"பள்ளி எழுந்தருளாயே" - 1 [21]
"பள்ளி எழுந்தருளாயே" - 1 [21]
திருப்பள்ளியெழுச்சி - திரோதான சுத்தி
(திருப்பெருந்துறையில் அருளியது -எண்சீர் கழி நெழிலடி ஆசிரிய விருத்தம் )
இறைவன் பெருமையைப் பாடியும், அவனைக் காண நீராடியும் முடித்த பெண்டிர், முனிவர், சிவனடியார்கள் அனைவரும் இப்போது திருப்பெருந்துறையில் அருள் புரியும் சிவனைத் துயிலெழச் செய்ய விரைகின்றனர்! அதே போற்றியும், திருவடிகளும் இங்கும் தொடர்கிறது!
நாமும் அங்கு செல்வோம்!
திருச்சிற்றம்பலம்
போற்றி ! என் வாழ்முதலாகிய பொருளே !
புலர்ந்தது; பூங்கழற்கு இணைதுணை மலர்கொண்டு
ஏற்றி, நின் திருமுகத்து எமக்கருள் மலரும்
எழில்நகை கொண்டு நின் திருவடி தொழுகோம்;
சேற்றிதழ்க் கமலங்கள் மலரும் தண்வயல் சூழ்
திருப்பெருந்துறை உறை சிவபெருமானே !
ஏற்றுயர் கொடியுடையாய் ! எனையுடையாய் !
எம்பெருமான் பள்ளியெழுந்தருளாயே ! 1.
என் வாழ்விற்கு முழுமுதல் பொருளாக ஆனவனே!
உன்னைப் போற்றுகின்றேன்!
பொழுது விடிந்து விட்டது! மலர் போன்ற உன்
திருவடிகளுக்கு இணையான மலர் கொண்டுவந்து
அத்திருவடிகளில் தூவினோம்!
அதனால் மனமகிழ்ந்து உன் பூமுகத்தில் மலர்ந்த
அழகிய புன்னகையைக் கண்டதும்
அதனை மனதில் நிறுத்தி மீண்டும்
உன் திருவடிகளையே வணங்குகிறோம்!
சேற்றில் மலர்ந்து தேன்இதழ் விரிக்கும் தாமரைகள்
நிறைந்த குளுமையான வயல்கள் சூழ்ந்த
திருப்பெருந்துறையில் அமர்ந்த சிவனாரே!
உயர்த்திய காளைக் கொடி உடையவரே!
எங்களையும் அடிமையாகக் கொண்டவரே!
எங்கள் பெருமானே! பள்ளி எழுந்தருள்வாயே!
அருஞ்சொற்பொருள்:
சேறு - கள்/ தேன்; தண் - குளிர்; ஏறு - இடபம்.
9 பின்னூட்டங்கள்:
திருப்பள்ளியெழுச்சி தொடங்கி விட்டது,
தொடர்ந்து பார்க்கலாம்.
வாங்க வல்லியம்மா!
நீங்கதான் முதல்ல எழுந்து வந்திருக்கீங்க!
:))
தேசனடி போற்றி!
//சேற்றில் மலர்ந்து தேன்இதழ் விரிக்கும் தாமரைகள்
நிறைந்த குளுமையான வயல்கள் சூழ்ந்த
திருப்பெருந்துறையில் அமர்ந்த சிவனாரே!
உயர்த்திய காளைக் கொடி உடையவரே!//
பொருத்தமான உவமை ... அழகாக இருக்கிறது
பாராட்டுக்கள் எஸ்கே ஐயா,
பி.கு : நானும் சீக்கிரம் எழுந்தேன்... பல்விளக்கி வந்து பல்லவி படிக்கலாம் என்று நினைத்ததால் கொஞ்சம் தாமதம் ! வல்லியம்மா முந்திட்டாங்க !
:))
வல்லியம்மா குளிச்சு முடிச்சிட்டு வந்தாச்சு!
நீங்க இப்பதான் பல் விளக்கிட்டு வரீங்க!
:))
பாட்டு முழுதும் பூவாசம் வீசுவதைக் கவனித்து சொல்லியதற்கு நன்றி கோவியாரே!
//மலர் போன்ற உன்
திருவடிகளுக்கு இணையான மலர் கொண்டுவந்து
அத்திருவடிகளில் தூவினோம்!//
எம்பெருமான் திருவடிகளுக்கு இணையான
மலரா?
எனக்கு தெரிந்தது ஒரே ஒரு மலர்தான்
அன்னை மீனாட்சியின் அருள் முகம்தான் அந்த மலர் எஸ்.கேஅய்யா!
அதுவும் சரிதான், ஆசானே!
ஆனால் அவள்தான் உடலின் இடபாதியில் இருக்கிறாளே!
ஆகவே இங்கு நம் பக்தி என்னும் "மனமலரையே" இறைவன் திருவடிகளில் இணையாகச் சாற்றுகிறோம் எனச் சொல்லப்படுவதாக நான் கருதுகிறேன்!
//அதனால் மனமகிழ்ந்து உன் பூமுகத்தில் மலர்ந்த
அழகிய புன்னகையைக் கண்டதும்
அதனை மனதில் நிறுத்தி மீண்டும்
உன் திருவடிகளையே வணங்குகிறோம்!//
ஆமாம் அய்யா! சிவனடியார்களின் 'நெகிழ்ந்த' மனம் என்ற மலர் இருக்கிறதே!
அதுவும் சிற்ந்த மலர்தான்! நீங்கள் சொல்லியுள்ளபடி நம் பக்தி என்னும் "மனமலரையே" இறைவன் திருவடிகளில் இணையாகச் சாற்றுவோம்!
//ஏற்றுயர் கொடி யுடையாய் எனை யுடையாய்//
அருமையான தமிழ்சொல் அணிவகுப்பு SK ஐயா!
இது வரை நான்
ஏற்று உயர் கொடி = சிவானுபவத்தில் மேலே ஏற்றி என்றும் உயரும் கொடி என்று தான் பொருள் கொண்டு இருந்தேன்!
நீங்கள் பதம் பிரித்த பின்னர் தான் ஏறு = காளை; திருக்காளையார் கொடி என்று பொருளும் சேர்த்து விளங்கியது!
நன்றி SK ஐயா!
உங்களைப் போலவே நானும்!
இப்பாடல்களை இதுவரை அதிகம் பொருள் பார்க்காமல்தான் படித்திருக்கிறேன்.
ஆனால், இப்போது ஒவ்வொரு சொல்லுக்கும் பொருள் புரிந்து படிக்கையில், அதன் மகிழ்வே தனியாகத்தான் இருக்கிறது, திரு.ரவி!
Post a Comment