Thursday, October 19, 2006

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" 8 'பொறையுடைமை'

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" 8 'பொறையுடைமை'


"இன்னிக்கு கொஞ்சம் அவசர வேலையா, வண்ணாரப்பேட்டை வரைக்கும் போயாவணும். அதுனால சீக்கீரமா நா சொல்றத எளுதிக்கிட்டு எடத்தக் காலி பண்ணு. இப்பவே ஒன் மாமூல் டீ, மசால்வடைல்லாம் முடிச்சிடு!" என்று வரவேற்றான் மயிலை மன்னார்.

"அப்படி என்ன அவசரம் மன்னார்? நீ எப்பவும் பொறுமையான ஆளாச்சே" என்று அவனைக் கேட்டேன்.

"நம்ம மச்சான் ஒர்த்தன் அங்கே கீறாம்ப்பா. ஆரோ இன்னாமோ சொல்ட்டாங்களாம் அவனை! அத்த இன்னோரு பேமானி இவன்ட்ட போட்டு குடுத்துட்டான். செயிலுக்கு போனாலும் கவல இல்ல. ஆங்! அவனை வெட்டிட்டுத்தான் மறுவேலைன்னு கூப்பாடு போட்டுக்கினு இருக்கானாம். நம்ம தங்கச்சி இப்பத்தான் ஃபோன் பண்ணி அளுதிச்சு. அத்தான் இன்னா, ஏதுன்னு ஒரு தபா பாத்துட்டு வந்திர்லாம்னு பொறப்புட்டுகிட்டு இருக்கேன். அட்டோக்கு சொல்லியிருக்கேன். இப்ப வந்துரும். இப்ப நா சொல்லப் போறதும் அத்தைப் பத்தித்தான். ம்ம்ம். சீக்கிரமா எளுது" என்று அவசரப்படுத்தினான் மன்னார்.

அவன் நிலைமை புரிந்து அவன் சொன்னதை அவசர அவசரமாக எழுதிக் கொண்டு வந்து பதிக்கிறேன்.

இனி வருவது குறளும் அதற்கு மயிலை மன்னாரின் விளக்கமும்!

"அதிகாரம் 16 - பொறையுடைமை"


"அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை." [151]

நீ பொறந்தது இந்தப் பூமில. நீ வாள்றதும் இங்ஙனேதான்.
இத்த வுட்டா வேற எங்கியும் மனுஷாளே கிடையாதுன்னு வேற ஸொல்றாங்க.
இது பொளந்துச்சுன்னா, மவனே, அவ்ளோதான்!
அல்லாரும் கூண்டோட கைலாசந்தான்.
இது மேலத்தான் வாள்றோம், நடக்கறோம், படுக்கறோம், வூடு கட்றோம், பயிர் பண்றோம், இன்னும் எத்தினி எத்தினியோ பண்றோம்.
அப்படி இத்த வெட்டிக் குளி தோண்ட்றப்பவும் இது மேல நின்னுகிட்டுதான் தோண்ட்றோம்.
அதுக்காவ, அது கோவிச்சுகிட்டு, டமார்னு பொளந்து ஒன்னிய சாச்சுருதா? இல்லேல்ல?
அத்தைப் போலவே, நீயும் ஒன்னிய ஆராச்சும் எதுனாச்சும் தப்பா சொல்ட்டான்னு மானத்துக்கும் பூமிக்குமா குதிக்காம, அத்தப் பொறுத்துப் போவணும்.
வேற எது செஞ்சாலும், செய்யாக்காட்டியும் பர்வால்ல. இந்த பொறுத்துப் போற விசயத்த மட்டும் கருக்கா செஞ்சுறணும். அதனாலத்தான், இதை தலைன்னு சொல்லிருக்காரு நம்ம ஐயன்.

"பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று." [152]

ஒர்த்தர் ஒனக்கு இன்னா கெடுதல் பண்ணினாலும் அத்தப் பொறுத்துப் போயிறணும்.
அப்டி அவன் சொன்னது செத்துப் போச்சுன்னு நெனைச்சு வுட்டுரணும்.
செத்துப் போனாக்கூட, செத்தவுங்க நெனைப்பு நம்மளை வந்து வாட்டிக்கினு இருக்கும்ல?
அதனால, செத்துப் போச்சு அந்தக் கெடுதில்லாம்னு நெனைக்கறத வுட, அது மாரி காரியங்கள அப்பவே மறந்துறணும்.
அது முந்தி சொன்னத வுட ஒசத்தியானது.

இந்த டைம்ல இன்னோரு விசயமும் சொல்றேன், எளுதிக்கோ.
நம்ம அர்சியல்வாதிங்கல்லாம் 'மறப்போம், மன்னிப்போம்'னு ஒரு டகல் வுட்டுகினு திரியுறாங்களே அது அத்தினியும் பொய்யி.
சும்மா ஊரை ஏமாத்தறதுக்கவ போடற டிகிரி வேலை.
நெசமாலும் மறந்துட்டீன்னா, அப்பறமா இன்னாத்த மன்னிக்கறது?

மெய்யாவே சொல்றாங்கன்னா, மன்னிப்போம், மறப்போம்னு தானே சொல்லணும்?
நா சொல்றது வெளங்குதா?

இது புரியாம நம்ம சனங்க அல்லாம் இவனுக பின்னாடி உசிரக் குடுத்துகிட்டு அலையுது!
இன்னாமோ போ!
சரி, டயம் ஆச்சு; நீ மேல போ!

"இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை." [153]

போன வாரம் நா சொன்னதே இப்பவும் திரும்பி வருது!

இல்லாமப்போறதுலியெ ரொம்ப மோசமானது வர்ற விருந்தாளிங்களை சரியா கவனிக்காம வுடறதுதான்ன்னு சொன்னேன்ல.
அத்தப்போல, ஒன்னாண்டை இருக்கற பலத்துலியே பெரிய பலம் இன்னான்னு கேட்டேன்னு வையி, புத்தியில்லாம ஒர்த்தன் ஒனக்கு பண்ணின கெட்ட சமாச்சாரத்தை அத்தோட மறந்து, நெனப்புலேர்ந்து தூக்கி எறிஞ்சுர்றதுதான்.
இன்மைன்னா ஏளை, ஒண்ணும் இல்லாதவன்னு அர்த்தம்.

" நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
போற்றி ஒழுகப் படும். [154]

இப்ப ஒரு கொடம் ரொம்ப தண்ணி இருக்குன்னு வெச்சிப்போம்.
அத்த நீ தூக்கியாற. தம்மு தும்முன்னு ஆட்டிக்கினு நடந்தீன்னா இன்னா ஆவும்? அத்தினி தண்ணியும் கொட்டிப் போயிரும்.
அதே நெதானமா பொறுமையா வந்தேன்னு வையி.
கொடந்தண்ணியும் தளும்பாம இருக்கும். சர்த்தானே நா ஸொல்றது?

நீயும் ஒரு கொடம் மாரி.
ஒங்கிட்ட நீ பாத்து பாத்து சேத்து வெச்ச நல்ல கொணம்லாம் தண்ணி மாரி ரொம்பிக் கெடக்கு. ஆத்தரப்பட்டேன்னா, அத்தெல்லாம் கொட்டிப் போயிரும்.
பொறுமையா இருந்தேன்னா, ஒண்ணும் ஒன்னை வுட்டுப் போவாது.
நல்ல மன்சன்னு பேரெடுப்பே நீ.
வெளங்கிச்சா?

"ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து. [155]

இதுமாரி ஒரு ஆளு ஒனக்கு ஒரு கெட்டது பண்ணிடறான்.
ஒனக்கு கோவம் கோவமா வந்து அவனைப் பளி வாங்கணும்னு நெனைக்கறே, இப்ப என் மச்சான் இருக்கானே அவன் மாரி!

அப்பால இன்னா ஆவும்?
போலீஸ் வந்து இவனைப் புடிச்சிக்கினு போவும்.
நாலு சாத்து சாத்தும். உள்ளே போடும்.
அவன் பொண்டாட்டி புள்ளைங்கல்லாம் தெருவுல நிக்கும்.
இந்த ஊரு இன்னா சொல்லும் அவனைப் பத்தி.
புத்தி கெட்ட பய.
அறிவில்லாத ஒரு காரியத்தப் பண்ணிட்டு இப்ப அவஸ்தை படறான் பாருன்னு தானே தூத்தும்?

அதே, அப்படி பண்ணினவனை மன்னிச்சு வுட்டான்னு வையி, இதே ஊரு அப்ப இன்னா சொல்லும் தெர்யுமா?
பெரிய மன்சன்யா அவன்!
தங்கமான கொணம்!
ஆத்தரப்படாம, பொறுமையா இருந்தான் பாரு அப்டீன்னு வாள்த்தும்.

இப்ப இத்த வெச்சுகிட்டு, நாட்ல நடக்கற விசயத்தோட கம்பேர் பண்ணிக் கொயப்பிக்காதே.
அது சட்டம் சம்பந்தப் பட்ட விசயம்.
நீ இன்னா பண்ணனும் அத்த மட்டும் பாரு.
அர்சாங்க வேலைய அவங்க கிட்ட வுடு.
அதுக்குள்ள ஆயிரம் ஓட்டை இருக்கு. அது நமக்கு வோணாம்.
சர்யா?

"ஒறுத்தர்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றும் துணையும் புகழ்." [156]

தப்பு பண்ணவனைத் தண்டிச்சேன்னா அன்னிக்கு ஒரு நாளைக்கு மட்டும்தான் ஒனக்கு குஜிலியா இருக்கும்.
மறுநா பொளுது விடிஞ்சவொடனியே ஒனக்கே 'சீ' ன்னு இருக்கும்.
ஆனாக்காண்டி, மன்னிச்சு வுட்டேன்னா, இந்த ஒலகம் இருக்கற வரைக்கும் ஒம் பேரை சொல்லிகினு இருக்குமாம்.
அம்மாம் புகளு வந்து சேரும் ஒனக்கு.

"திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
அறனல்ல செய்யாமை நன்று." [157]

இன்னோர்த்தன் ஒனக்கு கெட்டதே பண்ணினாக்கூட, அதுக்காக கஸ்டபட்டுகிட்டு, அத்தத்தான் ஐயன் 'நோ நொந்து' ன்னு சொல்லியிருக்காரு, நீயும் தப்பான காரியத்துல பதிலுக்கு செய்யாம இருக்கறது தான் நல்லது. பளிக்குப் பளி, ரத்தத்துக்கு ரத்தம், எனக்கு ரெண்டு கண்ணு போனாலும்பரவாயில்ல, ஒனக்கு ஒரு கண்ணாச்சும் போயிறணும்னு எத்தினி நாளைக்குப்பா சண்டை போட்டுகினே இருக்கறது மாறி மாறி ரெண்டு பேரும்.
ஒர்த்தராவது சும்மா இருக்க ட்ரை பண்ணனும்.
போயி உங்க வலைல இருக்கறவங்களுக்கு ஸொல்லு.

"மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்
தகுதியான் வென்று விடல்." [158]

அப்ப இன்னா ஸொல்றே நீ?
அவன் என்னிய அடிப்பான், அடிச்சுகினே இருப்பான்.
நா சும்மா கன்னத்தைக் காட்டிக்கினு இருக்கணுமான்னு கேக்க வரே இல்ல? எனக்கு தெரியுமே! நீ இப்படி கேப்பேன்னு.
ஒன்னிய அங்கே போயி இன்னும் அடிறான்னு காமிக்கச் சொல்லலை நா. நவரு.
அது மெய்யாலுமே கெட்டதுதான்னு தெரிஞ்சுருச்சில்ல?[மிகுதியான்] அப்பறம் ஏன் அங்கியே போயி குந்திக்கினு அடி வாங்கற?
பொறுமையா இரு.
அவனுக்கு பதில் சொல்றத வுட்டு ஒன் வேலையப் பாரு.
அவனுக்கே அலுத்துப் போயிரும்.
சே! இன்னாத்துக்கு இத்த நா பண்ணிக்கினே இருக்கேன்னு ஒன் பொறுமையைப் பாத்து வுட்ருவான்.
அப்டித்தான் கெலிக்கணும்!
அதான் ஒனக்கு பெருமை! [தகுதியான்]

"துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர்." [159]

கெட்டவங்க சொல்ற கஸ்மாலப் பேச்சையெல்லாம் பொறுத்துகிட்டு, அதுக்கு போயி பதில் சொல்லாம இருக்காம் பாரு, அவந்தான் நெசமாலுமே அல்லாத்தையும் வுட்ட சாமியாருங்கள வுட சுத்தமானவன்.
அல்லாத்தியும் வுட்டவங்களத்தான் சொல்றேன்!

இங்கே 'இறந்தார்'னு சொல்றது செத்துப் போனவன்ற அர்த்ததுல இல்ல. மனசுல திமிரு, ஆணவம்னு வெச்சிருக்கான் பாரு, அவனைத்தான் சொல்றாரு. அவன்லாம் உசுரோட இருந்தாக்கூட செத்தவனுக்கு சமம்னு நெனைச்சு சொல்லியிருக்காரு.

"உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின்." [160]

அல்லாருக்கும் புடிச்ச சாப்பாட்டைக் கூட தான் வுட்டுட்டு, பளம், பொரின்னு மட்டும் துண்ணுகிட்டு நோம்பு நோக்கறாங்களே அவங்களையெல்லாம் பெரிய மகான்னு சொல்லுவாங்க.

ஆனாக்க, அடுத்தவன் நம்மளைப் பாத்து சொல்ற மோசமான வெசவு அல்லாத்தியும் பொறுத்துகிட்டு கம்முனு இருக்கான் பாரு, அவன் இந்த மகான்கள வுட ரொம்ப பெரிய ஆளுங்க.

"சரி, ஆட்டோ வந்திருச்சு. நா கெளம்பறேன். நாயர்ட சொல்லிட்டேன். மறக்காம டீ சாப்ட்டுட்டு போ! அப்பால பாக்கலாம். நா வந்து தகவல் சொல்றேன்"
என்று அந்த அவசரத்திலும் விருந்தோம்பலை மறக்காமல் செய்துவிட்டு, சிட்டாய்ப் பறந்தான் மயிலை மன்னார்!

அவன் வலியுறுத்திச் சொன்ன இன்னொரு விஷயம்.

இங்கு சொன்னதெல்லாம் தனி மனித ஒழுக்கம் குறித்து மட்டுமே!
பொது நிகழ்வோடு தொடர்பு படுத்திக் குழப்பிக் கொள்ள வேண்டாம் என்று அடித்துச் சொல்லிவிட்டுத்தான் போனான்.

54 பின்னூட்டங்கள்:

கோவி.கண்ணன் [GK] Wednesday, October 18, 2006 9:32:00 PM  

//"பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று." [152]//

எஸ்கே ஐயா !

அனைத்து குறள் விளக்கமும் நன்றாகவும் சிரிக்க சிந்திக்க சுவையாக எழுதியிருக்கிறீர்கள் !

மேலே குறிப்பிட்ட குறள் விளக்கம் மிக அருமையாக உள்ளது.

பாராட்டுக்கள் !

VSK Thursday, October 19, 2006 8:50:00 AM  

முதலில் வந்து பாராட்டியமைக்கு நன்றி, கோவியாரே.

பதிவு போட்டதில் இருந்து ஏதோ ப்ளாக்கர் வம்பு செய்கிறது.

அதுதான் பின்னுட்டங்கள் இன்னும் வராதத்ற்குக் காரணமோ?

தெரியவில்லை!
:((
:))

பொறுமையாய் காத்திருப்பேன்!!

இலவசக்கொத்தனார் Thursday, October 19, 2006 10:52:00 AM  

நைனா, டீக்கடையாண்ட நின்னுக்கினு பொறையுடைமைன்னு சவுண்டு வுட்டியா, நானு என்னவோ நீ நாயரு உனக்கு பொறை குடுக்காம பேஜார் பண்ணிக்கினு இருக்கறாம் போலன்னு கத்தி கித்தி எல்லாம் எட்தாந்தா என்னவோ விசயம் சொல்லிகீறியேபா.

சரி பொறுமையா பட்சிட்டு நம்ம கருத்து இன்னான்னு சொல்லறேன். இப்போ வுடு ஜூட்.

VSK Thursday, October 19, 2006 10:57:00 AM  

அவசரப்பட்டா இப்படித்தான்!
அதுக்குத்தான் பொறுமையா பட்சிட்ட்டு வரணும்ன்றது!

பொறுமையாவே வா, கொத்தனாரே!

ஆனா, வராக்காண்டி இருந்துராதே!

இலவசக்கொத்தனார் Thursday, October 19, 2006 11:19:00 AM  

//"அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை." //

நம்ம இன்னாதான் கடுப்படிச்சாலும், நம்ம ஆத்தா வந்து என்னடா ராசான்னு நம்ம தலைமுடியை கோதிவிட்டுக்கிட்டு சிரிக்குது பாரு, அந்த மாதிரி நம்மளை பாத்து தப்பா பேசற நாயிங்களை கண்டுக்காம வுடு. அப்ப நீ மெய்யாலுமே பெர்சுதான்.

இதானேப்பா மேட்டர்? நீ இன்னாமோ நிலம், பூமின்னு சொல்ற. சிட்டில கீற எனக்கு அத்த பத்தி இன்னா தெரியும், அதான் நிலத்துக்கு பதிலா நம்ம ஆத்தாவை மாத்தி வுட்டேன். தப்பு ஒன்னியும் இல்லையே?

VSK Thursday, October 19, 2006 11:26:00 AM  

"சிட்டில இருந்தாலும் அங்கியும் கட்டடம் கட்றதுக்கு மொதல்ல நெலத்தத்தானே தோண்டுவீங்க?

அதுவும் ஒரு கொத்தனார் வந்து இத்தெல்லாம் தெர்யாதுன்னு சொல்றது அக்குரும்பா, அக்கரமமா?"

என்று மன்னார் கேட்கச் சொன்னான்!

:))

VSK Thursday, October 19, 2006 11:27:00 AM  

"ஆனாலும் அவரு சொல்றதும் சரிதாம்ப்பா" என்றும் சொன்னான்!!

:)

VSK Thursday, October 19, 2006 11:31:00 AM  

"அப்ப அல்லாப் பசங்களும் அம்மாவை கடுப்பேத்தறாங்களா, என்ன?
நல்ல புள்ளைங்களும் இருக்குப்பா"
என்றும் சொன்னான்!

சொல்லச் சொல்ல எழுதுவதால் 2-3 பின்னுட்டங்களாகப் போய் விட்டது.

இது பி.ஊ.க.த. இல்லை!

:))

இலவசக்கொத்தனார் Thursday, October 19, 2006 12:03:00 PM  

//"பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று." [152]//

செரியா சொன்ன வாத்தியாரே, இவனுங்களாவது மறக்கறதாவது. சரி, பேச்சுக்கு சொல்றதாவது சரியா சொல்றானுங்களா. அதுக்கும் வெச்ச பாரு ஆப்பு! சூப்பர் மாமு.

எவனாவது உன்னிய பத்தி தப்பா பேசுனா அது கண்டுக்காம கம்முன்னு வுடு. அத்தோட அத்த நம்ம நெனப்புலேந்து ரப்பர் வெச்சு அளிச்சுடு. அப்போ நீ ரத்தக்கொதிப்பு எல்லாம் வராம நல்லா இருப்பே. இதானேப்பா அர்த்தம்?

VSK Thursday, October 19, 2006 12:11:00 PM  

இன்னா ஆப்பு வெச்சு இன்னா ஆவப்போவுது ?

நம்ம சனங்கதான் வள்ளுவன் சொன்ன மாரி நடந்துக்கறாங்க!

கண்டுக்கறதும் இல்ல
கம்முன்னும் இருந்திர்றாங்க
ஒடனே ரப்பர் வெச்சும் அளிச்சுர்றாங்க!

அடுத்தவாட்டி, போயி மை வெச்சுக்கிட்டு ஏமாற்றதுக்கு!

இன்னாத்த சொல்றது போ?

என்கிறான் மன்னார்.

VSK Thursday, October 19, 2006 12:14:00 PM  

புது வித உவமானங்களோடு நீங்கள் இன்னும் மெருகேற்றுவது மன்னாருக்கு மிகவும் பிடித்து விட்டது, கொத்தனாரே!

அடுத்த முறை வரும் போது மறக்காம கண்டுகிட்டு போகச் சொன்னான்.

ஞாபகமா, அந்த மசால் வடை, டீ, சாப்பிடாம வராதீங்க,!!

:))

Unknown Thursday, October 19, 2006 12:39:00 PM  

ஆமாம். மன்னிப்போம் மறப்போம்னு தானே சொல்லனும். தமிழறிஞருக்கு சொல்லித்தர மன்னாரு போனா தேவலை. நான் சும்மாகாச்சும் சொல்றேன்றதைத்தான் இப்படி சொல்றாங்களோ?

(158)அப்பறம் ஏன் அங்கியே போயி குந்திக்கினு அடி வாங்கற?
பொறுமையா இரு.
அவனுக்கு பதில் சொல்றத வுட்டு ஒன் வேலையப் பாரு.
அவனுக்கே அலுத்துப் போயிரும்.
(159)கெட்டவங்க சொல்ற கஸ்மாலப் பேச்சையெல்லாம் பொறுத்துகிட்டுஇ அதுக்கு போயி பதில் சொல்லிகிட்டு இருக்காம் பாருஇ அவந்தான் நெசமாலுமே அல்லாத்தையும் வுட்ட சாமியாருங்கள வுட சுத்தமானவன்.

ஏதோ கன்பூஸா தெரீதே. இன்னான்னு கேட்டு சொல்லுங்கையா?

இலவசக்கொத்தனார் Thursday, October 19, 2006 12:44:00 PM  

//"இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை." [153]//

நம்மாளுங்கள கேட்டாக்கா, வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் அப்படின்னு பெருமையா பேசிக்கினே கிடப்பாங்க. அத்தாவது விருந்தாளிங்க சரியா பாத்துக்கறதக்கு நம்மாளுங்களை பீட் பண்ண வேற ஆளு இல்லேன்றதுதான் இவனுங்க பாயிண்டு. அப்படி பட்ட மக்கள்ஸுக்கு பெரீய பிராப்பளம் இன்னான்னு கேட்டியானா, வர பார்ட்டிங்கள சரியா கவனிக்க முடியாத போறதுதான். ரைட்.

அதான் பெரீய பிராப்பளம் அப்படின்னா, அதுக்கு சரியா நல்ல வொர்க் அவுட் ஆவுற விசயம் இன்னான்னா, ஒர்த்தன் பல்லு மேல நாக்கு போட்டு ராங்கா பேசறான் பாரு, அத்த போடான்னு கண்டுக்காத விடறதுதான்.

ஆனா நைனா, இப்போல்லாம் வந்த ஆளுங்க கிட்ட இன்னாடா சுடறதுன்னுதான் நம்ம ஆளுங்க பாக்கறாங்க. அத்தே மாரி, ஒருத்தன் என்னைக்கோ தண்ணியடிச்சிட்டு பேசுனது எல்லாம் மன்சுள்ளாற வெச்சிக்கினு அப்புறமா அவனுக்கு ஆள் அனுப்புறாங்க. இந்த ஐயன் சொன்னது ஆரு காதிலேயும் வியுந்ததாவே தெர்லையே....

ஜயராமன் Thursday, October 19, 2006 1:07:00 PM  

SK

உங்கள் குரள்வரிசை மன்னாரின் தயவில் அற்புதமான ஒரு சுவையோடு குரளுரையாக உருவாகிக்கொண்டிருக்கிறது என்பது உணர்ந்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

தங்களின் விளக்கங்கள் குரளுக்கு மேலும் புதிய பல பரிமாணங்களை என்க்கு காட்டிக்கொடுக்கின்றன. கொச்சை சென்னை தமிழில் குரளுக்கு உரையில் வாழ்க்கையின் யதார்த்தத்தை தோய்த்து மன்னாரின் வார்த்தைகளில் .... வள்ளுவர் மகிழ்ந்திருப்பார். பாமரனுக்கும் குரள் இன்னும் விடிவிளக்காக இருக்கிறது என்பதை மன்னாரின் வார்த்தைகளின் குறி.

நிலத்தை பொருமையின் இலக்கணமாக சொன்ன வள்ளுவன் அந்த உதாரணத்தால் உலகத்துக்கு தமிழ்கூறும் நல்லுலகின் ஒரு அற்புதமான பரிமாணத்தை காட்டுகிறான். இங்கே நிலம் உயிருள்ள ஒரு தாயாக போற்றப்படுகிறது. நிலம் ஒரு கடவுளாக, நமக்கு வளம் வழங்கும் கொடையாக காட்டப்படுகிறது. இது இந்த "மண்ணுக்கே" உரிய அழகு. இது இந்துமதத்தின் மகுடத்தில் இன்னொரு வைரக்கல்.

நம் வாழ்க்கை நெறி இங்கே மண்ணோடு நீக்கமற கலந்து இருக்கிறது. (இருந்தது....!!) கிராமத்தில் நான் சிறுவனாக என் தாத்தனோடு பலமுறை வயல்காட்டுக்கு நடந்திருக்கிறேன். செருப்பை கழட்டி வண்டியில் வைத்து வா என்று கட்டளை வரும். செருப்பணிந்து நிலத்தில் நடக்காதே. தாய் கோவித்துக்கொள்வாள் என விளக்கமும் வரும். இங்கேதான் காலையில் கண் விழித்ததும் நிலத்தை வணங்கி உன்னை வற்புறுத்தி உன்மீது பாதம் பதிக்க அனுமதி கூறும் ச்லோகம் வற்புறுத்தலாக இசைக்கப்படுகிறது. இன்னும் என் பெரியோர்கள் காலையில் இந்த ப்ரார்த்தனையோடுதான் கண் விழிக்கிறார்கள்.

நிலத்தை குனிந்து முத்தமிடும் போப்பாண்டவர் மட்டுமல்ல எல்லா குடியானவர்களும் நிலத்தை தன் தாயைப்போல மதிக்கிறார்கள்.

இந்த பின்புலத்தை கொண்டே இந்த குரள் மிளிர்கின்றது. இந்த கலாச்சாரம் இல்லையேல் இந்த உவமை பொருளற்றதாகிவிடுகிறது.

உயிரற்ற ஒரு ஜடத்தை "பொருமைக்கு" உதாரணமாக சொல்லுவதாவது... என்று தோன்றும்.

SK ஐயா, உங்களுக்கு மீண்டும் நன்றி.

தங்களின் இந்த "பொறுமை" விளக்கங்களில் எனக்கு பல சந்தேகங்கள் இருக்கின்றன. இப்போது ராத்திரி 10 அரைக்கு கேட்டும் மனமில்லை. தீபாவளி வேறு குழந்தைகளை குதிக்கச்செய்துகொண்டிருக்கிறது.

உங்களுக்கு தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

மேலும் இது சம்பந்தமாக பின்னால் குமரன் அருளிருந்தால் எழுதுவேன்.

நன்றி

VSK Thursday, October 19, 2006 1:30:00 PM  

153. நீங்கள் சொல்வதை நான் ஒத்துக் கொள்கிறென், கொத்தனாரே.

ஆனால், மன்னார் கடைசியில் சொன்னது போல, இதெல்லாம் தனி மனித அளவில் நமக்கெல்லாம் எப்படிப் பொருந்தும் என்று மட்டுமே பார்க்க வேண்டும்.

பொதுவாகப் பேசினால், சில கருத்துகள் சரியாகமாலும் போகலாம்.

நாம வந்தவங்களைக் சரியான முறையில் கவனிப்போம்.
அவர்களிடம் தண்ணியடிச்சிட்டு வார்த்தைகளை விடாமல் இருப்போம்.
அப்படி இன்னொருத்தன் அது மாதிரி தண்ணியடித்து விட்டு ஏதாவது வார்த்தைகளைக் கொட்டினால், அவனுக்கு ஆட்டோ அனுப்பாமல் இருப்போம்.

இதுவே நாம் செய்யக்கூடியது.

சரிதானே!

VSK Thursday, October 19, 2006 1:39:00 PM  

உங்களது நீண்ட பின்னூட்டத்தை மன்னாரிடம் படித்துக் காட்டினேன், ஜெயராமன்!

மச்சானைச் சரிக்கட்டி, சமாதானப்படுத்தி, அவர்கள் குடும்பத்தையும் தன் குப்பத்திற்குக் கூட்டி வந்து தீபாவளி கொண்டாடிக் கொண்டிருந்தான்.

அவனுக்கு இதைப் படித்ததும் ரொம்ப மகிழ்ச்சி!

அதிலும், உங்களது நிலம் - தாய் உவமை மிகவும் நன்றாக இருந்தது என்று சொல்லச் சொன்னான்.

நீங்கள் குறிப்பிடும் நிலமகள் வணக்கம் எனக்கும் பிடித்ததே!

'பொறுமையாக' பண்டிகை கொண்டாடி மகிழ்ந்து பின்னர் உங்கள் சந்தேகங்களுடன் வரவும்.
[நான் வேணும்னா 'குமரன்' கிட்ட சொல்லட்டுமா?!!:))]

மயிலாப்பூர் பக்கம் போனால் [ஆழ்வார்ப்பேட்டையில் இருந்து பக்கம்தானே!:)] மறக்காமல் மன்னாரைப் போய்ப் பார்க்கவும்!

அனைவருக்கும் உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகள்!!

VSK Thursday, October 19, 2006 1:54:00 PM  

இ.கொ. இந்தாங்க பிடியுங்க என் வாழ்த்துகளை.

மன்னார் என்ன சொன்னான் தெரியுமா, ஜெயராமன் பின்னூட்டத்தைப் பார்த்து?

"கர்ரீட்டா கொத்தனாரு பாயிண்டைப் புடிச்சிக்கினு இவரும் அதே "தாயி நெலம்" உதாரணத்தை சொல்லிருக்காரே. படா கில்லாடிப்பா ஒன் தோஸ்து , இந்தக் கொத்தனாரு தம்பி!"

என்று பூரித்துப் போனான்!

இலவசக்கொத்தனார் Thursday, October 19, 2006 1:56:00 PM  

//" நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
போற்றி ஒழுகப் படும். [154]//

அட இன்னா வாத்தியாரே,கொடம் அடம்முன்னுக்கிட்டு. நம்ம ஆளுங்களுக்கு பிரியற மாரி சொல்லாம..

பீர் எடுத்து கப்புன்னு கிளாஸில விட்டா நொரையா பொங்கி வளிஞ்சிடும். அத்தையே பொறுமையா கிளாஸு சைடால விட்டா, பூரா பீரும் உனக்கேதான்.

புல் பீரும் கிடைக்கணுமுன்னா அவசரபடாதே. அதே மாரி நல்ல மன்சன் அப்டின்னு பேர் வாங்கணுமுன்னா ஆத்திரபடாதே.

அத்தானே அட்வைசு வாத்யாரே?

VSK Thursday, October 19, 2006 2:11:00 PM  

154 - க்கு இ.கொ. வின் பின்னூட்டம்!

இதுவும் ஒரு புதுமையான இளமையான பரிமாணம்!

எத்தனை பேருக்குப் புரியுமோ?

மன்னாரிடமும் காட்டுகிறேன்.

இலவசக்கொத்தனார் Thursday, October 19, 2006 2:12:00 PM  

//"ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து. [155]//

இப்போ இன்னாண்ட்றே? நம்ம கலிஞ்சரு மாதிரி இருன்ற.அதானே? அவருதான் பாவம், யாரு யாரோ அவரு கட்சியில இருந்து காசு பண்ணிட்டு களண்டுக்கறாங்கோ, வேற கட்சிக்குப் போயிட்டு அவுரையே கன்னாபின்னான்னு பேசறாங்கோ. அவுங்களுக்கு இன்னா ஆவுது? போன இடத்துல ஒரு மருவாதியும் இல்ல. மசுரு, மண்ணாங்கட்டின்னு பேச்சு வாங்கறாங்க. அப்பாலிகா, அத்தெல்லாம் தாங்க முடியாம கலிஞ்சரு நெனப்பு வந்து தல, தெரியாம பண்டேன், மன்னிச்சு சேத்துக்கோன்றாங்கோ. இவரும் பெரிய மன்சு பண்ணி கண்ணால தண்ணி விட்டு. கட்டி புடுச்சுக்கினு சேத்துக்கறாரு.

அந்த மாதிரி மன்னிச்சி சேத்துக்கற பார்ட்டிதான் தல. சர்தானே?

VSK Thursday, October 19, 2006 2:25:00 PM  

படித்து விட்டு ரொம்ப நேரம் சிரித்தான் மன்னார்.

"இன்னாப்பா! படா பேஜார் ஆளா இருக்காறே ஒன் தோஸ்து!
நா ஒண்ணு சொன்னா இவரு இன்னொண்ணு சொல்றாரே!

ஆனா, இது நடமொறைக்கு சரியான்னு தெரியலியே!

இந்த ஊர்ல எவனும் பீரை கிளாஸ்ல ஊத்தி சாப்ட்டு நா பாக்கலை சாமி!

அப்டியே மூடியை ஓபன் பண்ணினானா, மட மடன்னு முளுங்கினானா, பாட்டிலை கடாசிட்டு மிச்சரை அள்ளி வாயுல போட்டிகினு நவந்துருவான் அடுத்த பாட்டில் வாங்க!

குடிக்காத, குடியைப் பத்தி தெரியாத ஆளுங்களுக்கு இத்தச் சொன்னா புரியாதே!

நாலு பேருக்கு சொல்றப்போ அல்லாருக்கும் பிரியற மாரி சொன்னத்தானே தவலை!

நல்லத்த ச்சொல்றப்பொ குடியைக் காட்டியா சொல்றது?

இன்னா நா ஸொல்றது?"

என்று சீரியஸானான்!

VSK Thursday, October 19, 2006 2:29:00 PM  

போற ரூட்டு சரியாத் தெரியலியே இ.கொ!

எனக்கென்ன?
நீங்களாச்சு, மன்னாராச்சு.

இருங்க காட்டிட்டு வர்றேன்!

எனக்கென்னமோ பயமாத்தான் இருக்கு!

முருகா! காப்பாத்து!

:))

VSK Thursday, October 19, 2006 2:41:00 PM  

நினைத்த மாதிரியே ஆச்சு!

'"நாந்தான் இந்த அர்சியல்வாதிங்களையே நம்பாதேன்னு சொல்றேன்; இவரு இன்னாமோ அவரை இட்டாந்து பஞ்சாயத்து பண்றாரே!

இவரு, அவரு, அந்தம்மா இன்னும் அல்லாரும் ஒண்ணுதான், தெரிஞ்சுக்கோ.

ஆரும் ஓக்கியமில்லை.

இவரு வளத்தாராம், அவுக பொளைச்சாங்களம், வுட்டுட்டு ஓடினாங்களம், பின்னே இவரு கட்டி அணைச்சிக்கிட்டாராம்.

வுட்டா கடவுள் ரேஞ்சுக்கு கொண்டுபோயிருவார் போல்ருக்கே உங்காளு இவரை!

ம்ம்ஹூம் ! இத்தெல்லாம் சரிப்பட்டு வராது!

பேசாம இவரை சாதாரண அளவுக்கு எறங்கி வந்து ஒரு ஒதாரணம் குடுக்கச் சொல்லு.

இதெல்லாம் வெறும் வம்பு வளக்கற சமாச்சாரம்.

நாலு நல்லத்த சொல்லலாம்னு பாத்தா, பிரச்சினைக்கு கொண்டு போறாரே கொத்தனாரு.

நாந்தான் உங்கையில கட்டண்ட்ரீட்டா சொன்னேனே.

பொது வாள்க்கைக்கும் இதுக்கும் சம்பந்தமில்ல.

தனிப்பட்ட ஆளுங்க இன்னா பண்ணனும் , அத்தப் பத்தித்தான்னு.

நீ போட்டியா இல்லியா?"

என்று விரட்டிக் கொண்டு வந்து விட்டான்.

பதிவை எடுத்துக் காட்டியதும் தான் சமாதானமானான்.

இலவசக்கொத்தனார் Thursday, October 19, 2006 2:49:00 PM  

//"ஒறுத்தர்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றும் துணையும் புகழ்." [156]//

இன்னா நைனா இது, மன்னாரு மச்சான பாக்க போற அவசரத்துல சும்மா ரெண்டு வரில்ல சொல்டு போயிட்டாம் போல தெரிது, இது ரொம்ப முக்கியமான விசயமாட்டும் கீதேப்பா. இதுல தண்டிக்கிறது அப்டின்னு சொல்றது வந்து தப்பு பண்ணீட்டு போலீஸ் கைல மாட்டறாம் பாரு அவனுக்கு தர தண்டனை இல்லன்னு நெனிக்கறேன். அந்த மாதிரி இடத்துல புடிக்கிற ஆளுக்கெல்லாம் மாப்பு குட்துனே இருந்தா போலீஸ் இன்னாத்துக்கு? அப்புறம் இன்னா பண்ணினாலும் மாப்புதானே அவனவன் பஞ்சாயத்துக்கு கிளம்ப மாட்டான்? அதுனால இந்த மேட்டர் அந்த மாரி தப்புக்கு இல்லை. பின்ன என்னான்னு கேட்டா, இது வந்து நம்ம பர்ஸனல் மேட்டருக்கு மட்டுந்தான்.

உன்னிய ஒர்த்தன் கன்னாப்பின்னான்னு பேசறான். பதிலுக்கு நீயும் அவன வாய்க்கு வந்தா மாரி வையறன்னு வெச்சுக்கோ. அந்த நேரத்துக்கு உனக்கு சூப்பர் பீலிங் இருக்கும். ஒரு மாரு கை மாரு கால் வாங்குன எபெக்ட்டு. ஆனா அது வந்து டாஸ்மாக் கடையாண்ட சரக்கடிச்சிட்டு பேசற பேச்சு மாரி. காலையில உன் வாயுந்தான் நாறிக்கிட்டு இருக்கும். அதனால உன்னாண்ட எவனாது ராங் காட்னா, நீயும் அவன் லெவலுக்கு இறங்காதே. சரக்கடிச்சிட்டு ஒளரினுக்கிறவனைப் பாத்து சிரிச்சிக்குனே போறா மாரி நீயும் அப்டியே கண்டுக்காத போயிக்கினே இரு. அதான் ஒரு பெரிய மன்சனுக்கு அளகு அப்படின்னு சொல்லறாரு நம்ம ஐயன்னு எனக்கு தோணுது.

இலவசக்கொத்தனார் Thursday, October 19, 2006 3:09:00 PM  

//இந்த ஊர்ல எவனும் பீரை கிளாஸ்ல ஊத்தி சாப்ட்டு நா பாக்கலை சாமி!//

இப்படிதாம்பா நம்ம ஆளு ஒருத்தனை கூட்டிக்கிட்டு ஒரு பெரிய ஹோட்டலுக்குப் போனேன். அந்த ஹோட்டல் கட்டுன காண்டிராக்ட் நம்மளுதுன்னு ஒரு வருசம் ஆனா பின்னாடி நடந்த பார்ட்டிக்கு கூப்டாங்க.

இந்த பையன் அங்க குடுத்த டீய என்ன செஞ்சான் தெரியுமா? அப்படியே சாசர்ல ஊத்தி ஊருக்கே கேக்குறா மாரி ஒரு சவுண்டுவிட்டு உறிஞ்சினாம்பா. எங்க வூட்ல புதுசா வாங்கின வாக்குவம் கிளீனர் தோத்து போச்சு.

அங்க எல்லாம் அப்படி செய்யக்கூடாதாமே. நம்ம ஆள அங்க எல்லாம் ஒரு மாரியா பாத்தானுங்க. சரிதான்னு, அன்னையிலேந்து நம்ம மக்களுக்கு இந்த மாரி இடத்துக்கெல்லாம் போனா எப்படி ரீஜெண்டா இருக்கணமுன்னு பாடம் எடுக்க தொடங்கியாச்சி. அதனால நம்ம ஆளுங்க இப்போ எல்லாம் பீரைக் கிளாசில் ஊத்திதான் குடிக்கறாங்க. ஊறுகாயெல்லாம் கூட தொட்டுகிறது கிடையாது. அதனால அவனுங்களுக்கு பிரியணமுல்ல. அதான் அப்படிச் சொன்னேன்.

VSK Thursday, October 19, 2006 3:18:00 PM  

"ஐயன் சொன்னதே சிம்பிளாத்தானே இருக்கு, இதுக்குப் போயி இன்னாத்துக்கு வெளக்கம்னு நெனைச்சேன்.

கொத்தனாருத்தம்பி இன்னும் கொஞ்சம் கூட சொல்லிருக்கு.

அத்தையும் சேத்துப் படிச்சுக்கோ"

என்று சொல்லி விட்டான் மன்னார்!

VSK Thursday, October 19, 2006 3:24:00 PM  

156. இ,கொ. உரை!!

அப்புறம் இன்னொரு சிறிய விளக்கம் கொத்தனார்.

இந்த 'பொன்றும் துணையும்'னா என்னன்னு கேப்பீங்கன்னு பார்த்தேன்.

இந்த உலகம் அழிந்து மங்கும் வரையிலும் என்று பொருளாம்!

மன்னார் சொல்லச் சொன்னான்.

இன்னா பூடகமா இந்த உலகம் எப்படி அளியும்னு வள்ளுவர் சொல்லியிருக்கார் பாரு.
டமார்னு வெடிச்சிராதாம், தண்னிக்குள்ளே பூடாதாம்.

பெட்ரோமாக்ஸ் பல்பு அமுங்கற மாதிரி மங்கிரும்னு சொல்லிருக்காரு.

இத்த ஆராவது பதிஞ்சி வையிங்கப்பா!

நாளைப்பின்னே எதுனாச்சிம் ஆச்சுன்னா, ஐயன் அப்பவே சொன்னாருன்னு புகள் தேடிக்கலாம் நமக்கு" ந்னு சொல்லியிருக்கிறான்!

இலவசக்கொத்தனார் Thursday, October 19, 2006 3:31:00 PM  

//"திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
அறனல்ல செய்யாமை நன்று." [157]//

இத்த போன பாட்டுக்கே பாத்தாச்சுப்பா. அவன் இன்னாதான் உன்னை வம்புக்கு இயுத்தாலும், நீ கண்டுக்காம போ. அம்புட்டுத்தான் மேட்டர். அத பண்ணாமதான் இப்படி நொந்து போய் குந்திக்குனு கீற. அத மாரி இல்லாம இருக்கணுமுன்னுதான் ஐயன் No நொந்து அப்படின்னு அப்பவே சொல்லிக்கீறாரு. அவரு நம்ம ஊரு காலேஜு பொண்ணுங்க மாரி நல்ல இங்கிலீஸ் எல்லாம் கூட கலந்துதான் பேசுவாரு போல.

VSK Thursday, October 19, 2006 3:39:00 PM  

157.இ.கொ.உ.

"இதுல கொஞ்சம் குசும்பு தெரியுதே

உங்க ஆளுக்கு இன்னொருத்தரை வம்புக்கு இளுக்காம ஒரு விசயம் பேசத் தெரியது போல இருக்கே!

இப்ப இன்னாத்துக்கு நம்ம காலேஜ் பொண்ணுங்களை இதுல இளுக்கறாரு?

டக் டக்குன்னு தெசை திருப்பிர்றாரே!"

என்று வருத்தமும், ஆச்சரியமும் கலந்த குரலில் மன்னார் பேசினான்!

VSK Thursday, October 19, 2006 3:41:00 PM  

157.
இந்த 'நோ நொந்து' என்னும் சொல்லுக்குத்தான், "மனம் வருந்தி" என்று மன்னார் கொடுத்த விளக்கத்தையும் சேர்த்துப் போட்டிருக்கிறேனே கொத்தனார்!

எனக்கென்னவோ மன்னார் குறைப் படுவது சரிதான் என்று தோணுகிறது!

:))

இலவசக்கொத்தனார் Thursday, October 19, 2006 3:50:00 PM  

//"மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்
தகுதியான் வென்று விடல்." [158]//

இதுக்கு ஒரு கத ஒண்ணு சொல்றேம்பா. நம்ம ஊராண்ட ஒருத்தன் இருந்தான்.நல்லா படிச்சவந்தான். ஆனா உள்ளூருல அவனுக்கு வேல ஒண்ணும் கிடைக்கல. அவனுக்கும் வெளியூர் போவ ஆச இல்ல. அவன் நெதமும் பக்கத்துல இருக்கற ஒரு சின்ன மல மேல போயி கல்ல ஒடச்சுக்கினே இருப்பான். சும்மா வேல இல்லாம இருந்த பசங்க நாலு பேரு போயி அவனாண்ட வம்பு பண்ணிக்கினே இருப்பாங்க. படிச்சவன் நீயேண்டா இந்த வேலையை பாக்கறன்னு. இன்னும் என்னென்னவோ சொல்லிக்கினே இருந்தாங்க. நம்மாளு ஒரு வார்த்தை பதில் பேசலை. அவங்களோட சண்டைக்கும் போவலை. தானாச்சு தன் வேலையாச்சின்னு இருந்தான்.

ஒரு நாள் காலையில பாத்தா அந்த மலையவே காணும். அந்த மல இருந்த எடத்துக்கு அப்பால பாத்தா ஒரு பெரிய ரிவரே ஓடுது. நம்ம ஊருதான் வறண்ட பூமியாச்சே,அவ்ளோ தண்ணி பாத்த ஒடனே ரொம்ப குசியாகிட்டாங்க. நம்ம ஆளையும் ஊருக்கே தலீவனா ஆக்கிட்டாங்க. அப்போ அவன் அந்த பசங்கள பாத்து சொன்னான், நீங்க் நான் கல்லு ஒடைக்கறதா நெனச்சீங்க. ஆனா நான் மலய இல்ல ஒடச்சிக்கிட்டு இருந்தேன் அப்படின்னு.

அந்த பையன் இருந்தா மாரி அடுத்தவன் என்னா சொன்னாலும் கண்டுக்காத உன் வேலையைப் பாரு. அப்போ நீ என்னா செஞ்சாலும் சக்ஸஸ்தான்.

VSK Thursday, October 19, 2006 3:53:00 PM  

//அன்னையிலேந்து நம்ம மக்களுக்கு இந்த மாரி இடத்துக்கெல்லாம் போனா எப்படி ரீஜெண்டா இருக்கணமுன்னு பாடம் எடுக்க தொடங்கியாச்சி//

154.

"நாம அல்லாருக்கும் பிரியற மாரி க்ளாஸ்[Class] எடுத்தா, ஒங்க கொத்தனாரு அவரோட குடி மகனுக்கெல்லாம் தனி க்ளாஸ் [Glass] எடுக்கறாரா? நடக்கட்டும்; நடக்கட்டும்"னு சிரிக்கிறான் மன்னார்!

VSK Thursday, October 19, 2006 4:05:00 PM  

திரு. சுல்தான்,
நான் உங்களுக்கு ஒரு நன்றிப் பின்னூட்டம் இட்டேன்.
என்ன ஆயிற்று என்று தெரியவில்லை!
இப்போதுதான் பார்த்தேன்!
காணவில்லை!

மீண்டும் பதிகிறேன்.


158. சரிதான்
159-ல் மன்னார் என்னமோ "சொல்லாம" என்றுதான் விளக்கம் சொன்னான்.
நான் தான் அவசரத்தில் 'சொல்லிகிட்டு' என்று எழுதியிருக்கிறேன்!
இப்போது மாற்றி விட்டேன்.

சுட்டிக் காட்டியதற்கு மிக்க நன்றி!

VSK Thursday, October 19, 2006 4:10:00 PM  

158. i.ko.u.
நல்ல கதை, கொத்தனாரெ!

குறளின் பொருளை நன்கு விளக்கி இருக்கிறது.

மன்னார் என்ன சொல்லப் போகிறானோ?

அவனும் பாராட்டுவான்!!

VSK Thursday, October 19, 2006 4:15:00 PM  

"நா சொன்ன மாரி இந்த கலீஜு அரசியல் சமாச்சாரத்தையெல்லாம் வுட்டுட்டு இது மாரி சொல்ல வர்றப்ப இம்மாம் நல்லா இருக்கு.
இந்த ரூட்டிலியே போவச் சொல்லு அவரை"
என்று மகிழ்ந்து போனான் மன்னார்.

இலவசக்கொத்தனார் Thursday, October 19, 2006 7:36:00 PM  

//"துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர்." [159]//

இதுவும் முன்னமே பாத்த மேட்டர்தான். உன்னிய பாத்து ஒருத்தன் தப்பா பேசறான்னு வெச்சுக்க, அந்த நேரத்துல நீ கண்டி கம்முனு இருந்தீனா, நீ சாதாரணப்பட்ட ஆளு இல்ல. பெரிய பெரிய மகானுங்க மாரி அப்டின்னு சொல்றாரு. ஏன் தெரீமா? ஒரு சாதாரண மனுசன் கிட்ட போயி இத்த செய்யாம இரு பாக்கலாம் அப்டின்னு சவால் விட்டீயானா அவனும் முடிஞ்சா வர அத்த செய்யாத இருப்பான். ஆனா உன்ன பத்தி நான் எதனா கோக்குமாக்கா பேசுவேன் ஆனா நீ கம்முன்னு இருக்கணமுன்னு மட்டும் சொல்லு, அவனுக்கு கட்டாயம் கோவம் வந்து பதிலுக்கு பேசிருவான். சிலவன் அஞ்சு நிமிசத்துல கடுப்பாவான் இன்னொருத்தனுக்கு பத்து நிமிசம். ஆனா நிச்சியமா கடுப்பாவான். அதையும் மீறி நீ கடுப்பாவாம இருந்தயானா நீ வந்து முனிவருகெல்லாம் மேலன்றாரு. ஏன்னா, முனிவருங்க எல்லா புலனையும் அடக்கி ஆளறவங்க. அவங்களுக்கு அதேதான் வேலை. ஆனா மத்தபடி நார்மலா இருக்குற நீ காதையும் வாயையும் அடக்கி ஆண்டா அவங்கள எல்லாம் விட பெரிய ஆளாயிடுவே அப்டின்றாரு.

இலவசக்கொத்தனார் Thursday, October 19, 2006 7:36:00 PM  

//"உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின்." [160]//

போன குறளுக்குத்தான் இந்த சாமியாருங்க பத்தி பேசுனோம். அங்க அவங்க எப்படி பாடி பார்ட்ஸ் எல்லாம் கண்ட்ரோல் பண்ணுதாங்கன்னும் பேசுனோம். இங்க என்ன சொல்றாரு பாருங்க. நாம எதுக்காக இவ்வளவு கஸ்டப்படுதோம்? பணம் காசுன்னு அலையுதோம்? எல்லாம் நல்லா சாப்பிடத்தானே. இல்லையா? ஆக மொத்தம் நம்மளுக்கு முதல் தேவைன்னு பாத்தா சாப்பாடுதான். அதாக்கண்டி நம்ம ஆளுங்க இன்னா பண்றாங்க? நோம்புன்னு சொல்லிக்கினு அந்த சாப்பாட்டையே வேணாமுங்கறாங்க. நமக்கு ஆவற காரியமா? அதான் அந்த மாரி செய்யற ஆளுங்களை எல்லாம் பெரியவங்கன்னு சொல்லி கால தொட்டுக் கும்பிட்டுக்கினு ஆசி வாங்கறோம். இல்லையா? ஆனா முன்ன சொன்னா மாரி அவங்களை எல்லாம் வுட அடுத்தவன் தப்பா பேசுனாக் கூட அதைப் பத்திக் கவலப்படாம கம்முன்னு போற ஆளுதான் பெரியவன் அப்டின்றாரு.

ஒரு விசயம் யோசிச்சுப் பாருங்க. இந்த ஐயன் இருக்காரே, அவரு ரெண்டு அடில பல மேட்டர் சொல்லறவரு. அவரு இந்த வார்த்தை விசயத்துல கொஞ்சம் கஞ்சந்தான். ஆனா அவுரே கம்முன்னு இரு அப்டின்னு ரெண்டு வார்த்தையில சொல்ல வேண்டிய மேட்டருக்கு பத்து குறள் எளுதிக்கிறாரு. இவரு மட்டுமா? நம்ம அருணகிரிநாதராண்டை வந்து அந்த முருகனே கூடத்தான் "சொல்லற சும்மா இரு" அப்படின்னு சொல்லி இருக்காரு. இன்னாத்துக்கு இவங்க எல்லாம் இத சொல்லறாங்க? தப்பா பேசறவனுக்கு பதில் சொன்னா அவனுக்குத் தேவயே இல்லாத மருவாதி. அத்தச் செய்யாதே. அப்படி ஆளாளுக்கு மேல மேல பேசப் போயிதான் இன்னைக்கு நாட்டுல எங்க பாத்தாலும் சண்டை சச்சரவு. அதனால பதிலே பேசாதேன்னு பெரியவங்க படிச்சி படிச்சி சொல்லறாங்க. இது வீட்டுக்குள்ளையும் சரி, வலையுலகத்திலும் சரி, நெஜ உலகத்திலும் சரி கரீட்டா வொர்க் அவுட் ஆகற மேட்டர். நம்மாளுங்கதான் அத்த வுட்டுட்டு சுண்டக்கா சமாச்சாரத்துக்கெல்லாம் சண்டை போட்டுக்கினு இருக்காங்க.

VSK Thursday, October 19, 2006 7:54:00 PM  

பின்னிட்டீங்க கொத்தனாரே!
இதை நான் மன்னாரிடம் காட்ட வேண்டிய தேவையே இல்லை!
பின்னூட்ட கயமைத்தனமும் செய்ய வேண்டியதில்லை!

அவன் சொன்னதை அப்படியே அச்சுப் பிழையாம நீங்களும் உங்க பாணியிலியே சொல்லி இருக்கிங்க

ரொம்ப நல்லா இருக்கு!

ம்ம்ம்ம்ம்! இந்த லெவலுக்கு வர்றதுக்கு உங்களுக்கு 9 குறள் ஆச்சு!!
:))

VSK Thursday, October 19, 2006 8:12:00 PM  

எங்கேயோ ஆரம்பித்து, படிப்படியாய் முன்னேறி இந்த பத்தாவது குறளில் மன்னார் சொன்னதை மிகச் சிறப்பாகச் சொல்லி,

இந்த பொறையுடைமை என்னும் அதிகாரத்திற்குப் பொறுமையாக,

ஒவ்வொரு குறளுக்கும் தனிதனிப் பின்னூட்டமாய்,

பதிலளித்து இதற்கு மேலும் மெருகூட்டியதற்கு மிக்க நன்றி, கொத்தனாரே!

வேறு எங்கும் இது செல்லவில்லை என்றாலும்,

வலைப்பூவில் மாங்கு மாங்கு என்று சண்டை போடும் பதிவர்கள்,

சற்று பொறுமையாய் கண்ணியத்தைக் கடைப்பிடித்தால்............,

எவ்வளவு பேருக்கு மகிழ்வாய் இருக்கும்!

மன்னார் சொன்னதை நான் என் மொழியில் இட்டிருக்கிறேன்!

அவன் தங்கச்சி குடும்பத்தோட பட்டாஸ் வெடிக்க போய் விட்டான், இதைச் சொல்லிவிட்டு!

இன்னொன்றும் சொல்லச் சொன்னான்!

அத்கு அடுத்த பிஊகதவில்!!

VSK Thursday, October 19, 2006 8:12:00 PM  

இப்போது எனது தனிப்பட்ட நன்றிகள், கொத்தனாரே!

விளையாட்டாய் சிறிலுக்கு பதிலெழுத ஆரம்பித்து,
இன்று மயிலை மன்னார் மக்கள் மனதில் நிற்பதற்கு நீங்கள் இன்றிட்ட பின்னூட்டப் போரே சாட்சி!

இனி எனக்குக் கவலை இல்லை!

மன்னார் எப்போதாவது லீவில் போகும் போது,
இதைத் தொடர்வதற்கு யாரிடம் செல்ல வேன்டும் என எனக்குத் தெரிந்து விட்டது!

மன்னாரும் இதையே சொன்னான்!

நன்றிகள் பல!!

இலவசக்கொத்தனார் Thursday, October 19, 2006 8:17:00 PM  

//பின்னூட்டப் போரே //

இது என்ன அநியாயம். மன்னார் சொன்னதில், எனக்கு புரிந்ததையும் அது சரியா என தெரிந்து கொள்ளவும்தானே பின்னூட்டங்கள் இட்டேன். இதில் யாருடன் போர்?
ஓரு வேளை சொன்னதையே திருப்பிச் சொன்னதால் பின்னூட்ட bore எனச் சொல்கிறீர்களா?

போர் எல்லாம் இல்லீங்க. நீங்க வேற, கிடைக்க இருக்கும் மசால்வடையையும் தட்டி விட்டுடுவீங்க போல இருக்கே.

ஜெயஸ்ரீ Thursday, October 19, 2006 8:26:00 PM  

மன்னாரின் குறள் விளக்கமும் சிறப்பு.அதற்கு கொத்தனாரின் கூடுதல் விளக்கம் பிரமாதம்

கலக்கிட்டிங்க கொத்தனாரே!

VSK Thursday, October 19, 2006 8:58:00 PM  

எதிருக்கு எதிர் செய்யும் எதுவும் போரே
அதிலொன்றும் தப்பில்லை கொத்தனாரே
இதிலெல்லாம் குற்றம் காணாமல் இருப்பீரே
மதியெல்லாம் மகிழ்ச்சியுற்று மறப்பீரே!

VSK Thursday, October 19, 2006 11:57:00 PM  

இப்படி வராதவங்களையும் வரவழைத்த கொத்தனாருக்கு நானும் நன்றி சொல்றேன்!!

உங்களுக்கும் நன்றி, ஜெயஸ்ரீ !!
[still c&p]!!

VSK Friday, October 20, 2006 12:00:00 AM  

மன்னார் சிறப்பு! கொத்தனார் கலக்கல்!

இதையெல்லாம் பதித்த எனக்கு ஒன்றும் இல்லையா?

:(
:)

அதான் இருக்கே பிஊகத!

இலவசக்கொத்தனார் Friday, October 20, 2006 7:31:00 AM  

ஜெயஸ்ரீ,

தங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி. மன்னார் சொல்லிக் கொடுத்த பாடத்தைப் படித்து வீட்டுப் பாடம் செய்து ஆசிரியரிடம் காமிக்கும் மாணவன் போல்தான் நான் இங்கு எழுதியது. வேறொன்றுமில்லை.

VSK Friday, October 20, 2006 9:44:00 AM  

அடா! அடா! அடா!

என்ன ஒரு பணிவு! என்ன ஒரு பவ்யம்!

அடுத்தது "அடக்கமுடைமை" பத்தி மன்னாரைக் கேக்கலாம்னு இருந்தேன்.

இனிமே அது தேவையில்லைன்னு நினைக்கிறேன்!

"இப்ப கொத்தனாரைப் பாருங்கப்பா எல்லாரும்"னு ஒரு வரி போட்டு முடிச்சிரலாம் போல இருக்கே!

சரி! அப்படியே செஞ்சுரலாம்!

ஆனா, சும்மா சொல்லக் கூடாது மெய்யாலுமே பிச்சு உதறிட்டீங்க.

என்ன,...... சில மக்கள் எப்படி பொறுமையா இருக்கணும்ங்கறதை விட்டுட்டு, வழியாம பியரை ஊத்துவது எப்படின்னு கத்துகிட்டு போயிட்டாங்களாம்!

:))

supersubra Friday, October 20, 2006 11:44:00 AM  

நேரம் கிடைக்கும் பொழுது எல்லா திருக்குறளுக்கும் இப்படி விளக்கம் எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

VSK Friday, October 20, 2006 11:57:00 AM  

//நேரம் கிடைக்கும் பொழுது எல்லா திருக்குறளுக்கும் இப்படி விளக்கம் எழுதுங்கள். வாழ்த்துக்கள்.//


வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி,

அப்படித்தான் எண்ணம்.

முருகனருள் முன்னிற்கும்!


இனிக்கும் தீபாவளி வாழ்த்துகள்!


Pl. check www.kasadara.blogspot.com also!
Thanks.

ஜெயஸ்ரீ Friday, October 20, 2006 3:23:00 PM  

உங்களுக்கும் மன்னாருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

VSK Friday, October 20, 2006 3:38:00 PM  

வாழ்த்துக்கு நன்றி, ஜெயஸ்ரீ !



உங்கள் இல்லத்திலும் ஒளி பொங்க வாழ்த்துகிறேன்!

மன்னாரும் மகிழ்வுடன் வாழ்த்தினான் உங்களை!

குமரன் (Kumaran) Monday, October 23, 2006 6:51:00 AM  

அருமையாகப் பொருள் சொல்லியிருக்கிறார் மன்னார். எனக்கெல்லாம் எப்போது தான் இந்த குறட்பாக்கள் மூளையில் ஏறப்போகிறதோ?!

VSK Monday, October 23, 2006 10:41:00 AM  

ஒரு தீபாவளி சிறப்பு பரிசாக இந்த முறை கொத்தனாரும் வந்து அருமையாக "வூடு" கட்டியிருக்கிறாரே, கவனித்தீர்களா, குமரன்.?

அடுத்த முறை நீங்களும் முயலலாமே!

உங்கள் பொறுமை ஊரறிந்ததாயிற்றே!

அடக்கத்தின் காரணமாக இப்படிச் சொல்லுகிறீர்கள் என நினைக்கிறேன்.

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP