"அ.அ. திருப்புகழ்" 12 -- "ஓராதொன்றைப்"
"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" -- 12 "ஓராதொன்றைப்"
"சூரனை அடர்ந்த வேலவரே! சிவபாலனே! செந்திலாதிபதியே! மாதர் வசப்படாது உமது புகழைப் பாட அருள் புரியும் !"
---------------------------பாடல்-----------------------------------
ஓரா தொன்றைப் பாரா தந்தத்
தோடே வந்திட் டுயிர் சோர
ஊடா நற்றற் றார்போல் நின்றெட்
டாமால் தந்திட் டுழல்மாதர்
கூரா வன்பிற் சோரா நின்றக்
கோயா நின்றுட் குலையாதே
கோடார் செம்பொற் றோளா நின்சொற்
கோடா தென்கைக் கருள்தாராய்
தோரா வென்றிப் போரா மன்றற்
றோளா குன்றைத் தொளையாடீ
சூதா யெண்டிக் கேயா வஞ்சச்
சூர்மா அஞ்சப் பொரும்வேலா
சீரார் கொன்றைத் தார்மார் பொன்றச்
சேவே றெந்தைக் கினியோனே
தேனே யன்பர்க் கேயா மின்சொற்
சேயே செந்திற் பெருமாளே.
---------------------------பொருள்:-----------------------------
[வழக்கம் போல் பின் பார்த்து முன்]
"தோரா வென்றி போரா"
போரினைப் புரிபவன்
வெற்றியும் காண்பான்
தோல்வியும் காணுவன்
குமரனுக்கோ வெற்றியன்றித்
தோல்வியே இல்லை- அங்ஙனம்
தோல்வியறியாது
வெற்றிப் போர் செய்பவரே !
"மன்றல் தோளா"
மன்றத்தில் வீசிவரும்
தென்றல் காற்றைப் போன்று
நறுமணம் வீசிடும்
தோள்களை உடையோரே !
"குன்றை தொளையாடீ"
கிரௌஞ்சமெனும் குன்றத்தை
வீரமுடன் வேலெடுத்து
தொளையாகிப் போகும்வண்ணம்
தீரமுடன் செய்தவரே!
"சூதாய் எண் திக்கு ஏயா"
நேரடியாய்ப் போர் செய்திட
துணிவு இன்றிச் சூதாக
மாயங்கள் பல காட்டி
திக்கெட்டிலும் பரவி நின்று
"வஞ்சச் சூர்மா அஞ்சப் பொரும்வேலா"
வஞ்சனையாய்ப் போர் செய்த
சூரனெனும் வலிய அரக்கன்
அஞ்சி நடுங்கும் வண்ணம்
வெஞ்சமர் செய்த வேலாயுதா
"சீர் ஆர் கொன்றைத் தார்மார்பு ஒன்றச்
சே ஏறு எந்தைக்கு இனியோனே"
சீராய்ப் பூத்து
சிறப்பாய் மலர்ந்திட்ட
ஆத்தி மலரினையும்
கொன்றை மலரினையும்
ஒன்றாகச் சேர்த்தங்கு
கட்டியதோர் மாலையினை
மார்பினில் பொருந்திட
அழகுறத் திகழ்ந்திடவே
திமிர்ந்த திமில் உடைய
நிமிர்ந்த எருதின் மேல்
உயர்ந்து எழுந்துவரும்
என்னப்பனாம் ஈசனுக்கு
மிகுதியும் இனியவரே!
"தேனே!
அன்பர்க்கே ஆம் இன்சொல் சேயே!
செந்தில் பெருமாளே!"
அடியவரின் சித்தத்தில்
தேன் போன்று தித்திக்க
நினைத்திடும் போதெல்லாம்
இனித்திடும் தெய்வமே!
அருள் புரிவதும் உன் செயலே
அவ்வருளைப் புரிகையிலே
வன்சொற்கள் பேசாமல்
இன்சொல்லால் எமை மகிழ்த்தும்
செம்மைப் பண்பு காட்டும்
இன்சொல் விசாகனே!
சிறப்பான தெய்வம் நாடி
ஆரும் அலையா வண்ணம்
ஆரலைவாயில் அமர்ந்திருக்கும்
பேரறிவாளன் திருவே!
"ஓராது ஒன்றைப் பாராது"
ஒன்றெனும் ஒருமொழியாம்
ஓம் எனும் பிரணவம்
அம்மொழியை அறிந்திடவோ
குருவருளின் துணை வேண்டும்
அறிந்த பின்னர் அம்மொழியை
ஆராய்ந்து பார்த்திடல் வேண்டும்
அத்தோடு நின்றிடாமல் அதையென்றும்
மனத்தினில் உன்னுதல் வேண்டும்
அவையெல்லாம் செய்யமாட்டார்
உண்மைப் பொருளை அறிய மாட்டார்
"அந்தத்தோடே வந்திட்டு உயிர் சோர,
ஊடா,
நன்று அற்றாற் போல் நின்று,
எட்டா மால் தந்திட்டு,
உழல் மாதர்"
அளவற்ற அழகுடனே வந்து நின்று
ஆடவரின் உயிர் சோர்ந்து போகுமாறு
கூடாமல் கூடுவார் போல் பிணங்கியும்
விருப்புடன் அணைவார் போல் இணங்கியும்
தனக்கென ஒன்றும் இல்லாதார் போன்று
தம் நடிப்பைக் காட்டியே அங்கு நின்று
அளவிலா மயக்கத்தைத் தருகின்ற
விழியுருட்டி எனை மயக்கி
இங்குமங்குமாய்த் திரிகின்ற
விலை மக்கட் பெண்டிரின்
[மேற்கூறிய குணமிங்கே
விலைமகளிர்க்கே பொருந்துவதால்
மாதர் என்று சொன்ன போதும்
அது விலைமாதரையே குறிக்கும் என அறிக
கற்புடைப் பெண்டிர் செய்வதன்று
காசுக்குச் சோரம் போவது]
"கூரா அன்பில் சோரா நின்று
அக்கு ஓயா நின்று
உள் குலையாதே"
உண்மையிலே அன்பின்றி
வெளியினிலே பகட்டு காட்டி
நடிப்பதனைச் செய்கின்ற
பொய்யான தோற்றத்தில்
உடைமைகளைப் பறிகொடுத்து,
அத்தோடு நில்லாமல்
எலும்புடன் கூடி நிற்கும்
தோல், தசை, மூளை
சுக்கிலம், இரத்தம், இரதம்
என்னும் எழுபொருளால் ஆன
இவ்வுடம்பும் ஓய்ந்து போக,
உடைமையும் போகவிட்டு
உடலையும் ஓயவிட்டு
உள்ளமும் மிக வாடி
நிற்கின்ற நிலை வராமல்,
"கோடார் செம்பொம் தோளா!"
மலை போலும் சிவந்திருக்கும்
பொன்மயமாய தோளுடைய முருகனே!
"நின் சொல் கோடாது என்கைக்கு அருள் தாராய்!"
உனைப் பாடும் சொல் ஒன்றே
புகழ் என்ற சொல்லாகும்
அதுவே திருப்புகழாகும்
மற்றெல்லாம் வீணே
வீணான செயல்கள் இங்கு
நான் செய்து மாளாமல்
தளராது உன் புகழை
நாள்தோறும் சொல்லிவர
தளராது என்னுடலும்
மறவாது உன் புகழை!
இவ்வருள் தந்திடவே
நீயெனக்கு அருள் தருவாய்!********************************************************************
அருஞ்சொற்பொருள்:
ஓராது = முழு முதற் பொருளான பிரணவ்த்தை உணராது
அந்தத்தோடே = அழகுடனே
எட்டா மால் = அளவில்லாத மயக்கம்
கூரா = பொய்யான, விருப்பமில்லாத
அக்கு = எலும்பு
கோடார் = கோடு ஆர் = மலை போன்று [உ-ம்: திருச்செங்கோடு] கூம்பி, உயர்ந்து நிற்கின்ற
கோடாது = தாழாது, வளையாது [உ-ம்: கோடாமை சான்றோர்க்கு அணி]
தோரா = தோல்வி என்பதே இல்லாது
வென்றி = வெற்றி
போரா = போர் புரிபவனே
மன்றல் = வாசனை வீசும்
பொன்ற = பொருந்தச் செய்ய
சே = எருது
சே ஏறு எந்தை = எருதின் மேல் ஏறி அமர்ந்து வரும் ஈசன், சிவன்
*************************************************************
வேலும் மயிலும் துணை !
முருகனருள் முன்னிற்கும் !
அருணகிரிநாதர் தாள் வாழ்க !
13 பின்னூட்டங்கள்:
எஸ்.கே
நன்றி. முழுக்க படிக்கவில்லை. பொறுமையா உட்கார்ந்து மெதுவாக படிக்கணும்.
எஸ்கே ஐயா !
வழக்கமான கலக்கல் தமிழ்நடை !
சந்தம் ஒலிக்கும் பாடலுக்கு, அழகான சிந்துகவி தமிழ்மாலை சூட்டி அழகுபார்த்து இருக்கிறீர்கள்.
'உழல் மாதர்' என்ற ஒற்றை சொல்லுக்கு சரியான விளக்கம் !
பாராட்டுக்கள் !
நன்றி. செல்வன், முதல் வருகைக்கு.
படித்ததும் வரவை எதிர் பர்ப்பேன்!
சிங்காரமாய்க் கவி பாடி
கவிச்சுவை நாடி
பாங்காய் வந்து வாழ்த்திய கோவியாரே
நன்றி.
எஸ்.கே உங்கள் விளக்கம் நன்றாக இருக்கிறது என்று மட்டும் சொன்னால் போதுமா...ஆங்காங்கு ரசித்ததைச் சொல்ல வேண்டாமா!
அக்கு என்ற சொல்லிற்குப் பலர் பொருள் தெரிந்திருக்காது என்றே நினைக்கிறேன். அக்கு வேறு ஆணி வேறு கழற்றி விடுவேன் என்றும் சொல் வழக்கம் உண்டே. அக்கு என்பது கூடு. ஆணி என்பது இணைப்பது. மரப்பொருட்களில் மரக்கட்டைகள் அக்கு. அவைகளை இணைக்கும் ஆணிதான் ஆணி. உடம்பை எடுத்துக் கொண்டால் எலும்புதானே மேனிக்கான சட்டமாக இருக்கிறது. அதனால்தான் அக்கு என்று அழைக்கப்படுகிறது.
சே - எருது...இது எனக்கு வேறொரு திருப்புகழை நினைவுபடுத்தி விட்டது. "பாவேறு நாமணத்த பாதரமே நினைத்து" அதில் "சேவேறும் ஈசர் சுற்றும் முருகோனே" என்று வரும்.
ஓராது ஒன்றைப் பாராது என்பதற்கு குடிலை அறியாமை என்று பொருள் கொள்ள முடியுமா? எப்படி? புரியவில்லையே!
இந்த பதிவை பற்றி சம்ப்ந்தம் இல்லாத விஷயம்.
எஸ்.கே சார், இளையராஜா பற்றி நான் எழுதிய ஒரு கட்டுரையில் உங்களை பற்றி செல்வன் குறிப்பிட்டிருந்தார்.
அதான் வணக்கம் சொல்லிட்டு போலாம்னு வந்தேன்.
திருப்புகழ் படித்த பிறகு கருத்தை தெரிவீக்கிரேன்.
http://badnewsindia.blogspot.com/2006/10/blog-post_16.html
வணக்கம்.
ராஜாவின் அடுத்த பணியைப் பற்றிய விவரம் ஏதும் இன்னமும் தெரிய வரவில்லை.
வந்ததும், தெரிந்தவுடன் உங்களுக்கெல்லம் சொல்லாமலா?
திருப்புகழைப் படித்து சொல்லுங்கள்.
நன்றி.
ஜி.ரா.,
அக்கு பற்றிய உங்கள் விளக்கம் பிரமாதம்!
மிக்க நன்றி.
//
ஓராது ஒன்றைப் பாராது என்பதற்கு குடிலை அறியாமை என்று பொருள் கொள்ள முடியுமா? எப்படி? புரியவில்லையே!//
நீங்கள் கேட்டிருக்கும் குடில் பறிய கேள்விக்கு என்னாலான விளக்கம்.
மாதர் பற்றிச் சொன்ன பகுதியில் ஒரு விளக்கம் போட்டிருக்கிறேன்.
பொதுவில் மாதர் என்று சொன்னாலும், ஒரு சில குண நலன்களை விரித்துக் கூறி, இவையெல்லாம் விலை மாதர்க்கே பொருந்தும் என்பதால், இங்கு மாதர் என்று சொன்னதை விலை மாதர் எனக் கொள்க என்று.
அது போன்றே,
'ஒன்று' என்ற சொல்லுக்கு எத்தனையோ பொருள் வருமாயினும், அதைப் பிரணவம், குடில் என்று சொன்னதன் காரணம் 'வழக்கம் போல் முன்னும் பின்னும்' பார்த்தால் விளங்கும்!!:)
"ஓராது, பாராது" என்ற இரு சொற்களுக்கிடையில் இந்த ஒன்றை வைத்திருக்கிறார் அருணையார்.
'ஓராது' என்பது ஓதாது என்னும் பொருள் படும்.
'பாராது' என்பது உன்னித்து பொருள் உணர்தல் என்னும் பொருளில் வரும்.
வேதம், முதலாய இறை நூல்களே அருணையாரைப் பொருத்த மட்டில், ஓதவும் உன்னவும் உகந்த நூல்கள்.
வேதம், திருமுறை போன்றவைதான் ஓதப்படும் ; உன்னப்படும்.
மற்றவையெல்லாம் வெறுமே படிக்கப் படும்.
இந்த ஓரி[தி], உன்னி உணரும் பொருட்களில் தலையாயது , 'ஒன்று' எனச் சொல்லப்படுவது, ஓம் எனும் பிரணவமே.
எனவேதான் அப்படிச் சொல்லத் துணிந்தேன்.
மேலும், நான் முன்னரே கூறியபடி, உரை எழுதிய பெரியவர்களின் கருத்தை ஒட்டியே இதுவும் அமைந்துள்ளது.
நன்றி.
you have formatting issues in your page - the links for other artciles of yours and the archive list shows up way at the bottom.
When you enter values like this "*************************************************************", make sure you leave a gap between the asterisks - like this "***** ***** ***** ***** ***** "
or have less number of * to fix.
அருமையாகப் பொருள் சொல்லிவிட்டீர்கள் எஸ்.கே. புரியாத பல சொற்கள் புரிந்தன. உங்கள் விளக்கம் இன்றி இந்தப் பாடல் எனக்குப் புரிந்திருக்காது. மிக்க நன்றி.
தஙள் பாராட்டுக்கு மிக்க நன்றி, குமரன்.
ஆனால், நான் எப்போதும் சொல்வது போல், இதற்கு மிக அருமையாகப் பொருள் சொல்லியிருக்கிற நம் அறிஞர் பெரியோர்களுக்கே இப்பாராட்டை உங்கள் சார்பில் காணிக்கை ஆக்குகிறேன்.
//"ஓராது ஒன்றைப் பாராது"//
இந்த மூன்று வார்த்தைகளுக்குள் இவ்வளவு பெரிய விஷயமா? பிரமிப்பாக இருக்கிறது.
மால் என்றால் மயக்கமென பொருள் தந்து இருக்கிறீர்கள். மயக்கம் தரக்கூடிய அழகு இருப்பதால்தான் முருகனின் மாமன் திருமால் என அழைக்கப்படுகிறாரா?
அக்கு என்ற வார்த்தைக்கு ஜிரா தந்த பொருள் அருமை.
//"நின் சொல் கோடாது என்கைக்கு அருள் தாராய்!"//
இதுதானே கடைசியில் வேண்டும்.
மு.மு.
மிக்க நன்றி, கொத்தனாரே!
ஜி.ரா. விளக்குவதற்கு கேட்கவா வேண்டும்?
வார்த்தைகளைப் புரட்டி, இனிக்கி, மயக்கித் தருவதில் மன்னனாயிற்றே!
////"நின் சொல் கோடாது என்கைக்கு அருள் தாராய்!"//
இதுதானே கடைசியில் வேண்டும்.//
திருப்புகழில் ஒரு சிறப்பு என்னவென்றால்,
மற்ற தோத்திரங்களில், ஆண்டவன் பெருமை பாடி கடைசியில் தான் தங்கள் வேண்டுகோளை வைப்பார்கள்.
ஆனால், அருணையாரோ, உரிமையுடன் தனது வேண்டுகோளை முதலில் சொல்லி, பின்னர் முருகனைப் போற்றுவார்.
இந்தப் புகழ்ச்சியில் மயங்கி அவனும் சிரித்துக் கொண்டே என்ன கேட்டார் என்பதைப் பாராது வரம் வழங்கி விடுவான்!
புரிவதற்காக நான் பின் சொல்லி முன் சொல்லி வருகிறேன்.
இப்போது எல்லாத் துறையிலும் கூட இதுதானே சொல்லி வருகிறார்கள்?
உனக்கு என்ன வேண்டுமோ, அல்லது உன் தேவை, புதுக் கருத்து என்னவோ, அதை முதலில் சொல்லிவிடு. பிறகு இது ஏன் வேண்டும், அதற்கு இங்கு ஏன் வந்தாய் என்பதை விளக்கு என்று?!!
அதை அருணையார் சூசகமாக அப்போதே காட்டி இருக்கிறார்!
மு.மு!
Post a Comment