"அ.அ. திருப்புகழ்" - 13 "அந்தகன் வருந்தினம்"
"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" - 13 "அந்தகன் வருந்தினம்"
மஹா ஸ்கந்த சஷ்டியை முன்னிட்டு, திருச்செந்தூர் பெருமை பாடும் ஒரு பாடல்.
"பாடல்"
அந்தகன் வருந்தினம் பிறகிடச்
சந்ததமும் வந்துகண் டரிவையர்க்
கன்புருகு சங்கதந் தவிரமுக் குணமாள
அந்திபக லென்றிரண் டையுமொழித்
திந்திரிய சஞ்சலங் களையறுத்
தம்புய பதங்களின் பெருமையைக் கவிபாடிச்
செந்திலை யுணர்ந்துணர்ந் துணர்வுறக்
கந்தனை யறிந்தறிந் தறிவினிற்
சென்றுசெரு குந்தடந் தெளிதரத் தணியாத
சிந்தையு மவிழ்ந் தவிழ்ந் துரையொழித்
தென்செய லழிந்தழிந் தழியமெய்ச்
சிந்தைவர என்றுநின் தெரிசனைப் படுவேனோ
கொந்தவிழ் சரண் சரண் சரணெனக்
கும்பிடு புரந்தரன் பதிபெறக்
குஞ்சரி குயம்புயம் பெறஅரக் கருமாளக்
குன்றிடிய அம்பொனின் திருவரைக்
கிண்கிணி கிணின்கிணின் கிணினெனக்
குண்டல மசைந்திளங் குழைகளிற் ப்ரபைவீசத்
தந்தன தனந்தனந் தனவெனச்
செஞ்சிறு சதங்கைகொஞ் சிடமணித்
தண்டைகள் கலின்கலின் கலினெனத் திருவான
சங்கரி மனங்குழைந் துருகமுத்
தந்தர வருஞ்செழுந் தளர்நடைச்
சந்ததி சகந்தொழுஞ் சரவணப் பெருமாளே.
-----------------------------------------------------------
"பொருள்"
[பின் பார்த்து முன் !]
"கொந்து அவிழ் சரண் சரண் சரண் எனக்
கும்பிடு புரந்தரன் பதி பெற"
சிவனாரை வணங்கித் தவமியற்றி
அவராலே பற்பல வரங்கள் பெற்று
எவராலும் வெல்லவொணா வீரங்கொண்டு
அவுணர் தலைவனாம் சூரபதுமன்
இந்திர லோகத்தைத் தாக்கவே
தந்திரமாய் இந்திரனும்
மனைவியுடன் தப்பியோடி
மேருமலைக் குகையொன்றிலெ
மறைந்து ஒளிந்திருக்க,
சூரனும் தன் மகனாம் பானுகோபனை
'சென்று சிறைபிடித்துக் கொண்டுவா' என ஏவ
மைந்தனும் தந்தை சொல் ஏற்று
இந்திரனைக் காணாது கோபமுற்று
இந்திரபுரியைத் தீக்கு உணவாக்கி
இந்திரன் மகனாம் சயந்தனையும்
மற்றுமுள்ள தேவரையும் சிறைப்பிடிக்க,
நகரிழந்த விண்னவர்கோனும் மனம்வருந்தி
நாயகனாம் கந்தவேளைத் தஞ்சமுற
அஞ்சேல் என அபயம் அளித்து கந்தவேளும்
வேல்விடுத்து சூரனை அழித்து தேவரைச்
சிறைமீட்டு பொன்னுலகு அளித்து அருளவும்,
"குஞ்சரி குயம் புயம் பெற"
தேவர்கோனின் யானையாம் ஐராவதம்
அன்புடன் வளர்த்த தேவயானையின்
மார்புத் தனங்கள் முருகனது
சீர்மிகு தோளில் இசைந்து பரவவும்,
"அரக்கரும் மாள, குன்று இடிய"
அரக்கர் குலம் மாளவும்
கிரௌஞ்சமலை பொடிபடவும்,
"அம் பொனின் திருவரைக் கிண்கிணி
கிணின்கிணின் கிணினென,
குண்டலம் அசைந்து இளம் குழைகளில் ப்ரபைவீச,
தந்தன தனந்தனந் தனவெனச்
செஞ்சிறு சதங்கை கொஞ்சிட,
மணித் தண்டைகள் கலின்கலின் கலினென,"
அழகுறு பொன்னாலான கிண்கிணி என்னிடும்
எழில்மிகு இடுப்பினில் ஆடும் ஒலியும்,
இளமையாய செவிகளிலே குண்டலங்கள்
அசைவதினால் பேரொளி வீசிடவும்,
பாதச் சலங்கைகள் பல்வித ஓசையை
தந்தன தனந்தனந் தனவென எழுப்பவும்,
இரத்தினத்தால் செய்திட்ட மணித் தண்டைகள்
கலின்கலின் கலினென சுகமாய் ஒலிக்கவும்,
"திருவான சங்கரி மனம் குழைந்து
உருகமுத்தம் தர"
தனம் தரும் திருமகளும் சேர்ந்தமைந்த
இதம் தரும் உமையவளும் மனம் கனிந்து
அன்பு மிகக் கொண்டு முத்தம் தந்திடவும்,
"வரும் செழுந் தளர்நடைச் சந்ததி
சகம் தொழும் சரவணப் பெருமாளே."
மெல்ல அசைந்து தளர்நடை போட்டுவரும்
சிவனாரின் இளங்குமரனே!
இவுலகெலாம் உய்யும் பொருட்டும்
உன்னைத் தொழும் பொருட்டும்
சரவணப் பொய்கையினில் வெளிப்பட்ட
பெருமையிற் சிறந்த முருகோனே!
"அந்தகன் வரும் தினம் பிறகிட"
எனை நாடி, என் உயிர் பறிக்க
இயமன் வரும் நாளன்று எனைப் பார்த்து
குமரக்கடவுள் தெரிசனம் கண்டவன் இவன்
எனத் தெளிந்து, புறம் கொடுத்து ஓடவும்,
"சந்ததமும் வந்து கண்டு
அரிவையர்க்கு அன்பு உருகு சங்கதம் தவிர"
விலைமகளிர் இடம் நாடி நாளும் வந்து
அவர்தம் அழகினைக் கண்டு மயங்கி உருகி
அவரோடு இணங்கிடும் குணம் நீங்கவும்,
"முக் குணம் மாள, அந்தி பகல் என்ற இரண்டையும் ஒழித்து,
இந்திரிய சஞ்சலங்களை அறுத்து"
சத்துவம், இராசசம், தாமசம் என்கின்ற
மூவகைக் குணங்களும் மாண்டு போகவும்,
அந்தியில் வருவது தூக்கம்
அப்போது நிகழ்வது மறப்பு
பகலில் வருவது விழிப்பு
உடன் நிகழ்வதோ நினைப்பு
அந்தி பகல் என்கின்ற,
மறப்பு நினைப்பு என்கின்ற,
கேவலம் சகலம் என்கின்ற,
இரு அவத்தைகளும் அழியவும்,
மெய்,வாய், கண், நாசி, செவி எனப்படும்
ஐம்புலனால் வருகின்ற துன்பமனைத்தையும்
அடியோடு அறுத்தெறிந்து ஒழிக்கவும்,
"அம்புய பதங்களின் பெருமையைக் கவிபாடி"
தாமரை மலரினையொத்த
திருவடிகளின் துதி பாடி,
"செந்திலை உணர்ந்து உணர்ந்து உணர்வுற"
செந்திலை உணர்தல் எங்ஙனம்?
அலைகள் வந்து ஓயும் இடமாதலின்
அலைவாய் எனப் பெயரும் செந்திலுக்குண்டு!
அந்தியும் பகலும் அனவரதமும்
மறப்பு நினைப்பெனும் அலைகள் நம்மை
வாட்டுவதெல்லாம் செந்தில் அலைவாயை
நினைத்திடவே ஒடுங்கிடுமாம்!
ஆலயத்தின் உட்சுற்று எப்போதும்
வட்டமாயோ சதுரமாயோ அமைந்திருக்கும்
செந்தில் கோவில் சுற்றோ ஓம் எனும்
பிரண்வத்தின் பால் விளங்கி நிற்கும்
தூண்டுகை விநாயகர் தொடங்கி
ஆனந்தவிலாசம் சென்று
வதனாரம்ப தீர்த்தம் அடைந்து
ஷன்முக விலாசம் வழியே நடந்து
செந்திலாண்டவனைத் தெரிசிக்க
சுற்றி வந்த சுற்று ஓம் எனும் வடிவமையும்!
செந்திலை நினைக்குங்கால்
ஈதெல்லாம் உணர்ந்து உணர்ந்து
உணர்வுறுதல் வேண்டும்!
"கந்தனை அறிந்து அறிந்து
அறிவினில் சென்று செருகும் தடம் தெளி தர"
சொந்தக் கடவுளாம் கந்தக் கடம்பனை
சிந்தையில் பற்றி அவன் பெருமை உணர்ந்து......
மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி
குறிஞ்சி என்றாலோ அழகென்னும் பொருள்படும்
குறிஞ்சிக்கடவுளாம் கந்தனும் அழகே
காந்தமென இழுப்பவன் கந்தன்
மனதிற்கு இனியவன் கந்தன்
இவ்வுலகில் நிலைத்து நிற்பவன் கந்தன்
இப்படி பலவாறும் கந்தனை மனதில்
அறிந்து அறிந்து அவ்வறிவின் மூலம்
அறவழிச் சென்று, தன் செயல் அழிந்து
அனைத்தும் அவனே அவனே என்பதை உணரும்
"என்றுநின் தெரிசனைப் படுவேனோ"
நின் தெரிசனம் என்று யான் பெறுவேன்?
---------------------------------------------------
"அருஞ்சொற்பொருள்"
அந்தகன் = இயமன், கூற்றுவன்
பிறகிட = புறமுதுகிட்டு ஓட
சந்ததமும் = எப்போதும்
அரிவையர் = பொது மாதர்
சங்கதம் = நட்பு
அம்புயம் = தாமரை [அம்புஜம்]
கொந்து அவிழ் சரண் = பூங்கொத்துகள் மலர்ந்திருக்கும் திருவடிகள்
புரந்தரன் = இந்திரன்
குஞ்சரி = ஐராவதம் எனும் தேவ யானையால் வளர்க்கப்பட்ட தெய்வானை
குயம் = மார்பகங்கல்
புயம் = தோள்கள்
அம் = அழகிய
குழை = செவி
திரு = இலக்குமி
சங்கரி = பார்வதி, சுகத்தைக் கொடுப்பவள்
சந்ததி = புதல்வன் [குலம் தழைக்கப் பிறந்தவன்]
சகம் = உலகம்
--------------------------------------------------------
வேலும் மயிலும் துணை !
முருகனருள் முன்னிற்கும் !!
அருணகிரிநாதர் தாள் வாழ்க !!!
----------------------------------------------------------
18 பின்னூட்டங்கள்:
எஸ்கே ஐயா !
அருணையாரின் நீண்ட பாடல், நெடிய விளக்கம் பொறுமையாக படிக்கவேண்டும் !
மீண்டும் வருவேன் !
நல்ல விளக்கம். அதுவும் முதல் வரிக்கு தந்துள்ள விளக்கம் மிக அருமையாக ஒரு சிறு கதை போல் வந்துள்ளது.
வாழ்த்துக்கள் எஸ்.கே.
வருவேன் என்று சொல்லி முதல் கணக்கைத் துவக்கியிருக்கிறீர்கள்.
மீண்டும் வருக!
நன்றி கோவியாரே!
சஷ்டியின் போது[வெள்ளிகிழமை சஷ்டி!] செந்திலையும், கந்தனையும், அந்தக் கதையையும் நினைக்கலாமே என்றுதான்!
நன்றி கொத்தனாரே!
அப்படியே மீதி வரிகளையும் பாருங்க!
//அந்தியில் வருவது தூக்கம்
அப்போது நிகழ்வது மறப்பு
பகலில் வருவது விழிப்பு
உடன் நிகழ்வதோ நினைப்பு
அந்தி பகல் என்கின்ற,
மறப்பு நினைப்பு என்கின்ற,
கேவலம் சகலம் என்கின்ற,
இரு அவத்தைகளும் அழியவும்,
மெய்,வாய், கண், நாசி, செவி எனப்படும்
ஐம்புலனால் வருகின்ற துன்பமனைத்தையும்
அடியோடு அறுத்தெறிந்து ஒழிக்கவும்,
"அம்புய பதங்களின் பெருமையைக் கவிபாடி"//
முத்தாய்ப்பான வரிகள் மிஸ்டர் எஸ்.கே!
சஷ்டித் திருவழாவின்போது இந்தவரிகளை எங்கள் நெஞ்சங்களில் பதித்த உங்களுக்கு நன்றி!
சஷ்டியின் போது[வெள்ளிகிழமை சஷ்டி!] செந்திலையும், கந்தனையும், அந்தக் கதையையும் ஓதுவது மிகுந்த பயனளிக்கும் என்று பெரியோர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
முழுக்கதையையும் நேரமின்மையால் படிக்க இயலாதவர்கள் இதையாவது படித்துப் பயனுறட்டுமே என்று தான் இதைப் பதித்தேன்.
நன்றி ஆசானே!
//நகரிழந்த விண்னவர்கோனும் மனம்வருந்தி
நாயகனாம் கந்தவேளைத் தஞ்சமுற
அஞ்சேல் என அபயம் அளித்து கந்தவேளும்
வேல்விடுத்து சூரனை அழித்து தேவரைச்
சிறைமீட்டு பொன்னுலகு அளித்து அருளவும்,
//
எஸ்கே ஐயா ...!
ஏனைய தெய்வங்கள் இருக்கையில் முருகனை அழைத்ததற்க்கு ஏதாவது சிறப்பு காரணம் இருக்கிறதா ?
தெரிந்து கொள்ள ஆவல் !
//ஏனைய தெய்வங்கள் இருக்கையில் முருகனை அழைத்ததற்க்கு ஏதாவது சிறப்பு காரணம் இருக்கிறதா ?//
இதைச் சொல்லப் புகுந்தால் கந்தபுராணம் முழுதும் சொல்ல வேண்டும்.
சஷ்டி நாளில் அதை விட வேறென்ன வேலை?!!
சுருக்கமாகச் சொல்கிறேன்.
சிவனிடம் இருந்து வாங்கிய வரத்தால், சூரன் அனைத்து ஜீவராசிகளுக்கும்[அவுணர் தவிர] கொடுமை இழைத்து வர,
இந்திரனைத் தாக்கி அவன் பட்டணத்தைச் சூறையாடி, அவ்ன் மகனையும், மற்ற தேவர்களையும் சிறைப்பிடித்து தன்க்கு ஏவல் செய்யப் பணிக்க,
உலகில் நல்ல செயல்கள் யாவும் நிகழாதிருக்க,
இதனால் மனம் வருந்திய தேவர்கள் பிரமனை அணுகி வழி கேட்க, வரம் கொடுத்த சிவனையே போய்ப் பர்ர்ப்போம் எனக் கிளம்ப,
சிவனோ தவத்தில் ஆழ்ந்திருக்க,
மன்மதனை அனுப்பி சிவன் மீது பாணம் எய்து தவத்தைக் கலைக்க,
கண்விழித்த சிவன் நெற்றிக்கண்ணால் காமனை எரிக்க,
பின்னர், தவம் கலைந்த சிவன், தேவர்களுக்கு ஆறுதல் கூறி,
யாராலும் வெல்லமுடியாது சிவ சக்தி அம்சத்தாலன்றி என வரம் வாங்கி இருப்பதால், திருமுருக அவதாரம் நிகழ்த்தி தேவர் குறை தீர்ப்பதாக வாக்களிக்க,
மலையரசன் மகளான பார்வதியை மணமுடிக்க,[இப்போதுதான் அகத்தியர் சிவனால் தென்புலத்துக்கு அனுப்பப் பட்டார்]
மணம் முடிந்த பின்னர், தேவர்களைப் பார்த்து, உங்கள் துயர் தீரும் நேரம் வந்துவிட்டது எனச் சொல்லி 'ஈசானம், தத்புருஷம், வாமனம், அகோரம், சத்யோஜாதம்' எனப்படும் ஐந்து முகங்களோடு, ஞானிகளுக்கு மட்டுமே தென்படும் 'அதோமுகம்' என்னும் ஆறாவது முகத்தையும் கொண்டு காட்சி அளிக்க,
அந்த ஆறுமுகங்களினின்றும் உள்ள ஆறு நெற்றிக்கண்களில் இருந்தும் புறப்பட்ட ஆறு பொறிகளை யாரும் தொட முடியாமல் அஞ்ச,
சிவனாரின் ஆணைக்கிணங்க, அக்னித்தேவனும் வாயுவும் அவைகளை எடுத்து கங்கையில் விட,[காங்கேயன் என்னும் பெயர் இதனால்தான்!],
கங்கையும் இதன் வெப்பத்தைத் தாளாது வற்றி அந்த பொறிகளை உமையின் சொற்படி சரவணப்பொய்கையில் விட,
ஆறு பொறிகளும் ஆறு குழந்தைகளாக மலர,
அவற்றை ஆசையுடன் அள்ளி எடுத்த உமையவள் ஆறுமுகமாக மாற்ற [பதிவில் போட்டிருக்கும் உருகு முத்தம் படிக்கவும்!],
கார்த்திகைப் பெண்டிரிடம் குழந்தையை வளர்க்கும் பொறுப்பை விட,
முருகன் பின்னர் கைலாயம் சென்று,
பிரமனை பிரணவத்தின் பொருள் கேட்டு, தலையில் குட்டி, சிறையில் தள்ள[இது பற்றிய விளக்கம் முந்தைய பதிவு ஒன்றில் இருக்கும்.],
இன்னும் பல விளையாட்டுகளை நிகழ்த்தி இருக்கும் வேளையில்,
சூரனுகு அஞ்சி ஒளிந்திருந்த இந்திரன் மீண்டும் வந்து சிவனை வேண்ட,
சங்கரன் சங்கரகுமரனை நோக்க,
அஞ்சேல் என அபயம் தந்து தேவர் குறை தீர்த்தான்!
இதுவே திருமுருகன் திருவவதாரக் கதை!
இதை இந்நாளில் சொல்லவைத்த உங்களுக்கு நன்றி!
சூரனுடன் நடத்திய போரைப் பற்றி அறிய தனிக் கேள்வி போடவும்!
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா!
முருகனருள் முன்னிற்கும்!
//யாராலும் வெல்லமுடியாது சிவ சக்தி அம்சத்தாலன்றி என வரம் வாங்கி இருப்பதால்,//
எஸ்கே ஐயா !
இப்படி ஒன்று இருக்கிறதா என்று அறியத் தான் கேட்டேன்.
நீண்ட விளக்கமும் கதையுடன் அளித்து அதன் மூலம் தாங்களும் மகிழ்வுற்றிருக்கிறீர்கள் என்று அறியும் போது எனக்கு மற்றற்ற மகிழ்ச்சியே !
சஷ்டிக்குத் தக்க பாட்டொன்று எஸ்.கேயிடமிருந்து. மிகுந்த மகிழ்ச்சி.
அப்படியிப்படி என்று கந்தன் கதையைக் கணுப்போலச் சொல்லி விட்டீர்களே! :-) விரித்தும் சொல்லுங்களேன். கேட்கிறோம். (ஆசை பேராசையில்லை என்று தெரியும்)
இந்தப் புதுக்கவிதை போல விளக்கம் சொல்லும் முறைமையும் சுவையாக இருக்கிறது.
கந்தப் பெருமான் நமக்கெல்லாம் சொந்தப் பெருமான். அவனருளால் உலகம் உய்ய வணங்குகிறேன்.
சஷ்டி கோலாகலத்தில் கலந்து கொண்டமைக்கு மிக்க நன்றி, ஜி.ரா.!
வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவன் பெருமை கூறக் கசக்குமோ?!!
கோவியார் கோடு போட்டார்...
நான் ரோடு போட முனைந்தேன்!
:)
//'ஈசானம், தத்புருஷம், வாமனம், அகோரம், சத்யோஜாதம்' எனப்படும் ஐந்து முகங்களோடு, ஞானிகளுக்கு மட்டுமே தென்படும் 'அதோமுகம்' என்னும் ஆறாவது முகத்தையும் கொண்டு காட்சி அளிக்க,
//
இப்போ தன் கேள்வி படுகிறேன்.
பதிவும் அருமை, பின்னூட்டங்களும் அமுதம். திகட்டவேயில்லை. எனது உள்ளமேல்லாம் பூரிக்கிறது.
இந்த முருகனடிமையும் கந்த ஷஷ்டி பற்றி ஏதோ கிறுக்கி உள்ளேன். மோதிர கையால் குட்டுபட ஆசை. ஸ்வாமி என் இல்லத்துக்கு எழுந்தருள வேண்டும்.
அம்பி,
இப்படிக் கூப்பிடவே அச்சமாய் இருக்கிறது![உங்கள் பதிவைப் பார்த்ததும்!]
என் அருமை நண்பர் கோவிகண்ணன் போல நீங்களும் ஒரு அருமையான கேள்வி மூலம் என்னைத் தூணி விட்டீர்கள்!!
இப்போது இந்த ஆறு முகங்களையும் சற்று பார்ப்போம்!!
ஈசானம் = கிழக்கு = அதாவது முதலில், நமக்கு முதலில்!
நமக்கு முதலில் எது?
குரங்கு..........அமீபா!
அதாவ்து சிருஷ்டியின் முதல் உயிர்!
சரியா?
அடுத்தது, தத் புருஷம்.
அதாவது நாம்...நாமே நாம்...மனித உயிர்...படைப்பின் கடைசி நிலை.....இதுவரை!!
மூன்றாவது, வாமனம்.
மனிதருள் கடை நிலை!
வன்மம் பேசி, வாதம் புரிந்து, வம்புச் சண்டையில் எப்போதும் ஈடுபடும் உண்மை நிலை அறியாக் கடை மனிதர்!!:))
நான்காவது, அகோரம்.
உண்மை நிலை அறிந்தும், தெரிந்தே சண்டை போடும்... தான் செய்வது நல்லதற்கே என நம்பும் அசுர குணம் படைத்த மனிதர்.
ஐந்தாவது, சத்யோஜாதம்.
உண்மை அறிந்து, சும்மா இருக்கும்,...சிரித்திருக்கும் மனிதர்.
அதோமுகம்..இது ஆறாவ்து!
ஞானியர்க்கு மட்டுமே, எல்லாம் அவனே என்று அறிந்தவர்க்கு மட்டுமே தெரியும் முகம்!
இப்போது கந்தர் சஷ்டி தத்துவத்தை மீண்டும் எண்ணிப் பாருங்கள்!
அதோமுகம் தெரியும்!!
இது எனக்கு மிகவும் மன நிறைவைத் தந்த பதிவு!!
சொல்ல வைத்ததற்கு,....
முருகனருள் முன்னிற்கும்!!
SK ஐயா,
இதை அன்றே படித்தாலும், மீண்டும் மீண்டும் படித்ததால், இன்றே பின்னூட்டுகிறேன்!
வாசக ராமாயணம், நாம ராமாயாணம், பாசுர ராமாயணம் என்று 21 அடிகளில் வந்த ராமாயணம் போல், கந்த புராணத்தை இப்படிச் சாறு பிழிந்ததற்கு, முதலில் GK விற்கும், பிறகு உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி!
இதை கவிதை போல் ஒரு தோத்திரப் பாடலாக நீங்கள் ஏன் ஆக்கக் கூடாது. நேரம் இருக்கும் போது முயலுங்கள் SK; முருகன் அருள் முன்னிற்கும்!
//SK Sir
Please verify and then publish, if you think appropriate...
Inadvertent error திருப்புகழ் பதிவில் வந்து விடக் கூடாதே என்ற ஆதங்கத்தில் தான் பதிக்கிறேன். மற்றபடி திருப்புகழ் வகுப்பில் நான் உங்கள் கீழ், மாணவனே!
//
//ஈசானம் = கிழக்கு//
அல்ல;
தத்புருஷமே கிழக்கு;
ஈசானம் என்பது வடகிழக்கு மூலை. ஈசானம் = ஈசனின் ஊர்த்துவ ரூபமாய் மேல் நோக்கியும், ஆன்மாக்களை மாயப் பிறப்பு இறப்புகளில் இருந்து கட்டு அறுத்து, மேல் ஏற்றி விடுவது.
அடுத்து நால் திசைக்கும் நால் முகங்கள்; நீங்களே அருமையாக விளக்கி விட்டீர்கள்.
வாமதேவம் = வடக்கு (வாமனம் அல்ல)
மனிதருள் கடை நிலை! உண்மை அறியா நிலை
அகோரம் = தெற்கு
உண்மை அறிந்தது போல் இருந்து, ஆனால் முழுதும் அறியாது, வீண் வழக்குகளில் சிக்கும் நிலை
சத்யோஜாதம் = மேற்கு
உண்மை விழைவு, உண்மை அறிவு; மெய் ஞானம்
தத்புருஷம் = கிழக்கு
தன்னைத் தான் அறியும் நிலை; ஆத்ம விசாரணை
அடுத்து ஈசன் கருணை ரூபம்;
அதோமுகம் = ஈசனின் தவ ரூபமாய் கீழ் நோக்கி, ஆன்மாக்கள் கடைத்தேற, வழி வகுப்பது. கடைத்தேறும் வழி சூட்சுமம் ஆதலால், இதுவே மறை முகம்; ஞானிகளுக்கு மட்டும் புலப்படும்.
உங்கள் கருத்தும், விளக்கமும் மிகச் சரியே, திரு.ரவி.
அதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை.
நான் கொஞ்சம் எளிமையாக, என் வழியில் சொல்லத் துணிந்தேன்.... சில மாற்றங்கள் செய்து!
ஆறுமுகத்தை எனக்குத் தோன்றிய வண்னம் சொல்ல்ப் புகுந்தேன்.
அவ்வளவே.
உங்களது தத்துவார்த்த விளக்கத்தை நான் ஒப்புக் கொள்கிறேன்.
இது என்னுடைய விளக்கம்.
தவறெனில் மன்னிக்கவும்.
எனை நாடி, என் உயிர் பறிக்க
இயமன் வரும் நாளன்று எனைப் பார்த்து
குமரக்கடவுள் தெரிசனம் கண்டவன் இவன்
எனத் தெளிந்து, புறம் கொடுத்து ஓடவும்,
உண்மையான வார்த்தைகள் ஸ்.கெ. அப்படியும் காலன் வந்தால் மயூரம் சமாருக்கிய மாபீரிதித்தவம் புரசக்திபாணி மமாயாகி சீக்கரம்(என்னுடைய பயத்தைப் போக்குவதற்காக மயில் வாகனத்தில் ஏறிக்கொண்டு சக்திதேவி கொடுத்த வேலுடன் சீக்கிரம் ஓடிவா)அதிகாரமாக கூப்பிடுகிறார் அதி சங்கரர்
//No publish//
SK சார்
சில வரிகளிலேயே கந்த புராணத்தைப் பின்னூட்டமாய் பொழிந்த தங்களுக்கு, இன்னுமொரு பின்னூட்டம் இட்டேனே; கிட்டிற்றா?
Post a Comment