகலரிதாய்
இரந்திரந்(து) அழைப்பஎன் னுயிராண்ட

கோவினுக்(கு) என்செய வல்லம் என்றும்
கரந்துங் கரவாத கற்பக

னாகிக் கரையில் கருணைக்கடல்
பரந்தும் நிரந்தும் வரம்பிலாப்

பாங்கற்கே பல்லாண்டு கூறுதுமே. 5

சேவிக்க வந்தயன் இந்திரன்

செங்கண்மால் எங்கும்திசை திசையென
கூவிக் கவர்ந்து நெருங்கிக்

குழாம்குழ மாய் நின்று கூத்தாடும்
ஆவிக்(கு) அமுதைஎன் ஆர்வத்

தனத்தினை அப்பனை ஒப்பமார்
பாவிக்கும் பாவகத்(து) அப்புறத்

தானுக்கே பல்லாண்டு கூறுதுமே. 6

சீரும் திருவும் பொலியச் சிவலோக நாயகன் சேவடிக்கீழ்
ஆரும் பெறாத அறிவு பெற்றேன் பெற்றதார் பெறுவார் உலகில்?
ஊரும் உலகும் கழற உளறி உமைமண வாளனுக்(கு)ஆம்
பாரும் விசும்பும் அறியும் பரிசுநாம் பல்லாண்டு கூறுதுமே. 7

சேலுங் கயலும் திளைக்கும் கண்ணார்இளங் கொங்கையில் செங்குங்குமம்
போலும் பொடியணி மார்பிலங் குமென்று புண்ணியர் போற்றிசைப்ப
மாலும் அயனும் அறியா நெறி தந்துவந்தென் மனத்தகத்தே
பாலும் அமுதமு ஒத்துநின் றானுக்கே பல்லாண்டு கூறுதுமே. 8

பாலுக்கு பாலகன் வேண்டி அழுதிடப் பாற்கடல் ஈந்தபிரான்
மாலுக்குச் சக்கரம் அன்றருள் செய்தவன் மன்னிய தில்லைதன்னுள்
ஆவிக்கும் அந்தணர் வாழ்கின்ற சிற்றம் பலமே இடமாகப்
பாலித்து நட்டம் பயிலவல் லானுக்கே பல்லாண்டு கூறுதுமே. 9

தாதையைத் தாளற வீசிய சண்டிக்(கு)இவ் அண்டத்தொடும் உடனே
பூதலத் தோரும் வணங்கப்பொற் கோயிலும் போனகமும் அருளிச்
சோதி மணிமுடித் தாமமும் நாமமும் தொண்டர்க்கு நாயகமும்
பாதகத் துக்குப் பரிசுவைத் தானுக்கே பல்லாண்டு கூறுதுமே. 10

குழலொலி யாழொலி கூத்தொலி ஏத்தொலி எங்கும் குழாம்பெருகி
விழவொலி விண்ணளவும் சென்று விம்மி மிகுதிரு ஆருரின்
மழவிடை யாற்கு வழிவழி யாளாய் மணஞ்செய் குடிப்பிறந்த
பழஅடி யாரொடுங் கூடி எம்மானுக்கே பல்லாண்டு கூறுதுமே. 11

ஆரார் வந்தார்? அமரர் குழாத்தில் அணியுடை ஆதிரைநாள்
நாராயணனொடு நான்முகன் அங்கி இரவியும் இந்திரனும்
தேரார் வீதியில் தேவர் குழாங்கள் திசையனைத்தும் நிறைந்து
பாரார் தொல்புகழ் பாடியும் ஆடியும் பல்லாண்டு கூறுதுமே. 12

எந்தை எந்தாய் சுற்றும் முற்றும் எமக்கு அமுதாம் எம்பிரான் என்றென்று
சிந்தை செய்யும் சிவன்சீர் அடியார் அடிநாய் செப்புறை
அந்தமில் ஆனந்தச் சேந்தன் எனைப்புகழ் தாண்டுகொண் டாருயிர்மேல்
பந்தம் பிரியப் பரிந்தவனே என்று பல்லாண்டு கூறுதுமே. 13.

-------

திருச்சிற்றம்பலம்


[அருணையாரும், மயிலை மன்னாரும் தினம் வந்தூ கேட்கிறார்கள், "இனி நாங்கள் வரலாம் அல்லவா" என!
இனிமேல் அவர்கள் ராஜ்ஜியம்தான்!]

38 பின்னூட்டங்கள்:

Anonymous,  Wednesday, January 17, 2007 7:56:00 PM  

சேந்தன் - இந்த பெயரின் பெருமையை நம் கூடல் குமரனும் உணர்ந்திருக்கிறார் !

//இறைவனுடன் சோதியாய்க் கலந்ததாக வரலாறு சொல்லுகிறது. //

அவரும் நந்தனார் போல ஜோதியில் கலந்தவரா ? நல்ல தல வரலாறு !

ஷைலஜா Wednesday, January 17, 2007 8:45:00 PM  

உண்மையான தனது பக்தனை உலகிற்குக் காட்டவே இறைவன் நடத்திய திருவிளையாடல் இது என்று புரிகிறது.

பராந்தக சோழனின் காலத்தில் மன்னன் திருருச்சிற்றம்பல்த்திற்குப் பொன் வேய்ந்து கொண்டிருந்த சமயம், மன்னனே பொன் வேயும் பணியை மேற்பார்வை இட்டுக்கொண்டிருந்தான்.

தினமும் சாயங்காலவேளையில் சித்சபையிலே நடராஜப்பெருமனின் பாத சிலம்பொலியைக் கேட்ட பின்னரே இரவு தான் உண்ணும் வழக்கத்தை மேற்கொண்டிருந்தான்.

அதே சமயம் சேந்தன் என்பவரும் தாழ்த்தப்பட்டவராயிருந்தாலும் அம்பலவாணன் மீது அளப்பிலா பக்தி கொண்டிருந்தான்.

ஆண்டவன் முன் அனைவரும் ஒன்றல்லவா?
இறைவன் தனது பக்தனின் பெருமையை உலகிற்கு எடுத்துக்காட்ட ஒருநாள் மன்னனுக்குத் தன் பாத சிலம்பின் ஒலியை காட்டாமல் விட்டுவிட்டார்.
மன்னன் மிகவும் மனம் வருந்தி," நடராஜா நான் என்ன தவறு செய்தேன்? எனக்கு ஏன் இந்த தண்டனை? என்னைப் பொறுத்தருள வேண்டும்' என மானசீகமாய் கேட்டு வருந்தினான்.

இறைவன் அவரது கனவில் தோன்றி,'மன்னா கவலை வேண்டாம் நேற்று நானெனது பரம்பக்தன் சேந்தனின் இல்லம் சென்று அவன் தந்த களி தின்று அந்த ஆனந்தக்களிப்புனூடே அதனை என் மேனி எங்கும் பூசி கருவறையில் இறைத்துள்ளேன் காண்!' என்றார்.

மறுநாள் கருவறை திறந்த அர்ச்சகர்கள் சந்நிதி முழுவதும் களி இரைந்து கிடப்பதைக்கண்டு திகைக்க மன்னன் நடந்ததைச் சொல்லி தனது வீரர்ககளை விட்டு சேந்தனைத் தேடி அழைத்துவர அனுப்பினான் ஆனால் சேந்தனை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த வரலாறினை ஒட்டியே திருவாதிரைத்திருநாளில் நடராஜப்பெருமானுக்குக் களிபடைக்கப்படுகிறதென கேள்விப்பட்டிரூக்கிறேன் அதனால்தான் சேந்தனின் பல்லாண்டு கேட்க மிகவும் ஆவலானது,

எஸ்கே .. நான் கூறியதை மதித்து இத்தனை அற்புதமாய் அளித்த உங்களுக்கு திருச்சிற்றம்பலத்து இறைவனின் அருள் எல்லாம் கிடைக்கட்ட்டும்.நன்றி
ஷைலஜா

இலவசக்கொத்தனார் Wednesday, January 17, 2007 8:48:00 PM  

நல்ல அருமையான கதைதான் சொல்லி இருக்கிறீர்கள். நன்றி.

SK Wednesday, January 17, 2007 9:26:00 PM  

இந்தக் கதை உங்களுக்குப் பிடித்தது குறித்து மகிழ்ச்சி, கோவியாரே!

SK Wednesday, January 17, 2007 9:29:00 PM  

நன்றி சொல்லப் புகுந்து, அப்படியே இன்னுமொரு அருமையான நிகழ்வைச் சொல்லி இக்கதைக்கு மெருகூட்டியிருக்கிறீர்கள், "ஷைலஜா"!

SK Wednesday, January 17, 2007 9:33:00 PM  

இப்படி ஒரு வரி பின்னூட்டம் எல்லாம் கூட போடத் தெரியுமா, கொத்ஸ்!

:))
நன்றிக்கு நன்றி!

Anonymous,  Wednesday, January 17, 2007 9:54:00 PM  

சேந்தன் 'சேர்ந்த கதை' யும் திருப்பல்லாண்டும் தந்தமைக்கு நன்றிகள்.

திருப்பல்லாண்டு எளிதாக புரியும் தமிழில் இருப்பதும் அருமை.

நாமக்கல் சிபி Wednesday, January 17, 2007 10:54:00 PM  

ஆஹா! எங்க ஊர்ப்பக்கம் இருக்கும் சேந்தமங்கலத்திற்கு இப்படி ஒரு வரலாறு இருக்கா?

SK Wednesday, January 17, 2007 11:01:00 PM  

இப்படி ஏதாவது சொன்னாலாவது நீங்கெல்லாம் வர மாட்டீங்களா இந்தப் பக்கம்னு ஒரு ஆசைதான், கவிஞர் கோமேதகனாரே!

Anonymous,  Thursday, January 18, 2007 12:03:00 AM  

ஆலயத்திற்கு தான் தலப்புராணம் இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கேன்,ஊருக்கும் இருக்கு போல இருக்கே!!

SK Thursday, January 18, 2007 12:07:00 AM  

வாங்க குமார்!
மிக்க நன்றி.
அந்தப் பட்டினத்தார் கதையைப் பத்தி ஒருத்தர் கூட எழுத மாட்டேங்கறீங்களே!
:)) :(

G.Ragavan Thursday, January 18, 2007 12:56:00 AM  

சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைப் பற்றிய கதை என்று வந்தேன். ஆனால் பிறகுதான் தெரிந்தது சேந்தன் கந்தனைச் செங்கோங்கோட்டு வெற்பனைப் பற்றிய கதை என்று.

திருவாதிரைக்களி என்று சொல்வார்கள். மிகவும் சுவையாக இருக்கும் சில முறைகள்தான் சாப்பிட்டிருக்கிறேன். சுவை இன்னமும் நாவிலும் நினைவிலும் விருப்பத்திலும் இருக்கிறது. :-) அப்படியே மலையாளம் போய் திருவாதிரைக்களி என்றால் அது தின்னும் பொருளல்ல. திருவாதிரை நாளில் நடுவில் விளக்கேற்றி வைத்து...பெண்கள் எல்லாம் வெண்ணாடை உடுத்தி சுற்றிச் சுற்றிக் கைகளைத் தட்டித் தட்டி ஆடும் ஒருவகையாட்டம்.

Anonymous,  Thursday, January 18, 2007 1:04:00 AM  

நல்ல கதையை பகிர்ந்திருக்கிறீர்கள். பிரபந்த பல்லாண்டு போலன்றி இது அதிகம் பேர் அறியாதது.
பட்டினத்தார் என்றால் கண்ணதாசனின் " வீடு வரை உறவு.. கடைசி வரை யாரோ"தான் நினைவிற்கு வருகிறது.

நன்றிகள்.

Anonymous,  Thursday, January 18, 2007 9:18:00 AM  

அருமையாக இரண்டு கதைகளையும் விவரித்துள்ளீர்கள்.

நன்றி!

பட்டனத்தாரைப் பற்றி முழுமையாகக் கவியரசர் தன்னுடைய அர்த்தமுள்ள இந்துமத நூலின் நான்காம் பாகத்தில் அற்புதமாக எழுதியுள்ளார்

Anonymous,  Thursday, January 18, 2007 9:57:00 AM  

எஸ்கே அண்ணா!
திருவிசைப்பா அறிவோம்; தந்த சேந்தனார் பற்றி சிறப்பாக அறிந்தோம்.
மிக்க நன்றி!!
குமரனும் மகிழும் பதிவு.
யோகன் பாரிஸ்

SK Thursday, January 18, 2007 10:11:00 AM  

ஜிரா, மணியன், ஆசான் அவர்களுக்கு நன்றி!

Anonymous,  Thursday, January 18, 2007 5:56:00 PM  

"காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே!"

இதிலே ஊசிக்கு கண் இருக்கு, காதில்லை. அதனால்த்தானோ காதற்ற ஊசி எனப்படுகிறது அல்லது வேரு ஏதும் கருத்து உள்ளதா?
பட்டினத்தாரைப் பற்றியும் அறிந்து கொண்டேன்.
நன்றி ஐயா.

SK Thursday, January 18, 2007 7:23:00 PM  

ஆம்! யோஹனாரே!

தில்லையிலிருந்து கிளம்பி குமரனடி சேர்ந்து ஜோதியில் கலந்தவர்தானே சேந்தனார்!

SK Thursday, January 18, 2007 7:41:00 PM  

//"காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே!"

இதிலே ஊசிக்கு கண் இருக்கு, காதில்லை. அதனால்த்தானோ காதற்ற ஊசி எனப்படுகிறது அல்லது வேரு ஏதும் கருத்து உள்ளதா?//

இதற்கான அறிஞர் விளக்கம் இப்படிச் சொல்கிறது "செல்லி"!

ஒரு ஊசிக்கு கண், காது இரண்டும் இருக்கிறது!

கண் என்பது ஊசியில் இருக்கும் ஓட்டை!

காது எனபது இந்த ஓட்டையை மூடி இருக்கும் மடல்!

"கண்"ணுக்குள் தான் நூலை நுழைக்க வேண்டும்; முடியும்!

ஆனால், "காது" இருந்தால்தான் நூல் நிற்கும்; தன் பணியைச் செய்யும்!

காதின் உதவியின்றி, காதற்ற ஊசி வழியே நூல் நுழையலாம்!

ஆனால், மீண்டும் வெளியே வந்து விடும்!

அதுபோல, காதற்ற ஊசி மாதிரி, இறைவன் என்கின்ற காதின் துணை இல்லாமல் பிறவிப் பெருங்கடலை நம்மால் நீந்த முடியாது!

மீண்டும், மீண்டும் இப்பிறவி என்னும் சுழலில் வெளிவந்து கொண்டிருந்துதான் இருப்போம்!

பொன், பொருள், பெண் என்னும் வெளி ஆசைகளில் ஈடுபட்டு, முத்தி அடைய வழியே இல்லை!

இறையருள் என்ற காது இருந்தால்தான் இது முடியும்!

இதுதான், "காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே!"

மேல்விளக்கம் தேவையெனில் கேட்கவும்!

Anonymous,  Thursday, January 18, 2007 7:43:00 PM  

வியக்கிறேன் ஐய்யா!!
பின்னூட்டத்திலும் தூள் கிளப்புகிறீர்கள்.
எங்கள் பட்டினத்தார் பற்றியா??
படம் பிடிக்க நாகை சிங்கம் ஊருக்கு போயிருக்கார்.படங்கள் வந்தவுடன் எழுதுகிறேன்.சில விவகார இளமைகால நிகழ்வுகள் விழுந்துவிடுமோ என்ற பயமும் ஒட்டிக்கொண்டு இருக்கிறது.

கோவி.கண்ணன் [GK] Thursday, January 18, 2007 8:01:00 PM  

//கண் என்பது ஊசியில் இருக்கும் ஓட்டை!
காது எனபது இந்த ஓட்டையை மூடி இருக்கும் மடல்!
"கண்"ணுக்குள் தான் நூலை நுழைக்க வேண்டும்; முடியும்!//

எஸ்கே ஐயா,
உங்கள் விளக்கத்தை மறு பரிசீலனை செய்ய முடியுமா ? மாபெரும் குற்றம் எதுவுமில்லை என நினைக்கிறேன். குற்றம் சொல்வதும் நோக்கமில்லை என நினைக்கிறேன். சிறு பகிர்வு அவ்வளவே ! உடன்பாடு இல்லை என்றால் பரவாயில்லை.

காது என்பது நூல்செல்லும் துளை. ஊசியின் துளை கண்வடிவத்தில் இருப்பதாலேயே அது கண் என சொல்லப்படல் ஆகாது. 'ஊசி காதில் ஒட்டகம் நுழைந்தால் போல' என்பது துளையைக் குறித்து தான் சொல்லப்படுகிறது. காதற்ற ஊசி என்றால் துளையே இல்லாத ஊசி. அப்படி ஒன்றை பயன்படுத்த முடியாது. கண்ணுக்கும் ஊசிக்கும் எப்போது சம்பந்தம் ? நம் கண்ணை குத்தினால் மட்டுமே ! இது வரையில் ஊசியின் துளையை கண் என்று சொன்ன விளக்கம் நான் படித்ததே இல்லை. ஊசி முனையை கண் என்று சொல்ல முடியுமா ? தெரியவில்லை.

SK Thursday, January 18, 2007 8:02:00 PM  

ஆஹா! இன்னொரு ஒளியும், உரையும் வரப் போகிறதா?

உங்களிடமிருந்து!

நாகைச் சிங்கமே!
பொறுத்தது போதும்!
பொங்கி எழுந்து வா!
படம் கொண்டு வா!
வடுவூரார் காத்திருக்கிறார்!
:))

SK Thursday, January 18, 2007 8:12:00 PM  

//மாபெரும் குற்றம் எதுவுமில்லை என நினைக்கிறேன். குற்றம் சொல்வதும் நோக்கமில்லை என நினைக்கிறேன். சிறு பகிர்வு அவ்வளவே ! உடன்பாடு இல்லை என்றால் பரவாயில்லை.//

சொல்ல வந்த கருத்துக்கு இவ்வளவு பீடிகை எதற்கு கோவியாரே!

நான் எழுதியது பல உரைகளில் நான் படித்தது எனத்தான் ஏற்கெனவே சொல்லியிருக்கிறேனே!

காது என்பது இங்கு அந்த மடல் பற்றியே!

அப்படி மூடி இருக்கும் மடல் இருக்கும் ஒரு ஊசியே காதுள்ள ஊசி.
அப்படி இல்லாதது காதற்ற ஊசி.

பற்றுக பற்றற்றான் பற்றே காதுள்ள ஊசி!

சமயத்திற்குத் தகுந்தாற்போல் தன் நோக்கை மாற்றும் இவ்வுலகோர் பற்று, காதற்ற ஊசி!

இலவசக்கொத்தனார் Thursday, January 18, 2007 8:26:00 PM  

இப்படி ஒரு ஊசி விஷயத்துக்கு கண்ணும் காதும் வெச்சு பெருசு பண்ணுறீங்களே! :)))

SK Thursday, January 18, 2007 8:58:00 PM  

//இப்படி ஒரு ஊசி விஷயத்துக்கு கண்ணும் காதும் வெச்சு பெருசு பண்ணுறீங்களே! :))) //

கண்ணும், காதும், ஊசிக்கு இருக்கறதாலதானே அதைப் பத்தி பேசறோம், கொத்ஸ்!

:))

Anonymous,  Sunday, January 21, 2007 12:27:00 PM  

இந்த விஷயமெல்லாம் எப்படிங்க தெரியுது உங்களுக்கு?

Hobby இதுதானோ?

இனிமையாக கதை சொன்ன விதம் அருமை.

அது சரி, இந்த ஜோதில ஐக்கியம் ஆவுறாங்களே, இப்பெல்லாம் யாரும் அந்த மாதிரி ஐக்கியம் ஆவுறாங்களா?
(ஸ்கந்தாஸ்ரத்தில் ஒருவர் அப்படி ஆனதாக ரீஜன்டா கேள்விப்பட்டிருக்கிறேன்).
இல்லைன்னா, ஏன் அந்த காலத்துல மட்டும் இதெல்லாம் நடந்தது? இந்த காலத்துல ஐக்கியங்கள் கம்மியா இருக்கு?

(நானும் ஆத்தீகன் தான் சாமி. சந்தேகத்தில் கேட்பதே. நையாண்டி இல்ல :) )

ஓகை Monday, January 22, 2007 9:06:00 AM  

இந்த பனி காலத்தில் பணி மிகுதியால் பயங்கரமாக பாதிக்கப்பட்டு விட்டதால் பதிவின் பக்கம் வர முடியவில்லை என்பதை பனிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

அபாரமான பதிவு. நான் அறியாத பல செய்திகள். எனக்கு திருவாதிரைக்களி மிகவும் பிடிக்கும். பதிவும் போட்டிருக்கிறேன். ஆனால் ஆன்மிக செம்மல் அமர்க்களப்படுத்திவிட்டார். அந்தப் பெட்டகத்திலிருந்து இந்த மாணிக்கத்தை வெளிப்படுத்திய ஷைலஜா வாழ்க!

இந்த சிவஞான செம்மலின் நினவாகத் தான் கல்கி பொன்னியின் செல்வன் புதினத்தில் ஒரு முக்கியமான பாத்திரத்துக்கு சேந்தன் அமுதன் என்று பெயரிட்டுப்பாரோ!

கண் காது விவகாரத்தில் கோவிகண்ணன் சொல்வது எனக்கு சரி என்று தோன்றுகிறது. கண் என்று ஊசியின் துளையைக் கூறுவது ஆங்கில வழக்கம். நாம் அதைக் காது என்றுதான் கூறுவோம்.

SK Monday, January 22, 2007 9:25:00 AM  

தங்களது மனங்கனிந்த பாராட்டுக்கு மிக்க நன்றி, ஓகையாரே!
'ஆன்மிகச் செம்மல்' வேறு ஒருவர்! நான் வெறும் 'ஆத்திகன்'! அவ்வளவே!

மற்றபடி, 'ஊசி' குறித்த தங்கள் கருத்துக்கு இன்னும் சற்று விளக்கம்!

ஆங்கிலத்தில், ஊசியின் ஓட்டையை வைத்து, 'கண்'[eye of the needle] என்றும், தமிழில் மேலிருக்கும் மடலை வைத்து 'காது' என்றும் சொல்லுகின்றனர்.

பார்க்கும் பார்வையில்தான் வேறுபாடு!

பட்டினத்தார் பாடல்களுக்கான தமிழ்த்தென்றல் திரு.வி.க அவர்களின் விளக்கவுரையின்படி, 'காதற்ற ஊசி' என்பது, நீங்கள் ஒத்துக்கொள்ளும் கோவியாரின் கருத்துப்படி, 'காதே இல்லாத ஊசி' என்றல்ல; 'காது அறுந்த ஊசி' என்றே வருகிறது.

நாம் பார்க்கும் 'காது'[மேல்மடல்] அறுந்து போனால், ஆங்கிலேயர் பார்க்கும் 'கண்'[ஓட்டை] வழியே நூல் நுழைந்தும் பயனின்றிப் போய்விடும்; வேலைக்காகாது என்ற பொருளில்தான் சொல்லியிருக்கிறது.

நன்றி!

குமரன் (Kumaran) Tuesday, January 23, 2007 1:53:00 PM  

எஸ்.கே. இது வரை நான் கேட்டறியாத கதை இது. பட்டினத்தார் கதை தெரியும். ஆனால் சேந்தனார் கதை தெரியாது. ஆக எனக்கு இப்போது நான்கு சேந்தனார்களைத் தெரியும்.

முதல் சேந்தன் - முருகன்
2வது சேந்தன் - சங்க காலப் புலவர் சேந்தனார்
3வது சேந்தன் - சேந்தன் அமுதன்
4வது சேந்தன் - இந்தச் சேந்தனார்

:-))

மிக்க நன்றி.

SK Tuesday, January 23, 2007 2:12:00 PM  

பட்டினத்தார் கதை தெரியுமெனில், இவரையும் தெரிந்திருக்கணும், குமரன்!

கவனக்குறைவாக விட்டிருப்பீர்கள்.

மூன்று இடங்களில் வருகிறார் இவர் அந்தக் கதையில்!

SK Tuesday, January 23, 2007 2:12:00 PM  

பட்டினத்தார் கதை தெரியுமெனில், இவரையும் தெரிந்திருக்கணும், குமரன்!

கவனக்குறைவாக விட்டிருப்பீர்கள்.

மூன்று இடங்களில் வருகிறார் இவர் அந்தக் கதையில்!

குமரன் (Kumaran) Tuesday, January 23, 2007 2:20:00 PM  

உண்மை. கவனக்குறைவு தான். பட்டினத்தாரின் இயற்பெயரான திருவெண்காடரும் அவர் திருமகனின் பெயரான மருதவாணரும் நினைவில் இருக்கின்றன. மற்ற பெயர்கள் மறந்துவிட்டன.

SK Tuesday, January 23, 2007 2:38:00 PM  

நான் ஒரு விளையாட்டுக்குதான் அப்படி சொன்னேன், குமரன்!
தவறாக எண்ணவேண்டாம்!
:))

நாமக்கல் சிபி Tuesday, January 23, 2007 2:44:00 PM  

அருமையான கதை!!!

பட்டினத்தார் கதைல அவர் மகன் என்ன ஆவார்?

SK Tuesday, January 23, 2007 3:08:00 PM  

//பட்டினத்தார் கதைல அவர் மகன் என்ன ஆவார்?//

மகனாக 'மருதவாணன்' என்னும் பெயரில் வந்தது இறைவன் மருதப்பனே!

இறைவன், ஒரு வயோதிகத் தம்பதியனரின் கனவில் வந்து, மருதமரத்தின் கீழே ஒரு குழந்தையாகத் தானிருப்பதாகவும், அதை எடுத்துச் சென்று, திருவெண்காடரிடம் அளித்து, எடைக்கு எடை பொன் பெற்றுச் செல்லும்படியும் பணிக்க,

அப்படிக் கிடைத்தவர்தான் மருதவாணர்.

கப்பலினின்று அவர் வீட்டுக்கு திரும்பவில்லை.

நண்பர்களிடம், இந்த சாக்கு மூட்டைகளைத் தன் தந்தையிடம் ஒப்படைக்கச் சொல்லி, ஒரு ஓலையும் கொடுத்து மறைந்து விடுகிறார்......
என பட்டினத்தார் கதை சொல்லுகிறது!

//ஓர் ஓலையைத் தந்தை கையில் அளித்து மகவு மறைய,//


நன்றி, 'வெ.ப'

நாமக்கல் சிபி Tuesday, January 23, 2007 5:55:00 PM  

SK ஐயா,
பட்டினத்தார் கதை அட்டகாசமா இருக்கே!!! இறைவனே மகனாக வந்தாரா??? எவ்வளவு கொடுத்து வைத்தவர்...

எனக்கு இந்த கதை எல்லாம் தெரியாது :-((((((

தெளிவாக விளக்கியதற்கு நன்றி!!!

kannabiran, RAVI SHANKAR (KRS) Friday, February 09, 2007 4:02:00 PM  

சேந்தனார் அறுபத்து மூவருள் ஒருவரும் கூட அல்லவா, SK ஐயா?
சேந்தனைச் சிந்தனைக்குத் தந்தமைக்கு நன்றி.

அவர் தந்த களியில் களித்த ஆனந்தக் கூத்தன் கதை மிகவும் அருமை.
அதுவும் பணம் குறைந்து அன்பு நிறைந்ததால், தவிட்டையே களியாக்கி நிவேதித்தார் என்றும் சொல்லுவார்கள்.

பட்டினத்தார், சேந்தனாருக்காகப் பாடிய பாடல் இதோ:

மத்தளை தயிருண் டானும்
மலர்மிசை மன்னினானும்
நித்தமும் தேடிக் காணா
நிமலனே அமல மூர்த்தி

செய்த்தலைக் கயல்பாய் நாங்கூர்ச்
"சேந்தனை" வேந்தன் இட்ட
கைத்தளை நீக்கி என்முன்
காட்டுவெண் காட்டுளானே

SK Friday, February 09, 2007 4:11:00 PM  

அடடா! இங்கும் வந்து முத்தான பட்டினத்தார் பாடல் அளித்திருக்கிறீர்களே, ரவி!
மிக்க நன்றி!

எல்லாம் ஷைலஜா சேந்தனைப் பற்றிக் கேட்ட நேரம்!
நிறைவாக எல்லாம் வந்து சேருகிறது!

'களி'ப்பாக இருக்கிறது!

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP